கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கோலப்பன் ஆசாரிதான் அந்தக் கரிய குள்ளமான மனிதரைக் கூட்டி வந்தார். நானும் கருணாகரனும் மேலாலும் வீட்டுப்  பூமுகத்தில் அமர்ந்து அச்சு அண்ணனின் வெடிப்பேச்சை கேட்டுக்கொண்டிருந்தோம்.

அந்த கரிய மனிதர் முற்றத்திலேயே தயங்கி நிற்க கோலப்பன் ஆசாரி,“பிள்ளே, இவனுக்க பேரு காளியனாக்கும்… இவனுக்க கையிலே ஒரு சாமான் இருக்கு… வெலைக்கு குடுக்குததாச் சொல்லுதான்… வித்தியாசமாட்டு ஒரு ஐட்டம். மரத்திலே செய்த ஒரு பலாக்காயி” என்றான். “நல்ல சேலுள்ள சாமானாக்கும் பிள்ளே. பைசா இருக்குன்னா வாங்கிப்போடுங்க.”

“பலாக்காய எதுக்குடே மரத்திலே செய்யுதாங்க?” என்றார் அச்சுதன் அண்ணா “புதிய கதையாட்டு இருக்கே?”

“எங்க?” என்று நான் கேட்டேன்.

காளியன் தன் கையில் இருந்த உரச்சாக்கு வெட்டித்தைத்த பையை எடுத்து உள்ளிருந்து ஒரு மரத்தாலான பொருளை எடுத்தார். பலாக்காய் மாதிரியே செய்யப்பட்டிருந்தது. அதேபோல முட்கள். காம்பு மட்டும் வெண்கலத்தில். உள்ளீடற்றது, ஆகவே எடையில்லாதது.

“இது என்னது?” என்று நான் அவரிடம் கேட்டேன்.

அவர் மிகப் பவ்யமான உடலசைவுகளும் பணிவான சிரிப்பும் கொண்டிருந்தார். பெரிய பற்கள் எப்போதுமே சிரிப்புபோல காட்டின “நம்ம வீட்டிலே கிடந்த சாமானாக்கும். பளையது. நம்ம பாட்டன் மாடன் புலையனுக்கு கரைமூப்பில் குஞ்சன் நாயரு அந்தக்காலத்திலே குடுத்தது.”

“மரத்திலே பலாக்காயா…” என்று அச்சுதன் அண்ணா சிரித்தார். “கொண்டா” என்று அதை வாங்கி புரட்டிப்பார்த்து “பலாக்காயிக்க முள்ளையெல்லாம் நல்லா ஒரிஜினலு மாதிரி செய்திருக்கான்.”

“அதாக்கும் நானும் பாத்தேன்” என்றார் கோலப்பன் ஆசாரி. “இப்டி ஒரு பொம்மையை செய்யுதவன் முள்ளை வரிசையாட்டு அடுக்கிச் செதுக்கியிருப்பான். அதுதான் சுளுவா செய்யுத வேலை. ஆனா பலாப்பழத்திலே முள்ளு அப்டி வரிசையா இருக்காது. வாரியிட்ட மாதிரி இருக்கும். இவன் ஒவ்வொரு முள்ளையும் தனித்தனியா செதுக்கிருக்கான்.ஒரு ஒளுங்கும் வரியும் இல்லை. இது கைவேலைத் திறமையாக்கும்.”

அச்சுதன் அண்ணா “உமக்க பாட்டனுக்கு எதுக்குவே பலாப்பழம் குடுத்தாக?” என்றார்.

“எனக்க பாட்டன் கணக்குக் கண்ணு உள்ளவரு” என்றார் காளியன்.

“கணக்குக் கண்ணா, அதென்னவே?” என்று அச்சுதன் அண்ணா கேட்டார்.

