கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]
அன்புள்ள ஜெ
கேரளத்தில் இந்த வரலாற்றுக் கதைகளை இதுவரை எவருமே எழுதவில்லையா ? இப்போது உங்களை எழுதத் தூண்டுவது எது ?
ஒவ்வொரு கதையும் அற்புதம். அவை இணைந்துகொள்ளும் விதமும் அற்புதம்
மது சம்பத்
***
அன்புள்ள மது,
இங்கே இரண்டு வகையான இந்தியவரலாறுகள் எழுதப்பட்டன. ஒன்று காலனியாதிக்கவாதிகளால் எழுதப்பட்ட வரலாறு. அது அரசவரிசை, படையெடுப்புகள் ஆகியவற்றைச் சார்ந்தது. இன்னொன்று தேசியவரலாறு. தேசப்பெருமிதம் சார்ந்தது.
காலனியாதிக்கவரலாற்றெழுத்தும் சில விடுபடல்களை கொண்டது, சில பிழைகளை உருவாக்கியது.தேசிய வரலாற்றெழுத்தும் இணையான விடுபடல்களும் பிழைகளும் கொண்டது. தேசிய வரலாற்றெழுத்து விடுதலைப்போராட்டத்திற்கு முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க ஆளுமைகளை வரலாற்றில் கண்டெடுக்கும் நோக்கம் கொண்டது. ஆகவே வெள்ளையரை எதிர்த்த ஆளுமைகளை அது தேசிய வீரர்களாக ஆக்கியது. அடுத்தபடியாக இஸ்லாமிய ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள்.
வேலுத்தம்பி தளவாய், பழசி ராஜா, கட்டப்பொம்மன் போன்றவர்கள் இத்தகையவர்கள். இவர்களெல்லாமே முதலில் வெள்ளையரை ஆதரித்து கப்பம் கட்டியவர்கள், வெள்ளையருக்காக இந்திய அரசர்கள்மேல் தாக்குதல் தொடுத்தவர்கள். திப்புசுல்தானின் போர் பெரும்பாலும் சக இந்திய அரசுகளின்மீதுதான் என்றும் மலபாரும் திருவிதாங்கூரும் அவரால் சூறையாடப்பட்டன என்றும் சொல்லமுடியாத நிலை உருவானது.
இந்த இரு வரலாற்றெழுத்திலும் விடுபடுபவர்கள் அரசிகளும், அமைதியான முறையில் வளர்ச்சிகளை உருவாக்கியவர்களும்தான். உண்மையில் மேலே சொன்ன ‘மாவீரர்கள்’ அரசியல்சூழலை உணராதவர்கள், சாகசக்காரர்கள். இந்த அறிவிலா சாகசக்காரர்களை முன்னுதாரணமாக நிறுத்தும்போக்குதான் கீழைநாடுகள், வளராநாடுகளில் பேரழிவை உருவாக்குகிறது. ஐரோப்பா அதை கடந்துவிட்டமையாலேயே அது வெல்கிறது
ராணி பார்வதிபாய் அடிமை ஒழிப்பு, இலவச ஊழிய முறை ஒழிப்பு என தொடங்கி திருவிதாங்கூரின் அனைத்து வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டவர். ஆனால் அவர் வரலாற்றில் வெள்ளையரை தாஜா செய்தவராகவே பதிவாகியிருக்கிறார். ராணி மங்கம்மாள் இல்லாமல் இன்றைய தென்தமிழகமே இல்லை. ஆனால் அவர் ஔரங்கசீப்புக்கு கப்பம் கட்டி படைகளை திருப்பியனுப்பிய கோழை என்றே சொல்லப்படுகிறார். இந்த விடுபடல்மீது எப்போதுமே எனக்கு ஒரு மறுப்பு இருந்தது. இந்தக்கதைகள் அதிலிருந்து உருவாகின்றன
நம் வரலாறு என்பது மறக்கப்பட்ட அன்னையரும் மிகையாக துதிக்கப்பட்ட வீரர்களும் அடங்கியது. அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. புனைவு அந்த மையவரலாற்றுக்கு எதிரான ஊடுருவல்.
