தங்கப்புத்தகம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

அன்புள்ள ஜெ

தங்கப்புத்தகம் கதையை வாசித்தேன். பௌத்தப் பின்னணியில் எழுதப்பட்டிருந்தாலும் அடிப்படையில் அது வேதாந்தக் கதை. வேதாந்தத்தில் பிரம்மம் அறிதற்கு அப்பாற்பட்டது. பிரம்மஸ்வரூபமான பிரபஞ்சமும் சரி, அதன் எந்த ஒரு பொருளும் சரி, அறிவுக்கு அப்பாற்பட்டவை. நாம் அறிவதெல்லாம் அறிவு ஒன்றையே என்று நாராயணகுருவும் சொல்கிறார்.

நாம் நம் ஆணவம் கலக்காமல் அல்லது நம்முடையை தேவையோ பயமோ கலக்காமல் எதையும் அறியமுடியாது. நாம் அறிவதெல்லாம் நம் அறியும் சாத்தியங்களுக்குள் நின்றுகொண்டுதான். மானுட அறிவேகூட மானுடனால் எதை அறியமுடியுமோ அதுதான். அந்த எல்லைதான்.

அந்தப் புத்தகம் பிரம்மம் என்றால் அதன் பிரதிகளை உருவாக்குவது மாயை. மாயை கலக்காமல் அந்த பிரம்மத்தை அணுகவே முடியாது. மாயையை முடிவில்லாமல் உருவாக்கி அந்தப்புத்தகம் அங்கே இருக்கிறது. அது மாயைக்கு அப்பாற்பட்டும் அமைந்துள்ளது. அது தொடப்படுவதே இல்லை

ஆனால் அது உருவாக்கும் அந்த நகல்களும் அதுதான். அதை அறிந்தாலே பிரம்மத்தை அறிந்ததுதான். ஆகவேதான் முக்தா தன்னிடமிருப்பதும் மூலநூலே என்று சொல்கிறார்

ஆர்.ராஜசேகர்

***

அன்புநிறை ஜெ,

நலமாக இருக்கிறீர்களா?

என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. தங்கப் புத்தகம் வாசித்தேன் – இவ்வரியே முழுமையான உறுதியுடன் எழுத முடியவில்லை. எனது பிரதியைத்தானே வாசித்திருக்க முடியும்.

கதையை வாசிக்க முதலில் வெண்முரசு மனதில் வந்தது. காலம் காலமாக சொல்லப்படும் கதை, மீண்டும் அதை எழுதுவதில் என்ன இருக்கிறது என்ற எதையுமே வாசிக்காத தரப்பின் கூக்குரல்கள்.

அது மீண்டும் மீண்டும் எழுத எழுத வேறு வேறு உரு காட்டி தான் வேறொன்றாகி நிற்கும் மெய்மை. முதல் வியாசனுக்கும் மாயம் காட்டி எங்கோ இருக்கும் அந்த மூலம். எழுத்தென எழுந்த பிறகும் ஒவ்வொரு வாசகரும் தன் வாசிப்பில் சென்றடைந்த அத்தனை ஆயிரம் பிரதிகள். உள்ளே இறங்க சரியான தெரிவுகள் இருந்தால் மட்டுமே அதைக் காணவாவது நேரும்.  மேலேறி அகன்று செல்லும் பாதை திறந்தே கிடக்கிறது. உள்முகமாகச் செல்லத்தான் சரியான தெரிவுகளும் வழிகாட்டியும் தேவை.

பின்னர் தோன்றியது வெண்முரசு என்றல்ல எழுத்தென எழுதிய தவம் அனைத்துமே மீண்டும் மீண்டும் அந்தத் தங்கப் புத்தகத்தை நகல் எடுக்கும் முயற்சிகள்தானா? அதை வாசித்து அறியும் ஒவ்வொருவரும் அவரவரையே நகல் எடுத்துக் கொண்டிருக்கிறோம். எனில் எத்தனை எத்தனை அறம், எவ்வளவு வெண்முரசுகள், எத்தனை ஆயிரம் புனைவுக் களியாட்டுகள், கதைத் திருவிழாக்கள்.

