தங்கப்புத்தகம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ,

தங்கப்புத்தகம் கதையின் மிகப்பெரிய அழகாக நான் கண்டது. அகமும் புறமும் தனித்தனியாக வர்ணிக்கப்பட்டிருப்பதுதான். இமையமலைகளின் பேரழகு நுணுக்கமாக வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம், நாடகக் கதாபாத்திரங்கள் போல அவை ஒவ்வொன்றாக தோன்றும் காட்சி, ஒரு அற்புதம். ஆனால் அதற்குச் சமானமானது அகம் சொல்லப்பட்டிருக்கும் விதம். நுணுக்கமான செய்திகள்.

உண்மையில் கொஞ்சமாவது இந்த யோக – தியான முறைகளை செய்யாதவர்களால் இதைச் செய்யமுடியாது. நாம் எழுப்பும் ஒலி எப்படி நமக்கே நம் இருப்பை காட்டிக்கொண்டிருக்கிறது என்பதும். நம் ஓசையை நாமே கேட்கவில்லை என்றால் நாம் எப்படி நிலைகுலைந்துவிடுகிறோம் என்பதும் மிகமிக முக்கியமான ஒரு விஷயம். அந்த அறையை உடலாக ஆக்குவது. அதன்பிறகு அதற்குள்ளேயே தனியாக ஆவது அதன்பின் அதிலிருந்து வெளியேறுவதற்கான பித்து.

அந்த தனிமையில் மனசு பீரிட்டு வெளிவரும் விதம் இதுவரை தமிழில் எழுதப்பட்டதில்லை. தமிழிலக்கியத்தின் முக்கியமான குறைபாடாக நான் பார்ப்பதே இதைத்தான். எழுத்தாளனுக்கு இருந்தே ஆகவேண்டிய தத்துவப் பயிற்சியும்சரி ஆன்மிகநாட்டமும் சரி இங்கே மிகப்பெரும்பாலானவர்களுக்கு கிடையாது. ஆகவே அவர்க்ளால் இந்த ஆழங்களை தொடவே முடிவதில்லை

எஸ்.ரவி

***

ஜெ,

முக்தானந்தா மற்றும் பாட் இருவரும் அறிதலின் பாதையில் செல்கிறார்கள்,  முக்தா அடைந்து விடுகிறார், அவர் அடைந்தது என்ன,  அதன் வழி என்ன என்பதுதான் இந்த கதையின் மையம் என்று நினைக்கிறேன்,  பாட் தங்கபுத்தகத்தை வெல்ல விழைகிறார், முக்தானந்தா அதை புரிந்து கொள்ள முனைகிறார்,  இதுதான் வித்யாசம் முதல் நோக்கில் என்று நினைக்கிறேன்.

சார் இன்னொன்று ஞாபகம் வருகிறது, அதுவும் நித்ய யதி நூலில் இருந்துதான் தங்கத்தை ஆபத்தான ஒன்றாக சொல்கிறார், அதாவது ஹிரண் (தங்கம் ) என தொடங்கும் ஹிரண்யக்ஷ, ஹிரண்யகாசிப் புராண பாத்திரங்கள் எல்லாம் துர் தேவதைகள் என,  அறிதலை மறைக்கும் பொன் வட்டம் ( சூரிய ).. என செல்லும் அந்த உரை.  எனக்கு தங்கபுத்தகம் என்றதும் இது ஞாபகம் வந்தது,  முக்தா இந்த பொன் வட்டத்தை விலக்கி அதை அறிய முயற்சிக்கிறார் என்று தோன்றியது. பாட் அந்த புத்தகத்தை அறிந்து கொள்வதில்தான் தன் வெற்றி இருப்பதாக எண்ணி கொள்வதுதான் அவரின் வீழ்ச்சியின் காரணம் என்று கூட எண்ணினேன்,

