அப்பா உடம்புசரியில்லாமல் படுத்தபடுக்கையாக ஆகி எட்டுமாதங்களாகி, வீட்டில் மெல்லமெல்ல வறுமை தலைகாட்ட ஆரம்பித்தபோது, அம்மா என்னிடம் “என்ன இருந்தாலும் குடும்பத்தொழிலு… அதைச் செய்யுறதிலே என்ன? தேடிவந்திட்டேதானே இருக்காங்க?” என்று ஆரம்பித்தாள்.
நான் கோபத்துடன் “குடும்பத்தொழில் செய்யணும்னா என்னைய எதுக்கு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினீங்க?” என்று கூச்சலிட்டேன்.
அம்மா கோபம் அடைந்து “செரி, அப்ப பள்ளிக்கூட படிப்புக்குண்டான வேலைக்குப்போய் சம்பாதிச்சு கொண்டுவா” என்றாள்.
“வேலை கெடைச்சா உங்க மூஞ்சிகளை ஏன் பாக்குதேன்?” என்று நான் அவளை நோக்கிக் கத்தியபடி சென்றேன்.
“இப்ப எதுக்கு பாக்கிறே? அப்ப உனக்கு வேண்டியது இங்க நாங்க இரந்தும் பொறுக்கியும் வச்சு விளம்பி வைக்கிறது, இல்லியா?” என்று அம்மா கேட்டாள்.
“நீ வைக்கிற சோறு எனக்கு வேண்டாம்… நான் பட்டினி கிடந்து சாவுதேன்… போதுமா?” என்றேன்.
“கிருஷ்ணா” என்று அப்பா கூப்பிட்டார். நான் அவர் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வை அப்போதுதான் அடைந்தேன். அப்பாவின் முன் நான் பேசுவதே இல்லை. ஆனால் அவர் படுத்தபின்னர் மெல்லமெல்ல அவர் என் மனதில் சுருங்கினார். அவர் இல்லையென்றே அவ்வப்போது நினைக்கத் தொடங்கியிருந்தேன்.
“கிருஷ்ணா!” என்றார் அப்பா.
நான் எட்டிப்பார்த்து “என்ன?” என்றேன்.
“உள்ள வா.”
நான் உள்ளே போனேன். அப்பா நடுங்கும் தலையுடன் என்னை சற்றுநேரம் பார்த்தார். பிறகு “உனக்கு வீட்டு நிலைமை தெரியும்தானே?” என்றார்.
“ஆமா” என்றேன்.
“பட்டினி வந்திடும்போல இருக்கு. வளந்த பிள்ளை இருக்க பெத்தவங்க பட்டினி கிடந்தா அது உனக்குத்தான் தோஷம், பிறகு நினைச்சு நினைச்சு வருத்தப்படுவே.”
“நான் கூலிவேலைக்குப் போறேன்.”
“கூலிவேலை இங்க எங்க இருக்கு? நீ சோனிப்பையன். இங்க பீமன்மாரு பகலந்திவரை வேலைசெய்தா அஞ்சுரூபா சம்பளம்…”
நான் பேசாமல் நின்றேன்.
“நம்ம கிட்ட தொழிலு இருக்கு… நம்ம தேவதைகள் நம்ம பாட்டனும் முப்பாட்டனும் தலைமுறை தலைமுறையா உபாசனை செய்தவங்க. அந்த உபாசனைதான் அவங்க நமக்கு சேத்துவச்சிருக்கிற சொத்து. அதை விடக்கூடாது, பொன்னுக்குமேலே இருந்து பட்டினி கெடக்கலாமா?”
“அந்தப் பொன்னு இதுவரை உங்க கையிலே எங்கபோச்சு?”
“கைநெறைய வந்தது. என் தங்கச்சி ஏழுபேரு உன் அம்மைக்க தங்கச்சிகள் நாலுபேரு, எனக்க அனந்தரவனுங்க எட்டுபேரு, அனந்தரவத்திகள் பதிமூணுபேரு, அத்தனை பேருக்கும் கல்யாணம் செய்துவச்சு கரையேத்தினது என் தெய்வம் தந்த பணத்தாலேதான். பணம் வந்தபோது கஷ்டப்பட்ட அம்பிடுபேருக்கும் கைநிறைய அள்ளி அள்ளி குடுத்தேன்… அது என் கடமை” என்று அப்பா சொன்னார் “ஆனா இப்ப நான் அவங்ககிட்ட போயி நிக்கப்பிடாது. அது உனக்கு அவமானம்.”
நான் பேசாமல் நின்றேன்.
“நாம யாருக்கும் எந்த தீங்கும் செய்யவேண்டாம். நாம ஆபிசாரமோ துர்வித்யையோ செய்றவங்க இல்லை. துக்கப்படுறவங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் குடுக்குத பூசாரிகள். அதுக்குத்தான் நாம தட்சிணை வாங்குதோம். அது வைத்தியன் கூலிவாங்குத மாதிரித்தான்… அது நம்ம குலத்தொழிலு.”
“நான் பூசாரி இல்லை, அந்த வேஷம் கட்ட என்னால முடியாது.”
“எல்லாத்துக்கும் வேஷமிருக்கு. வாத்தியாருக்கும் டாக்டருக்குமெல்லாம் வேஷம் உண்டு… அந்த தொழிலை நீ கடைசிவரைச் செய்யணும்னு நான் சொல்லலை. உனக்கு டீச்சர் டிரெயினிங் இருக்கு. எப்பிடியும் ரெண்டு வருசத்திலே வாத்தியார் வேலை வந்திரும். அதுவரை செய்… அதுவரை இங்க பட்டினி இல்லாம போகட்டும்… வேலை கிடைச்சா கிளம்பிப்போ. எங்கவேணுமானாலும் போ.”
“என்னை கணியான்னுதான் சொல்லுவாங்க… எங்க போனாலும்.”
“அது நீ எங்கபோனாலும் சொல்லுவாங்க… அதிலே இருந்து போகணுமானா நீ ஊரைவிட்டு, பேரைவிட்டு, கண்காணாம போகணும். என்பேரை சொல்லக்கூடாது.”
“அப்டித்தான் நினைக்கேன்…” என்றேன்.
“ஏன் உனக்கு இதிலே என்ன?” என்று அப்பா கேட்டார்.
“கம்யூனிஸ்டுக சொல்றானுக இது ஏமாத்திப்பிழைக்கிற பிழைப்புன்னு.”
“நான் ஏமாத்துறவன்னு உனக்கு தோணுதா?”
நான் ஒன்றும் சொல்லவில்லை.
“சொல்லு.”
“அப்டி ஒரு தெய்வம் உண்டா?”
‘உண்டான்னா?”
“எங்கேயாவது இருக்கா?”
“இருக்கு.”
“அந்த கறுப்பு புல்லுப்பொம்மையா?” என்றேன். “அது தெய்வமா?”
“அது இருக்கு… எப்டியோ ஏதோ வடிவிலே இருக்கு. நாம ஒரு வடிவத்திலே அதை வச்சிருக்கோம். அந்த ரூபத்திலே அது வந்து சேருது, அவ்ளவுதான். இதிலே எனக்குச் சந்தேகமே இல்லை. ஆனா சந்தேகப்படுறவனுக்கு அதை காட்டமுடியாது. நம்புறவனுக்கு மட்டும்தான் அது உண்மை.”
