கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

ஃபைல்களையும் குறிப்புகளையும் திரும்ப அடுக்கி வைத்துவிட்டு நான் நாற்காலியில் சாய்ந்துகொண்டேன். மனம் காலியாக இருந்தது. உதிரியாக அர்த்தமில்லாத சொற்கள் ஓடிக்கொண்டிருந்தன.

தலைமைக்காவலர் மாணிக்கம் என் முன் என் வார்த்தைகளை எதிர்பார்த்து காத்திருந்தார்.

நான் நிமிர்ந்து “என்ன?” என்றேன்.

“என்னசார் ரிப்போர்ட்டு?” என்றார் மாணிக்கம்.

“என்ன ரிப்போர்ட்டு? எல்லார்ட்டயும் பேசியாச்சு. எல்லாம் வரிவரியா படிச்சாச்சு… ஒரு துப்பும் இல்லை. ஒண்ணுமே தெரியல்லைன்னு கூப்பிட்டு சொல்லிடவேண்டியதுதான்.”

“அதெப்டி சார்?” என்றார் மாணிக்கம்.

அவருக்குப் பின்னால் எட்டு கான்ஸ்டபிள்களும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“பின்னே என்ன? நீங்க சொல்லுங்க, என்ன சொல்ல? அவனைப்பத்தி உருப்படியா ஒரு துப்பாவது இருக்கா? ஃபாலோ பண்ணிட்டிருக்கோம் சார்னு சொல்றதுக்காவது ஏதாவது முகாந்திரம் இருக்கா. அப்டியே நின்ன நிற்பிலே மறைஞ்சிட்டான். நாம இந்தா இப்டி உக்காந்திட்டிருக்கோம். என்னமோ கொலையும் கொள்ளையும் நாம பண்ணின மாதிரி மேலே உள்ளவன் சத்தம்போடுதான். விதி .வேறே என்ன?”

பைக் ஓசை கேட்டது. எஸ்.ஐ ஸ்டீபன் உள்ளே வந்தான். நாங்கள் அவனை பார்த்துக்கொண்டிருந்தோம். அவன் என் அறைக்கு முன் வந்து சல்யூட் அடித்தான்.

“என்ன?” என்றேன்.

“அவனுக்கு இங்க கூட்டாளிகள்னு யாருமே இல்லை சார். பத்துப் பதினைஞ்சுபேரை ஃபாலோ பண்ணியாச்சு. நாலஞ்சுபேரை மேக்கரை ரிசர்வ் பில்டிங்குக்கு கூட்டிட்டுப்போயி அடிச்சும் பாத்தாச்சு. உண்மையிலேயே ஒருத்தனுக்கும் தெரியல்லை. தன்னந்தனியா இருந்திருக்கான். இங்க நம்மகிட்ட இருக்கிற டாக்குமெண்டிலே ஏதாவது க்ளூ இருந்தாத்தான்… இல்லே…”

நான் வெறுமே அவனைப் பார்த்தேன்.

“இல்லேன்னா அவனுக்க கைரேகை எங்கியாம் சிக்கி…” என்று அவன் இழுத்தான்.

“கைரேகை… அதாவது அவன் வேற எங்கியாம் கொலையோ கொள்ளையோ பண்ணி சிக்குத வரைக்கும் காத்திருக்கணும்.”

தடுமாறி, “இல்ல அதில்லை” என்றான்.

“வேறே எங்க கைரேகை எடுக்குதோம்? சிசிடிவி பொருத்தியிருக்கோம். அதிலேயே பாதி உருப்படியா இல்லை…”

ஸ்டீஃபன் புன்னகைத்தான்.

“இப்ப வரை அவனைப்பத்தி என்ன தகவல் நம்ம கிட்ட இருக்கு? இந்தா சில பழைய கேஸ்கள், ஒண்ணுரெண்டு பழைய விலாசங்கள், போட்டோ, கைரேகை. அவ்ளவுதான்… இந்த நாடு ஒரு பெரிய கடல். அவனை எங்க போயி தேட?”

அப்பாலிருந்து கான்ஸ்டபிள் குமரேசன் “சார்” என்றார்.

“சொல்லும்வே.”

“இல்ல, இங்க கஸ்பா ஸ்டேஷன் காண்டாக்டிலே அரிகிருஷ்ணன்னு ஒருத்தர் உண்டு” என்றார் “அவரை வேணுமானா கூப்பிட்டு கேட்டுப்பாக்கலாம்.”

“அவரு யாரு?” என்றேன்.

“அவரு ரிட்டயர்டு ஏட்டு… இந்த விசயத்திலே ஒரு எக்ஸ்பர்ட்டாக்கும்.”

“எக்ஸ்பர்ட்டுன்னா?” என்றேன் “அவருக்கு இவனுக கூட காண்டாக்ட் உண்டா?”

“சேச்சே, அவரு ரொம்ப நேர்மையான ஆளு. சாதுவான மனுஷன். வெளியே ஒரு ஆக்‌ஷனுக்குக்கூட போனவரு இல்லை. கடைசிவரை ரைட்டரா ஆபீஸு வேலையிலேதான் இருந்தாரு.” என்றார் குமரேசன்.

மாணிக்கம் “அவரு இங்க இதே ஊரிலே முப்பத்தேளு வருஷம் சர்வீஸிலே இருந்திருக்காரு. ரிட்டயர் ஆகி இருபத்தாறு வருசமாவுது. அறுபது வருசமா இங்க நடந்த எல்லா மேஜர் கிரைமையும் ஞாபகம் வச்சிருக்காரு. அந்த கிரிமினலுக்க சாதி, குடும்பம், சொந்தம், சுத்துப்புறம்,பழைய ஹிஸ்டரி எல்லாமே மனசிலே இருக்கு… அப்டியே ஞாபகம் வந்துகிட்டே இருக்கும். இப்பவும் அப்பப்ப வண்டி அனுப்பி கூட்டிட்டுவந்து கேக்குறதுண்டு” என்றார்.

