கலிவருடம் 3902ல்,அதாவது கிபி 802ல் திருவிதாங்கூரை ஆட்சிசெய்தவர் முந்தைய அரசரான வீரமார்த்தாண்டவர்மாவின் மருமகனும் ஸ்ரீபாதப்பெருநல்லூர் என்னும் இடத்தை தலைமையிடமாகக் கொண்டவருமான வீரகேரள வர்மா விசாகம் திருநாள் மகாராஜா. அவரைப் பற்றிய செய்திகள் எவையுமே வரலாற்றில் இல்லையென்றாலும் வேறு இடங்களில் சொல்லப்பட்டுள்ள வீரகேரளன் என்றபெயரிலிருந்து அவர் இருந்தார் என்று ஊகிக்கப்படுகிறது [உதாரணமாக ஆளூர் சிவன்கோயில் கல்வெட்டு ஒன்றில் உள்ள ஒரு குறிப்பில் பல்வேறு கோயிலதிகாரிகளின் பெயர்களைச் சொல்லும் வரிகளுடன் இந்தப்பெயரும் இணைந்துள்ளது, காலக்கணிப்பின்படி முந்தைய அரசர் வீரமார்த்தாண்டவர்மாவுடன் பொருத்தப்பட்டு அவருடைய மருமகனாக இவர் இருக்கலாம் என்று வாசித்தெடுக்கப்படுகிறது. வரலாற்றில் சில அரசர்கள் உருவகங்களாகவும் எஞ்சியோர் ஊகங்களுமாகவே நின்றுவிடுகிறார்கள்]
அன்றைய சேரநாடு மதுரைக்குக் கப்பம்கட்டும் நிலமாக இருந்திருக்கலாம் என்றும், இல்லை மதுரை அப்போதும் களப்பிரர் ஆட்சியிலேயே இருந்தது என்பதனால் இவர்கள் கப்பத்தை கட்டாமலேயே கண்காணாமல் இருந்துகொண்டிருக்கலாம் என்றும் ஒரு தரப்பு உண்டு. அன்றைய திருவிதாங்கூர் நிலப்பரப்பு வாணவநாடு, ஸ்ரீவாழும்கோடு, ஸ்ரீபாதநாடு, ஸ்ரீவாயநாடு, ஜயத்துங்க நாடு என்ற ஐந்து ஸ்வரூபங்களாக இருந்தது [ஸ்வரூபங்கள் என்பவை பெண்களால் ஆட்சிசெய்யப்படும் சிறிய துணையரசுகள், கிழவியரசிகள் மிகப்பெரிய யானைமந்தைகள்போல அரசகுலங்களை உருவாக்கி வழிநடத்திக்கொண்டிருந்த காலம்] என்றும் ஆளூர் நிலப்பகுதி ஸ்ரீபாதநாட்டின் எல்லைக்குள் வருவதனால் வீரகேரள வர்மா இந்தப்பகுதியை ஆட்சி செய்தவர் என்றும் சொல்லப்படுகிறது. இன்றைய திருவிதாங்கூர் அரசகுடி ஸ்ரீபாதநாடு மருவி திருப்பாதபுரம் என்றும் திருப்பாப்பூர் என்றும் பின்னர் அழைக்கப்பட்ட இந்த மரபிலிருந்து இருந்து உருவாகி வந்ததாகும்.
திருப்பாப்பூரின் ஆட்சியின் கீழ்வந்த நிலங்கள் கிழக்கே வேளிமலையும் அதன் அடிவாரக்காடுகளும் மறுபக்கம் மேற்கே கடலோர உப்பங்கழிகளும் சதுப்புகளுமாக இருந்தமையால் நிலம்திருத்தி வயலாக்கி நெல்விளைவிக்கும் வேளாளர்களை தென்பாண்டிநாடான திருநெல்வேலியில் இருந்து பட்டும் பணமும் கொடுத்து அழைப்பு விடுத்து கொண்டுவந்து கோயில் கட்டி, நிலம்கொடுத்துக் குடியேற்றி ஒருதலைமுறைக்கு தீர்வையும் வரியும் இல்லாமல் விவசாயம் செய்ய நீட்டு அளித்து பேணுவது திருவிதாங்கூர் அரசர்களின் வழக்கமாக இருந்தது.அவர்களால் வயலாக்கப்பட்ட நிலங்கள் அடுத்த தலைமுறைக்குப்பின் பொன் விளைவித்து திருவிதாங்கூரின் களஞ்சியங்களை நிரப்பின என்பதனால் அவர்கள் தேனீக்களைப்போல பேணப்பட்டார்கள். தென்பாண்டி வேளாளர்கள் சைவர்களாகவும், வன்முறை இல்லாதவர்களாகவும், தங்களுக்குள் நூறுநூறு துணைக்குலங்களாக ஆண்டோடாண்டு பிரிந்துகொண்டிருப்பவர்களாகவும், ஒருவரை ஒருவர் தாழ்வாகக் கருதி பூசலிடுபவர்களாகவும், அந்தப்பூசல்களை தீர்க்கும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான குடிச்சபைகள் கொண்டவர்களாகவும், எல்லா பூசல்களையும் ஆண்டோடாண்டு தீர்த்துக்கொள்பவர்களாகவும் இருந்தார்கள்.