“ஆமா, இதைச்சொன்னா…”
“ஏன் சொல்லுறே? நீ நம்புறதுக்கா மத்தவனை நம்பவைக்கிறதுக்கா நீ கேக்கிறே? நீ நம்புறேன்னா அதை தொட்டு பாரு. செய்யவேண்டியதைச் செஞ்சுபாரு.”
“சவாலா?” என்றேன்.
“சவால்னே வைச்சுக்கோ… நீ சொன்னியே பொம்மைன்னு. அதுக்கு செய்யவேண்டியதை செய். அது உன் கண்ணுக்கு தெரியும்.”
“கண்ணுக்கா?”
“கண்ணுக்கு தெரியும்…”
“தெரியல்லன்னா?”
“தெரியல்லன்னா அதுக்கு உன்னைய வேண்டாம்னு அர்த்தம்.”
“இது வேறமாதிரி பேச்சு.”
“நீ எதுக்கு பயப்படுறே?”
“பயமா எனக்கா?”
“பின்ன? நீ பயப்படுறே. உன்னை அந்த தெய்வம் பிடிச்சுக்கிடும்னு நினைக்கிறே. அந்த அடையாளம் உன்னைவிட்டு போய்டாதுன்னு நினைக்கிறே.”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. எனக்கு தெரியும், அதெல்லாம் சும்மா ஏமாத்துவேலை.”
“சரி, அப்ப அதை ஒருதடவை செஞ்சு பாத்திரு… ஏமாத்துன்னு தெரிஞ்சா விட்டிடு.”
நான் “செரி செஞ்சு பாக்குதேன்” என்றேன்.
“போயி எடுத்துட்டுவா. நான் உனக்கு மந்திர உபதேசம் தாறேன்’’ என்றேன்.
நான் ஒரு கணம் தயங்கினேன், வீம்புக்காக எதிலாவது மாட்டிக்கொள்கிறேனா? “ஒரு மந்திர உபதேசத்திலே சாமி நம்ம கிட்ட வந்திருமா?”
“வந்திரும். ஏன்னா உன் ஏழு தலைமுறை மூதாதையர் இதைச் செஞ்சிருக்காங்க… உன் வரையில் வந்து நின்னுட்டிருக்கிறது ஒரு பெரிய ஆறு. நமக்கு எப்டி சாமிகளை வேணுமோ அதுபோல சாமிகளுக்கு நம்மையும் வேணும்”
நான் மீண்டும் தயங்கினேன்.
“சரி உனக்கு மனமில்லேன்னா விட்டிடு.”
நான் உடனே முடிவெடுத்தேன். “இல்லை, எடுத்திட்டு வாறேன்.”
வீட்டுக்குள்ளே போய் தென்மேற்கு மூலையில் ஒரு சிறிய அறை. அப்பா மட்டுமே அதை திறப்பார், பூட்டு இல்லை.அதன் கதவை வெறுமே மூடி தருவைப்புல்லால் ஒரு முடிச்சு போட்டிருப்பார்.
“சரணம் தேவீ, அபயம் மகாதேவீன்னு சொல்லி திறந்து உள்ள போ” என்று அப்பா அவர் அறையிலிருந்து சொன்னார்.
நான் தருவைப்புல் கட்டை அவிழ்த்து கதவை திறந்து உள்ளே சென்றேன். உள்ளே பழைய பித்தளை பூஜைப்பொருட்கள் இருந்தன. ஒரு பெரிய ஆமாடப்பெட்டி. அதற்கு அப்பால் ஆணியில் மாட்டப்பட்டிருந்தது மரத்தாலான கரிய முகமூடி. அதுதான் தேவி. தூவக்காளி என்று பெயர். அப்பா அந்த தேவியை வரவழைத்து ஆடுவதை நான் கண்டிருக்கிறேன்.
அதை எடுக்க நான் தயங்கினேன். பெரிய கரிய முகத்தில் வெண்பற்கள் வெறித்திருந்த பெரிய வாய். நீண்டு வடித்த காதுகள். அகன்றபெரிய மூக்கு. வாய் கீழ்தாடை பற்களுடன் தனியாக அசைந்தது.
உருண்டு துறித்த கண்கள். வெண்விழிகளுக்கு நடுவே அதை அணிந்திருப்பவர் வெளியே பார்ப்பதற்கு துளைகள் இல்லை என்பதை அப்போதுதான் பார்த்தேன். அப்படியென்றால் அவர் ஒரு குருட்டாட்டம்தான் ஆடவேண்டும்.
நான் மேலும் சற்று தயங்கியபின் அதை எடுத்துக்கொண்டு அப்பாவிடம் சேன்றேன். அவர் படுக்கையில் மெல்ல எழுந்து அமர்ந்து தன் முதுகின்மேல் முருக்கு மரத்தலான தலையணையை வைத்திருந்தார்.
“தேவியை இங்கே கொண்டுவந்து வை” என அவர் தன் வலப்பக்கத்தை காட்டினார்.
நான் அந்த முகமூடியை அவர் அருகே கட்டிலில் வைத்தேன். மல்லாந்து கூரையைப் பார்த்து வெறிச்சிரிப்பு சிரிப்பதுபோலிருந்தது அதன் தோற்றம்.
“இங்கே உடகார்” என்றார்.
நான் அவர் இடப்பக்கம் அமர்ந்தேன். அப்பா மேலும் அசைந்து அமர்ந்து தன் அமர்வை எளிதாக்கிக்கொண்டார்.
“இந்த தெய்வத்தைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?” என்றார்.
“தெரியாது” என்றேன்.
“வேண்டிய சந்தர்ப்பம் வாறதுவரை சொல்லவேண்டாம்னு நானும் நினைச்சேன்” என்று அப்பாசொன்னார். “அனாதிக் காலம் முதல் இங்க சப்த மாதாக்களான பிராம்மி, நாராயணி, மகேஸ்வரி, கௌமாரி, இந்திராணி, வராகி, சாமுண்டின்னு ஏழுபேரையும் கும்பிட்டுட்டு இருக்கோம். அதிலே சாமுண்டியோட ஒரு ரூபம் இந்த மாதான்னாக்கும் கணக்கு. வாய்க்கானத்து சாமுண்டீன்னு இந்த தெய்வத்தை வடக்கே உள்ளவனுக கும்பிடுதானுக.”
“இந்த தெய்வத்தைப் பத்தின கதை கொஞ்சம் வித்தியாசமாட்டு இருக்கும். அதாவது பெருமாள் பிரபஞ்ச சிருஷ்டி முடிஞ்சபிறவு ஓய்வெடுக்கணும்னு முடிவு பண்ணினார். அதுக்கு ஒரு எடம் வேணும். அவரு தன் தேவியான லச்சுமித்தாய்கிட்ட நான் பள்ளிகொள்ள ஒரு எடம் வேணும்னு கேட்டாரு. அது முடிவில்லாத மதுரமும் முடிவில்லாத ஒளியும் உள்ளதா இருக்கணும்னு சொன்னார்.”
