யாயும் ஞாயும் [சிறுகதை]- ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

[ 1 ]

“எங்க அப்பனுக்கு முப்பாட்டனாக்கும் அந்த முத்துப்பட்டன்” என்ற சபாபதி தாத்தாவை திகைப்பாகப் பார்த்தேன். வெற்றிலை குதப்பிய வாயோடு பற்களில் கரைகள் தெரிய சிரித்துக்கொண்டிருந்தார். கண்ணீருடன் புறவாசலில் உட்கார்ந்திருந்த என் பதட்ட நிலை அவருக்கு வேடிக்கையாக இருந்தது.

என் பக்கத்தில் படித்துறையில் நன்றாக சம்மணங்கால் போட்டு அமர்ந்தவரை பார்த்து, “முத்துப்பட்டனா அதாரு?” என்றேன்.

“ஏலே, பட்டவராயன தெரியாதா லே உனக்கு, சொரிமுத்து அய்யனார் கோவிலுல இருப்பாருல்லா?” என்றார்.

“ஆமா ஆமா. செருப்பு மாலை போடுவாகளே” என்றேன்.

“ஆமா அவருத்தான்”

“அவருக்கென்ன இப்போ?”

“அவரு கூட ரெண்டு பொண்ணுங்க இருக்கே அதாருன்னு தெரியுமா லே”.

“தெரியுமே திம்மக்கா, பொம்மக்கா” என்றேன்.

“அங்க தாம்லே சங்கதியே இருக்கு” என்றார். நான் அதிலென்ன என்பது போல் விழித்தேன்.

“ஆச்சி அழகு பொம்மீக்கு ஏழு பையனுகளாக்கும் அதில பாட்டன் நல்ல ஆஜானுபாகுவான ஆளு, மதங்கொண்ட யானைய ஒத்தக் கையில அடக்குவாரு. ஊர் திரண்டு வந்தாலும் ஒத்தையில நின்னு சண்ட போடுத ஆளாக்கும்” என்றார்.

“தாத்தா விஷயம் புரியாம ஏதேதோ பேசாதீக. நானே எரிச்சல்ல இருக்கேன்” என்றேன்.

“உங்க அப்பனாட்டம் அவசரக் குடுக்கயா பேசாத, விஷயமா தாம்லே சொல்லுதேன் கேளு மொத” என்றார்.

அவர் முன்னால் அழுது புலம்பக் கூடாது என வாய்க்காலை நோக்கி பார்வையை நிலைக்க வைத்து கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“என்னலே சொல்லிக்கிட்டிருந்தேன்?”.

“முத்துப்பட்டன் ஒத்தையில சண்ட போடுவாக” என்றேன்.

“ஆங், அதேதான் அவரு ஊர விட்டு ஓடிப் போய் கேரளாவுல உள்ள கொட்டாரக்கரை ராமராஜாவுக்கு பாதுகாவலனா இருந்தாரு.”

இவர் ஏன் இப்போது நிலைமை தெரியாமல் சம்பந்தமே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்? இங்கிருந்து எழுந்து செல்லவே மனம் தவித்தது.

“அவரிக்க அம்மா அழகு பொம்மீ ஆச்சி இங்க சாவக் கெடக்க நெலையில பிள்ளைய கண்ணுல பாத்து அவனுக்கு ஒரு கல்யாணங் காட்சி கண்டாத்தான் சீவனடங்குன்னுட்டா. அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க பொண்ண தேடி திர்நெவேலி தெப்பங்குளந் தெரு சோமசுந்தரம் ஐயர் மகளப் பாத்து சம்பந்தம் பண்ணி ஆளத் தேடி ஆறு அண்ணனும் எட்டுத்திசைக்கும் திரிஞ்சாங்க. கடைசியா கொட்டாரக்கரயில ராஜாவோட படையாள் ஒருத்தன் மரத்திலேர்ந்து கீழ விழுற பூவ வாளால அறுப்பான்னு தெரிஞ்சு அவன்தான்னு கண்டுகிட்டு அங்க போய் கூட்டியாந்தாங்க.”

ஏற்கனவே கல்யாணம் என்ற சொல்லால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். நேரங்காலம் தெரியாமல் தாத்தா பழைய கதைகளைச் சொல்லி தாலியரறுப்பதில் எரிச்சல் முட்டிக் கொண்டு அழுகையாக மாறியது.