முக்தாவின் நிறைவுக்கு காரணம் அறிதலை  உள்வாங்கி கொண்டதை தலையில் ஏற்றி கொள்ளவில்லை என்பதை நூல் பிரதிகளை எரிப்பதன் வழியாக கதையின் வழியாக சொல்லபடுகிறது என்று எண்ணினேன், கூடவே கதையின் முடிவு இடத்தில் குகைக்குள் செல்ல அந்த தலைமை (பெயர் மறந்து விட்டேன் ) துறவி தியான நூல் உடன் உள்ளதா என்று கேட்கும் இடம் முக்கியமானது,  இந்த தங்க புத்தகம் அனுபவத்தை /அறிதலைதான் அவர் குறிப்பிடுகிறார்.

உண்மையில் இதை எழுதுவதன் வழியாக முக்தா அறிந்து கொண்டது என்ன என்பதை நான் அறிந்து கொள்ள முடியுமா என்று பார்த்தேன்,  ம்கூம் :) அந்நூலின் சூத்திரத்தை புரிந்து கொள்வதாக கனவு அவனுக்கு வருகிறது, அந்த கனவில் அவனை இங்கு அனுப்ப விரும்பாத தலைமை துறவி கூட வந்து அந்த நூலில் இரு வரிகளை எடுத்து காண்பிப்பதாக வருகிறது,  அதன் பிறகு பாட் காணாமல் போகும் நிகழ்வு வந்து விடுகிறது, ஒருவேளை பாட்’டின் மரணம்தான் முக்தாவிற்கு அறிதலை அளிக்கிறதோ, ஆனா அப்படி இருக்காது என்றே நினைக்கிறேன்,  ஒரு மரணம் தரும் அதிர்ச்சிக்கு எதற்கு இவ்வளவு ஆழமான அறிதலை நோக்கி செல்லும்,  மாறாக இந்த அறிதலின் பாதையில்தான் அடைகிறார் என்று நினைக்கிறேன்,  இந்த கடிதத்தில்  ஒரு பத்து நினைக்கிறேன் எப்படியும் வந்திருக்கும், எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை என்பதால்!

இந்த குகைபாதையை தியான அனுபவமாக கூட அணுகலாம் போல.  ஒன்று தோன்றுகிறது எதையும் விட்டுவிட்டு வரும்பொழுதுதான் திரும்புதலின் பாதை கிடைக்கிறது, மாறாக எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றால் அங்கேயே சிக்கி பாட் மாதிரி காணாமல் போக வேண்டியதுதான் :)

ராதாகிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் தியான அனுபவத்தின் இரண்டு முகங்களை காட்டுகிறது. மந்திரம் உடைய தியானம், இல்லாத தியானம். மந்திரம் இல்லாத தியானத்தையே முதலில் செய்கிறார் முக்தா. அது கழுகொம்பு இல்லாத அலைச்சலாக இருக்கிறது. அடுத்து ஒரு மந்திரம் தேவை என்று உணர்ந்து அதற்காகச் செல்கிறார். அந்த மந்திரத்துக்கும் அவருக்குமான உறவுதான் அந்த நூல்

நம் மரபிலே மூலநூல், மூலமந்திரம் என்று இரண்டு உண்டு. அந்த மூலநூலை அறிந்துகொள்வது முக்கியம் அல்ல. அதை தியானித்து எடுத்துக்கொள்வதுதான் முக்கியம். அதன் சிக்கல்களும் போராட்டங்களும்தான் அந்த மடாலயத்தில் நிகழ்கின்றன. அந்த மந்திரம் என்ரு அந்த நூலை சொல்லலாம். அதை எப்படி எடுத்துக்கொள்வது? சூரியன் அங்கே இருக்கும். அது உன் கண்ணுக்கு எப்படி படுமோ அதுதான் உன் சூரியன். மரத்தின் சூரியன் வேறு. இது என் குரு சொல்வது. மூலமந்திரத்திலிருந்து தன் தியான மந்திரத்தை உருவாக்கிக்கொண்டதுமே அவர் அறிந்துவிடுகிறார். அவருக்கு அதுதான் ஆதாரம். அவ்வ்ளவுதான் மனிதனின் எல்லை

