ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்
அன்புள்ள ஜெமோ,
கீழ்க்கண்ட குறிப்பு முருகானந்தம் ராமசாமி அவர்களால் எழுதப்பட்டது. இந்த விவகாரத்தில் மிக நிதானமாக எழுதப்பட்ட குறிப்பு இது என்பது என் எண்ணம். என்னுடைய கருத்துக்களும் இதுவே. உங்கள்மேல் கண்மூடித்தனமான காழ்ப்புடன், அதை மட்டுமே வைத்து பிரச்சினையை அணுகுபவர்களையே இணையத்தில் பார்க்கிறேன். அந்த பட்டியலில் நான் இல்லை. ஆனால் இது என்னுடைய கருத்து என்பதைச் சொல்லவிரும்புகிறேன்
எஸ்.டி.செந்தில்குமார்
ஜெயமோகன் – பா.செயப்பிரகாசம் ஆகியோருக்கிடையிலான சர்ச்சை பரஸ்பரம் வழக்கு தொடுப்பதான அறிவிக்கைகளுடன் சூடுபிடித்திருக்கிறது.. பா.செ.வை விமர்சிக்கும் பெயரற்ற ஒரு கடிதத்தை ஜெ.தனது இணையதளத்தில் பிரசுரித்திருந்தார். சமகாலத்தில் ஒரே மொழிச்சூழலில் செயல்படும் எழுத்தாளரை பெயர் குறிப்பிட்டு விமர்சிக்கும் கடிதத்தை பெயரின்றி பிரசுரிப்பதை ஜெ.மோ தவிர்த்திருக்க வேண்டும்.. பெயர்கூட வெளியிட துணிவற்ற ஒருவர் கருத்தியல் செயல்பாடுகளில் பங்கேற்று என்ன கிழிக்க போகிறார்..? மேலும் பா.செ.தன்மீதான விமர்சனத்தை மறுத்து எழுதினால் யாரை நோக்கி எழுதுவது..? கடிதம் எழுதியவரை நோக்கியா.? வெளியிட்டவரை நோக்கியா..? இல்லை சுவரை பார்த்து பேசிக்கொள்வதா..? என்பது கேள்வி.. பா.செயப்பிரகாசத்திற்கு ஆதரவாக வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கைக்கு ஏதேனும் பொருள் உண்டென்றால் மேற்குறிப்பிட்டநியாயமே.
மற்றபடி பா.செயப்பிரகாசத்தின் அதிகார எதிர்ப்பு புரட்சிகளை பற்றிய பிலாக்கனங்கள் அபத்தமானவையும், உள்ளீடற்றவையும் என்பதே எனது தரப்பு.. பா.செ. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதன் பலனாக மக்கள் தொடர்பு அலுவலர் பதவியை பெற்றுக்கொண்ட தினத்திலிருந்து இந்த அதிகார அமைப்பின் ஒரு பகுதியாக ஆகி அதிகாரத்தின் அத்தனை நெளிவுசுழிவுகளுக்கும் வளைந்து கொடுத்து சமத்காரமான லொளகீக வாழ்வை அமைத்துக்கொண்டவர்..
அவர் பதவிக்காலத்தில் அரசு எனும் அதிகார நிறுவனத்தில் நிகழும் அத்தனை அறமீறல்கள் சட்டமீறல்கள் முறைகேடுகள் அனைத்தையும் முனகல்கூட இன்றி கடந்தவர்.. எழுத்துக்களில் மட்டுமே அதிகார எதிர்ப்பு அரசியல் பேசியவர்..அதிகார அமைப்பின் அத்தனை சவுகர்யங்களிலும் திளைத்துக்கொண்டு குண்டூசியளவு இழப்பைக்கூட அடையாதவர்.சமூகத்தில் எளியவர்களின நலன் பொருட்டு அதிகாரத்துடன் ஓயாமல் மோதிச்சிதைந்து போன லட்சியவாத ஊழியர்களை கண்டிருக்கும் ஒருவர் பா.செ போன்றவர்களின் அதிகார எதிர்ப்பு அதிகாரமாளிகையின் திருஷ்டி பொம்மைக்கு ஒப்பானது என்பதை உணர்வார்..
