பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 5
மலையன் சொன்னான். நான் மலையேறி இறங்கி சௌம்யர் சொன்ன அடையாளங்களினூடாகs சென்று தண்டகாரண்யத்தின் நடுவே பதினெட்டு மலைமுடிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் சௌந்தர்யம், சௌம்யம் என அழைக்கப்பட்ட இரு மலைமுகடுகளுக்கு நடுவே மண்மடிந்து மலைச்சரிவு என்றாகி இறங்கி வந்து வளைந்தெழுந்து மேலே செல்லும் கணவாயினூடாகs செல்லும் பாதை சென்றடையும் இடத்தில் அமைந்திருந்த மந்தரம் எனும் ஆயர்சிற்றூரை அடைந்தேன். அங்கு இளைய யாதவர் தங்கியிருக்கிறாரா என்று உசாவினேன். அங்கு எவருக்கும் அவ்வண்ணம் எவரையுமே தெரியவில்லை. முதலில் நான் பெற்றது ஒரு பிழைச் செய்தியாக இருக்குமோ என்ற ஐயத்தை அடைந்தேன். பின்னர் அவ்வண்ணம் இருக்க வழியில்லை என்று உணர்ந்து மேலும் பல வினாக்களை கேட்டேன்.
அங்கிருந்த தயை என்னும் சிறுமி பாணர்களும் பிறரும் வந்து சந்தித்துச் செல்லும் முனிவர் ஒருவர் இங்கிருக்கிறார் என்றும், அவர் தவம் இயற்றுவதில்லை, மைந்தருடன் விளையாடி புற்குழலிசைத்தும் தனித்தமர்ந்தும் பொழுது கழிக்கிறார் என்றும் சொன்னாள். “அவர்தான்! அவரை சந்திக்கவே நான் வந்தேன்!” என்று சொன்னேன். ஒரு சிறுவன் “நான் அழைத்துச் செல்கிறேன்! நான் அழைத்துச் செல்கிறேன்!” என்று துள்ளினான். “என் பெயர் ருத்ரன், எனக்கு அவரை தெரியும்” என்றான். ஏராளமான குழந்தைகள் “நான் அழைத்துச் செல்கிறேன்” என்று கூச்சலிட்டார்கள். “சரி, எல்லோரும் சேர்ந்து அழைத்துச் செல்லுங்கள்!” என்று நான் சொன்னேன்.
அவர்கள் சிறு பறவைகள்போல கூச்சலிட்டபடி எனக்கு முன்னால் துள்ளித் துள்ளி ஓடினார்கள். பறவைச் சுழல்போல அவ்வூரின் நடுவிலிருந்த சிறிய புற்குடிலை வளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள். “உள்ளே அவர் இல்லை!” என்று ஒருவன் கூறினான். “எனக்குத் தெரியும், அவர் காட்டுக்குள் இருக்கிறார். காட்டுக்குள் இருக்கும் இடம் எனக்குத் தெரியும்” என்று இன்னொரு சிறுவன் கூறினான். “நான் அழைத்துச் செல்கிறேன்! நான் அழைத்துச் செல்கிறேன்!” என்று நூறு குரல்கள் வெவ்வேறு சுதியில் கூவின.
நான் தொடர்வதற்குள்ளாகவே பலர் காட்டுக்குள் ஊடுருவி ஓடத்தொடங்கினர். “ஓட வேண்டாம், மெதுவாகச் செல்லுங்கள்” என்று நான் கூறினேன். அவர்களுக்கு இணையாக என்னால் புதர்களில் ஊடுருவிச்செல்ல இயலவில்லை. முன்னால் சென்றவர்கள் நின்று திரும்பி வந்தனர். பின்னால் சென்றவர்கள் முந்திச் செல்ல மீண்டும் அவர்கள் முன்னால் சென்றனர். அந்தி வானில் பறவைக்கூட்டம் பறக்கும் துகிலெனச் சுழல்வதைப்போல அவர்கள் அலைவுகொண்டனர். புதர்களினூடாக கீரிக்கூட்டம்போல ஊடுருவினர். புதர்களுக்குமேல் தவளைகள் என எழுந்து குதித்தனர்.