“முடிவில்லா இனிப்பும் ஒளியும் உள்ளதுன்னா அது திருமகளுக்க கருணையாக்குமே?” என்றார் அப்பா. “லச்சுமி அம்மை கனிஞ்சா. அவளுக்க முலைப்பாலு ஊறிப்பெருகி கடலா ஆச்சு. அந்தப் பாற்கடலிலே விஷ்ணு படுக்கணுமானா மெத்தைவேணும். அனந்தன் மூணு சுருளாகி மெத்தையானான். அதிலே அவரு படுத்து ஸ்திதி சம்வர்த்தனம் பண்ணி கண்வளர்ந்தாரு…” அப்பா காவிப்பற்களைக் காட்டிச் சிரித்து “எல்லா புருசனுங்களும் படுத்து உறங்குத கடலு அதாக்கும்… இந்நா நான் படுத்துக் கிடக்குதது எங்கேன்னு நினைக்கே? பால்கடலுல்லா?” என்றார்.
அம்மையாக்குமே, கண்வளருறப்ப விஷ்ணு அவளுக்க குழந்தையாக்குமே. அவ தொட்டிலை மெல்ல ஆட்டினா. அதுக்காக அந்த பாற்கடலிலே அலையடிச்சுது. அந்த அலையாக்கும் இங்க பூமியிலே பாசமா, அன்பா, நீதியா, கருணையா, தர்மமா, எளிமையா, ஒழுக்கமா எல்லாம் ஆவுது. எல்லா ருசியும், எல்லா சங்கீதமும், எல்லா மணமும், எல்லா நெறமும், எல்லா குளுமையும் அங்க அடிக்குத அலையாக்கும். பாட்டு கூத்து நாடகம்னு எல்லா கலையும் பாற்கடல் அலையாக்கும். இங்க உள்ள எல்லா நன்மையும் அழகும் மங்கலமும் திருமகளுக்க பாலிலே இருந்து வாறதாக்கும்.
ஆனா இந்த பிரபஞ்சத்துக்கு ஒரு நெறி உண்டு. எதுவா இருந்தாலும் எதிருண்டு. எதிரு சின்னதா இருக்குந்தோறும் மொத்த மறுபக்கத்தையும் எதிர்க்கிற சக்தி அதுக்கு வந்திரும். நஞ்சில்லாமல் பாற்கடல் நிக்காது. பாற்கடலிலே வந்த ஆயிரம்கோடி வெள்ளை அலைகளிலே ஒரு அலை மட்டும் கறுப்பலை. அந்த அலை ஆதிசேஷனைப் போய் அறைஞ்சப்ப ஒரு துளி சொட்டி மண்ணிலெ விழுந்தது. அது விழுந்த இடமாக்கும் அகஸ்தியர்கூட மலை.
அகஸ்தியர்கூட மலையிலே அந்த துளி விழுந்து ஒரு நிழல்ரூப தெய்வம் உண்டாச்சு. அதுக்கு ரூபம் வேணுமின்னு தோணிச்சு. சுற்றி நின்னிட்டிருந்தது தருவைப்புல்லு. புல்லுத்தூவலை எடுத்து அது தன் தலையிலே வைச்சுக்கிட்டுது. அப்டியே புல்லாலே இடுப்பாடையும் நெஞ்சாடையும் சூடினப்ப அதுக்கு மனுசக் கண்ணாலே பாக்கக்கூடிய ரூபம் அமைஞ்சுது. அதைப்பாத்த காணிக்காரங்க அதை தூவக்காளினு விளிச்சாங்க
தூவக்காளி அழுக்கையும் சீக்கையும் சாவையும் உண்டாக்குத தெய்வம். பிள்ளையையும் பசுக்களையும் எருமைகளையும் எடுத்துக்கிடுவா. பிள்ளைகரு அழிப்பா. இருட்டிலே காத்திருந்து பின்னாலே ஓங்கியறைஞ்சு கொல்லுவா. முதுகாணிக்காரங்க அவளை கண்டறிஞ்சு சொன்னபிறகு அவனுகளுக்க ஊருகளிலே கல்ரூபமா நிறுத்தி புல்லிலே உருவம் செஞ்சு புல்லுதூவல் முடிசூடி கும்பிட்டாங்க. பூசையும் பலியும் குடுத்து அவ எல்லை மீறாம வச்சுக்கிட்டாங்க. அதோட அவ அடங்கினா. ஆலமரத்து வேர் போல அவ அங்கங்க எந்திரிப்பா, அப்பமே அடக்கினா தோஷமில்லை.
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னாலே கார்த்திகைத்திருநாள் ராமவர்மா மகாராஜா ஆட்சியிலே இங்கே நடப்புதீனம் உண்டாகி ஆட்கள் செத்துவிழுந்தப்ப ஊரிலே இருந்து கொஞ்ச பேரு பிள்ளைகுட்டி சட்டிபானைகளோட காட்டுக்குள்ளே குடியேறினாங்க. அங்க காணிக்காரனுகளுக்கு எந்த சீக்கும் இல்லை. அதுக்கு காரணம் இந்த தெய்வமாக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு அவங்ககிட்ட இந்த தெய்வத்தை கேட்டாங்க. முதுகாணி சொட்டன் நம்ம மூதாதையான அச்சுக் கணியாருக்கு மந்திரஉபதேசம் குடுத்து கையளிச்சதாக்கும் இந்த தெய்வம். அவரு இங்க கூட்டிட்டு வந்தாரு. அன்னையிலே இருந்து இன்னைக்குவரை இது ஊருக்கு காப்பு.
மக்கா, மனுசனுக்க துக்கம் பல்லாயிரம். அந்த துக்கம் மூணுவகை. ஆதி தைவிகம்னு சொல்லுற துக்கம் தெய்வம் தாறது. ஆதி பௌதிகம்னு சொல்லுறது பிரகிருதியிலே உள்ளது. அதுரெண்டும் விதி. அதுக்கு நாம தெய்வத்தை கும்பிட்டே ஆகணும். சரணடைஞ்சிரணும். ஆதிமானுஷம்னு சொல்லுதது மனுஷனே மனுஷனுக்கு குடுத்துக்கிடுத துக்கம். அதுவும் மூணுவகை வகை. ப்ராப்த காரணம்னா விதியினாலே மனுஷன் மனுஷனுக்கு குடுக்குத துக்கம்.பரநிர்மித துக்கம்னா இன்னொருத்தன் வேணும்னே நமக்கு தாறது. ஆத்மநிர்மிதம்னா நாமே நமக்கு குடுத்துக்கிடுறது.
ஒண்ணு தெரிஞ்சுக்கோ, இந்த பூமியிலே மனுஷனுக்கு உள்ள ஆயிரம் துக்கங்களிலே ஒண்ணுதான் ஆதிதைவிகம். இன்னொண்ணு ஆதிபௌதிகம். மிச்சமெல்லாம் ஆதிமானுஷம். ஆனா அதிலேயும் ஆத்ம நிர்மித துக்கத்திலே நூத்திலே ஒருபங்குதான் பரநிர்மித துக்கம்… இந்தப்பூமியிலே இருக்குத துக்கங்களிலே ஆயிரத்திலே அஞ்சுபோக மிச்சமெல்லாம் ஆத்மநிர்மித துக்கம்தான். மனுஷனுக்க மனசு ஒரு விசித்திரமான விஷயமாக்கும். அது அப்டியே பாற்கடலா எளகும். புளிச்சு நாறி நஞ்சுக்கடலா ஆகும். பூவா விரியும். உடனே அதை முள்ளா மாத்தி தன்னையே குத்திக்குத்தி கிழிப்பான்..