இது கேரளவரலாறு குறித்த கதைகள் மட்டுமல்ல- சூழல் மட்டுமே கேரளம் சார்ந்தது.
ஜெ
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
‘லட்சுமியும் பார்வதியும்’ சிறுகதை வாசித்தேன். பெருவியப்பாக இருந்தது. எந்த பேரரசரும் (எனக்கு தெரிந்த வரையில்) சிந்திக்காததை அல்லது நிறைவேற்றாததை, ஒரு 13 வயது பெண் (பார்வதி பாய், அரச படியில் உள்ளவர்) இவ்வளவு நுட்பமாக ஒரு அரசை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று விளக்கியது வியப்பாக இருந்தது. இங்கே நாம் மார்தட்டிக் கொள்ளும் அரசர்கள் புகழின் இடையில் ஒரு மாபெரும் வெளிச்சமாக தோன்றுகிறார் ராணி பார்வதி பாய்.
மன்னனை அமைச்சன் மிரட்டியது எனக்கு புதிதாக இருந்தது. மன்னன் என்றால் ஒரு பிம்பத்தை நாம் எப்போதுமே மனதில் நிலை நிறுத்திக் கொள்கிறோம். வீரன், சூரன், அனைத்தையும் வென்றவன், அழகன், கம்பீரமானவன் போன்றவற்றால் அவனை ஒரு more than life மனிதனாகவே நாம் அறிகிறோம். ஆனால் ராஜராஜ வர்மா தன் அமைச்சனால் மிரட்டப்படுவதும் அப்படி அமைச்சர்களைக் கையில் போட்டுக் கொண்டு நாடுகளை கைப்பற்றிய பிரிட்டிசாரின் பேரில் அவர்கள் செய்த கொடுமைகளுக்கு இதுவும் ஒரு சாட்சி.
ராணி லட்சுமியும், ராணி பார்வதியும் பாடும் பாட்டை நான் இறுதியில் வாய்விட்டு பாடிக்கொண்டே போனேன். அதன் அர்த்தம் முழுமையாக புரியா விட்டாலும், அதன் ராகம் எனக்கு கிட்டியது. அது ஒரு ஆனந்தப் பயணம். காயலில் தனிமையில் இரவில் இரு உள்ளங்களுடன் ஓராயிரம் நட்சத்திரங்களும் அவர்களோடு சேர்ந்து பாடியிருக்கும்.
அன்புடன்,
பிரவின்
தர்மபுரி
கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]
அன்புள்ள ஜெ
குமிழி அழகான சிறிய கதை. மண்ணில் இருந்து ஒரு சின்ன உதடு குவிந்து வந்து ஒரு சொல்லை உரைத்து குழந்தையாக ஆகும் அந்த இடம் வாசிக்க வாசிக்க மலர்ந்துகொண்டே செல்லும் அழகான கவிதை. முழுக்கமுழுக்க கவித்துவத்தாலேயே தொடர்புறுத்தும் கதை. மண்குழைவது, மண் திரண்டு உருவாகி மீண்டும் மண்ணாவது எல்லாமே அழகான படிமங்கள். சம்ஸ்கிருதத்தில் மிருண்மயம் என்று உடல் சொல்லப்படுகிறது. மண்ணாலானது இந்த உடல்.
சாரங்கன்
***
வணக்கம் ஜெ
குமிழி சிறுகதையை வாசித்தேன். //மனம் கனியும் போது களிமண்ணு பூக்கும்// அந்தத் தொடரே இந்தக் கதையின் திறப்பு. வள்ளி விசும்பலுடன் அழும் தருணம் மனம் கனிந்து பாவையை வனைய முன்வருகிறாள். யட்சி இழந்த குழந்தை பொருட்டுக் கொஞ்சி அழுது அரற்றிக் கனிந்து குழந்தை வரம் அளிப்பதும் அக்கணத்தில்தான்.நெஞ்சில் இருக்கும் தீயை மறந்து கலம் எழுகிறது மாதவனின் கைகளில்.
அரவின் குமார்
***