விண் வரை…
வெண்முரசும் தமிழும்
அன்புள்ள ஜெ,
வெண்முரசும் தமிழும் கட்டுரையை வாசித்தேன். இன்றைக்கு தமிழில் எத்தனைபேர் கம்பராமாயணம் வாசிக்கிறார்கள்? அந்தத் தமிழ் எத்தனைபேருக்கு தெரியும்? எத்தனைபேருக்கு அதற்கான பொறுமையும் மனமும் உள்ளது? அவர்கள் மிகச்சிலர்தான். அதைப்போல சிலர் வெண்முரசுக்கு இருப்பார்கள். வெண்முரசின் மொழி தமிழில் ஒரு பெரிய பாய்ச்சல். தூயதமிழ் அதேசமயம் தனித்தமிழ்ப்பாவனைகள் ஏதுமில்லாமல், செயற்கையாக இல்லாமல் இயற்கையாக நிகழ்வதை இந்நாவலின் களத்திலேதான் வாசிக்கமுடிகிறது.
நானும் பள்ளியில் தமிழ் படித்தவன் அல்ல. ஆனா ஆவன்னா அளவுக்குத்தான். எனக்கு மழைப்பாடல் முடிவதுவரைக்கும்கூட கஷ்டம் இருந்தது. ஆனால் இன்றைக்கு யோசிப்பதே அந்த மொழியில்தான். நான் வெண்முரசின் நடை ஏன் தனித்தமிழக இருந்தாலும் எளிதாக இருக்கிறது என்று யோசித்தேன். வெண்முரசின் நடை இன்றைய சாதாரண பேச்சுநடையை தனித்தமிழில் எழுதியதுபோல இருக்கிறது. உணர்ச்சிகளுக்குள் போகும்போது ஓசையழகையோ வேகத்தையோ அடைகிறது. இந்த இயல்பான ஓட்டம்தான் காரணம் என்று நினைக்கிறேன்.
இதற்கான வாசகர்கள் என்றும் இருப்பார்கள். ஒரு நூறுபக்கத்தை வேறு திசைதிரும்பல் இல்லாமல் வாசிப்பவர்கள் தமிழ்நாட்டிலேயே ஒரு சில ஆயிரங்கள்தான் இருப்பார்கள். வெண்முரசு அவர்களுக்கான படைப்பு
சந்திரசேகர்
***
அப்போது அகத்தில் ஓர் அச்சம் இருந்தது ,இது முடிவதுவரை வாழ்வு வேண்டும் என்ற வரியை வாசித்தேன். 2013 டிசம்பரில் வெண்முரசு ஆரம்பித்த சமயத்தில் எழுதிய கடிதம் நினைவுக்கு வருகிறது. பல வருடங்கள் போயிட்டே இருங்க என்று சொல்லியாதாக நினைவு, இந்த கடைசி பகுதி முடியும் போது கிட்டதட்ட 7 வருடங்கள்.
வேண்டுமானால், 27வது பகுதியாக நாவலின் நீட்சியாக ஒரு முழு தொகுப்பு பார்வையாக, நாட்டின் இன்றைய பெயர்கள், வரலாற்றில் இன்று இருக்கும் அந்த கதைகளின் நிலைமை , உங்களுக்கு நடந்த சில அனுபவங்கள் என மற்றுமொரு பகுதி எழுதனும் என்று நினனத்து கொண்டால் இது இறுதி பகுதி எனும் அழுத்த சுமையை இறக்கி வைக்க உதவும்.
ஒரு துகள் அளவு கூட, ஒரு அணுவின் கடைசி அளவுக்கு கூட பயம், எண்ணம் வேண்டாம். சிலைக்கு கண் திறப்பது போல, குழவி தாய் வயிறு விட்டு வரும் கடைசி நிகழ்வு போல… இந்த கடைசி பகுதியும் நிறைவுறும்.
யோகி ராம்சுரத்தை சந்தித்து ஒரு மாதம் ஆகி நீங்கள் யதியை முதலில் சந்தித்தது பற்றி எழுதியதாக நினைவு. எதுவும் அவ்வளவு சீக்கிரமாக தடைபடாது. வழக்கு இன்ன பிற கொந்தளிப்புகளில் விலகியும், பயணங்களில் இந்த தொற்று பற்றிய விழிப்புடனும் இருக்கவும்.
அன்பு ஜெய்… எழுத்தில் சென்றபடி இருப்பது உங்களின் பாதை. எழுத்தின்றி வெறுமனே இருத்தலும் துறத்துலும் உங்களுக்கு இல்லை என தோன்றுகிறது.