“செரி, அப்ப கூட்டிட்டு வாங்க” என்றேன்.”பீஸு கேப்பாரோ?”

“இல்ல. அவருக்க பிள்ளைகள்லாம் டாக்டர் எஞ்சீனியர்னு நல்ல நெலையிலே இருக்காங்க. ஒரு மகன் இங்கேயே பார்ல சீனியர் லாயராக்கும். சும்மா நமக்காக வருவாரு.”

“நானே போய் கூட்டிட்டு வாறேன்” என்றான் ஸ்டீபன். “நமக்கும் ஆளை பரிச்சயப்பட்டது மாதிரி இருக்கும்.”

அவர்கள் கிளம்பிச் சென்றபின் நான் மீண்டும் ஃபைல்களை இன்னொருமுறை அணுவணுவாக வாசித்தேன். குற்றம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்திருந்தது. நகரின் வெளிப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் தனியாக தங்கியிருந்த முதிய தம்பதிகளை கொன்று பணத்தையும் நகைகளையும் திருடிவிட்டு தப்பியிருந்திருக்கிறான். கைரேகை நிபுணர்கள் அதைச் செய்தவன் ஒருவன்தான் என்று சொன்னார்கள். பழைய குற்றவாளி, பெயர் குள்ள சுப்ரமணியம்.

கொல்லைப்பக்கம் பாத்ரூம் ஜன்னலை கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்து அவர்களை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு பீரோ உட்பட எல்லா பூட்டப்பட்ட இடங்களையும் உடைத்தே திறந்து சாவகாசமாக திருடிவிட்டு சென்றிருந்தான். துப்புரவாக வீட்டை முழுக்க தேடியிருந்தான். எந்த பதற்றமும் இல்லை. ஊறிப்போன கட்டை.

ஆனால் குள்ள சுப்ரமணியம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு கடைத்திருட்டில் சிறை சென்றபோது எடுத்த புகைப்படம், தகவல்கள் தவிர வேறெந்த செய்தியும் இல்லை. அவன் கம்பியை உடைத்து வீட்டுக்குள் புகுந்து திருடுபவன். பொதுவாக நகை, பணம்தான். அடிதடி, வழிப்பறி கணக்கு ஏதுமில்லை. ஆயுதமேந்தும் வழக்கம் இல்லை.

அவனுக்கு மனைவி இருந்தாள், எட்டு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டாள். குழந்தைகள் இல்லை. அதற்குப்பின் பெண்தொடர்புகள் இல்லை. கூட்டாளிகள் எவருமில்லை. எங்கேயும் வழக்கமாக போவதில்லை. ஆற்றங்கரை சாஸ்தா கோயில் அருகே ஒரு மாடியில் ஒற்றை அறை வாடகைக்கு எடுத்திருந்தான். அங்கே ஒன்றுமே இல்லை. ஒரு துண்டு காகிதம்கூட. எல்லா தடையங்களையும் அழித்துவிட்டு சென்றிருந்தான். அந்த வீட்டுக்காரர்களுக்கு அவனைப்பற்றி ஒன்றுமே தெரியாது. பக்கத்து வீட்டுக்காரர்கள் அவனை பெரும்பாலும் பார்த்ததே இல்லை.

வருபவர் எப்படி என்ன துப்பு தரப்போகிறார்? அவருக்கு என்னதான் தெரிந்திருக்கும்? முதலில் அவநம்பிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக ஆவல். கொஞ்ச நேரத்திலேயே பொறுமையிழந்து எழுந்து நின்றுவிட்டேன்.

ஜீப் வந்து நின்றது. ஸ்டீபன் இறங்கி உள்ளிருந்து தளர்ந்து முதியவர் ஒருவரை கைப்பிடித்து கூட்டிவந்தான். நான் வாசல்வரை சென்று “வாங்கய்யா” என்றேன்.

“நல்லா இருங்கய்யா” என்றார். நெற்றியில் சந்தனம் அணிந்திருந்தார். காதில் துளசியிலை. வெள்ளைவேட்டி வெள்ளை சட்டை. கையை புஜம் வரை சுருட்டி வைத்திருந்தார்.

“உள்ளே வாங்க” என்று அழைத்துச் சென்றேன். அமர்ந்து கொண்டு மூச்சு வாங்கி இளைப்பாறினார்.

நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். “என் பேரு ராமகிருஷ்ணன்… இங்க இன்ஸ்பெக்டர். ஊரு நான்குநேரிப் பக்கம்.”

“ஆகா” என்றார். “பேரிலேயே எனக்குப் பிடிச்ச பேரு ராமகிருஷ்ணன்தான். ராமனும் கிருஷ்ணனும் உள்ள பேரு. என் மூத்த பையன் பேரு ராமகிருஷ்ணன்தான். டாக்டரா இருக்கான். இ.என்.டி அதோட நான்குநேரின்னா அது  வானமாமலைப் பெருமாளோட ஊருல்ல… அப்பா இருக்காரா?”

“ஆமா அங்கதான் இருக்காரு” என்றேன். “கோயிலிலே இருந்தீங்க போல?”

“ஆமா, எங்க குடும்பமே பறக்கை மதுசூதனப் பெருமாளுக்கு அடிமைப்பட்டதாக்கும். அங்க இப்ப ஏகாதசி சப்பரம். நம்ம கைங்கரியமும் கொஞ்சம் உண்டு.”

