சட்டநடவடிக்கை பற்றி…

சட்ட நடவடிக்கை-1

சில நண்பர்கள் என்னுடைய சட்ட நடவடிக்கை என்னும் கட்டுரைக்கு மறுப்பும் வருத்தமும் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று கோரியிருக்கிறார்கள்.  ‘இது கருத்தியல் செயல்பாட்டை முடக்கும் செயல்’ என்று ஒருவர் எழுதியிருந்தார்.

அதேதான் என் கருத்தும். நீதிமன்றங்களில் இலக்கியச் செயல்பாடுகள், கருத்துச்செயல்பாடுகள் தீர்த்துக்கொள்ளப்படும் என்றால் இங்கே எதுவுமே பேசமுடியாது. எதையுமே நீதிமன்றம்கொண்டுசெல்லலாம், இழுத்தடிக்கலாம், எதற்குமே தீர்வுபெறமுடியாது.

இது கருத்தியல்செயல்பாட்டை முடக்கும் செயல் என்று சொல்லும் நண்பர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்திருக்கவேண்டியது பா.செயப்பிரகாசம் அவர்கள் தன் வழக்கறிஞர் அஜிதா என்பவர் வழியாக அனுப்பிய வக்கீல்நோட்டீஸுக்கு. என் தளத்தில் வந்த ஒற்றைவரிக்காக அந்த சட்டநடவடிக்கை அவர்களால் எடுக்கப்பட்டது.

அவருக்கும் சட்டநடவடிக்கை வேண்டும் என்று அவரை தூண்டிவிட்டவர்களுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கவேண்டும். அதை எவரும் செய்யவில்லை. நான் திருப்பி நடவடிக்கை எடுக்கும்போது என்னிடம் பேச ஓடிவருகிறார்கள்.

திரு எஸ்.வி.ராஜதுரை அவர்கள் என்மேல் அவதூறு வழக்கு தொடுத்தார். அது ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. எஸ்.வி.ராஜதுரை அவர்கள் இதுவரை  நீதிமன்றம் வரவில்லை. பலமுறை சம்மன் சென்றும்கூட. ஆகவே வழக்கு நிலுவையில் இருக்கிறது.

அப்போதே எஸ்.வி.ராஜதுரைமேல் அவர் எனக்கு அனுப்பிய அந்தக் கீழ்த்தரமான வக்கீல்நோட்டீஸின் பேரில் ஒரு வழக்கு தொடுக்கும்படிச் சொன்னார்கள். அதற்கு அவர் நீதிமன்றம் வந்திருக்கவேண்டியிருக்கும். ஆனால் அதை நான் செய்யவில்லை. எனக்கு அவருடைய பங்களிப்பு, நேர்மை மேல் நம்பிக்கை உண்டு. அதை திரும்பத்திரும்பச் சொல்லியிருக்கிறேன்.

அவர்மேல் நான் முன்வைத்த குற்றச்சாட்டு என்பது தமிழ் கருத்துலகச் செயல்பாட்டில் அன்னிய நிதி ஊடுருவல் சம்பந்தமானது.அவருடைய ஆளுமை மீது அல்ல.ஆனால் பா.செயப்பிரகாசம் மீது ஓர் எழுத்தாளர், கருத்துச்செயல்பாட்டாளர் என்ற எந்த மரியாதையும் இல்லை.

இப்போதும் சொல்கிறேன், ஒரு நாளில் சராசரியாக பத்து அவதூறுகளும் வசைகளும் என்மேல் பதிவாகின்றன.கவலையே இல்லை. தாராளமாகவே நடக்கட்டும். உண்மையிலேயே எவர்மேலும் புகாரோ வருத்தமோ இல்லை. அப்படி எழுதியவர்கள் அனைவரிடமும் எல்லா தனிச்சந்திப்புகளிலும் அன்புடனேயே இருந்திருக்கிறேன். அவர்களில் பலர் என்னை தங்கள் தனிப்பட்ட சிக்கல்களின்போது சந்தித்து உதவிகோரியபோது உதவியிருக்கிறேன்.

இன்னமும் அப்படித்தான். எழுதுங்கள் பிரச்சினையே இல்லை. நீங்கள் என்ன எழுதினாலும் சரி நீங்கள் ஒரு நல்ல படைப்பை எழுதுவீர்கள் என்றால், ஒரு நல்ல கட்டுரையை எழுதிவீர்கள் என்றால் என் மதிப்புக்குரியவர்தான் நீங்கள். ஒருபோதும் எவரிடமும் தனிப்பட்ட வஞ்சங்கள் இல்லை.

ஆனால் இங்கே இப்போது நிகழ்வது ஒரு சிறுகுழு சில வக்கீல்களை துணைகொண்டு எழுத்தாளர்களை மிரட்டுவது. இதை இப்படியே விட்டால் இவர்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் எழுத்தாளர்களுக்கு ஆணையிடுவார்கள். இது எல்லா எழுத்தாளர்களுக்கும் நாளை ஆபத்தானதே. என்னை வசைபாடும் வெறுப்புகக்கும் எழுத்தாளர்களுக்கும் கூட

முந்தைய கட்டுரைசட்ட நடவடிக்கை
அடுத்த கட்டுரையாயும் ஞாயும் – கடிதங்கள்