மேம்போக்கான எதார்த்தவாதம், உடன் ஆங்காங்கு புரட்சித்தூவல்கள், தவிர பா.செ. எழுத்துக்களில் மெய்நோக்கை உணர முடித்ததேயில்லை. ஒப்புநோக்க இதே வகையிலான சு.சமுத்திரம் ராஜம்கிருஷ்ணன் ஆகியாரிடம் வெளிப்படும் அநீதிக்கெதிரான ஆவேசம் கூட பா.செ.விடம் இருக்காது.எனவே அந்த கூட்டறிக்கை முன்வைக்கும் பா.செ.குறித்த மிகைபிம்பம் அர்த்தமற்றது..
இறுதியாக இருதரப்பும் வழக்கு தொடர்வது பற்றி பேசுகிறார்கள்..எந்த வகையிலும் கருத்தியல் செயல்பாடுகளை அளக்கும் பொறுப்பை அதிகாரத்திடம் அளிப்பது தவறானது.. இது அடிப்படையில் எழுத்தின் ஆதார நோக்கத்தையே சிதைப்பது..எல்லா நிலைகளிலும் கருத்திற்கான மறுப்பு என்பது விசையுடன் முன்வைக்கப்படும்எதிர்வினையே தவிர வழக்கு அல்ல.. இன்று தங்களுக்குள் ஏற்படும் முரண்பாட்டை வழக்கின் மூலம் எதிர்கொள்ள முற்படும் எழுத்தாளர்கள் படைப்பின் உள்ளடக்கமாக என்ன இருக்க வேண்டும் ? என்பதை தங்கள் அரசியல் கோணங்களில் தீர்மானிக்கத்திரியும் குண்டர்களுக்கே வலிமை சேர்க்கிறார்கள்..! நாளை எழுத்திற்கான தணிக்கையை அதிகாரம் எடுத்துக்கொள்ள வழிசமைக்கிறார்கள்..! இதை தவிர்ப்பதே அவர்கள் சுதந்திரமான கருத்துச்சூழலுக்கும், விழிப்புள்ள குடிமைச்சமூகத்திற்கும் ஆற்றும் நன்மையாக இருக்க முடியும்..
***
அன்புள்ள செந்தில்
முருகானந்தம் அவருடைய தரப்பைச் சொல்லியிருக்கிறார்.
இதைப்பேசும் ஒவ்வொருவரிடமும் நான் சொல்லவிருப்பது ஒன்றே, எந்த எழுத்துக்கு எதிராகவும் எந்த அதிகார அமைப்பையும் நான் நாடியதில்லை. சில மனிதஉரிமைக்குழுக்களின் பின்புலத்துடன் சட்டநடவடிக்கை என்று பூச்சாண்டி காட்டியவர் பா.செயப்பிரகாசம்தான். அவருடைய வக்கீல்நோட்டீசை இணையத்தில் கண்டபின்னரே மறுநடவடிக்கை பற்றி யோசித்தேன். ஆகவெ கருத்துவிவாதத்தில் நீதிமன்றம் போவதைப்பற்றிய பேச்சுக்களை முழுக்க அந்த அரசு உயரதிகாரியிடம் பேசுங்கள்.
என் தளத்தில் அந்தக்கடிதம் பிரசுரமான சூழலைச் சொல்கிறேன். பொதுவாக இங்கே இடதுசாரி தீவிர இயக்கங்களில் இருந்தவர்கள் பல்வேறு காவல்துறை கண்காணிப்புகளுக்கு உட்பட்டு, பலவகையிலும் இழுத்தடிக்கப்பட்டு, வதைக்கப்பட்டு எங்காவது ஒதுங்கியவர்களாகவே இருப்பார்கள். ஒரு பிழைப்புக்காக சிறியவேலைகளில் சென்று சேர்ந்திருப்பார்கள். சிலர் அரசுவேலைகளில். பலர் தொகுப்பூதியங்களில்.அவர்களின் எஞ்சியகால வாழ்க்கை என்பது ஒரு பெரிய துயரக்கதை.
90களில் இதே செயப்பிரகாசத்தின் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஈரோட்டில் வெற்றிலை பாக்குக்கடை வைக்கவும் திருப்பூரில் டெய்லர் வேலை செய்யவும் நிதியுதவி செய்ய நண்பர்களிடம் பணம் திரட்டியிருக்கிறோம். எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தெரியும்.
