கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

[ 1 ]

கணிக்குன்று கொச்சப்பன் சங்கரநாராயணன் என்ற சங்கு என்னுடன் அளவாகத்தான் பேசுவான். ஏனென்றால் அவன் வீட்டில் வரிசையாக கோபுரங்கள் போல எட்டு வைக்கோல்போர்கள் இருக்கும். அத்தனை வைக்கோலையும் தின்னும் காளைகளும் கடாக்களும் எருமைகளும் பசுக்களும் அடங்கிய தொழுவம் திருவட்டார் கோயில் பிரகாரம் போல நீண்டு மடிந்து ப வடிவில் இருக்கும். அவற்றை மேய்ப்பவர்கள் கறப்பவர்கள் என பதினைந்து வேலையாட்கள். எஞ்சிய வேலைகளுக்காக மீண்டும் பதினைந்துபேர். வயல்வேலைக்கு நாளுக்கு நூறுபேருக்கு குறையாது. அவர்களுக்காக சமைக்க ஒரு தனிக்கொட்டகை. அங்கே பத்துபேர் வேலை செய்தனர்.

சங்குவை அவன் கேட்காதபோதுதான் நாங்கள் அப்படி அழைப்போம். மற்றபடி கே.கே என்றுதான் சொல்லவேண்டும். வேறு எப்படி அவன் காதுபடச் சொன்னாலும் நேராக வந்து அறைவான், அவனுடைய அப்பா தாளாளராக இருக்கும் பள்ளியில்தான் நாங்கள் படித்தோம். ஆகவே அவன் எங்களை அடித்தால் அது நாங்கள் மீண்டும் ஹெட்மாஸ்டரிடம் அடிவாங்கத்தக்க குற்றம். அடிவாங்கியதுமே நாங்கள் தப்பி ஓடிவிடுவோம். சங்குவின் அடியாட்களும் உளவாளிகளும் பள்ளி வளாகம் முழுக்க உலவிக்கொண்டிருப்பார்கள்.

சங்கு நல்ல ஓங்குதாங்கான ஆள். பதினொன்றாம் வகுப்பில் மீசை முளைத்திருக்கும் ஓரிருவரில் ஒருவன். அதை அவன் மையிட்டு மேலும் கறுப்பாக்கிக் கொண்டிருந்தான். புருவங்களுக்கும் மையிடுவான். நல்ல வெள்ளைநிறம். மார்பில் மயிர் அடர்வு உண்டு. அதன் மேல் புரளும்படி தங்கச்சங்கிலி அணிந்திருப்பான்.

அவன் வீட்டில் நான்கு அக்காக்களுக்கு அவன் ஒரே தம்பி. அவன் அக்காக்கள் இருவருடைய திருமணத்திலும் ஏழுநிலைப் பந்தல் போட்டு பதினான்கு வகை பிரதமனுடன் விருந்து நடந்தது. எங்களூருக்கு முதல்முறையாக இம்பாலா கார் வந்தது அவர்களின் திருமண நிகழ்ச்சியின்போதுதான். அந்தக்கார் நீரிலும் போகும் என்று நான் சொன்னேன். அப்போதுதான் சங்கு என்னை சற்று கனிவுடன் பார்த்தான். “ஆனா பெட்ரோல் வேஸ்டாகும். அடிக்கடி ஓட்டப்பிடாது” என்று அவன் சொன்னான்.

அவன் வீட்டில் ஒரு பியூக் காரும் ஒரு ஸ்டேண்டேர்ட் அம்பாசிடர் காரும் உண்டு. பியூக் கார் வெண்ணிறம் அம்பாசிடர் கறுப்பு. ஆனால் சங்கு பெரும்பாலும் மாட்டுவண்டியில்தான் பள்ளிக்கு வந்தான். நல்ல மெழுகும் அரக்கும்போட்டு மினுமினுவென தெரியும் பாயால் வளைத்துக் கூரையிடப்பட்ட வில்வண்டி. உள்ளே சிவப்பு வெல்வெட் உறை போட்ட மெத்தை இருக்கைகள். சிவப்புப் பட்டுத் திரைச்சீலைகள்.

சங்கு அதில் பாதி அமர்ந்து பாதி உடலை வெளியே காட்டி தெருவைப் பார்த்தபடி பள்ளிக்கு வருவான். பல மாணவர்கள் அவனுக்கு வணக்கம் சொல்வார்கள். கைத்தொழில் வாத்தியார் சிவசுப்ரமணியமும் கூட அவனுக்கு வணக்கம் சொல்வார். அவர் அவன் வீட்டிலும் வேலைபார்த்தார்.

சங்கு திடீரென்று ஒருநாள் என்னை அழைத்து வரும்படி அவனுடைய அடியாளான கோமரம் கணேசனிடம் ஆணையிட்டான். கோமரம் என்னிடம் “லே வாலே” என்றான். “கொச்சேமான் விளிச்சுதாரு…”

என் மூத்திரப்பை குளிர்ந்துவிட்டது. என்ன தப்பு செய்தேன் என்று பலவாறாக எண்ணிப் பார்த்தேன். எங்கும் சமீபத்தில் சங்கு என்று சொன்னதில்லை. ஆனால் பத்துநாட்களுக்கு முன்பு சங்குவைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தேன். தங்கப்பூண்போட்ட உலக்கை என்ற தலைப்பில், கொஞ்சம் மோசமான ஆபாசக்கவிதை. குறியீட்டு ரீதியானது.

நான் ஓடிவிடலாமா என்றுதான் யோசித்தேன், ஆனால் அப்படி எங்கும் போய்விடமுடியாது. ஊரைவிட்டுத்தான் போகவேண்டும். அங்கே சென்று அந்தக்கவிதையை நான் எழுதவில்லை என்று காணிக்கரை பகவதிமேல் ஆணையிட்டுவிட வேண்டியதுதான். என்னென்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டேன். சங்கு அவன் காலடியில் ஒருவன் விழுந்துவிட்டால் அடியாரைக் காக்கும் ஆண்டவனாக ஆகிவிடக்கூடியவன்.

நான் சென்றபோது அவன் பள்ளி மைதானத்தின் எல்லையில் இருந்த தோட்டத்திற்குள் ஒரு மரத்தில் சாய்ந்து நின்று பாசிங்ஷோ சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான். அவனுடைய அடியாட்களில் ஞானஸ்டீபன் மட்டும்தான் உடன் சிகரெட் பிடிக்க அனுமதி உள்ளவன். அவன் நேசையன் பெருவட்டரின் மகன். மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தி என்னை கூர்ந்து பார்த்தனர். என் நடை தளர்ந்தது. நான் இயல்பாக இருக்கும் பொருட்டு தென்னை மரங்களையும் செடிகளையும் பார்த்தபடி சென்றேன்.

அருகே சென்றதும் புன்னகைத்தேன். நல்லவேளையாக நான் வேட்டி கட்டுபவன், ஆகவே அதை தழைத்துப் போட்டு மரியாதையைக் காட்ட உதவியாக இருந்தது.

சங்கு என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு மற்றவர்களை பார்க்க அவர்கள் விலகிச் சென்றார்கள். அவன் அவர்கள் சென்றுவிட்டதை பார்த்துவிட்டு “நீ கவிதை எழுவியா?” என்றான்.

“அதை நான் எழுதல்லை” என்றேன். “அதை எழுதினது மத்தவனாக்கும்.”

ஆனால் சங்கு வேறு மனநிலையில் இருந்தான். “உனக்கு ஆனந்தவல்லியை தெரியுமாடா?”

”எந்த ஆனந்தவல்லி?” என்றதுமே எனக்கு அவள் முகம் ஞாபகம் வந்தது. மலர்ந்து  “பத்து ஏ தானே? தெரியுமே. நேற்றுகூட அவளுக்கு நான் நெல்லிக்காய் வாங்கிக்கொடுத்தேன்”

அவன் முகம் ஏன் அப்படி கொடூரமாக ஆகியது என்று எனக்கு புரியவில்லை. “நீ எதுக்குடே அவளுக்கு நெல்லிக்கா வாங்கிக்குடுக்கே?”

“அவ பைசா குடுத்தா. ரெண்டு நெல்லிக்கா நான் எடுத்துட்டு வாங்கிக் குடுத்தேன். கூலி வேணும்லா?”