அன்று நிலம் அளக்கப்பட்டு எல்லைவகுக்கப்பட்டு அதனடிப்படையில் வரிவசூல் செய்யப்படவில்லை, விளைச்சலில் ஆறிலொருபங்கு என்ற அடிப்படையிலேயே வரிவசூல் செய்யப்பட்டது. அறுவடைக்குப்பின் விளைச்சலை மதிப்பிடுவது இயலாதது, ஏனென்றால் அறுவடைசெய்யப்பட்ட நெல் அப்படியே ரகசியக்குழிகளுக்குள் சென்றுமறைய, வயலுக்கோ விவசாயத்திற்கோ தொடர்பற்றவர்கள் போல தோற்றமளிக்கும் வேளாளர்கள் தங்கள் உணவுக்கும் அரசர் நெல் தரவேண்டும் என்று கோருவதே அதன்பின் நடக்கும். ஆகவே வயல் செழித்திருக்கையிலேயே பார்வையாளர்களை அனுப்பி எங்கே எவ்வளவு வயல் எவ்வண்ணம் செழிப்புற்றிருக்கிறது என்று கணித்து, அதற்கேற்ப குறைந்த அளவு வரி இவ்வளவு என்று வகுத்து, அதை முன்னரே அறிவித்து விடுவது வழக்கம். அவ்வாறு நிலங்களை நோக்கி மதிப்பிடுபவர் கண்டெழுத்துகாரர் என்றும் அவர் சொல்வதை தொகுத்து மதிப்பிடுபவர் மேலெழுத்துகாரர் என்றும் அரசரிடம் அறிக்கையிடும் தலைமைப்பொறுப்பு கொண்டவர் வலியமேலெழுத்துகாரர் என்றும் அழைக்கப்பட்டார். அவ்வறிவிப்பை ஏற்று கீழ்மட்டத்தில் பிரவர்த்தியார் என்று அழைக்கப்படும் பரம்பரை அதிகாரி வரிவசூல் செய்ய, அவருக்குமேல் சர்வாதிக்காரர்கள் அதை தொகுக்க ,அவருக்குமேல் வலியசர்வாதிக்காரர்கள் அரசக் களஞ்சியம் வரைக் கொண்டுசேர்த்த இந்த முறை தேனீ தேன் சேர்ப்பதற்கு நிகரானதாக இருந்தது.
அவ்வண்ணம் கண்டெழுத்துக்கு அனுப்பப்படும் அதிகாரியானவர் எழுத்தும் கணக்கும் அறிந்திருக்கவேண்டும் என்ற கட்டாயமிருந்தமையாலும், உள்ளூர் மக்களிடம் அவருக்கு நட்போ பகைமையோ இருக்கக்கூடாது என்பதனாலும், கடவுளைத் தொட்டு சத்தியமிட்டு கள்ளம் செய்யாமலிருக்கவேண்டும் என்பதனாலும், பெரும்பாலும் பரதேசப் பிராமணர்களே அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்கள், அவர்கள் தஞ்சையிலிருந்து அரசரால் வெற்றிலையும் பொன்பணமும் கொடுத்து அழைத்துக்கொண்டுவரப்பட்டு, ஆலயங்களுக்கு அருகே இல்லம்கட்டித்தரப்பட்டு, ஆண்டுக்கு ஆண்டு ஊதியம் அளிக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டர்கள். அவர்களுக்கு கணக்கும் தமிழும் மலையாண்மையும் சம்ஸ்கிருதமும் சோதிடமும் தர்மசாஸ்திரங்களும் தெரிந்திருந்தபோதிலும் நிலத்தைப்பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பதனால் நிகழ்ந்த எண்ணற்ற குளறுபடிகளில் ஒன்றின் கதையை இன்று சில பழைய ஏடுகள் குறிப்பிடுகின்றன.
அன்றைய வேளாளர் ஊர்கள் பிடாகைகள் என்றபேரில் தொகுக்கப்பட்டிருந்தன, பதினெட்டு பிடாகை ஒரு சபையாக ஒரு கோயில் மண்டபத்தில் கூடுவதும், சண்டையிட்டு சமரசமாகி, வெற்றிலைமென்று துப்பி, மாமன் மருமகனாக குலாவிப்பிரிவதும் வழக்கம். மணச்சமேடு பிடாகையில் புதிதாக வேளிமலை அடிவாரத்தில் வெட்டித்தெளித்து உருவாக்கப்பட்ட படுவக்குழி வயல்களாலான அயல்கரை மருவி அயக்கரை என்றான சிற்றூரில் வேளாண்மைசெய்த நூற்றெட்டு வேளார்குடிகள் அனைவருமே கயத்தாறுக்கு அப்பாலிருந்து அழைத்துவரப்பட்டு அங்கே குடியேற்றம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் நீர்குறைவான நிலத்திலிருந்து வந்தவர்களாதனால் நீர்பெருகி நின்றிருந்த நிலத்தை ‘கனிஞ்ச அம்மையில்லா!’ என்று வியந்து ஏற்றுக்கொண்டு, அந்நிலத்தில் காளை இறங்கினால் கயிறுகட்டித்தான் இழுக்கவேண்டும் என்பதை கட்டிஇழுத்தபின் தெரிந்துகொண்டார்கள். எருமையை நீந்தவைத்து உழுது நெல்நட்டால் நெல்லுக்கு பதிலாக கோரை முளைத்தெழும் விந்தையை ஒரு போகத்து பயிரை இழந்து புரிந்துகொண்டனர்.படுவநிலத்தில் மூங்கில் வெட்டிப்போட்டு காற்றோட்டம் செய்யவேண்டும் என்றும், சால்வெட்டி நீர் ஊறச்செய்து ஒழுக்கி நிலத்தை வற்றவைக்கவேண்டும் என்றும், சாம்பலும் சுண்ணமும் இட்டு வளம்கொள்ளச்செய்யவேண்டும் என்றும் கற்றுக்கொண்டு அவர்கள் நெல்லெடுக்கத் தொடங்கியபோது ஒரு தலைமுறை கடந்து அவர்கள் பெரும்பாலும் மலைக்கிழங்கை நஞ்சுகளைந்து அவித்துத் தின்று வாழப் பழகிவிட்டிருந்தனர்.
