தங்கப்புத்தகம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

அன்புள்ள ஜெ,

தங்கப்புத்தகம் கதை வாசித்தேன். கூடு,கரு உட்பட இந்தக்கதைகளுக்கெல்லாம் ஒரு ‘பேட்டர்ன்’ உள்ளது. முதலில் கொஞ்சம் வேடிக்கை கலந்த ஒரு தத்துவவிவாதம், அதிலிருந்து ஒரு கதை, அந்தக்கதையே சாகசமாகவும் உருவகமாகவும் இருக்கும். அந்த தத்துவ விவாதத்தின் விளக்கமாகவோ விரிவாக்கமாகவோ கதை அமைவதில்லை. கதைக்கு அது ஒரு பிளாட்ஃபார்ம் மட்டும்தான். அங்கிருந்து கதை விரிந்து விரிந்து வேறுவேறு இடங்களுக்குச் செல்கிறது. கரு, கூடு எல்லாமே அப்படி எங்கோ சென்று நின்று அந்த தத்துவ விவாதத்தை ‘திரும்பிப்பார்க்கும்’ கதைகளாக அமைந்திருக்கினன.

தங்கப்புத்தகம் பாடபேதம் என்பதைப் பற்றிச் சொல்கிறது. மூலநூல் என்று ஒன்று இருந்தால் அதை பிரதியெடுக்க முடியுமா என்று பேசுகிறது. முடிவில்லாத நகல்களை உருவாக்கும் மூலநூல் ஒன்றைச் சொல்லி உலகிலுள்ள எல்லா மூலநூல்களும் அத்தகையவைதான் என்று கூறுகிறது. ஆனால் உண்மையில் மூலநூல் என்பது அதுதானா? இல்லை என்றே கதை முடிகிறது. மூலநூல் உன்னிடம் உள்ளதா, அது உலகனைத்துக்கும் பொதுவானதா என்று கேட்கப்படும்போது முக்தா கடைசியில் ஆமாம் என்றுதான் பதில் சொல்கிறார்

மகாதேவன்

***

அன்புள்ள ஜெ,

தங்கபுத்தகம் குறுநாவல் வாசித்தேன். ஒவ்வொரு முறையும் எடுக்கப்படும் பிரதிகள் மாறுவதை எப்படி புரிந்து கொண்டேன்னா அந்த தங்க புத்தகத்தை கடலாக அதிலிருக்கும் வார்த்தைகளை அலைகளாக உருவகித்து கொண்டேன்,  அலைகளை கணநேரத்திற்கொருமுறை அதன் வடிவம் மாறிவிடுமென்பதால் ! முக்தா அதன் மாற்றத்திலிருக்கும் சூத்திரத்தை அறிந்து கொள்ள முயல்வதை கூட அலைகளை உருவாக்கும் காற்றின் இயக்கத்தினை அட்டவணை படுத்துகிறார் என்று எண்ணிக்கொண்டேன் படித்து வரும்போது அவரை சுனாமி தாக்கும் நிகழ்வு வர போகிறது என்று எண்ணி கொண்டேன் :)

உண்மையில் இந்த கதையை அதன் நேரடி அர்த்தத்திற்குள் சென்று புரிந்து கொள்வது எல்லாம் எனக்கு கடினம் சார்,  அதற்கு நான் நிறைய எல்லா விதங்களிலும் பயணிக்கணும்.

இந்த குறுநாவலில் வந்த தெய்வங்கள் பெயர்கள் எல்லாம் இணையத்தில் தேடி புகைப்படங்களை பார்த்தேன், வஜ்ரயோகினி,  palden lhama என ஒரு சில மற்றும் கிடைக்கல,  இது ஒரு புது உலகம் என தோன்றியது, முன்பு உங்கள் தளத்தில் வந்த பயணக்கட்டுரைகளில் இந்த தெய்வங்களின் படங்களை பார்த்திருக்கேன்,  ஆனால் இப்போது இந்த திபெத்திய பவுத்த உலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவல் வருகிறது.  இந்த தங்க புத்தகத்தில் உள்ளவைகளாக வருகிற வஜ்ராயன 7 அடிப்படைகள், அந்த அபிதாசர், வெஜ்  பற்றி எல்லாம் உள்ள இந்த நூல் படித்து இந்த உலகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன், இதன் தமிழாக்கம் இருக்குமோ என்றுகூட யோசித்து பார்த்தேன்.