“நீ நினைக்கித மாதிரி கூட்டியாந்து கல்யாணம் பண்ணி வைக்கல, அப்படி பண்ணா ஏன் அங்கன சாமியா நிக்கிதாரு? உன்ன கணக்கா அழுதிட்டு போய் சேருற சவத்தில ஒன்னாலா ஆகிருப்பாரு” என்றார்.

தாத்தா இவ்வளவு தெளிவாக பேசக்கூடிய ஆள் இல்லை. ஏதோ பொழப்பத்து போய் நேரம் போக கதைகள் சொல்வார். நானும் நேரத்தைப் போக்க கதைகள் கேட்டுக் கொண்டிருப்பேன். இன்று அவர் பேச்சு கொஞ்சம் கவர்ந்தது. எனக்கான வழியை சொல்லுவார் எனத் தோன்றியது.

“ஏழு பேருமா திரும்ப வரும்போதே பாதி வழியில இருட்டிருச்சி, இங்கண அய்யங் கோயில் தாண்டி தனவாய்கொட்டகையில ஒரு பழய இடிஞ்சு கெடந்த சின்ன கோட்டையில தங்கிக்கலாம்னு முடிவு பண்ணி எல்லாரும் அங்கேயே படுத்துட்டாக. வந்த களைப்புல நம்ம முத்துப்பட்டனும் தூங்கிட்டாரு, நடு சாமத்தில திடீர்ன்னு கிளி கத்துற சத்தங்கேட்டு விழிச்சவரு, இந்நேரத்துல என்ன கிளி சத்தம்னு வெளிய போனா அது பாட்டு சத்தம்.”

“இந்திரனோ சந்திரனோ சந்திரனோ, அவன் ஈசனோட திருமகனோ திருமகனோ, மன்மதனோ மாயவனோ”ன்னு  மொத பாட்டு கேக்குது, “மன்மதனோ மாயவனோ, வனத்தில் வாழும் அகஸ்தியனோ, இன்னார் என்று தெரியவில்லை, என்ன செய்வேன் தோழி”னு  அதுக்கு எதிர்ப்பாட்டு. ரெண்டும் ஒண்ண ஒண்ணு விஞ்சிற குரலாக்கும். தேன்கிளியா இனிச்சிருக்கு. அங்கனையே மயக்கந் தான். ரெண்டு பேத்தையும் தொரத்திக்கிட்டே போயிருக்காரு. பின்னாடி இவர கண்டவளுக முள்ளுக்காட்டுல ஓட்டமா ஓடி அவளுக அப்பன் வாலப்பகடைட்ட போய் சொல்லிபுட்டாளுக.

சேதி கேட்டவன் அரிவாள எடுத்துக்கிட்டு, “அவன கண்டதுண்டமா வெட்டி காட்டு நரிக்கு எரையாக்குதேன்” ன்னுட்டு இவர வெட்ட ஓட்டமா ஓடியாந்தாரு. காணாதத கண்டவனுக்கு காமால நோயாக்கும்னு கணக்கா பாதி வழியிலயே பாட்டன் மூச்சிரைச்சு விழுந்துட்டாரு.

எதுக்க வந்த வாலப்பகடை விழுந்து கெடந்தவர தண்ணியூத்தி எழுப்பி “இங்க எம்பொண்ணுகள தொரத்திக்கிட்டு வந்தவன பாத்திகளா? தாயோளிய வெட்டாம விடமாட்டன். எங்காட்டிலயே வந்து எம்பொண்ணுகளயே தொரத்திட்டு வாரானா நாறத்தாயோளி” என்றவரை வணங்கி, “நான்தான் தொரத்தியது, கல்யாணங் கெட்டிக்கவாக்கும் வந்தது. ராத்திரியில வந்ததாலே தப்பா போயிருச்சி”னு பாட்டன் நடந்ததை சொன்னாரு.

அதை கேட்டு வாலப்பகடை விழுந்து விழுந்து சிரிச்சிருக்காரு. “போதையில வந்துட்டிகன்னு நினைக்கேன். வீடு போய் சேருங்க. பாக்க பிராமணப் பயலாட்டம் இருக்கீக. நாங்க ஆட்டையும், மாட்டையும் தோலுரிச்சி செருப்பு தைக்கிற பகடையராக்கும். ஒத்துவராது தம்பி, வீடு போய் சேருங்க. சொல்லுத வண்ணம் தான் சொல்ல முடியும் மீறியும் கேக்கலேனா வேற வழில தான் பேசணும்”ன்னு எக்காளாம சிரிச்சிருக்காரு.

