கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

தொன்மையான கதைகள் எல்லாவற்றையும்போல இதிலும் கொஞ்சம் மாயமும் மந்திரமும் நம்பிக்கையும் பயங்களும் கலந்திருக்கின்றன என்று எடுத்துக்கொள்ளுங்கள். அவை களிம்புபோல, துரும்பு போல. இந்த காற்றிலும் மண்ணிலும் நீரிலும் நிறைந்திருக்கின்றன. இனியில்லை என்று அசைவிழந்து படிந்த ஒவ்வொன்றையும் வந்து கவ்விக்கொள்கின்றன. மெல்லமெல்ல உருமாற்றி மட்கவைத்து விடுகின்றன. தங்கள் மாபெரும் நெசவுக்குள் கலந்துகொண்டுவிடுகின்றன. நாம் காணும் ஒவ்வொன்றும் அவ்வாறு முடிவின்மையில் கரைந்தழிவதன் ஏதேனும் ஒரு படிநிலையில் இருந்துகொண்டிருக்கிறது.

ஆகவே அந்தப் பருண்மை, புலன்களறியும் மெய்மை என்பது ஒரு எதிர்ப்பே என்று உணர்க. அந்தக் களிம்பே அறுதியாக வெல்வது, என்றுமிருப்பது, இங்கே அனைத்துமாகிச் சூழ்ந்தது. புத்தம்புதியது பளபளக்கிறது. அது கூர்கொண்டிருக்கிறது அல்லது தேய்ந்திருக்கிறது. களிம்பும் துருவும் ஏறியது முதுமையின் சாயலுடன், காலத்தின் அமைதியுடன் திகழ்கிறது.சற்றே களிம்பேறிய கலைப்பொருட்களுக்கே சந்தைமதிப்பு மிகுதி. கந்தகநீரில் முக்கி புதைத்துவைத்து செயற்கைக் களிம்பு ஏற்றுவதும் உண்டு.

கதைக்கு வருகிறேன். என் குடும்பம் நட்டாலத்திலிருந்து முஞ்சிறை போகும் வழியில் வாள்வச்சகோஷ்டம் என்னும் ஊரில் கோயிலுக்கு வடக்காக இருந்த சிறிய தோட்டத்தினுள் அமைந்த பழைமையான வீட்டில் முப்பதாண்டுக்கு முன்புவரை குடியிருந்தது.1976ல் என் பதிமூன்று வயதில் அந்த வீட்டைக் கைவிட்டுவிட்டு நாங்கள் நாகர்கோயிலுக்கு இடம்பெயர்ந்தோம். அதற்கு முந்தைய ஆண்டுதான் என் அப்பா மறைந்தார்.

பராமரிக்கமுடியாதபடி ஏற்கனவே சிதிலமடைந்திருந்தது அந்த வீடு. அதன் பெரும்பகுதி கூரை சிதைந்து சுவர் சரிந்து இறங்கி மண்ணில் பதிந்திருந்தது. வீடுமுழுக்க எலிகளும் வௌவால்களும் நிறைந்திருந்தன. மழைக்காலத்தில் பெரும்பாலான அறைகளுக்குள் நீர் கொட்டியது. எஞ்சிய திண்ணையிலும் மூன்று அறைகளிலுமாக நாங்கள் வாழ்ந்தோம். எங்கள் தலைமேல் அந்த வீடு எப்போதுவேண்டுமென்றாலும் விழுந்துவிடும் என்னும் நிலைமை.

ஏனென்றால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. என் அப்பா உள்ளூரில் கோயிலில் ‘கழகம்’ வேலை பார்த்தார். கோயிலில் பூகட்டுவது முதல் தூய்மை செய்வதுவரையிலான வேலைகளுக்கு பரம்பரையாக நியமிக்கப்படும் குடும்பங்களை கழகம் என்பார்கள். இன்று கோயிலில் பூசாரி தவிர வாட்ச்மேன் உட்பட அனைத்து வேலைகளையும் செய்ய ஒருவர் மட்டுமே. என் அப்பாவுக்கு பலவீனமான உடல்கொண்டவர், வேறுவேலை செய்யமுடியாது. கோயில்வேலை அவருக்கு போடப்பட்ட ஒரு சமூகப்பிச்சை.

அவருக்கு ஊதியம் மிகக்குறைவு. அவ்வப்போது எவராவது ஏதாவது கொடுத்தால் உண்டு. அறுவடைக்காலத்தில் கொஞ்சம் நெல் கிடைக்கும். அம்மா முறுக்கு பலகாரங்கள் போட்டு டீக்கடைகளுக்கு கொடுப்பாள். நாங்கள் ஆறுகுழந்தைகள். மூத்தவன் நான். எனக்குக் கீழே ஒரு தம்பி. மற்ற நால்வருமே பெண்கள். நான் வறுமையிலேயே பிறந்து வேறொன்றையும் அறியாமலேயே வாழ்ந்தேன். வயிறுநிறைவது என்பதற்கு அப்பால் உணவுக்கு சுவை என ஒன்று உண்டு என்பதைக்கூட நான் இளமையில் உணர்ந்திருந்ததில்லை.

ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு அந்த ஆலயமே எங்கள் குடும்பத்தின் ஆட்சியில் இருந்தது. நாங்கள் இந்த கோயிலின் முழுப்பொறுப்புள்ள கோயிலதிகாரிகளின் குடும்பம். எரணத்துவீடு என்பது தெற்கு திருவிதாங்கூரில் அரசர்களின் அவையில் அமர்ந்திருக்கும் உரிமை கொண்ட பதினெட்டு தொன்மையான குடிகளில் ஒன்று. கோயிலின் நகைகள் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. அரசர்கள் வந்தால் தங்கும் அரண்மனைகளும் எங்களால் பராமரிக்கப்பட்டன. அதற்காக இந்த ஊரைச்சுற்றியிருந்த நாற்பத்தெட்டு கிராமங்கள் எங்களுக்கு கரமொழிவாக அளிக்கப்பட்டிருந்தன.

வாள்வச்சகோஷ்டம் கோயில் கிபி மூன்றாம்நூற்றாண்டு முதல் இருக்கிறது. இது அப்போது ஒரு காட்டுக்கோயிலாக இருந்திருக்கலாம். இப்பகுதியே காட்டுத்தன்மை கொண்டதுதான். பதினாறாம் நூற்றாண்டில்தான் இது திருவிதாங்கூர் மன்னர்களால் எடுத்துக் கட்டப்பட்டது. அன்று முதல் எங்கள் குடும்பமே கோயிலதிகாரிகளாக இருந்தது. வீட்டுவாசலில் ஏழு யானைகள் நின்றிருக்கும் என்று என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். பெண்கள் வீராளிப்பட்டு திரையிட்ட பொன்பூச்சுள்ள மூடுபல்லக்கில்தான் பயணம் செய்வார்கள்.  ஆண்கள் கொல்லவும் காக்கவும் அதிகாரம் கொண்டிருந்தார்கள். குடும்பத்திற்கென்று சிறிய காவல்படையும் சொந்தமாக இருந்தது

என் இளமைக்காலத்திலேயே எங்கள் பெரிய குடும்பம் சிதறி வீடு  கைவிடப்பட்ட குருவிக்கூடு போல ஆகிவிட்டிருந்தது. குடும்பத்திலிருந்து படித்து வேலைக்குச் சென்றவர்கள் திருவனந்தபுரத்திற்கும் சென்னைக்கும் சென்றுவிட்டார்கள். சொத்துக்களில் பெரும்பகுதி குத்தகைக்காரர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. எஞ்சியவற்றை பங்குவைத்து பங்குவைத்து விற்றுக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் மிச்சமானது அந்த வீடும் அது அமைந்திருக்கும் பதினெட்டு செண்ட் நிலமும் மட்டும்தான். அது நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுவாகச் சொந்தமானது. வாரிசுகள் ஆண்டுதோறும் பெருகிக்கொண்டே இருந்தார்கள்.

அவர்கள் எவருக்கும் அந்த வீடுபற்றி அக்கறை இல்லை, கோயிலுக்கு எவரும் வருவதுமில்லை. ஆகவே வீடு அப்படியே கைவிடப்பட்டு சரிந்து அழியத் தொடங்கியது. என் அப்பாவுடன் பிறந்தவர்கள் எட்டுபேர்.  அனைவருமே படித்து வேலைதேடி வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றார்கள். அப்பாவின் அம்மா எண்பத்திரண்டு வயதில் சாவது வரை அந்த வீட்டில் மட்டும்தான் இருப்பேன் என்று பிடிவாதமாக தங்கியிருந்தார். என் அப்பா தன் அம்மாவுடன் தங்கிவிட்டார்.