ஸ்டீபன் அவனே டீ கொண்டு வந்தான்.“சீனி போடல்ல ஐயா” என்றான்.

“வேண்டாம், நமக்கு சுகரு” என்றார்.

நான் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். அந்த ஃபைலை அப்படியே அவரிடம் கொடுத்துவிட்டேன். அவர் அதை விரிவாக வாசிக்கவில்லை. புகைப்படத்தை கண்ணாடியைப் போட்டுக்கொண்டு கூர்ந்து பார்த்தார். பெயரை மீண்டும் பார்த்தார்.

பிறகு நிமிர்ந்து “மாதேவனுக்க மகன்” என்றான்.

“யாரு?” என்றேன்.

“இந்த சுப்ரமணியம்… இவனுக்க அப்பன் பேரு மாதேவன். திருட்டுகேஸிலே எட்டுதடவை ஜெயிலுக்கு போயிருக்கான். அவனுக்க அப்பன் மல்லன் மகன்  அழகப்பன். அவனும் திருடனாக்கும்… திருவிதாங்கூர் ராஜ்ஜியத்திலேயே அவன் ரெண்டுதடவை ஜெயிலுக்கு போயிருக்கான்” என்றார்.

“இப்ப இந்த சுப்ரமணியம் தோராயமா எங்க இருப்பான்?” என்று கேட்டேன்.

அவர் அதைக் கேட்காதவர் போல “அழகப்பனுக்கு இங்க பெருவிளையாக்கும் ஊரு. அப்ப அங்கெல்லாம் காடுல்ல. பத்துப்பதினஞ்சு வயசிலேயே அவன் அந்த வழியா போறவங்களை வழிப்பறி செய்து அப்டியே தொளில்திருடனா ஆயிட்டான். ரெண்டு கூட்டுகாரனுக உண்டு. செவத்தான் மகன் மணிகண்டன். முருகேசன் மகன் வேலாண்டி. ஆளூர் மகாதேவய்யர் கொலையிலே முதல்பிரதிவாதி அழகப்பன். மத்த ரெண்டுபேரும் கூட்டுபிரதிகள். அப்பதான் திருவிதாங்கூர் போலீசு அவனுகளை பிடிச்சது.”

“ஓ” என்றேன். அவரே வரட்டும் என்று விடலாம் என்று தோன்றியது.

“அழகப்பன் ஜெயிலுவிட்டு வந்ததுமே டிபி வந்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியிலே செத்தான். அப்பல்லாம் ஜெயிலுக்கு போனாலே டிபி வந்திரும்” என்றார் “அழகப்பனுக்கு அஞ்சு பையனுங்க. ஒரு மகள். மகளை திருவனந்தபுரத்திலே கெட்டிக்குடுத்தான். அவபேரு தேவகி. அவளுக்க கெட்டினவன் அங்க மார்க்கெட்டிலே ஒரு ரவுடியா இருந்தான். செத்துட்டான். சிவராமன்னு பேரு.

தேவகிக்க  மூணுபையனுங்களிலே முருகனை சின்னவயசிலே ஆரோ குத்தி கொன்னுட்டாங்க. கிருஷ்ணன் அங்க சந்தையிலே தேங்கா வியாபாரம் செய்யுதான். அவன் தம்பி அர்ஜுனன் ஒரு தெருவு வியாபாரியாக்கும். ரெண்டுபேருக்கும் பிள்ளைங்க உண்டு. கிருஷ்ணனுக்க மகன் ஒருத்தனுக்கு கிரிமினல் ரெக்காட் உண்டு. பிக்பாக்கெட்டு. அவன் தம்பி எல்.ஐ.சி. ஏஜெண்டு. நாராயணன்னு பேரு. அர்ஜுனனுக்கு ஒரு மகன். அவன் பட்டாளத்திலே இருக்கான். அர்ஜுனனுக்கு ரெண்டு அடிதடி ரெக்கார்ட் உண்டு. மத்தபடி பிரச்சினை இல்லை.

அழகப்பனுக்க பிள்ளைகளிலே மூத்தவன் மகாராஜன். அவன் கனகமூலம் சந்தையிலே காய்கறி தரகு ஏவாரம் செய்தான். கிரிமினலுதான். அடிதடி திருட்டு கேஸுகள் உண்டு.  அவனை ஆரோ குத்தி கொன்னுட்டாங்க. அவனுக்கு மூணு பிள்ளைங்க. ஒருத்தன் நாகர்கோயிலிலே ஆட்டோ ஓட்டுதான். ராம்குமார்னு பேரு. கிரிமினல் ரெக்காட் உண்டு. சாராயம் கடத்தல், ஆள்கடத்தல்னு நாலுகேஸு. ஒண்ணிலே ஜெயிலுக்கு போயி வந்தான். இன்னொருத்தன் மகேஷ், இங்க ஒரு கம்பிக்கடையிலே வேலைபாக்குதான். மூணாமத்தவன் சிவப்பிரசாத். கோணம் காலேஜிலே பிடெக் படிக்கான். அவனுக ரெக்கார்ட் இல்லாதவனுக.