“இல்ல கண்ணுல காதலோட நா பாத்து ஆசப்பட்ட மொதப் பொண்ணுங்க இவங்களாக்கும். கெட்டுனா இவங்களதான் கெட்டுவேன். அதுக்கு நீங்க என்ன கேட்டாலும் தாரேன்.”

“என்ன கேட்டாலும் தருவியா? செரிடே ஒரு மண்டலம் இங்கண பகடையனா இருந்துக்காட்டு. நான் எம் பொண்ணத் தாரேன். நீயே மாட்டுத் தோல உரிச்சி செருப்பு தச்சி வித்துக் கொண்டு வரணும். அப்படி செஞ்சா மறு பேச்சு பேசாம எம் பொண்ண கூட்டிட்டு போ.”

சவால்தான் நம்ம பாட்டனுக்கு இஷ்டமாச்சே? திரும்ப வந்து அண்ணனுங்கட்ட விஷயத்த சொல்ல ஆறு பேருந் திகைச்சி நிக்கிறாக ஒன்னும் பேசாம முத்துப்பட்டன் தூங்கவிட்டுப்போட்டு, “குலப் பெயர கெடுத்த பாவி நல்லாயிருப்பியா? இங்கயே செத்தொழி”னு  ஆறு பேரும் கல்லக் கொண்டு பட்டவராயன் மண்டையில அடிச்சி ஒடச்சி உயிரு போயிருச்சின்னு நினைச்சி அந்தப் பழைய கட்டிடத்தில வச்சி கல்லப் போட்டு மூடிட்டு போயிட்டாங்க.

நான் கதையினுள் மூழ்கியவானாக “அய்யயோ” என்றேன்.

“ஒக்கப்பனாட்டம்தான் நீயும் கொற பிரசவத்தில முந்திகிட்டு பொறந்த பய. சொல்லுதத முழுசா கேக்கணும். எடையில அய்யயோ கொய்யயோன்னா… என்ன சொல்ல வந்தேன்?” என்றார் தாத்தா.

“உயிர் போனதும் கட்டிடத்தில வச்சி கல்லப் போட்டு மூடிட்டாங்க” என்றேன்.

உசிரெல்லாம் போகல, மயக்கந்தான். லேசில சாவக்கூடிய சீவனா அது? மயக்கந் தெளிஞ்சவரு சுத்துமுத்தி கல்லப் போட்டு அடைச்சத கண்டுகிட்டாரு. கேட்டுக்கோ, சோதிக்கும் போதுதான் தெய்வம் கூடயிருக்கும். அத நாம கண்டுக்கிடணும். அவ்வளவுதான், வழி திறந்திரும். அந்தக் கோட்டையிலேயே ஒரு சொரங்கப்பாத இருந்திருக்கு. அதோட வந்து ஊருக்குள்ள போய் பூணூலையும், குடுமியையும் எடுத்திட்டு கட்டிவச்சிருந்த தங்கப் பல்ல வித்து காதுக்கு கல் கடுக்கனும், தோல் சட்ட, தோல் செருப்பெல்லாம் வாங்கினாரு. ஒரு மண்டலம் ஒக்காந்து செருப்பு தச்சி வித்து பணத்தோட நேரா வாலப்பகடை வீட்டுக்குப் போய், “இப்போ என்ன சொல்லுதேரு? திம்மக்காவையும், பொம்மக்காவையும் எனக்கு தாறேரா?”னு கேட்டாரு.

“கெட்டிக்க ராசா. இவளுக ஒனக்காக பொறந்தவளுகளாக்கும்” வாலப்பகடை சம்மதமும் கெடைச்சிருச்சி.

“பணிகாரம் சுட்டு, பந்தலிலை நட்டு, தோரணங்கள் சூழ, இந்திரனைப் போல வானவர்கள் வாழ்த்த தேவியர் கைக்கொள்ளும் விழவ” சுத்தி குரவ பாட முதுவள்ளுவன் வந்து கரம்பிடிச்சு வச்சதாக்கும்.

