சட்ட நடவடிக்கை
சட்டநடவடிக்கை பற்றி…
சென்ற ஆண்டு என்மேல் தாக்குதல் தொடுக்கப்பட்டபோது இணையத்தில் ஒரு பெருங்கும்பல் கொண்டாட்டமிட்டது. கேலி கிண்டல் வசைகள். அப்போது ஒரு நண்பர், கணிப்பொறித்துறையின் மிக உயர் பதவியில் இருப்பவர், அப்படி களியாட்டமிட்டவர்களின் முழுப் பட்டியலை எடுத்து எனக்கு அனுப்பினார்.
அவர்களில் பலர் புனைபெயரில் போலி ஐடிகளில் எழுதியிருந்தனர். எனக்கு அது ஒரு பெரிய கண்திறப்பு. ஒன்று, இந்த போலி ஐடி வைத்துக்கொள்வது எல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது என்ற புரிதல். இரண்டு மணிநேரத்தில் போலி ஐடி வைத்திருப்பவரின் ஃபோன் எண், ஆதார் எண் வரை இணைய நிபுணர்களால் எடுத்துவிடமுடியும். குறிப்பாக செல்பேசியில் இருந்து பதிவு போட்டால் அரைமணிநேரம்கூட ஆவதில்லை.
இரண்டு, அவ்வாறு வசைபாடியவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் மாற்றுமதத்தவர். வெறும் மதக்காழ்ப்புதான் அவர்களின் உந்துசக்தி. அவர்கள் திக, திமுக, கம்யூனிஸ்ட் என பல வேடமிட்டிருக்கலாம். அடிப்படையில் கிறித்தவ, இஸ்லாமிய மதத்தவர்.
அவர்களில் பலர் எனக்குத் தெரிந்தவர்கள் என்பதும் என்னிடம் வேறு முகம் காட்டியவர்கள் என்பதும் பெரிய அதிர்ச்சி. பலர்மேல் மிக எளிதாக என்னால் மறுதாக்குதல் தொடுத்திருக்கமுடியும். என் அதிதீவிர வாசகர்கள் தலைமைவகிக்கும் நிறுவனங்களின் எளிய ஊழியர்கள் அவர்களில் பலர். என் நண்பர்களான திரை இயக்குநர்களிடம் உதவியாளர்களாகப் பணியாற்றுபவர்கள் சிலர்
ஒருநாள் முழுக்க யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அனுப்பியவரின் நோக்கம் அந்தத் தாக்குதலில் இருந்த மதவெறியைச் சுட்டிக்காட்டுவது. அவருடைய அரசியல் அது. அதற்கு நான் ஆட்படவேண்டுமா என்று யோசித்தேன். அதைவைத்து இஸ்லாமிய கிறிஸ்தவ மதத்தவர் அனைவரையும் மதிப்பிட ஆரம்பித்துவிடுவேனா? கொஞ்சமாவது வஞ்சம் வந்துசேருமா?அது எனக்கு ஒரு வீழ்ச்சியாக ஆகுமா?
ஒரே அழுத்து. மொத்த தகவலையும் அழித்தேன். இப்போதும் அவர்களில் பலருடன் பேசிக்கொண்டேதான் இருக்கிறேன். அவர்களில் ஒருவர்– புளிச்சமாவு என்று நாளுக்கொரு பதிவு போட்டுக்கொண்டே இருப்பவர்– கூப்பிட்டு என் கதை ஒன்றை நெட்ப்ளிக்ஸுக்காக அளிக்கமுடியுமா [இலவசமாக] என்று கேட்டார். சரி என்றபோது சிரித்துக்கொண்டிருந்தேன்.
இதுதான் என் அரசியல். எழுத்தியக்கம் என்பதில் எங்கோ கொஞ்சம் காழ்ப்பு இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் புலமைக்காய்ச்சல், கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் கருத்தியல் முரண்பாடுகள். அதோடு இலக்கியம் என்பதே மனப்பதிவுகளின் உலகம். ஒருவர் அவர் எழுத்து செயல்பாடு வழியாக என்னவாக என்க்கு தென்படுகிறார் என்பது என் பார்வை. அதை நான் முன்வைக்கையில் எங்கே தாக்குதலாக ஆகிறது என்று கணிக்கமுடியாது.
ஆகவேதான் எந்நிலையிலும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. எந்நிலையிலும் சொல்வதற்கு கருத்து என ஒன்று இல்லாவிட்டால் மறுப்பும் எழுதுவதில்லை. வசையாளர்களின் பிரச்சினை அவர்களுக்குரியது, அவர்கள்தான் அதை தீர்த்துக்கொள்ளவேண்டும். ஒருவகையில் அவர்கள் என்னுடைய பிரச்சாரகர்கள்.
ஆகவே நண்பர்கள் நான் ‘பொறுமையிழந்து’விட்டதாக எண்ணவேண்டாம். இப்போதும் அதே நிலைபாடுதான். அதே பொறுமைதான். ஆனால் இலக்கியச்சூழலுக்கு வெளியே உள்ள அரசியல்வாதிகள்,சாதிச்சங்க ஆட்கள் இலக்கியவாதிகளை மிரட்டுவதை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன்.