வேணு வேட்ராயன்- குமரகுருபரன் விருது வழங்கும் நிகழ்வு

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020

அன்புள்ள ஜெ

நாம் இந்த ஆண்டின் குமரகுருபரன் விருதை நண்பரும் ,  கவிஞருமான, வேணு வெட்ராயனுக்கு,  அறிவித்த உடனேயே, அவரை  தொடர்பு  கொண்டு வாழ்த்து, தெரிவித்தோம்.  சென்னையில் கொரோனா தொற்று நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், இந்த வருட விழாவை நடத்துவதில் சிக்கல் இருந்தது, ஆகவே, விமரிசையான விழாவை பின்னர் வைத்துக்கொள்ளலாம் என நீங்கள் சொன்னபடி  நண்பர்கள் முடிவெடுத்தோம்.  எனினும் குமரகுருபரனின் பிறந்த நாளான ஜூன் 10ந்தேதி, விருதையும், விருது தொகையையும் வேணு வேட் ராயனுக்கு நேரில் சென்று வழங்குவதே, கெளரவமாகவும் முறையாகவும் இருக்கும் என நண்பர்கள் கருதியதால், சென்னையில் இருக்கும் நண்பர்கள்,  கூடி,  வேணுவின் இல்லத்திற்கு செல்வதாக, பேசி, அவரிடமும்  அனுமதி பெற்றோம்.

சென்னையை அடுத்த மணிமங்கலம்  எனும் வயல்  சூழ்ந்த, புறநகர் பகுதியின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், அதன் முகப்பில் உள்ள பூhiங்கா  போன்ற பகுதியில் விருதை வழங்கலாம் என ஏற்பாடு  செய்திருந்தோம், வேணு தன் குடும்ப உறுப்பினர்களான தாயார், அக்கா, மற்றும் அக்கா குழந்தைகள், வந்து சமூக இடைவெளியுடன் அமர்ந்து,  பழங்கள் , பிஸ்கட்டுகள் என இனிய சிற்றுண்டியுடன்  நிகழ்வு தொடங்கியது.  சென்னை நண்பர்கள் ஜாஜா,{  ராஜகோபாலன் } ஷண்முகம் ஆகியோர் முன்னதாகவே அங்கு சென்றுவிட்டனர், சுரேஷ்பாபு, சந்தோஷ், காளிபிரசாத், ஆகியோர் பின்னர் இணைந்துகொள்ள,  நானும், கவிதா சொர்ணவல்லியும், குமரகுருபரனின் நெருங்கிய நண்பர் கார்த்தியும்,  மாலை ஐந்து மணிக்கு சென்று சேர்ந்தோம்.  உடனேயே உற்சாகமான மனநிலை தொற்றிக்கொள்ள, அரட்டையும்,  சிரிப்புமாக,  அந்த சிறிய விழா தொடங்கியது.

நண்பர் கார்த்தி தொழில்முறை புகைப்பட கலைஞர் என்பதால், தொடர்ந்து படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்,   ஒவ்வொருவரிடமும் ”விருதுக்கேடயம்”,  வடிவமைத்துத்தரும் நண்பர் கடை இரண்டு மாதமாக அடைக்கப்பட்டுள்ளதால், எனது ,  கைபேசியில்  வடிவமைத்த ஒரு ”விருது சான்றிதழ்” போன்ற ஒன்றை செய்து,  வழங்கினோம், அதுவும் சிறப்பாகவே இருந்தது.விஷ்ணுபுரம் வட்டம் சார்பாக,  விருது தொகையையும்,  விருதையும்,  கவிதா சொர்ணவல்லியும் , ராஜகோபாலனும், இணைந்து வேணுவிற்கு வழங்க, அனைவரும் கைதட்டி பாராட்டி மகிழ்ந்தோம், விருது வழங்கி பேசிய ராஜகோபாலன், இது விமரிசையாக நடத்தப்பட வேண்டிய முக்கியமான ஒரு விழா, சூழ்நிலை காரணமாக எளிதாக இங்கே நடைபெறுகிறது, பின்னொரு நாளில் மீண்டும் சிறப்பாக, இதை நிகழ்த்துவோம், என்றும்  குடும்ப உறுப்பினர்கள்,  நிச்சயம் வரவேண்டும் என்றும்  கேட்ட்டுகொண்டார், இதில் வேணுவின் அம்மாவும்  , அக்காவும்  மிகவும் மகிழ்ந்து விட்டனர்.  பின்னர், அந்த பூங்காவில் அமர்ந்து,  வேணுவுடன் ஒரு இனிய உரையாடல் தொடங்கியது ,