“கண்ணாலே பாத்தே கணக்கு போட்டிருவாரு… ஒரு வயலிலே எத்தனை நாத்து நிக்குதுன்னு எண்ணாம கண்ணாலே பாத்து சொல்லிருவாரு. விளைஞ்சு கதிரு சாய்ஞ்சு நிக்குத   வயலிலே எவ்ளவு  நெல்லு இருக்குன்னுகூட சொல்லுவாரு, அறுத்து அளந்து பாத்தா நாழிக்கணக்கிலே அப்டி செரியா இருக்கும்…” என்று  காளியன் சொன்னார்

“கொள்ளாமே, இது கேக்க நல்லா இருக்கு” என்று அச்சுதன் அண்ணா நம்பிக்கை இல்லாமல் சொன்னார்.

“பொம்புளையாளுகளுக்க முடியியை எண்ணிருவானோ?” என்றார் கருணாகரன்.

“அதை அறிஞ்சு மூப்பில்நாயரு கூப்பிட்டனுப்பினாரு. அவரை சோதிச்சுப் பாக்கணும்கிறதுக்காக ஒரு பலாப்பழத்தை குடுத்து அதிலே எத்தனை முள்ளு இருக்குன்னு சொல்லுடேன்னாரு. அவரு சும்மா கண்ணாலே ஒருதடவை பாத்துட்டு கணக்கைச் சொல்லிட்டாரு… பலாப்பழத்துமேலே ஒவ்வொரு முள்ளா வெட்டி வெட்டி கணக்கு போட்டா ஒண்ணுகூடல்ல ஒண்ணு குறையல்ல… அப்டி ஒரு கணக்கு” காளியன் சொன்னார்.

“அதுக்கு அவரு பரிசாட்டு குடுத்த பலாப்பழமாக்கும் இது. எங்க வீட்டிலே கிடக்கு… இப்ப கொஞ்சம் பைசாவுக்கு பிரச்சினை உண்டு. எனக்க மகன் காலேஜிலே படிக்கான். அவனுக்கு பீஸு கெட்டுகதுக்கு காசுவேணும்… அதாக்கும் இதை விக்கலாம்னுட்டு ஆசாரிகிட்டே கேட்டேன்” என்றார் காளியன்.

“கதை கேக்க நல்லாருக்கு… ஆனா அப்டி கணக்குக் கண்ணு உள்ளவனுக இப்ப உண்டா வே?” என்றார் அச்சுதன் அண்ணா.

“சுடலை அருளாலே நானும் கொஞ்சம்போல அந்த கண்ணு உள்ளவனாக்கும்” என்று காளியன் பணிவாகச் சொன்னார்.

“நீரா?” என்று திகைத்துவிட்டார். எங்களை திரும்பிப் பார்த்துவிட்டு “நீரு என்னவே செய்வீரு?” என்று கேட்டார்.

“பந்தயம் வச்சு கேட்டா சொல்லுவேன்.”

“செரி, அதைப் பாப்பம்” என்ற அச்சுதன் அண்ணா சட்டென்று எழுந்து பின்னால் சென்று அங்கே பாயில் காயப்போட்டிருந்த உளுந்துக்குவியலில் இருந்து இருகைகள் நிறைய உளுந்தை அள்ளி கொண்டுவந்தார். அதை தரையில் கொட்டி குவியலாக்கி வைத்து “இதிலே எவ்ளவு உளுந்து இருக்குன்னு சொல்லுவேரா வே?” என்றார்.

“பாப்பம், சுடலை அருளாலே” என்று காளியன் அதை கூர்ந்து பார்த்தார். வாய் முணுமுணுவென்று கணித்தது. “எட்டாயிரத்தி எளுநூறு… நாலஞ்சு கூடக்கொறைய இருக்கும்” என்றார்.

“வே சும்மா அடிச்சுவிடுதீரா?”

“எண்ணி பாப்பமே” என்று நான் சொன்னேன்.

நாங்கள் அந்த உளுந்தை மூன்றுகூறாகப் பிரித்து எண்ணினோம். எட்டாயிரத்து எழுநூற்றி பதிமூன்று”

“பயறு வேறவேற சைசிலே இருக்கு… இல்லேன்னா இன்னும் துல்லியமா சொல்லிடலாம்”என்றார் காளியன்.