மகாராஜனுக்க தம்பி விஸ்வநாதன் கோட்டாறிலே ஒரு இரும்புக்கடையிலே வேலை பாத்தான். அவன் இப்ப இல்லை. அவனுக்கு ஒரு மகள். மாதவின்னு பேரு. அவளை கெட்டினவன் ஒரு ஆட்டோ ரிக்சாக்காரன். பரமசிவம். அவளுக்கு ரெண்டு சின்னப்பிள்ளைங்க.  பரமசிவம் கிரைம் உள்ளவன். ஆனா இதுவரை கேஸ் இல்லை. விஸ்வநாதனுக்கு தம்பி சுந்தரம். அவனும் கிரிமினலாக்கும். கேரளத்துக்கு அரிசி கடத்துத தொளிலு. அவன் இப்ப இல்லை. அவனுக்கு ரெண்டு பிள்ளைக. அதிலே மக பேரு ஸ்ரீதேவி. அவ இப்ப கொல்லத்திலே இருக்கா. அவளுக புருசன் அங்க தரகு ஏவாரம். அவனுக்கும் கொஞ்சம் கிரைம் உண்டு. வட்டிக்கு குடுக்கான். அவளுக்கு நாலு பயக்க. சீனிவாசன், மாதவன், ஸ்ரீகுமார், ஸ்ரீராமன். நாலுபேருமே சில்லறை ரவுடிகளாக்கும். எல்லார் பேரிலேயும் ரெக்கார்ட் உண்டு.

அழகப்பனுக்க பிள்ளைகளிலே கடைக்குட்டி குமரேசன் யோக்கியன். இவனுக சங்காத்தமே வேண்டாம்னு கேரளாவிலே ஆரியநாடு பக்கமா போயிட்டான். அங்க அவன் பெண்ணு கெட்டி ரெண்டு பிள்ளைக. ஒருத்தன் சங்கரன் அவனுக்கு ரப்பர் டாப்பிங் வேலை. இன்னொருத்தன் கடை வச்சிருக்கான். அவனுக ரெண்டு பேரும் யோக்கியமானவனுகதான். குமரேசன் இப்ப இல்லை. செத்துட்டான்.

அவர் தனக்குத்தானே ஒரு பெரிய ஜெபம் போல சொல்லிக் கொண்டே இருந்தார். நினைவிலிருந்தே அவ்வளவு பெரிய வம்சகதை விரிந்து வருவதைக் காண பிரமிப்பாக இருந்தது. அவர் எனக்காகச் சொல்லவில்லை என்று தெரிந்தது. அதை நினைவில் வைத்திருக்க முடியாது. அவர் மனதிலுள்ள ஒரு பெரிய வரைபடத்தில் விரல்வைத்து தொட்டுத்தொட்டு தேடிச்செல்கிறார்.

அவர் சொல்லிக்கொண்டே சென்றார். “மாதேவனுக்கு மூணு பிள்ளைங்க. மூத்தவ மகள். அந்த மகளை சங்கரன் கோயிலிலே கெட்டிக் குடுத்திருக்கான். அவபேரு கோமதி. அவ புருஷன் அங்க ஒரு ஓட்டலு வச்சிருந்தான். அவன் பேரு நயினார். அவளுக்கு நாலு பிள்ளைங்க. நாலுலே ரெண்டுபேரு பம்பாயிலே ஓட்டல் வச்சிருக்கானுக. மணிகண்டன், ராமச்சந்திரன்னு பேரு. ஒருத்தன் பி.டபிள்யூ.டியிலே பியூனு. கண்ணன்னு பேரு. ஒருத்தன் ஃபாரஸ்டு கார்டு. அவன்பேரு மாணிக்கவேல்.

நயினாருக்கு ஒரு தம்பி உண்டு, கண்ணன்னு பேரு. அவன் கிரிமினல். அவனுக்கு நாலஞ்சு அடிதடி வழக்கு இருக்கு. சங்கரநயினார் கோயிலிலே அவன் ஒரு கேங்கிலே இருந்தான். இப்ப காலு வாதம் வந்து வெலகி இருக்கான். அவனுக்க பிள்ளைகளிலே மூத்தவன் அருணாச்சலம். அவன் இப்பவும் அந்த கேங்கிலேதான் இருக்கான். மத்தபயக்க யோக்கினனுங்க. மெட்ராஸிலே இருக்கானுக. இவனுக கூட தொடர்பு வச்சுகிடமாட்டானுக.

சுப்ரமணியன் முதல் பையன். அவனுக்க தம்பியும் ஆளு கிரிமினலாக்கும். கணேசன்னு பேரு. வழிப்பறி திருட்டு எல்லாம் உண்டு. அவன் மதுரையிலே இருக்கான். அவனுக்கு அங்க ரெண்டு பெஞ்சாதி. ரெண்டுபேரும் கூட இல்லை. அவளுக ரெண்டு பேருமே பிராத்தல் கேஸுகள். சரஸ்வதின்னு ஒருத்தி. கிருஷ்ணம்மாள்னு ஒருத்தி. அவளுக எங்க இருக்காளுகன்னு தெரியாது. அவன் அங்க தனியா குடிச்சு சீரளிஞ்சிட்டிருக்கான்.

“இவன் சுப்ரமணியன் பத்தாம் கிளாஸு பெயிலாயி இங்க ஒரு சிமெண்டு கடையிலே வேலைபாத்தான். அப்பவே குடி உண்டு. பதினெட்டு வயசிலே முதல் கேஸிலே மாட்டியாச்சு. இதுவரை நாலு முறை ஜெயிலிலே இருந்திருக்கான். எல்லாமே திருட்டு. இதுக்கு முன்னாடி வழிப்பறியிலே ஒருத்தனை வெட்டியிருக்கான். கையோட போச்சு. இதுதான் முதல் கொலை” என்றார் அரிகிருஷ்ணன்.

“நிதானமா செய்திருக்கான்” என்றேன்.

