தங்கப்புத்தகம் – கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ,

தங்கப்புத்தகம் வாசிக்கும்போது ஓர் எண்ணம் வந்தது. ஒருவர் தன்னைப்பற்றிய அகங்காரம் கொண்டிருந்தால்தானே தான் அடைந்தது மூலநூல், மாற்றமில்லாத நூல் என நினைக்கமுடியும்? அப்படி இல்லாமல் ஒரு மூலநூல் இருக்கிறது, அதை அறியவேண்டும் என்று ஒருவர் நினைப்பதிலென்ன பிழை இருக்கமுடியும்? அதற்காக அவர் முயற்சிசெய்வது ஒரு வகையான அடக்கம்தானே?

ஆனால் தங்கப்புத்தகம் வாசித்து இத்தனைநாட்களுக்குப்பிறகு வேறுவகையான எண்ணம் உருவாகியிருக்கிறது. தன்னைப்பற்றிய அகங்காரம் தலைக்கேறிய ஒருவர்தான் உலகம் முழுமைக்குமான ஒரு நூலை தானே அறிந்துவிடமுடியும் என நினைப்பார். தன்னடக்கம் உள்ளவர் முதலில் அறிவது தன்னுடைய ஆணவத்தைத்தான். அவரைப்பொறுத்தவரை தன்னால் எதை அறியமுடியுமோ அதை அறியவே முயல்வார். தன் அறிதல் அந்த மொத்த அறிதலில் ஒரு பகுதி என்று சமாதானம் செய்துகொள்வார். அதுதான் மனிதனுக்குச் சாத்தியம்

முக்தா கடைசியில் அதைத்தான் சொல்கிறார்

மகாதேவன்

***

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

தங்கப்புத்தகம் – இன்று வாசிக்க ஆரம்பித்தேன். முதல் பாகம் முடித்தவுடன் இரண்டாம் பாகத்தையும் ஒன்றிப்போய் உடனே வாசிக்க தொடங்கினேன். சுவாமி முக்தானந்தாவின் தேடலும் பயணமும் திகைப்பை வரவழைக்கிறது. கரு கதையில் முக்தானந்தரின் அனுபவம் இரகசியமான ஞானத்தின் வாசல் வரை வந்தது. மறைஞான தேடலில் இருக்கும் ஆடம் ஷம்பாலாவிற்குள் செல்வதற்கு அழைப்பு வந்தபோது முக்தானந்தாவிற்கும் அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.  பரமஹம்ஸ யோகானந்தரின் யோகியின் சுயசரிதைப் போல ஒரு பார்வையாளராக சக பயணியின் ஆன்மீக அனுபத்தை பதிவு செய்தது கரு.

அந்த ஏமாற்றத்தை தங்கப்புத்தகம் நிறைவு செய்தது. எட்டாக் கனியான நேரடி ஞான அனுபவத்தை, அந்த தேடலின் தாகத்தை சாகசத்தோடும், கண்ணீரோடும் தங்கப்புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறீர்கள்.  நம்பகத்தன்மையொடு மிக சீராக கதை செல்கிறது. ஞான நூல்களுக்கு எல்லைகளே இல்லை. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு சென்று கொண்டே இருக்கலாம். மூலநூல்களின் பாடபேதங்களை ஆய்வு செய்துகொண்டே இருப்பது ஒரு மனநோய் ஆகிவிட்டது என்கிறார் முக்தானந்தர்.  ஜே.கிருஷ்ணமூர்த்தியும் ஓரிடத்தில், ஓயாமல் படித்துகொண்டே இருப்பதும் ஒருவகையான மனப்பிறழ்வு என்கிறார்.