அந்தக் குறுங்காடே மலர்கள் பூத்துச் செறிந்து வண்ணம் கொண்டிருந்தது. அவ்வாறு முழுக் காடே மலர் எனப் பூப்பதை நான் அதற்குமுன் பார்த்ததில்லை. கடல் ஒன்று வண்ண நுரைகொண்டு அலைகொள்வதுபோல பூங்குலைகள் செறிந்த கிளைகள் உலைந்தன. பூம்பொடி உதிர்ந்து அக்காட்டின் தரையே பொன்னிற விரிப்பாகக் கிடந்தது. அதன் மேல் கால்வைப்பதே பிழையென்று தோன்றும் அளவுக்கு மென்மையான மலர்ப்பொடி பரவியிருந்தது. கால்வைத்த இடமெங்கும் சிறுபூச்சிகள் எழுந்து ரீங்கரித்து பறந்தன. பலநூறு சிறு பறவைகள் அமர்ந்தும் எழுந்தும் கொத்திக்கொண்டிருந்தன. எங்களைக் கண்டு காற்றில் சிறகடித்து எழுந்து மலர்களை மழைத்துளிகள்போல உதிரச்செய்தன.
தலைக்குமேல் குருதிச்செந்நிறமும் வெண்ணிறமும் பொன்னிறமும் என மலர்கள் பூத்த கிளைகள் தழைந்து சலிப்புற்று நின்றன. பொன்மஞ்சள் நிறமே ஓங்கியிருந்தமையால் செந்நிறமும் வெண்ணிறமும் அதன் வேறுவேறு நிலைகள் என்று ஆகி பேரோவியம் ஒன்று கண்முன் விரிந்தது. ஒரு சிறு காற்று கடந்து சென்றபோது மலர்களும் பொடிகளும் உதிர்ந்து அவ்வண்ணம் திரையென்றாகி என் முன் நெளிந்தது. குழந்தைகள் அம்மலர்ப்பொடியில் குதித்து விளையாடின. துள்ளி கிளைகளைப்பற்றி உலுக்கி மலர் உதிரச் செய்தன. அம்மலர்களிலிருந்து வண்டுகள் முழங்கி எழுந்தன.
ஒவ்வொரு மரமும் ஒரு யாழென்று தோன்றியது. தொட்டதும் நரம்பதிரும் இசையை தேக்கி வைத்த ஆழம் கொண்டவை. விரலுக்காக காத்திருப்பவை. இசைக்கு முந்தைய கணத்தில் இறுகி நின்றிருப்பவை. எனில் இந்தப் பாறைகள் அனைத்தும் முழவுகளா? தேன் உண்ணும் பறவைகள் காற்றில் சிறகடித்து நின்றன. அவற்றின் துளித்துளிப் பேச்சொலிகள். உலையும் கிளையிலிருந்து வண்டொலியுடன் உதிர்ந்த மலரொன்று ரீங்கரித்தபடி மண்சேர்ந்தது. அதிலிருந்து எழுந்த வண்டு மீண்டும் சென்று கிளையில் அமைந்தது.
வண்ணமும் ஒளியும் மணமும் இளங்காற்றின் தண்மையும் ஒன்றென்றே ஆன அச்சூழல் என்னை பித்தெழச் செய்தது. ஒரு கனவிலன்றி வேறெங்கும் அப்படி ஒரு நிலத்தை காண இயலாது. கற்பனையில் திளைத்து மெய்யுலகு மறைந்து வேறெங்கோ மொழி உருவாக்கிய நிலத்தில் வாழும் கவிஞனென்று என்னை உணர்ந்தேன். மெய்யாகவே அந்த மயக்கம் அப்போது உருவாயிற்று. அது ஒரு காடா அன்றி எதேனும் தொல்நூலின் அணிகொண்ட சொற்கள் சமைத்த கற்பனையில் நான் கடந்துவிட்டேனா? மரமெல்லாம் மலராகும் ஒரு நிலம் இப்புவியில் இருக்க இயலுமா என்ன?
அக்காடே ஒரு மாபெரும் மலரென்றாகிவிட்டது. ஒரு சிறுவண்டென அதற்குள் நுழைந்து திசை மறந்தேன். உடலெல்லாம் பூம்பொடி மூடியது. என் ஆடைகள், தலைமுடி, கைகால்கள் அனைத்திலும் செம்மஞ்சள்நிறப் பூச்சு. பொன்னென்றாகி பொன்னில் மூழ்கித் திளைத்து சென்றுகொண்டிருந்தேன். என் முன்னால் கடந்து சென்ற கீரியொன்று பூம்பொடியால் பொன்னென்றாகியிருந்தது. மரக்கிளை ஒன்றிலிருந்து தொங்கி இறங்கிய குரங்கு பொன்னிறப் பூம்பொடியால் மூடப்பட்டிருந்தது. பூம்பொடியின்மேல் பாம்புகள் சென்ற தடங்கள் பொன் வடுக்களாக தெரிந்தன.