அச்சுதன் அண்ணா பிரமித்துப்போனார். ஆனாலும் அவருடைய மனம் ஓயவில்லை. மீண்டும் முற்றத்துக்குப் போய் அங்கே காயப்போட்டிருந்த ஒரு துணியை எடுத்து வந்தார். அதில் ஒரு பகுதியை கிழித்து முன்னால் வைத்து “இதிலே எவ்ளவு நூலுன்னு சொல்லுவேரா வே?” என்றார்.

“பாப்போம், சுடலை அருளாலே” என்றார் காளியன். துணியை கூர்ந்து பார்த்தபின் பெருமூச்சுவிட்டு “நாநூற்றிப்பன்னிரண்டு ஊடு முந்நூற்றி அறுபத்திமூணு பாவு…” என்றார்.

“மொத்த எழுநூத்தி எழுவத்தஞ்சு?”

“ஆமா.”

நாங்கள் அந்த துணியை நூல்நூலாக பிரித்தோம். எண்ணி கூட்டிப்பார்த்தோம். மிகச்சரியாக எழுநூற்றி எழுபத்தைந்து நூல்

“எப்டிவே?”என்றார் அச்சுதன் அண்ணா.

“சுடலை அருள், பரம்பரையா வார அப்பன் பாட்டனுக்க கண்ணு.”

“நீரு இப்ப என்ன செய்யுதீரு?” என்று கருணாகரன் கேட்டார்.

“விவசாயம்தான், கூலிவேலை. ஏருபூட்டுவேன். எருமையும் வளக்குதேன்…”

“பள்ளிக்கூடம் போயி படிச்சதுண்டா?” என்றார் அச்சுதன் அண்ணா.

“இல்ல, எனக்க அப்பன் கூலிக்காரனாக்கும். அப்பல்லாம் பட்டினியில்லா?”

“ஓ”என்றார் அச்சுதன் அண்ணா. “செரி, இதுக்கு என்ன கேக்கேரு?”

“ஆயிரம் இருந்தா…” என்றார்.முகம் பரிதாபமாக மாறியது. “பயலுக்கு படிப்புச் செலவுக்காக்கும். மனசறிஞ்சு தரணும்.”

“ஆயிரம் இந்த சாமானுக்கு இல்லை, உம்ம திறமைக்குச் சும்மா தாறதாக்கும்… செரி பய படிப்புன்னு சொல்லிட்டேரு, வச்சுக்கிடும்” என்று உள்ளே போய் மனைவியிடம் ஆயிரம் ரூபாய் வாங்கி வந்தார். “இந்தாரும்வே.”

“பெரிய உபகாரம், நல்லா இருக்கணும்” என்று காளியன் கும்பிட்டு வாங்கிக் கொண்டார். கண்களில் ஒற்றினார்.

அவர் போவதை பார்த்துக் கொண்டிருந்த அச்சுதன் அண்ணா “ஆயிரம் ரூபாய்க்கு நட்டமில்லை. திருவனந்தபுரத்துக்கு கொண்டுபோயி பாத்துப்பேசி வித்தா மூவாயிரத்துக்கு குறையாது…” என்றார்.

“அவ்ளவு போகுமா?” என்றார் கருணாகரன்.

“வே, இதிலே சங்குமுத்திரை இருக்கு. திருவிதாங்கூர் அரசாங்க முத்திரையாக்கும்” என்றார் அச்சுதன் அண்ணா “இங்க நம்ம வீட்டிலே சில சாமான்களிலே சங்குமுத்திரை உண்டு” என்றவர் எதையோ நினைவுகூர்ந்து எழுந்துகொண்டு “இரு.. ஒரு காரியம்” என்று உள்ளே போனார்.

பலாக்காயை உள்ளே வைத்துவிட்டு திரும்பி வந்தபோது அவர் கையில் ஒரு மரப்பலகை இருந்தது. அதைக் கொண்டுவந்து எங்கள் நடுவே வைத்தார்.

“இது என்னது?” என்று நான் கேட்டேன்.