அதை கோரையும் கற்றுக்கொண்டே இருந்தது என்பதை அவ்வப்போது அனைத்தையும் மீறி அது தலையெடுக்கும்போதுதான் அறிந்தார்கள். கோரைக்கும் அவர்களுக்குமான போரில் கோரை வென்றால் அவர்கள் ஒரு பூவுக்கு மலைக்கிழங்கை உண்டு பசியாற்றி மறுபூவுக்கு கோரையை வென்றனர். கலிவருடம் 3909, கன்னிப் பூவில் கோரை எழுந்து நெல்லைமூடி, உழுகுடியினரால் கைவிடப்பட்டு, பச்சைப்பரப்பென காற்றிலாடி நின்றிருந்தபோது வில்வண்டியில் தன் அளவையாளர்களுடனும் எழுத்தர்களுடனும் வயல்பார்க்க வந்த கண்டெழுத்து அதிகாரி திருமஞ்சணபுரம் சுப்பையர் அங்கிருந்த பாறை ஒன்றின்மேல் ஏறி நின்று நெற்றியில் கைவைத்து சுற்றிலும் நோக்கி வயல்செழித்து பச்சை ஓடி அலையடிக்கிறது என்பதனால் இவ்வாண்டு ஆயிரத்தெட்டுகலம் நெல் தீர்வை என்று வகுத்து குறித்து ஆணையிட்டுவிட்டு, அருகிலிருந்த பரவூர் சிவன்கோயிலில் கும்பிட்டு ஓய்வெடுத்து அமிர்தேத்து முடித்து ,மந்தஹாசத்துடன் திரும்பிச் சென்றுவிட்டார்
ஆணையைப் பெற்ற உள்ளூர் காவலதிகாரி கொச்சுகிருஷ்ணன் நாயர் அந்த ஓலையை தன் வீட்டிலேயே வைத்துவிட்டு காட்டில் வேட்டைக்குச் சென்று, அங்கேயே ஒரு அச்சியை சம்பந்தம் செய்து, அவளை தாயாக்கிவிட்டு தப்பியோடி கீழே வந்தபோது கோடை முற்றியிருந்தமையால் ஊர்காரர்கள் சால்வெட்டி நீர் வடித்து கோரையைக் கருகச் செய்து, உள்ளே தைலப்புல் பரப்பி தீயிட்டுச் சாம்பலாக்கி, உழுதுமறித்து மீண்டும் தைலப்புல்லிட்டு தீயிட்டு ,மீண்டும் உழுதுபுரட்டி மீண்டும் தீ மூட்டிக் கருக்கிவிட்டு, அதில் நீர்பாய்ச்சி வேரில் எஞ்சும் கோரையையும் முளைக்கவைத்து, நீர்வடித்து தைலப்புல் பரப்பி அதை மீண்டும் தீயிட்டுச் சுட்டு, சுண்ணாம்பிட்டு மீண்டும் உழுது, அடுத்த உழவுக்கு மழைபார்த்திருந்தனர். வயலைக் கண்டதும் ஓலையை நினைவுகூர்ந்த காவலதிகாரி கொச்சுகிருஷ்ணன் நாயர் அதை கொண்டுபோய் பிரவர்த்தியார் திருவாழிப்பிள்ளையிடம் கொடுத்தபோது அவர் முதலில் திகைத்து பின்னர் நெஞ்சிலறைந்து அலறியபடி தெருவில் ஓடி ஊர்ப்பண்ணையார் பொய்சொல்லாமெய்யன் பிள்ளையிடம் போய் கண்ணீருடன் அதைக்காட்டி முறையிட்டார்.
பண்ணையார்கள் அனைவரும் ஊர்க்கோயில் மண்டபத்தில் கூடி அந்த ஓலையைப்பற்றிப் பேசியபோது மலைக்கிழங்கு தின்று மலமிளகி வாழ்ந்து கொண்டிருக்கையில் ஆயிரத்தெட்டு கலம் நெல்லுக்கென்ன, ஆயிரத்தெட்டு மணி நெல்லுக்கே வழியில்லை என்று அனைவரும் கொந்தளித்துக் கூச்சலிட்டனர். அவர்களை கையமர்த்தி அமரச்செய்து திருவாழிப்பிள்ளையும் பண்ணையார்களும் கூடி கோரை வந்து நெல்வயல்கள் அழிந்தமையால் தீர்வையும் வரியும் செலுத்த இயலாதநிலையில் ஊர் இருப்பதாகவும், கனிந்தருளி காக்கவேண்டும் என்றும் மன்றாடி மகாராஜா வீரகேரளவர்மா தம்புரானுக்கு நீட்டு எழுதி அதை சர்வாதிக்கார் கொச்சன் பிள்ளையிடம் கொண்டுசென்று அளித்தனர். கொச்சன்பிள்ளை அதை அவரிடமிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓலைகளுடன் சேர்ந்து செம்பட்டுநூலால் சுற்றிக்கட்டி வலிய சர்வாதிக்கார் கோவிந்தன் நாயருக்கு அனுப்ப, அவர் தன்னிடம் வந்துசேர்ந்த நாநூற்றுக்கும் மேற்பட்ட ஓலைகளுடன் அதைச்சேர்த்து மஞ்சள்பட்டு நூலால் சுற்றிக்கட்டி ஸ்ரீபாதப்பெருநல்லூருக்குக் கொண்டுசென்று மகாராஜா சமூகத்தின் முன்வைக்க, ஸ்ரீபாதசபை என்ற மங்கல அரசசபையில் யானைக்கால் ஆசனத்தில் பட்டுத்தலைப்பாகையில் செம்பருந்தின் இறகுசூடி அமர்ந்திருந்த களைத்துப்போன மகாராஜா வீரகேரளவர்மா பொன்னுதம்புரான் வழக்கம்போல அதை தன் வலக்கையால் தொட்டு “திருக்கண் நோக்கினேன் சர்வாதிக்காரரே, வேண்டது செய்க” என்று அருளிச்செய்தார்.