அவன் சாதாரணமாக ஆகி “அதுசெரி”என்றான். “நமக்கு ஒரு லெட்டர் எழுதணும்… அவளுக்கு குடுக்க.”

“எதுக்கு?” என்றேன்

“லவ்வுலே” என்றான். அவன் முகம் அதுவரை நான் காணாத பரிதாபத்தை அடைந்தது. “நான் ஒருமாசமா செரியா உறங்கல்ல. வேற நெனைப்பே இல்லை. எப்பமும் அவ முகம்தாம்லே மனசிலே… அவ இல்லென்ன்னா நான் செத்திருவேன் பாத்துக்க.”

“அவளுக்கு தெரியுமா?”

“அவளுக்க கிட்ட பேச எனக்கு தைரியமில்லை. என்னமோ தெரியல்லை, அவளைப் பாத்ததுமே நாவெறங்கிப் போவுது. அவளை நான் அங்க இங்க நின்னு பாக்குதேன், அவ பாக்குதாளான்னு தெரியல்லை. எனக்கு ஒரு நல்ல லவ்லெட்டர் எழுதிக்குடுடே.”

நான் உற்சாகம் அடைந்து “அது ஒண்ணுமில்லை. நான் அருமையாட்டு எழுதித்தாறேன். இதெல்லாம் பாத்து பதனமாட்டு செய்யணும்” என்றேன்.

“நீ நாளைக்கு எழுதிக்கொண்டுவா… இங்க பயக்க ஆருகிட்டயும் சொல்லவேண்டாம்”

நான் கிளம்பும்போது அவன் எனக்கு ஒரு ரூபாய் முன்பணம் அளித்தான். அதில் நான் தேங்காய் மிட்டாய் ஒரு கட்டி வாங்கி என் நண்பர்கள் எட்டுபேருடன் சாப்பிட்டேன். “வீட்டிலே தேங்கா திருடினியாலே?” என்று ஆறுமுகம் கேட்டான். நான் புன்னகை செய்தேன்.

[ 2 ]

அன்றே வீடு திரும்பி நான் உருக்கமான காதல்கடிதம் ஒன்றை எழுதினேன். யாயும் ஞாயும் யாராகியரோ என்றெல்லாம் முதலில் எழுதிய கடிதத்தை கிழித்துவிட்டேன். கண்களின் வெண்ணிலவே உல்லாச காட்சிதரும் மதுவே என்று ஆரம்பித்து எழுதி முடித்தபோது திருப்தியாக இருந்தது. அதை நகலெடுத்தேன்.

காலையில் நான் குளித்துவிட்டு வந்தபோது என் வீட்டுக்கு முன்னால் சங்கு நின்றிருந்தான். நான் பதறி ஓடி அவன் அருகே போனேன். “அய்யோ, என்ன?” என்றேன்.

“எழுதினியா?”

“எழுதியாச்சு” என்றேன்.

“வா” என்று அவன் சைக்கிளுக்கு அழைத்துச் சென்றான்.

“சைக்கிள் ஆருக்கது?”

“நம்ம டாக்டர் டேவிட்டுக்க கிட்ட வாங்கினேன்.”

எங்களூரில் இரண்டே சைக்கிள்கள்தான். ஒன்று டாக்டர் டேவிட்டுக்கு உரியது, இன்னொன்று பஞ்சாயத்து ஆபீஸ் ஏசுராஜுக்கு சொந்தமானது.

“நீ ஓட்டுவியா?”

“தெரியும்… நீ வந்து ஏறிக்கோ”

நான் உள்ளேபோய் வேட்டிகட்டி சட்டைபோட்டு ஓடிவந்து  அதில் ஏறிக்கொண்டேன். இந்துக்கள் சைக்கிள் ஓட்டமுடியும் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஓட்டலாமா என்ற சந்தேகமும் எழுந்தது. நான் அதற்கு முன் சைக்கிளில் அமர்ந்ததே இல்லை. என் உள்ளத்தின் சலனம் அந்த சைக்கிளை ஊசலாட்டியது.

“எங்க போறம்?”

“அவ வீட்டிலே இருந்து இடைவழி வழியாட்டு தனியா நடந்து வந்து ரோட்டிலேதான் கூட்டுக்காரி சாந்தம்மையை பாப்பா. அதுக்குமுன்னால நாம இந்த லெட்டரை குடுத்திடணும்…”

”நாமன்னா?”

“டேய் நீயும் வாடே… வாடே மக்கா”

அவன் அப்படிக் கெஞ்சுவது எனக்கு பெருமிதமாக இருந்தாலும் பயமாகவும் இருந்தது. ஆனால் ஒன்று தோன்றியது, எந்தப் பிரச்சினை என்றாலும் என்னை குற்றம் சொல்ல மாட்டார்கள். என்னை சங்கு மிரட்டிக் கூட்டிச் சென்றதாகவே நினைப்பார்கள். ஏற்கனவே சங்கு உள்ளூர் விபச்சாரியான குடம் ராஜம்மையின் வீட்டில் பிடிபட்டிருக்கிறான். வேலைக்காரப் பெண்கள் பலர் அவனைப் பற்றி புகார் சொல்லி அவன் அப்பா அவனை மட்டையால் அடித்திருக்கிறார்.

நாங்கள் மூடிக்கிடந்த ஒரு கடையின் பின்பக்கம் சைக்கிளுடன் காத்து நின்றிருந்தோம். என் மனம் அடித்துக்கொண்ட ஓசை பயங்கரமாகக் கேட்டது. சங்கு பதற்றத்தில் கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டே இருந்தான்.

அவள் வருவது தெரிந்தது. “வாறா” என்று நான் சொன்னேன்.

அவன் “வாடே” என்றான்.

“நான் எதுக்கு?”

“நீ வந்து பக்கத்திலே நில்லு…. தள்ளி நின்னா போரும்.”

நாங்கள் அங்குமிங்கும் பார்த்துவிட்டு பதறிப்பதறி நடந்தோம். ஆனந்தவல்லியின் அப்பா சந்தைமுக்கில் அமர்ந்து பீடிசுற்றுபவர். ஒல்லியாக. குழிந்து துளைமாதிரியே தெரியும் கன்னங்களும் பெரிய குரல்வளையுமாக இருப்பார். அவள் எப்படி இப்படி அழகாக இருக்கிறாள் என்று தெரியவில்லை. அவள் அம்மாகூட குண்டாக கறுப்பாக இருப்பாள்.

ஆனந்தவல்லி சற்று பெரிய இடை கொண்டவள். நடக்கும்போது அதை இருபக்கமுமாக அசைத்து வந்தாள். சங்குவைக் கவர்ந்தது அதுவா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது. ஓடிவிடலாமா, இப்போதுகூட வாய்ப்பிருக்கிறது.

அச்சுப்பெருவட்டனின் தோட்டம் வளையும் இடத்தில் நாங்கள் நின்றோம். அவள் அருகே வந்ததும் சட்டென்று சங்கு கிளம்பிப்போய் அவளை மறித்தான். அவளிடம் அந்த கடிதத்தை நீட்டினான். அவள் அதை வாங்க மறுத்து புத்தகத்தை மார்போடு அணைத்தபடி குனிந்து நின்றாள். கண்ணீர் வழிந்தது.

“ஏய் இந்தா இதை பிடி… பிடி சொல்லுதேன்.. இந்தாடீ” என்று சங்கு அதட்டினான். அவள் தலை நிமிர்த்தவில்லை.

நான் மேலும் அருகே சென்றேன்.

“இத வாங்காம உன்னால இங்க வாழமுடியுமா? உனக்க அப்பன் ராத்திரி வாறப்ப ஆளைவச்சு அடிச்சு காலை ஒடிச்சு போடுவேன்… வாங்குடி.”

அவள் மேலும் தோளைக்குலுக்கி, மேலும் குறுகி நின்று விசும்பி அழுதாள். சங்கு சட்டென்று அவள் இடையை வளைத்து பிடித்து அவள் கன்னங்களிலும் கழுத்திலும் முத்தமிட்டான். அவள் தலையை அசைத்தமையால் உதட்டில் முத்தமிட முடியவில்லை.

