ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இன்று வந்தது. அக்கண்டனக்கடிதம் எனக்கு இப்படித்தான் வந்து சேர்ந்தது. ஏற்கனவே முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலையிலக்கியப் பெருமன்றம் ஆகியவை கண்டனங்கள் தெரிவித்திருப்பதை வாசித்தேன்.
தீவிர இடதுசாரி இயக்கங்களைப் பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரை ஒன்றுக்கு வந்த எதிர்வினை அது. நான் சிறுகதைகளை எழுதத் தொடங்கியமையால் அதை அப்போது வெளியிடவில்லை. அந்த தொடர் முடிந்ததும் கடிதம் வெளியாகியது
வழக்கம்போல கடிதத்தை வாசித்தேன் என்றாலும் இந்த வரியை கவனிக்கவில்லை. நான் பெயரில்லா கடிதங்களை வெளியிடுவதுண்டு- ஆனால் மின்னஞ்சலில் முழுமுகவரி இருக்கவேண்டும். பெயர் தேவையில்லை என்ற விண்ணப்பமும் இருக்கவேண்டும்
ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை தெளிவுறுத்த விரும்புகிறேன். ஒன்று நான் மிகமிக கடுமையாக கண்டிப்பது இந்த கண்டனத்தில் பா.செயப்பிரகாசம் அவர்கள் ஒரு பொருட்படுத்தத் தக்க சிறுகதையாசிரியர் என்று சந்தடி சாக்கில் சொல்லி வைத்திருப்பதைத்தான். அதை இதில் கையெழுத்திட்டிருக்கும் எழுத்தாளர்கள் எவரேனும் ஏற்பார்கள் என்றால் அவர்கள் மேற்கொண்டு இலக்கியம் பேசாமலிருப்பதே நன்று.
அத்தனை முற்போக்கு எழுத்தாளர்களையும் அங்கிகரித்து அவர்களின் எழுத்துக்களை கவனப்படுத்திய விமர்சகனாகிய என் பார்வையில் மிகச்செயற்கையான, மிகமிக மேலோட்டமான முதிரா எழுத்துக்கள் பா.செயப்பிரகாசம் எழுதியவை. வானம்பாடிக் கவிதைகளின் கதைவடிவம் என்று சொல்லலாம்.அவர் அவ்வெழுத்துக்களுடன் இன்று சாகித்ய அக்காதமி போன்ற விருதுகளுக்கான எதிர்பார்ப்புடன் முயல்கிறார் என்று கேள்விப்படுகிறேன். இந்த கண்டனக்கடிதத்தை அதற்கான முயற்சிகளில் ஒன்றாக, அணிதிரட்டலாக பயன்படுத்துகிறார் என்றால் அது கண்டிக்கத்தக்கது.
பா.செயப்பிரகாசம் சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச்சூழலில் அரசியல் பேசுபவர்கள் பொதுவாக என்னென்ன பேசுவார்களோ அதையெல்லாம் பேசியவர், அவ்வளவுதான். பார்ப்பனிய எதிர்ப்பு ,முதலாளித்துவ எதிர்ப்பு ,அமெரிக்க எதிர்ப்பு ,ஒட்டுமொத்தமாக அரசுஎதிர்ப்பு. ஆனால் அரசின் செய்தித்தொடர்பாளராக பணியாற்றினார்.
அந்தக் கடிதத்தில் உள்ள நேரடியான அப்பட்டமான கேள்வி இதுதான். இந்தி எதிர்ப்புப் போராட்டவீரர் என்ற அங்கீகாரத்துடன் அரசுப்பணியில் நுழைந்து மக்கள்தொடர்புத்துறையின் தலைமை அதிகாரியாக இருந்த அவர் எப்படி ஒரு தீவிர இடதுசாரிக் குழுவுக்கு தலைமை வகிக்கமுடியும் என்பது. அதிலுள்ள அபத்தம். அந்தக்குழுவில் இருந்த ஒவ்வொருவரும் காவல்துறைச் சிக்கல்கள் உட்பட பல்வேறு வகையில் சீரழிந்தபோது இவர் எப்படி பாதுகாப்பாக இருந்தார் என்பது. அந்த மோசடியைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பா.செயப்பிரகாசத்தை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஒரு காலத்தில் அவர் ஒரு இடதுசாரி என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இடதுசாரி தீவிரக்குழுக்கள் முதல் அதிமுக வரை தொடர்புகள் கொண்ட ‘லாபியிஸ்ட்’ மட்டுமே என்ற தெளிவை பின்னர் அடைந்தேன்.அரசு உயரதிகாரியான இவரால் தலைமை தாங்கப்பட்ட பழைய ‘நக்சலைட்’ குழுவில் சேர்ந்து வாழ்க்கையை இழந்து, போலீஸ் வழக்குகளில் சிக்கிய நண்பர்கள் சிலரின் மீள்வாழ்வுக்காக தொண்ணூறுகளில் நான் நிதிதிரட்டியிருக்கிறேன். நண்பர்களுக்குத் தெரியும். அவர்கள் வழியாக இவரையும் நன்றாகவே தெரியும்
தமிழக அரசில் மக்கள்தொடர்புத்துறை அதிகாரி என்பது முழுக்கமுழுக்க அரசியல் நியமனம். அதில் லாபியிஸ்ட் அல்லாத ஒருவர் பணிபெறமுடியுமா ? இதைக்கூட தெரியாமலிருக்கும் கள்ளம்கபடமற்றவர்களா நம்மூர் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்? அந்த பணியே லாபியிங் செய்வதற்கான சூழலை உருவாக்கும் கடமைகொண்டது.