அந்த தோழர்களைப்போன்றவர்கள் மிகமிக அமுங்கியகுரல் கொண்டவர்கள். ஓர் அழுகையைத்தான் அவர்களால் முன்வைக்கமுடியும். மீண்டும் பொதுத்தளத்திற்கு வந்து பேசமுடியாது. அதற்கு ஒரு பொருளியல்சூழல் தேவையாகிறது. ஆகவே அந்தக்குரல் பெரும்பாலும் எழுவதே இல்லை. அப்படி பலரை நீங்களும் பார்க்கமுடியும்- ஒருவரி எழுதுங்கள் என்றால் பதறிவிடுவார்கள். ஆகவே அவ்வியக்கங்களைப் பற்றிய இத்தகைய ஒரு வெளிப்பாடு அரிதானது- பதிவுசெய்யத் தேவையானது. இது இங்கே அநாமதேயமாக மட்டுமே வெளிப்பட முடியும். ‘முதலில் பெயரைச் சொல்’ என்றால் அந்தக்குரலே பதிவாகாமல் போய்விடும்.
ஓர் உதாரணம் சொல்கிறேன், இந்திய அரசின் உளவுத்துறை அதிகாரி பற்றிய ஒரு விமர்சனம் அதன் உள்ளே இருந்த ஒருவரால் எப்படி வெளியிடப்பட்டிருக்க முடியும்?பா.செயப்பிரகாசம் அண்டர்செகரட்டரி நிலையில் பணி ஓய்வுபெற்ற மிகமிகச் செல்வாக்கான மனிதர்- கூடவே புரட்சியாளர் என்று பிம்பமும் அரசியல் கட்சிகளுடன் தொடர்பும் உருவாக்கி வைத்திருப்பவர். பெரும்சூழ்ச்சியாளர்.அவருக்காக அவருடைய சாதியின் அரசியல்வாதி முதல் கம்யூனிஸ்டுக் கட்சிகள் வரை களமிறங்குகிறார்கள் என்பதே சான்று.
ஓர் அண்டர்செகரட்டரியின் புரட்சிகரம் பற்றி நம்ப அந்த கண்டனக்கடிதத்தில் கையெழுத்திட்ட எவருக்குமே வெட்கமே இல்லை. இன்று வழக்கு என்று வரும்போது சமத்காரமாக தான் சூரியதீபன் என்ற பெயரில் எழுதவில்லை என்று சட்ட அறிக்கை விடும் அவருடைய போலித்தனம் பற்றியும் அவர்கள் நாணப்போவதில்லை.
அந்தக் கடிதம் பா.செயப்பிரகாசம் பற்றியது அல்ல. அவருடைய இயக்கத்தில் இருந்தவர் இயல்பாக அந்த வரியை எழுதியிருக்கிறார். அந்தக்கடிதம் பலவகையிலும் முக்கியமான ஒன்று. ஓர் ஆவணம் அது. அதை நான் எழுதியதாக வேண்டுமென்றே பிரச்சாரம் செய்கிறார்கள். நான் அதை எழுதமுடியாது என்று எவருக்கும் தெரியும்- அது உள்ளே இருந்து மட்டுமே வரக்கூடிய கடிதம்.
இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்து, பின்னர் வெளிவந்து, ஒரு எளிமையான மாறுபாட்டுக்குறிப்பை எழுதிய சாம்ராஜ் போன்ற கவிஞர்கள் இவர்களால் எப்படியெல்லாம் வேட்டையாடப்பட்டர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சங்கர ராமசுப்ரமணியன் என்ற தனிக்கவிஞனின் ஒரு கவிதைக்காக வீடுதேடிச் சென்று மிரட்டியவர்கள், மன்னிப்பு எழுதி வாங்கியவர்கள் இவர்கள். பொதுவெளியில் அப்படைப்பாளிகள் ஆதரவு தேடி எழுப்பிய குரல் இன்றும் உள்ளது- அன்று இன்று கண்டனம் தெரிவித்து கையெழுத்து போடும் எந்த எழுத்தாளனின் கண்டனக்குரலும் எழவில்லை. எந்த நம்பிக்கையில் ஒரு எளிய முன்னாள் ஊழியர் கடிதம் எழுதமுடியும்?