அவள் அதிர்ந்து நின்றாள். அவன் அவளுடைய இடது முலையை பிடித்துக் கசக்கினான். அவள் திடுக்கிட்டு திமிறி அதை கைகளால் தட்டியபடி அப்படியே அமர்ந்துவிட்டாள்.

“இந்தாடீ” என்று அவன் ஒரு பத்துரூபாய் தாளை அவள்முன் போட்டுவிட்டு திரும்பி “வாடே” என்றான்.

நாங்கள் மீண்டும் சைக்கிளை அடைந்தோம். அங்கே ஆனந்தவல்லி அப்படியே அமர்ந்திருப்பது தெரிந்தது.

“அப்டியே உக்காந்திட்டிருக்கா” என்று நான் சொன்னேன்.

“போயிடுவா…” என்று சங்கு சொன்னான். “இனி அவ நமக்குள்ளவளாக்கும். வளைஞ்சிருவா.”

“ஏன்?”

“ஏலே, கை வச்சாச்சுல்லா? இனி அவ்ளவுதான். இதுகளுக்கு அதுக்குமேலே யோசிக்க முடியாது.”

“ஏன்?” என்றேன்.

“ஏன்னா? அது அப்டித்தான். போஸ்டாப்பீஸிலே சீலு வைச்சா பின்ன லெட்டர் செரியா அட்ரஸுக்கு போவுதுல்ல? சீலு வைச்சாச்சுலே” என்றான் சங்கு.

எனக்கு அவன் சொன்னது புரியவில்லை.

அவன் “நான் இதேமாதிரி நாலஞ்சு ஐட்டம் தாண்டியாச்சு. இதுகளை நமக்கு நல்லா தெரியும். இங்கபாரு அவளுக்க சுவிச்சிலே நான் கையை வச்சாச்சுல்ல? முதல் சந்தர்ப்பத்திலே கையை வச்சிடணும்டே. அவ அதிர்ச்சி ஆயிடுவா. ரெண்டுநாள் அழுவா. ஆனா அவ என்ன செய்யமுடியும்? சாவ முடியாதுல்ல? என்னைய கெட்டவன்னு நினைச்சுக்கிட்டா அவ உடம்பு கெட்டுப்போச்சுன்னு ஆவும்ல? அப்ப கொஞ்சம் கொஞ்சமாட்டு நான் நல்லவன்தான்னு நினைப்பா. என்னைய அவளை கட்டினவன்னு நினைப்பா. அப்ப கையை வச்சது தப்பில்லதானே? கெட்டுப்போகல்லதானே? என்ன சொல்லுதே?”

“ஆமா” என்றேன். ஆனால் எனக்கு புரியவில்லை.

சங்கு “அவ இனி கொஞ்சம் கொஞ்சமாட்டு நம்மளை அவளுக்க வீட்டுக்காரன்னு நினைப்பா… நாமளும் கொஞ்சம் நல்லவாக்குகள் சொல்லி கண்ணே பொன்னேன்னு கொஞ்சணும். சத்தியங்கள் சிலது குடுக்கணும். அவளுகளுக்கு ஒரு சந்தேகம் உண்டு, அப்டி சுளிவிலே வளைஞ்சு வந்தா நாம அவளை தேவடியான்னு நினைச்சிருவோம்னுட்டு. அதனாலே கொஞ்சம் இறுக்கிப் பிடிப்பாளுக. நாம அவளை கட்டின பெஞ்சாதியா நினைக்கோம்னு தெரிஞ்சா அப்டியே குழைஞ்சு விழுந்திருவாளுக. ஏலே, அதுக்கு ஒரு நல்ல வழி இருக்கு, அவளுகளை சந்தேகப்பட்டு நல்லா திட்டணும். யாருகிட்டயும் பேசாதே பழகாதேன்னு கெடுபிடி செய்யணும். நாம திட்டத்திட்ட அவளுகளுக்க மனசுக்குள்ள நாம கட்டின கணவனா ஆயிட்டே இருப்போம். சின்ன பண சகாயங்கள் செய்யணும், அதுக்கு கணக்கு கேட்டு கொஞ்சம் கண்டிச்சு வைக்கணும், இப்டி செலவுசெய்தா நாளைக்கு எப்டி குடும்பம் நடக்கும்னு கேக்கணும்… அப்ப அப்டியே முளுப் பெஞ்சாதிமாதிரி ஆயிடுவா.”

“அதுக்க பிறவுதான் லவ்வா?” என்றேன்.

“ஏலே, இதாம்லே லவ்வு…” என்றான் சங்கு. “அப்டியே  கூட்டிட்டுப்போயி நாலஞ்சுதடவை சோலிகளை முடிச்சா நம்ம கணக்கு முடிஞ்சுது. ஆனா அதுக்குப்பிறகு அவளுக கொஞ்சம் கொஞ்சமா நம்ம மேலே அதிகாரம் காட்ட தொடங்குவாளுக. அப்ப அப்டியே முறிச்சு போடீன்னு சொல்லிடணும்..”

“அப்ப நீ அவளை கட்டமாட்டியா?” என்றேன் ஆச்சரியமாக.

“அவளையா? பீடிசுத்துதவனுக்க மகளையா? லே, நான் கணிக்குன்று அனந்தன் கொச்சப்பன் பண்ணையாருக்க ஒத்த மகனாக்கும்”

”நீ லவ்வுன்னு சொன்னே?”

“ஆமா, சொன்னேன். லவ்வுன்னா கட்டணுமா? கட்டுறதுக்கு எதுக்குலே லவ்வு? மாங்கா மடையனா இருக்கானே? கட்டணுமானா அவளுக்க அப்பன்கிட்ட போயி கேட்டாப் போராதா?”

“தொண்டை அடைக்குதுன்னு சொன்னே?” என்றேன்.

“நான் இப்டி நம்ம வீட்டுக்கு வெளியிலே கையை வைக்குதது முதல் தடவையாக்கும்… அதனாலே ஒரு படபடப்பும் வெள்ளம் எறங்கா வெப்ராளமும் இருந்தது. ஆனா நேரில பாத்தப்ப மனசு மாறிப்போட்டுது. எல்லாவளையும்போல ரெண்டுமுலையும் ஒரு ஓட்டையும்தானே இவளுக்கும். என்னத்த பெரிசா… இந்தா உன் லெட்டரு, வச்சுக்க”

“இத நீ வாசிக்கல்ல” என்றேன்.

“இத என்னத்துக்கு வாசிச்சு… நீ வச்சுக்க. ஆருக்காவது குடுத்துப்பாரு… ஆனா மக்கா நீ என்ன எழுதிவச்சாலும் பைசா இல்லேன்னா மயிராட்டு நினைப்பாளுக. பைசா உள்ளவன லவ்வு பண்ணிப்போட்டு, நான் பைசாவுக்காக லவ் பண்ணல்லன்னு நம்மகிட்ட சொல்லுவாளுக… ஹெஹேஹே…”

நான் திரும்பிப் பார்த்தேன். ஆனந்தவல்லி எழுந்து திரும்பி வீட்டுக்கு போய்விட்டிருந்தாள். அந்த ரூபாய் அங்கேயே கிடந்தது

“ரூபா அங்கேயே கெடக்கு” என்றேன்

“அதை இப்ப எடுக்க மாட்டா. லவ்வு ஆனா பிறகு கேட்டுக்கேட்டு வாங்குவா… விடு” என்றான்.

“பின்ன எதுக்கு குடுத்தே?

“அவளுக்கு தெரியும்லா, பைசாவை எடுத்துவிடுவேன்னுட்டு?”

நான் அதைப்போய் எடுத்தாலென்ன என்று யோசித்தேன். பத்து ரூபாய். எனக்கு பத்து ரூபாய் கிடைத்தால் இருபது சினிமா பார்ப்பேன். பொரிகடலை சுண்டலுடன். அல்லது பத்துமுறை மகாராஜா ஓட்டலில் தோசை சாப்பிடுவேன். அல்லது சப்பாத்தியும் பீஃபும். என் நா ஊறியது. பெருமூச்சு விட்டேன்.

“பாவப்பெட்ட பெண்ணாக்கும். பல ஆசைகள் இருக்கும். சோப்புசீப்பு வளையலுன்னுட்டு. எல்லாம் கெளம்பி வரும்… டேய் இந்த ஏழைகளுக்கு பைசாதான் வேணும். ஆனா அப்டி மத்தவன் நினைச்சிரப்பிடாதுன்னு ஜாக்ரதையா இருப்பாங்க…. அதை தெரியாத பணக்காரன் கிடையாது” என்றான் சங்கு.