பாட்டி இறப்பது வரைதான் அவருடைய பிள்ளைகளும் பெண்களும் அவ்வப்போது வந்துகொண்டிருந்தார்கள். அவர் 1964ல் இறந்ததும் அவர்கள் அப்படியே ஊரையும் வீட்டையும் கைவிட்டனர். என் அப்பா அவர்கள் அனைவருக்கும் கடைக்குட்டி, தன் அம்மாவுக்கு நாற்பத்தியாறாம் வயதில் பிறந்தவர். பிறந்தபோதே அவர் உடலில் ஏதோ கோணல் இருந்தது. ஊனமெல்லாம் இல்லை, எல்லா உறுப்புகளும் சற்றே வலப்பக்கமாக இழுத்துக்கொண்டிருக்கும். குழந்தையை வயிற்றிலிருந்து உருவி எடுத்த வயற்றாட்டி செய்த பிழை அது என்றார்கள்.

அப்பாவுக்கு சின்னவயசிலேயே வலிப்பு வரும். ஆகவே பாட்டி அப்பாவை தன் மடியிலேயே வைத்திருந்தார். அப்பா தன் பதினெட்டு வயதுவரை வீட்டைவிட்டு வெளியே போகாமலேயே வளர்ந்தார். அப்போது வீட்டில் எதுவும் குறைவிருக்கவில்லை. வீடுமுழுக்க ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நிறைந்திருந்தார்கள். அப்பா பள்ளிக்கூடம் போகவில்லை. பள்ளிக்கூடத்தில் வலிப்புவந்து விழுந்து மண் நெஞ்சுக்குள் போனபிறகு பாட்டி படிப்பை நிறுத்தி வீட்டிலேயே வைத்துக்கொண்டார். அவரே சொல்லிக்கொடுத்த கணக்கும் எழுத்துக்களும்தான் அவருக்கு தெரியும்.

சட்டென்று எல்லாமே மறைந்தது. அப்பா அந்த இடிந்துகொண்டிருக்கும் பெரிய வீட்டில் தன் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் தனித்துவிடப்பட்டார். பாட்டி இருந்தபோதே அப்பாவுக்கு திருமணம் செய்து வைத்திருந்தார். அப்போதே ஆறு குழந்தைகளும் பிறந்துவிட்டிருந்தன. பாட்டிக்கு அவருடைய மற்ற பிள்ளைகள் மாதாமாதம் அனுப்பிய பணத்தில்தான் அப்பா வாழ்ந்துகொண்டிருந்தார். அது நின்றதும் என்ன செய்வதென்றே அவருக்கு தெரியவில்லை. வழக்கம்போல கொட்டியம்பலத் திண்ணையில் தெருவை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

அம்மா கண்ணீருடன் கோயில் காரியஸ்தர் நாராயண பிள்ளையிடம் போய் முறையிட்டாள். அவர்தான் அப்பாவுக்கு கோயிலில் வேலை வாங்கிக் கொடுத்தார். வேலை என்று ஒன்றுமில்லை. போற்றி சொல்லும் சிறிய வேலைகளைச் செய்யவேண்டும், அங்கே ஒரு ஆள் என அமர்ந்திருக்கவேண்டும். அங்கே பக்தர்கள் என்று எவருமே வருவதில்லை. ஏதாவது பரிகாரத்திற்காக பெரியமனிதர்கள் வந்தால் உண்டு. அவர்களை கண்டால் அப்பா எழுந்து சென்று வரவேற்பதோ பேசுவதோ இல்லை. வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பார்.

அப்பா பெரும்பாலும் எவரிடமும் பேசுவதில்லை. பேசும்போது அவருடைய வாய் கோணலாகி இழுபடும். வார்த்தைகள் வளைந்து நெளியும். பெரும்பாலும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே புரியும். அவரால் விரைவாக நடக்கமுடியாது. இரு கைகளையும் பயன்படுத்தி எதையும் சரியாகச் செய்யமுடியாது. அவருடைய உடலின் கோணல் காரணமாக அவருடைய எல்லா அசைவுகளும் தாறுமாறாக இருக்கும். உடல் உறுப்புகள் நடுவே ஒத்திசைவே இருக்காது. ஆகவே பெரும்பாலும் அவர் எங்காவது சும்மா அமர்ந்திருப்பார்.

ஆனால் அவர் அறிவில்லாதவர் அல்ல. நெடுங்காலம் பேசாமலேயே இருப்பவரின் கண்களில் ஒளி அணைந்துவிடுகிறது. மனிதர்களின் கண்களில் உயிர் என ,ஒளி என தெரிவது அவர் பேசப்போகும் வார்த்தைகள்தான். என் அப்பா எந்தப்பேச்சுக்கும் மானசீகமாகக்கூட எதிர்வினை ஆற்றுவதில்லை. அவர் கவனிக்காதது போல தோன்றும். ஆனால் எப்போதாவது எதைப்பற்றியாவது அவர் சொன்னால் அவர் எல்லாவற்றையுமே அறிந்திருக்கிறார் என்பது தெரியவரும்.

அப்பாவை ஒருவகை மந்தபுத்தி, வளராத மனிதன் என்றுதான் அனைவரும் கருதினர். அவர்மேல் பரிவு கொண்டவர்கள் அவரை குழந்தைபோல நடத்தினர். அவருக்கு அது வசதியாக இருந்தது, அவர் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் தனக்குள் ஒரு பெரிய பகற்கனவுலகில் வாழ்ந்தார். அதை அவர் மறைந்து நீண்டகாலம் கழித்து அவரைப் பற்றி நினைத்துக் கொண்டபோதுதான் நான் புரிந்து கொண்டேன்.

அவர் சிறிய ஒரு செடியை மிகப்பெரிய மரமாக கற்பனை செய்வார். விரலளவு உயரமான செடிகளின் சிறிய அடர்வை கொடுங்காடு என பார்ப்பார். உள்ளே செல்லும் கருவண்டு யானையாகிவிடும். செவ்வெறும்புகள் நரிகளாகிவிடும். ஈக்கள் கழுகுகள். தன் மேல்துண்டை பாம்பாக மாற்றி விளையாடிக் கொண்டிருப்பார். கைகளை விரித்து அசைத்து அண்டாரண்ட பட்சிகளாக பறக்க வைப்பார். அவை யானைகளை தூக்கிக் கொண்டு செல்லும்.

அப்பா சிறிய கற்களை அடுக்கி மாளிகைகளை உருவாக்குவார். மேகங்களை பார்த்து விண்ணுலகங்களை படைத்துக் கொள்வார். ஓரிரு சொற்களில் அவர் சொல்வதை நாம் கற்பனை செய்துகொள்ள வேண்டும். சின்னக் குழந்தையாக இருந்தபோது நான் அவருடன் விளையாடும்போது கற்பனைகளில் மிதப்பேன். எங்கெங்கோ அலைந்து கொண்டிருப்பேன்.

அப்பா அந்த கோயிலில் இருந்த சிலைகளில் ஒன்றாக பிறரால் கருதப்பட்டார். அல்லது அங்கிருந்த நூற்றுக்கணக்கான பல்லிகள், கூரையிடுக்குகளில் வாழும் மரநாய்கள் ஆகியவற்றில் ஒன்று. அவரிடம் எவரும் நலம் விசாரிப்பதுகூட இல்லை. பெரும்பாலும் அங்கே அன்னியர் வருவதில்லை. கோயில்  ஆழ்ந்த அமைதியில் ஒன்றையொன்று பார்த்து உறைந்திருக்கும் சிலைகளும் அரையிருள் நிறைந்த தாழ்வாரங்களும் கற்தூண்களுமாக நின்றிருக்கும். அப்பா அந்த அமைதிக்குப் பழகிவிட்டிருந்தார். வேறெங்கும் இருப்பதைவிட அங்கிருப்பதை அவர் விரும்பினார்.

வாள்வச்ச கோஷ்டம் என்பது மலையாளமும் சம்ஸ்கிருதமும் கலந்த பெயர். வாள்வைத்தகோட்டம் என்று தமிழில் சொல்லலாம்.திருவிதாங்கூர் மகாராஜாக்கள் போருக்குக் கிளம்புவதற்கு முன்பு தங்கள் வாள்களை வைத்து பலியிட்டு வணங்கி முதற்குருதி தொட்டு கிளம்பிச் செல்வதற்கான கோயில் அது. வென்று திரும்புகையில் வாளை இங்குள்ள குளத்தில் கழுவி மீண்டும் தேவிமுன் படைத்து எடுத்துக் கொள்வார்கள்.

இங்குள்ள தேவி மகிஷாசுரமர்த்தனி. பெரிய கற்சிற்பம் திரிபங்க நிலையில் வலக்காலை எருமையன் மேல் ஊன்றி இடக்காலை நிலத்திலமைத்து நான்கு தடக்கைகளுடன் நின்றிருக்கிறது. இரு கைகளில் சங்கு சக்கரங்கள் அமைந்துள்ளன. ஒருகை அருள இன்னொரு கை இடையில் அமைய வெறித்த நோக்குடன் அன்னை அருள்புரிகிறார். கரணட மகுடமும் சிலம்பும் கொண்ட தேவி.