வழக்கமாக கண்டெழுதிய தீர்வையில் கால்பங்கு மகாராஜாவால் குறைக்கப்படும் என்பதனால், அதை முன்னரே கணித்து அதையும் சேர்த்தே கண்டெழுதப்படும் என்பதனால், அதனடிப்படையில் கால்பங்கு குறைப்பதாக ஆணையிடும் வழக்கமிருந்தமையால், அவ்வாணை வலிய சர்வாதிக்கார் கோவிந்தன் நாயரால் பிறப்பிக்கப்பட்டு, மகாராஜாவின் முத்திரைச் சாத்துடன் சர்வாதிக்காரர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் அதை பிரதி எடுத்து பிரவர்த்தியார் அனைவருக்கும் அனுப்பியதன் விளைவாக அயக்கரை பிரவர்த்தியார் திருவாழிப்பிள்ளைக்கு அவர்கள் எழுநூற்றி ஐம்பத்தேழு கலம் நெல் மட்டும் அளந்தால் போதும் என்று திருப்பாப்பூர் வாழ்ந்தருளும் பொன்னுதம்புரான் வீரகேரளவர்மா மகாராஜா அளவிலாக் கருணையுடன் திருக்கண் பார்த்திருப்பதாகவும், ஊர்மக்களின் நன்மையையும் ஐஸ்வரியத்தையும் நாடுவதாகவும் ஓலை வந்தது
கண்ணீருடன் நெஞ்சிலறைந்து கொந்தளித்த அயக்கரை பிரவர்த்தியார் திருவாழிப்பிள்ளை ஊர்மன்றில் நின்று கூச்சலிட்டு அனைவரையும் அழைத்து வந்திருக்கும் ஓலையைச் சொல்ல, கிழட்டு வேளாளர் ஒருவர் ‘இதுக்கு அந்த செவிகெட்ட சாமிகிட்டயே சொல்லியிருக்கலாமே’ என்று சலித்துக்கொண்டு தலையில் கைவைத்தார். ஊர்மன்றில் விடியவிடிய கூச்சலிட்டு பூசலிட்டு ஓய்ந்து, சுக்குவெந்நீர் குடித்துவிட்டு, விடியற்காலையில் நடந்தவற்றை விரிவாக எழுதி கண்ணீருடன் மன்றாடி மகாராஜாவுக்கு மற்றொரு கோரிக்கையோலை எழுதியளிக்க முடிவெடுக்கப்பட்டு, அவ்வண்ணமே விரித்தெழுதி சர்வாதிக்கார் கொச்சன் பிள்ளையிடம் கொண்டுசென்று அளித்தனர். கொச்சன்பிள்ளை அதை வழக்கம்போல செம்பட்டுநூலால் சுற்றிக்கட்டி வலிய சர்வாதிக்கார் கோவிந்தன் நாயருக்கு அனுப்ப, அவர் மஞ்சள்பட்டு நூலால் சுற்றிக்கட்டி ஸ்ரீபாதப்பெருநல்லூருக்குக் கொண்டுசென்று மகாராஜா சமூகத்தின் முன்வைக்க ,மகாராஜா வீரகேரளவர்மா பொன்னுதம்புரான் வழக்கம்போல அதை தன் வலக்கையால் தொட்டு “திருக்கண் நோக்கினேன் சர்வாதிக்காரரே, வேண்டது செய்க” என்று அருளிச்செய்ய, அதன்படி பத்து சதவீதம் வரி மீண்டும் குறைக்கப்பட்டு ,அறுநூற்று நாற்பத்தொன்பது கலம் நெல் உடனே அளக்கப்படவேண்டும் என்று கருணை உள்ளத்துடன் ஆணையிடப்பட்டு, அந்த திருமுக ஓலைமுறைப்படி சர்வாதிக்கார் வழியாக பிரவர்த்தியார் திருவாழிப்பிள்ளைக்கு அனுப்பப்பட்டது.
இம்முறை பிரவர்த்தியார் திருவாழிப்பிள்ளை பித்தனைப்போலச் சிரித்தபடியே தெருவில் ஓடி பண்ணையார் பொய்சொல்லா மெய்யன்பிள்ளையின் வீட்டை அடைந்து ஓலையைக் காட்ட, அவரும் வெடித்துச் சிரிக்க, அனைவரும் ஓடிவந்து கூடி செய்திகேட்டு சிரிக்கத்தொடங்க, ஊரே சிரித்துக்கொந்தளித்து ஆங்காங்கே அமர்ந்து கண்ணீர் மல்கி வானத்தை பார்த்து மீண்டும் சிரிப்பதை உள்ளூர் காவலதிகாரி கொச்சுகிருஷ்ணன் நாயர் பீதியுடன் பார்த்துக்கொண்டு நின்று பின்பு தப்பி ஓடி சர்வாதிக்காரிடம் வந்து சொல்ல, அவர் திகைத்து போய் விசாரித்து வரும்படி இன்னொரு காவலனை அனுப்பினார். அவன் திரும்பி வருவதற்குள் அந்தச் செய்தியை உறுதிப்படுத்தும்படி அவர்களிடமிருந்து வந்த ஓலையில் கோரை மண்டியமையால் வயிலில் நெல் வளராதுபோய் ஒருகைப்பிடி நெல்கூட ஊரில் இல்லை என்றும் ஆகவே ஒரு மணிநெல்கூட தீர்வையும் வரியும் கட்டமுடியாத நிலையில் இருப்பதாகவும் கேலிக்குரிய செய்தி குறிக்கப்பட்டிருந்தது.
