கதைகள்: கடிதம்

அன்புள்ள ஜெ,

நலம். நலம்தானே? தினமும் இரண்டு முறை உங்கள் இணையதளத்தைப் பார்வையிடுகிறேன். வாசிக்கிறேன். புதியன படித்தபின் முந்தய இடுகைகளயும் வாசிக்கிறேன். தங்களின் இணைய தளம் மிக நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது. ”சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை” என்ற மொழி படி, எடுத்து கொண்டு சேர்க்க சில தூண்டுதல்கள், உதவிகள் தேவை தான். இணைய தள நிர்வாகிக்கு எனது நன்றி.

நூறு நாற்காலிகள் என்னைப் பாதித்தது. ஏற்றத் தாழ்வுகள் எல்லா இடத்திலும் இருக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் குறைந்த விகிதத்திலாவது அழுத்தப்பட்ட மக்கள் முன்னுக்கு வருகிறார்கள்.பல நாடுகளில் இன்னும் மோசமாகததான் உள்ளது. சாதிகள் ஏதாவது ஒரு பரிமாணத்தில் இருக்கத்தான் செய்கின்றன. விவேகானந்தர் கூட சாதிகள் இருக்கத்தான் செய்யும் என்றார். சிறு மீனை பெரு மீன் உண்ணுவது நடந்துகொண்டுதான் உள்ளது. ஆயினும், அழுத்தப்பட்டவர்கள் மீண்டு எழ இந்தக் கதைகள் நிச்சயம் உதவும்.

ஓலைச்சிலுவை மற்றொரு பரிமாணத்தைக் காட்டியது. இந்தக் கதை என்னை மிகக் கவரக் காரணம் நான் படித்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் (1976-77, அன்னமங்கலம்,பெரம்பலூர் அருகே) எங்களுடைய தலைமை ஆசிரியர் அருட்தந்தை ஆரோக்கியசாமி லூர்தஸ் அவர்கள்தான். அவருடைய குணாதிசயங்கள் சாமர்வெல் போன்றே அமைந்திருந்ததுதான். தந்தைக்குள் இருந்த தாயுள்ளத்தை நான் கண்டிருக்கிறேன். அவரைப் பற்றி பல கூறலாம்.
ஒரு மாதச் செலவு அந்த பள்ளி விடுதியில் அப்போது 30 ரூபாய் மட்டுமே. இப்போது யாரும் நம்ப மாட்டார்கள். அங்கு பெற்ற அனுபவங்கள் வாழ்க்கையில் உதவி வருகின்றன.
ஏழைத் தச்சுக் குடும்பத்தில் பிறந்த ஏசுவினால் எத்தனையோ ஏழைகள் பயன் பெறுவது உண்மைதான். ஆயினும் பரவச நிலை (Enlightenment) எல்லாராலும் எட்டப்படுவதில்லை. சில பேர் அந்த பேறு பெறுகிறார்கள்.

மெல்லிய நூல் மிக மென்மையாக நெய்யப்பட்ட வடம்! கடையனுக்கும் கதி மோட்சம் வேண்டுமென்று பாடுபட்டு சொந்த மக்களாலேயே கொல்லப்பட்ட மஹாத்மா காந்தியின் வாழ்க்கையின் ஓர் அத்தியாயமாக செதுக்கப்பட்டுள்ளது.அய்யன்காளியைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவியது.

பெருவலி இலக்கிய தரம் வாய்ந்த ஒரு நிகழ்வின் பதிவு. கோமலின் தவிப்பு, உணர்வு, முக்தி நிலை ஆகியவற்றை கவனமாகக் கூறியுள்ளீர்கள். இன்பம் – துன்பம்; நீர்- நெருப்பு; இரவு – பகல் என பிரிக்கமுடியாதவை எத்தனையோ. பெருவலி அனுபவித்தால்தான் பேரின்பம் பின் கூடுமொ? ஏசு பெற்றதும் பெருவலி (crucifixion); ராமகிருஷ்ண பரமகம்சர் புற்று நோய் என்னும் பெருவலி உணர்ந்தார். (அவர் ஆண்டவனிடம் வலி போக்கக் கோரவில்லை). விவேகானந்தர் கால் வீக்கம் கண்டார். புத்தர் மனதில் பெருவலி உணர்ந்தாரோ? வலியை மரத்துப் போக மருந்து எடுத்தாலும் வலி எங்கும் போகாது உன் உள்ளேயே தான் இருக்கும், அதைக் கூர்ந்து கவனி, வலி மறந்து போகும் என்றார் ஓஷோ.
ஒரு பதிவு மூலமாக பல நினைவுகளை எனக்குள் புதிப்பித்துவிட்டீர்கள்.

நல் இலக்கியத்தின் வெற்றி, அதில் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சியை, கருவை,  தனி மனிதனைக் கூட உணர வைப்பதுதான். அதில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். தங்களின் பணி நன்று தொடரட்டும்.
வாழ்க! வளர்க!.
சம்பத்.

அன்புள்ள சம்பத் குமார்

கஜகிஸ்தானில் இருந்து ஒரு இந்திய வாழ்க்கை வாழ இக்கதைகள் வழியமைத்திருந்தால் மகிழ்ச்சி.

இக்கதைகளின் ஊடாகச்செல்லும் ஒரு மையச்சரடு எழுத எழுத எனக்கே உறுதிப்பட்டது. இன்று அது ஒரு தேர்வடம்போல வலுவானது

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைசிந்தனையை வரைதல்