இங்குள்ள ஒரு சிற்பத்தை நான் மிகமிக இளமையிலேயே நெடுநேரம் நின்று கூர்ந்து பார்த்திருக்கிறேன். அப்போதே அது என்ன என்று கேட்டு அறிந்துமிருக்கிறேன். கோயிலின்  முன் மண்டபத்திலுள்ள பன்னிரண்டு தூண்களில் ஒன்றில் சங்கு, சக்கரம் ஏந்திய விஷ்ணு இரண்டு கைகளில் பெண் ஒருத்தியை ஏந்தி நிற்கிறார். அப்படி ஒரு சிலை வேறெங்கும் இல்லை. அவள்  பெயர் ஆபகந்தி. பாற்கடலைக் கடையும்போது கடலில் இருந்து லட்சுமியை விஷ்ணு ஏந்தி எடுத்த நிகழ்ச்சி இது. அப்போது லட்சுமி ஆபகந்தி எனப்பட்டாள். நீர்மணத்தாள் என்று தமிழில் சொல்வார்கள். அலைகளில் இருந்து எழுந்தவள் ஆதலால் அலைமகள், திருமகள்.

ஆனால் அந்த விஷ்ணுவின் இடது காலுக்கு அடியில் அழுத்தப்பட்ட வடிவில் தீமகள் உறைகிறாள் என்று கோயிலில் பூக்கட்டிக் கொண்டிருந்த பங்கியம்மை என்னிடம் சொன்னாள். அவள் பெயர் தூமகந்தி. புகைமணம் கொண்டவள். கந்தகம் போல நாற்றமடிப்பவள். மந்தரமலையை மத்தாக்கி வாசுகியை கயிறாக்கி அசுரரும் மறுபுறம் தேவரும் பாற்கடலைக் கடைந்தனர். கடலில் இருந்து திருமகள் எழுந்தபோது கூடவே அவளுடன் இணை பிரியாத மூத்தவளும் எழுந்தாள். தீமகள் அவள். அழுக்கும் நோயும் வலியும் துயரும் சாவும் என ஐந்து மகள்களை கொண்டவள்.

திருமகள் எழுந்த மகிழ்ச்சியை விட அவள் தமக்கை எழுவதைக் கண்ட அச்சம்தான் அனைவருக்கும் ஓங்கியிருந்தது. அனைவரும் அலறி ஓடினர். விஷ்ணு பேருருவம் கொண்டு எழுந்தார். தன் இடதுகால் கட்டைவிரலால் அக்காவை அழுத்தி கடலின் ஆழத்தில் தாழ்த்தி நிறுத்திக்கொண்டு மேலேழுந்தார். தன் இருகைகளிலும் அலைமகளை தூக்கி கொண்டுவந்து உலகத்தவருக்கு அளித்தார். அத்திருமகள் தன் கையில் வைத்திருந்த அமுதை அனைவருக்கும் வழங்கினாள்.

தேவர்கள் அமுதை உண்டு அழிவின்மையை அடைந்தார்கள். தேவர்கள் அழிவில்லாமலானபோது அவர்களால் பேணப்படும் பாசம், அன்பு, அறம் , நெறி, சொல், துறவு, ஞானம், ஆகியவை ஏழுலகங்களிலும் அழிவில்லாமல் நிலைகொண்டன. உலகம் செழிப்புற்றது. திருமகள் பூமியிலுள்ள எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வடிவில் தோன்றினாள். உலோகங்களில் ஒளியாகவும் ,கனிகளில் இனிப்பாகவும், மலர்களில் மணமாகவும். அவற்றை வேள்விகளில் அவியாக அளித்து தேவர்களை குன்றாமல் மனிதர்கள் பேணினர். ஆகவே விண்ணிலும் மண்ணிலும் மங்கலம் நிறைந்திருந்தது.

விஷ்ணு வானம் வரை எழுந்து ஏழு உலகங்களையும் அடைந்தார். அங்கே அவர் அனைத்து லீலைகளையும் ஆடினார். கல்யாணரூபனாக தோன்றினார். ஆனால் எந்நிலையிலும் கடலடியில் அந்த கால்கட்டைவிரல் அகலவில்லை. அது அகன்றால் ஏழுலகங்களையும் அழிக்கும் ஐந்துமுக நஞ்சு கிளம்பிவிடும். அதன்பின் அவராலும் அவற்றைக் காப்பாற்ற முடியாது.

என் அப்பா பெரும்பாலான நேரம் மன்மதன் சிலைக்கு கீழேதான் அமர்ந்திருப்பார். அந்தச் சிலைக்கும் சுவருக்கும் இடையே அவர் தன் வெற்றிலைப்பையைச் செருகி வைத்திருப்பார். அவர் எங்கும் எதையும் பார்ப்பதில்லை என்று தோன்றும். ஆனால் அவர் எப்போதுமே தூரத்தில் தெரிந்த ஆபகந்தியை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அவருடைய மனதில் ஆழமான பதிவு உருவாகியிருக்கிறது. அது எனக்கு மிகப் பிந்தித்தான் புரிந்தது.

ஒருநாள் அப்பா அங்கே அமர்ந்திருந்தபோது ஒரு சோதிடர் ஒரு குடும்பத்தை அழைத்துக் கொண்டு அங்கே வந்தார். நான் அப்போது அங்கே இருந்தேன். கோயிலில் நைவேத்தியச் சோறு போற்றிக்கு உரியது, ஆனால் அவர் அதைக் கொண்டு போவதில்லை, இரக்கப்பட்டு அதை அப்பாவுக்கே அவர் அளித்திருந்தார். ஒருவர் அரைவயிறு உண்பதற்குத்தான் அந்தச் சோறு போதும். ஆனால் நான் அவர் அதை கொடுக்கும் நேரத்தில் சரியாக அங்கே போய்விடுவேன். அப்பா உருளியை அப்படியே என்னிடம் தந்துவிடுவார். நான் அங்கேயே மண்டபத்தில் அமர்ந்து அதிலிருக்கும் உப்பில்லாத குழைந்த பச்சரிச் சோற்றை அள்ளி கீற்றிலையில் போட்டு சாப்பிட்டுவிட்டு மிஞ்சியதை வீட்டுக்குக் கொண்டுபோவேன். அதை பிடுங்கிச் சாப்பிட அங்கே என் உடன்பிறப்புகள் முண்டியடிப்பார்கள். சாப்பாட்டு விஷயத்தில் நான் எப்போதுமே மூர்க்கமான தன்னலம் கொண்டவன்.

நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கார் வந்து நிற்கும் ஓசையை கேட்டேன். விரைந்து சோற்றை விழுங்கி கைகழுவிவிட்டு வெளியே போய் பார்த்தேன். அம்பாசிடர் காரிலிருந்து ஒரு கிழவரும், அவர் மனைவி எனத் தோன்றிய  கிழவியும் ,நெற்றியில் சந்தனத்தில் கோபி அணிந்த இன்னொரு கிழவரும் வெளியே வந்தனர்.

சந்தனம் அணிந்த மனிதர் என்னிடம் “ஸ்ரீகோயில் நடை பூட்டிவிட்டதா?” என்று கேட்டார்.

நான் இல்லை என்று தலையை அசைத்தேன்.

“போற்றி இருக்கிறாரா?” என்றார்.

இல்லை என்று அதற்கும் தலையை அசைத்தேன்.

அவர் என்னிடம் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து தந்து “ஓடு, போற்றியைக் கூட்டிவா” என்றார்.

நான் எலிபோல போற்றியின் வீடு நோக்கி ஓடினேன். போற்றிக்கு மாட்டுத்தரகு உண்டு, மாடுவளர்த்து விற்பதும் உண்டு. அதுதான் அவருடைய முதன்மை தொழில். அவர் தொழுவத்தில் இருந்தார். நான் சொன்னதும் ஓடிப்போய் கிணற்றில் நீர் அள்ளி தலையில் விட்டுக்கொண்டு ஈரமான ஆடையுடன் வந்தார்.

நாங்கள் வரும்போது அந்த கிழவரும் கிழவியும் ஆபகந்தியின் சிலை முன் நின்றிருந்தனர். சந்தனப் பொட்டுக்காரர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்பா அவர்களை பார்த்தபடி அதே இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தார்.

போற்றி அருகே சென்று “நான் வீடுவரை போனேன்” என்றார்.

சந்தனப்பொட்டுக்காரர் “என் பெயர் ஸ்ரீகுமாரன் நாயர் . ஜோசியன். இவர்களை இங்கே ஒரு பரிகார வழிபாட்டுக்காக கூட்டிக்கொண்டு வந்தேன்” என்றார். “இவர் மாதளம் வேலாயுதன் தம்பியும் மனைவியும். இவர்கள் வீட்டிற்கு ஒரு சாபம். இதுவரை மூன்றுபேர் ஆயுதத்தால் உயிர்விட்டிருக்கிறார்கள். போனமாதம் ஒரு மகன் போய்விட்டான். ஆயுததோஷம் இருக்கிறது என்று நான் கண்டுபிடித்தேன்” என்றார்.

கிழவர் கைகூப்பினார்.