அச்சுதன் அண்ணா அதை தூக்கிக் காட்டி “சொல்லு, என்னன்னு தோணுது?” என்றார்

“பல்லாங்குழி மாதிரி இருக்கு” என்றேன். “ஆனால் பல்லாங்குழி இல்லை… இது வேறமாதிரி வெளையாட்டு.”

“வேறமாதிரி வெளையாட்டுதான்” என்று அச்சுதன் அண்ணா சிரித்தார். “சொல்லுங்கடே, என்ன வெளையாட்டு?”

அது ஈட்டிமரத்தாலான ஒரு பலகை. வெண்கலக் கைப்பிடி போடப்பட்டிருந்தது. கட்டைவிரல் அளவுள்ள ஒரு பித்தானை வைத்துவிடும்படியான ஒரே மாதிரியான குழிகள். ஆனால்  நான் மேலிருந்து கீழே எண்ணினேன். பக்கவாட்டிலும் எண்ணினேன். ஐம்பதுக்கு இருபது. மொத்தம் ஆயிரம்.

“இது பணப்பலகை” என்று அச்சுதன் அண்ணா சொன்னார். “நீங்க எவனும் பாத்திருக்க மாட்டீங்க… கெளவாடிகளைக் கேட்டா ஒருவேளை சொல்லுவானுக. ஆனால் நூறுவருசத்துக்கு முன்னாடிதான் இதெல்லாம் புழக்கத்திலே இருந்தது. அதுவும் பெரிய வியாபார ஸ்தலங்களிலயும் நம்ம வீடுமாதிரி பாட்டமும் வாரமும் தீர்வையும் வசூலிக்குத அதிகாரி வீடுகளிலேயும்தான் இதெல்லாம் இருக்கும்.”

நான் அதை பார்த்து “இதை வச்சு என்ன செய்வாங்க?” என்றேன்.

“அப்ப திருவிதாங்கூரிலே ராசிப்பணம்னு ஒண்ணு இருந்தது. அதான் இருக்கிறதிலேயே கடைசிமதிப்பு. சின்ன செம்புநாணயம். அது இதிலே சரியா அடங்கும்.”

“ஆ! இது பைசாவ எண்ணுகதுக்குண்டான பலகை!” என்றேன்.

“செரியா பிடிச்சிட்டானே… அப்ப ஜனங்க கையிலே பைசா குறைவு. வெள்ளிப்பணம் சிலபேரு கையிலேதான். பொன்பணம் பணக்காரன் கண்ணிலேதான் பட்டிருக்கும். ராசிப்பணம்தான் சாதாரணக்காரனுக்கு தெரிஞ்ச நாணயம். ஒருபக்கம் திருவிதாங்கூருக்க சங்கு மறுபக்கம் எழுத்து. சங்குநாணயம்னும் பேரு உண்டு.”

“ஒரு நல்ல தொழிலாளி ஒருநாள் முழுக்க மண்ணு சுமந்தா ஏழு முதல் பத்து ராசிப்பணம் வரைச் சம்பளம், இது எண்ணூறுகளிலே உள்ள கணக்கு. அஞ்சு ராசிப்பணத்துக்கு ஒரு பக்கா அரிசி கிடைக்கும். ஒரு ராசிப்பணம் குடுத்தா ஒருகல்லு மரச்சீனி கிளங்கு கிடைக்கும். ஒரு கல்லுன்னா இன்னைக்கு ஒரு மூணுகிலோ. ஒரு நல்ல பாலராமபுரம் வேட்டி அம்பது ராசிபணம்..”.

“அப்ப நம்ம குடும்பத்துக்கு இந்தப்பகுதியிலே மட்டும் பதினெட்டு சந்தையிலே தீர்வை வசூலிக்குத பொறுப்பு இருந்தது. எல்லா சந்தையிலயும் ஆளுக உண்டு. குடுமத்திலே இருந்து ஒரு ஆம்பிளையும் கூடவே இருப்பான். ஒருதலைச்சுமடு நிறைய கருப்பட்டியோ மரச்சீனியோ கொண்டுவந்தா ஒருபணம் தீருவை. வாங்குறவன் கிட்டயும் தீருவை உண்டு. இதுதவிர வண்டி, கழுதை, மாடு எல்லாத்துக்கும் தீருவை. அப்டி தோதுப்போல வசூல் செய்வானுக. எல்லாம் இந்த ராசிப்பணம்தான்.”

