விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020
வேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது
அன்புநிறை ஜெ,
இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது பெற்ற கவிஞர் வேணு வேட்ராயனின் “அலகில் அலகு” கவிதைத் தொகுப்பின் வாசிப்பனுபவம்.
வாயிலில் நின்று தயக்கத்துடன் கதவை ஒருக்களித்துத் திறந்து தலைநீட்டும் குழந்தையின் ஒற்றைவிழிப்பார்வை என்றே கவிதை வாசிப்பைக் குறித்து எழுதும் இம்முயற்சியை உணர்கிறேன்.
இத்தொகுதியை வாசித்ததும் மனதில் நிறைவது தூயதொரு வெண்மை. வெண்மலர்களும் வெண்பறவைகளும் வெண்மேகங்களுமான ஒரு மனவெளி. இறகுகள் இதழ்களாக மயங்கி பறவையும் பூவும் ஒன்றென்றாகும் வெளி. “முடிவிலி இழையில் ஆடிடும் நனவிலி”, “இலை உதிரும் தருணம்
நிகழும் ஓர் நடனம். மரணம்”, “சிறகதிரும் பால்வெளி” போன்ற சில வரிகள் வாசித்தது முதல் உடனிருக்கின்றன.
இத்தொகுப்பின் சிறந்த கவிதைகள் என நான் விரும்பியவை அனைத்துமே இருவகைகளுள் வரும். முதல் வகைக் கவிதைகள் தேர்ந்த புகைப்படக் கலைஞனென நுண்தருணங்களை கவிதை மொழியில் காட்சிப்படுத்துபவை. இரண்டாவது வகை மனதை உற்று நோக்கி அகநடனங்களை சொல்பவை.
முதல் வகைமையில் சில கவிதைகள் வரிசையாக அடுக்கப்படும் காட்சிகள். எனில் அவற்றை செறிவு கொள்ளச் செய்வது மௌனசாட்சியாய் இருக்கும் ஒன்றின் தன்மை. இக்கவிதையில் அது இரவு:
தனிமையில் வளரும் நள்ளிரவு நிலா
உறக்கத்தில் புரளும் கடல் அலைகள்.
அலை அலையாய் மோதி செல்லும் மழைக்காற்று.
கருவறையில் உதைத்து விளையாடும் செல்ல குழந்தைகள்.
மின்னல் இடும் கணப்பொழுது கோலங்கள்.
மௌனமாய் விழித்திருக்கும் இரவு
வானைக் கனவு கண்டு நீரில் துள்ளும் மீன் மரித்ததும் பறவையென்றாகும் கணத்தைப் பாடிய தேவதேவனின் கவிதை வரிசையில் இதில் ஒரு கவிதை
விரைந்து நெருங்கும் கழுகின் கண்களில்
துள்ளி மறையும் புள்ளிமான்கள்
தரை தொடும் முரட்டுக் கால்களில் சிக்கித் துடிக்கும் முயல்குட்டி
உயரே உயரே பறக்கும் மருண்ட விழிகளில் சிக்குண்ட ஒரு சொல்
அறியா அர்த்தங்கள் உலவும் வெளியில் சிறகடித்துச் செல்கிறது
இன்னொரு கவிதை:
சிறு சிறு குட்டைகளில்
தேங்கி நிற்கிறது
முன்னொரு காலத்தின் பெருநதி.
அவை ஒவ்வொன்றிலும் உதித்தெழுகிறது
அதிகாலைச் சூரியன்
சென்ற கோடையின் துவக்கத்தில் சோழநாட்டு கோவில்களைக் காணவென்று பயணம் ஒன்று சென்றிருந்தேன். அனுதினமும் எழுந்தது முதல் உறங்குவது வரை பல கோவில்கள். பெரும்பாலும் ஆளொழிந்து கிடந்த கோவில்களில் சிற்பக் கலையின் உன்னதங்களும், பாடல் பெற்ற தலங்களாக விளங்கிய அங்கு எழுந்த தமிழும் இசையுமெனவேறொரு காலத்தில் அவ்வாலயங்கள் அமைந்திருக்கின்றன. திருமழபாடியில் கொள்ளிடக் கரையில் பல்லாண்டுகள் கண்ட ஆலமரங்களின் அடியில் நின்றுபார்த்த போது விரிந்த மணற்பரப்பில் ஆங்காங்கே தேங்கிய நதியில் அந்தி வெயில் சுடர்ந்து கொண்டிருந்தது. அந்நதி ஏதோ விதத்தில் அந்த காலமற்ற வெளியை என்றுமென நிற்கும் மகத்தான கலைமரபை பிரதிபலிப்பதாகத் தோன்றியது. அதைக் கவிதைக் கணமாக ஆக்கித் தந்தது இக்கவிதை. அவை ஒவ்வொன்றிலும் உதித்தெழுகிறது சூரியன் எனும் காட்சி மாற்றங்களுக்கிடையே மாறாதிருக்கும் பெருநெறி என்றும் தோன்றியது.