சரியான தெரிவுகள் மட்டுமே இலக்கு நோக்கி இட்டுச் செல்லும். அது கனவுகளில் உரியதைத் தெரிவு செய்வதில், வழித்துணையை தெரிவு செய்வதிலிருந்து தொடங்கிவிடுகிறது. இறுதியாக ஒன்றுமே இல்லை என நம்பச் செய்யும் ஞானத்தின் எளிமை ஒரு எல்லையிலும், மிகச் சிக்கலான விளையாட்டென ஆற்றல் மறுமுனையிலும் ஆடி ஆடி மையம் கொள்ளும் துலாமுனை.

எல்லையற்ற ஆற்றலும் எல்லையற்ற ஞானமும் முயங்கும் அப்புள்ளிஅங்கே அமைந்து விட இயல வேண்டும், விலகி விட முடிய வேண்டும். இன்றேல் முடிவற்ற பிலம்தான்.

இக்குகையுறை  நாட்களிலும் மீண்டும் மீண்டும் அந்த மலைவெளிகளில் திரிய தங்கள் எழுத்துக்களே துணை.

மிக்க அன்புடன்,

சுபா

***

அன்புள்ள ஜெ

நலம்தானே?

தங்கப்புத்தகம் சுழற்றிச்சுழற்றிக் கொண்டுபோகும் கதை. உருவகக்கதை. அந்த உருவகம் முக்கியமானது. ஆனால் அதைக்காட்டிலும் அதனுடன் இணைந்துள்ள பலவகையான உணர்ச்சிகளைச் சொல்லியிருக்கும் விதமும் அந்த உணர்ச்சிகளை இயற்கைமேல் ஏற்றியிருக்கும் விதமும்தான் அதை கதையழகு கொண்டதாக ஆக்குகிறது. அவர் மலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி, அந்த மலைகள் ஒரு சிம்பனி போல தோன்றி அரங்கிலே நிறைந்து மறைவது, அற்புதமான விவரிப்பு. அதுதான் அந்தக்கதையின் சாராம்சத்தைக் காட்டுவதாகவும் இருக்கிறது

மகேஷ்

***

அன்புள்ள ஜெ,

உங்களுடைய தங்கப்புத்தகம் குறுநாவலை வாசித்தேன்.

மூலநூல்களையும் அதன் வழி வரும் பாடபேதங்களையும் நாம் அணுகும் முறை கொண்டு உருவான கதை என்றே இதைக் கருதுகிறேன். முக்தாவின் கனவைக் கொண்டு இது ஒரு சாகசத்தன்மை மீதுரப்பெற்றுள்ள படைப்பாகவும்  எண்ணலாம்.

மனம்போன போக்கில் புரிந்து கொள்வதைப் பாடபேதம் என்று கூறுவர்கள். அதற்குள் வாசகன் மட்டுமே இருப்பான். இக்கதையும் அப்படியான ஒன்றுதான். அந்த இரண்டு வாசகர்கள் பற்றிய கதை இது. பாட் உம் முக்தாவும்.

இக்கதையை இலக்கியம் பற்றிய புரிதலும் சித்தாந்தங்களின் சிறிய அறிமுகங்களும் இல்லாதவர்கள் வாசிக்காமல் விடுவது நல்லது என்றே தோன்றுகிறது. இதற்குள் உள்நுழைவது மிகச்சிரமமாக இருக்கும். உங்கள் கதைகளுடன் உரையாடத் தகுதி வேண்டும் என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம்.

திபேத் என்ற பீடபூமியை ஆக்கிரமிக்க பிரிட்டிஷ், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நீண்டகாலமாகவே விரும்பின. அதற்குள் ஒற்றர்களை அனுப்பி அதன் சமூக-அரசியல்-புவியியல் நிலைப்பாடுகளை அறிய முயன்றனர். எனினும் அதன் ஞான மரபுகளை யாராலும் திருட முடியவில்லை. களவு போகாத பொக்கிஷமாக நிலைத்து நின்றது.

மதங்களையும் சித்தாந்தங்களையும் விமர்சனம் செய்யும் வடிகாலாகவும் இக்கதையை அணுகலாம்.

உதாரணமாகக் கம்யூனிசத்தின் மூல நூலான கார்ல் மார்க்ஸின் மூலதனம் என்ற நூலை வெறும் ஆணவங்களை மோதவிட்டு பொய்யைப் பிரம்மாண்டமாக கட்டி எழுப்பியிருக்கிற ஒன்றாகவே இக்கதையின் ஓரிடத்தில் கூறப்படுகிறது. உண்மையும் அதுதான்.