ஸ்ரீ குமாரன் நாயர் “இவர்களின் யுத்ததேவதை இது. இங்கே அருகே அம்சியில்தான் இவர்களின் பூர்வீகம். மூதாதையர்களில் யாரோ போருக்குப்பின் ரத்தத்தை கழுவிவிட்டு இங்கே வாள்வைத்து வணங்கி பரிகாரம் செய்யாமல் வீட்டுக்கு போய்விட்டார்கள். ரத்தருசி கண்ட யட்சி ஒருத்தி கூடவே போய்விட்டாள். மூன்று தலைமுறைகளாக குடும்பத்தில் பலிகள்” என்றார்.

போற்றி “தேவி மகிஷாசுரமர்த்தனி… சர்வபாபஹரதேவதை” என்றார்.

ஸ்ரீ குமாரன் நாயர் அப்பாவைச் சுட்டிக்காட்டி “யார் அது?”என்றார்.

போற்றி “இந்த கோயிலதிகாரியின் குடும்பத்தின் வாரிசு… சொல்லப் போனால் இவர்தான் இன்றைய கோயிலதிகாரி. மனம் வளர்ச்சி அடையவில்லை. இங்கே சும்மா வாட்ச்மேன் மாதிரி இருக்கிறார். போகும்போது ஏதாவது கொடுத்துவிட்டுப் போனால் அவர் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும்” என்றார்.

ஸ்ரீ குமாரன் நாயர் கூர்ந்து பார்த்துவிட்டு “பழைய லக்ஷ்மீதோஷம் இருக்கிறது. எங்கோ எவருக்கு பணவிஷயத்தில் பெரிய பாவத்தை செய்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் தங்கப் புதையல்களுக்கு மேல் இப்படி பட்டினியோடு அமர்ந்திருக்க வேண்டுமா?” என்றார்.

அவர்கள் பேசியபடியே உள்ளே போய்விட்டார்கள். நான் அப்பாவை பார்த்தபோது திடுக்கிட்டேன். அவர் வாய்திறந்து உடல் ஒருபக்கமாக இழுபட்டு அதிர வலிப்பு வருபவர் போல் இருந்தார். வலிப்பு வந்துவிட்டது, வாயோரம் நுரை ததும்பியது. ஆனால் தூணைப் பிடித்துக்கொண்டு நின்றார். உடனே எழுந்து இலையான்பூச்சி போல துள்ளி துள்ளி வீட்டைநோக்கிச் சென்றார்.

வீட்டுக்குப் போனதுமே அப்பா வழக்கம்போல திண்ணையில் அமராமல் உள்ளே போனார். நான் அவருடன் போனேன். “என்ன அப்பா? என்ன அப்பா?” என்றேன்.

அவர் ஒன்றும் சொல்லவில்லை. வடக்குமூலை அறையின் முன்னால் சென்று நின்றார். அதன் கொண்டி துருப்பிடித்து கிடந்தது. அதை திறந்து ஒட்டடையை கையால் விலக்கியபடி உள்ளே சென்றார். மூச்சடைக்க வைக்கும் தூசுவாடை. வௌவால்களின் எச்சத்தின் எரியும் அரக்குவாடை. உள்ளே மரப்பெட்டிகள் இருந்தன. நான் ஒருமுறை உள்ளே போயிருக்கிறேன். எல்லா பொருள்மீதும் பசையாக வௌவால் எச்சம் படிந்திருக்கும்.

அப்பா ஒவ்வொரு பெட்டியாக திறந்தார். அப்பா அந்த அறைக்குள் அவ்வப்போது வந்திருக்கிறார் என்று தெரிந்தது. ஒரு பெட்டியை திறந்து உள்ளிருந்து கட்டுக்கட்டாக ஓலைகளை எடுத்து வெளியே கொண்டு வந்து போட்டார். மட்கி மண்நிறமாக மாறிவிட்டிருந்த நீளமான தாளியோலை சுவடிகள். ஒருசாண் நீளமான பனையோலைச் சுவடிகள்.

அவர் அவற்றை கொண்டுவந்து திண்ணையில் வைத்து ஒவ்வொன்றாக படிக்கத் தொடங்கினார். அம்மா பலகாரம் செய்து கொண்டிருந்தாள். அவரை அவள் பொருட்டாகவே நினைப்பதில்லை. அவர் பகல் முழுக்க படித்துக்கொண்டே இருந்தார். இரவில் எங்கள்வீட்டில் விளக்கு எரிப்பதில்லை. எண்ணைச் செலவுக்கு பணம் இல்லை என்பதனால். அடுப்புவெளிச்சத்திலேயே கிழங்கு சாப்பிட்டுவிட்டு ஏழுமணிக்கெல்லாம் நாங்கள் தூங்கிவிட்டோம்.

நள்ளிரவில் ஏதோ இடிபடும் ஓசை கேட்டு நான் விழித்துக்கொண்டேன். எவரோ மண்ணைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். நான் அம்மாவை “அம்மா அம்மா” என அழைத்து உலுக்கி எழுப்பினேன்.

“என்னடா?” என்றாள். அவள் பகலெல்லாம் வேலைபார்த்த களைப்புடன் தூங்குபவள்.

“திருடன்..”

“நம்ம வீட்டிலேயா? போடா”

“இல்லை, திருடன் ஓட்டை போடுகிறான்” என்றேன்.

அம்மா எழுந்து நடக்க நான் கூடவே சென்றேன். வீட்டுக்கு அருகே வடக்கு மூலையில் ஓசை கேட்டது. அங்கே எவரோ கடப்பாரையால் தோண்டிக் கொண்டிருந்தார்கள். தொலைவில் நிழலசைவாகவே தெரிந்த்துவிட்டது. அப்பாதான்.

அம்மா அருகே சென்று “என்ன செய்கிறீர்கள்? வீட்டை இடிக்கிறீர்களா?” என்றாள்.

“இங்கே, புதையல்!” என்று அப்பா சொன்னார்.

“புதையலா? உளறதீர்ககள்… போய் படுங்கள்… நான் தூங்கவேண்டும்” என்று அம்மா கத்தினாள்.

“புதையல், தங்கம்!” என்று அப்பா சொன்னார். “முகிலன் படையெடுப்பில் புதைத்துவைத்த ஆயிரம்நாணயங்கள்… பித்தளைப்பெட்டி!”

அம்மா ஓடிப்போய் அந்த கடப்பாரையை பிடுங்கி அப்பால் வீசி அவரை கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டுவந்து திண்ணையில் தள்ளினாள். “பேசாமல் தூங்குங்கள்… சத்தம்கேட்டால் மண்டையை உடைப்பேன்” என்றாள்.

திரும்பிச் சென்று படுத்தபோது நான் அம்மாவிடம் “அங்கே புதையல் இருக்கிறதா அம்மா?” என்றேன்.

“புதையல் இருக்கிறதோ இல்லையோ மூதேவி இருக்கிறது. தொடத்தொட கிளம்பி வரும்…” என்று அம்மா சொன்னாள். உடனே குரட்டைவிட்டு தூங்கிவிட்டாள்.

நானும் தூங்கினேன். ஆனால் மீண்டும் கடப்பாரை ஓசை கேட்கத் தொடங்கியது. நான்  அம்மாவை உலுக்கினேன். “அம்மா அம்மா, மறுபடியும்…” என்றேன்.

“பேசாமல் தூங்கு” என்று அம்மா சொன்னாள்.

“அப்பா தோண்டுகிறார்.”

“தோண்டிச் சாகட்டும்” என்று அம்மா தூக்கத்தில் குழறினாள்.

நான் எழுந்து வெளியே போனேன். அப்பா அங்கேயே தோண்டிக் கொண்டிருந்தார். அவர் உடல் தாறுமாறாக அலைபாய்ந்தததால் கடப்பாரை சரியான இடத்தில் விழவில்லை. என்னைப் பார்த்து திரும்பி புன்னகைத்து “இங்கேதான், இந்த இடத்தில். முகிலன் புதையல்!” என்றார். இருட்டில் அவர் பற்களின் ஒளி தெரிந்தது. கண்கள் கூட மென்மையான ஒளியுடன் மின்னின.

அவர் தோண்டுவதை நான் பார்த்துக் கொண்டே நின்றேன். அவர் ஆளே மாறிவிட்டார். அந்த வெறியை அவரிடம் நான் பார்த்ததே இல்லை. அவரை பார்க்க இலையை தின்னும் வெட்டுக்கிளி போல தெரிந்தது. அப்படி ஒரு வேகம்.

அப்பா இரவு முழுக்க தோண்டினார். நான் அங்கேயே படுத்து தூங்கிவிட்டிருந்தேன். காலையில் வந்து பார்த்த அம்மா திடுக்கிட்டாள். அவர் இடுப்பளவு ஆழமுள்ள குழிக்குள் நின்றிருந்தார். “என்ன செய்கிறீர்கள்? கிறுக்குத்தனம் செய்யவேண்டாம்…வெளியே வாருங்கள்” என்று தலையில் அறைந்து கொண்டு அழைத்தாள்.