பா.செயப்பிரகாசம் தான் சார்ந்த சாதியக் குழுக்களுடன் நெருக்கமானவர், அரசியல் சார்ந்து அவற்றை பயன்படுத்திக்கொண்டவர் என்பது அவர்மேல் பொதுவாக அனைவருமே முன்வைக்கும் குற்றச்சாட்டு. இன்றுவரை தனிப்பேச்சுகளில் எவருமே அதை மறுத்து நான் கேட்டதில்லை. இந்த கையெழுத்தாளர் பட்டியலிலேயே சிலர் என்னிடம் சொன்னதுண்டு- இப்போது அவர்கள் மறுக்கலாம். இப்போது இந்த சர்ச்சை வந்ததனால் தெளிவாகவே சொல்கிறேன் நான் பா.செயப்பிரகாசம் பற்றிய அக்குற்றச்சாட்டை உறுதியாக நம்புகிறேன்.
அவருடைய சாதிய ‘லாபியிங்குக்கு’ சிறந்த உதாரணம் ஜி.வி.மார்க்கண்டேயன் [முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ] என்பவரின் கண்டனம். அவருக்கு இங்கே என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நான் பா.செயப்பிரகாசம் பற்றி ஒன்றும் சொல்லவே இல்லை என்றுகூட தெரியவில்லை. அவருக்கு எவரோ தகவல் சொல்லியிருக்கிறார்கள், அவ்வளவுதான். ஆனால் ஆதரவுக்கு எழுகிறார். கண்டன அறிக்கை வருகிறது.
ஒரே ஒரு வரிக்காக உடனடியாக மிரட்டலுடன் எழும் இந்த ஆதரவுப் பின்புலம் வேறெந்த தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கிறது? இதற்குமுன் எந்த இலக்கியச் சர்ச்சைகளில் இவ்வாறு ஒரு குரல் எழுந்தது? இப்படி ஓர் ஆதரவுப்பின்புலத்துடன் செயல்படுபவர் எப்படி இடதுசாரியாக ஆவார்?எந்தப் பின்புலத்தில் இருந்து இந்தக் குரல் எழுகிறது என்று தெரியாத அளவு கள்ளமற்றவர்களா இங்கே பேசிக்கொண்டிருக்கும் நாம்? நான் சுட்டிக்காட்டுவது மிகச்சரியாக இதை மட்டுமே.
இப்படி நம்ப எனக்கு உரிமை உண்டா? இல்லை என்றால், அது அவதூறு என்றால் ஒன்றுதான் கேட்பேன். மௌனி முதல் அசோகமித்திரன் வரை அத்தனைபேர் மேலும் நீங்கள் எல்லாம் சாதியமுத்திரை குத்தி சென்ற ஆண்டுகளில் எழுதிக் குவித்த பக்கங்களுக்கு என்ன பொருள்? எத்தனை கீழ்மைநிறைந்த குற்றச்சாட்டுக்கள், எவ்வளவு வசைகள். அது தொற்றுநோய் இல்லையா? அப்போதெல்லாம் நீங்கள் என்ன ஆரோக்கியமாகவா இருந்தீர்கள்?