“அங்கே! அங்கே!” என்று ருத்ரன் கூறினான். “எங்கே?” என்றேன். “அங்கே… அங்கே புல்லாங்குழல் கேட்கிறது! அங்கிருக்கிறார்!” என்றான் ருத்ரன். அவன் கைகாட்டியதும் அனைவரும் அமைதியாயினர். ஓசைகள் முற்றடங்கியபோது அங்கிருந்த கிளிக் கொஞ்சல்களும் வண்டு மிழற்றல்களும் கலந்து காற்றின் ஓசையின் மேல் ஏறி என்னைச் சூழ்ந்தன. அவை அனைத்தினூடாகவும் கலந்து அனைத்தையும் இணைத்து அடிப்படை சுதியென்றாகி ஒலித்துக்கொண்டிருந்த குழலிசையை நான் கேட்டேன். அங்கு நின்று செவியே உயிரென்றாகி அதை கேட்டுக்கொண்டிருந்தோம்.
அந்த ஓசை சுழன்று சுழன்று வந்தது. சிலந்தியின் பட்டுநூல் வலை என வடிவம்கொண்டு அசைந்தது. புகைச்சுருளா, தளிர்முனையா, நீர்த்துளி நடுக்கா? வழிந்து பொன் கம்பியென இழுபட்டது. வழுக்கி வழுக்கிச் சென்று சுருண்டெழுந்தது. உயிர் நாடகங்கள் அனைத்தையும் அவ்விசையில் பார்த்தேன். சிறுபுழுவென நெளிந்து நெளிந்து பின் அசைவிழந்து தன்னை தன்னாலேயே சிறையிட்டுக்கொண்டு தவமிருந்து சிறகு கொண்டு எழுந்து காற்றில் பறந்து அலைவு கொண்டு மறைந்து மீண்டும் எழுந்தது. முட்டை உடைத்து எழுந்து வந்தன விழிவெறித்த பல்லிகள். கருக்குடம் உடைந்து ஈரம் சிலிர்க்க எழுந்து நின்றன கன்றுகள். நீரில் சேற்றில் துடிதுடித்து திளைத்தன பல்லாயிரம்கோடி புழுக்கள்.
கருவறை கிழித்து வெளிவந்து கண் திறந்து உலகைப் பார்த்து திகைக்கும் கன்றின் மயங்கல். பெரும் பசி கொண்டு உடல் துள்ள அன்னை மடி தேடிய நாய்க்குட்டியின் துடிப்பு. சிறகு முளைத்த பின் கூண்டிலிருந்து தவிக்கும் குஞ்சின் தவிப்பு. புழுக்கள் வாய்கவ்வி நெளிந்தும் பூச்சிகள் சிறகிணைத்துப் பறந்தும், நாகங்கள் பிணைந்தும், நாரைகள் கழுத்து பிணைத்து ஆடியும், மான்கள் தழுவிக்கொண்டும், எருமைகள் கொம்புமுட்டியும், யானைகள் மலைப்பாறைகள் என மத்தகம் அறைந்துகொண்டும் இயற்றும் காதல். விழி மெல்ல சரியும் பறவையின் சாவு. வால்நுனி அணையும் நாகத்தின் மறைவு. மரத்தில் சாய்ந்து நின்றிருக்கும் யானையின் இறுதித் துதிக்கை அசைவு. விரல்கள் ஒவ்வொன்றாக விரிந்து விடுபடும் விலங்கின் விழிவெறிப்பு. எரிந்தெழுதல் அணைந்தமைதல். அலைகொள்ளல் அடங்கியமைதல். வீழ்தல் மறைந்து எழுதல். முடிவின்மை என நிகழும் தனிக்கணங்கள்.
என்ன நிகழவில்லை அங்கு என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. இளைய பாண்டவரே, நான் கேட்டது இசைதானா என்றும் எனக்கு தெரியவில்லை. அது இங்கு இவையனைத்தையும் நிகழ்த்தும் ஒன்றின் செவியுணர் வெளிப்பாடு. இவையனைத்துமாகிய அது தானன்றி மாறி தன்னை தூய ஒலியென்றாக்கி காட்டுவது. ஒரு தருணம் உண்மையில் நான் கேட்டது ஒரு சிறு துளி மட்டும்தானா? அதை நான் செவிகளால் கேட்கவே இல்லையா? அலைகடலில், பேரருவியில், சுழற்காற்றில், எரிமலை வெடிப்பில் நிகழும் அதுவேதானா? அறியேன். அங்கு நான் கேட்டதை என்றோ ஒரு நாள் ஒரு காவியமென எழுதுவேன். அதன் சதுப்பில் ஒரு சிறு பட்டாம்பூச்சியெனச் சென்று பதிந்து தடமாகி மறைவேன்.