எனக்கு அவர் சொல்ல வருவது புரிந்தது. “இதெல்லாம் இப்ப ஏன் சொல்லுதேன்னா, அவளுகள பாத்த கணம் பாட்டன் முடிவு பண்ணிட்டான் இவளுகதான் எனக்குன்னு. அவளுகளுக்காக என்னமும் செயல்லாம்னு துணிஞ்சிப்புட்டாரு. அந்தக் காலத்தில பிராமணன் பகடையா மாறுறது லேசுபட்ட காரியமா? நிக்கணும் துணிஞ்சி நிக்கணும். அப்பதான் பொண்ணும் மண்ணும் நமக்குடே. இங்கண வந்து கோழப்பயலாட்டம் அழுதிட்டு கெடந்தா பட்டவராயன் ரெத்தம்ன்னு சொல்லுததுக்கே வெக்கக் கேடு” என்றார் தாத்தா.

“தாத்தா, எனக்கு புரியுது தாத்தா. ஆனா அப்பாவ எப்படி எதித்து பேசுறது? அவரு மொகத்துக்கு முன்னாடி போய் நின்னாலே தொடையெல்லாம் நடுங்குது. அவருட்ட பத்து ரூவா கேக்குறதுக்கே எட்டு தடவ யோசிப்பேன் ஒரு பொண்ண கெட்டிக்கப் போறேன்னு நான் எங்க போய் சொல்ல?” என்றேன்.

“சீதைக்கி சித்தப்பன் செவராமன்றியே. ஒருமணிநேரம் சொல்லி என்னல புண்ணியம்?” என்றவர் குரலைச் செருமி வாயினுள் மேலுதட்டில் ஒட்டியிருந்த வெற்றிலையை துப்பி மேலும் சொல்லத் தொடங்கினார்.

ரெண்டு பேத்தையும் கண்டப்பவே அவரு மனசால பகடையனா மாறிட்டாரு. கல்யாணம் முடிஞ்ச வீடு திரும்பி திம்மக்கா தலமாட்டுலயும், பொம்மக்கா கால்மாட்டுலயும் இருக்க இவரு படுத்திருந்திருக்காரு. வெளியே இருந்து ஓடியாந்த பகடைப் பய யாரோ நம்ம ஆட்டையும், மாட்டையும் கடத்திட்டு ஓடுதாவன்னு கத்திக்கிட்டே போயிருக்கான். விஷயங் கேட்டவரு கொதிச்சிட்டாரு.

“எங்காட்டில வந்து எவம்லே ஆட்டையும், மாட்டையும் திருடுதது?”ன்னு வாள எடுத்துக்கிட்டு போய் இருவது பேர் தலைய அறுத்துப்போட்டாரு. திரும்பி வாரப்ப ஆத்துல மொகத்தக் களுவ குனிஞ்சப்ப மறைஞ்சி நின்ன ஆள்காட்டிக்காரன் அவரு முதுகில குத்திப்புட்டான். மரிச்சவருக்காக ஊரே அழுதுச்சி. திம்மக்காவும், பொம்மக்காவும் மறுபேச்சி பேசாம உடங்கட்டை ஏறிட்டாளுக.

“அதாக்கும் அதோட பவரு. ஆம்பளன்னா முழுசா எறங்கி நிக்கணும், இப்படி பொண்டுச்சட்டியாட்டம் அப்பனுக்கும், ஆத்தாளுக்கும் பயந்திட்டு கெடந்தா வெளங்குமா?” என்றார்.

நான் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன்.

“நான் உன்னாட்டம் இருக்கிறப்ப எங்க தாத்தா எனக்கு சொன்னதாக்கும். ஒடம்பெல்லாம் புல்லரிச்சுப் போச்சு. அப்படியே போய் உங்க ஆச்சிய தூக்கியாந்தேன்” என்றார்.

அந்த வரிகள் என்னுள் கிளர்ச்சி எழச் செய்தன, “தாத்தா சொல்லுதது நெசமாவா” என்றேன்.

“ஆமா, பின்ன பட்டவராயன் ரெத்தம்ன்னா சும்மாவா. ஒத்த தோளுல உன் ஆச்சிய தூக்கிட்டு மறு தோளுல மாட்டுவண்டிய ஓட்டியாந்தேன்” என்றார்.

எனக்கு இவையெல்லாம் இப்போது ஒரு புத்துணர்ச்சியை தந்தது.