இந்த கண்டனங்களில் பெரும்பாலானவற்றில் ‘புளிச்சமாவு’ என்ற சொல் இருக்கிறது. தங்களை சமூகப்போராளிகள் என்று சொல்லிக்கொள்பவர்களின் வரிகளில்கூட. நான் எவரைப்பற்றியும் இப்படி ஒரு சொல்லை பயன்படுத்துவதில்லை. எவர் மீதான வன்முறையிலும் இப்படி மகிழ்வதுமில்லை. இவர்களின் நாகரீக அளவுகோல்கள் இவ்வளவுதான்
இதில் கையெழுத்துபோட்டுள்ள எழுத்தாளர்கள் எதிர்காலத்திலாவது இங்குள்ள இலக்கியமேதைகள் மீது சாதியக் காழ்ப்பு முத்திரைகள் குத்தப்படும்போது இதேபோல எதிர்வினைகள் ஆற்ற அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். இதுவரை மௌனமாக இருந்தார்கள், பரவாயில்லை, இப்போது மனம்திருந்தியிருக்கலாம்.
பா.செயப்பிரகாசம் என்ற போலி இலக்கியவாதி பற்றி நான்கு பத்திகள் என்னை எழுதவைத்ததும் கிட்டத்தட்ட ஐம்பது புதிய எழுத்தாளர்களின் பெயர்களை தெரிந்துகொள்ளச் செய்ததும் மட்டுமே இந்த அறிக்கைகளின் அறுதிவெற்றி
ஜெ
அன்புள்ள ஜெ
உங்களுக்கு வந்திருக்கும் கண்டன அறிக்கை பெருமாள் முருகன் முகப்பித்தக்கத்திலிருந்து
எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்திற்கு எதிரான ஜெயமோகனின் அவதூறுக்கு
அனைத்து தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்களின் கண்டன அறிக்கை.
தமிழின் முதுபெரும் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மீது தனது இணையப் பக்கத்தில் ஜெயமோகன் செய்துள்ள துல்லியத் தாக்குதல் மிக மோசமானது, உள்நோக்கமுடையது. தமிழின் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழலில் காத்திரமான பங்களிப்பு செய்துள்ள அவரை, ஒரு அநாமதேயக் கடிதம் மூலம் அவதூறு செய்யவும், சிறுமைப்படுத்தவும் ஜெயமோகன் மேற்கொண்டுள்ள இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கரிசல் இலக்கியத்தில் வேர்பதித்து எழுத்தைத் தொடங்கினாலும், எல்லைகள் கடந்த சமதர்ம சமுதாயம் நோக்கி கிளை பரப்பியவர் பா. செயப்பிரகாசம். ஏறத்தாழ 135 சிறுகதைகள், பள்ளிக்கூடம், மணல் என்னும் இரு நாவல்கள், மூன்று குறு நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், பதினான்கு கட்டுரை நூல்கள், இலக்கிய, சமுதாய அரங்குகளில் உரைகள் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறவர். சமீபத்திய அவருடைய மணல் நாவல் வரை அவருடைய எந்த ஒரு எழுத்தும், உரையும் செயல்பாடுகளும் சாதிய உணர்வைத் தூண்டியதாக சின்னனஞ்சிறு கறுப்புப் புள்ளி அடையாளமும் கொண்டதில்லை; ஆனால் சாதிக்கொடுமைகளைச் சாடிய அவருடைய எழுத்துகள் கணக்கற்றவை. அவருடைய பள்ளிக்கூடம், மணல் ஆகிய இருநாவல்களுக்கும் சாதியத்தை எதிர்த்த அடிநாதம்தான் பேசுபொருள். பொருளியல், வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும் சிறுமைகள் பேசும் அவருடைய கதைகளின் ஆற்றலை எந்த ஒரு தேர்ந்த வாசகனும் உணர்ந்து கொள்ளமுடியும். அவர் தனது எழுத்துகளை என்றும் வணிகமாக்கியதில்லை.
1965- இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் மாணவப் போராளியாய் முன்னின்று, தமிழகம் முழுமையும் போராட்டத்தை எடுத்துச் சென்றதால், இந்திய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர். தமிழ்த் தேசியம், ஈழம், மார்கசீயம், பெரியாரியம், அம்பேத்காரியம் குறித்த எழுத்துகளில் சமரசம் இல்லாப் போராளி. இலக்கியம், களப்போராட்டம் எனத் தொடர்ந்து பல தளங்களிலும் இயங்கி வருபவர். இப்படிப்பட்ட தமிழ் ஆளுமை மீது ஜெயமோகன் கோபப்படுவதும், பழி தூற்றுவதும் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் அளிக்கவில்லை. தொடர்ந்த தனது பேச்சுகளின் மூலமாக, எழுத்துகளின் மூலமாக சர்ச்சைகளை உருவாக்கி, தமிழ் அறிவுச்சூழலில் தான் ஒரு பேசுபொருளாக இருக்கவேண்டும் என்ற முனைப்பில் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு வருகிறவர் ஜெயமோகன்.