“இல்லை, பதறியடிச்சு செஞ்சிருக்கான். என்ன செய்யணும்னு தெரியாததனாலே ரூமிலேயே சுத்திச்சுத்தி வந்திருக்கான்” புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி “இங்க பாருங்க. இது பெட்ரூம் வார்ட்ரோபிலே இருந்த துணி. இதை சமையலறையிலே போட்டிருக்கான். அப்ப கைமறதியா எடுத்திட்டு வந்திருக்கான்னு அர்த்தம். அது அவனுக்க பதற்றத்தைத்தான் காட்டுது” என்றார். “படிச்ச கிரிமினல் தேவையில்லா பொருளை தொடமாட்டான். பொருள்களை அங்க இங்க கொண்டுட்டு போகமாட்டான்.”

நான் உடனே படுக்கையறையில் கிடந்த சம்புடத்தையும் புகைப்படத்தில் பார்த்துவிட்டேன். “ஆமா, உண்மைதான்” என்றேன்.

“கொலை செய்யக்கூடியவன் இல்லை. பெரும்பாலும் திருடனுங்க கொல்ல மாட்டானுக. கொன்னா பயந்துபோயி செய்தான்னு அர்த்தம். திட்டமிட்டு கொள்ளையடிக்குதவன் கொல்லுவான். ஆனா கண்டிப்பா ஒரு கிளவுஸ் இல்லாம வரமாட்டான்.”

“எங்க போயிருப்பான்?” என்றேன். “ஓட்டல் ரூமுன்னு தங்கமுடியாது… போலீஸு பின்னாடி வந்திட்டே இருக்கும்னு தெரிஞ்சிருக்கும்.”

“ஆமா அவன் எங்கியாம் வீட்டுக்குள்ளதான் தங்கணும். வெளியே வராம. ஒரு மூணுமாசம் முகம் வெளியே காட்டாம இருந்தா நியூசு பழசா ஆயிடும்… அவன் ஒளிஞ்சிருக்க இடம்தான் தேடுவான். அதோட அவன் ரூமை பாத்தேன்..” என்று ஃபோட்டோவை காட்டினார் “பீடிக் குப்பையா இருக்கு. பெரும்பாலான நேரம் ரூமிலேயே தனியா இருந்திருக்கான்.”

“ஆமா” என்றேன். “தனிமையான ஆள். போட்டோவிலேயே தெரியுது.”

“இந்தமாதிரி ஆளுகளை நாங்க பெருச்சாளிகள்னு சொல்லுவோம். தனியா பதுங்கி இருக்கிறதுதான் இவனுகளுக்க ரீதி. அப்ப கண்டிப்பா அதுக்கான இடம்தான் தேடுவான். கூடிய சீக்கிரமே எங்கியாவது போயி பதுங்கத்தான் பாப்பான். ரொம்பதூரம் போய்ட்டே இருக்கமாட்டான். அலையமாட்டான்” என்றார்.

“யாருகிட்ட போயிருப்பான்?” என்று நான் கேட்டேன்.

“அவனுக்க ரீதி என்னன்னு பாக்கணும். சிலபேரு நிறைய பேசுவான். பேசுதவனுக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் இருப்பாங்க. அவன் அங்கதான் போவான். குறைவா பேசுதவனுக்கு ஒண்ணு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. அவன் அங்க போக வாய்ப்பிருக்கு. இவனுக்கு ஃப்ரண்ட்ஸ் இல்லை… அதாவது இப்ப தெரியல்லை. அப்டி இருந்தா அது ஒரு அடுக்கு. பிறகு தேடுவோம்.

“அப்ப சொந்தக்காரங்க வீட்டுக்குத்தான் போயிருப்பான்” என்றான் ஸ்டீஃபன்.

“இந்த சொந்தக்காரங்க லிஸ்டிலே கிரிமினல் டெண்டென்ஸி உள்ளவங்க வீடுகள் ஏது?” என்றேன். “ஏன்னா அவன் படத்தோட நியூஸ் வந்திட்டுது. எங்கபோனாலும் திருடீட்டு வந்திருக்கான்னு தெரிஞ்சிரும்… பங்கு வாங்குறவந்தான் ஒளிச்சு வைப்பான்.”

“ஆமா அது ஒரு கோணம். அது. அது இன்னொரு அடுக்குன்னு வைப்போம். அவனுக்க கிரிமினல் பேக்ரவுண்டு தெரியாதவங்க வீட்டுக்கு போவான்னு வைப்போம். அதுதான் முதல் ரவுண்டு.”

“அப்டி யாரும் இங்க இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் இவன் போனதுமே தெரிஞ்சிரும்… ஒரு வாரத்துக்குள்ள கண்டிப்பா தெரிஞ்சிரும். டிவியிலே காட்டுறாங்க” என்றேன்.

“அப்ப இவன் வெளியூரு போகணும். ஆனால் தமிழ்தவிர வேற பாசை தெரியாது. இதுவரை தமிழ்நாட்டு எல்லையை விட்டு வெளியே போனதில்லை. திடீர்னு அப்டி போயிருக்க மாட்டான்.”

அவர் மீண்டும் சுட்டுவிரலால் தேடித்தேடிப் போனார். ஒவ்வொருவரையாக தொட்டு விலக்கினார். பிறகு “இப்ப இவனுக்குச் சரியான ஆளுன்னா யாரு? இங்க என்ன நடக்குதுன்னு தெரியாதவன். அதாவது வெளியே எங்கியாவது இருக்கிறவன்… இவனை அறிமுகம் இருக்கும். வேண்டப்பட்டவனாக்கூட இருப்பான். ஆனா பேக்ரவுண்ட் முழுசாத் தெரிஞ்சிருக்காது… அப்டி ஒருத்தன்”

நான் அவர் எங்கே போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். “சங்கரன்கோயில் கோமதிக்க பிள்ளைங்க மணிகண்டனும் ராமச்சந்திரனும் பம்பாயிலே ஓட்டல் வச்சிருக்கானுக… அவனுகளுக்கு இங்க உள்ள நியூஸு தெரியாம இருக்க வாய்ப்பிருக்கு.”