“ராசிப்பணத்திலே நடுவிலே ஓட்டை உண்டு. அதை ஓட்டைச்சக்கரம்னு அந்தக் காலத்திலே சொல்லுவாங்க. கயிறிலே கோத்து இடுப்பிலே கட்டி வச்சுக்கிடுவாங்க. குலுங்கி சத்தம்போட்டு காட்டிக் குடுக்கக்கூடாதுன்னு ஒவ்வொரு சக்கரத்துக்கும் இடையிலே கத்தாழை மடலை வெட்டி ஒரு துணை கோத்து வைக்குததும் உண்டு.”

“சந்தைகளிலே வசூல் முடிஞ்சு சாக்குமூட்டையிலே கட்டி கொண்டுவந்து சேப்பானுக. நம்ம குடும்பக் காரணவரு படுத்திருக்குதது பத்தாயத்துக்க மீதேயாக்கும். வழக்கமா பத்தாயத்திலே நெல்லுபோடுவாங்க. இங்க இவரு நாணயத்தை போட்டு வச்சிருப்பாரு… அவ்ளவு நாணயம் வரும். பாத்தா புளிங்கொட்டையை குவிச்சு வச்சமாதிரி இருக்கும்னு சொல்லி கேட்டிருக்கேன்.”

“மாசம் ஒருதடவை திருவனந்தபுரத்திலே இருந்து வில்லுவண்டியிலே பெரியபெட்டிகளோட வந்து தீர்வைப்பணத்தை வாங்கிட்டுப் போவாங்க. அதுக்கு வில்லைச் சேவகனும் ஈட்டியும் வாளுமாட்டு எட்டுபேருள்ள அகம்படி நாயர்மாரும்  உண்டு. இங்க நம்ம வீட்டு பூமுக மண்டபத்திலே வச்சுதான் நாணயத்தை அளந்து அளந்து போடுவாங்க. இந்த பலகை அதுக்குண்டானதாக்கும்.”

“இதிலே நாணயத்தை அள்ளிப்போட்டு கையாலே ஒரு நிரப்பு நிரத்தி அப்டியே பெட்டியிலே போடுவாரு நம்ம காரணவரு அம்மாவன். ஒரு பலகை ஆயிரம் பணம்… ஒருதடவைக்கு இப்டி ரெண்டாயிரம் முதல்  ஐயாயிரம் பலகைவரை பணம் இருக்கும். திருவிழா மாசங்களிலேயும் அறுவடை மாசங்களிலேயும் பத்தாயிரம் பலகைவரை வந்திருக்கு”.

“ஒருபலகை ராசிப்பணம் ஒரு வெள்ளிப்பணம். பத்துவெள்ளிப்பணம் ஒரு பொன்பணம்னு கணக்கு. அப்டி இந்த வேணாட்டிலே மொத்தம் எட்டு அதிகாரிகளுண்டு சந்தைக்கணக்குக்கு. எல்லாத்தையும் வசூல் செய்து பத்மநாபபுரம் கஜானாவுக்கு கொண்டு போறதுக்கும் நம்ம அம்மாவன்தான் போவாரு.  அங்க எண்ணி எடுத்து வச்சு அதை பங்குவச்சு பட்டாளத்துக்கும் போலீசுக்கும் சர்க்கார் உத்யோகஸ்தனுங்களுக்கும் சம்பளம் குடுப்பாங்க. மற்ற செலவுகளுக்கு வேண்டியதை குடுப்பாங்க.”