முக்தா என்பவர் திபெத் சென்றிருந்தார். அங்கு ஆஸ்ரமத்தில் இருக்கும்போது கனவில் ஒரு தங்கப்புத்தகத்தைக்  காண்கிறார். அந்நூலை அடைவதற்கு முக்தாவும் பாட் என்கிற ரஷ்ய உளவாளியும் முனைகின்றனர். அதன் ஒரு பக்கமே ஓராயிரம் அர்த்தங்களாக விரிவுறுகிறது. அந்த மூல நூல் முடிவில்லாத ஒன்றாக அமைகிறது. பாடபேதமே உருவாக்க முடியாத நூல் ஒன்று என்பதை அவர் மிகத் தாமதமாகவே உணர்கிறார்.

“மனிதனின் அகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் எந்தப்பொருளும் கொலைக்கருவியாகக் கூடும். உதாரணமாக, தன் நினைவின் மீதான நம்பிக்கை மனிதனுக்கு தீங்கு விளைவிப்பது. ஆனால் ஒரு சுழல்வழிப்பாதை அந்நம்பிக்கையைக் கொண்டே அவனைக் கொன்றுவிடும்… இந்த இடமும் இந்த புத்தகமும் அப்படிப்பட்டவை” என்று கதையில் ஒரு உரையாடல் வருகிறது. இக்கதையின் மிக முக்கியமான உரையாடல் பகுதி இதுவாகும். தங்கப்புத்தகம் பற்றிய உண்மையான கருத்து இது.

ஆனால் அவருடன் கூட இருக்கும் ரஷ்ய உளவாளி அந்த நூலை அப்படியே எடுத்துக் கொண்டு செல்ல முனைகிறான். அவன் திரும்பமுடியாத பாதாளத்தில் அகப்பட்டு காணாமல் போகிறான். முக்தா பூரணமாகாத பாடபேதங்களுடன் பழைய ஆஸ்ரமம் திரும்புகிறார்.

“நம்மால் வெறும்வெளியில் ஒரு நூலை உருவாக்கிக் கொள்ளமுடியாது என்று நினைக்கிறேன். முன்பே ஒரு நூல் இருக்கவேண்டும். அதை நாம் கனவு காணவேண்டும். அதைத்தேடி வரவேண்டும். அரியபொக்கிஷம் போல அடையவேண்டும். அதை அணுவணுவாக நகல்செய்தோம் என்று நாம் நம்பவேண்டும். அதை வழிபடவேண்டும். அதைத்தான் நாம் உலகுக்குச் சொல்லமுடியும்”

இக்கதையின் மிகப் பெரிய அர்த்தமாகத் திருப்தியின்மை அல்லது முடிவின்மை  முன்வைக்கப்படுகிறது. அது கற்றலின் தேடலின்  ஊழ்கத்தின் முடிவின்மை என்று நாம் கருதலாம்.

சமகாலநூல்களை மட்டுமே படிக்கும் ஒருவனைப்போல மடையனையே நாம் பார்க்கமுடியாது. அவன் அலைகளை மட்டுமே கண்டு கடலை அறியாதவன் என்றும் கூறுகிறார். நிச்சயமாக இக்கதை ஜெயமோகனின் மிகச்சிறந்த குறுநாவல்களில் ஒன்று என்றே கருதமுடியும். இக்கதையைக் கூட தங்கப்புத்தகம் போல பல திசைகளில் இருந்து உருவாகும் முடிவின்மைக்குள் வகைப்படுத்தலாம்.

நள்ளிரவு வாசிக்கத் தொடங்கிய கதை இரண்டு மணிக்குள் முடித்து விட்டேன். வழக்கமாகக் கதைகளைப் print எடுத்து விட்டே பின்பு ஆறுதலாக வாசிப்பேன். ஆனால் நள்ளிரவில் print எடுப்பது வீட்டில் தூங்குவோரின் தூக்கத்தைக் கெடுக்கும் என்பதால் Tab மூலம்  வாசித்துவிட்டேன்.

இக்குறுநாவலின் கரு உங்கள் பத்தாயிரம் கிலோமீட்டர் பயணங்களால் ஆனது என்பதை நினைத்துக்கொண்டே தூங்கிவிட்டேன். இது உங்கள் கதைச் சன்னதத்தின் மற்றுமொரு தங்கப்படைப்பு.

சுயாந்தன். 

முந்தைய கட்டுரைவேணு வேட்ராயனுக்கு குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது
அடுத்த கட்டுரைசெய்தி- கடிதங்கள்