“ஆமா என்றேன் “மும்பைக்கு போயிருப்பான்.”

“இருங்க. அவன் அப்டி கெளம்ப மாட்டான். அப்டி போற ஆளு இல்லை” என்றார். “வழக்கமா பம்பாய்க்காரனுக இங்க ஏதாவது சொத்து வாங்குவானுக. தோப்போ தோட்டமோ. அதை இங்க யார் பொறுப்பிலயாவது விட்டிருவானுக…”

“ஆமா” என்றேன்.

“அப்டி ஒரு சொத்து இருந்தா அதிலே போயி தங்குறதுதான் ஈஸி. தோட்டத்திலே ஒரு குடிலிலே தங்கிட்டா யாரும் கேக்கமாட்டாங்க. வாட்ச்மேன்னு நினைச்சுக்கிடுவாங்க.”

“சொத்து வாங்கியிருந்தா இந்த பி.டபிள்யூ.டி பியூனு கண்ணனுக்கு தெரிஞ்சிருக்கும். இல்லேன்னா ஃபாரஸ்டு கார்டு மாணிக்கவேலுக்கு தெரிஞ்சிருக்கும். ரெண்டுபேருமே சொத்து வாங்கிக்குடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கு” என்று அவரே தொடர்ந்து சொன்னார்.

“ஆமா” என்றேன்.

“இந்த பியூன் கண்ணன் அம்பாசமுத்திரத்திலே இருக்கான். மாணிக்கவேலு பாபநாசத்திலே இருக்கான். ரெண்டுபேர்கிட்டயும் பொதுவா பம்பாய்க்காரனுகளுக்கு என்ன சொத்து இருக்குன்னு கேட்டுப்பாருங்க.”

“அதை இப்பவே கேட்டிடலாம். ரெண்டுபேருமே சர்க்கார் எம்ப்ளாயீஸ். அரைமணிநேரத்திலே பிடிச்சிடலாம்…” என்றேன்.

“செரி, இது முதல்ரவுண்டு… இதை கிளியர் பண்ணிட்டு அப்டியே கீழே எறங்கி மத்த அடுக்குகளிலே தேடுவோம்” என்று எழுந்தார். “நான் கொஞ்சம் படுக்கணுமே. நல்ல முதுகுவலி இருக்கு. எனக்கு ஒரு மத்தியான்ன உறக்கம் வழக்கமாக்கும்.”

“இங்க பெட் இருக்கு வாங்க” என்றான் ஸ்டீஃபன்.

அவரை அவன் கொண்டு சென்று படுக்கவைத்தான். அதற்குள் நான் ஆணைகளை பிறப்பித்துவிட்டேன். ஒருமணிநேரத்தில் பியூன் கண்ணனிடம் பேசினார்கள். அவன் ஃபரஸ்ட் கார்டு மாணிக்கவேல் மும்பையிலிருக்கும் மணிகண்டனுக்காக பாபநாசத்தில் பதினெட்டு ஏக்கர் நிலம் வாங்கிக்கொடுத்ததாக தெரிந்தது.

ஃபாரஸ்டு கார்டு மாணிக்கவேலை மேலும் ஒருமணி நேரத்தில் தொடர்பு கொண்டார்கள். அவனை அழைத்துக் கொண்டு பாபநாசத்தில் அந்த நிலத்திற்குச் சென்றார்கள். மாணிக்கவேல் மணிகண்டனுக்கு நிலத்தை வாங்கிக் கொடுத்து ஆறு ஆண்டுகள் ஆகிறது. அங்கே பிறகொருமுறை போனதில்லை. அந்த வியாபாரத்தில் அவனுக்கும் மணிகண்டனுக்கும் மனக்கசப்பு.

மேலும் ஒருமணி நேரத்தில் பாபநாசம் எஸ்.ஐ.கருப்புப்பாண்டி தகவல் தெரிவித்தான். குள்ள சுப்ரமணியத்தை பிடித்துவிட்டார்கள். தோட்டத்திற்குள் இருந்த சிறிய பம்ப்செட் கட்டிடத்தில் அவன் தங்கியிருந்திருக்கிறான். குற்றம் நடப்பதற்கு முன்னரே மணிகண்டனிடம் ஃபோனில் பேசியிருக்கிறான். மணிகண்டன் தன் நிலத்தை கவனித்துக்கொண்ட வாட்ச்மேன் ஞானக்கண்ணிடம் ஃபோனில் சொல்லி சுப்ரமணியத்தை அங்கே தங்கவைத்திருக்கிறான். அந்நிலத்தை பார்த்துக்கொள்வதாக மணிகண்டனுக்கு சுப்ரமணியம் வாக்களித்திருந்தான். அங்கே வந்த நாள்முதல் முழுக்க முழுக்க உள்ளேயே இருந்திருக்கிறான்.

“பிடிச்சாச்சு சார். உக்கார வைச்சிருக்கோம். நகையையும் பணத்தையும் மீட்டாச்சு…” என்றான் கருப்புப்பாண்டி.

“சூப்பர் வேலை கருப்பு… தேங்க்ஸ் மக்கா” என்றேன்.

“தேங்ஸ் சார்” என்றான் “ஆனா சரியா எப்டி அங்க கையை வச்சீங்க?”

“அதொரு மெண்டல் மேப்பு… பிறகு சொல்லுதேன்.”

அரிகிருஷ்ணன் எழுந்து முகம் கழுவி ஒரு டீ குடித்துவிட்டு என் மேஜைக்கு வந்தபோது நான் சிரித்தபடி “ஆளை பிடிச்சாச்சு சார்” என்றேன்.