சார்,  நித்ய சைதன்ய யதியின் உபநிஷ விளக்க நூலில் சம்பூதி, அசம்பூதி பற்றி விளக்குகிறார், ஒருவர் பல்லாயிரம் வருட மனித வாழ்க்கையில்,  பிரபஞ்சதில் மாற்றத்தை செலுத்திவிட கூடிய ஆற்றல் மனிதனுக்குள் இருக்கிறது என்கிறார், நல்ல சம்பூதியின் விளைவாக பசுமை புரட்சியை சுட்டிக்காட்டுகிறார்,  தீய சம்பூதியின் விளைவாக அணுஆயுத விஷயங்களை சுட்டிக்காட்டுகிறார், அதில் வளராத நாடுகள் அணுஆயுத விஷயங்களில் இருக்கும் அசம்பூதி நிலையை நல்ல விஷயமாக கூட சுட்டி காட்டுகிறார். தாவரங்களின் இயற்கையான பரிணாம வளர்ச்சியில் இடையில் புகுந்து மரபணு மாற்றம் செய்து நமக்கேற்ப மாற்றுவதை கூட தீய சம்பூதியாக சொல்கிறார் என்றுதான் ஞாபகம்.  சார் உங்கள் எழுத்து வேகத்தை, தரத்தை நல்ல சம்பூதியின், மனித ஆற்றலின் உச்சத்தை காட்டும் எடுத்துக்காட்டாகவே வாய்பிளந்து பார்க்கிறேன்,  நல்லவேளை நீங்கள் எதுவும் தீவிரவாத குழுவுக்குள் செல்லவில்லை !

ராதாகிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெ

நலம்தானே? நானும் நலமே

விஷ்ணுபுரம் நாவலில் ஒரு அழகான வரி வரும். ‘சீடா ஞானமென்பதே முடிவில்லாத பாடபேதங்களின் வரிசைதானே?’. நூல்களை வாசிக்க வாசிக்க அந்த எண்ணம்தான் வலுவாக எழும். உரைகளால் ஆனதே அறிவுத்துறை. குரானுக்கும் பைபிளுக்கும் கீதைக்கும் மட்டும் அல்ல ஷேக்ஸ்பியருக்கும் உரைகள்தான் நிறைந்திருக்கின்றன. உரைகள் எல்லாமே பாடபேதங்கள்தான்

சத்யமூர்த்தி எஸ்

***

அன்புக்கும், மதிப்புக்குமுரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

ஒரு மொழிபெயர்ப்பாளனின் உள்ளத்தை ஒருவனால்  ஊடுருவிச் சென்று அவனது ஆன்ம ஆழத்தை எட்ட முடியுமா? தங்கப்புத்தகம் என் நம்பிக்கைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்துவிட்டது. ஹரிவம்சம் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். தங்கப்புத்தகம் என்ற தலைப்பைக் கண்டவுடனேயே,”அஃது என்ன தங்கப் புத்தகம்?” என்ற ஓர் உணர்வு மேற்கொண்டு மொழிபெயர்க்கவி்டாமல் “போ! படி!” என்றது. முக்தாவின் கனவைப் போலத்தான்.

நேற்றிரவு 2 மணிக்குப் படிக்கத் தொடங்கினேன் என்று நினைக்கிறேன். இப்போதும் மூன்றாவது முறையாகப் படிக்கிறேன்.. இன்னும் என்னை நானே உணர முடியாதது ஏதேனும் இருக்கிறதா என்று தேடிக் கொண்டே இருக்கிறேன். இப்போது என்னால் ஒன்று மட்டுந்தான் சொல்லமுடிகிறது “உங்கள் கைகள் பொற்கைகள்”. குட்டுப்பட்டாலும், அணைக்கப்பட்டாலும் அடைவது மோட்சம்தான். காய்த்த மரம்தான் கல்லடி படும். நீங்கள் தொடர்ந்து கல்லடி படுவதில் வியப்பேதுமில்லை.

“நூல்களில் இருந்து பெற்ற சொற்களை நாம் நம் ஆழத்தில் புதைக்க வேண்டும். புதைக்கப்படாத விதை முளைப்பதில்லை. நூலில் இருந்து அமைதியைப் பெற்றுக் கொண்டவனே உண்மையில் அந்நூலைச் சென்றடைந்தவன்.”, “அலைகளை மட்டுமே கண்டு கடலை அறியாதவன்” எனத் தொடக்கத்தில் சொல்லப்படும் இந்தச் சொற்கள் இந்தக் குறுநாவல் முழுவதும் தொடர்ந்து பயணிக்கின்றன.

கனவுகளின் மெய்ம்மையைச் சுட்டிக் கண்ணாடி போலப் பிரதிபலிக்கிறீர்கள்.

அன்புடன்

செ.அருட்செல்வப்பேரரசன்

[email protected]

http://mahabharatham.arasan.info
https://www.facebook.com/arulselva.perarasan
https://www.facebook.com/tamilmahabharatham

முந்தைய கட்டுரைகதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]
அடுத்த கட்டுரைசாதியமும் புரட்சிகரமும்