நான் திகைத்து மேற்கொண்டு பேசாமல் நின்றேன். அவன் சைக்கிளை எடுத்தான். நான் ஏறிக்கொண்டேன்.

போகும்போது அவன் “ஆனா எல்லாத்தையும்விட முக்கியம் அவளுக்க அப்பன் காலை உடைச்சிருவேன்னு சொன்னது. நான் சொன்னா செய்யுத ஆளாக்கும்னும், என்னைய அவளோ அவ அப்பனோ ஒண்ணும் செய்யமுடியாதுன்னும் அவளுக்கு தெரியும்லா?” என்றான் சங்கு “அந்த பயம் அவளுக்க மனசிலே இருந்திட்டிருக்கும். பிறவு நம்ம கிட்ட வாறப்பவும் வராம வேற வழியில்லை, வரல்லேன்னா அப்பாவை அடிச்சுப்போட்டிருவான்னு சமாதானம் செய்துகிடவும் ஆச்சு… என்ன சொல்லுதே?”

[ 3 ]

நான் என்ன நடக்கும் என்ற பதற்றத்துடன் இருந்தேன். முதலில் எனக்கு ஒருமாதிரி ஏமாற்றமாக இருந்தது. அத்தனை எளிதாகவா பெண்கள் விழுந்துவிடுவார்கள்? நானெல்லாம் ஒரு பெண்ணிடம் பேசுவதையே வாழ்வின் உச்சகட்ட சாதனையாக எண்ணிக்கொண்டிருந்தேன். என்னால் அது முடியும் என்ற நம்பிக்கையே இருக்கவில்லை.

அன்றுமாலைக்குள் ஒருமாதிரி மனதை அமைதிப்படுத்திவிட்டேன். இதெல்லாம் போஷ்கு. அப்படியெல்லாம் பெண்கள் விழுந்துவிடமாட்டார்கள். கதைகளிலெல்லாம் எவ்வளவு நுட்பமாக எழுதியிருக்கிறார்கள். பெண்மனசு ஆழம் என்றெல்லாம் எவ்வளவு சினிமாக்கள் சொல்கின்றன.

ஆனால் நான் சங்குவை பின்தொடரவுமில்லை. அதற்கு என்னால் முடியாது என்பது ஒருபக்கம். அவ்வாறு போய் உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டால் எனக்கு மேலும் ஏமாற்றம்தான் கிடைக்கும் என்ற ஆழமான அவநம்பிக்கை எனக்குள் இருந்தது இன்னொரு பக்கம்.

ஆனால் மனம் எரிந்து கொண்டே இருந்தது. சங்கு ஏழைகளைப் பற்றிச் சொன்னது, ஏழைப்பெண்களைப் பற்றிச் சொன்னது எல்லாவற்றையும் நான் என் வீட்டுப்பெண்களுடன் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை கொஞ்சம் பிந்தித்தான் உணர்ந்தேன். பெண்களை இழிவுசெய்கிறான், அவன் முகத்தில் அவள் காறி உமிழ்வதை நான் விதவிதமாக கற்பனை செய்தேன்.

நடுவே அந்த கடிதத்தை படித்துப் பார்த்தேன். அது எனக்கு கலவையான உணர்வுகளை கொடுத்தது. அந்நிகழ்ச்சிக்கு பின் என் வீட்டுக்கு வந்து அதை படித்தபோது கேலிக்குரியதாக இருந்தது. அழுகையே வந்துவிட்டது. ஆனால் இன்னொரு முறை எடுத்துப் படித்தபோது அது என்னுடைய மனத்தையே காட்டியது. அது இன்னும் கூச்சத்தை அளித்தது. ஆனால் அவ்வப்போது எடுத்துப் படித்தேன். படிக்கப்படிக்க அது அந்தரங்கமான கிளர்ச்சியை அளிக்கும் ஒரு ரகசியமாக ஆகியது.

நான் உண்மையில் நினைத்ததுபோல நடந்தது. பதினைந்து நாட்களுக்குப்பிறகு நான் பகவதிகோயிலுக்கு பின்னாலிருந்த தோப்பில் சங்குவும் ஆனந்தவல்லியும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவன் அவளிடம் கொஞ்சிப் பேசுகிறான் என்றும், அவள் வெட்கப்படுகிறாள் என்றும் தெரிந்தது. பார்த்ததுமே நான் பதறிவிட்டேன். அப்படியே ஓடிப்போய் என் அறைக்குள் சென்று அமர்ந்து மூச்சுவாங்கினேன். அழுகையாக வந்தது.

ஏன் அழுகை? ஏனென்றால் நான் பெண்களைப்பற்றி, காதலைப்பற்றி, வாழ்க்கையைப்பற்றி நினைத்ததெல்லாம் பொய் என்பதனால். உண்மை மண்போல கல்போல அப்பட்டமாக கண்முன் நின்றது. நான் இரண்டுநாள் பள்ளிக்கூடம் போகவில்லை. வீட்டிலிருந்து கிளம்பி தேரிக்குளம், பாண்டிக்குளம் எங்காவது போய் அமர்ந்துவிட்டு திரும்பினேன். சோர்வு என் மேல் எடையுடன் அழுத்தியிருந்தது.

மெல்ல மெல்ல தர்க்கப்படுத்திக் கொண்டேன். ஊரில் பரவலாக அதுதான் நடந்துகொண்டிருந்தது. ஏழைப்பெண்களை பணமுள்ளவர்கள் மிகமிக எளிதாக அடைந்தார்கள். வறுமையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கு அவர்கள் பணத்தைத்தான் அளித்தார்கள், ஆனால் ஏதோ ஒருவழியில் அதை வேறொன்றாக மாற்றிக் கொடுத்தார்கள். அவர்களும் முறைத்து, சீறி, அழுது வேறுவழியின்றி வாங்கிக் கொண்டு உடன்பட்டார்கள். சமாதானம் செய்து கொண்டார்கள்.

மகாராஜா ஓட்டல் உரிமையாளரின் மகன் சதானந்தன் அப்படித்தான் சந்திரி அக்காவுடன் உறவிலிருந்தான். அவன் அவளை முதலில் பார்த்தபோது நான் உடனிருந்தேன். கோயிலில் என்னிடம்தான் அவள் யார் என்று கேட்டான். அவள் கணவன் திவாகரன் குடிகாரன், அவள் வீட்டிலேயே நெல்குற்றி கொடுத்துக் கொண்டிருந்தாள். சரியாக நான்காம் நாள் அவன் சைக்கிளில் சந்திரி அக்காவின் வீட்டுமுன் சென்று இறங்கி உள்ளே செல்வதை நானே கண்டேன்.

கயிறு பிரிக்கும் தொழிற்சாலை வைத்திருந்த ராகவப் பணிக்கர் அங்கே செல்லும் அத்தனைபெண்களையும் அடைந்தார். அம்மாவே ஒருமுறை பங்கஜவல்லியைப் பற்றி “நினைக்கவே இல்லை, இவளாவது பிடிச்சு நிப்பான்னு நினைச்சேன் சரி, பெண்ணாப் பிறந்தவ. பாவம்” என்றாள்.

அவ்வளவுதான். ஆனால் எனக்கு ஆனந்தவல்லி வேறொன்றாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. அல்லது அவள் நான் நம்பும் இன்னொரு காரணத்தைச் சொன்னால் கூட போதும். ஆகவே நான் ஒருநாள் ஆனந்தவல்லி வரும் பாதையில் சென்று நின்றேன்.

தூரத்தில் அவள் வந்துகொண்டிருந்தாள். முகத்தில் வழக்கமான இறுக்கம், உடலில் அதே குறுகல். முலைகள் வந்ததுமே இந்தப்பெண்கள் தோள்களை முன்னால் குறுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆகவே தோள்கள் படகுகள்போல ஆகிவிடுகின்றன. சினிமாக்களில்தான் அவற்றை உந்தி நடக்கிறார்கள்.

அவள் அருகே சென்றதும் நான் கனைத்தேன். அவள் திரும்பிப் பார்த்தாள். புன்னகைக்கவில்லை.