“பாவப்பட்ட மனுஷங்க. அற்பஜென்மங்கள். அறியாமையிலே அவித்யையிலே முங்கிக்கிடக்கும் தூசுதும்புகள். அவங்களுக்க துக்கக் கடலிலே நாம ஒரு சின்ன தோணியை கொண்டு போறம். ஆமா, தொழிலாக்கும். இது ஜீவோபகார தொழில்… பின்ன உன் இஷ்டம்” என்று அப்பா சொன்னார்.
நான் தலையசைத்தேன்.
“தொடு… மந்திர உபதேசம் தாறேன். இதுக்கு குளிச்சு சுத்தமாகணும்னும் ஆசாரமா இருக்கணும்னும் ஒண்ணுமில்லை. சத்தியம் மீறக்கூடாது, தர்மம் தாண்டக்கூடாது, அவ்வளவுதான்.”
நான் அந்த முகமூடியைச் சுட்டுவிரலால் தொட்டேன். அப்பா என் காதில் மூலமந்திரத்தைச் சொன்னார். அது நான்கு வெறும் ஒலிகள்தான்.
அதை நான் மூன்றுமுறை நாவால் சொல்லிக்கொண்டேன். அப்போது வெளியே யாரிடமோ அம்மா பேசிக்கொண்டிருப்பது கேட்டது.
அம்மா வந்து வாசலில் நின்று எங்களை குழப்பத்துடன் பார்த்துவிட்டு “மேலேகரையிலே இருந்து காரியஸ்தனாக்கும் வந்திருக்கிறது.”
“ஏன்?” என்று நான் கேட்டேன்.
“அங்க இளையம்மைக்கு பூசை வேணுமாம்… ரொம்ப கஷ்டமாம். கையோடே கூட்டிட்டு வரச்சொல்லி அனுப்பியிருக்கு.”
நான் திடுக்கிட்டு அப்பாவை பார்த்தேன். அப்பா புன்னகை புரிந்தார்.
நான் அந்த பெரிய காம்பவுண்ட் வழியாக சைக்கிளில் பலமுறை சென்றிருக்கிறேன். அது ஒருபக்கம் வந்துகொண்டே இருக்கும். இரண்டு ஆள் உயரமான சுவர். அப்பால் தென்னைமரங்களும் வைக்கோல் கூனைகளும் எழுந்து நிற்கும். அதன் பெரிய கேட் வழியாக என்னை காரியஸ்தன் இந்திரன் நாயர் கூட்டிக்கொண்டு சென்றான்.
உள்ளே மிகப்பெரிய களமுற்றத்திற்கு அப்பால் பழைய நாலுகெட்டு வீடு. மூன்று அடுக்கு ஓட்டுக்கூரை. கூரை விளிம்பு நான்குபக்கமும் சரிந்திறங்கி பெரிய தேக்குமரத் தூண்களின்மேல் அமைந்திருந்தது. கருங்கல்லால் ஆன திண்ணை விளிம்புகள். கருங்கல்லால் செதுக்கப்பட்ட நீளமான படிகள். கூரைச்சரிவுக்குமேல் மச்சு எழுந்து நின்றது. அதன் எல்லாப்பக்கங்களிலும் சிவந்த திரைச்சீலை போடப்பட்ட சன்னல்கள் திறந்திருந்தன. அதற்குமேலே இருந்த கூரையின் அடிப்பக்கத்தில் வரிவரியாக உத்தரங்களின் விளிம்புகள் தெரிந்தன. கவிழ்த்து வைக்கப்பட்ட பெரிய பூ போலிருந்தது அந்த வீடு.
முற்றத்திற்குப் போனதும் நான் நின்றேன். இந்திரன் நாயர் மேலே சென்று கைகட்டி வாய்பொத்தி குனிந்து அங்கே சாய்வு நாற்காலியில் படுத்திருந்த அறுபது வயதுக்காரரிடம் என்னைப் பற்றி தாழ்ந்தகுரலில் சொன்னார். அவர் என்னைப் பார்த்தபின் வெற்றிலையை கோளாம்பியில் துப்பிவிட்டு எழுந்து வேட்டியை அவிழ்த்துக் கட்டிக்கொண்டு திண்ணை விளிம்பில் வந்து நின்றார்
“உனக்கு மந்திரமெல்லாம் தெரியுமாடா?” என்றார்.
“தெரியும்” என்றேன். ஆனால் நான் வணங்கவில்லை. நிமிர்ந்து அவர் கண்களைப் பார்த்தேன்.
“தெய்வம் உனக்கு வசமா?”
“ம்” என்றேன்.
என் திமிர் அவருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். சிலகணங்கள் பார்த்துவிட்டு “ம்” என்றார். இந்திரன் நாயரிடம் கூட்டிக்கொண்டு போ என்று கைகாட்டினார்.
இந்திரன் நாயர் என்னை வீட்டைச் சுற்றி அழைத்துச்சென்று அங்கே திறந்திருந்த ஒரு சிறிய வாசல் வழியாக உள்ளே நுழைந்தார். உள்ளே ஓர் அங்கண முற்றம் இருந்தது, இருபதடிக்கு இருபதடி இருக்கும். மேலே சதுரவடிவில் வானம் தெரிந்தது. அங்கணத்தைச் சுற்றி உருண்டையான மரத்தூண்கள் வரிசையாக நிற்க அவற்றால் தாங்கப்பட்ட கூரையின் விளிம்பு சீரான கழுக்கோல் முனைகளை நீட்டி நின்றது. அப்பால் அரைவெளிச்சம் படர்ந்த பெரிய வராந்தாக்கள். அவற்றிலிருந்து திறக்கும் இருண்ட அறைகள்.
என்னை அங்கே வராந்தாவில் அமரும்படி இந்திரன் நாயர் சொன்னார். நான் என் பையை வைத்துக்கொண்டு அமர்ந்துகொண்டேன். படபடப்பாக இருந்தது. அப்படி ஒரு சூழலுக்கு நான் அதற்கு முன்பு வந்ததே இல்லை. பெருமூச்சு விட்டு அசைந்து அமர்ந்தேன்
சற்றுநேரத்தில் உள்ளிருந்து இரு வேலைக்காரிகளால் அழைத்துவரப்பட்டு இளையம்மை சுபத்ரை கொண்டுவரப்பட்டாள். கால்கள் தரையில் மிதிக்காமல் வலுவில்லாமல் இழுபட்டன. வேலைக்காரிகளின் வலுவால் அவள் வருவதுபோலிருந்தது. அவள் அணிந்திருந்த சேலை அள்ளிச்சுற்றப்பட்டு கலைந்து இழுபட்டது
அவளை என் முன் அமரச்செய்தார்கள். அவள் கையூன்றி பக்கவாட்டில் சரிய ஒருத்தி அவளை பிடித்துக்கொண்டாள். நல்ல அழகி. பால்வெண்ணிறம். சுருண்ட நுரைபோன்ற தலைமுடி. கூர்மையான சிவந்த மூக்கு, சிறிய உதடுகளும் கொண்டவள். முப்பது வயதிருக்கும்.