அவர் பெரிய பற்களைக் காட்டிச் சிரித்து “புதையல்… பொன்!” என்றார்.

அம்மா அவரை பிடித்து வெளியே தூக்குவதற்காக சென்றாள். அவர் உறுமியபடி கடப்பாரையை தூக்கினார் அம்மா பயந்து நின்றுவிட்டாள்.

“வேண்டாம்… வந்துவிடுங்கள்…” என்று அம்மா நெஞ்சில் கைவைத்து அழுதாள். “புதையல் எல்லாம் இல்லை… வேண்டாம்”

ஆனால் அப்பா எவர் குரலையும் கேட்கவில்லை. பகல் முழுக்க தோண்டிக்கொண்டிருந்தார். போற்றியும் பிறரும் வந்து பார்த்தனர்.

“இது ஏதோ ஆவி உபாதையாக்கும்” என்றார் போற்றி “இங்கே வாழ்ந்த யாரோ மூதாதை வந்திருக்கிறார்.”

“கொண்டுதான் போவார்னு நினைக்கிறேன்” என்றார் அருணாச்சலம் பிள்ளை.

ஊரே திரண்டுவந்து வேடிக்கை பார்த்தது. அப்பா அவரை அவர்கள் பார்ப்பதைக்கூட கவனிக்கவில்லை. மூன்றுநாட்கள் அந்த இடத்தில் தோண்டினார். களைத்தபோது அப்படியே திண்ணையில் வந்து அமர்ந்து “கஞ்சீ!”என்று கூச்சலிடுவார். கொடுப்பதை வாங்கி ஒரே மூச்சாக குடிப்பார். அப்படியே விழுந்து தூங்கிவிடுவார். விழித்ததும் எழுந்து கடப்பாரையுடன் கிளம்புவார்.

அந்தக்குழியை கைவிட்டதும் மூன்றுநாட்கள் சோர்ந்து திண்ணையிலேயே அமர்ந்திருந்தார். அவ்வப்போது நெஞ்சிலும் தலையிலும் அறைந்து கொண்டு கதறி அழுதார். எழுந்து எங்கோ ஓடிப்போவதுபோல சென்று வழியில் நின்று திரும்பி வந்தார். கண்கள் கலங்கி வழிந்துகொண்டே இருந்தன. உதடுகள் ஓசையில்லாமல் பேசின. அருகே கண்ணுக்குத் தெரியாமல் நின்றிருக்கும் யாரிடமோ தலையை ஆட்டி பலவிதமான முகபாவனைகளுடன் மன்றாடிக் கொண்டிருந்தார்.

பிறகு அந்தச் சுவடிகளை மீண்டும் வாசிக்கத் தொடங்கினார். நாலைந்து நாட்கள் அதிலேயே மூழ்கியிருந்தார். பிறகு ஒருநாள் சட்டென்று உச்சகட்ட களிவெறியுடன் எழுந்து கைகளை தூக்கி கூச்சலிட்டுக்கொண்டு ஓடிப்போய் கடப்பாரையை எடுத்து இன்னொரு இடத்தை தோண்டத் தொடங்கினார். சிரித்தபடியும் கூச்சலிட்டபடியும் தோண்டிக்கொண்டே இருந்தார். “பாண்டிப் புதையல்… இது பாண்டிப் புதையல்!” என்றார்.

அம்மா தொடக்கத்தில் கொஞ்சம் கவலைப் பட்டாள். கோயிலில் ஒரு பூஜை செய்து விபூதியும் சந்தனமும் கொண்டுவந்து போட்டுவிட்டாள். மந்திரவாதம் செய்யவேண்டும் என்று மளிகைக்கடை ஆவுடையப்பன் சொன்னபோது அதற்கு பணமில்லை என்று சொல்லிவிட்டாள். “விதி இதுதான் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. பைத்தியம் என்றால் தானாக தெளியட்டும். பேய் என்றால் அதுவே ஒழியட்டும்” என்றாள்.

பின்னர் அப்பாவை எல்லாரும் மறந்துவிட்டார்கள். அப்பா குழிகளை தோண்டி கைவிட்டு சோர்ந்து கலங்கி அமர்ந்திருந்து, சுவடியில் இன்னொரு இடத்தைக் கண்டுபிடித்து மீண்டும் தோண்டி, கைவிட்டார். வீட்டைச்சுற்றி குழிகள் தோண்டிக்கொண்டே இருந்தார். அவருக்கு பெருச்சாளி என்ற பெயர் ஊரில் உருவாகியது.  அவர் தோண்டிய குழிகளை அம்மாவே மண்வெட்டியால் மண்ணைச் சரித்து மூடினாள். அவருடன் எந்த உரையாடலுக்கும் வாய்ப்பே இல்லாமலாகியது. அவர் ஒருவேளை மட்டும் சாப்பிட்டார். பெரும்பாலும் தூங்குவதே இல்லை. அந்த சோர்வின் இடைவெளிகளில் நாட்கணக்காக ,தொடர்ச்சியாகத் தூங்கினார்.

ஆனால் ஆச்சரியமாக அவருடைய உடல்நிலை மேலும் மேலும் சிறப்படைந்தது. முன்பு அவருடைய கைகால்கள் சூம்பி எலும்புக்குச்சிகள் போலிருக்கும். அவை இறுகிப்புடைத்த தசைத்திரள் கொண்டன. அவர் உடலின் கோணல்கள் நிமிர்ந்தன. அவருடைய மண்வெட்டியும் கடப்பாரையும் மிகமிக சரியாக விழத்தொடங்கின. மூன்றுநாட்களிலேயே அவர் இரண்டு ஆள் ஆழத்திற்கு குழிதோண்டினார், தன்னந்தனியாக. தானே ஏணி ஒன்றை செய்துகொண்டார். தோண்டிய குழிகளை மீண்டும் தோண்டினார்.

அப்பா செத்துப்போகும் நாள் வரை இடைவிடாமல் புதையல் தேடிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள். முதற்கட்டச் சிரிப்புகளையும் கேலிகளையும் அனைவரும் மறந்தனர். அவரையே மறந்துவிட்டனர். அம்மாவே அவரை மறந்துவிட்டாள். எல்லாமே ஒரு நாளொழுங்குக்குள் வந்தது. நான் காலையில் எழும்போதோ பள்ளிக்கூடம் விட்டு வரும்போதோ அப்பா தோட்டத்தில் தோண்டிக் கொண்டிருப்பதைப் பார்ப்பேன். பெரும்பாலும் எந்த எண்ணமும் இல்லாமல் கடந்துசெல்வேன்.

ஆனால் அப்பா கிறுக்குத்தனமாக தோண்டவில்லை. என் மூதாதையர் வெவ்வேறு காலகட்டங்களில் அங்கே தங்கத்தை புதைத்து வைத்திருந்தார்கள். முகிலன் படையெடுப்பு என்று அவர்கள் சொல்வது ஆர்க்காடு நவாபின் படைகளை. அவை இரண்டுமுறை திருவிதாங்கூரை சூறையாடியிருக்கின்றன. எட்டுமுறைக்குமேல் மதுரை நாயக்கர்கள் படையெடுத்திருக்கிறார்கள். அதை வடுகப்படையெடுப்பு என்பார்கள். போர்க்காலங்களில் தங்கத்தை புதைத்து வைப்பதே வழக்கம். அவற்றை ஓலைகளில் குறிப்புமொழியில் எழுதி பதிவுசெய்திருப்பார்கள். சிலசமயம் அந்த குறிப்புமொழி அறிந்தவர்கள் எதிர்பாராமல் மறைந்துவிடுவார்கள். சிலர் வேண்டுமென்றே எவரிடமும் சொல்லாமலேயே சென்றுவிடுவார்கள். அவற்றை பூதங்கள் காக்கின்றன என்ற அச்சத்தால் எடுக்காமல் விட்டதும் உண்டு. அப்பா சுவடிகளை ஆராய்ந்தே தோண்டினார்.

ஒருநாள் அப்பா தோண்டிக் கொண்டிருந்தபோது கொட்டியம்பலத்தைக் கடந்து ஒரு பிச்சைக்காரச் சாமியார் உள்ளே வந்தார். வழக்கமாக எங்கள் வீட்டுக்குள் பிச்சைக்காரர்கள் வருவதில்லை. வெளியே இடிந்துகிடக்கும் சுவரும் உடைந்து சரிந்த கொட்டியம்பலமும்தான் தெரியும். உள்ளே ஆள்குடியிருப்பதை ஊகிக்க முடியாது, குடியிருந்தாலும் பிச்சைக்காரர்கள்தான் குடியிருப்பார்கள் என்று தோன்றும். இந்தச் சாமியார் ஏன் உள்ளே வந்தார் என்பது இப்போதும் புதிர்தான்.

