ஒரு மாதம் முன்பு கடலூர் சீனு எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். “இதை எழுதியவர் ஒரு ஃபாஸிஸ்ட் என்று முடியாத கட்டுடைப்பு விமர்சனம் ஏதாவது தமிழில் நடந்திருக்கிறதா? தகவல் தேவை”
நான் அதை உண்மையிலேயே பரிசீலித்துப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது, அப்படி ஒன்று இல்லை. மேற்கோள்கள், பெயர்சுட்டல்கள், திருகல்மொழிகள், அறிவாளிப்பாவனைகள் அனைத்துக்கும் அடியில் மொட்டையான ஒரு வாசிப்பு மட்டுமே இருக்கும். அதற்கப்பால் ஓர் அடி எடுத்துவைக்க இவர்களால் இயலாது. ஒரு சராசரி வாசகனுக்குக் கூட ‘இந்தாள் உளறுறான், அடிப்படையே புரியல்லை’ என்று தோன்றிவிடும்
அதாவது வெறும் அடையாள வாசிப்பு. எழுதுபவன் என்கட்சியா, என் ஆளா என்பது முதல் அடையாளம். அதிலிருந்து கிளம்பி எந்த படைப்பிலும் கட்டுரையிலும் சில வரிகள் சில சொற்களை பிடித்துக்கொண்டு மிகமிக வழக்கமான, மிகமிக சலித்துப்போன ஒரு ‘டெம்ப்ளேட்’ வாசிப்பை நிகழ்த்திவிட்டு கொக்கரித்தபடி சென்றுவிடுவார்கள்.
எனக்கும் இவர்கள் எரிச்சல்மூட்டிய காலம் இருந்தது. இன்றெல்லாம் வெறும் புன்னகையுடன் கடந்துசென்றுவிடுவேன். இவர்களை ஒரு பொருட்டாக நினைக்கும் வாசகன், மிக ஆரம்பநிலையிலேயே இவர்களை அடையாளம் கண்டுகொள்ளாத ஒருவன், இவர்களைப் போன்றவனே. அவன் அரசியல்கட்சி நிலைபாடுகளுக்கு ஏற்ப கூச்சலிடுவதற்கும் வேகாக்கவிதைகள் எழுதவும்தான் தகுதியானவன். அவன் என்றைக்குமே இலக்கியத்திற்குள் , அறிவியக்கத்திற்குள் வரப்போவதில்லை.
அவன்தான் இங்கே எண்ணிக்கையில் பெரும்பான்மை. ஆகவே அமைப்புக்களை நடத்துபவன். அறிக்கைகளில் கையெழுத்திடுபவன். மாநாடுகளை ஓயாமல் நடத்திக்கொண்டிருப்பவன். அந்தக்கும்பலில் பத்துபேர் சேர்ந்தாலோ குறைந்தாலோ இலக்கியத்திற்கு ஒன்றும் ஆகிவிடாது.
என்ன சிக்கல் என்றால் இவர்கள் நாம் பேசும் பொதுவெளியை பாழாக்கிவிடுவதுதான். இவர்களை திட்டமிட்டு வெளியே நிறுத்தாமல் எதையுமே இங்கே பேசமுடியாது. இவர்களின் முதன்மை ஆயுதம் தங்களை குற்றம்சாட்டுபவரின் இடத்தில் நிறுத்திக்கொள்வது. இவரை ஏற்காதவர்கள் அனைவருமே பிற்போக்கு,மதவாத, சாதியவாதிகள். அதை சொல்லிக்கொண்டே இருக்க இவருக்கு உரிமை உண்டு, ஏனென்றால் இவர் முற்போக்கு
சரி நீ என்ன லட்சணம் என்று திருப்பி குற்றம்சாட்டினால் பதறிவிடுவார்கள். தனிவாழ்க்கையில் அப்பட்டமான சாதியவாதிகள், வட்டிக்குப் பணம் கொடுக்கும் முதலாளிகள், சம்பிரதாயமான மதநம்பிக்கையாளர்கள் [ஹிஹி என் பொண்டாட்டி ரொம்ப ஆசாரம்] இவர்கள். இவர்களின் பொதுவெளிப்பிம்பம் என்பது சமைக்கப்பட்ட பொய். அது சும்மா தொட்டாலே சரிந்துவிழக்கூடியது
பாருங்கள் நக்சலைட்டுகள் போலீசாரால் வேட்டையாடப்பட்டு சிறையிலும் வாழ்விலும் சீரழிந்தபோது அந்த அரசின் செய்தித்தொடர்பாளராக இருந்து அரசியல் செய்த ஒருவர் எப்படி நக்சலைட் இயக்கத்தை தலைமை தாங்க முடியும், அவருடைய நேர்மை என்ன, அவருடைய கூச்சல்களின் மதிப்பு என்ன என்ற எளிய கேள்விக்குமுன் என்னென்ன பதற்றங்கள், பாவலாக்கள்!