முடிவிலாது வெல்பவன் இசைக்கலைஞன். முடிவிலாது தோற்பவனே இசைஞானி. அங்கு விண்ணெழுந்து விண்ணெழுந்து சரியும் ஒரு கோடி கைகளை கண்டேன். தொட்டுத் தொட்டு நழுவும் நோக்குகளை கண்டேன். விண் விண் என சொல்லி அமையும் மண் பொருட்கள் அனைத்தையும் கண்டேன். தன்னை தானென உணர்ந்து தருக்கி, தானே என தனையுணர்ந்து இறங்கி ஊசலாடும் முடிவிலியை கண்டேன். இங்கு இவையென்றாகி நிறைந்திருப்பதும், இவையெங்கிலும் நிறைந்து எஞ்சுவதும், இவையனைத்திலும் படிய இயலாதாகி பிறிதொரு வெளியில் நின்றிருப்பதும், இங்கிருந்து எழுந்து சென்று தொடத் தக்கதும், இங்கிருக்கும் அனைத்தையும் துறந்தால் மட்டுமே அறியத் தக்கதும் ஆகிய ஒன்று.
இசை அகநிகழ்வு. அகம் புறத்தை மீட்டுவது. மீட்டப்பட்ட புறம் பெருகி அகத்தை ஆள்வது. அந்த இசை பொறியுணரும் சுவைகளனைத்துமாகி அங்கெல்லாம் நிறைந்தது. எரிந்தது, இருண்டது, நாறியது, கசந்தது, முழங்கியது. பின்பு குளிர்ந்தது, ஒளிர்ந்தது, இனித்தது, இசைத்தது. இசை அலையடிப்பது, நிலை கொள்ளாதது, சென்று மீள்வது, நிகழ்கையிலேயே இருப்பு கொள்வது. அங்கோ நிகழாது அமைந்திருக்கும் இசை ஒன்றை கண்டேன். அருமணி நிகழ்வும் இருப்பும் ஒன்றே என ஆவதுபோல. அங்கு இசையென தன்னை வெளிப்படுத்திய ஒன்று பிறிதொன்றை நோக்கி நீயும் நானே என்றது. ஆம், நானே நீ என்றது அது.
நான் என்னை உணர்ந்தபோது இசை அங்கு நின்றுவிட்டிருந்தது. என்னைச் சுற்றி அக்குழந்தைகள் அனைவரும் ஆங்காங்கே அசைவிலாது அமர்ந்திருந்தனர். ருத்ரன் தன்னிலை கொண்டு ‘அங்கே’ என்று கைகாட்டினான். ‘ஆம்’ என்று நான் தலையசைத்தேன். அவன் ‘வருக’ என்று கைகாட்டி என்னை மட்டும் அழைத்துச் சென்றான். பிற மைந்தர் அப்போதும் எஞ்சும் இசையில் அங்கேயே ஆழ்ந்திருந்தனர். நாங்கள் நடந்து அனலெனப் பூத்த சிறுபுதர்களை விலக்கி, மலர்களிலிருந்து மலர்களுக்குச் சென்று, மலர்களில் புதைந்து, மலர்களில் எழுந்து, மலர்களில் நீந்தி முன்னால் சென்றோம்.
சிற்றோடை ஒன்றை நோக்கிச் சரிந்த மலைச்சரிவில் சிறுமலர்ச்செடிகள் பூத்து பொன்னிறப் பெருவிரிப்பு என விரிந்திருந்தன. அதன்மேல் இளைய யாதவர் அந்தப் புற்குழலை தன் நெஞ்சில் வைத்து இரு கைகளையும் தலைக்குமேல் அணையென வைத்து மல்லாந்து படுத்திருப்பதை பார்த்தேன். அவர் தலையில் அம்மயிற்பீலி இளங்காற்றில் நலுங்கிக்கொண்டிருந்தது. அக்குழல் தன் இசை அனைத்தையும் வெளிப்படுத்திவிட்டதுபோல் மயங்கி அமைந்திருந்தது. அவர் உடலில் எங்கும் அசைவில்லை. இடது கால் பாதத்தை மட்டும் மெல்ல சுழற்றிக்கொண்டிருந்தார்.