“ஆமா, பட்டவராயன் பரம்பரைன்னா சும்மாவா, லேசுல விட்டா தெனமும் அதை நினைச்சில்லா செத்திருவேன்” என்றவர் பிறகு “எப்ப அவளுக்கு கல்யாணம்?” என்றார்.

“கல்யாணமில்ல, நிச்சியம்”

“என்னைக்கி?”

“நாளைக்கி” என்றேன்.

“இன்னும் முழுசா ஒரு நாள் இருக்கடே. போய் கூட்டியா. தாத்தா இருக்கேன் கூட” என்றார்.

“நெசமாதான் சொல்லுதியா தாத்தா?” என்றேன்.

“நெசத்துக்கும்தான். அவா என்ன ஆள்கள்?”

“கார்காத்தார்” என்றேன்.

“அடி சக்க. இந்திரனுக்கு பிணை நின்னவங்களாக்கும். போய் கூட்டியா. வருவா” என்றார்.

இப்போது எனக்கு நானே புது மனிதனாக தெரிந்தேன். ஓடிச் சென்று வாய்க்காலில் குதித்து குளித்துவிட்டு திரும்ப வரும் வரை தாத்தா அங்கேயே அமர்ந்திருந்து வெற்றிலையில் சுண்ணாம்பு தேய்த்துக் கொண்டிருந்தார். நேராக சென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன்.

“எப்படி கண்டுபிடிச்ச?” என்றேன்.

“அதாம்லே தாத்தா” என மீசையை முறுக்கினார்.

[ 2 ]

முன்பிருந்த எந்த பயமும், நடுக்கமும் என் மனதில் எழவில்லை. பட்டவராயன் பட்டதில் நூற்றில் ஒரு சிரமம்கூட எடுக்கவில்லையென்றால் நான் என்ன மனிதன்? செல் செல்லென ஏதோ ஒரு விசை என்னை தள்ளிக்கொண்டிருந்தது. நேராகச் சென்று திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறி “யண்ணே, கல்லிடைக்குறிச்சி பஞ்சாயத்தாபிஸ் ஒண்ணு” என்றேன்.

ஜன்னலோர இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டேன். ஏதோ ஒரு புறவிசையால் உந்தப்பட்டுச் சென்று மாட்டிக் கொள்ளப் போகிறோமோ என்ற பயம் எழுந்தது. இல்லை இப்புறவிசையினுள் கூடிய அகவிசையும் ஒன்று உண்டு என்பதை மனம் நினைவு படுத்தியது. வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு சிரித்து கொண்டேயிருந்தேன்.

நினைவுகளுக்குள் நினைவுகளாக மனம் ஒரு சுழற்சியில் சுற்றிக் கொண்டிருந்தது. மொத்த சுழற்சியும் ஒரு புள்ளியிலேயே சென்று அமர்ந்தது. ஏன் இத்தனை நினைவுகள் வாழ்வில் என்றாவது இப்படி ஒரு அகக் கொந்தளிப்பில் சிக்கியிருக்கிறேனா? இனி அங்கே போய் நான் செய்யக் கூடுவதென்ன, அதை யோசித்த கணமே உள்ளம் அதை மறக்கச் சொல்லியது.

தாத்தா ஒரு பாட்டு சொன்னாரே, “இந்திரனோ சந்திரனோ, அவன் ஈசனோட திருமகனோ…” இல்லை, வேறென்னவோ. நான் இந்திரனுமில்லை சந்திரனுமில்லை ஆனால் நான் போய் நேரில் நின்று பெண் கேட்க போகிறேன். அவர்கள் கவர்ந்திழுக்கும் பெண்கள் ஆயிரம் பேர் இருக்கலாம், நான் எனக்கான ஒருத்தியைத் தேடி விரைகிறேன். முதல் முறையாகக் கூட்டை விட்டு வெளியேறுகிறேன்.

அவள் எனக்காக காத்துக்கொண்டிருப்பாளா? நிச்சயமாக காத்திருப்பாள். அவள்தானே “நீங்க வாங்க, வந்து பொண்ணு கேளுங்க, உங்களப் பாத்தா படிச்ச பையன் நல்ல உத்தியோகம்னு மறுபேச்சு பேச மாட்டாக” என்றாள்.