பெரும்பாலும் அனைவரும் அவருடைய கவிதைகளை வாசித்துவிட்டு சென்றிருந்தோம் என்பதால், உரையாடல் இனிமையாகவும் , செறிவாகவும் அமைந்தது.  எங்கள் அனைவருக்கும் பிடித்தமான அவருடைய, கவிதைகளை சொல்லி, அதை அவருடைய அனுபவம் வாயிலாக விரித்துக்கொண்டோம்.

உதாரணமாக இந்த வனவேந்தன் கவிதை,

 

அந்தரத்தில் ஆடும் சிறு கிளையில்

வனவேந்தன் சிலையென வீற்றிருந்தது ஒரு குரங்கு.

நான் முதலில் சொல்லி, இதில் தத்துவார்த்தமான ஒன்று கற்பனையுடன் இணைவதை பற்றி கேட்க, வேணு, கவிதையில் தத்துவம் என்பதும் கூட ஒரு அறிவு செயல்பாடு தான், அறிவுச்செயல்பாடு, நல்ல கவிதையை முற்றாக அழித்துவிடும், ஆனால் ஒரு கவிதையில், தன்னியல்பில், தத்துவம் வெளிப்படும் எனில், அது தவறில்லை என விளக்கினார்.

வேணு சிங்கப்பூர் காவிய முகாமிலும்  ஊட்டி இலக்கிய முகாமிலும் ஏற்கனவே சொல்லியுள்ள அவருடைய கவிதை நிகழும் தளமான, ”அந்தகரண விருத்தி” பற்றி விரிவாக பேசினார்.  அந்த பூங்காவில் உள்ள ஊதா மலர்க்கொத்தை காட்டி விளக்கினார், மனம் விரிவடைந்துகொண்டே சென்று சேரும் போது  உதிப்பதும், மனம் சுருங்கி சூன்ய நிலையில் வெளிப்படும் ஒற்றை சொல்லும் கவிதை தான்.  இதில் மேல் கீழ் என்கிற அடுக்குகள் ஏதும் இல்லை, இதை நான் தேவதேவனில் இருந்து பெற்றுக்கொண்டேன், எனவும் தான் தேவ தேவன் மரபில் வந்தவன் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புவதாகவும் சொல்லிச்சென்றார்.,  காளிபிரசாத் அலகில் அலகு தொகுப்பு தேவதேவனை விட தேவதச்சன் கவிதை உலகுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக சொல்லி சில, கவிதைகளை குறிப்பிட்டார்.  அதற்கும் வேணு மிக விரிவாக தன்னுடைய கவிதை உலகு பற்றி விளக்கினார்.

பின்னர், ராஜகோபாலன் சில கவிதைகளையும், மற்ற நண்பர்களும் கவிதை பற்றியும், மேலும் வேணு தொடர்ந்து எழுத வேண்டும், என்றும், அடுத்த தொகுப்பு விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.  இறுதியாக கார்த்தி புகைப்படம் எடுக்க அனைவரையும் அழைத்தார், வேணு மருத்துவர் என்பதால், மிகவும் கறாராக,  முகமூடியை அணிவதிலும் , சமூக இடைவெளியிலும், கவனமாக  இருந்தார்.  சுரேஷுபாபு வேணுவை  ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று விரும்பினார்.  அடுத்த வாரத்தில் அதையும் செய்துவிடலாம் என  சொல்லிவிட்டு அனைவரும் கிளம்பினோம்.  சிறிய நிகழ்வாக இருந்தாலும் மிகவும் மனநிறைவோடும், இனிய நினைவுகளுடனும் மேலும் ஒரு நாள் அமைந்தது மகிழ்ச்சி. இந்த இனிய தருணத்தை  வழங்கியதற்கு உங்களுக்கு நன்றி.

வேணு வேட்றாயனுக்கு  பாராட்டுகளும், நன்றியும்.

சௌந்தர்ராஜன்

***

முந்தைய கட்டுரைலட்சுமியும் பார்வதியும், செய்தி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசெட்டியார் மாத்திரை-லக்ஷ்மி மணிவண்ணன்