தமிழ் அறிவுச்சூழலுக்கு மிகவும் அபாயகரமானது இந்தத் தொற்று நோய், இந்தப் போக்கு என்னும் ஒட்டுவாரொட்டி நோய் தமிழ் இலக்கிய, அறிவுச் சூழலில் கேடு பயப்பதும் கூட. ஜெயமோகனின் சமதர்மச் சிந்தனை எதிர்க்குரல், மார்க்சிய எதிர்ப்பு என்பது நாம் அறிந்த ஒன்று. அதற்கான எதிர்வினையைப் பல்வேறு தளங்களில் மிக அமைதியாக ஆற்றி வருகிறோம். எந்த ஆதாரங்களுமில்லாது, ஒரு அநாமதேயம் எழுதியதாக தனிநபர் மீதான வன்மம், அவதூறு என்பவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனம் செய்யப்படவேண்டிய ஒன்று. அது சமூக அக்கறையுள்ள கலை, இலக்கிய, அறிவுச் சூழல், இடதுசாரிச் சிந்தனைகள், இயக்கங்கள், எழுத்துகள், செயற்பாடுகள் அனைத்தின் மீதான அவதூறு என்பதால் ஜெயமோகனுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.
கண்டன அறிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்திருக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் :
எஸ்.வி. ராஜதுரை, எழுத்தாளர்
பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்
தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
இரவிக்குமார்,எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்,
ச. தமிழ்ச்செல்வன், கௌரவத் தலைவர், த.மு.எ.க.ச.
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச
சு.ராமச்சந்திரன், மாநிலப் பொருளாளர், த.மு.எ.க.ச.
சி.சொக்கலிங்கம், மாநிலத் தலைவர், க.இ.பெருமன்றம்,
இரா. காமராசு, பொதுச்செயலாளர், . க.இ. பெருமன்றம்
ப.பா.ரமணி, மாநிலப் பொருளாளர், க.இ. பெருமன்றம்
எல்லை சிவகுமார், க.இ.பெருமன்றம், புதுச்சேரி,
பேராசிரியர் வீ.அரசு
மீ. தா. பாண்டியன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
பொதியவெற்பன், எழுத்தாளர்,
கண.குறிஞ்சி, சமூகச் செயற்பாட்டாளர்,
செ.சண்முகசுந்தரம், தஞ்சை இலக்கியவட்டம்
பொ.வேல்சாமி, ஆய்வாளர், எழுத்தாளர்
பேராசிரியர் சரஸ்வதி
பேராசிசிரியர் கல்விமணி, சமூகச்செயற்பாட்டாளர்
பேராசிரியர் சிவகுமார்
பேராசிரியர் கோச்சடை
பேராசிரியர் க. பஞ்சாங்கம்
பேராசிரியர் பிரேம்
பேராசிரியர் பா. மதிவாணன்
பேராசிரியர் அரச முருகுபாண்டியன்
பேராசிரியர் சு.மாதவன்
பேராசிரியர் பி. பாலசுப்பிரமணியம்
யமுனா ராஜேந்திரன், விமர்சகர், எழுத்தாளர்
கண்ணன், காலச்சுவடு பதிப்பகம்
சைலஜா, வம்சி பதிப்பகம், எழுத்தாளர்
மு.வேடியப்பன்,டிஸ்கவரி புக் பேலஸ்,
பிரளயன், நாடகவியலாளர்
பேரா.பார்த்திப ராஜா, நாடகவியலாளர்
பெருமாள் முருகன், எழுத்தாளர்
நா. விச்வநாதன், எழுத்தாளர்
ஆயிஷா நடராஜன், எழுத்தாளர்
பசு. கவுதமன், எழுத்தாளர்
அமரந்தா, எழுத்தாளர்
சுகுமாரன், ஆசிரியர், காலச்சுவடு
களந்தை பீர்முகமது, இணை ஆசிரியர், காலச்சுவடு,
வி.முத்தையா, ஆசிரியர், காக்கைச் சிறகினிலே,
க.சந்திரசேகரன், பொறுப்பசிரியர், காக்கைச் சிறகினிலே,
இரா.எட்வின், எழுத்தாளர், காக்கைச் சிறகினிலே,
கவிஞர் அறிவுமதி
மயிலை பாலு, ஊடகவியலாளர்
பி.என்.எஸ். பாண்டியன், ஊடகவியலாளர்
மகேஷ், ஊடகவியலாளர்
மு.பாலசுப்ரமணியம், துணைத்தலைவர்,
புதுவைத் தமிழ்ச் சங்கம்.
