அன்புள்ள ஜெ
நலம்தானே?
நீங்கள் கொடுத்த ஒன்பது கதைகளையும் படித்தேன். நவீனத்தமிழிலக்கியத்தில் இன்று என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒரு குறுக்குவெட்டாக காட்டிய கதைகள். இடம்பெயர்வு- பண்பாட்டுப்பெயர்வு ஆகியவையே கருப்பொருளாக இருக்கின்றன. சித்துராஜ் பொன்ராஜின் உஷ்ணம், அனோஜன் பாலகிருஷ்ணனின் உதிரம், ரா செந்தில்குமாரின் இசூமியின் நறுமணம் உமையாழின் கிருமி ஆகியவை இதுவரை தமிழில் இல்லாத பண்பாட்டுச் சிக்கல்களைப் பற்றிப் பேசுகின்றன.
இந்தக்கதைகளில் உள்ள பொதுத்தன்மையை பேசவேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இவை மூன்றிலுமே காமமும் பெற்றோரும் சந்திக்கும் புள்ளி இருக்கிறது. பெற்றோர் என்பதை இங்கே பாரம்பரியம் என்று வைப்போம். உஷ்ணம் கதையின் கதாநாயகிக்கு அவள் அம்மாதான் பாரம்பரியம். அவளுடைய கண்டனம் பின்பக்கம் சாட்டை மாதிரி சொடுக்கிக்கொண்டே இருக்கிறது. அவளிடமிருந்து தப்பி ஆனால் சமையலறைக்குள் அவளை வைத்துக்கொண்டு வாழ்கிராள்
உதிரம் கதையில் அம்மாவின் காமத்தை அம்மாவின் உதிரத்துடன் இணைத்து புரிந்துகொள்கையில் விடுதலை அடைகிறான் மகன். இசூமியின்நறுமணம் இன்னொரு வகையில் அந்த ‘ரத்தமணம்’ பற்றிய கதை. ஆனால் அது இயற்கையின் அழகான அம்சமாக அதைப்பார்க்கிறது. அதேபோன்ற ஒரு கதைதான் கிருமி. அதிலும் அப்பாவை பற்றிய நினைவுதான் கதை.
தெய்வீகனின் அவனை எனக்குத் தெரியாது கதை புலம்பெயர்வு மனிதனை அடையாளமற்றவனாக ஆக்குவதைப் பற்றிய கதை – ஆனால் அது வெளியே. அவன் அடையாளம் கொண்டவனாகவே அகத்தில் இருக்கிறான்
எம்.கே.மணியின் கவி இன்று எழுதப்படும் நகர்ப்புற அடித்தள வாழ்க்கைக்கும் தனாவின் வில்வண்டி கிராமத்துக் கதைக்கும் உதாரணம். இரண்டுமே ஏற்கனவே எழுதப்பட்ட கதைகளின் தொடர்ச்சியாக, இன்னும் சரியான வடிவம் நோக்கிச் செல்பவையாக அமைந்துள்ளன. உருவகக் கதையான நெடுநிலத்துள் ரத்தத்தின் கதை
இந்தக்கதைகளின் வழியாக இன்றைக்கு என்னென்ன கதைக்கருக்களில் என்னென்ன வடிவங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ஆனால் ஒரு சின்ன சந்தேகம். நான் தமிழிலே நிறைய படிப்பவன் அல்ல. தேடியபோது இவர்களில் நவீன்,தெய்வீகன், அனோஜன், உமையாழ்,அகரமுதல்வன்,சித்துராஜ் பொன்ராஜ் ஆகிய ஆறுபேரும் இந்தியத்தமிழர்கள் இல்லை.தமிழ்நாட்டுச்சூழலை வைத்து எழுதவுமில்லை. எம்.கே.மணி, தனா, ஆகியோர் மட்டுமே தமிழ்நாட்டு எழுத்தாளர்கள். இந்த சரிவீதம் இன்றைக்கு உள்ள எழுத்திலும் இருக்கிறதா?
எஸ்.கிருஷ்ணன்
ஜெ,
69 முடிவுக்கு பின் ஒரு வாரமாக நிறுத்தி கொண்டு, கிருஷ்ணனின் இறப்பிற்கு தயாராகி , நேற்று நீர்புகுதல் படித்து அயர்ந்து கிடந்தது மனம். இடையில் சில கதைகளை படித்தாலும் உள்ளே செல்லவில்லை. ஏன்? மழைக்கு பின் ஒடும் ஒடை என உங்களின் கதை செல்லும் முறைக்கு போதை ஆகி விட்டது என தோன்றியது.