லக்ஷ்மி மணிவண்ணனின் சுவாரசியமான குறிப்பு இது. தமிழ்ச்சூழலின் இந்த விசித்திரமான அவலத்தை காட்டுகிறது
செட்டியார் மாத்திரை- லக்ஷ்மி மணிவண்ணன்
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு,எல்லாவற்றையும் கட்டுடுடைத்துச் சொல்லுகிற வர்க்கம் ஒன்று தமிழில் உருவானது.சாதிச் சான்றைப் பார்த்தாலே தெரிந்து விடப் போகிற விஷயங்களை எல்லாம் கிடந்து கட்டுடைத்துக் கொண்டேயிருப்பார்கள்.முழு நேரமும் இதே பணிதான்.திடீரென அவரைக் கண்டுபிடித்து விட்டோம் என்பார்கள்.திடீரென இவரைக் கண்டுபிடித்து விட்டோம் என்பார்கள்.
கோணங்கியை நாற்பது பக்கத்துக்குக் கட்டுரை எழுதி ,அவர் தேவர் என்று ஒருவர் கண்டுபிடித்தார்.அந்த கட்டுரை மிகவும் புகழ் பெற்றது.கோணங்கி தேவர் என்பதுதான் ஊரறிந்த விஷயம் ஆயிற்றே;இதற்கு எதற்காக கட்டுடைக்க வேண்டும் ,கடினப்பட வேண்டும் என்று நான் கேட்டேன்.அது வேறு இது வேறு என்பார்கள்.ஜெயமோகன் நாயர் என்று நிறைய பேர் கட்டுடைத்தார்கள்.அதிலும் ஒரு இழிவு புலப்பட வேண்டும் என்பதற்காக ,அவர் யானை வளர்க்கும் நாயர் என்று கட்டுடைத்தார் ஒருவர்; சுந்தர ராமசாமியை ஐயரில் குறைந்தவர் என்று கட்டுடைத்தது போல. என்னை ஒருவர் இந்து நாடார் என்று கட்டுடைத்தார்.முதலில் அவர் என்னை நாடார் என்றுதான் கட்டுடைத்திருந்தார்.அது அவருக்குப் போதவில்லை.பிறகுதான் இந்து நாடார் என்று கட்டுடைத்தார்.இப்படி ஏராளம் பேர் கட்டுடைக்கபட்டார்கள்.
இதற்கு பிரதிக்குள் அலைதல் என்று பெயர்.படைப்பாளிகள் அனைவருமே பிரதிக்குள் அலைந்தவர்களால் கட்டுடைக்கபட்டு சாதி சொல்லப்பட்டார்கள்.நமக்கு ஏற்கனவே கிராம அதிகாரி ஏற்பாட்டில் தாசில்தார் சாதிச் சான்று தருகிறார்.அது செல்லாது என்று ஆகுமாயின் இந்த பிரதியறிதல்காரர்களின் சான்று ஒருவேளை பயன்படலாமே என்று எல்லோரும் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டார்கள்.
சங்கத்தில் இதற்குப் புகழ் கூடிற்று.ஏதேனும் நாவலைப் பற்றி பேசினால் தோழர் ஒருவர்,அதை எழுதியவரின் சான்றை எடுத்து நீட்டுவார்.இது ஒரு வயிற்றுப் போக்கு வியாதி போல பரவத் தொடங்கிற்று.தோழரிடம் பெருமிதம் அதிகரித்தது.தோழர் செட்டியார் சமுகத்தைச் சார்ந்தவர்.அதனால் ஒன்றுமில்லை.மரக்கடை இல்லையென்றால் இருக்கிறது கறிக்கடை.ஒன்றும் பிரச்சனையில்லை.ஆனால் தோழர் அப்படியில்லை.சாம்பார் என்றாலும் செட்டியார் சாம்பாரா என்று பார்க்கக் கூடியவர்.அசல் செட்டியார் என்பதற்கான அனைத்து குணாதிசயங்களும் கைவரப்பெற்றவர்.செட்டியார் மரபு சூழ் வாழ்க்கை அவருடையது.
ஒரு நாள் சங்கத்தில் வைத்து தோழரிடம் “தோழர் அவர் நாயர்,இவர் தேவர் ,நான் நாடார் என்பதைப் போல நீங்கள் இந்து செட்டி அவ்வளவுதானே தோழர் விஷயம் ? இதற்கு ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறீர்கள் என்று கேட்டுவிட்டேன்.
மனிதர் கொந்தளித்தார் பாருங்கள்.சமுகக் கொடுமைகள் எதற்குமே இவ்வளவு கொந்தளித்து நான் அவரைப் பார்த்ததில்லை.என்னைப் பார்த்து என்ன கேட்டு விட்டாய் ? ,என்னிடம் இதுவரையில் யாருமே இப்படிக் கேட்டதில்லை.நான் நினைத்தால் உன்னை புடுங்கி விடுவேன் தெரியுமா ? என்று மூச்சுமுட்டக் கத்தினார். சாதி அவரிடம் ஏன் இவ்வளவு இறுக்கமாக இருக்கிறது என்று யோசித்தபடியே வீடு திரும்பி விட்டேன்.
பின்னர் அவர் என்னைக் காணும் இடங்களில் எல்லாம் பிபி மாத்திரை போடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.மருத்துவ சிபாரிசாக இருக்க வேண்டும்.அந்த மாத்திரைக்கு அப்படித்தான் செட்டியார் மாத்திரை என்று எங்கள் ஊர் பகுதியில் பெயர் வந்தது.