சர்வாதிக்கார் கொச்சன் பிள்ளை அச்செய்தியை உடனே சென்று வலிய சர்வாதிக்கார் கோவிந்தன் நாயருக்குச் சொல்ல, அவர் அதை வலிய மேலெழுத்துகாரர் சர்வாரி கிருஷ்ணையரிடம் சொல்ல, அவர் மேலெழுத்துகாரர் இஞ்சிக்காடு வெங்கையரிடம் ஆணையிட, வெங்கையர் சர்வாதிக்கார் கொச்சன் பிள்ளையுடன் அயக்கரை ஊருக்கு தானே நேரில் வந்து அங்கிருந்த பிரவர்த்தியார் திருவாழிப்பிள்ளையிடமும் பிற ஊர்ப்பண்ணையார்களிடமும் குறைகேட்டபின் “எங்கே அந்த கோரை?” என்று கேட்டு ,அங்கே ஒரு இலையளவுக்கோ தளிரளவுக்கோ கோரை தென்படவில்லை என்பதை அவர்களின் பலவாறான நீண்ட விளக்கங்களில் இருந்து தெளிவாகப் புரிந்துகொண்டு ,அதை திட்டவட்டமாக பதினேழு ஓலைகளிலாக நாநூற்றி பதினெட்டு வரிகளில் விரிவாக எழுதி வலிய சர்வாதிக்காரர் கோவிந்தன் நாயருக்கு அறிவித்தார். வலிய சர்வாதிக்கார் கோவிந்தன் நாயர் ஸ்ரீபாதப்பெருநல்லூருக்குச் சென்று மகாராஜா சமூகத்தின் முன் தாள்பணிந்து வாய்பொத்தி அச்செய்தியை சுருக்கமாக நான்கு சொற்களில் தெரிவிக்க, மகாராஜா வீரகேரளவர்மா பொன்னுதம்புரான் ‘வேண்டது செய்துகொள்க சர்வாதிக்காரரே!” என்று உளம் கனிந்து ஆணையிட்டார்.
வலிய சர்வாதிக்காரர் கோவிந்தன் நாயர் மணச்சமேடு பிடாகையின் அயக்கரை ஊரின் நூற்றெட்டு வேளார்குடிகளும் மொத்தமாக சேர்ந்து கண்டெழுதிய ஆயிரத்தெட்டு கலம் நெல்லும், அதை அதுவரை கட்டாமலிருந்ததற்காக அபராதமாக மேலும் நூற்றெட்டு கலம் நெல்லும், அதை வசூலிப்பதற்கான படைச்செலவுக்காக மேலும் முந்நூற்றி எட்டு கலம் நெல்லுமாக மொத்தம் ஆயிரத்தி நாநூறு கலம் [நாயர்கள் பொதுவாக கணக்குகளில் சூரர்கள் அல்ல] நெல் உடனடியாக கட்டவேண்டும் என்றும், கட்டத்தவறினால் அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு அவர்களின் கன்றுகாலிகள் பறிமுதல்செய்யப்பட்டு அவர்கள் முக்காலியில் கட்டிவைத்து முதுகுத்தோல் உரிய மாட்டுத்தோல் சவுக்கால் அடிக்கப்படுவார்கள் என்றும் திருப்பாதப்பெருநல்லூர் ஆண்டருளும் பொன்னுதம்புரான் வீரகேரளவர்மா மகாராஜா அவர்கள் தன் அளவில்லாத கருணையால் ஆதிகேசவப்பெருமாள் பெயரில் ஆணையிட்டிருக்கும் செய்தியை ஊரின் பிரவர்த்தியார் திருவாழிப்பிள்ளைக்கு அறிவித்தார்
அதன்பின் அவர் அதை அவ்வண்ணமே மறந்து பிற செயல்களில் ஈடுபட்டு [அவருக்கு பதினெட்டு அச்சிகள்] அயக்கரையில் இருந்து ஆணையிட்டபடி நெல் வரவில்லை என்பதை பதினேழு நாட்கள் கழித்தே அறிந்து, இன்னொருமுறை அதே அறிவிப்பை அனுப்பும்படி பணித்து மேலேசொன்ன பணிகளில் மேலும் மும்முரமாக ஈடுபட்டு, ஒன்பதுநாட்களுக்கு பின் மீண்டும் நெல்வரவில்லை என்பதை அறிந்து உச்சகட்ட சினம் கொண்டு தன் ஈட்டிப்படையினர் இருநூறுபேருடன் தானும் உடைவாள் ஏந்தி வேளிமலை அடிவாரத்தில் அமைந்த அயக்கரை ஊருக்கு சென்றுசேர்ந்தார்.ஊருக்கு வெளியே படைமுகாமிட்டபின் படைநாயர் ஏழுபேரை அழைத்து அவர்கள் ஈட்டிகளுடன் ஊருக்குள் சென்று படைகள் ஊருக்குள் நுழையாமலிருக்கவேண்டுமென்றால் நெல்லை உடனடியாக அளந்துகொண்டுவந்து அளிக்கவேண்டும் என்று வலிய சர்வாதிக்கார் கோவிந்தன் நாயரின் ஆணை என்று அங்குள்ளவர்களிடம் அறிவித்துவிட்டு வரும்படி சொன்னார்