அது வெறும் வாய்ச் சொல். அவளுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். பயந்தாங்கொள்ளி, கண்டிப்பாக வரமாட்டேன் என்றே நம்பியிருப்பாள். இனி என்னை நினைத்து ஏங்கி ஏங்கி வீணாகப் போகும் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பாள். இப்போது அவள் முன் போய் நின்றால் பயத்தில் மயங்கி விழுந்தாலும் ஆச்சரியமில்லை.

எண்ணங்களின் ஓட்டம் அலாதியானது அதில் நமக்கு இன்பமும், நம்பிக்கையும் தரக் கூடிய இடங்களை மட்டுமே தேர்ந்தெடுப்போம். அதிலேயே திளைத்திருப்போம், “கல்லிடைக்குறிச்சி பஞ்சாயத்தாபிஸ்” என கண்டக்டர் சொன்னதும் நெஞ்சுள் கருக்கென்றது.

இறங்கி சாலையைக் கடந்து ஆதிவராகப் பெருமாள் கோவில் சாலையை நோக்கி நடந்தேன். மனம் காயத்ரி காயத்ரி என மந்திரம் ஜெபிப்பது போல் அவள் பெயரையே சொல்லிக்கொண்டிருந்தது.

கோவிலைக் கடந்து மூன்றாவது சந்தில் இரண்டாவது வீடு அவளுடையது. நினைவில் மங்காத சில விஷயங்கள் என்றுண்டு. அதில் இது முதன்மையானது. நிச்சயத்திற்காக வாசலில் சிறிதாக ஓலைப் பந்தலும் இட்டிருந்தனர்.

உடம்பில் ஒருவித நடுக்கம் பரவத் தொடங்கியது. எதையும் யோசிக்காமல் அவள் வீட்டினுள் சென்றேன். வீடு மொத்தமும் சுற்றம், சொந்தங்களால் சூழப்பட்டிருந்தது. முன் வாசலைக் கடந்து முகப்பறை தாண்டி பின்கட்டுக்கே சென்றுவிட்டேன். யாரும் என்னை தடுக்கவில்லையென்பதே என் பயத்தை போக்கியது.

பின்னால் அவள் கைகளுக்கு மருதாணி வைத்துக்கொண்டிருந்தாள். அருகே சென்று, “காயத்ரி” என்றேன். அவள் பயந்து எழுந்துவிட்டாள்.

“என்ன கட்டிக்கிடுதியா?” என்றேன். அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

“சொல்லுடீ, என்ன கட்டிக்கிடுதியா?” என்றேன். அதற்குள் வீடு கலவரம் கொள்ளத் தொடங்கியது.

காயத்ரியின் அம்மா, “யாருலே நீ, எங்க வந்து எங்க வீட்டுப்பிள்ளய என்ன கேட்டுக்கிட்டிருக்க? நாளைக்கு அவளுக்கு நிச்சியம். போ வெளிய… என்னங்க… என்னங்க…” என கத்தினார்.

நான், “அத்த, என்னத் தெரியலையா? சின்ன வயசில சீனி மிட்டாய் வாங்கிக் குடுப்பீகளே. சண்முவம்த்தே. இவக் கூட ஒன்னாப் படிச்ச சண்முகம்” என்றேன்.

அவள் முகம் மலர்ந்தது. “எடே, நீயா? எம்மாம் பெருசு வளந்துட்ட! ஆள் அடையாளமே தெரியல. ஒனக்கு எப்பவும் விளாட்டுத்தான். ஒத்த நிமிஷம் எவனோன்னு வந்து பிள்ளையக் கேட்டதும் பதறியே போயிட்டேன்” என்றாள்.

வெளியே நின்ற காயத்ரியின் அப்பா, மாமா, சித்தப்பா, பெரியப்பா, பக்கத்து வீட்டார் என ஊர் மொத்தமும் என்னைச் சுற்றி நின்றது. மனம் பயங்கொள்ளும் போதெல்லாம் “முத்துப்பட்டன், முத்துப்பட்டன்” என சொல்லிக்கொண்டேன். ஊரே சேர்ந்து மண்டைய உடைச்சாலும் வாங்கிக்கணும். எதுனாலும் எதித்து நிக்கணும். நிக்கிறவனுக்குதான் பொண்ணும், மண்ணும்.

“விளாட்டில்லத்தே, நெசத்துக்குந் தான் கேக்கேன். உங்க பொண்ண எனக்கு கெட்டித் தாரீகளா?” என்றேன்.

