வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சமூகத்துக்கு நாகரீகத்திலும் மேலாதிக்கத்திலும் மேல்நிலை காணப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய சமூகம். இன்றுவரை அதற்கு இருக்கும் உயர்பண்பாட்டையும் வணிக மேலாதிக்கத்தையும் அடைந்தது. அதற்கு முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தை நாம் காண்கிறோம். அதற்கு முன் கிரேக்கர்கள்.
பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இந்தியா பண்பட்டிலும் செல்வத்திலும் ஓங்கியிருந்த ஒரு நாடு என நாம் அறிவோம். உலகமே இந்தியாவை கல்விக்காகவும் வணிகத்துக்காகவும் தேடிவந்த ஒருகாலகட்டம் இருந்தது. இந்தியா என்பது ஒரு பொற்கனவாக உலகமனத்தில் இருந்தது.
இந்த முதன்மை எப்படி ஏற்படுகிறது? வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லக்கூடிய காரணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையானவை. தத்துவமென்பது கடைசி எல்லை வரை குறுக்கிச் சாராம்சப்படுத்தி நோக்கும்தன்மை கொண்டதாகையால் எங்கும் செல்லுபடியாகக்கூடிய ஒரு பொதுக்காரணம் இருக்குமா என்று நாம் ஆராயலாம்.
ஐரோப்பிய மேலாதிக்கத்தின் காரணம் என்று முதல்பார்வைக்குத் தோன்றுவது அவர்கள் இயந்திரவியலில் பெற்ற வெற்றிதான். துப்பாக்கிகள், கப்பல்கள் போன்ற கருவிகள் அவர்களுக்கு ராணுவ முதன்மையை அளித்தன. இயந்திரங்கள் மூலம் உற்பத்திசெய்ய ஆரம்பித்தபோது அவர்கள் பெருமளவிலான ஆலை உற்பத்தியை உருவாக்கிக் கொண்டார்கள். தொழிற்சாலை உற்பத்தி முறைமூலம் அவர்கள் அன்றுவரை கொண்டிருந்த நிலப்பிரபுத்துவமுறை இல்லாமலாகியது. சமூகம் முதலாளித்துவக் கட்டமைப்புக்கு மறுஆக்கம் செய்யப்பட்டபோது மேலும் அதிக மக்கள் உழைப்புக்கு வந்து சேர்ந்தார்கள். திட்டமிட்ட ஒருங்கிணைந்த உழைப்பும் அதை முறையாக குவிப்பதும் ஆரம்பமாகியது. ஆகவே அவர்களிடம் மூலதனம் சேர்ந்தது.
இன்னும் நுட்பமாகப் பார்த்தால் இயந்திரவியலின் தர்க்கமுறை அவர்கள் சிந்தனைகளை வடிவமைக்க ஆரம்பித்ததையும் அந்த இயந்திரவியல்நோக்கு அவர்களை வலிமைகொண்டவர்களாக ஆக்கியதையும் காணலாம். ராணுவங்களை பிசிறில்லாத இயந்திரங்களாக அமைத்துக்கொண்டார்கள். நிர்வாக இயந்திரம் என்று நாம் இன்று சொல்லும் கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு சமூக அமைப்புகளை துல்லியமாக செயல்படச் செய்தார்கள். நீதி, பொதுநிர்வாகம், நிதிமேலாண்மை போன்றவற்றில் அவர்கள் உருவாக்கிய இயந்திரத்தன்மை கொண்ட அமைப்புகள் திறன்வாய்ந்த அரசமைப்புகளை அவர்களுக்கு உருவாக்கி அளித்தன.
இன்னும் ஆழமாகச் சென்றால் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் மாபெரும் இயந்திரங்களாக அவர்கள் உருவகித்துக் கொண்டமை அவர்களை அவற்றை தயக்கமில்லாமல் முழுமையாக தங்கள் சுயநலநோக்குக்குப் பயன்படுத்திக் கொள்ளச் செய்தது. பூமியைக் கண்டடைவதிலும் அதை வெல்வதிலும் அவர்களுக்கு திறமையை உருவாக்கியது அந்த அணுகுமுறையே. பூமியும் கடலும் வானமும் அவர்களுக்கு தாங்கல் பயன்படுத்திக் கொள்வதற்குரிய இயந்திரங்களாகவே பொருள்பட்டன.