“அப்ப ஒரு போலீஸுகாரனுக்கு மாசம் ஆயிரம் ராசிப்பணம் சம்பளம், அதாவது ஒரு வெள்ளிப்பணம். அதை ராசிப்பணமாத்தான் குடுப்பாங்க. வெள்ளிப்பணத்தை எங்க கொண்டுபோயி செலவளிக்க முடியும்? சம்பளத்தை மஞ்சள்துணியாலான ஒரு பையிலே போட்டு சின்ன மூட்டையா கட்டிக் குடுப்பாங்க. அதுக்கு பக்கறைன்னு பேரு. சர்க்கார் சம்பளம் வாங்குறவனை பக்கறைப்பணம்ன்னு சொல்லுவாங்க. அதுக்கு அப்டி ஒரு மதிப்பு.”

“கணக்கு செம்பகராமன்னுட்டாக்கும் நம்ம குடும்பத்துக்கு பேரு. எல்லாம் ஆயிரத்தி எண்ணூற்றி தொண்ணூறு வரைக்கும்தான். திவான் ராமராவ் காலத்திலே இந்தமாதிரி பரம்பரைக் கணக்குபிள்ளைகளை நீக்கிட்டு சர்க்கார் நேரிடையா அதிகாரிகளை நியமனம் பண்ணி தீர்வை வசூலாக்க ஆரம்பிச்சாச்சு… அதோட கணக்கு அதிகாரம் போச்சு. ஆனாலும் ஆனகிடந்தா குதிரை மட்டம்லா? அப்ப சம்பாதிச்ச பணம்தான் இப்பவும்”.

நான் அந்த பணப்பலகையை கையால் வருடிப் பார்த்தேன். பிறகு ஒவ்வொருவராக வந்து பார்த்தனர்.

“செரி இதிலே என்ன பாத்தீங்க?” என்று அச்சுதன் அண்ணா கேட்டார். “வித்தியாசமாட்டு என்னடே பாத்தீங்க?”

“ஒண்ணுமில்லியே” என்று கருணாகரன் சொன்னார்.

நான் கூர்ந்து பார்த்தேன். பிறகு “ஒரு துளையிலே சின்ன ஓட்டை இருக்கு…” என்றேன்.

“அதாக்கும்!” என்று அச்சுதன் அண்ணா புன்னகைத்தார். “இவன் கரடிநாயருக்க மகன், கள்ளம் தெரிஞ்சவனாக்கும்”

“எதுக்கு அந்த ஓட்டை?” என்று நான் கேட்டேன்.

“அப்ப அதுவும் போச்சா? லே மக்கா, எதுக்கு ஓட்டை போடுவாங்க?”

ஆசாரி கோலப்பன் “நான் சொல்லுதேன். அதிலே ஒரு செம்புக்காசை ஒட்டி வச்சிருக்காங்க… அதை உள்ள சேத்து வைக்குததுக்கு உண்டான ஓட்டை அது” என்றார்.

“ஆமா” என்று அச்சுதன் அண்ணா சிரித்தார் “இவன் கள்ளமறிஞ்சவன்டே..”.

“அய்யோ! ஒரு காசு மட்டும் விழாம ஒட்டிக்கிட்டே இருக்கும்!” என்றேன்.

“ஆமா இதைவைச்சு ஆயிரம் தடவை அளந்துபோட்டா ஆயிரம் காசு மிச்சம். மாசாமாசம்… எவ்ளவு தொகை? சொல்லு..”

“ஒரு காசு!” என்றேன். “ஒரு காசிலே!”

“மாசம் சராசரியா பத்தாயிரம் காசுக்குகுறையாது…. இருபதாயிரம் முப்பதாயிரம்னு போன நாளும் உண்டு. ஆண்டுக்கு எவ்ளவுடே? குடுக்கிற எல்லாத்துக்கும் ஆயிரத்திலே ஒரு காசு லாபம். அப்டி முந்நூறு வருசம் சேத்துக்க எவ்ளவு பணம்?”

நான் வியப்புடன் “ஆமால்ல” என்றேன்.