அந்த கடிதத்தில் பா.செயப்பிரகாசம் பற்றிய குறிப்பை தனியாக நான் கவனிக்கவில்லை. அது சுட்டிக்காட்டபின்னரே அதை கவனித்தேன். இது உண்மை, பெரும்பாலும் எவருக்கும் இப்படி ஆகும். நாம் கவனிக்கும் பலவிஷயங்கள் இருக்கையில் சில தவறிப்போகும். செயப்பிரகாசம் பற்றி பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் அவை, இயல்பாக அவை அதில் இடம்பெற்றன. அவற்றை எழுதியவரின் உணர்ச்சிகள். அவற்றை மட்டுமே ஒருவர் எழுதி அனுப்பியிருந்தால் அவற்றை முருகானந்தம் சொல்வதுபோல பிழை என எடுத்துக்கொண்டிருக்கலாம்
உண்மையில் தனியாக அந்தக்குற்றச்சாட்டு மட்டுமாகப் பார்த்தால் அது பெயரிலியாக வெளியிடப்பட்டது பிழையானதுதான். அது ஒரு கடிதம் மூலம் சுட்டப்பட்டிருந்தால் உடனடியாக ஒரு மன்னிப்புக் குறிப்புடன் அவ்வரியை நீக்கியிருப்பேன். ஆனால் இதைப்பயன்படுத்தி இந்தப் போலிப்புரட்சியாளர்- போலி எழுத்தாளர் தன்னை ஒரு பிம்பமாக காட்டும்பொருட்டு கையெழுத்துவேட்டை ஆடி, ஆர்ப்பாட்டம் செய்யும்போது , சட்டமிரட்டல் விடுக்கும்போது, அந்த பொறுப்பை எழுதியவர்மேல் தள்ளிவிடாமல் என் கருத்தைச் சொல்வதே நேர்மை, அப்படிச் செய்தால் அது அநாமதேயக் குற்றச்சாட்டை வேண்டுமென்றே செய்தேன் என்று ஆகும். ஆகவே அதற்கு நான் பொறுப்பேற்றேன்..
பா.செயப்பிரகாசத்தை அவதூறு செய்யும் நோக்கம் எல்லாம் எனக்கு எவ்வகையிலும் இல்லை. அவதூறு என்ன, விமர்சனமே செய்யப்போவதில்லை. அவரை பொருட்படுத்தும் நோக்கமே இல்லை.என் இலக்கிய அளவுகோல்களின்படி இந்த செயப்பிரகாசம் யமுனா ராஜேந்திரன் எல்லாம் ஓரிரு வார்த்தைகளுக்குக்கூட தகுதியானவர்கள் அல்ல. உண்மையில் இப்படியாவது இவர்களைப் பற்றி எழுதநேர்வது கூச்சமளிக்கிறது. இலக்கிய முன்னோடிகள், சிந்தனையாளர்களைப் பற்றி பல ஆயிரம் பக்கங்கள் எழுதிய கையால் இந்தப் போலிக்ளைப் பற்றி நான் ஒரு வார்த்தைகூட எழுதியிருக்கக்கூடாது.
1986 ல் சுந்தர ராமசாமி கலைகள் கதைகள் சிறுகதைகள் என்று ஒரு கட்டுரை எழுதினார்.தமிழில் சிறுகதைகள் எழுதிய பெரும்பாலும் அனைவரையும் சுட்டிக்காட்டி விமர்சனபூர்வமாக அவர்களின் இடத்தை நிறுவும் அக்கட்டுரை ஆ.மாதவன் கதைகள் என்னும் தொகுப்பின் முன்னுரையாக இடம்பெற்றது.அதில் பா.செயப்பிரகாசம் பற்றி குறிப்பே இல்லை. அதை அன்று அவரை புரட்சியாளர் என்று நம்பிய ஒருவர் சுட்டிக்காட்ட நான் சுந்தர ராமசாமியிடம் சொன்னபோது அவரை ஒரு பொதுவரலாற்றில் பெயராகச் சுட்டலாம்.ஒருபோதும் விமர்சனபூர்வ வரலாற்றில் குறிப்பிடக்கூடாது– அதற்கான தகுதி அவருக்கில்லை என்றார். அவரை வாசித்து குமட்டலெடுத்தபின் என் நிலைபாடும் அதுவே. பொய்யைப்போல கீழ்மை இலக்கியத்தில் வேறில்லை.