விளைநிலத்தை அன்னையாகவோ தெய்வமாகவோ எண்ணுபவனை விட அதை இடுபொருட்களையும் உழைப்பையும் விளைச்சலாக மாற்றித்தரும் ஒர் இயந்திரம் என்று எண்ணும் ஐரோப்பியன் அதிலிருந்து அதிகலாபம் பெறுகிறான். லாபத்துக்காக அதை மெல்லமெல்ல அழிக்கிறான். இன்றைய நவீன வேளாண்மை, தோட்டத்தொழில், மீன்பிடித்தொழில் போன்றவை ஐரோப்பிய இயந்திரவாத நோக்கால் உருவாக்கப்பட்டவையே. உலகத்தையே ஒருகட்டத்தில் ஐரோப்பா உண்ண ஆரம்பித்தது.
தத்துவத்திலும் அறிவியலிலும் அவர்கள் அடைந்த இயந்திரவாத நோக்கு டார்வினியம், மார்க்ஸியம், ஃப்ராய்டியம் போன்ற சிந்தனைகளை உருவாக்கியது. மனிதர்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பார்ப்பதிலும் ஆராய்வதிலும் புதிய வழிகளை அவர்களுக்கு உருவாக்கியளித்தது. அலோபதி மருத்துவமும் சரி, நவீன பள்ளிக்கல்வி முறையும் சரி, அதன் விளைவே. ஒவ்வொன்றையும் பகுத்தும் தொகுத்தும் நோக்கும் ஐரோப்பிய அறிவுக்கூறியல் அவ்வாறு உருவானதே. அது அங்கே ஓர் அறிவுக்கொந்தளிப்புக்குக் காரணமாகியது. இன்றுவரை மேலாதிக்கம் செலுத்தும் நவீன அறிவியலை அதுவே உருவாக்கியது.
ஆக, நாம் ஐரோப்பாவின் எழுச்சிக்குப் பின்னால் காண்பது இயந்திரவாத நோக்கு என்ற கருத்தை. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃப்ரான்ஸிஸ் பேக்கனை இதன் பிதா என்று கூறுவது வழக்கம். ஆனால் அந்நோக்கு ஐரோப்பாவில் பற்பல சிந்தனையாளர்களால் மெல்ல மெல்ல உருவாக்கி எடுக்கப்பட்ட ஒன்றே.
இயந்திரவாதநோக்கு என்பதை ஒரு மாபெரும் மானுடத் தரிசனமாகக் கொள்ள முடியும். அந்த தரிசனம் ஒரு காலத்தருணத்தில் மனிதமனத்துக்கு வாய்த்தது. இயற்கை மேல் மனிதனுக்கு ஆதிக்கத்தை உருவாக்கியது. அதன்மூலம் இய்றகையுடனான மனிதனின் நடபார்ந்த உறவு இல்லாமலாகியது. மானுட ஆற்றல் என்பதை ஒரு பெரும்நீர்நிலை என்று சொன்னோமென்றால் இத்தகைய தரிசனங்கள் அதில் விழும் உடைப்புகள் போல. மொத்த மானுட அகஆற்றலும் அந்த வழியினூடாகப் பீறிடுகிறது.
ஆகவே ஒரு சமூகம் கொள்ளும் முதன்மை அச்சமூகம் அடைந்த ஒரு தரிசனத்தின் வலிமையினாலேயே உருவாகிறது என்று சொல்லலாம். பிற அனைத்துமே அதன் விரிவாக்கங்கள்தான்.
அப்படியானால் தொன்மையான இந்திய சமூகத்த்தை உருவாக்கிய மையத்தரிசனம் யாது? அப்படி ஒரு தரிசனத்தைச் சொல்ல முடியுமா என்ன?