முடிவில்லாமல் பல சாத்தியங்களை உள்ளடிக்கிய புத்தம் தங்கப்புத்தகம். அதைப் எப்படியும் பிரதி எடுக்க வேண்டும் என்று முனைகினார் முக்தானந்தர். அதன் விதிகளை ஆராய்ந்து மெல்ல மெல்ல புத்தகத்தின் கட்டமைப்பை அறித்துகொள்கிறார், நெருங்கிவிட்டதாகவும் உணர்கிறார்.  ஆனால்  முடிவில்லாத சாத்தியங்களால் தங்கப்புத்தகம் அவரை சிறை வைத்துவிடுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்ஆன்மீக நூல்களை தீவிரமாக  வாசித்து வரும்போது, குருத்ஜீயேப்பின் “ஆல் அண்ட் எவ்ரித்திங் – பியாஸில்பப் தன் பேரனுக்கு சொன்ன கதைகள்”  வித்தியசமான வாசிப்பனுவத்தைத் தந்தது. படிப்பதற்கு மிக சிரமான சொற்றொடர்கள், நீண்ட வாக்கியங்கள், அர்த்தமற்ற சொற்கள் என்று இருக்கும்.  ஒரு பக்கத்தை வாசிப்பதற்கே அதிக கவனம் தேவைப்படும். சுமார் 1200 பக்கங்கள் கொண்டது. குருத்ஜீயேப், ஒருவன் நிரந்தரமான சுயத்தை அடைவதற்கு விழிப்புணர்வோடு கூடிய உழைப்பும், சுய வதையும் அவசியம் என்கிறார்.

முக்தானந்தர் வருடக்கணக்கில் திபெத்திய மாடாலையங்களில் உழைக்கிறார். அழைப்பு வரும்போது இருண்ட குகையில், தனிமைச்சிறையில் கூட்டுப்புழுப் போல் ஒடுங்கி இருக்கிறார்.தங்கப்புத்தத்தை பிரதியெடுக்கும்போதும்விரல் நுனிகள் வீங்கி இரத்தம் கட்டி வெடிக்கும் நிலைவரை முனைகிறார்.

இமயமலைக் கூட்டங்களிலும், மாடாலைங்களிலும் முக்தானந்தருடைய தீவிரமான தேடலும், அலைகளிப்பும் உங்கள் விவரிப்பில் வாசகனுக்கும் ஒரு மெய்நிகர் அனுபவத்தை தரும். சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலை முகடுகளிலும் சூரிய உதயத்தின் பொன்கீற்றுகளை காணும் அனுபவம் மிக அற்புதம்.

இறுதியில்  தான் அடைவதற்கு ஏதுமில்லை ஆகவே இழப்பதற்கும் தன்னிடம் ஒன்றுமில்லை என்ற முக்தானந்தர் சொற்களில் நானும் உறைந்துப்போய் இருந்தேன்.

நன்றி.

விஜய் சத்தியா

வாசிங்டன் டி.சி

***

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகத்தை வாசிக்கையில் வேதாந்தத்தின் சில கருத்துக்கள் ஞாபகம் வந்தன. ஞாதா ஞேயி ஞானம் மூன்றுமே ஒன்றுதான். அறிபவன் அறிபடுபொருள் அறிவு மூன்றும் ஒன்றே. அறியப்படும் ஒவ்வொரு பொருளிலும் இது மூன்றும் உள்ளது. இந்தப்பேனாவை நான் பார்க்கிறேன். இதில் பேனா உள்ளது. பேனாவை பார்க்கும் நான் உள்ளேன். பேனா என்ற அறிதல் உள்ளது. மூன்றில் ஒன்று இல்லாமல் சாத்தியமே இல்லை. அப்படியென்றால் நான் இல்லாமல் ஒரு புத்தகமே சாத்தியமில்லை.

அதைத்தான் முக்தாவும் உணர்கிறார் என்று படுகிறது. விதவிதமான உருவகங்களை தத்ரூபமான வர்ணனைகள் வழியாகச் சொல்லும் கதை பித்துப்பிடிக்கச்செய்கிறது. செல்லும்வழி சிக்கலானது திரும்பி வருவது எளிதானது என்பதே அபூர்வமான ஒரு படிமம்தான்

