தங்கப்புத்தகம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ

இரு பார்வைகள் தங்கப்புத்தகம் நூலில் வெளிப்படுகின்றன. ஒன்று ஞானம் என ஒன்று இருக்கிறது, அதை அடையவேண்டும். அது வெளியே எங்கோ இருக்கிறது, அங்கே சென்றடையவேண்டும். இந்தப்பார்வை என்றும் உள்ளதுதான். இன்னொரு பார்வை ஞானம் என்பது எங்கும் இருக்கிறது. அதை கண்டடையும் கண்தான் வேண்டும். ஞானம் நமக்குள்ளேயே இருக்கிறது. இந்த இரண்டு பார்வைகளுக்குள்ளும் இருக்கும் மோதல்தான் இந்தக்கதை. இந்த ஒரு பார்வையிலிருந்து இன்னொரு பார்வைக்கான நகர்வு என்று சொல்லலாம். ஒரு பார்வை வெளியே சென்று பாழ்வெளியுடன் முட்டிக்கொள்ள செய்கிறது. இன்னொரு பார்வை மீட்டு எடுக்கிறது

உங்களுக்கு தெரிந்திருக்கும் பைபிளின் இரு பார்வைகளைப் பற்றிய விவாதம் எப்போதும் உண்டு. பைபிள் சொர்க்கராஜ்ஜியம் வரவிருக்கிறது என்று சொல்கிறது. ஆனால் நக் ஹம்மாதியில் கண்டடையப்பட்ட தொன்மையான புனித தோமஸின் சுவிசேஷம் சொர்க்கராஜ்ஜியம் வந்துவிட்டது, அது உங்கல் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது என்று சொல்கிறது.

எம்.ராஜேந்திரன்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நலம் விழைகிறேன்.

மனதைக் கொஞ்சம் நீட்டி முறுக்கெடுத்து விட்டு உடனடியாக மறு மராத்தானுக்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள். ஆனால் எனக்கு இன்னும் அந்த அறுபத்தொன்பது கதைகளையே வாசித்து முடிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு எழுகிறது. இம்முறை தினமும் தவறாமல் அனைத்து கதைகளையும் வாசித்தே ஆக வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறேன். ஆனால் பாருங்கள் காலை முதல் பகுதியை வாசித்து முடித்தேன். அலுவல் முடிந்து வந்து மறுபகுதியை முடிக்க இந்நேரம் ஆகி விட்டது. ஒரு பார்வையில் நாள் முழுக்க தங்கப் புத்தகம் ஒரு முழு நாளும் மனதில் அலைந்த படியே மிதந்த படியே இருந்து கொண்டிருக்கிறது.

முதலிலேயே பாடபேதம் குறித்த சில வரிகள் அற்புதம். அவையே மீண்டும் கதையின் மையமாக ஆகும் காட்சிகள் நான் கண்டிருந்த கனவை மீண்டும் எழுப்பி அடையாளம் காட்டுவது போல் இருந்தது. பழையநூல்கள் காலத்தால் வடிகட்டப்பட்டவை என்ற சொல்லில் இருந்தே இந்த கதையின் மிரட்சி தொடங்கி விடுகிறது. நூலில் இருந்து எதைப் பெற வேண்டும், அறிவையா, ஞானத்தையா, தருக்கத்தையா என்ற கேள்விகள் வரும் போதே மெளனத்தை என்ற பதில் விழிக்கும் முன் வருகிறது. நகல்கள் அத்தனையும் வெவ்வேறானவை அவை அசலின் பிரதிபலிப்புகள் என்று நினைப்பதே எத்தனைக் குறுக்கல்வாதம்.

திபெத்தின் வரலாறும் அதன் மடாலயங்களில் நிலவும் கட்டமைப்பும் அற்புதமான கனவுகளைத் தந்தன. தியாக மயானங்கள் பற்றிய ஒரு குறிப்பு வருகிறது. அங்கு கழுகுகளுக்குச் சடலங்களை உண்ணத் தரும் சடங்குகள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. சொராஸ்டிர இனத்தவரைப் போலவே இங்கும் அப்படியொரு பழக்கம் இருப்பதை அறிந்து கொண்டென்.

ஞானக்கடல் என்ற ஞானி தவமேற்கொண்டு தன் மனதைக் கைகளில் மணியைக் கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறார். விரல்களே எண்ணங்களின் நீட்சி என்பதை உணர்ந்து கொண்டேன். அதிலிருந்து எழும் அலையே அவரது உரையாடல். இப்படி எழுந்து கொண்டே இருக்கின்றன வர்ணனைகள்.

நினைவில் மிகவும் ஆழப்பதிந்த ஒன்று. ஒலியின்றி நடைபோடுகையில் நமது சமநிலை குலைந்து விடுவது போன்ற உணர்வு எழுவது குறித்த சொற்றொடர்கள். பின்னர் வரும் தொடர் விவரிப்புகள் அலைக்கழிப்பை உருவாக்குபவை. ஒரு நூலை மட்டுமேனும் முற்றிலுமாய் விழுங்கிக் கொள்ள எண்ணம் கொள்பவர்களின் விழிக் கருவளையங்கள் எத்தனை சோர்வு தரும் காட்சி.