“ஒண்ணுமில்லை” என்று நான் சொன்னேன். “ஒரு சின்ன விசயம் பேசணும்”

அவள் பேசாமல் நின்றாள்.

“நீ சங்குவை லவ் செய்யுறியா?”

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

“அவன் உன்னை கட்டமாட்டான். அவன் பணக்காரன், சும்மாவாக்கும் சொல்லுதான்.”

“அவரு சத்தியம் செய்து குடுத்தாரு.”

நான் எரிச்சலடைந்து “அவன் இதேமாதிரி எவ்ளவு கேஸிலே மாட்டியிருக்கான் தெரியுமா?”

“அவரு மனம்திருந்தியாச்சு… இப்ப மரியாதைக்காரரா இருக்காரு… கையிலே தொட்டு சத்தியம் வைச்சு சொன்னாரு.”

நான் எரிச்சல் என் உடலெங்கும் பரவுவதை உணர்ந்தேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தேன். பிறகு “அவன் கைய வச்சாச்சுன்னு நீ அவன்கூட போறே” என்றேன்.

“வேற என்ன செய்ய? அவரு விடமாட்டாரு… அவருக்க கையிலே பணமிருக்கு. நாங்க ஏழைகளாக்கும்.”

“அப்ப அதாக்கும் சத்தியம், நீ பயப்படுதே”

அவள் கண்களில் கண்ணீர் வந்தது.

“நான் உன்னை திட்டல்ல” என்றேன்.

“எனக்க தலையெழுத்துமாதிரி ஆகட்டும்…” என்றபின் அவள் நடந்தாள்.

நான் சோர்ந்து நின்றபின் சென்று கல்வெர்ட் சுவரில் அமர்ந்துகொண்டேன். காற்று மரங்கள் வழியாக ஓடும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.

நெடுநேரம் கழித்து எழுந்தபோது என் மனமெங்கும் கசப்பு நிறைந்திருந்தது, ஆனால் என் அலைக்கழிப்பு நின்றுவிட்டிருந்தது. ஓர் இழப்பு அதன் விளைவான வெறுமை, அதுதான் இருந்தது.

[ 4 ]

மறுநாள் நான் வழக்கம்போல பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன். சங்குவை பார்ப்பதை தவிர்த்தேன். ஒருமுறை அவன் எதிரே வந்தான். “என்னடே, அந்த லெட்டரை என்ன செய்தே? வச்சிருக்கியா?” என்றான்.

“ஆமாம்” என்றேன்.

“வச்சுக்க… சில குட்டிகளுக்கு பிடிக்கும்” என்று சிரித்துக்கொண்டே சென்றான்.

அவனை பின்னால் ஓடிச்சென்று கல்லால் அறைந்து கொல்ல வேண்டும் என்று என்னுள் வெறி எழுந்தது.

அவனை மறக்கவும் அவன் இல்லாத உலகில் வாழவும் விரும்பினேன். ஆனால் அவனையே நினைத்துக் கொண்டும் இருந்தேன். அவன் வரும் போகும் எல்லா வழிகளையும் தவிர்த்தேன்.

சந்தையிலிருந்து ரேடியோக்கடை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது பின்னால் சைக்கிள் மணி ஓசை. திரும்பிப் பார்த்தேன். சங்கு புதிய சைக்கிளில் வந்து காலூன்றி நின்றிருந்தான். சைக்கிள் மெழுகுக்கருப்புடன் மின்னியது. ஏராளமான அலங்காரங்கள். கைப்பிடியில் தோலுறை. அதன்பின் குஞ்சலங்கள்.

“ஹெர்குலிஸாக்கும். இந்த வருசம் எறங்கினது…”

நான் அதை மோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் ஸ்டீல் பகுதிகள் தீட்டப்பட்ட வாள் போலவோ கண்ணாடியாலானவை போலவோ மின்னின. இரண்டு கண்ணாடிகள். குவிந்த கிண்ணம்போன்ற விளக்கு. பார்க்கப் பார்க்க எனக்கு பதற்றமாக இருந்தது.

“ஏப்ப வாங்கினே?” என்றேன்.

“நேற்று கையிலே கிடைச்சுது. சும்மா கிடைக்காது, புக்பண்ணி வச்சா ஆறுமாசமாவும். நான் நாகர்கோயிலுக்குப் போனேன். ஏஜெண்டுகிட்டே எனக்கு இப்பவே வேணும்னு சொன்னேன். அவனுக டூப்பு பேரிலே புக் பண்ணி வச்சிருப்பானுக. வெலை நாநூறு ரூபாய். எண்ணூறு குடுத்தா எடுன்னான். இந்தான்னு சொல்லி எடுத்தாச்சு…”

“ஏன் திடீர்னு?” என்றேன். எனக்கு அழுகையாக வந்தது. அவனை விட்டு ஓடவேண்டும் போலிருந்தது, ஆனால் சைக்கிளை தொடவேண்டும் என்றும் தோன்றியது.

“இவதான் சைக்கிளு சைக்கிளுன்னு சொல்லிட்டிருந்தா. அவளுக்கு சைக்கிள்மேலே ஒரு இது. நான் சைக்கிளிலே பாக்கப்போனப்பதான் முதல்தடவையா சிரிச்சா பாத்துக்க. முந்தாநாளு கேட்டுட்ட, இந்த சைக்கிள் உங்களுது இல்லியான்னு? என்ன சொல்ல? இரவல்னு சொன்னா நமக்கு என்ன மரியாதை? இல்ல, நமக்கு புதிய சைக்கிளு வீட்டிலே நிக்குது. இது சும்மா இங்க வாறதுக்காக இரவல் வாங்கினதுன்னு சொல்லியாச்சு. அப்டியே நாகர்கோயிலுக்கு பஸ் ஏறிட்டேன்.”

நான் சைக்கிள் ஹாண்டில்பார் மேல் கையை வைத்தேன். அவன் இயல்பாக என் கையை தட்டிவிட்டு “வாறேன் என்ன?” என்று ஏறி மணியோசை எழுப்பியபடி சென்றான்.

ஜங்ஷன் வழியாக ஒரு சைக்கிள் சென்றால் அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பார்கள். அவனுடைய சைக்கிள் சைக்கிளே அல்ல, அது ஒரு அழகான குதிரை. அவன் காற்றில் மிதந்து ஒழுகிச் சென்றான்.

உண்மைதான், காற்றில்தான் செல்கிறான். கந்தர்வர்கள் தேவர்கள் எல்லாரும் காற்றில்தான் செல்கிறார்கள். மற்றவர்கள் மண்ணில் நடக்கிறார்கள். அவர்கள் கந்தர்வர்களைக் கண்டு பதறி ஒதுங்குகிறார்கள். அவன் மக்களுக்குமேல் மிதந்து சென்று மறைவதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

[ 5 ]

நாலைந்து நாட்கள் கழித்து சங்கு என்னை என் வகுப்பில் தேடிவந்து வெளியே அழைத்தான். நான் சென்றதும் என் தோளில் கைபோட்டு ரகசியமாக “டேய் நீ நமக்கு ஒரு சகாயம் செய்யணும்” என்றான்.

“என்ன?” என்றேன். அவன் என் தோளில் கைபோட்டது வகுப்பில் என் அந்தஸ்தை நொடியில் கூட்டிவிட்டதை உணர்ந்தேன்.

“அவளை சைக்கிள் படிப்பிக்கணும்லே.”

“அவளுக்கா?” என்றேன்.

“ஆமாலே. அவ இன்னும் விளம்பித் தரல்ல கேட்டியா? நாலஞ்சு முத்தம், ஒண்ணுரெண்டு அமுக்கு அவ்ளவுதான். தோப்புக்கு வரச்சொன்னா பயப்படுதா. செரி, இணக்கி எடுக்கலாம்னு நினைச்சிட்டிருந்தப்ப சைக்கிள் பற்றி பேச்சுவந்தது. நீ வா உனக்கு நான் சொல்லித்தாறேன்னு சொன்னேன். அவளுக்கு சைக்கிளிலே ஒரு மோகம் உண்டுன்னு கணக்கு போட்டிருக்கேன் பாத்துக்க.”

“அவ சம்மதிச்சாளா?”