தொன்மையான இந்திய சமூகத்தின் விளைச்சல்களாக நாம் இன்று காண்பவை மாபெரும் ஞானநூல்கள். பேரிலக்கியங்கள். பெரும் கலைப்படைப்புகள். இவற்றின் வழியாக நாம் காணும் அச்சமூகத்தை வரலாற்றுத் தகவல்களின் வழியாக நாம் ஊகித்து விரிவுபடுத்திக் கொள்கிறோம்.
நம்முடைய ஞானநூல்கள் அனைத்திலும் உள்ள பொதுவான அம்சம் என்ன? இந்திய ஞானமரபின் தொடக்கம் என்றால் அது ரிக்வேதமே. ரிக்வேதத்தை ஒரு மாபெரும் தொகைநூல் என்றே சொல்லவேண்டும். பலவகைப்பட்ட இனக்குழுச்சடங்குகளும் நம்பிக்கைகளும் விரவிவரக்கூடிய ஒரு கதம்பம். மெய்யியல் அடிப்படையில் நோக்கினால்கூட ரிக்வேதம் பல்வேறு தரப்புகளின் உரையாடலால் ஆனது.
ஒட்டுமொத்தமாக ரிக்வேதத்தின் ஞானத்தரப்புகளை ஞானகாண்டம்-கர்ம காண்டம் என்று பிரித்திருக்கிறார்கள். வேள்விகள் சடங்குகள் ஆசாரங்களை முன்னிறுத்துவது கர்மகாண்டம். தூய அறிவின் தேடலை மட்டுமே முன்னிறுத்துவது ஞானகாண்டம். இவ்விரு சரடுகளும் இந்திய ஞானமரபின் எல்லா காலகட்டங்களிலும் நீண்டன. இந்திய ஞானமரபின் எல்லா பிரிவுகளிலும் இந்த அடிப்படையிலான பெரும் உள்விவாதம் நடந்துள்ளது என்பதைக் காணலாம். ஒரு கோணத்தில் ஹீனயான பௌத்தத்துக்கும் மஹாயான பௌத்தத்துக்கும் இடையேயான முரண்பாடே இதுதான்.
வேதங்களின் ஞானகாண்டத்தின் நீட்சியாக வேதாந்த காலகட்டம் அல்லது உபநிடதங்களின் காலகட்டம். அதன்பின்னர் ஆறுதரிசனங்களின் காலகட்டம். அதன்பின்னர் ஆசீவகம், சமணம், பௌத்தம் என அவைதீக மதங்களின் காலகட்டம். பின்னர் பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம். இந்தக் காலகட்டங்கள் அனைத்திலும் நாம் காண்பது மிக விரிவான உள்விவாதங்களைத்தான்.
உபநிடதங்களில் மிகத்தீவிரமான வேதமறுப்பைக் கொண்டவை உள்ளன. வேதங்களை முதற்சொல்லாக ஏற்றுக்கொண்டவை பல உள்ளன. ஆறுதரிசனங்களில் பௌதீகவாத அடிப்படை கொண்டவை உள்ளன. தூய அறிவையே முதல்முழுமை என்று சொல்லும் வேதாந்தமும் முழுமுதற்சொல்வாதம் [சுருதிவாதம்] பேசும் பூர்வமீமாம்சமும் உள்ளன.
பௌத்த சமண மதங்களின் உள்விவாதங்களுக்கு மிகப்பிரம்மாண்டமான விரிவு காணப்படுகிறது. தூயதர்க்கத்தை முன்வைக்கும் யோகாசார பௌத்தம் முதல் சடங்குமதமான வஜ்ராயன பௌத்தம் வரை அதன் தரப்புகள் எண்ணற்றவை. பிற்கால வேதாந்தங்களின் உள்விவாதங்கள் மூன்று நூற்றாண்டுக்காலம் நம் மரபில் நீடித்தவை.