உங்களின் எல்லா கதைகளும் உள்ளே இழுத்து கொள்ளும் வேகம் அதிகமானது. புதிய கதைகளில் , வில்லுவண்டி – இறுக்கமாக முடைந்து செய்யப்பட்ட மூப்பின் பாரம் பற்றிய கதை. நீரை விசிறி சேலையை போர்த்திவிடும் போதே அவரின் சடவு தெரிந்துவிட்டது. ஆனால் அழுத்தமாக – உணர்ச்சியாக – அயர்ச்சியாக அந்த எடை குறித்து சொல்லாமல், இறுதியில் உடைந்து அழும் போது வண்டியின் பாரம் மனதில் சுமையாகி போனது.
ஒற்றை சக்கரம் இற்று மண் அண்டி கிடக்க, ஒடும் சக்கரம் தனியே சென்று விட்டது. சரியான இடத்தில், ஆஸ்பத்திரி செல்லும் முன் சக்கரம் விற்பது ஒரு சாங்கித காட்சியாக தெரிகிறது. வண்டியில் வந்து ஏறிக்கோ என அரிவாளுடன் சொன்ன செந்தட்டிக்கு இன்று முடியவில்லை. முக்கியமாக, அவரால் தன்னை தாங்கி கொள்ள முடிந்ததனால், விறுட்டென கிளம்பி விட முடிந்தது.
கிழவி எனும் பெண்ணுக்கு ஆறு தான் இறுதி வழியா? இருவரும் நீருள் இறங்கி இருந்தால் அது கனவின் லட்சியவாத முடிவு. இது தான் நடைமுறை எதார்த்தமா? மிக சரியான அளவில் கதை சொல்லும் முறை. எளிதில் கோர்த்து செல்லும் வகையில் தெரிந்த மண் வாசனை சரடாக பாஷையும், பெயர்களும். உணர்ச்சி தருணங்கள் எதுவும் வெடித்து தெறிக்காமல், சீரான நதி ஒட்டம் போல கதையின் நகர்வு.
மூப்பிற்கு வானவில்லின் வண்ணவகை எதற்கு என்று விட்டு விட்டார் போல. எடிட்டிங் வகை காட்சி மாற்றங்கள் மிக சரியாக அமைத்து இருந்தார். அந்த கோவிலில் நடந்த கல்யாண காட்சிக்கு பின் விரபாண்டி ஆறு செல்வது நொடி என ஒரு வாழ்வு முடிந்து போன ஒரு மின்னல். அந்த கடைசி வரியாக ஆற்றிலோடுங்குதல் படித்ததும் ஒரு திடுக்கிடலாக படர்ந்தது… பல தடவை காதில் விழுந்த “ எங்காவது ஆறு கொளத்தில விழுந்து செத்து போறேன் “ என்கிறதான அடிக்கடி பெரிசுகளின் வாயில் விழும் வார்தைகள். ஒரு வேளை பல தலைமுறைகளுக்கு முன் அது தான் அன்று கண்ணுக்கு தெரியாமல் நிகழ்ந்து வந்த ஒரு கூடு உதிர் முறையோ?
உஷ்ணம் – ஒரு சிறு கிளர்ச்சி என அந்த பெண்ணின் கூடல் குறித்தான விவரணை கதையை செலுத்தி செல்வதாக பட்டது. மிக அழகாக மொழி பெயர்க்கப்பட்ட வேறு நாட்டின் சிறுகதையில் , அதன் நுண்ணிய விவரப்பில் ஒட்டாமல் இருப்பது என அந்த தமிழ் அம்மாவும் அந்த அறிவுறுத்தல்களும் மாரியம்மன் திருவிழா போன்றவையும் அந்நியம் போல இருந்தது, அந்த உஷ்ணமே கதை.
அப்படிதான் அந்நியமாக வெளியில் இருந்தாலும் அவரவர் உலகம் அவரவரின் நாடு, ஊர், இன்ன பிற பதிவுகள் உள் அகம் என இருக்க, வெளியில் வேறு வகை என புறம் இருக்க, இயைதல் இல்லாமல் உரசி உரசி உஷ்ணம். சிறுகசிறுக சேர்த்த பெரிய வீடு சுருங்கி போனது போல தான் எல்லாமும். அணியும் உடையை கழற்ற விடாத பழைய பிடித்தல்கள், விட முடியாத அல்லாடகள் எல்லாம் மெளனமாக அவளுள்.
வில்லுவண்டியில் இருவரும் இறுதி வரை இழுத்து முடித்து முடியாமல் இயல்பாக அழுது விட்டு பிரியும் வகை எனில், இதில் தேவை தீர்ந்து பிரிந்து செல்லும் வாடகை உறவுகளும் , தொடர்ந்து இருக்கும் உள் உஷ்ணம்.,, உறவுகள் எனும் ஒரு வரியில் இணைத்து கொள்கிறேன் இந்த இரண்டு கதைகளையும்.
அன்புகளுடன்,
லிங்கராஜ்
9. கிருமி [சிறுகதை] உமையாழ்
8. நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்
7. உஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்
6. வில்லுவண்டி[ சிறுகதை] தனா
5. உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்
4. கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி
3. இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்
2. அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்
1. கன்னி- [சிறுகதை] ம.நவீன்