அத்தை அதிர்ச்சியில் உறைந்து திரும்பி காயத்ரியை பார்த்தாள்.

“அவள பாக்காதீக. அவளுக்கும் இஷ்டம்தான். ரெண்டு பேரும் ஒரே சின்ன வயசில யிருந்து ஒன்னாத் தான் பழகினோம். ரெண்டு மனசும் பிடிச்சுப் போச்சு அதான் நேர்லயே கேக்கலாம்ன்னு வந்தேன்.”

பின்னாலிருந்து என்னை அடிக்க வருவதுபோல் முன் வந்த மாமாவிடம் திரும்பி “மாமா, உங்க பொண்ணுக்கு இஷ்டமில்லேன்னா என்ன இங்கனயே வெட்டிப்புடுங்க. அவளுக்கும் என் மேல இஷ்டமாக்கும். எனக்காக வேண்டாம் உங்க பொண்ணுக்காக யோசிங்க” என்றேன்.

சுற்றியிருந்த அனைவரும் எதுவும் பேசாமல் அதிர்ச்சியில் ஸ்தம்பித்திருந்தனர்.

[ 3 ]

எல்லாம் கனவுபோல் நிகழ்ந்து முடிந்தது. அவள் வீட்டில் உடனே கூடிப் பேசி சட்டென ஒத்துக்கொள்வார்கள் என நினைத்துப் பார்க்கவில்லை. தாத்தாவிடம் வந்து நடந்தது அனைத்தையும் கூறினேன்.

“அடி சக்க… நீ ஆம்பிள” என்றார்.

“தாத்தா அவ எதாச்சும் நினைச்சிருப்பாளோ” என்றேன்.

“ஆமா, ஒன்ன மொத மொறையா ஆம்பிளன்னு நினைச்சிருப்பா, இனி உன் பேச்சுக்கு மறு பேச்சு பேசமாட்டாப் பாரு” என்றார்.

“தாத்தா அப்பாட்ட எப்படி சொல்லுதது?” என்றேன்.

“இவ்ளோ செஞ்சேல்லா, இதையும் செய் போ. பட்டவராயன் குடும்பத்தையே விட்டிட்டுதான் ரெண்டு பேர் கையயும் புடிச்சான்” என்றார்.

அது சரிதான் என வீட்டினுள் சென்றேன். முன்னறையில் நாற்காலியில் அமர்ந்து அப்பா பேப்பர் வாசித்துக்கொண்டிருந்தார். அப்பாவிடம் கல்லிடைக்குறிச்சி போய் வந்த விஷயத்தை சொன்னேன்.

அவர், “ஓகோ… தொர அவ்ளோ பெரியாளாயிட்டேகளோ?” என்றார்.

என் பக்கம் மௌனம். அதற்குள் அம்மாவும் அடுக்களையிலிருந்து வந்து நின்றாள்.

பின்னாடி திரும்பி அம்மாவிடம், “கேட்டியாட்டி சங்கதிய? தொர அவருக்கு அவரே போய் பொண்ணு பாத்திட்டு வந்திருக்காரு” என்றார்.

“இல்ல… பொண்ணு பாக்கல. இஷ்டத்த சொன்னேன்” என இழுத்தேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்து பளாரென என் கன்னத்தில் ஒன்று விழுந்தது. “அப்படி ஜாதி கெட்டுப் போறதுன்னா அப்படியே போயிரு” என்றார்.

“நான் கிளம்பறேன். அவள என்னால ஏமாத்த முடியாது. ஒங்க சம்மதம் வேணும்ன்னு தான் வந்தேன். என் முடிவில எந்த மாற்றமுமில்ல” என்றேன்.

அப்பா அதிர்ந்துவிட்டார், அவ்வளவு தெளிவாக நான் பேசி அவர் பார்த்ததில்லை, நானே கூட.

அந்தப் புள்ளியை நான் கண்டடைந்துவிட்டேன். “செரி நான் கெளம்புறேன்” என்று உள்ளறைக்குச் சென்று என் துணிகளை எடுத்துக் கொண்டிருந்தபோது அப்பா ரகசியக் குரலில் அம்மாவிடம் பேசுவது கேட்டது.