முகம் வெளிறி வீங்கியது போலிருந்தது. உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. படுத்திருந்த தலையணையின் துணியின் சுருக்கம் தடமாக கன்னங்களில் படிந்திருந்தது. கழுத்தும் தோளும் வெளிறி, மெலிவின் வரித்தடங்களுடன் இருந்தன.கண்கள் சிவந்து கலங்கியிருந்தன.
நான் இந்திரன் நாயரிடம் மெல்லிய குரலில் “கொஞ்சம் தண்ணீர். முறத்தில் கொஞ்சம் பச்சரிசி, ஒரு துண்டு வெல்லம்” என்றேன். அப்பால் நின்ற வேலைக்காரியிடம் “ஒரு நெய்விளக்கு கொளுத்தி இங்கே வைக்கணும்” என்றேன்.
அவர்கள் இருவரும் சென்றார்கள். நான் “நாயரே, காம்போடே ஒரு தலைவாழை இலை…” என்றேன்.
இருண்ட உள்ளறை ஒன்றில் இலிருந்து ஒரு வெண்ணிற அசைவுபோல முதிய அம்மச்சி தோன்றினாள். வெள்ளை ஆடை. கூன்விழுந்த உடல். தலைமயிரும் வெள்ளை. அதை கொண்டையாக சுருட்டிக் கட்டிவைத்திருந்தாள். என்னை கூர்ந்து பார்த்து “என்னடா, நீயா கணியான்?” என்றாள்.
“ஆமாம்” என்றேன்.
“உன் அப்பன் எங்கே? செத்திட்டானா?”
“இல்லை” என்றேன்.
“தூவக்காளி உன் சொல்லுக்கு வருமாடே?”
“வரும்” என்றேன்.
“என்னமோ போ… இப்பல்லாம் எந்தச் சாமிக்கும் சக்தியில்லை. நெறியும் முறையும் இருந்தால் சாமி சாமியா இருக்கும். இப்ப அப்டியா? இந்தா வந்து உக்காந்திட்டிருக்கே… நெறமிருக்கு படிப்பிருக்குன்னு கட்டி கூட்டிவந்தது… இப்ப கலைஞ்சுபோனது நாலாவது பிள்ளை… அஞ்சாம் மாசத்திலே ரத்தமா போச்சு. சனியன்பிடிச்சவ பிள்ளைதின்னி யட்சிகளுக்கு தீனிபோடுகதுக்குன்னே கர்ப்பம் சேத்துக்கிடுதா போல… ஜாதகத்திலேயே இருக்கு பிள்ளைசாபம்னு அச்சுதன் சொன்னான். சவத்தை கொண்டுபோயி வீட்டுலே தள்ளுடான்னா அதுவும் செய்யமாட்டான்.”
நான் அவளைப் பார்த்தேன். அவள் எதையும் கேட்டதாக தெரியவில்லை. அவள் மயக்கநிலையில் இருப்பதாகவே தோன்றியது.
“தெங்கு நட்டு வளத்து எளநீ பறிக்கிறது போல பிள்ளைதின்னி யட்சிகள் இவளை வளத்து பிள்ளை பறிச்சு தின்னுட்டு போறாளுக… உனக்க தூவக்காளிக்க சக்தி என்னன்னு பாக்குதேன்” என்றாள் கிழவி.
“அம்மச்சி, பேசிக்கிட்டே இருந்தா இங்க பூஜை நடக்காது… கொஞ்சம் சும்மா இருக்கணும்” என்றேன்.
“ஏன், பேசினா என்ன? நீ மந்திரம் அறிஞ்சவன்னா உனக்கென்ன கேடு?” என்றாள் கிழவி. “குடும்பத்துக்கு ஒத்தை வாரிசுக்கு ஒத்தைப் பெஞ்சாதி. அவளுக்கு வயிறு இருக்குத லெச்சணம் இது… குடும்பம் வெளங்க இது போதும்லா?”
“அம்மச்சி, கொஞ்சம் சும்மா இருங்க… நான் பூசையை வச்சுக்கிடுதேன்.”
“என்ன பூசை? இது பூசையிலே ஒண்ணும் செரியாவாது. பிள்ளைதின்னி பேயி இருக்குதது இவளுக்க வயித்துக்க உள்ளயாக்கும்… அங்க இருந்து ரெத்தம் குடிக்குது அது.”
நெய்விளக்கு ஏற்றிவைத்தேன். தலைவாழை இலை விரித்து அதில் அரிசியை குவித்து நீட்டி ஏழாகப் பகுத்து வைத்தேன். ஓர் எல்லையில் வெல்லம். மறு எல்லையில் கெண்டிநீர். என் பையில் ஐந்துவகையான உலர்ந்த மலர்களை கொண்டுவந்திருந்தேன். அவற்றை நடுவே ஐந்து அரிசிக்குவியல்களிலும் வைத்து வணங்கினேன்
மெல்லியகுரலில் அவளிடம் “இளையம்மே, இது தூவக்காளி. தூவக்காளி சம்ஹாரமூர்த்தியாக்கும். ஆனா உரிய பரிகாரமும் பலியும் செய்தா அனுக்ரகமூர்த்தியா மாறிடுவா. இந்த வீட்டிலே என்ன தெய்வதோஷம் என்ன மனுஷபாவம்னு தெரியல்லை. ஆனா எந்த தீங்கா இருந்தாலும் தூவக்காளி அதை நீக்கி ஐஸ்வரியமும் சுபிட்சமும் குடுப்பா… மண்ணிலே அவ அறியாத ஒண்ணுமில்லை” என்றேன்.
“அவகிட்ட என்ன பேச்சு? அவளுக்க காது பொட்டை மாதிரில்லடே இருக்கு?” என்றாள் கிழவி “நாங்க இங்க என்ன நாக்கு அலம்பினாலும் அவளுக்கு கேக்காது. செவிட்டுச் சவம்.”
நான் அவளை நோக்கி திரும்பாமல் சுபத்ரையிடம் மேலும் தாழ்ந்த குரலில் சொன்னேன் “தூவக்காளி அம்மை புல்லுரூபத்திலே காட்டிலே நிறைஞ்சிருப்பவ. புல்லு இந்த பூமிக்க நுரையாக்கும். மாமலைகளுக்கு அழிவுண்டு, மரக்காடுகளுக்கு அழிவுண்டு, அழியாதது புல்லு. வாழைக்கு ஒத்தை விதை. ஆலுக்கு ஆயிரம் விதை. புல்லுக்கு கோடிவிதை. புல்லாக்கும் அம்மைரூபம்.”