அக்காலில் கட்டைவிரல் நகம் மட்டும் கருமை கொண்டிருப்பதை கண்டேன். குறையற்ற முழுமை கொண்ட அவர் உடலில் அது ஒன்றே குறையென்று தெய்வங்களால் அமைக்கப்பட்டதென்று முன்னரே அறிந்திருந்தேன். அத்தருணத்தில் அது அவர் அழகின் உச்சமென்று தோன்றியது. புற்சுவை உணர்ந்து தன்னில் மயங்கிய மானின் அரைவிழியென ஈரக்கரிய ஒளி கொண்டிருந்தது அது. ஒருகணம் நோக்குகையில் புதருக்குள் நின்று மேயும் மானொன்றின் விழியென்றே அது அசைந்தது.
எழுகதிரொளி அவர் தலைக்குப் பின்னால் இருந்தது. அங்கிருந்து மரங்களினூடாக வந்த வெளிச்சத்தில் அவருடைய நிழல் காலடி நிலத்தில் விழுந்து நுடங்கிக் கிடந்தது. அது முதலில் நிழலென்று தோன்றியது. பின்னர் அது ஓர் உருவென்று கண்டேன். இடையொடிந்து முற்றாக மடிந்த ஒரு மானுட உடல். முதியவர், அந்தணர். மின்னும் கண்கள் கொண்டவர். அவர் இளைய யாதவரைப் பார்த்தபடி அங்கே அமர்ந்திருந்தார். அவர் முகத்திலும் பேரழகு மிக்க ஊழ்கப் புன்னகை இருந்தது.
“அது யார்?” என்று நான் கேட்டேன். கைசுட்டி “அவர் காலடியில் அமர்ந்திருப்பவர்?” என்று மீண்டும் கேட்டேன். “அவர் நேற்று இங்கே வந்தார். இரண்டு சூதர்கள் அவரை ஒரு தாலத்தில் வைத்து கொண்டுவந்தனர். அவர் முனிவருடன் அக்குடிலிலேயே தங்கினார். அவர்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தபடி இதேபோல அமர்ந்திருந்தார்கள்” என்று ருத்ரன் சொன்னான். “இங்கே எப்படி வந்தார்?” என்றேன். ருத்ரன் “ஆம், எப்படி வந்தார்?” என்றான். “அவரிடம் சென்று வணங்க விழைகிறேன்” என்றேன். “ஆனால் அவ்வூழ்க நிறைவை நான் ஊடுருவலாமா என்று தயங்குகிறேன்.”
அச்சொற்களை நான் முடிப்பதற்குள் தொலைவிலிருந்து நீள்அம்பொன்று வந்து அவர் இடநெஞ்சில் பாய்ந்து தைத்து நின்றது. கண்விரைவால் கணமென அதை காணமுடிந்தது. சித்தமுணர்வதற்குள் அவர் உடலில் சிற்றலைபோல் மெல்லிய துடிப்பொன்று எழுந்து அடங்கியது. “என்ன? என்ன?” என்று நான் கேட்டேன். “அம்பு!” என்று ருத்ரன் சொன்னான். “அம்பா? யார்?” என்றேன். அவன் ஓடத்தொடங்கியிருந்தான். நானும் புதர்களை விலக்கி அவரை நோக்கி ஓடினேன். அணுகி அவ்விசையிலேயே விழுந்து மண்டியிட்டு அவரை தொட்டேன். அவர் உடலிலிருந்து உயிர் அகன்றிருந்தது.
அவர் முகத்தில் அனைத்தும் அறிந்ததுபோல் இளநகை குடிகொண்டிருந்தது. சிரித்துக்கொண்டே எழுந்து அனைத்தையும் களியாட்டென மாற்றிவிடுவார் என்பதுபோல். அந்த அம்பு அவர் விலாவின் நடுவே புகுந்து ஆழப் புதைந்து நெஞ்சக்குலையை தைத்திருந்தது. அது தைத்த அக்கணத்திலேயே அவர் உயிர்துறந்திருந்தார். சுடர் அணைவதுபோல், கனியுதிர்வதுபோல் மிகமிக எளிதான ஒரு நிகழ்வு. இருத்தலுக்கும் இன்மைக்கும் நடுவே காலம் என்று ஒன்று இல்லை என்று ஒரு தொல்கூற்று உண்டு. பாண்டவரே, காலமின்மையில் நிகழ்ந்தது அவரது இறப்பு.