நான் அவரைப் பார்த்தேன். ஒரு இரும்பு அரத்தில் இன்னொரு கம்பியால் உரசி ஒரு சீரான ஓசையை எழுப்பியபடி “நெல்லுக்கும் புல்லுக்கும் நீராகும் வானம்! சொல்லுக்கும் சிரிப்புக்கும் பொருளாகும் வானம்! கல்லுக்குள் தேரைக்கும் அமுதூட்டும் வானம்! எல்லாமும் ஆகி ஏதுமற்ற வானம்!” என்று பாடிக்கொண்டு படியேறி உள்ளே வந்தார்.

இடுப்பில் ஒரு காவிக் கந்தலை கோவணம் போல உடுத்தியிருந்தார். ஒரு பெரிய கம்பிளிச் சால்வையை தோளில் போட்டு கையில் திருவோடு வைத்திருந்தார். இன்னொரு கையில் கழி. தலைமுடி சடைகளாக தோளில் தொங்கியது. அழுக்குநரை கொண்ட நீண்டதாடி. சிரிப்புபோல இடுங்கிய கண்கள்.

அவர் கொட்டியம்பலத்தை உள்ளே வந்து குழி தோண்டிக் கொண்டிருந்த அப்பாவை பார்த்து சிரித்தபடி நின்றார். அப்பா தோண்டியபடியே ஓரிரு முறை அவரை திரும்பிப் பார்த்தார். பின்னர் கடப்பாரையை ஊன்றிவிட்டு திரும்பி அவரைக் கூர்ந்து பார்த்தார்.

“இன்னும் ஒரடி ஆழம்தான்… பலமுறை பக்கத்திலே போயிருக்கே… இப்பவும் விட்டிராதே” என்றார் சாமியார்.

நான் அவர் பேசுவதைக் கேட்டு திண்ணையிலிருந்து இறங்கி பார்த்துக் கொண்டு நின்றேன். எங்களூரில் தமிழ்பேசுபவர்கள் குறைவு. அவர் பாண்டிநாட்டிலிருந்து வந்தவராக இருக்கவேண்டும். ஆனால் சைவ வைணவக் குறிகள் ஏதுமில்லாமல் இருந்தார்.

“ஆனா ஒண்ணு, தோண்டினா வாரது என்னன்னு சொல்லமுடியாது. சீதேவி வாரதுக்கும் மூதேவி வாரதுக்கும் சரிசமமான எடமிருக்கு” என்றார் சாமியார்.

அப்பா திகைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றார்.

“மூதேவி வந்தா கட்டைவிரலாலே அழுத்தி நிப்பாட்டிவைக்க உனக்கு தெம்பிருக்கா? விஸ்வரூபம் எடுக்க முடியுமா உன்னால? முடிஞ்சா செய்யி.”

அம்மா உள்ளிருந்து வந்து “அரிசியோ பைசாவோ ஒண்ணுமே இல்லை பண்டாரம்… ஒரு முறுக்கு இருக்கு, குடுக்கட்டா?” என்றாள் “நேத்து சுட்டதிலே பிள்ளையாருக்கு வச்சது… வேற ஒண்ணுமே இல்லை வீட்டிலே.”

“குடு தாயி, உன் கையாலே மண்ணை அள்ளிக்குடுத்தானும் அன்னமாக்கும்” என்றார் சாமியார்.

அம்மா அந்த முறுக்கை எடுத்து கொண்டுவந்து அவருடைய திருவோட்டில் போட்டாள். அது முதல்முறுக்கு, அதை எடுத்து அடுப்பருகே வைப்பாள். சாம்பல் படிந்திருக்கும். வரும்போது அம்மா அதை துடைத்திருக்கவேண்டும். ஆனாலும் சாம்பலாகவே இருந்தது

“சித்தன் மனசு குளுந்திருக்கு…. அன்னமிட்ட இந்த மகராஜி கையிலே பொன்னு நிறையும். ஏழுதலைமுறைக்குச் சீதேவி கூடவே இருப்பா… பஞ்சபூதங்களுக்கும் முப்பத்துமுக்கோடி தேவர்களுக்கும் மும்மூர்த்திகளுக்கும் இது சித்தன் உத்தரவு!” என்றார் பின்னர் அதை தின்றபடி திரும்பி நடந்து சென்றார்.

அப்பா அந்த இடையளவு குழிக்குள் வெறித்துப் பார்த்தபடி நின்றார். அவரால் மீண்டும் ஒருமுறைகூட கடப்பாரையை போடமுடியவில்லை. அவர் முகமே மாறிவிட்டது. சற்றுநேரம் கழித்து மேலே வந்து மண்ணை அள்ளிப்போட்டு அந்தக்குழியை மூடினார்.

நான் பள்ளிக்கூடம் போய்விட்டேன். திரும்பிவந்தால் அப்பா திண்ணையில் அமர்ந்திருந்தார். அவரை பார்த்தபடி உள்ளே போனேன். அம்மாவிடம் “ஏன் உக்கார்திருக்கிறார்?” என்றேன்

“தெரியவில்லை. என்ன ஆயிற்று காலையில்?” என்றாள் அம்மா.

நான் சாமியார் சொன்னதைச் சொன்னேன்.

“நல்லதாகப் போயிற்று, அப்படியாவது அந்த பீடை தொலைந்ததே” என்றாள் அம்மா.

“அங்கே ஓரடி ஆழத்தில் இருக்கிறது புதையல்” என்றேன்.

“போடா” என்று அம்மா சொன்னாள்.“அங்கே பீடை இருந்தால் எழுந்து வரும். அதை கட்டுப்படுத்த நான் என்ன பெருமாளா? ஏற்கனவே எவரோ திறந்துவிட்ட பீடை இந்த வீட்டையே விழுங்கிக்கொண்டிருக்கிறது.”

மறுநாள் காலையில் திண்ணையில் படுத்திருந்த அப்பாவை தூரத்திலிருந்து பார்த்தபோதே ஏதோ விசித்திரமாக இருந்தது. நான் அருகே சென்று மெல்லத் தொட்டுப்பார்த்தேன். குளிர்ந்திருந்தார். பனிபடிந்த காய்கறிகள் போல ஒரு சில்லிட்ட உயிர்த்தன்மை.

அப்பா அப்பா என்று அவரை உலுக்கினேன். அவர் முகம் பொம்மை போலிருந்தது. அவரிடம் மீண்டும் அந்த கோணல் வந்திருந்தது. நான் உலுக்கியபோது அவர் தலை அசைந்தது.

நான் அம்மா அம்மா என்று அலறினேன். அம்மா ஓடிவந்து தொட்டுப் பார்த்தாள். உடனே அவளுக்கு தெரிந்துவிட்டது.

“ஓடு, போய் குமாரசாமி சாரை வரச்சொல்லு… அருணாச்சலம் இருந்தாலும் சொல்லு… ஓடு” என்றாள் அம்மா.

நான் “அப்பாவுக்கு என்ன ஆயிற்று?” என்றேன்.

“அப்பா செத்துவிட்டார் என்று சொல்… போடா”

நான் அப்பாவை பார்த்தபடி நின்றேன். பிறகு வெறியுடன் அப்பாவின் கால்களை பிடித்து உலுக்கி “அப்பா அப்பா அப்பா எழுந்திருங்கள் அப்பா” என்று அலறினேன்.

அம்மா என் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டு “போடா… போய் கூட்டிவா” என்றாள்.

கன்னத்தை பிடித்தபடி அலறி அழுதுகொண்டே நான் தெருவில் ஓடினேன். அருணாச்சலம் பிள்ளை வீட்டு முன் நின்று கைகளை விரித்து “மாமா அப்பா செத்துப்போய்ட்டர் மாமா!” என்று கதறினேன்.

அவர் துண்டை எடுத்து உடம்பில் போட்டுக் கொண்டு வெளியே வந்து “சரி விடுடா, அவன் செத்தா உங்களுக்கு நல்லது” என்றார்.

நான் திகைத்து அப்படியே நின்றேன். என் உடல் எரிந்தது. இப்போது நாற்பத்தைந்து ஆண்டுகளாகின்றன. இன்றுவரை அந்த தருணத்தில் இருந்து நான் வெளியே வரவில்லை. எண்ணும்போது இன்றும் என் உடல் தளர்ந்து உள்ளம் படபடக்கிறது.  “அப்பா! அப்பா! அப்பா!” என்று நான் வெறிகொண்டு அலறினேன். ஆனால் ஓசை எழவில்லை.

நான் நின்று நின்று வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் கூட்டம் வந்துவிட்டது. கொட்டியம்பலத்தின் இடிபாடுகளில் அமர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் உடலை அவர்கள் எடுத்து படுக்கவைத்தனர். சடங்குகள் செய்தனர். ஒருவர் கூட அழவில்லை. அம்மா அசையாமல் தலைகுனிந்து இருந்தாள். அவள் உடலை ஒட்டி தம்பி தங்கைகள் அமர்ந்திருந்தார்கள். மற்றவர்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

“நல்ல மண்ணாக்கும்… மொத்த எடத்தையும் ஆறடிக்கு கிளைச்சு மலத்தியிருக்காரு” என்று நேசையன் சொன்னான். “வாழை வைச்சா பிடிபிடீன்னு மேலே வந்திரும்”

“புதைக்கணும்னு ஆசை இருந்திருக்குமோ?”