உள்ளே சென்ற படைநாயர்கள் ஏழுபேரும் ஈட்டியை தலைகீழாகப் பிடித்தபடி குழம்பிப்போய் கால்தழைய திரும்பி வந்து, ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக்கொண்டும் ,மண்டைகளைச் சொறிந்துகொண்டும் ,அங்கே ஊருக்குள் மனிதர்கள் எவரும் இல்லை என்றும் இடிந்த கற்கோயில் ஒன்றுதான் அங்கே இருப்பதாகவும் தெரிவித்தனர். அயக்கரை மக்கள் அப்படியே வேளிமலை ஏறிக் கடந்து பாண்டிநாட்டுக்கே போயிருக்க வாய்ப்பிருந்தது என்றாலும் திடீரென்று அங்கே ஒரு கற்கோயில் எப்படி வரமுடியும் என்று சந்தேகப்பட்ட வலிய சர்வாதிக்காரர் கோவிந்தன் நாயர் ஏழு படைநாயர்களை தன் முன் ஊதவைத்து அவர்கள் மது அருந்தியிருக்கவில்லை என்றும், குனிந்து நிமிரவைத்து கஞ்சா இழுக்கவில்லை என்றும், தும்மவைத்து அபின் உண்டிருக்கவில்லை என்றும் உறுதிசெய்தார். நாயர்கள் உடலுறவுகொண்டாலே உளறுவதுண்டு என்பதனால் அதுவும் மோப்பம் வழியாக பரிசீலிக்கப்பட்டது.
ஒருநாள் முழுக்க அங்கே நின்று என்ன செய்வது என்று குழம்பியபின் ஊருக்குள் செல்ல முடிவெடுத்த வலிய சர்வாதிக்காரர் கோவிந்தன் நாயர் “முன்னோட்டு!” என்று ஆணையிட்டு தானும் வாளை உருவியபடி “வஞ்சிபால விஜயே!” என்று போர்க்குரல் எழுப்பியபடி ஊருக்குள் புகுந்து அங்கே உண்மையிலேயே எவருமே இல்லை என்பதை உணர்ந்து திகைத்து தெருக்களில் சுற்றிவந்து பதைத்து நின்றார். அவரைச்சுற்றி முறைத்தும் சிரித்தும் கூர்ந்து நோக்கியும் எங்கோ விழியூன்றியும் ஆளுயரமான கற்சிலைகள் நின்றிருந்தன, சில விழுந்துகிடந்தன. அச்சிலைகள் அங்கே எப்படி வந்தன என்று குழம்பிப்போய் சுற்றிச்சுற்றி வந்த வலிய சர்வாதிக்காரர் கோவிந்தன் நாயரின் கூடவே வந்த உள்ளூர் காவலதிகாரி கொச்சுகிருஷ்ணன் நாயர் திடீரென்று பயந்து அலறி சிறுநீர் கழித்து எருக்கிலை தின்ற ஆட்டுக்குட்டி போல தலைகுழம்பி சுற்றிவந்து திரும்பி ஓட முயல, அவனை நான்குபேரை அனுப்பி துரத்திப்பிடித்து இழுத்துவந்து உதைத்து அமரச்செய்து என்ன விஷயம் என்று விசாரித்தபோதுதான் அந்தக் கற்சிலைகள் அங்கிருந்த மக்கள்தான் என்று தெரியவந்தது. உள்ளூர் காவலதிகாரி கொச்சுகிருஷ்ணன் நாயருக்கு தெரிந்த பிரவர்த்தியார் திருவாழிப்பிள்ளை, ஊர்ப்பண்ணையார் பொய்சொல்லாமெய்யன் பிள்ளை உட்பட ஆண் பெண் குழந்தைகள் அத்தனைபேரும் கற்சிலைகளாக அங்கே நின்றும் கிடந்தும் அமர்ந்தும் தென்பட்டனர்.
வலிய சர்வாதிக்காரர் கோவிந்தன் நாயரும் அவர் படையினரும் அஞ்சி கதறி சிறுநீர் கழித்தபடி சிதறி ஓடி திருப்பாதபெருநல்லூரை அடைந்து அங்கே தெருக்களில் கலைந்த காகங்களைப்போல கூச்சலிட்டபடி சுற்றிவந்தனர். வலிய சர்வாதிக்காரர் கோவிந்தன் நாயர் ஓடிப்போய் மகாராஜாவை திருமுன் கண்டு தொழுது வணங்கி கண்ணீர் உகுத்து கைதொழுது நடுங்கியபடி ஓர் ஊரே கல்லாகிவிட்ட செய்தியைச் சொல்லி மேலும் கதறி அழுதார். மகாராஜா உடனே எழுந்தோடி உள்ளே சென்று தன் அறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொள்ள சேடிப்பெண்கள் வந்து மகாராஜா மேற்கொண்டு எவருக்கும் திருமுகம் காட்டமுடியாது என்றும், கேரளபுரத்துக்குச் சென்று திவான் ஸ்ரீமகம் சங்கரன் தம்பியிடம் விஷயத்தைச் சொல்லும்படியும் வலிய சர்வாதிக்காரர் கோவிந்தன் நாயருக்கு ஆணையிட்டார்கள்.