இத்தனை உள்விரிவை நாம் நம்முடைய சைவ, வைணவ, சாக்தேயப் பெருமதங்களின் உள்ளேயும் காணமுடிகிறது. அவை ஒவ்வொன்றுக்குள்ளும் ஏராளமான தனிவழிபாட்டு முறைகள் அடங்கியிருக்கின்றன. சிவகாமசுந்தரனை வழிபடும் தென்னகச் சைவத்துக்கும் மயான ருத்ரனை வழிபடும் அஹோர சைவத்துக்கும் இடையே உள்ள தொலைவு பிரம்மாண்டமானது.
இந்த உள்விரிவையே நம்முடைய பேரிலக்கியங்களும் காட்டி நிற்கின்றன. மாறுபட்ட தரப்புகள் ஒரே பேசுதளத்துக்கு வந்தவை போல இருக்கின்றன நம்முடைய பேரிலக்கியங்கள். ஸௌனகனின் நாத்திகவாதமும் கீதையின் ஞானவாதமும் விதுரனின் தர்மவாதமும் பீஷ்மரின் ராஜநீதிவாதமும் ஒன்றாகச்சேரும் ஒரு பெருவெளி என மகாபாரதத்தைச் சொல்லலாம். ஒற்றைக்குரலில் பேசும் பேரிலக்கிய ஆக்கமே நம் மரபில் இல்லை. விஷ்ணுபுராணம், ஸ்காந்தம் போன்ற பெருந்தெய்வ வழிபாட்டு நோக்கமுள்ள புராணங்கள்கூட ஒற்றைப் படையானவை அல்ல. உதாரணமாக ஸ்காந்தம் குமரக்கடவுளைப் பற்றியது. ஆனால் அது சூரபதுமனின் பெருமையைச் சொல்லும் வரலாறும்கூடத்தான்.
இந்த மாபெரும் பன்மைத்தன்மை எப்படி வந்தது? இந்தியா என்னும் இந்த வளம்மிக்கப் பெருநிலத்தின் வாழ்க்கைவிரிவே அதற்குக் காரணம். பல்வேறு இன மக்களும் வரலாற்றுக் காலத்துக்கு முன்னரே தோன்றி பரவி வளர்ந்து தங்களுடைய வாழ்க்கைப் பார்வைகளையும், வழிபாடுகளையும், ஆசாரங்களையும் உருவாக்கிக் கொண்டுவிட்ட நிலம் இது. நமக்குக் கிடைக்கும் முதல் தொல்பிரதி ரிக்வேதம்தான். அப்போதே தனித்துவம் கொண்ட வாழ்க்கைமுறையும் வழிபாட்டுமுறையும் சிந்தனைமுறையும் கொண்ட பல்வேறு குடிமைச்சமூகங்கள் உருவாகி விட்டிருந்ததை ரிக்வேதசூக்தங்கள் வழியாகவே அறியமுடிகிறது.
ஆகவே நம்முடைய பண்பாடு என்பது அச்சமூகங்களுக்கு இடையேயான தொடர்ச்சியான உரையாடல் வழியாக உருவானதாகும். ஆகவேதான் ஒற்றைக்குரல் ஒற்றைமையம் என்ற கருத்ததிகாரம் என்றுமே சிந்தனைத்தளத்தில் இங்கே இருந்ததில்லை. காரணம் அப்படிப்பட்ட ஒரு ஒற்றைச்சட்டகத்துக்கு இங்கே வேலையில்லை. பல்வேறு தரப்புகளுக்கு இடையேயான உரையாடலே ரிக்வேதம் முதல் உபநிடங்கள், தரிசன நூல்கள் அனைத்திலும் காணப்படுகிறது.
இந்துஞானமரபு என்று நாம் இன்று சொல்லும் இந்தப் பாரம்பரியம் என்பது மூவாயிரம் வருடம் தொடர்ச்சியாக வளர்ந்த அந்த உரையாடலின் விளைவே. அந்த உரையாடலின் வழியாக உருவான ஒத்திசைவே இந்திய சமூகத்தை உருவாக்கியது. இந்திய சமூக உருவாக்கம் என்பது ஒரு பிரம்மாண்டமான தொகுப்புச்செயல், ஓர் இணைப்புப்பணி, ஒரு சமரச நிகழ்வு.