“அதிகாரி வம்சம். பதினெட்டு தலைமுறையாக மண்ணை தொட்டவர்கள் அல்ல. இவன் பதினெட்டு மடங்கு மண்ணிலே தோண்டிவிட்டான். இதுதான் விதி.” என்றார் நாகப்பன் நாயர்.

எனக்கு மொட்டை போடப்பட்டது. ஈமச்சடங்குகள் செய்தேன். அனைவரும் திரும்பிச் சென்றார்கள். வீடே ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது. நான் அம்மா அழுகிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அழவில்லை. அன்றே முறுக்குச் சுட ஆரம்பித்துவிட்டாள்.

முறுக்கை கொண்டுபோய் அனந்தநாடார் கடையில் கொடுக்கச் சொல்லி என்னிடம் அம்மா டப்பாவை தந்தாள். நான் முறைத்து பார்த்துக்கொண்டு நின்றேன்.

“என்னடா?”

“இப்ப சந்தோஷம்தானே?”

“என்னடா?” என்று அம்மா கேட்டாள்.

“கிறுக்கன் செத்துவிட்டான். உனக்கு விடுதலை”

அம்மா கண்களைச் சுருக்கி கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அப்படியே திரும்பி போய்விட்டாள். நான் டப்பாவுடன் செல்லும்போது என் மனம் தீபட்டதுபோல எரிந்தது. ஆனால் அதில் ஓர் இன்பம் இருந்தது. நான் முகத்தை இறுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உள்ளூர புன்னகைத்துக் கொண்டேனா?

இப்போது தோன்றுகிறது, அது ஓர் இயலாமையின் வெளிப்பாடு என்று. என் அப்பாவுக்காக நான் ஒருவரிடமும் ஒரு வார்த்தைகூட பேசமுடியாது. அவர் கிறுக்கன் அல்ல மந்தபுத்தி அல்ல என்று உலகை நோக்கி கூவ வேண்டும், ஆனால் என்னால் முடியாது. ஆகவே அம்மாவிடம் மோதிக் கொண்டிருக்கிறேன். அவள் என்னிடம்தான் மோதவேண்டும்.

ஒருமாதம் அம்மாவிடம் நான் பூசலிட்டுக்கொண்டே இருந்தேன். பலமுறை பாத்திரங்களை எடுத்து வீசினேன். ஒருநாள் “என் அப்பாவை நீதான் கொன்றாய்!” என்றுகூட கைநீட்டி கூச்சலிட்டேன். “நீ செய்வினை வைத்து அப்பாவை கொன்றாய், எனக்குத்தெரியும்”

அம்மா ஒன்றுமே சொல்லவில்லை. ஒவ்வொரு முறையும் பேசாமல் வெற்றுவிழிகளுடன் திரும்பிச் சென்றாள். அவளுடைய மௌனம் என்னை மேலும் வெறியேற்றியது. ஒருநாள் நள்ளிரவில் விழித்துக் கொண்டபோது அம்மாவை பாயில் காணாமல் நான் எழுந்து வெளியே சென்று பார்த்தேன். புறத்திண்ணையில் அமர்ந்து அம்மா அழுது கொண்டிருப்பதை கண்டேன். கண்ணீர் இருளில் நட்சத்திரவெளிச்சத்தில் பளபளத்தது.

என் மனம் பொங்கி அழுகைவந்து உடலையே மூடிக்கொண்டது. என் கைகால்களெல்லாம் தளர்ந்தன. ஆனால் சுவர் சாய்ந்து அப்படியே நின்றேன். நெஞ்சடைத்து விழுந்து விட்டிருப்பேன். அப்படியே என்னை இழுத்துக்கொண்டு மீண்டும் படுக்கைக்கு வந்து, இருட்டில் படுத்து ஓசையின்றி கண்ணீர்விட்டேன். அந்த கண்ணீர்ப் பளபளப்பை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை. அம்மா என்றால் அந்த தருணம்தான் எனக்கு.

அதன்பின் அம்மாவுடன் உறவு சரியாகிவிட்டது. அம்மா அதையும் இயல்பாகவே எடுத்துக் கொண்டாள். எந்த பேச்சும் அதைப்பற்றி நடைபெறவில்லை. அம்மா அதன்பிறகுகூட அப்பாவைப் பற்றி ஒன்றுமே சொன்னதில்லை. மேலும் இருபத்தேழு வருடங்கள் உயிருடன் இருந்தாள். அப்பா பற்றி பேச்சே வந்ததில்லை.

பொதுவாகவே அம்மா மிகமிக அமைதியான பெண். உள்நோக்கி தன்னை இழுத்துக் கொண்டவள். அவள் அப்பா ஒரு யானைக்காரர். யானை அவரை கொன்றது. வயிற்றுப் பாட்டிற்காக அவள் அம்மா இன்னொருவருக்கு மனைவியானாள். அந்த புதுக்கணவன் அம்மாவையும் அடைய நினைத்தான்.

அம்மாவின் அம்மா சிறுபெண்ணான என் அம்மாவை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுவந்து என் பாட்டியின் முன் தள்ளி  “ஒருவேளை சோறு மட்டும் போடுங்கள் அம்மிணியே, இங்கேயே நாய் மாதிரி வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அழுதாள். பாட்டி “சரிடி, இங்கே நிற்கட்டும் இவள்”என்றாள். அப்படியே தன் ஆறு வயது மகனுடன் ஊரைவிட்டு சென்றுவிட்டாள் அம்மாவின் அம்மா. பிறகு செய்தியே இல்லை.

அம்மா தன் பன்னிரண்டு வயதில் பாட்டியிடம் வந்துசேர்ந்தாள். பதினெட்டு வயதில் என் அப்பாவுக்கே அவளை கட்டி வைத்தார் பாட்டி. கூடத்தில் குத்து விளக்கு ஏற்றிவைத்து குடும்பத்தினர் மட்டும் கூடியிருக்க அப்பா கொடுத்த சரிகைவேட்டியை அம்மா பெற்றுக் கொண்டாள். அதுதான் திருமணம்.

அம்மா அந்த ஒரே சமையலறையில் வாழ்க்கையை செலவிட்டாள். எங்கும் சென்றதில்லை. எவராலும் மதிக்கப்பட்டதில்லை. பாட்டி இருக்கும் வரை வயிறு வாடியதில்லை. அதன்பின் வயிறு நிறைய சாப்பிட்டதே இல்லை.

அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியும். பாடத்தெரியும். இளமையில் மிக அழகாக இருந்திருக்கலாம். வயதான காலத்தில் அம்மாவைப் பார்த்த எல்லாருமே அவளை அழகி என்று சொல்லியிருக்கிறார்கள். அவளுக்கு கடைசி காலத்தில் மருத்துவம் பார்த்த ஜெயராமன் டாக்டர் ஒவ்வொரு முறையும் சிரித்தபடி அதைச் சொல்வார்.

அம்மா என்ன நினைத்தார்? என்ன எதிர்பார்ப்பு இருந்தது? ஏமாற்றங்கள் இருந்ததா? கடைசிவரை தெரியாது. ஆனால் இல்லாமலில்லை. அம்மா வயதான காலத்தில் ஒரு நாளைக்கு ஆறுமணிநேரம் வாசித்தாள். எம்.டி.வாசுதேவன் நாயரின் ரசிகை. அவருக்கு அறுபது எழுபது கடிதங்கள் எழுதியிருக்கிறார். எம்.டி பலமுறை பதில் போட்டிருக்கிறார். அவருடைய ஒரு கதாபாத்திரம் போன்றவள் அவள். அழுத்தமான பெண்கள். கிணற்றுக்குள் கிடக்கும் குளிர்ந்த கல்போல.

அப்பா இறந்தபின் ஓராண்டு கழித்து அம்மாவுக்கு அடிபட்டது. மழைக்காலம், கொல்லைப் பக்கத்தில் ஒரு தூண் நெடுங்காலமாகவே  உளுத்து நின்றிருந்தது. அம்மா அங்கே பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தபோது சரிந்து கூரையுடன் அவள்மேல் விழுந்துவிட்டது. அவள் அலறல் கேட்டு நான் ஓடிப்போய் பார்த்தேன். அவள் மேல் மட்கிய உத்தரங்களும் கழுக்கோல்களும் குவிந்திருந்தன. நான் அலறியபடி வெளியே ஓடினேன். தெருவில் நின்று கூச்சலிட்டேன்.

அம்மாவை எட்டுநாள் அரசாங்க ஆஸ்பத்திரியில் வைத்திருந்தார்கள். மேலே புண்கள் ஆறத்தொடங்கியதும் போகச்சொல்லிவிட்டார்கள். அதுவரை நானும் தம்பி தங்கையரும் அந்த இடிந்த வீட்டின் ஒற்றை அறையிலேயே இருந்தோம். பக்கத்துவீடுகளில் இருந்து ஏதாவது சாப்பிடத் தந்தார்கள். கோயிலில் இருந்து வெண்சோறு கிடைத்தது. ஆனால் பசித்துப்பசித்து நாங்கள் மெலிந்து தோல்வரண்டு, உதடுகள் வெடித்து, கண்கள் அழுகியதுபோல் ஆகி, அரைப் பிணங்களாகவே மாறியிருந்தோம்.