சுழலடுக்கு படிகளில் இருளில் பாதை காட்டும் ஒளி பட்டாம்பூச்சியாய் மாறும் கண நேரக்கவிதையை, பணி முடியும் தோறும் கொள்ளும் ஏமாற்றத்தை, எழுத்துப் பூச்சி எங்கு வேண்டுமானாலும் தன்னை பொருத்திக் கொண்டு திரியும் மாயத்தை என ஒரே ஒரு கதையில் விரிந்து கொண்டே போகும் அர்த்த வனங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்தின. முடியாது கிளர்ந்தெழும் கனவுகளைத் தருவது உங்களது கதைகள். கனவுகளில் மூழ்கி இறக்கும் இறப்பை மிகச் சிறந்த மரணமாகக் குறிப்பிட்டு ஒரு பத்தி வரும். அத்தகைய கனவுகளுள் ஒன்றை உங்கள் கதைகளுள் ஒன்று எங்களுக்குத் தரக்கூடும்.

தங்கப் புத்தகம் ‘நீலம்’ நாவலாகவும் இருக்கக்கூடும் என்ற ஒரு மயக்கம் வாசிப்பின் இடையிடையே தோன்றியது. ஓவியங்கள் கூட இருளுக்கும் ஒளிக்கும் இடையில் பலவிதமாய் மாற்றம் கொள்ளும் எனில் சொற்களுக்கு அத்தகைய நடனக் கலை எளிதில் கைவராது போய்விடுமா என்ன? முடியாது கிளர்ந்தெழும் கனவுகளைத் தருவது உங்களது கதைகள். கனவுகளில் மூழ்கி இறக்கும் இறப்பை மிகச் சிறந்த மரணமாகக் குறிப்பிட்டு ஒரு பத்தி வரும். அத்தகைய கனவுகளுள் ஒன்றை உங்கள் கதைகளுள் ஒன்று எங்களுக்குத் தரக்கூடும்.

இம்முறையாவது எழுதும் அத்தனைக் கதைகளையும் அன்றன்றே படிக்க வேண்டும்.

நன்றி.

தங்கள் அன்புள்ள

கோ.கமலக்கண்ணன்.

***

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் என்பது திபெத்தேதான். திபெத் பற்றி மேலைநாட்டவரின் பலவகையான வாசிப்புகளைத்தான் கூடு, கரு கதைகளின் முகப்பில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் முக்தா. அந்த வாசிப்புகளுக்கு அப்பால் திபெத் என்பது என்ன என்பது நம் ஒவ்வொருவராலும் சென்றடையவேண்டிய விஷயம்

இந்தக்கதையிலும் வரும் திபெத் மர்மமான நிலம். வெலியே வெண்ணிற்மான வெறுமை. உள்ளே வண்ணமயமான மடாலயங்கள். மலைகளின் அமைதி. குளிர். எங்கும் தனிமை. அந்த நிலம் என்பது ஒரு பெரிய வசீகரம்தான். அந்த நிலம் ஏன் வசிக்க்கரமாக இருக்கிறது என்றல் அது மொத்தமாகவே ஒரு அன்மீகமான குறியீடாக மெல்லமெல்ல மாறிவிட்டது என்பதனால்தான். அதையும் முக்தா இன்னொரு கதையில் சொல்கிறார்

ரவிச்சந்திரன்

***

அன்புள்ள ஜெ,

‘கரு’ குறுநாவலை வாசித்த பின்  எனக்குள் ஏற்ப்பட்ட பிரம்மிப்பு, திபத் மலைகளின் தரிசனமும், நிலப்பரப்புகளும் என்னுள் பெரும் கனவை உருவாக்கியது. அதிலே சில நாள் திலைத்திருந்த எனக்கு ‘தங்கப்புத்தகம்’ குறுநாவலும் அதே நிலப்பரப்பை மீண்டும் என்னுள் நிலை நிறுத்திவிட்டு அதனூடாக பனிப்போர்த்திய மலைகலைகளிலும், கரும்பாறைகளலும், புத்த குகைகளிலும்,  முக்தா, பட்டுடன் பயனித்தேன். என்னால் எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை உண்மையில். இலக்கிய வாசிப்பு இப்போது தான் தொடங்கி இருக்கும் எனக்கு இக்கதையை வாசித்த பின் ஏற்பட்ட என் அகயெழிச்சிகளை, பிரமிப்புகளை மொழி கோர்வையாகவும் என்னால் முழுமையாக எழுதிவிட முடியவில்லை. இருப்பினும் இதில் பயனித்து பேரனுபத்தைப் பெற்றுவிட்டேன். அதில் அந்த சூரிய ஒளி பட்டு செந்நிறமாய் ஒவ்வொரு மலைமுடியும் தோன்றும் காட்சி சித்திரம் மனதில் அப்படியே பதிந்துவிட்டது. தங்களின் படைப்பின் மூலம் வாசிப்பனுவத்தை வளர்த்துக் கொள்ளும் எனக்கு ‘தங்கப்புத்தகம்’ பெரும் தரிசனம். நன்றி ஆசான்.

சரண்ராஜ்

***

முந்தைய கட்டுரைகதைத் திருவிழா-74, மலையரசி [சிறுகதை]
அடுத்த கட்டுரைகுமிழி,மலையரசி- கடிதங்கள்