சந்தானம்

***

அன்புள்ள ஜெமோ

வெகு நாட்களுக்குப் பிறகு வெளியான அன்றே தங்கப் புத்தகம் வாசிக்க முடிந்தது. தற்போதைய மன நிலையில் அதுவும் கூட ஒரு அழைப்பு என்றே தோன்றியது. இந்தக் குறுங்கதையை இருவரின் பயணம் என்ற ஒற்றை வரியில் சுருக்கி விட முடியும் என்று தோன்றுகிறது. ஒருவருக்கு அகமுகமாகவும், மற்றொருவருக்கு புறமாகவும் நிகழும் பயணம்.  அகமுகமாக பயணத்தைத் துவங்கும் எல்லா பயணிகளுக்கும் ஆங்காங்கே சில மைல்கற்கள் அமைந்து வழி காட்டுகிறது. ஆனால் அதைக் கூட பயணி அந்த இடத்தைச் சென்று சேர்ந்த பின்னர்தான் அது மைல் கல்  என்று புரிந்து கொள்கிறான்.  சிலசமயம் அத்தைகைய வழி காட்டுதல்களுக்கு புறவயமாக தன்னைப் போலவே  சில வழிகாட்டிகளும் அமைந்து விடுகிறார்கள். அவர்களில்லாது இவனின் பயணம் சாத்தியப் படுவதில்லை ஆனால் அந்தப் பயணம் அவருக்கானது அல்ல. அவர் அந்த அகப்பயணிக்கான ஒரு கருவி மட்டுமே.  இதைப் புரிந்து கொள்ளும் பொழுது நாம் மெய்மையின் நூலை இறுகப் பற்றியிருப்போம். அதைப் புரிந்து கொண்டால் பின்னர் அனைத்திலிருந்தும் விடுபடுதல் எளிதாகிறது. முக்தாவைப் போல. பின்னர் திபேத்தின் மடாலயமோ, பரசுராம ஷேத்திரமமோ, ஊட்டியோ எதிலும் வேறுபாடு இல்லை.  இன்னும் சொல்லப் போனால் அவருக்கு டென்சினோ அல்லது ஊட்டி ஆஸ்ரமத்தின் குருவோ தானோ  கூட ஒன்றுதானே.

இதற்குள் பலதடவை அந்தக் குறுங்கதையை வாசித்து விட்டேன் ஒவ்வொரு முறையும் சில புதிய நுணுக்கமான விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. நம்முடைய அனுபவங்களோடு தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. என் முன் இருப்பதெல்லாம் ஒரு கேள்வி தான், இப்படியான படைப்பை எழுதி முடித்த பின், மனக் கொந்தளிப்பில்லாமல் இருக்க முடிகிறதா. இது கிட்டதட்ட ஒரு தரிசனத்தின் வெளிப்பாடு அதை மிக நுணுக்கமாக சொற்களாக்கியிருக்கிறீர்கள்.  எப்படி அந்த நிமிடங்களை கடந்து வருவீர்கள். இல்லை எழுதுவதே இது போன்ற கொந்தளிப்பான நிமிடங்களைக் கடந்து வரும் உத்தியா.

அன்புடன்.

கிருத்திகா ஸ்ரீதர்

***

அன்புள்ள கிருத்திகா

உண்மையில் ஒரு கொந்தளிப்பு உண்டு – அது எழுதும்போது அல்ல, எழுதாத போது. அதை கடந்துவரும் வழிதான் இணையத்தில் பூசல்

ஜெ

***

முந்தைய கட்டுரைகதைத் திருவிழா-73, குமிழி [ சிறுகதை]
அடுத்த கட்டுரைலட்சுமியும் பார்வதியும், செய்தி- கடிதங்கள்