அம்மாவால் எழுந்து அமரவே முடியவில்லை. இடது காலும் கையும் செயல்படவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து வலது கையையும் காலையும் உந்தி உந்தி தவழ்ந்து வந்தாள். நான் அவளை தூக்கியும் இழுத்தும் கொண்டு வந்தேன். பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு வந்தோம். வீட்டில் இடியாதது ஒரே ஒரு அறை மட்டுமே. அம்மா வந்த அன்று போற்றி கொடுத்த வெண்சோறு இருந்தது. அதை ஆளுக்கு ஒரு கவளம் சாப்பிட்டோம். மழை பெய்துகொண்டே இருந்தது. ஒழுகும் கூடத்தில் உடலைச் சுருட்டி அமர்ந்திருந்தோம்.

காலையில் அம்மா நன்றாகக் களைத்து தூங்கிக்கொண்டிருந்தாள். நான் கோயிலுக்கு உருளியை கழுவி வைத்துவிட்டு வர போயிருந்தேன். போற்றி சொன்ன சில வேலைகளைச் செய்துவிட்டு அவர் தந்த ஒரு ரூபாயுடன் திரும்பி கொட்டியம்பலத்திற்குள் நுழைந்தேன்.ஏதோ நாற்றம் வந்தது. எதுவோ வேகும் நாற்றம். என்ன என்று வீட்டைச் சுற்றிப்போய் பார்த்தேன். என் தம்பி மணிகண்டனும் தங்கைகளும் சுற்றி அமர்ந்து நடுவே சருகுபோட்டு தீமூட்டி அதில் ஓர் எலியைச் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.

நான் ஓடிப்போய் அதை உதைத்து தெறிக்கவைத்தேன். “நாயே! நாயே! நாயே!” என்று கூச்சலிட்டேன். மணிகண்டன் கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து என்னை அடிக்க வந்தான். அவன் முகத்தில் இருந்த வெறியை கண்டேன். கைவிரித்து அசையாமல் நின்றேன். அவன் கல்லை கீழே போட்டுவிட்டு கதறி அழுதான். தங்கைகளும் சேர்ந்து அழுதனர்

நான் ஓர் உணர்வை அடைந்து திரும்பிப் பார்த்தேன். அம்மா வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்தாள். அவள் தலை ஆடிக்கொண்டிருந்தது. பின்னர் வெறிகொண்டவள் போல கைகளால் உந்தி உந்தி கீழே இறங்கி வீட்டைச் சுற்றிக்கொண்டு போனாள். அப்பா கடைசியாக தோண்டிய அந்த பள்ளத்தை அடைந்தாள். மழைபெய்து சேறாக குழிந்து கிடந்த அந்த இடத்தை கையால் அள்ள தொடங்கினாள். பின்னர் சுற்றுமுற்றும் பார்த்தபோது அப்பா கைவிட்ட மண்வெட்டி அங்கேயே கிடப்பதைக் கண்டாள். அதை எடுத்து வெறியுடன் மண்ணை அள்ளினாள்

“மூதேவி வாடி! மூதேவி வாடி! மூதேவி வாடி!” என்று அம்மா மூச்சுவாங்க சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுடைய விளங்காத கைக்கும் காலுக்கும் உயிர் வந்துவிட்டிருந்தது.

“அம்மா என்ன இது… அம்மா” என்று நான் அம்மாவை பிடித்தேன். என்னை அவள் பிடித்து தள்ள மல்லாந்து சேற்றில் விழுந்தேன்.

“வெளியே வாடி மூதேவி… வந்து எங்களை தின்னுடி மூதேவி” என்று அம்மா மண்ணை அள்ளி அள்ளி வெளியே போட்டாள். நான் எழுந்து அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண்முன் அம்மா மண்ணுக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து போய்க் கொண்டிருந்தாள். அவள் தலையே மறைந்தது.

பிறகு அம்மா “மூதேவி! மூதேவி! மூதேவி!” என்று கூச்சலிட்டபடி ஒரு பெட்டியை தூக்கி வெளியே போட்டாள். நான் என் நெஞ்சில் கைவைத்து படபடப்பை அடக்கியபடி பார்த்துக் கொண்டிருந்தேன். எழுந்து சென்று அந்த பெட்டியை தொடத் துணிவு வரவில்லை.

அம்மா மண்வெட்டியாலேயே அதை அறைந்து உடைத்தால் “வாடி மூதேவி! வாடி மூதேவி!” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்படியே மயங்கி அதன்மீதே விழுந்துவிட்டாள். அந்தப்பெட்டி சரிந்து மூடி திறந்து கிடந்தது. அதற்குள் காசுகளும் நகைகளும் இருந்தன.

நான் எழுந்துசென்று அந்த பெட்டியை பார்த்தேன். முழுக்க பொன்நாணயங்கள், மாலைகள், சங்கிலிகள், மோதிரங்கள். தம்பியை கூப்பிட்டேன். இருவராக அதை அப்படியே எடுத்துக் கொண்டுவந்து வீட்டுக்குள் வைத்தோம். பிறகு தெரிந்துகொண்டோம், அது எட்டு கிலோ எடை. அதற்குள் இருந்த தங்கம் மட்டும் ஆறுகிலோ.

அம்மாவை உள்ளே கொண்டு சென்று படுக்கவைத்தேன். அந்தப் பெட்டியிலிருந்து ஒரு சிறு மோதிரத்தை மட்டும் எடுத்து நன்றாகக் கழுவி துடைத்தேன். தம்பியிடம் பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு வெளியே போனேன். வண்ணாத்தி அணஞ்சியம்மை துணிதுவைத்து காயப்போடும் இடத்திற்குப் போய் அவள் காணாமல் ஒரு வேட்டியையும் சட்டையையும் எடுத்துக்கொண்டேன். அவற்றை அணிந்துகொண்டு மார்த்தாண்டம் ஜங்ஷனுக்குப் போய் மோதிரத்தை ஒரு நகைக்கடையில் கொடுத்து விற்றேன். என்னை கண்டதும் அவன் முகம் மலர்ந்து அதற்கு மாற்று குறைவு என்று சொல்லி விலைகுறைத்து வாங்கிக்கொண்டான்.

உணவுப்பொருட்களும் துணிகளும் வாங்கிக்கொண்டு திரும்பிவந்தேன். மூன்றுநாட்களுக்குப்பின் ஒரு செயினை விற்றேன். அந்தப் பணத்தில்தான் அந்த வீட்டிலிருந்து கிளம்பி நாகர்கோயில் வந்தேன். ஒரு வீடு பார்த்துக் குடியேறினோம். நான் ஒரு கடைபோட்டேன். கடையில் பெரிய விற்பனையோ லாபமோ இருந்ததில்லை. ஆனால் என் கையில் என் மூதாதையரின் கருவூலம் இருந்தது. கடையை சொந்தமாக கட்டினேன். வீடுகட்டினேன். என் தம்பிக்கு தனியாக கடைவைத்துக் கொடுத்தேன். தங்கைகளை நல்ல பணம் கொடுத்து திருமணம் செய்து கொடுத்தேன்.

என் அம்மா நன்றாக உடல்தேறி இருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் மறைந்தாள். அந்த வீடு அப்படியே மண்ணில் விழுந்து மட்கி குப்பைக்குவியலாக நெடுங்காலம் கிடந்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து அதை விற்றார்கள். நூற்று அறுபத்தேழு பங்கு என நினைக்கிறேன். ஆளுக்கு ஐநூறுரூபாய் கிடைத்தது. நான் அதை கோயிலுக்கு அளித்தேன்.

அந்நிலத்தை வாங்கிய ஞாறாம்விளை நாராயணன் பெருவட்டரிடம் நான் சொன்னேன். “கதைகளின் படி அங்கே பல புதையல்கள் உள்ளன. ஆனால் ஆபகந்தியா அக்காவா எவர் வருவார் என்று பாதிப்பாதிதான் சொல்லமுடியும். துணிவிருந்தால் தோண்டிப்பாருங்கள்.”

பெருவட்டர் அங்கே ரப்பர் நட்டிருக்கிறார். சமீபத்தில் அவரைப் பார்த்தேன். “தோண்டிப் பாத்தீங்களா பெருவட்டரே?”என்று கேட்டேன்.

“எதுக்கு வம்பு? நான் பிள்ளைக்குட்டிக்காரனாக்கும்” என்று அவர் சொன்னார்..

தோண்டுவதைப் பற்றித்தான் சொல்லவந்தேன். அகத்தேயானாலும் வெளியேயானாலும் அகழ்வது மிகமிக ஆபத்தானது.

***

முந்தைய கட்டுரைசுக்ரர், கணக்கு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேறொரு காலம்