அப்பாலிருந்து இரு வேடர்கள் ஓடிவந்தனர். அவர்மேல் அம்பு தொடுத்த முதிய வேடன் அருகணைந்து “மானுடன்!” என்றான். “யார்?” என்று பின்னால் வந்த இளைஞன் கேட்டான். “அது மானின் விழியல்ல, இங்கே ஒருவன் படுத்திருந்திருக்கிறான்!” என்று முதியவன் சொன்னான். நான் எழுந்ததும் அவர்கள் இருவரும் என்னை அம்பு எடுத்து குறிவைத்தனர். என் கையில் படைக்கலம் எதுவும் இல்லை என்று கண்டதும் “நாங்கள் மான்விழி என்று எண்ணினோம். மானுக்காகவே அம்பு தொடுத்தோம். மானுடர் என்று அறிந்திருக்கவில்லை” என்றான்.
இளையவன் “சிறுவன் உடனிருக்கிறான். இங்கே அருகே ஊர் இருக்கிறது. இங்கு நிற்கவேண்டாம், ஓடிவிடுவோம்” என்றான். இருவரும் திரும்பி விரைந்து அகன்று ஓடினர். அவர்கள் இருவருமே வலக்கையில் நான்கு விரல் மட்டுமே கொண்டிருந்தனர். நான் அவர்களை திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தேன். அவர்கள் புதர்களில் மீன்கள் நீரில் மூழ்குவதுபோல் மறைந்தனர். பின்னாலிருந்து சிறுவர்கள் ஓடிவந்தனர். “இறந்துவிட்டார்!” என்று ஒருவன் கூவினான். “நான் முதலிலேயே பார்த்தேன்… நான் முதலிலேயே பார்த்தேன்” என்றான் இன்னொருவன். “வேடர்கள் வருவதையே நான் பார்த்தேன்!” என்று இன்னொருவன் கூவினான். “நான் பார்த்தேன்! நான் பார்த்தேன்!” என்று கூச்சல்களுடன் அவர்கள் பூசலிட்டனர்.
“ஊருக்குள் சென்று கூறுக…” என்று நான் சொன்னேன். “நான் சொல்கிறேன்… நான் சொல்கிறேன்” என்று கூவியபடி அவர்கள் ஓடினர். இறுதியாக ஒரு சிறுவன் திரும்பி என்னிடம் மழலைக்குரலில் திக்கலுடன் “நான் நான் நான் போய் சொல்லுவேன்” என்று கைசுட்டி காட்டினான். அவனும் அவர்களைத் தொடர்ந்து ஓடினான். ருத்ரன் “அவர் இங்கே உயிர்விட வந்திருப்பதாக பலமுறை சொல்லியிருக்கிறார். ஆகவே எவருக்கும் இதில் திகைப்பில்லை” என்றான்.
நான் அப்போதுதான் உளமுணர்ந்து “அவர் எங்கே?” என்றேன். “இங்கிருந்த உடல்மடிந்த முதியவர்? எங்கே அவர்?” சுற்றிலும் திரும்பித் திரும்பி நோக்கி புதருக்குள் அவர் மல்லாந்து விழுந்திருப்பதை கண்டேன். அவர் அந்த அம்பு வந்ததைக் கண்ட அதிர்ச்சியில் உயிர்துறந்திருந்தார். கைகள் இருபுறமும் விலகி விரிந்திருக்க முகம் ஊழ்கப் புன்னகையுடனே உறைந்திருந்தது. நான் திரும்பி இளைய யாதவரை பார்த்தேன். இருவர் முகத்திலும் ஒரே புன்னகை இருப்பதாகத் தோன்றியது.
என் உளமயக்கா அது? ஆனால் ருத்ரன் “அம்பு படுவதற்கு முன்பு நான் ஒன்றை கண்டேன்” என்றான். நான் திரும்பிப் பார்த்தேன். “அந்த முதியவர் கரிய வண்டுபோல வந்து அவர் கட்டைவிரலின் கரிய நகத்தில் அமர்ந்து அப்படியே உள்ளே சென்று மறைந்தார். அதன்பின் அந்தக் கரிய நகம் மேலும் ஒளிவிட்டது” என்றான். நான் பொருள் விளங்கா வெறிப்புடன் அவனை நோக்கிக்கொண்டு நின்றேன். தொலைவில் மந்தரம் என்னும் அச்சிற்றூருக்குள் சங்கொலி எழுந்து இளைய யாதவரின் இறப்பை அறிவித்தது.