இந்த இயல்பின் காரணமாகவே இந்துஞானமரபில் உள்ள எல்லா மதங்களுக்கும் மிக நெகிழ்வான கட்டமைப்பு உருவாயிற்று. அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை அவற்றுக்கு வந்தது. இப்படி தழுவி உள்ளிழுக்கும் போக்கின் வழியாகவே அவை தங்கள் உள் முரண்பாடுகளை தீர்த்துக்கொண்டன. எதிர்ப்புகளை எதிர்கொண்டு வளர்ந்தன.
இந்த இயல்பு ஸமன்வயம் என்றும் ஸம்யக்திருஷ்டி என்றும் சொல்லப்பட்டது. பண்டைய இந்திய வரலற்றை ஆராய்ந்த அறிஞர்கள் அனைவருமே இந்த அம்சத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். டாக்டர் ராதாகிருஷ்ணன் சொல்கிறார் “வேதமதம் பழைய ஆசார சம்பிரதாயங்களையும் வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக்கொண்டு தன்னதாக்கிக் கொண்டு வளர்ந்தது. அவற்றை அழித்தொழித்து விடுவதற்குப் பதிலாக தன்னுடைய தத்துவத்தேவைக்கு ஏற்ப மறு ஆக்கம்செய்து கொண்டது. திராவிடப் பண்பாட்டிலிருந்தும் புஆதன பழங்குடிப் பண்பாட்டிலிருந்தும் அது ஏற்றுக்கொண்ட ஏராளமான பண்பாட்டுக் கூறுகளின் காரணமாக வேதமதத்தில் பூர்வீக ஆரியக் கூறுகள் எவை என்று கண்டுபிடிப்பதே சிரமமானதாக ஆகிவிட்டது” [Dr.S.Rathakrishnan Eastern Religions and western Thought]
ஆரம்பகால இந்தியவியல் ஆய்வாளரான கோர்டான் சைல்ட் இவ்வாறு சொல்கிறார் “ஒரு குறிப்பிட்ட நிலச்சூழலுடன் மனிதவாழ்க்கை தன்னை எப்படி முழுமையாக இணக்கிக் கொள்ளமுடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக வேதகால நாகரீகத்தைச் சொல்லலாம். நெடுங்காலம் நீண்டுநின்ற பொறுமைமிக்க உரையாடலும் புரிந்துகொள்ளும் முயற்சியும் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது. அது நெடுங்காலம் நீடித்திருக்கவும் செய்தது. இந்தச்சிறப்புத் தன்மை இதற்குள் ஒரு இந்தியக் குணமாகவே ஆகிவிட்டிருக்கிறது. நவீன இந்தியப் பண்பாட்டின் அடித்தளமாக அமைந்ததும் அதுவே” [Gordon Childe. New light on the Most Ancient Eeast ]
சுதந்திரப் போராட்ட காலத்துக்கு பின்னர் எழுத ஆரம்பித்த இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் இந்தியப் பண்பாட்டின் இந்த அம்சத்தை ஒரு எதிர்மறை அம்சமாகவே சித்தரித்து அதை ஒருசாரார் ஏற்கும்படியும் செய்திருக்கிறார்கள். அவர்களின் அரசியல் நோக்கம் இந்திய சமூகத்தில் முரண்பாடுகளை வளர்த்து சமூகப்போராட்டங்களை உருவாக்குவதே. இறுகிப்போன சமூக ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்ப்பதற்கு அந்த வழிமுறை தேவையானதாகவும் இருந்திருக்கலாம். ஆகவே எல்லாவற்றையும் ஆரத்தழுவி உண்டு தன் உடலாக ஆக்கிவிடும் பெரும்பூதமாக இந்துமரபு அவர்களால் சித்தரிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் அவர்கள் முன்பாக ஒரு பெரும் வரலாற்று உண்மை நின்றிருந்தது. மாற்றுத்தரப்புகளை விவாதம் மூலம் உள்ளிழுத்துக் கொள்ளும் திறந்த இயல்புமூலமே இந்த நிலத்தில் மதமோதல்கள் வன்முறையையும் அழித்தொழிப்புத் தன்மையையும் தவிர்த்தன. இந்திய நிலப்பகுதியின் மூன்றாயிரம் வருடத்து வரலாற்றில் மேலைநாட்டில் நிகழ்ந்ததுபோன்ற பெரும் மதப்போர்களை நாம் பார்க்கமுடியாது. ஐந்துக்கும் மேற்பட்ட மதங்கள் உதயமான இம்மண்ணில் மத்தியக்கிழக்கு மண்ணில் நிகழ்ந்தது போல மதப்போர்கள் நிகழ்ந்திருந்தால் என்ன எஞ்சியிருக்கும்?