நலம் பேணுக. பூர்ணமாக நாவலை முடிக்குக. வணக்கமும் வேண்டுதல்களுடன்
லிங்கராஜ்
***
அன்புள்ள ஜெ.
வெண் முரசின் தமிழ் பற்றிய கடிதமும் பதிலும் படித்தேன்.
அகராதி தேவைப்படாமல் வெண் முரசு படித்த நூற்றுக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன்.
ஏறக்குறைய 8 வயதிலிருந்து வாசிக்க ஆரம்பித்த பழக்கம் .கடந்த 40 வருடங்களில் நான் வாசித்த தமிழ் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த மொழியழகு பெற்ற நூல் ெவண் முரசு என்று உலகுக்கு ஓங்கி பறையறைந்து சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
கட்டியிழுக்கும் அந்த தமிழ்.போதையூட்டும் மொழி நடை.
சப்புக் கொட்ட வைக்கும் அந்த மொழியின்பம் தரும் கலைச்சொற்கள்.
அது தரும் மட்டில்லா ஆனந்தம் பருக பருக இன்னும் இன்னும் என்று தூண்டும் தவிப்பு இருக்கிறதே …
இந்த தொடரில் பல விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரையே செய்ய தகுந்த நூறு விஷயங்கள் இருக்கின்றன.
உதாரணத்துக்கு
வெண் முரசில் உளவியல்
வெண் முரசில் ஆளுமை திறன்
வெண் முரசில் அரசு சூழ்தல்
வெண் முரசில் காதல்
இப்படிப் பலப்பல இருந்தாலும் அந்த தமிழ்நடைக்கே காதலாகிப் போனேன்.என்னைப் போன்றவர்களின் இதய பீடத்தில் என்றென்றும் இருப்பீர்கள்.
தமிழ்தமிழ் என முழங்கும் எவராகிலும் இந்த தொகுப்பில் ஒன்றாவது வாசிப்பாராயின் தமிழ் எவ்வளவு இனிய மொழி என்று உண்மையாய் உணர்வார்கள்.
இன்று என் தந்தையின் 4ம் ஆண்டு நீர்க் கடன்.எள்ளும் நீரும் அள்ளி நிறைவுறுக என்று சொல்லியே நீர்க் கடன் செலுத்தினேன்.
உங்கள் தமிழ் கொடை
நன்றி
தில்லை செந்தில் பிரபு
கோவை
—
அன்புள்ள அப்பாவுக்கு,
வெண்முரசும் தமிழும் என்று தலைப்பில், தங்களின் வார்த்தைகளை வாசித்தேன். நான் இயற்பியல் துறையில் முதுகலை பயிலும் மாணவி. வயது(23). சிறு வயது முதல் ஆங்கில வழி கல்வி தான் ( CBSE) . புத்தகம் வாசிக்கும் பழக்கம் என்பதே கிடையாது அப்பா. கடந்த ஒரு வருடமாக வெண்முரசு படிக்கிறேன். இப்போது (பன்னிரு படைக்களம்) படித்து வருகிறேன். வெண்முரசு புத்தகம் கையில் இல்லாமல் என்னை பார்க்க இயலாது என்றும், ஜெயமோகனாக மாறிவிட்டாய் என்று கேலி செய்த நண்பர்கள் பல. என்னை பார்த்து வெண்முரசு நாவலை படித்தவர்களும் உண்டு.
கல்லூரி கலந்துரையாடலில் தங்களின் வெண்முரசுக்கு முதல்நிலை. சிறுவயது முதல், என்னால் ஒரு இடத்தில் அமைதியாகவோ, ஒரு விஷயத்தில் 1 நிமிடம் மேல் கவனம் செலுத்த இயலாது ஆனால் என்னை முழுவதுமாக மாற்றியது வெண்முரசு தான் . நீங்கள் கூறுவது போல்” இந்த மொழி என் அகத்துக்கு உகந்தது ”. தங்களின் எழுத்தினூடாக, என்னை நானே கண்டடையும் தருணங்கள் பல அமைந்துள்ளன. எனது ஆய்வறிக்கை எழுத தொடங்கும் முன், வெண்முரசு தான் என்றும் துணையாக நிற்கும். தாங்கள் விழைவது போல், நாளை என்பதே வெண்முரசு மட்டும் தான் என ஆசைப்படும் இளம் வாசகி. தமிழின் மகத்தான இலக்கியச் செல்வங்கள் எல்லாம் வெண்முரசுயின் துணையோடு அணிவகுத்து வாசிக்கப்படும் என பிரார்த்திக்கிறேன்.
காயத்ரி தனசேகரன்
***