“இல்ல, பயந்தா. அம்மா ஆத்தான்னு சொன்னா. பொம்புளைங்க சைக்கிளோட்டுத படங்களை எல்லாம் காட்டி தைரியம் குடுத்தேன். வரமாட்டேன்னுதான் இப்பவும் சொல்லுதா. மீறி வந்திட்டாள்னா கதை செரியாயிடும்.”

“எப்டி?”

“ஏலே, நம்மூரிலே எவ சைக்கிளு விடுதா? சைக்கிளு ஓட்ட வாறான்னா என்ன அர்த்தம்? பசு வேலிகடந்து வந்தாச்சுன்னுதானே? இங்கபாரு, கணக்கா சொல்லுதேன் கேட்டுக்க. பொண்ணுக வேலிக்குள்ள இருப்பாளுக. வேலிய அவளுக எங்க உடைப்பாளுகன்னு சொல்லமுடியாது. சிலது சினிமாவுக்கு வரும். சிலது பைசா கேட்டு வாங்கும். எங்கயாவது ஒரு எடத்திலே வேலியை உடைச்சிட்டாள்னா பின்ன வேலியே இல்ல. தெருவுப்பசுவாக்கும். ஏறி கொளுவிப்போடலாம். இவ ஒரு திசைக்கும் வரமாட்டேங்குதா… பாத்தேன், இந்த சைக்கிள் ஒரு நல்ல ஏற்பாடாக்கும்… வந்தாள்னா வாசலை தெறந்தாச்சுன்னு அர்த்தம்.”

நான் பெருமூச்சுவிட்டேன். பிறகு “அந்தாலே கூட்டிட்டு போவியா?” என்றேன்.

“சேச்சே அப்டி வந்திட மாட்டா. முதல்நாள் நல்ல பயம் இருக்கும். படபடப்பா இருப்பா. நாலஞ்சுநாள் சைக்கிள் படிக்க வந்தா மெதுவா பயம்போயிரும்… அப்டியே கூட்டிட்டுப் போகவேண்டியதுதான்.”

“எங்க?”

“நம்ம ஏருமுட்டி தோட்டம் அந்தால களியல் ரோட்டிலேதான்” என்றான்.

நான் மீண்டும் பெருமூச்சுவிட்டேன்.

“நான் வெளையாடின பிறவு நீ வேணுமானா விளையாடுடே.”

“அய்யோ.”

“டேய், நான் விட்டுட்டா அவ அளுது உடைஞ்சு போயி இருப்பா. ஆறுதல் சொல்லுதேன்னு கைய நீட்டு… மட்டுமில்லை இந்த சங்கதிகள் அறிஞ்ச ஆளுமாக்கும் நீ. உன்னைய அவளாலே விடமுடியாது.”

“சீ” என்றேன்.

“என்ன சீ… எப்பவுமே அப்டித்தாண்டே. ரெண்டாவது போறவன் ஆரா இருந்தாலும் பாய்ஞ்சு பிடிச்சுக்கிடுவாளுக.”

நான் பேசாமல் நின்றேன்.

“செரி, வேண்டாம்னா விடு” என்றான் சங்கு. “நான் அவளுக்கு சைக்கிள் படிப்பிச்சு தாறேன்னு சொல்லியாச்சு… ஆனா என்னாலே தனியா சொல்லிக்குடுக்க முடியாது பாத்துக்க. எனக்கே நல்ல பேலன்ஸ் கிடையாது. சைக்கிளோட விழுந்தா மானக்கேடு. அதனாலதான் உன்னைய கூப்பிட வந்தேன்.. நீயும் கூட வா”

“எனக்கு சைக்கிள் தெரியாதே.”

“நீ என்ன ஓட்டவா போறே? நீ ஒருபக்கம் பிடி, நான் இன்னொரு பக்கம் பிடிக்கேன்… அப்ப விழமாட்டா.”

“ஆனா…”

“வாடே, நமக்கு இதுக்கு வேற கூட்டுகாரன்மாரு ஆரும் இல்லை…”

அவன் என் பையில் ஒரு ஐந்து ரூபாய் தாளை வைத்தான். நான் மகிழ்ந்து “வாறேன்” என்றேன்.

“நம்ம ஏருமுட்டி சாஸ்தா கோயில் இருக்குல்லா, அதுக்குப்பின்னாலே உள்ள இடைவழியிலயாக்கும். நீ அங்க வந்திரு. அங்க யாரும் இருக்க மாட்டாங்க.”

நான் பதற்றத்துடன் பள்ளிக்கூட வராந்தாவில் அலைந்தே அன்றைய பகலை போக்கினேன். நான்குமணிக்கு பள்ளி விட்டதும் புத்தகத்தை சந்திரன் கடையில் வீசிவிட்டு ஏருமுட்டி சாஸ்தா கோயிலுக்குச் சென்றேன்.

ஏருமுட்டி சாஸ்தா என்ற பெயர் அங்கே ஏரோட்டவே முடியாது என்பதிலிருந்து வந்தது. அங்கே  வயல்களில் வாழைதான் நடமுடியும். ஏனென்றால் ஒரு சாலைக்கு அப்பால் ஒரு அரைகிலோமீட்டர் அகலத்திற்கு முழுக்க காடு, பெரிய பெரிய மரங்கள். அவற்றின் வேர்கள் புடைத்தெழுந்தவை. ஏர் முட்டி நின்றுவிடும்.

காட்டுக்கும் வயலுக்கும் நடுவே உள்ள மண்சாலை நீண்டு திற்பரப்பு செல்லும். அந்தச் சாலையே அறுவடைக்கும் நடவுக்கும் மட்டும்தான். மற்ற நாட்களில் பாம்பு குறுக்கே சென்றுகொண்டிருக்கும்

நான் அங்கே சென்றபோது எவருமில்லை. ஒரு வேரில் அமர்ந்து காற்றின் ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு அந்த தருணம் வரை இருந்த பதற்றம் எதிர்பார்ப்பு எல்லாமே மறைந்துபோய் காற்றின் சீரான ஓசை ஒரு வகை அமைதியை உருவாக்கியது. என் கண்முன் இடையளவே ஆன வாழைக்கன்றுகளின் இலைகள் மடிந்து அடிப்பக்க வெளிறலைக் காட்டி கொப்பளித்தன. மழைக்கார் கொண்ட வானில் இளவெயில் பரவியிருந்தது. காற்றில் இதமான குளிர் இருந்தது.

என் எண்ணங்கள் ஒவ்வொன்றாக ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தன. இந்த பெண்ணும் ஆணும் என்ன செய்தால் எனக்கென்ன? இந்த உலகில் அத்தனைபேரும் இல்லாமலானாலும்கூட எனக்கென்ன? எனக்கு ஒன்றுமில்லை. நூறாண்டு கண்ட இந்த மரங்களுக்கு ஒன்றுமில்லை. நீலப்புகைக்குவியல்போல எழுந்து நின்றிருக்கும் அந்த கரடிமலைச் சிகரத்திற்கு ஒன்றுமில்லை. ஒன்றுமே இல்லை

என் தலை அசைந்தபோது தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டேன். வாயை துடைத்தபடி எழுந்து நின்றேன் தொலைவில் சைக்கிளை உருட்டிக்கொண்டு சங்கு வந்தான். அவனுடன் ஆனந்தவல்லி நீலநிறமான தாவணியின் முந்தானையால் தலையைச் சுற்றி மூடிக்கொண்டு தலைகுனிந்து வந்தாள். அத்தனை தொலைவிலேயே அவள் பம்மியும் பதுங்கியும் வருவது தெரிந்தது.

அருகே வந்ததும் சங்கு “ரொம்ப பயப்படுதாடே. சைக்கிள்னா என்ன பாவமா பழியா? ஒரு வெளையாட்டுதானே?” என்றான். “தாவணியை எடுத்து தலையை மூடிட்டு வாறா. இந்தப்பக்கம் அப்டி ஆரும் செய்யுறதில்லை. அதைப்பாத்தாலே வழியே போறவனும் நின்னு பாப்பான்”

“இங்க யாருமே இல்லியே” என்றேன்.

“ஆமா, அதைத்தான் சொல்லுதேன், கேட்டாத்தானே. செரி ஓட்டுவோமா?” என்றான் சங்கு.