“அம்மை பராசக்தியுடைய கண்கண்ட வடிவம்” என்று தொடர்ந்தேன். ”கைப்பிடி மண்ணிருந்தா, நாலுசொட்டு தண்ணியிருந்தா முளைச்சிடுவா. பெருவெள்ளத்திலயும் கொடுந்தீயிலயும் அழியாம நிலைகொள்ளுவா. ஆயிரம் ஆண்டு மழையில்லா வறுதியிலேயும் மண்ணுக்குள்ளே தவம் செய்வா. புல்லாக்கும் அன்னம். புல்லைத்தின்னும் உயிரும் புல்தின்னியை தின்னும் உயிரும் மட்டும்தான் இந்த பூமியிலே வாழ்ந்திருக்கு.”
“அம்மை பண்டு பெருமாள் கிட்டே சொன்னா. நான் விட்டுக்கொடுத்த இடத்திலேதான் பிறர் வாழமுடியும். பிறர்வாழா இடத்திலெல்லாம் நான் வாழுவேன் அப்டீன்னு. அம்மை நினைச்சா ஆறுமாசத்திலே இந்தப் பூமியை மூடிடுவா. அம்மையை வணங்குங்க. அம்மை காத்து ரெட்சிக்கட்டும்.”
“டேய் நமக்கு செவியிலே கேக்குத மாதிரி சொல்லுடே” என்றாள் கிழவி.
நான் என் முகம் கிழவியை நோக்கி திரும்பாமல் வைத்துக்கொண்டேன். கோபம் வரக்கூடாது. என் மனம் முழுக்க என்னிடமே இருக்கவேண்டும். மனதுக்குள் மூலமந்திரத்தை உச்சத்துக்கொண்டே இருந்தேன். சொல்லச்சொல்ல நான் நினைத்ததை விட எளிதாக அந்த மந்திரம் என் மன ஓட்டமாகவே ஆகியது. நான் மிகமிக அறிந்ததாக இருந்தது.
பையிலிருந்து அந்த முகமூடியை வெளியே எடுத்தேன். அதை கண்டதும் கிழவி எழுந்து சற்று அருகே வந்து நின்று பார்த்தாள். “இதா தூவக்காளி? முகமூடிப்பொம்மையாக்குமே?”
தருவைப்புல்லின் வைக்கோலைச் சுருட்டி உருவாக்கிய பீடத்தின்மேல் அதை நிற்க வைத்தேன். அதன் தலையில் காய்ந்த தருவைப்புல்லால் ஆன கேசபாரத்தை கட்டி இறுக்கி வைத்தபோது சட்டென்று அங்கே எவரோ வந்துவிட்டதை உணரமுடிந்தது. அத்தனைநேரம் நான் என்ன செய்கிறேன் என்றே தெரியாமலிருந்த சுபத்ரை கூட அதையும் என்னையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தருவைப்புல்லை நெய்ச்சுடரில் கொளுத்தி அந்த முகத்திற்கு ஆராதனை செய்தேன். விரல்களால் சைகைகளை செய்தபடி ஆயிரத்தெட்டு நெல்மணிகளை எடுத்து மந்திரம் ஓதி அதன்முன் படைத்தேன். அந்த கண்களில் பார்வை திரண்டு வந்துகொண்டே இருந்தது.
உள்ளிருந்து இன்னொரு நடுத்தரவயதுப் பெண் வந்து எட்டிப்பார்த்தாள். கிழவியின் அருகே வந்து நின்று “இது என்ன, இன்னொரு மந்திரவாதியா?” என்றாள்.
“ஆமா, இனி மந்திரவாதிகள் அவனுகளே வழி விசாரிச்சு வருவானுக. நாலுபிள்ளை செய்த்த நங்கியாரு எங்கேன்னு” என்றாள் கிழவி.
நான் கிழவியிடம் “இளையம்மையின் கணவர் வரணும்.. சடங்குக்கு அவரும் வேணும்” என்றேன்.
“ஏன் அவனாடே பிள்ளைய அழிச்சான்?” என்றாள் கிழவி “நாலு பிள்ளைக்கு உயிரு குடுத்தவன். பாத்திரம் சரிஞ்சிருந்ததனாலே சிந்திப்போச்சு.”
“இது பிள்ளைச்சடங்கு அம்மணி, அவரு வந்தாகணும்.”
“அவன் உள்ள இருக்கான். இந்தக்கூத்திலே எல்லாம் அவன் வந்து நிக்கமாட்டான். செய்யணுமானா செஞ்சிட்டுபோடே” என்று கிழவி சொன்னாள்.
இன்னொரு பெண்மணி “அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது. அவன் வக்கீலாக்கும்” என்றாள்.
நான் சற்று குழம்பியபின் மந்திரத்தைச் சொன்னபடியே என் பையில் இருந்து புல்பிள்ளையை வெளியே எடுத்தேன். தருவைப்புல்லால் செய்யப்பட்டு இரண்டுசாண் அளவான குழந்தை உருவம். அதை அப்பாவே செய்து தந்தார். முதலில் அதைக் கண்டபோது மொத்தையான உருவமாக இருந்தது. ஆனால் புல்லைச்சுருட்டியே கண்கள் அமைத்தபோது பார்வை வந்தது. ஒருமுறை கையில் எடுத்தபோது குழந்தையாகவே ஆகிவிட்டது.
அதை எடுத்து அந்த தூவக்காளியின் முன் மும்முறை காட்டி முன்னால் வைத்தேன். பிறகு மீண்டும் அந்தப் பெண்மணியிடம் “அம்மிணி, புல்பிள்ளையை புருஷன் பெஞ்சாதி ரெண்டுபேரும் சேந்து தொடணும், அதான் சாஸ்திரம்.”
“அவன் வரமாட்டான்னு சொன்னேன்ல?” என்று கிழவி உரக்கச் சொன்னாள்.
“செரி, அப்ப இதைக்கொண்டுபோயி அவருகிட்ட காட்டி தொட்டு எடுத்துட்டு வாங்க… இல்ல நானே கொண்டுவாறேன்” என்றேன்.
“நீ ஒரு பூசையும் செய்யவேண்டாம்… எந்திரிச்சு போ” என்றாள் அந்தப்பெண்.
இந்திரன் நாயர் ஓடிவந்து ”என்ன கணியாரே? என்ன?”என்றார்.
“புருஷன் பூஜையிலே உக்காரணும், புல்பிள்ளையைத் தொடணும்” என்றேன்.
“பிரதிவஸ்து போரும்னு சாஸ்திரம் உண்டுல்ல?” என்றார் இந்திரன் நாயர். திரும்பி அவரே ஓடி சென்று ஒரு சால்வையை கொண்டுவந்தார். “இது அவருக்க அங்கவஸ்திரமாக்கும். இதைவைச்சு பூஜையை செய்யுங்க… போரும்.”
நான் சரி என்று தலையாட்டினேன். சுபத்ரை எதையுமே கேட்காதவளாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு சித்தப்பிரமை இருக்குமா என்ற சந்தேகம் வந்தது. அந்த சிந்தனைகள் நடுவிலும் என் மனதுக்குள் மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தது, அத்தனை சந்தடிகளுக்கும் அடியில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில் சத்தம்போல. அதை நானே ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
அங்கவஸ்திரத்தை அவள் அருகே வைத்தேன். புல்பிள்ளையை எடுத்து அங்கவஸ்திரத்தில் வைத்து மந்திரம் சொல்லி நூற்றெட்டு அரிசியை போட்டேன். அதை அவளிடம் எடுத்துக் கொள்ளும்படிச் சொன்னேன்.