வலிய சர்வாதிக்காரர் கோவிந்தன் நாயர் விடாத அழுகையுடன் கேரளபுரத்துக்குச் சென்று அங்கே மாளிகையிலிருந்த திவான் ஸ்ரீமகம் சங்கரன் தம்பியிடம் அயக்கரை ஊரே கல்லாகிவிட்ட செய்தியைச் சொல்ல ,அவர் உடனே கணியார் சுகமடம் சங்கர மாராரை வரவழைத்து அதன் பலன்கள் என்ன என்று கேட்டார். அரசனுக்குச் சாவு, கடல்பொங்குதல், மலையிடிதல், புயல், மகாமாரிபோல நோய்வருதல்,பெண்கள் சொல்கேளாதிருத்தல் ஆகிய ஆறு பலன்களும் ஒட்டுமொத்தமாகவே காணக்கிடைப்பதாக கணியார் சுகமடம் சங்கர மாரார் சொன்னார். திவான் ஸ்ரீமகம் சங்கரன் தம்பி தானே நேரில் ஒருமுறை சென்று அயக்கரை ஊரைப் பார்வையிட்டு, அத்தனைபேரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு தான்மட்டும் ஒவ்வொரு சிலையிடமும் சென்று கும்பிட்டு தனித்தனியாக மன்றாடினார். அவர்கள் இன்னும் ஒரு தலைமுறைக்காலம் வரியே தரவேண்டம் என்றும், அரசனுடைய ஆணையே அந்த ஊருக்கு வராது என்றும், கல்லாலான கைகளை தொட்டு உறுதியளித்தும் கருங்கல்லாலான கால்களைத் தொட்டு மன்னிப்பு கோரியும் அவர் ஒருநாள் முழுக்க அங்கிருந்தாலும் சிலைகள் கல்லாகவே நீடித்தன.
நாடெங்கும் ரகசியமாக செய்தி அறிவிக்கப்பட்டு கணியார்களும் பூசகர்களும் தந்த்ரிகளும் மந்திரவாதிகளும் வரவழைக்கப்பட்டு, அயக்கரை ஊரில் எல்லாவகையான பரிகாரங்களும் பிராயச்சித்தங்களும் கட்டுவித்தைகளும் துரத்துவித்தைகளும் பிரதிதேவதா பூஜைகளும் உக்ரமூர்த்தி பிரதிஷ்டைகளும் நடத்தப்பட்டபோதிலும் கற்சிலைகள் அவ்வண்ணமே உறைந்த பார்வையும் உரைக்க்கப்படாத சொற்களுமாக நீடித்தன. அங்கே முரசுகளும் கொம்புகளும் குரவையொலிகளும் துள்ளல்கூச்சல்களும் கேட்டுக்கொண்டே இருந்தன. ஒவ்வொருநாளும் இன்று நாளை என கற்சிலைகள் விழிதிறக்கக் காத்திருந்த திவான் ஸ்ரீமகம் சங்கரன் தம்பி நம்பிக்கை இழக்கலானார்
அதற்கேற்ப பக்கத்து ஊர்களிலும் ஆங்காங்கே பலர் கல்லாகத் தொடங்கிவிட்டிருப்பதாகச் செய்திகள் வரத்தொடங்கின. அஞ்சாம்கோணத்தில் சாலைமுகப்பிலேயே இருவர் கல்லாக அமர்ந்திருந்தனர் என்று வழிப்போக்கர் சொல்லக்கேட்டபோது திவான் ஸ்ரீமகம் சங்கரன் தம்பி அதற்குமேலும் தாமதிக்கக்கூடாது என்று எண்ணி ரகசியமாக பல்லக்கில் ஏறி இரவோடு இரவாக கிளம்பி ஆற்றிங்கல் போய் அங்கே ஸ்ரீவல்லப மடத்தில் விஷ்ணுநம்பூதிரி என்ற மூத்த தந்த்ரியை கண்டு காலில் விழுந்து காத்தருளும்படி மன்றாடினார். அவர் கண்ணீரைக் கண்டு கனிந்த ஸ்ரீவல்லப மடம் விஷ்ணு நம்பூதிரி அவர் தலைதொட்டு வாழ்த்தி “தெய்வானுக்ரகம் உண்டாகட்டே” என்றார்
ஸ்ரீவல்லப மடம் விஷ்ணு நம்பூதிரி தன் மஞ்சலில் நூறு காவலர்களுடன் திருப்பாதப்பெருநல்லூருக்கு வந்து சேர்ந்து அங்கே தங்காமல் அயக்கரை ஊருக்குச் சென்றார். அங்கே தனியாக கற்சிலைகளுடன் முழுநாளும் இருந்தபின் திவான் ஸ்ரீமகம் சங்கரன் தம்பியின் ஸ்ரீகாரியக்காரரிடம் “அரசன் இங்கே வந்தாகவேண்டும். அவன் இங்கே கிரீடம் கழற்றி வைத்து இந்த மண்ணில் நெற்றி மண்பட தலைதொட்டு வணங்கி பிழைபொறுத்தருளும்படி கோரவேண்டும். மண் பொறுத்தருளினால் தெய்வங்களை வரவழைக்கமுடியும்” என்றார். அச்செய்தியை ஸ்ரீகாரியக்காரர் சொன்னபோது திவான் ஸ்ரீமகம் சங்கரன் தம்பி எரிச்சலுடன் “அந்த நாயை நான் செவியைப் பிடித்து இழுத்து வருகிறேன்” என்று சொன்னபின் ஸ்ரீவல்லப மடம் விஷ்ணு நம்பூதிரியிடம் நேரில் சென்று “ஸ்ரீவாழும்கோடும் திருப்பாப்பூரும் ஆண்டருளும் மகாராஜா விஷ்ணுதாச வீரகேரளவர்மா பொன்னுதம்புரான் அவர்கள் கல்பிச்சு இந்த அயக்கரை மண்ணில் திருப்பாதம் வைச்சு எழுந்தருளி உரிய முறையில் வேண்டியதைச் செய்ய ஆவன செய்கிறேன்” என்று முறைப்படித் தெரிவித்தார்.