“வேண்டாம்…” என்று ஆனந்தவல்லி சொன்னாள். அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள். மோவாயில் வியர்வை பனித்திருந்தது. அந்த நடுக்கம் உதடுகளில் மட்டுமல்ல, கன்னத்தில்கூட தெரிந்தது.

“என்ன வேண்டாம்? வேண்டாம்னு சொல்லுகதுக்கா வந்தே?” என்றான் சங்கு. “ஒரு பயமும் இல்லை. நான் சொல்லித்தாறேன் ஏறிக்க. இவனும் நானும் பிடிச்சுக்கிடுவோம். விழாம ஒரு ரவுண்டு ஓட்டினா காலு பழகிரும்.”

“வேண்டாம்” என்று அவள் அழுகைக்குரலில் சொன்னாள்.

“ஏறுடி.”

“நான் வீட்டுக்குப் போறேன்.”

“சீ ஏறுடி நாயே” என்று சங்கு கையை ஓங்கினான்.

அவள் நடுங்கி ,அடியை தடுக்கும்பொருட்டு பதுங்கி, பின்னர் கண்ணீர் வழிய தலை குனிந்தாள்.

“ஏறு” என்றான் சங்கு.

அவள் சைக்கிள் அருகே வந்து நின்றாள்.

“இந்தா இந்த ஹேண்டிலைப் பிடி. பார்வை நேரா இருக்கணும். பக்கவாட்டை பாக்கக்கூடாது. முன்சக்கரத்தை பாக்கக்கூடாது”

அவள் ஹேண்டில்பாரை பிடித்துக்கொண்டு கைகள் நடுங்க நின்றாள்.

“பாவாடையை காலுக்கு நடுவிலே செருகிக்க” என்றான் சங்கு.

அவள் தயங்க அவன் கையை அவள் பாவாடையில் வைத்தான்.

“ய்யோ.. நான் செய்யுதேன்…” என்று பதறி அவளே பாவாடையை செருகிக்கொண்டாள்.

“காலைத்தூக்கி அந்தாலே போடு.”

நான் நினைத்ததை விட எளிதாக அவள் ஏறி அமர்ந்துவிட்டாள்.

“நேராப் பாரு… நேராப் பாரு… இங்க பாரு, உடம்பை வளைக்கக்கூடாது. சைக்கிளை மிதிக்குதது உன் காலு மட்டும்தான். தொடைக்குமேலே  வேலையே இல்லை. அங்க உன் உடம்பு நேரா அசையாம இருக்கணும். தலையிலே ஒரு எலுமிச்சம் பழம் வைச்சா விழாம நிக்கணும், புரியுதா?”

அவளை நாங்கள் உந்திக்கொண்டு சென்றோம்.

“மிதி சுத்து… ஏட்டி சுத்துடீ.”

சைக்கிள் கொஞ்சமாக சரிந்து வயல்நோக்கிச் சென்றது.

அவள் “அய்யோ அய்யோ”என்றாள். சைக்கிள் சரிய நாங்கள் இருவரும் பிடித்துக்கொண்டோம். அவள் காலூன்றி நின்று மூச்சிரைத்தாள்

“வேண்டாம்” என்றாள். “எனக்கு பயமா இருக்கு.”

“இங்கபாரு, நீ ஒரு குருவீன்னு நினைச்சுக்க. வீட்டிலே குருவி கூடுகட்டுதத பாத்திருக்கேல்ல? குஞ்சு முட்டையிலே இருந்து வெளியே வந்து ரெண்டுநாள் கூட்டுக்குமேலே உக்காந்து பாத்துக்கிட்டே இருக்கும். பயந்து பயந்து சிறகை அடிக்கும்… அப்டியே ஒண்ணையும் நினைக்காம எந்திரிச்சு பாய்ஞ்சிடுச்சின்னா அவ்ளவுதான். சிறகு இருக்குன்னு தெரிஞ்சிரும். பறந்திரும்… பயந்துட்டு கூட்டிலே இருந்தா சிறகு இருக்கான்னே தெரியாது. பூனை புடிச்சு பன்னு மாதிரி தின்னிரும்.. புரியுதா?” என்றான் சங்கு.

அவள் தலையை அசைத்தாள்.

”மறுபடி ஓட்டு… பயப்படாதே. விழமாட்டே. காலை எடுத்திரக்கூடாது. பெடலிலே இருந்து காலு நவுந்திரக்கூடாது. மிதிச்சுட்டே இருக்கணும். நேராபாத்து நேரா உடம்பை வச்சுக்கிடணும்… இங்கபாரு, நீ நடக்கல்லை, சைக்கிளிலே போறேன்னு உன் மனசும் உடம்பும் புரிஞ்சுகிடணும்…அவ்ளவுதான்.”

சங்கு எப்போதுமே நன்றாகப் பேசுபவன். அவன் அன்று உற்சாகமாக வேறு இருந்தான். அறிவுரைகளாக வழங்கிக்கொண்டிருந்தான்.

“எதுக்கு பயருதே? நான் இருக்கேன்ல? நீ விழவே மாட்டே… ஓட்டு.”

மீண்டும் இருமுறை அவள் வயல்நோக்கிச் சென்றாள் ஆனால் கொஞ்சம் போய் திரும்பி வந்தோம். அவளுக்கு கொஞ்சம் கால்பழகியது போலத் தெரிந்தது.

“இப்ப நீ கொஞ்சம் வேகமா மிதிக்கே… நாங்க ஓடிவாறோம்.”

“ம்” என்றாள் அவள் நன்றாக வியர்த்திருந்தாள். கன்னத்தில் தலைமயிர் ஒட்டியிருந்தது.

அவள் மிதிக்க நாங்கள் பிடித்துக்கொண்டே சென்றோம். வேகம் கூடிவந்தது. சட்டென்று சங்குவின் கால் ஏதோ கல்லில் இடித்துக்கொள்ள அவன் “ஆ” என்று நின்றுவிட்டான்.

நான் “என்ன?” என்று திரும்பினேன். என் கையையும் விட்டுவிட்டேன்

சங்கு ‘டேய் பிடிடே பிடிடே” என்று கைநீட்டி கூவினான். அவன் காலில் ரத்தம் வந்தது.

சைக்கிள் சரிந்துகொண்டே வயல்நோக்கிச் சென்றது. ஆனால் ஆனந்தவல்லி அதை திருப்பினாள். மிதிப்பதை நிறுத்தவில்லை. சைக்கிள் மேலும் வேகம் கொள்ள அவள் இயல்பாக மிதித்தபடி தாவணி சிறகுபோல எழுந்து பறக்க சாலையின் மறுஎல்லையில் தெரிந்த வானத்தை நோக்கிச் சென்றள்.

“ஏ, ஓட்டுதா! ஓட்டுதா பாத்தியா!”

நான் திகைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றேன். அவள் அங்கிருந்து திரும்பி மிதித்தபடி விரைவாக வந்தாள். ஒரு பறவை நேர்முன்னால் பறந்து வருவதுபோல இருந்தது. நீலநிறப் பறவை.

அருகே வந்து காலை ஊன்றி அவள் புன்னகைத்தாள். அவள் அப்படி ஈறுதெரியச் சிரித்து அப்போதுதான் பார்த்தேன். அவள் வியர்வைக்கும் ஓர் இனிய மணம் இருந்தது.

“நல்லா ஓட்டுதே” என்றான் சங்கு. அவன் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்திருந்தான்.

அவள் “ஈஸியாக்கும்” என்றாள்.

“காலிலே ரெத்தம்” என்று நான் சங்குவின் காலைச் சுட்டிக்காட்டினேன்.

அவள் அதைப் பொருட்படுத்தாமல் “நான் இன்னொரு ரவுண்டு போறேன்” என்று மீண்டும் சைக்கிளில் ஏறிக்கொண்டாள். அது அவளுடன் இயல்பாக ஒத்திசைந்தது.

ரத்தம் வழிந்த விரலை இன்னொரு விரலால் மிதித்தபடி சங்கு “இவ ஆளு நினைச்ச மாதிரி இல்லடே” என்றான்.