நான் சைகையால் சொன்னதை அவள் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றியது.
“எடுத்து மடியிலே வைச்சுகிடுங்க இளையம்மை” என்றேன்.
அவள் வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“எடுத்து வைங்கம்மா” என்றேன். “இதை நீங்க பெத்த பிள்ளையாட்டு நினைச்சுக்கிடுங்க.”
அவள் உட்கார்ந்தபடியே பின்னடைந்தாள். கழுத்து தசைகள் இழுபட்டன. உதடுகள் கோணலாயின. வலிப்பு வரப்போவதுபோலிருந்தது.
“எடுத்துக்கடீ… இப்பிடியானாலும் உனக்கொரு பிள்ளை வரட்டு” என்றாள் கிழவி. மற்ற பெண் புன்னகை புரிந்தாள்.
“எடுக்கணும் இளையம்மை” என்று தாழ்ந்த குரலில் சொன்னேன்.
அவள் நடுங்கும் கைகளை நீட்டி அதை தொட்டாள். மிகமிக மெல்ல. அவள் கைகள் தொட்டனவா என்று தெரியாமல் அதன்மேல் இருந்தன. பிறகு மிகமெல்ல எடுத்தாள். கைகள் நடுங்கியதில் கீழே போட்டுவிடுவாள் என்று தோன்றியது.
“மடியிலே வைச்சுக்கிடுங்க” என்றேன்.
மடியில் வைத்துக்கொண்டு குனிந்து பார்த்தாள். உதடுகளும் முகமும் துடித்தன. ஒரு தொடை நடுங்கித் துள்ளிக்கொண்டிருந்தது.
நான் புல்பிள்ளைமேல் அரிசியிட்டு மந்திரம் சொன்னேன். அந்தச் சடங்குகளை நான் ஒருமுறைகூட பார்த்ததில்லை. அப்பா சொல்லி அனுப்பியது. ஆனால் எல்லாமே எனக்கு மிக நன்றாகத் தெரிந்தவையாக இருந்தன.
“இதெல்லாம் குழந்தைக்கான ஜாதகர்மங்கள் அம்மிணி. இருபத்தெட்டு கெட்டுதல் முதல் நாமகரணம் வரை… எல்லாமே உண்டு” என்றேன்.
அவள் புல்பிள்ளையை பார்த்தபடி கடுங்குளிரில் அமர்ந்திருப்பது போல உடல் குறுக்கி நடுங்கிக் கொண்டிருந்தாள். நான் அக்குழந்தைக்கு இருபத்தெட்டாம் நாள் சடங்கு நடப்பதாக பாவித்து மந்திரம் சொல்லி தருவைப்புல்லால் அரைநாண் கட்டி மோதிரம் அணிவித்தேன்.
“நெஞ்சோடு சேத்துக்கிடுங்க… முலைகுடுக்குத மாதிரி.”
அவள் என்னை வெற்றுவிழிகளுடன் பார்த்தாள்.
“நெஞ்சோட சேர்த்துக்கிடுங்க அம்மணி… முலைகுடுங்க” என்றேன்.
அவள் அதை தன் மார்பில் சேர்த்தாள். மிகமெல்ல, குழந்தையை அணைப்பதுபோலவே தழுவிக்கொண்டாள். நான் கைகளால் உழிந்து அப்பாலிடும் சைகைகளைச் செய்து காலத்தை அகற்றி மீண்டும் மந்திரம் சொன்னேன். “மடியிலே வையுங்க.”
அவள் மீண்டும் புல்பிள்ளையை மடியில் வைத்தாள். “இனி நாமகரணம்” என்றேன். அவள் பெருமூச்சுவிடுவதைக் கண்டேன். அவள் கண்கள் மாறியிருந்தன.
“குழந்தைக்கு வஸ்திரதாரணம் அம்மிணி”என்றேன். மஞ்சள்நிறமான துண்டு துணி ஒன்றை அவளிடம் கொடுத்து அணிவிக்கும்படிச் சொன்னேன். அதன் பின் அதை தூக்கி மும்முறை முத்தமிட வைத்தேன். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
“அம்மணி, ஆணா பெண்ணா என்ன நினைச்சிருந்தீக?” என்றேன்.
அவள் தொண்டை மட்டும் அசைந்தது.
“என்ன பேரு மனசுலே வச்சிருந்தீக?” என்றேன்.
அவளிடமிருந்து ஒரு விம்மலோசைதான் எழுந்தது.
“செரி, வெளிய சொல்லவேண்டாம். புல்பிள்ளைக்க செவியிலே பிள்ளை பேரைச்சொல்லி மூணுமுறை கூப்பிடுங்க” என்றேன்.
அவள் விசும்பி அழுதுகொண்டே இருந்தாள். “கூப்பிடுங்க” என்றேன். அவள் அதை எடுத்து அணைத்து செவிகளில் உதடுபட ஏதோ சொன்னாள். பின்பு மடியில் வைத்துவிட்டு அழுதுகொண்டே இருந்தாள்.
“காதுகுத்தும் அன்னமூட்டும் செய்துபோடலாம் அம்மிணி” என்றேன். அவளால் அதன்பின் கைகளை அசைக்கவே முடியவில்லை. புல்பிள்ளையின் காதில் இரு தெச்சிப்பூக்களை வைத்தேன். மூன்று அரிசியை அதன் வாயில் வைத்தேன். “அன்னம், அன்னம் அன்னம்” என்று மும்முறை சொன்னேன்.
“அம்மிணி இப்ப இந்த புல்பிள்ளை இந்தக் குடும்பத்துக்கு பரிபூர்ண வாரிசாக்கும்…” என்றேன் அவள் கண்ணீர்விட்டுக்கொண்டே இருந்தாள். புல்பிள்ளைமேல் துளிகள் சொட்டின.
நான் எழுந்து கைகூப்பினேன். “தூவக்காளி, தாயே” என்றேன்.
“ஆடப்போறானா?” என்று கிழவி கேட்டாள்.
“அதுக்கு அவன் வேசம் போடல்லியே” என்றாள் மற்ற பெண்மணி.
நான் மந்திர உச்சாடனத்துடன் பையிலிருந்து புல்லால் ஆன பாவாடையை எடுத்து இடையில் அணிந்தேன். புல்லால் ஆன கஞ்சுகத்தை மார்பிலும் அணிந்தேன். அந்த முகமூடியை எடுத்து அணிந்துகொண்டேன். அதன் கயிறுகளை இறுக்கமாக பின்னால் கட்டிக்கொண்டு எழுந்து நின்றேன்.
என் மனதில் இருந்து மூலமந்திரம் மட்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. கைகளை நீட்டி மெல்ல ஆடினேன். முதல் அசைவை மட்டுமே நான் எழுப்ப வேண்டியிருந்தது. அதன் பின் என் உடலில் ஆட்டம் அதுவாகவே நிகழ்ந்தது. மெல்லிய தாளத்துடன் காலக்ளை தட்டிக்கொண்டு ஆடினேன். முகமூடியில் கண்துளைகள் இல்லை என்பதனால் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. என் உடலுக்குள் நானே அடைபட்டிருந்தேன். பின்னர் உடலின் ஆட்டமாக உள்ளே நான் தளும்பினேன்.