எஸ்.பாஸ்கர்

***

வணக்கம் ஜெ

சில நூல்களை வாசித்து முடித்து கடைசி பக்கத்தை திருப்பும் போது உடனே இதை முதலிலிருந்து மீண்டும் படிக்க வேண்டும் என்று தோன்றும். ஃபோர்டின் பரேட்ஸ் எண்ட்(Parade’s End) மற்றும் ப்ரொஸ்ட்டின் In Search of Lost Time, இந்நூல்களில் தான் அதை முதலில் உணர்ந்தேன். சில நூல்கள் வாசித்து முடித்தவுடன் பெரும் அயர்ச்சியை அளிக்க கூடுவன. போரும் அமைதியும் கரமஸோவ் சகோதரர்கள் விஷ்ணுபுரம் போன்றவை அத்தகைய நூல்கள்.  அவை நம்முள் ஊறி முளைத்து துளிர் விட சில காலம் தேவை. அதன் பின் நம்மை ‘கைவிடும் பசுங்கழை’ என வேகமாக மீண்டும் அதனிடம் இழுத்துக்கொள்ளும்.

இவ்விரண்டு வகை நூல்களுமே மறுவாசிப்பின் வாய்ப்பை நமக்கு அளிக்கின்றன. ஆனால் மறுமுறை நாம் வாசிப்பது அதே புத்தகத்தை அல்ல. மறுவாசிப்பில் நாம் பெறுவது அநேகமாக புதுவாசிப்பே. டார்க்கோவ்ஸ்கி மாலிக் போன்றோரின் படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும்போது ஒவ்வொரு அனுபவத்தை பெறுவதை போல இந்நூல்கள் பல திறப்புகளை அளிக்கின்றன. வாசிக்க வாசிக்க மூலம் மாறி மாறி நமக்கு முற்றிலும் வேறாக அர்த்தபடுகிறது. வெவ்வேறு வடிவ கண்ணாடிகள் மூலம் ஒரே காட்சியை பல விதமாக பார்க்கிறோம்.

தங்கப்புத்தகத்தை நாம் அனைவரும் வாசித்துக்கொண்டிருக்கிறோம். அல்லது நாம் வாசிக்கும் அனைத்து நூல்களுமே தங்கப்புத்தகங்கள் தான். அவற்றை நாம் வாசிக்கையில் அடைவது ஒன்று. அதை மற்றவரிடம் சொல்லாக விளக்கையில் வேறு அச்சாக எழுதுகையில் வேறு ஓவியமாக தீட்டுகையில் வேறாகிறது. என் வாசிப்பும் மற்றவர் வாசிப்பும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அனைத்தும் ஒன்றிலிருந்து வந்தவையாதலால் அனைத்தும் ஒன்றே.

இக்கருத்தை பல அம்சங்களில் பொருத்திப் பார்க்கலாம்.  ஒரு புள்ளியின் பெருவெடிப்பிலிருந்து தோன்றியவைதான் அனைத்து பிரபஞ்சமும் என கொள்ளலாம். பரமாத்மா ஒன்றே, அதனின் வெவ்வேறான வடிவங்களே அனைத்து ஜீவாத்மாக்களும் எனவும் கொள்ளலாம் அல்லது மூல பிரக்ருதத்தை அறியும் புருசர்கள் என வேதாந்தம் சாங்கியம் என அனைத்தையும் பேச வழி அளிப்பது பௌதத்தின் பின்னணியில்அமைந்திருக்கும் இக்கதை.

இந்த richness of material தான் உங்கள் கதைகளில் என்னை பெரிதும் கவர்வது. அது நமக்களிக்கும் வெளி பிரம்மாண்டமானது. எந்த புள்ளியிலிருந்தும் தொடங்கி நாம் அடைய தரிசனங்கள் பல. கதைகள் மீண்டும் வர துவங்கியதில் மகிழ்ச்சி, வாழ்க்கை மீண்டும் பொருளுள்ளதாக தோன்றுகிறது. தொடர்ந்து எழுதவேண்டும், கதைகள் வந்துக்கொண்டேயிருக்கட்டும். பெற்றுக்கொள்ள தயாராக காத்திருக்கிறோம். நன்றி.

ஸ்ரீராம்

***

முந்தைய கட்டுரைகுமிழி,மலையரசி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்மலர் பறவை – அலகில் அலகு கவிதைத் தொகுப்பு குறித்து