இரண்டாவது வகைமையில் அமைந்த கவிதைகளில் அவரது ஆன்மீகமான தேடலையும் அகப்பயணத்தையும் சொல்லும் மொழி அமைந்திருக்கிறது. ஆழ்ந்திறங்கும் இரவின் அமைதியில் வெடித்துச் சிதறும் எரிமீன்களென சில வரிகள் ஆங்காங்கே தெரிக்கின்றன. புலன்களின் எல்லைகளைக் கடந்த உள்முக அனுபவம் ஒன்றைக் கடத்தும் கவிதைகளில் ஒன்று இது.
திரிசடை அதிர் நிலம் உகிர் தோய் உதிரம்
பற்றி நாளமெல்லாம் நீரோடும் நெருப்பு
படபடபட சடசடசட
நடனமிடும் குளம்படிகள் சுழன்றடிக்கும் காற்றில் புரளும் செந்தீயின் பிடரி
சுடரும் மலரிதழ் மேல் அனந்தசயனம்
சாந்தம் சாந்தம் சாந்தம்
ஒடுங்குதல் நிகழ்கிறது எனத் தொடங்கும் மற்றொரு கவிதையிலும் மனது அடங்கி காலாதீதமான ஒன்று நிகழும் கணம் நிகழ்ந்திருக்கிறது. களிறு என்ற படிமம் வரும் கவிதைகளில் சிறப்பான ஒன்று இது:
நாட்கணக்கில் வனத்தில் திமிறிய களிறு
வெண்இதழ் மலரை கொய்து மெல்ல நீல வெளியில் வீசுகிறது
அந்தரவெளியில் தனித்து நீந்தும் வெண்மலர்
மனதின் போக்கை கவனித்து நிற்கும் கவிதையென இன்னொன்று:
ஆயிரமாயிரம்
இறகுகளின் பறவை
ஒரு கணத்தில்
ஒரு திசையில்
நகர்கிறது.
காலமற்ற வெளியுமற்ற
நிலையில் அது நிலைக்கிறது
“ஒளிந்திருக்கும் நினைவுகளை ரகசியமாய் மீளவாசிக்கும் மனம்” என்று துவங்கும் கவிதையில் “இரைவேண்டி கடும் வெயில்வெளியில் தவம் புரியும் ஒரு அரவம்” என்ற படிமமே முதல் வரியைச் சொல்லப் போதுமென்றும் படுகிறது.
இவ்விரண்டு வகைகளும் இணைந்து வரும் கவிதைகளும் இத்தொகுதியில் உண்டு. நதிநீரில் முகம் காணும் மலர்கள், நீரில் காண்பது வேர்வழியே மலரென்றாகி சுடரும் நீரையே என்பதும் இருவகைமைகளையும் இணைக்கும் ஒரு கவிதை.
நதிநீரில் முகம் காணும் கரைமலர்கள்
அருஞ்சுவை பருகும் வேரிதழ்கள்
மறைந்து மேலேறும் ஆழ்நதியின் நீர்
செந்தளிர்களில் ஒளிரும் உயிரின் சுடர்
அறிந்தவற்றின் வாயிலாக அறியாதவற்றைத் தொட விழையும் மொழி யத்தனமே கவிதை எனும் வகையில், ‘அளக்கமுடியாமைகளின் அலகு’ என்றே ‘அலகில் அலகு’ தலைப்பு பொருள் படுகிறது. இதன் தலைப்பு வரி வரும் கவிதையில் வருவதோ இதேபோல காட்சிச் சித்தரிப்பும் அகப்பயணமும் இணையும் மற்றுமொரு புள்ளி. தன் இருப்பை அருந்திச் செல்ல முயலும் அந்தரப் பறவையின் காட்சி, அந்த நுண்தருணத்தை நலுங்காமல் தொட்டமையாலேயே இது கவிதையாகி வருகிறது.
“சரேலென பறந்து
சரிந்து இறங்கி
நிலைத்த நீரின்மேல் நின்றது
ஒரு நிறமற்ற பறவை.
அலகில் அலகு பொருத்தி அலைகளிலாடும் தன்னை
அது
அருந்திவிட்டுச் சென்றது”
ஓயாத மனதை உற்றுநோக்கி தியானத்தில் தன்னுணர்வை கரைத்துவிடும் முயற்சியின் கணம் என்று காட்சியும் கவிதையும் விரிந்து கொண்டே செல்கிறது.
விழிப்பு மனம் நனவிலியில் பற்றியேறும் கணங்களே கவிதைத் தருணங்கள் என்று சொல்கிறது இக்கவிதைத் தொகுதி.
மிக்க அன்புடன்,
சுபா.