“எனக்க தாய்வழிக் காரணவர் கணக்குசெம்பகராமன் கோமன் நாயரு இங்க எப்டி வந்தாரு தெரியுமா? இடுப்பிலே ஒரு பாதிவேட்டி. தோளிலே ஒரு துவர்த்து. கொலப்பட்டினியா இந்த ஊருக்குள்ள வந்தாரு. இந்த வீடு நெலம் கணக்குசெம்பகராமன் பட்டம் எல்லாம் இந்த ஒத்தைக்காசு டிரிக்குலே தட்டி எடுத்ததாக்கும்…. வசூல் காசிலே ஆயிரத்துக்கு அஞ்சு கணக்கு செம்பகராமனுக்கு கமிசன். ஆனால் நம்ம காரணவருக்கு அது ஆறு… மகாராஜா அறியல்லை, தெய்வம் அறியல்லை” என்றார் அச்சுதன் அண்ணா.

நான் “நல்ல கணக்கு” என்றேன்

“அதாக்கும் இதை ஒரு ஞாபகச்சின்னமாட்டு எடுத்து வச்சிருக்கேன். நம்ம சந்ததிகளுக்கு தெரியட்டுமே, எப்டி?” என்றார் அச்சுதன் அண்ணா. சிரித்துக்கொண்டே வெற்றிலை எடுத்து நீறு தேய்த்தவர் சட்டென்று நிறுத்தி “வே ஆசாரி, அந்த பலாக்காய்க்காரன் போயிருப்பானா வே? ஓடிப்போயி கூட்டிட்டு வாரும்.. ஒரு விசயம்” என்றார்.

“எதுக்கு?” என்றார் கோலப்பன் ஆசாரி.

“சொல்லுகதைச் செய்யும்வே”

ஆசாரி இறங்கி ஓடினார். அச்சுதன் அண்ணா வீட்டுக்குள் போய் ஒரு மரப்பெட்டியை தூக்கிவந்தார். அது நிறைய செம்புக்காசுகள் இருந்தன.

அச்சுதன் அண்ணா “ஆயிரத்தி தொள்ளாயிரத்தி முப்பத்திநாலோட இந்தப் பைசாவுக்க மதிப்பு போச்சு. அப்ப கொஞ்சம் இங்க தங்கிப்போயிட்டுது. செரி இருக்கட்டுமே, ஐஸ்வரியமாக்குமேன்னு நம்ம காரணவன்மாரு வச்சிருக்காங்க” என்றார்.

ஒரு சிறு மரச்சம்புடத்தில் இருந்து ஒரு செம்புக்காசை எடுத்தார். “இதாக்கும் நம்ம குடும்பத்துக்கு ஐஸ்வரியமான பொருள்”என்றார். அந்த செம்புக்காசின் ஒரு பக்கம் செம்பு உருக்கப்பட்டு ஊசி போல நீட்டியிருந்தது. அதை அந்த காசுப்பலகையில் துளையிருந்த இடத்தில் வைத்து அழுத்தினார். அப்படியே பதிந்துகொண்டது. குலுக்கிப் பார்த்தார். உதிரவில்லை.

ஆசாரி காளியனை கூட்டிவந்தார்

“வாரும்வே… உம்ம கணக்கு என்னண்ணு பாக்குதேன்… ஒரு பந்தயம். அப்டி நீரு ஜெயிச்சு போகப்பிடாதுல்லா?”என்றார் அச்சுதன் அண்ணா. “இது அந்தக்கால செம்பு நாணயமாக்கும். இது பணம் எண்ணுத காசுப்பலகை. பாத்திருக்கேரா?”

“ஆமா, தெரியும்”என்றார் காளியன்.

”இப்ப இந்த பெட்டியிலே எவ்ளவு நாணயம் இருக்கு? கணிச்சு சொல்லமுடியுமா?”

“ஆமா” என்றார் காளியன் “சொல்லிடுதேன்.”