“அப்டியா? அங்கதானா?”

“அங்கேயேதான்… உங்களை பர்சனலா தெரியல்லன்னா உங்ககிட்ட சொல்லிட்டு போயிருக்கான்னுதான் போலீஸ்காரன் மூளை வேலைசெய்யும்” என்றேன்.

சிரித்துக்கொண்டே அவர் அமர்ந்துகொண்டார். ”அப்ப நான் கிளம்புறேன்” என்றார்.

“ஜீப்பு இருக்காடே?”என்று நான் டிரைவர் நாகமாணிக்கத்திடம் கேட்டேன்.

“சார் கொண்டு போயிருக்காரு. ஒரு அக்கூஸ்டை பிடிக்க… இப்ப அரை மணிநேரத்திலே வந்திருவாரு.”

“பரவாயில்லை” என்று அரிகிருஷ்ணன் சொன்னார்.

“நான் ஆச்சரியப்படுறது உங்க ஞாபகசக்தியை. ஒத்த ஒரு கிரிமினலுக்க மூணுதலைமுறையோட முழுக்கதையையும் சொல்லுறீங்க… அப்ப்டி எத்தனை கிரிமினலுகளை ஞாபகம் வச்சிருப்பீங்க?”

“தெரியல்ல, ஆனால் இதுவரை இந்த ஜில்லாவிலே எனக்குத்தெரியாத ஒரு கிரிமினலை பாக்கல்லை” என்றார் அரிகிருஷ்ணன்.

“யப்பாடா… ஒரு ஐநூறு இருக்குமா?”

“ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு மேலே இருக்கும்” என்று புன்னகைத்தார்.

“அவ்ளவு பேரோடயும் முழுக்கதைன்னா எவ்ளவு… லெட்சம் பேரு இருக்கும்போல இருக்கே.”

“இருக்கலாம்… மனுசமூளையிலே பலகோடி நியூரான்ஸ் இருக்குன்னுல்லா பேச்சு.”

“எப்டி தெரிஞ்சுகிட்டீங்க? எப்டி ஞாபகம் வச்சிருக்கீங்க?”

“எப்டி தெரிஞ்சுக்கிட்டேன்னு எனக்கே தெரியாது. அதுக்குன்னு எதுவுமே செய்றதில்லை. எழுதி வச்சுக்கிடுறதில்லை. கூர்ந்து கவனிப்பேன். பேருகளை ஒருதடவைக்கு பத்துதடவை சொல்லிக்கிடுவேன். அப்டியே மனசிலே பதிஞ்சிரும்” என்றார் “நான் இதெல்லாம் பெயரா நினைச்சுக்கிடுறதில்லை.. அப்டியே முகங்களா, உயிருள்ள ஆட்களா, நான் நேரிலே பழகினவங்களா நினைச்சுக்கிடுவேன். இவங்களை நான் நேரிலே பாத்ததுண்டான்னு கேட்டா தெளிவா சொல்லமுடியாது.”

“அப்டியா?”

“ஆமா, எப்பவுமே கிரிமினல்களை நேரிலே பாக்கிறப்ப அவனை முன்னாடியே பாத்தது மாதிரித்தான் இருக்கும். ஒரு தடவைகூட முகம் நான் கற்பனை பண்ணின மாதிரி இல்லியேன்னு நினைச்சதில்லை” என்று அவர் புன்னகைத்தார்.

என்னால் கற்பனை செய்யவே முடியவில்லை. “ஒருமாதிரி நம்ப முடியாமத்தான் இருக்கு”

“அப்டி இல்லை. ஒருத்தரோட ஆர்வம் ஒரு விஷயத்திலே குவிஞ்சிருக்கிறப்ப மத்தவங்களுக்கு அது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. பெரும்பாலானவங்களுக்கு அப்டி கவனம் ஒருவிஷயத்திலே குவியறதில்லை. அவங்க நூறுவிஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கிறதை நான் ஒரே விஷயத்திலே ஞாபகம் வச்சிருக்கேன், அவ்ளவுதான்.”

“அப்டி ஈஸியா சொல்லிடமுடியாது” என்றேன்.

“அவ்ளவுதான். இது என்னை மீறி நடந்திட்டிருக்கிறது. எங்க அப்பா கான்ஸ்டபிளா இருந்தாரு. அவரு வீட்டிலே கிரிமினல்களைப் பத்தி அம்மாகிட்ட பேசிட்டிருப்பாரு. அதைக்கேட்டு நான் வளந்தேன். பத்துப்பதினஞ்சு வயசுக்குப்பிறகு அவரே எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லுவாரு. நான் பதினெட்டு வயசிலே போலீசுக்கு வந்தாச்சு. இப்ப வரை வேற நினைப்பே இல்லை” என்றார்.

“ஆச்சரியம்தான்” என்றேன்.

“நான் ஒண்ணுமே பண்றதில்லை. ஆனா நியூஸ்லே நம்ம ஜில்லா கிரைம் மட்டும்தான் பாப்பேன். இதுசம்பந்தமான டாக்குமெண்ட்ஸ் ஏராளமா வச்சிருக்கேன். அதைத்தான் நேரம் போகல்லேன்னா படிப்பேன். வேற சினிமா டிவி அரசியல் ஒண்ணிலயும் இன்ட்ரெஸ்ட் இல்லை. இப்ப சுகர் இருக்கு. ஆனா அந்த நோய் பத்தி ஒண்ணுமே தெரியாது. அதைப்பத்தி வாசிக்கவே என்னாலே முடியாது. டாக்டர் சொன்னாக்கூட ஞாபகத்திலே நிக்காது. நான் சாப்பிடுத மருந்துக்க பேரு தெரியாது… கிரைம் கிரிமினல் தவிர எதுவுமே நிக்காது. அது அப்டி அமைஞ்சுபோச்சு.”