அழகியபெரியவன், எழுத்தாளர்
அன்பாதவன், எழுத்தாளர்
எஸ்.வி.வேணுகோபால், சமூகச் செயற்பாட்டாளர்,
பி.எஸ். அஜிதா, வழக்குரைஞர்
வாசுகி பெரியார், சமூகச் செயற்பாட்டாளர்,
கவிஞர் மாலதிமைத்ரி
கவிஞர் சுகிர்தராணி,
கவின்மலர், எழுத்தாளர்
திருமிகு. மணிமொழி, எழுத்தாளர், வழக்குரைஞர்
ம. ஆ. சிநேகா, வழக்குரைஞர், சமூகச் செயற்பாட்டாளர்
நவீனா, எழுத்தாளர்
ஜமாலன், எழுத்தாளர்
புஷ்பராணி, எழுத்தாளர்
இரா. முருகவேள், எழுத்தாளர்,
லஷ்மி சரவணக்குமார், எழுத்தாளர்
அப்பணசாமி, எழுத்தாளர்
இரா. மோகன்ராஜன், எழுத்தாளர்
பாட்டாளி, எழுத்தாளர்
சுதீர் செந்தில், ஆசிரியர் உயிர் எழுத்து
முகுந்தன் கந்தையா, எழுத்தாளர், பாரீஸ்,பிரான்ஸ்,
சண். தவராஜா, எழுத்தாளர், சுவிட்சர்லாந்து,
குணா கவியழகன், எழுத்தாளர்,நெதர்லேந்து,
ரூபன் சிவராஜா, எழுத்தாளர், நோர்வே
கலா மோகன், எழுத்தாளர், பாரீஸ்,பிரான்ஸ்,
கார்வண்ணன், எழுத்தாளர், பாரீஸ், பிரான்ஸ்,
ச. மிக்கேல்தாஸ்,
தென்மோடிக் கூத்துக் கலைஞர்,கனடா,
ச.ஜெயராஜா, தென்மோடிக் கூத்துக் கலைஞர், நோர்வே,
கவிஞர்இரா.தெ. முத்து, எழுத்தாளர்
நாறும்பூநாதன், எழுத்தாளர்
மணிமாறன், எழுத்தாளர்
செங்கதிர், ஆசிரியர், மானுடம் வெல்லும்
மு.பிரகாஷ், ஆசிரியர், உழைப்பவர் உலகம்,
நீலகண்டன், கருப்புப் பிரதிகள்
பாரதிநாதன், எழுத்தாளர்
புலியூர் முருகேசன், எழுத்தாளர்
தளவாய் சுந்தரம், ஊடகவியலாளர்
சுகுணா திவாகர், ஊடகவியலாளர்
மரு. ஆமினா இன்குலாப், இன்குலாப் அறக்கட்டளை
எஸ். கே. கங்கா, எழுத்தாளர்
கடங்கநேரியான், கவிஞர்
சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர்
எச். பீர்முகம்மது, எழுத்தாளர்
வி. உ. இளவேனில், கவிஞர்
ஏர் மகராசன், எழுத்தாளர்
கருப்பு கருணா, எழுத்தாளர்,
கருப்பு அன்பரசன், எழுத்தாளர்,
சுந்தர், பதிப்பாளர்
லஷ்மி சிவக்குமார், எழுத்தாளர்
அண்டனூர் சுரா, எழுத்தாளர்
மு.சிவகுருநாதன், கல்வியாளர்,
அகிலா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்
களப்பிரன், கவிஞர்
துவாரகா சாமிநாதன், கவிஞர்
முஜிபுர் ரஹ்மான், எழுத்தாளர்
துரை குணா, எழுத்தாளர்
குமரன்தாஸ், எழுத்தாளர்
புதியமாதவி சங்கரன், எழுத்தாளர்
கதிர்நம்பி, தொ.ப வாசகர் வட்டம்
வே.சங்கர்ராம் , நாடகவியலாளர்.
கவிஞர் நந்தலாலா.
திருப்பூர் குணா, பொன்னுலகம் பதிப்பகம்
உமா மோகன், எழுத்தாளர்.
செ.சண்முகசுந்தரம்
வழியாக.
பி.ராஜீவ்