இந்தக் கண்டன அறிக்கைகள் இன்று எப்படி வாங்கப்படுகின்றன என்று எவருக்கும் தெரியும். சம்பந்தப்பட்ட நபர் அவரே போனில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்போகிறேன் என்று மொட்டையாகச் சொல்வார், நேரில்கூப்பிட்டதற்காகவும் பொதுமரியாதைக்காகவும் ‘ஆமா தோழர் செய்யவேண்டியதுதான்’ என்று சொன்னால் கண்டன அறிக்கையில் பெயர் வந்துவிடும். அதிலும் பா.செயப்பிரகாசம் போன்றவர்கள் உயர்ந்த அரசுப்பதவியில் இருந்த பெரும்சூழ்ச்சியாளர்கள். எவருக்கும் அச்சமூட்டுபவர்.
விளைவாக அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே அதில் சேர்க்கப்பட்டுவிடுகிறார்கள். சிலசமயம் அறிக்கைகளை அளித்து ஒப்புதல் பெற்றபின் மேலதிக வசைகள் சேர்க்கப்படுகின்றன. இதெல்லாமே அரசியல்வாதிகள் செய்யும் சில்லறைச் சூழ்ச்சிகள். இதில் எழுத்தாளர்கள் ஈடுபடுத்தப்படலாகாது. ஒரு அறிக்கையிலுள்ள அத்தனை வரிகளுக்கும் அதில் பெயருள்ள அனைவரும்தான் பொறுப்பு. அதை எழுத்தாளர்கள் உணரவேண்டும்.
அதோடு கண்டன அறிக்கை என்பதெல்லாம் மிகப்பெரிய விஷயம். ஒரு பொதுநலம்நாடும் விஷயத்துக்காக அதைச் செய்யலாம். எழுத்தாளர்களின் பூசல்களுக்கெல்லாம் இப்படி கண்டன அறிக்கை சேர்வதெல்லாம் எழுத்தாளர்களுக்கு எவ்வகையிலும் கௌரவம் அல்ல.அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒரு கண்டனம் தெரிவித்திருந்தால் அது வெறும் கருத்துமாறுபாடு. இந்த கீழ்த்தர வசைகொண்ட கண்டன அறிக்கைகளில் அவர்கள் பங்குசேர்வது அப்படி அல்ல.
தமிழ்ச்சூழலில் எழுத்தாளர் –செயல்பாட்டாளர் என அறியப்படும் பலருக்கும் நேர்மை, உண்மை பற்றி எந்த அக்கறையும் இல்லை. கட்சிகட்டுதல் தனிநபர் காழ்ப்பு சார்ந்தே யோசிக்கிறார்கள். அவர்களில் பலரைப்பற்றியும் எனக்கு புதிய திறப்புதான் கிடைத்தது.
இதில் மிகமிக வருத்தமளிப்பது இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளின் நிலைமை. தேசிய அளவிலான இருகட்சிகள், மாபெரும் வரலாற்றுபோராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்தவை, ஓர் அரசு உயரதிகாரியின் ’லாபியிங்கால்’ ஒரு தனி எழுத்தாளனுக்கு எதிராக அணிதிரண்டு செயல்பட்டன என்பது கேவலம். உண்மையில் தனிப்பட்ட முறையில் அது எனக்கு பெருமைதான், அக்கட்சிகளுக்குத்தான் வருத்தம்தரும் சரிவு. முகநூல்போராளிகளால் அக்கட்சிகள் எந்த பாதாளத்திற்கு இழுக்கப்பட்டுள்ளன என்பது அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைகளின் மொழியே சான்று
இதை தனிப்பட்ட முறையில் மாநில,தேசிய அளவில் பொலிட் பியூரோவின் கவனத்திற்கு கொண்டுசெல்லவிருக்கிறேன். அவர்கள் கண்டுகொள்ளாமல் போகலாம், ஆனால் அவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்.
ஜெ
***
இந்தக்குரல்கள்
சட்ட நடவடிக்கை
சட்டநடவடிக்கை பற்றி…
பா.செயப்பிரகாசம் பற்றி