“இது சுளுவு வேலை, அதனாலே சுடலை அருளு வேண்டியதில்லை, இல்லியா?” என்று வெற்றிலைக் காவி படிந்த பற்களைக் காட்டி சிரித்துக்கொண்டு அச்சுதன் அண்ணா கேட்டார் “பந்தயமுண்டு… கணக்கு தப்பினா நீரு எனக்க முன்னாலே பத்து தோப்புக்கரணம் போடணும். சரியா இருந்தா நான் ஆயிரம் ரூபா சும்மா தாறேன்”

“ஆயிரம் ரூபா குடுங்க உடையோரே” என்றார் காளியன்.

“அப்ப அதை நீரு உறப்பாக்கியாச்சு இல்ல?” என்று சிரித்தபடி அச்சுதன் அண்ணா சொன்னார். “சொல்லும், எம்பிடு இருக்கு?”

அவர் கூர்ந்து நோக்கிவிட்டு “பதினெட்டாயிரத்தி நாநூற்றி எம்பத்தெட்டு” என்றார்.

“கரெக்டா இருக்குமா, கூடக்குறையுமா?”

“பதினெட்டாயிரத்தில் நாநூற்றி எண்பத்தெட்டிலே ஒத்த ஒரு சல்லி குறையாது கூடாது”

“உறப்பாக்கும்?”

“ஆமா உறப்பு” என்றார் காளியன்.

“செரி, எண்ணி பாத்துக்கலாம்” என்றார் அச்சுதன் அண்ணா. “இந்தாரும்  இந்தக் காசுப்பலகை வச்சுநீரே எண்ணும்”

“இல்ல நீங்க எண்ணுங்க” என்றார் காளியன்.

“வே ஆசாரி, எண்ணும்வே” என்றார் அச்சுதன் அண்ணா

ஆசாரியும் கருணாகரனும் அச்சுதன் அண்ணாவுமாக காசுப்பலகையில் நாணயங்களை அள்ளி அள்ளி போட்டார்கள். எண்ணினார்கள். பதினெட்டு முறை போட்டபின் எஞ்சிய நாணயங்களை அச்சுதன் அண்ணாவே எண்ணினார்.

பதினெட்டாயிரத்து ஐநூற்று ஆறு.பதினெட்டு கூடுதலாக இருந்தது.காளியன் திகைத்து வெளுத்துவிட்டார்.

“என்னவே?”

“மன்னிக்கணும், மன்னிக்கணும், கணக்கு என்னாச்சுன்னு தெரியல்லை… சுடலை சாபமாப் போச்சு… தெரியல்லை” அவர் அழுவதுபோல ஆனார்.

“செரி போவும்…”

“நான் தோப்புக்கர்ணம் போடுதேன்.”

“வேண்டாம்வே நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்.”

“இல்ல, நான் தோத்தேன்லா? சுடலையை மறந்தேன்லா?” என்றார். அவரே காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட ஆரம்பித்தார்.

நான் அச்சுதன் அண்ணாவை பார்த்தேன். அவர் குறுஞ்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். தோப்புக் கரணம் போட்டு காளியன் மூச்சுவாங்கினார்.

“நான் வாறேன்….” என்றார். “இப்பிடி தப்பினதே இல்லை” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

“இது வேற கணக்குவே. இந்தக்கணக்கு உம்மமாதிரி ஆளுகளுக்கு புரியாது… போய்ட்டு வாரும்.”

“இதெப்பிடி? இதெப்பிடி?” என்றார் காளியன். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. உதடுகள் இறுக்கமாக இருந்தன.

“உமக்கு சுடலை இருக்குல்லா, அதே மாதிரி எங்களுக்கு வேற தெய்வங்கள் உண்டு” என்றார் அச்சுதன் அண்ணா.

அவர் கும்பிட்டபடியே திரும்பிப் போவதை கண்டேன். “பாவம், அவர்கிட்ட விசயத்தைச் சொல்லியிருக்கலாம்” என்றேன்.

“அப்டிச் சொல்லீருவோமா என்ன?” என்று அச்சுதன் அண்ணா உரக்கச் சிரித்தார்.

***

முந்தைய கட்டுரைவம்புகளும் படைப்பியக்கமும்
அடுத்த கட்டுரைஅன்னம்,செய்தி- கடிதங்கள்