அதன்படி ஒரு குறிக்கப்பட்ட முகூர்த்தத்தில் மகாராஜா வீரகேரளவர்மா பொன்னுதம்புரான் திவான் ஸ்ரீமகம் சங்கரன் தம்பியுடன் கொட்டும் குழல்விளியும் குடையும் யானையும் அலங்காரப்பட்டங்களும் பரிவாரங்களுமாக அயக்கரை ஊருக்கு எழுந்தருளினார். ஏற்கனவே ஸ்ரீவல்லப மடம் விஷ்ணு நம்பூதிரி அங்கே பூஜைக்கும் சடங்குகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். வீராளிப்பட்டு விதானமிட்ட பந்தலில் நடந்த சடங்கில் பூமிசாந்தி யாகம் செய்யப்பட்டு வீரகேரளவர்மா மகாராஜா எட்டுத்திக்கும் நோக்கி மண்ணில் நெற்றி-முகம்-தோள்-நெஞ்சு- வயிறு-இடை-கால் படிய விழுந்து வணங்கி ஸ்ரீவல்லப மடம் விஷ்ணு நம்பூதிரி அளித்த ஒரு சிட்டிகை மண்ணை உண்டு பூஜைநிறைவு செய்தார்.
அதன்பின் ஸ்ரீவல்லப மடம் விஷ்ணு நம்பூதிரி ஏற்கனவே கூட்டுப்புழுவை பிடித்து உள்ளே அடைத்து வைத்திருந்த சிறு மரச்செப்பை தன் ஆடைக்குள் மறைத்து எடுத்துக்கொண்டு அங்கே கல்லாக அமர்ந்திருந்த ஊர்க்குடிமக்களில் ஒரு கைக்குழந்தையின் அருகே சென்று, கையை வீசும் பாவனையில் அதைத் திறந்து, கைவிரல்களில் இருந்து சிவப்புநீல வண்ணச் சிறகுகளுடன் இரு சிறகுகளை படபடத்து எழச்செய்தார். அதை அக்குழந்தைமுன் விட்டபோது அது சிறகடித்து காற்றில் எழுந்து அலைந்து சுழன்று எழுந்து அமைந்து விளையாடியதைக் கண்டு கல்குழந்தையின் விழிகள் முதலில் அசைய, உதடுகளில் புன்னகை எழ, அது உயிர்ப்புகொண்டது. சிறகடித்து அகன்ற வண்ணத்துப்பூச்சியை பிடிக்க குழந்தை கையை நீட்டியபடி தவழ்ந்து செல்ல அப்படியே அதை தூக்கிக் கொண்டார் ஸ்ரீவல்லப மடம் விஷ்ணு நம்பூதிரி. “இதை வைத்திருப்போம், சற்றுநேரத்திலேயே இது பசித்து அழும், இதன் அன்னை எழுந்து வருவாள்” என்றார்.
அரைநாழிகையில் குழந்தை பசித்துக் கதறி அழத்தொடங்கியதும் சிலைகளில் அத்தனைப் பெண்களின் முகங்களிலும் கனிவு உயிர்கொள்ள அவர்களின் விழிகள் அசைந்தன.ஒரு கிழவி வந்து குழந்தையை எடுத்து தொடர்ந்துவந்த அன்னையின் கையில் அளிக்க அவள் அதை மடியிலிட்டு முலையூட்டினாள். அவள் எழுந்துவந்த அந்த பள்ளத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பியது. அது பெருகிச் சூழ்ந்து அங்கிருந்த சிலைகளை எல்லாம் நனைத்தது, அந்த ஈரம் தொட்ட அனைவருமே உயிர்த்தெழுந்து ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டார்கள். திவான் ஸ்ரீமகம் சங்கரன் தம்பி வியப்புடன் “ஒரு சின்ன வண்ணத்துப்பூச்சி!” என்றார். “நாலு சொட்டு நிறம்” என்று மேலும் வியந்தார். ஸ்ரீவல்லப மடம் விஷ்ணு நம்பூதிரி புன்னகைத்து “அது போதுமே” என்றார்.
அயக்கரை பின்னர் பிள்ளைக்கிரங்கியவூர் என்று பெயர் பெற்று, அது மருவி பிள்ளக்காவூர் என்று ஆயிற்று. அங்கே வீரகேரளவர்மா விசாகம் திருநாள் சிறியதாகக் கட்டி பின்னாளில் சோழர்களும் நாயக்கர்களும் திருப்பணி செய்து பெரிதாக ஆக்கிய கோயிலில் அமுதகலம் ஏந்திய பூமாதேவி சமேதராக அமந்திருக்கும் விஷ்ணு அமிர்தாமயன் என்று அழைக்கப்படுகிறார். அந்த ஆலயத்தைச் சுற்றிக்கொண்டு ஓடும் சிறிய வற்றாத நீரோடைக்கு அமிர்தவாகி என்று பெயர்.