அம்மா உள்ளே வந்தாள். அவள் முகம் மலர்ந்திருந்தது, “அஷ்டமி, நவமியெல்லாம் கழியட்டும், அடுத்த வாரம் நல்ல நாளாப் பாத்து போய் பேசுவோம்ன்னு உங்க அப்பா சொல்லுதாக. அதுவரையும் பொறுமையா இரி” என்றாள். நான் பதிலேதும் சொல்லவில்லை அவள் அறை வாசலில் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். இனி அவள் என்றும் என்னை நெருக்கமாக உணரப் போவதில்லை என மனம் சொல்லியது.

அவளை நோக்கி மெல்ல புன்னகைத்தேன்.

அடுத்த சுபமுகூர்த்தத்திலேயே எங்கள் திருமணம் நடந்து முடிந்தது. கல்யாண நாள் முழுவதும் பரபரப்பில்லாமல் நிதானமாகவே இருந்தேன். அவள் முகத்தில் அத்தனை புன்னகை படர்ந்திருந்தது. பாசிக் கோர்த்து தாலியாக அவள் கழுத்தில் கட்டிய கையோடு சென்று தாத்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அவர் அருள்புரியும் புன்னகையுடன் ஆசிர்வதித்தார். கல்யாணம், நலுங்கெல்லாம் முடிந்து எண்ணெய் வைத்து என்னை ஒரு அறையின் கட்டிலில் அமரச் செய்தனர்.

இந்த நாளின் ஒவ்வொரு நொடியையும் மீட்டுக் கொண்டிருந்தேன். அன்று மட்டும் தாத்தா வரவில்லையென்றால் என் வாழ்க்கை எப்படித் திரும்பி போயிருக்கும்! பட்டவராயனுக்கும், தாத்தாவுக்கும் மனதில் கோடி முறை நன்றி சொல்லிக்கொண்டேன்.

மெதுவாக அவள் அறையினுள் வரும் சத்தம் கேட்டது. வந்து மெல்ல என் அருகில் நின்றாள். எழுந்து நின்று அவளை நோக்கி புன்னகைத்தேன். அவள் குனிந்து வெட்கித்திருந்தாள், மெல்ல அவள் கீழ் தாடையை மேலிழுத்து “எப்படி தூக்கியாந்தேன் பாத்தியா?” என்றேன்.

“பாத்தேன், பாத்தேன்” என்றாள் ஒரு சடவோடு.

“என்ன…? நான் வரமாட்டேன் தப்பிச்சோம்ன்னுதானே நீ நினைச்ச? வந்து நின்னு கேட்டேனா இல்லையா?” என்றேன்.

“ஆமா, நானே அசந்துட்டேன். நீங்க வந்து கட்டிக்கிறியானப்ப அய்யயோ வந்துட்டீகளான்னு, அதுமட்டும் பாவி மனசு ஒரு வழியா ஆயிருச்சி. ஆமா எப்படி வந்தீங்க?” என்றாள்.

நான் நடந்ததை ஒன்றுவிடாமல் அவளிடம் கூறினேன். “முத்துபட்டன் பரம்பரைன்னா சும்மாயில்ல” என்றேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், “மரமண்ட, முத்துப்பட்டன்தான் கல்யாணம் ஆன அன்னைக்கே குடும்பத்தோட செத்துட்டாரே. அப்பறம் நீங்க எப்படி அவரு வாரிசு?” என்றாள்.

ஆமாம்… இதை நான் யோசிக்கவேயில்லையே? என்னுள் தாத்தா வேகமாக மாட்டு வண்டியை இட்டு வரும் காட்சி எழுந்தது. என்னையறியாமல் எனக்கு சிரிப்பாக வந்தது.

“நீங்க ஏன் உங்களப் பாத்தே சிரிக்கிறீக?” என்றாள்.

“இல்ல… இந்தக் கதைய கேட்டுத்தான் என் தாத்தா பாட்டிய தூக்கியாந்தாரு” என்றேன்.

என்றும் நீ அறிந்திராத ஒன்றுண்டு, அந்த கணம் என்னுளெழுந்த விசையது என எழுந்த சொற்கள் மேலேறாமல் மனதிலேயே நின்றன. பிறகு நாங்கள் அதைப்பற்றி எப்போதும் பேசிக் கொண்டதில்லை.

ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்
முந்தைய கட்டுரைலீலை, ஏதேன், பலிக்கல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசும் தமிழும்