நான் “ஐயா ஒண்ணு கேக்கலாமா, தப்பா நினைக்கமாட்டீங்களே” என்றேன்.

“சொல்லுங்க” என்றார்.

“இல்லை இந்த ஆர்வம் வர்ரதுக்கு என்ன காரணம்? கிரைமுக்குமேலே அவ்ளவு வெறுப்பா? கிரிமினலுகளை பிடிக்காதா?”

“சேச்சே, கிரிமினலுகளை பிடிக்கிறதோட நம்ம வேலை முடிஞ்சுபோவும். நான் அவனுகளுக்க கேசிலேகூட பட்டுக்கிட மாட்டேன்… நான் கோர்ட்டுக்கே போனதில்லை.  கிரைம் கிரிமினல் இதெல்லாம் எப்பவும் உள்ளதுதானே? என்ன வெறுக்கிறதுக்கு இருக்கு?”

நான் சற்று முன்னகர்ந்து “சரி, அப்ப விரும்பறீங்களா?”

“எதை?”

“கிரைமை? உங்களை கிரிமினலா நினைச்சுக்கிடுவீங்களா? கிரைமையெல்லாம் மானசீகமா செஞ்சுபாப்பீங்களா? ஒரு கிரிமினலாத்தான் இந்த கிரைம் உலகத்திலே வாழுறீங்களா?”

அவர் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு “சட்டுன்னு சொல்லவேண்டாமேன்னு பாத்தேன். நீங்க கேட்டதனாலே மனசுக்குள்ள நினைச்சு நினைச்சு பாத்தேன். கண்டிப்பா இல்லை. எந்தக் கிரைமையும் நான் மானசீகமா செஞ்சு பாத்ததில்லை. எந்த கிரிமினலாகவும் நான் என்னை நினைச்சுக்கிட்டதே இல்லை. உறுதியாச் சொல்வேன். ஒருமுறைகூட கெடையாது. அவங்க வேற, நான் வேறதான். அது என் மனசிலே ஆழமா இருக்கு…”

“புரியுது” என்றேன்.

“அப்டி விலக்கிட்டிருக்கிறதனாலே தான் என்னாலே அப்டி விரிவா அவனுகளை பாக்க முடியுது.”

“அப்ப நீங்க யாரு? இந்த எடத்திலே உங்க ரோல் என்ன?”

“புரியல்லை.”

“நீங்க இந்த கிரிமினல்களோட ஹிஸ்டாரியனா?”

“நானா?” என்றார் “நான் எங்க இவனுகளைப் பத்தி எழுதப்போறேன்? நமக்கு கேஸ் பெட்டிஷன்தான் வரும்.”

“அசுரகுலத்துக்கு சுக்ராச்சாரியார் மாதிரி கிரிமினலுகளுக்கு நீங்க குலகுருவா?” என்றேன்.

“என்ன சொல்றீங்க? நான் என்ன இவனுகளுக்கு அட்வைஸா பண்ணுதேன்?”

“இல்லைதான். ஆனா இவங்க அத்தனை பேரைப்பத்தியும் முழுசா தெரிஞ்சவரு நீங்க மட்டும்தானே? அசுரர்களோட எண்ணிக்கை சுக்ராச்சரியாருக்கு மட்டும்தான் தெரியும்னு புராணத்திலே இருக்கு”

அவர் சிரிக்கவில்லை. சற்றுநேரம் யோசித்துவிட்டு “இருக்கலாம்…சுக்ரர்! நல்லாத்தான் இருக்கு” என்றார்.

ஜீப் வந்த ஓசை கேட்டது. அரிகிருஷ்ணன் எழுந்துகொண்டு “அப்ப சுக்ராச்சாரியார் கெளம்பறேன்” என்றார்.

“நான் சும்மா ஒரு க்யூரியாசிட்டிக்காகத்தான் கேட்டேன்… தப்பா நினைச்சுக்கிடாதீங்க”

“சேச்சே, இதிலே தப்பா என்ன?” என்று அரிகிருஷ்ணன் சொன்னார்.

ஸ்டீஃபன் வந்து நின்றன். நான் ஸ்டீபனிடம் “ஆளை பிடிச்சாச்சு” என்றேன்.

“அய்யோ, எங்க?”

“சார் சொன்ன இடத்திலே. பாபநாசம் பக்கம் ஒரு எஸ்டேட்டிலே”

“கிரேட்… தேங்க்யூ சார்” என்றான் ஸ்டீபன்.

“சேச்சே, இது நம்ம வேலைல்லா” என்றார் அரிகிருஷ்ணன்.

நான் “ஐயா கடைசியா ஒரு கேள்வி” என்றேன். “உங்க நினைப்பு முழுக்க கிரிமினலும் கிரைமுமா இருந்திட்டிருக்கு… நீங்க பெருமாளுக்கு முழுமனசு குடுக்கவேண்டியவரு… இப்டி ஆயிட்டோமேன்னு நினைக்கிறதில்லியா?”

“தம்பி, இது பெருமாளில்லைன்னு யாரு சொன்னது?” என்றார். என் தோளில் தட்டிவிட்டு சிரித்தபடி ஸ்டீபனின் தோளைப் பற்றிக்கொண்டு நடந்துசென்றார்.

***

முந்தைய கட்டுரைவசையே அவர்களின் உரிமைப்போர்
அடுத்த கட்டுரைமணிபல்லவம்