இந்த அப்பட்டமான உண்மையை மழுப்பும்பொருட்டு இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் தடுக்கிலும் பின்னர் கோலத்திலும் புகுந்து மதப்பூசல்களையும் அழிவுகளையும் கண்டடைய முயல்கிறார்கள். புராதனமான திராவிடப் பண்பாட்டை ஆரியர் போரிட்டு அழித்ததாக ஒரு ஊகத்தைச் சொல்லி அந்த அடிப்படையில் இதிகாசங்களை வலிந்து விளக்க முயல்கிறார்கள். பௌத்தமும் சமணமும் வன்முறைமூலம் அழிக்கப்பட்டதாகச் சொல்லிச் சொல்லியே நிறுவ முயல்கிறார்கள். உண்மையில் அம்முயற்சிகள் பலன்தந்த காலகட்டம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்துக்கு வெளியே வந்தால் வெயில்பட்டு வாடுகிறது அத்தரப்பு.
அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் சில தகவல்களை பலவகையிலும் திரித்து இறந்தகால மதமோதல்களின் ஒரு சித்திரத்தை இவர்கள் உருவாக்க முனைகிறார்கள். மதுரையில் எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் பொய் ஓர் உதாரணம். சைவ இலக்கியங்களில் சைவத்தவரால் மிகைப்படச் சொல்லப்பட்ட ஒருசெய்தி அது. அதிலும் வாதில் தோற்ற சமணர்தான் அதன்படி தாங்களே கழுவேறுகிறார்கள்.
எண்ணாயிரவர் என்பது சமணர்களிடையே உள்ள ஒரு குழுவின்பெயராக இருக்கலாமென்பதும் அப்படி நாலாயிரவர் நூற்றுவர் என்றெல்லாம் முன்பு சமணர்களாக இருந்த வணிகர்குலங்களுக்குப் பெயர்கள் உண்டு என்பதும் எல்லாம் ஆராயத்தக்கவை. முக்கியமாக கல்வியை நெறியாகக் கொண்டதும் திட்டவட்டமான அமைப்புகளும் வரலாற்றுக் குறிப்புகளும் கொண்டதுமான சமண மதத்தில் இதைப்பற்றி ஒரு சிறு தகவல் கூட இல்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சமணர்கள் தமிழகத்தில் மெல்லமெல்லத் தேய்ந்து சிறு எண்ணிக்கையாக ஆனபடியே இன்றுவரை எந்தவிதமான தாக்குதலுக்கும் ஆளான வரலாறே தங்கள் குலநினைவுகளில் இல்லாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆலயங்கள் தமிழகத்தில் பெரும்பாலும் அப்படியேதான் உள்ளன. பாழடைந்து கைவிடப்பட்ட சில ஆலயங்களே சிதைந்துள்ளன அல்லது வேறு தெய்வங்கள் நிறுவப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும்கூட அதிகமும் நாட்டார் சிறுதெய்வங்களே நிறுவப்பட்டுள்ளன, சமணரை அழித்ததாகச் சொல்லப்படும் பெருமதத்து தெய்வங்கள் அல்ல.