[ 6 ]

அதற்குள் பதினொன்றாம் கிளாஸ் தேர்வுகள் வந்து, நான் மனப்பாட வெறியில் மூழ்கி, தேர்வை ஒருமாதிரி எழுதி மீண்டு வந்து, எம்ஜியாரின்  ‘நினைத்ததை முடிப்பவன்’ படம் பார்க்க கிருஷ்ணப்பிரியா தியேட்டருக்கு போய் இடைவேளையில் வெளியே வந்தபோது சங்கு ஆப்பரேட்டர் ரூம் அருகே சிகரெட் பிடிப்பதைக் கண்டேன்.

அருகே சென்று “படம் பாக்க வந்தியோ?” என்றேன்.

“ஆமடே, நசீர் படம் பிக்னிக் போட்டிருக்கான்னு சொன்னானுக. வந்தா இந்தப்படம். செரி, நமக்கு எம்ஜியாரும் ஒருமாதிரி பிடிக்கும்” என்றான்.

“பிக்னிக்கிலே நல்ல பாட்டு. கஸ்தூரி மணக்குந்நல்லோ காற்றே. எம்.கே அர்ஜுனன் மியூசிக்” என்றேன்.

“ஆமா, ஆனா அதைவிட நல்ல பாட்டு மத்ததாக்கும். வார்கண்ணெழுதி வனபுஷ்பம் சூடி… ” அவன் அதை ஒருமாதிரி முனகிப் பாடினான். “அர்ஜுனன் மாஸ்டர் பாட்டுன்னா சங்கீதமாக்கும்”

“நீ என்ன பாஸாயிடுவியா?”

“பாஸ் ஆயிரும்னு நினைக்கேன். நல்லா பிட் அடிச்சேன். நம்ம வாத்தியானுங்கதானே… அந்தாலே போவும்வேன்னு சொன்னா போயிடுவானுக… ஆனா பிட் அடிச்செல்லாம் ஃபஸ்ட் கிளாஸு வரமுடியாதுல்லா? அப்பா பிகாம் சேக்கணும்னு சொல்லுதாரு… எனக்கு அதெல்லாம் செரியாவாது. பிஏக்கு சேந்து ஒப்பேத்தணும்” என்றான் “நீ கசறி காய்ச்சி எடுத்திருப்பே”

நான் வெட்கத்துடன் “பாப்பம்” என்றேன்.

“நீ பிகாம் எடு மக்கா… அக்கவுண்டு படிச்சா நல்லதாக்கும்” என்றான் சங்கு “ஆடிட்டர் ஆனா நல்ல பைசாவாக்கும்.”

“மத்தவளை பாக்குதது உண்டா?” என்றேன்.

“ஆரை?”

“ஆனந்தவல்லியை?”

“அய்யோ அது பெரிய சீண்டிரம் பிடிச்ச கேஸா போச்சுடே. சொல்லுகதுக்கென்ன, அவளாலே நான் கண்ணீரு விட்டுட்டேன் பாத்துக்கோ.”

“ஏன்?”

“திடீர்னு ஒருநாளு இனி என்னைய பாக்க வரப்பிடாதுன்னு சொன்னா. வந்தா உனக்க அப்பன்கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லி மிரட்டினா. பயமுறுத்துறியடி நாயேன்னு ஒரு அடி குடுத்தேன். உன்னாணை மக்கா, அன்னைக்கே சாயங்காலம் வீட்டுக்கு வந்து நிக்குதா, அப்பாவைப் பாத்து கம்ப்ளெயிண்டு சொல்லுகதுக்கு. நான் ஓடிப்போயி கக்கூஸிலே நுழைஞ்சு கதவ மூடிட்டேன். செத்துப் பிளைச்சேன் பாத்துக்க. நல்ல வேளை அம்மை பாத்து கையிலே காலிலே விளுந்து கும்பிட்டு அனுப்பி வைச்சாங்க… அப்டியே மாறிட்டேன். சண்டாளி, நம்ம தலைய எடுத்திரப் பாத்தாடே… எனக்க அப்பன் கொலகாரப்பாவியாக்குமே… பொம்புளைப்பிள்ளைக்கு இப்டி அகங்காரம் ஆகுமா?”

“என்னலே ஆச்சு?” என்றேன். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, அதை மறைக்க முகத்தை திருப்பிக்கொண்டேன்.

“அது வேற ஐட்டம்லே… அதை நம்மாலே கணக்குபோட முடியல்ல பாத்துக்க. நாகத்தை சாரைன்னு நினைச்சுப்போட்டேன்.”

ஷோ தொடங்குவதற்கான மணி அடித்தது. நான் பெஞ்சுக்கும் அவன் நாற்காலிக்கும் சென்றோம். படம் பார்க்கையில் நான் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

[ 7 ]

மீண்டும் முப்பத்திரண்டு வருடம் கழித்து சங்குவின் மகன் திருமணத்தின்போது அவனிடம் ஆனந்தவல்லியைப் பற்றி பேச நேர்ந்தது. பலவிஷயங்களையும் பேசிவருகையில் அவனே கேட்டான் “ஏலே, நம்ம ஆனந்தவல்லியை ஞாபகம் இருக்கா?”

“ஆரு?” என்றேன்.

“ஏலே சைக்கிள் சொல்லிக்குடுத்தமே”

“ஆமா” என்றேன், நினைவுகூர்ந்து.

“அவ இப்ப குழித்துறையிலே பி.டி.ஒ தெரியுமா? அப்பவே அவ நல்ல படிப்பாக்கும். பரிச்சை எளுதி எளுதி மேலே போயிட்டா. நமக்கு தொடர்பு இல்லையில்லா? ஒரு சின்ன பெர்மிஷன் விசயமா பாக்கப்போனேன். அங்கபோயி முன்னாலே நின்னப்பதான் தெரியுது, ஆளு இவளாக்கும். கண்ணாடியெல்லாம் போட்டிருக்கா. கட்டினவன் கேரள சர்வீஸிலே எலக்ட்ரிசிடி போர்டிலே  சீஃப் எஞ்சீனியராம். நமக்கு ஆளைத் தெரியல்ல. உக்காரச்சொல்லி பேசிட்டிருக்கிறப்ப அவதான் என்னையை அடையாளம் கண்டு கணிக்குன்று பண்ணையாரில்ல, எப்டி இருக்கீக, சௌக்கியமான்னு கேட்டா.”

“அய்யோ” என்றேன்.

“நான் சொன்னேன், தொழிலும் வியாபாரமுமா இப்டியே போயிட்டிருக்கு. சுகரு பிரஷரு எல்லாம் இருக்கே. பிள்ளைகளுக்க படிப்பு, வேலைகளை பத்தி பேசிக்கிட்டோம். ஆனா ஒண்ணுடே, நல்ல குட்டியாக்கும். எனக்கு வேண்டியதை செய்து குடுத்தா. ஒரு பைசா வாங்கல்ல” என்று சொல்லி ரகசியமாக  “ஒரு பதினஞ்சாயிரம் ரூபா லஞ்சப்பணம் நம்ம கணக்கிலே லாபம்னு வை” என்றான்.

“அப்ப அவளுக்கு ஞாபகம் இருக்கு” என்றேன்.

“ஞாபகம் இருக்கான்னா, உன்னைப்பத்திக் கூட கேட்டா. டேய் நாம சைக்கிளு படிப்பிச்சதைப் பத்தியும் சொன்னா. அவ அப்பவே செகண்டு ஹாண்டு சைக்கிள் வாங்கிட்டாள்ல? அதிலேல்லா மார்த்தாண்டம் வரை கலேஜுக்குப்போயி படிச்சா” என்றான் சங்கு “இப்ப காரு வச்சிருக்கா. செவெப்பு மாருதி காரு. திருவனந்தபுரத்திலே இருந்து அவளே ஓட்டிட்டு வாறாளாம். அவ்ளவுதூரமான்னு கேட்டேன். ஒருமணிக்கூர்லே வந்திருவேன்னு சொன்னா. டிரைவர் இல்லியான்னு கேட்டேன். நாம ஓட்டுனாத்தான் அதிலே ஒரு சுதந்திரம்னு சொன்னா… அருமையான பொம்புளையாக்கும். பாக்க அப்டி கெம்பீரமா இருக்கா… உனக்கு என்னமாம் பிடிஓ ஆபீஸிலே வேலையிருந்தா சொல்லு. செய்வா”,

***

முந்தைய கட்டுரைகதைகள் பற்றி- விஷ்வக்சேனன்
அடுத்த கட்டுரைஆமை, அருள்- கடிதங்கள்