திடீரென்று ஒரு உலுக்கல் போல நான் அப்பால் சென்றேன். என் முன் புல்கூந்தல் சுழல, கரிய முகத்தில் கண் வெறிப்புடன், கால்களை தூக்கி தூக்கி வைத்து, வாயை திறந்து மூடியபடி, கைகள்பறந்து அலைய ஆடிக்கொண்டிருந்த தூவக்காளியை கண்டேன்.
புலிபோல உறுமியபடி சுழன்று ஆடிய தூவக்காளி சட்டென்று திரும்பி அந்த இரு பெண்களையும் நோக்கிப் பாய்ந்தாள். அவர்கள் இருவரையும் இரு கைகளால் ஒரேசமயம் கழுத்தைப்பிடித்து தூக்கிச் சுழற்றினாள் தரைமேலிருந்து கால்கள் எழுந்து தவிக்க அவர்கள் அவள் கையில் துடித்தனர். அவர்கள் இருவரையும் தூக்கி அங்கண முற்றத்தில் வீசினாள். அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் என சென்று விழுந்தனர். அலறியபடி பாய்ந்து அருகிருந்த தூணில் ஓங்கி அறைந்தாள். உத்தரமும் கூரையும் நடுங்கி ஒட்டடையும் தூசியும் பொழிந்தன.
விழுந்தவர்கள் இருவரும் எழுந்து அலறி மீண்டும் விழுந்தனர். இருவருக்குமே எலும்புகள் முறிந்திருக்கும் என்று தோன்றியது. கிழவி மயங்கிவிட்டாள். மற்றவள் தவழ்ந்தபடியே மறுபக்கம் ஏறி அலறிக் கூச்சலிட்டாள். அவளும் தூவக்காளியின் உருவத்தை பார்த்துவிட்டாள் என்பது அக்கண்களின் உச்சகட்ட பீதியில் இருந்து தெரிந்தது.
தூவக்காளியின் கால்கள் பறக்கும் பறவையின் கால்கள் போல காற்றில் மிதந்தன. அவள் துள்ளித்துள்ளி சுழன்றமைந்தாள். கீழேகிடந்த பித்தளைச் செம்பை ஓங்கி உதைத்து அதை சப்பி தகடுபோலாக்கினாள் தூவக்காளி. குனிந்து அந்தப் புல்பிள்ளையை நோக்கி கைநீட்டி உறுமினாள்.
சுபத்ரை அதை மார்போடு அணைத்துக்கொண்டு அலறி அழுதாள். “இல்லே இல்லே… குடுக்கமாட்டேன் குடுக்கமாட்டேன்” என்று கூவினாள்.
இந்திரன் நாயர் “குடுத்திருங்க அம்மணியே… கூட்டிவந்த தெய்வமாக்கும்.. குடுத்திருங்க” என்றார்.
“மாட்டேன் குடுக்க மாட்டேன்” என்று அலறியபடி அவள் சரிந்த முந்தானையும் அவிழ்ந்த கூந்தலுமாக எழுந்து ஓடி கால்தடுக்கி கீழே விழுந்தாள். தூவக்காளி அவளை நோக்கிச் சென்று கைநீட்டி வீரிட்டாள்.
“விட்டிடுங்க அம்மணி… குடுத்திருங்க அம்மணீ” என்று இந்திரன் நாயர் கூவியபடி ஓடிவந்து அவளை பிடித்து தூக்கினாள். அவள் அதை கையால் சுற்றிப்பற்றியபடி கால்களை உதைத்து பின்னால் நகர்ந்து “மாட்டேன்… எனக்க பிள்ளைய குடுக்கமாட்டேன்” என்று கூச்சலிட்டாள்.
“குடுங்க… குடுங்க” என்று இந்திரன் நாயர் வெறிகொண்டவர் போல கத்தி புல்பிள்ளையை பிடுங்க முயன்றார். அவள் இறுகப் பிடித்துக்கொண்டு அலறி காலை உதைத்து பின்னால் நகர்ந்து மல்லாந்து விழுந்தாள். இந்திரன் நாயர் அவள் கையைப்பிடித்து குழந்தையை தூவக்காளி நோக்கி நீட்டினார். குனிந்து அக்குழந்தையை வாயால் கவ்வி எடுத்துக்கொண்டாள் தூவக்காளி.
அவள் “எனக்க மோனே, எனக்க செல்லமே, நான் அப்டி நினைச்சது பெரும்பிழைதான் எனக்க ராஜாவே” என்று கூவியபடி புல்பிள்ளையை பிடிக்க முயல, அவளை தோளில் உதைத்து பின்னால் சரித்தபடி தூவக்காளி சுழன்று புல்லாடை பறக்க எழுந்தாடி அமர்ந்து, நெஞ்சிலறைந்து அலறியபடி வெளியே ஓடினாள்.
“என்னை மன்னிச்சிடு செல்லம், அம்மைய மன்னிச்சிடு மோனே” என்று கூவியபடி பின்னால் ஓடிய சுபத்ரை அப்படியே தரையில் முகம்படிய விழுந்து மயக்கமானாள்.
தூவக்காளி கூவி ஆர்ப்பரித்தபடி வெளியே பாய்ந்து ஓடிக்கொண்டே இருந்தாள். இடைவழி கடந்து வயல்வரப்புகளை கடந்து தேரிமேட்டிலேறி பொற்றைக்காட்டுக்கு மேலேறிச் சென்றாள்.
முன்நிலவு முழுமையாக எழுந்திருந்தது. மேகங்கள் குழல்விளக்கேற்றப்பட்ட வீடுகள் போலிருந்தன. மரங்களின் இலைகள் ஒளியில் அசைந்துகொண்டிருந்தன. நிழல்களினூடாக அவள் ஒளிவிட்டும் இருண்டும் ஒளிவிட்டும் சென்றுகொண்டிருந்தாள். அவள் தலையில் புல்தூவல்களாலான கூந்தலின் பிசிறுகள் மின்னின.
அந்த புல்பிள்ளையை கடித்து குதறி புல்நார்களாக ஆக்கி துப்பிக்கொண்டே சென்றாள். சேந்நன்குன்றின் மேலேறி உச்சிப்பாறைமேல் நின்று இரு கைகளையும் விரித்தாள். “ஆஆஆ” என்று அலறியபடி துள்ளிச்சுழன்றாள். அந்த கைகள் முறுகி முறுகி உடையப்போவதுபோல ஆன கணத்தில் அறுந்து உதிர்ந்ததுபோல பாறையில் விழுந்து அசைவற்றுக் கிடந்தாள்.
நான் அருகே சென்று நின்றேன். குனிந்து அந்த முகமூடியை எடுத்தேன். அடியில் முகம் ஏதுமில்லை. வெறும்பாறைதான் தெரிந்தது. நிமிர்ந்து சுற்றிலும் பார்த்தேன். தருவைப்புல் செறிந்த சரிவுகள் சூழ்ந்திருந்தன. அவற்றில் வெண்ணிற நுரைபோன்ற புல்தூவல்கள் நிலவொளியில் சுடர்கொண்டு அலையடித்ததைக் கண்டேன்.
***