அப்படியே வைத்துக் கொண்டாலும்கூட இந்தியப் பெருநிலத்தில் அத்தகைய ஒருசில நிகழ்ச்சிகளைக்கூட நம் இடதுசாரிகளால் சுட்டிக்காட்ட முடிவதில்லை. பௌத்தத்தின் பேரழிவுக்குக் காரணமான அழித்தொழிப்பு நாளந்தா பல்கலை கழகத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பக்தியார் கில்ஜியால்தான் நடத்தப்பட்டது. பக்தி இயக்கம் மூலம் இந்து மதங்கள் பெரும்வளர்ச்சி பெற்றபின் மேலும் ஐந்து நூற்றாண்டுக்காலம் பௌத்தம் வலுவாகவே நீடித்திருக்கிறது என்பது வரலாறு.
மத்தியக்கிழக்கின் ஒற்றைத்தரிசன மதங்கள் பரவிய நிலங்களில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கும்போது இந்தியப் பெருநிலத்தின் வரலாறு பெரும் ஆச்சரியத்தையே அளிக்கிறது. இங்கே பண்பாட்டுக் கலப்பு நடந்துள்ளதே ஒழிய பண்பாட்டு அழிப்பு நிகழவில்லை. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் சிந்துசமவெளி நாகரீகத்தில் இருந்த பண்பாட்டுக்கூறுகள் கூட இன்றும் அழியாமல் நீடிக்கின்றன. இந்தியப் பெருநிலத்தின் தொன்மையான பண்பாட்டுக்கூறுகள் எதுவுமே முற்றாக அழிந்ததில்லை. காரணம் இங்கே நடந்தது கொள்வதும் கொடுப்பதும் அடங்கிய ஒரு பண்பாட்டு உரையாடல்தான்.
ஸ்மன்வயம் என்ற சொல் இங்கே மிகக்கூர்ந்து நோக்கத்தக்கது. நாராயணகுரு அவரது நூல்களில் இந்தசொல்லை மிக விரிவாகப் பயன்படுத்தியிருக்கிறார். இதை ஒருங்கிணைப்பு அல்லது கலப்பு என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒருங்கிணைக்கப்படும் கூறுகளுக்குள் உண்மையான முழுமையான ஒத்திசைவை உருவாக்குதலும் எந்த ஒரு கூறும் தன் இடத்தையும் தனித்தன்மையையும் இழக்காமலிருக்க கவனம் கொள்ளுதலும் இதன் இயல்பு. ‘தத்வ சமன்வயம்’ என்றே நாராயணகுரு தன் விவாதங்களைக் குறிப்பிடுகிறார். நம் சிந்தனையில் நெடுநாட்களாக நடந்தது இதுவே. பன்மைப் பண்பாடு கொண்ட ஒரு நிலப்பரப்புக்கு மிகச்சிறந்த வழிமுறை இதுமட்டுமே
இந்த பன்மைத்தன்மை, உரையாடல்தன்மை, பண்பாட்டுப் பரிமாற்றம்தான் இந்திய மரபின் வெற்றிக்கும் சிறப்புக்கும் காரணம். கோர்டன் சைல்ட் கூறுவதுபோல இன்றும் தொடரும் இந்தியப் பண்பாட்டின் அடித்தளம் இந்த இயல்பேயாகும்.
ரிக்வேதம் பத்தாம் மண்டலமே இந்தியத்தத்துவ சிந்தனையில் நமக்குக் கிடைக்கும் மிகப்பழைய வடிவம். பத்தாம் மண்டலத்த்தில் ஒருபாடல் இவ்வாறு அறைகூவுகிறது
சமானீ வ ஆஹுதி! ஸமானா ஹ்ருதயானீ வ
ஸமானம் அஸ்து வோ மனோ! யதா வா ஸுஸஹாஸதி
[இணைந்து வழிபடுங்கள்! உங்கள் இதயங்கள் இணைக!
உங்கள் மனம் ஒன்றாகுக! ஒன்றாக நலம் பெறுங்கள்!]
(24 ஜனவரி 2009 அன்று கும்பகோணம் மூவர்முதலிகள் முற்றத்தின் சா ர்பில் நடந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை. முதல் பகுதி. மறுபிரசுரம்)
வேதாந்தம் தமிழிலக்கியம்: இன்னுமிரு கடிதங்கள்
வேதாந்தம், தமிழிலக்கியம்: கடிதங்கள்