விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020

அஞ்சலி, குமரகுருபரன்

இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம்- குமரகுருபரன் நினைவு இலக்கியவிருது கவிஞர் வேணு வேட்ராயனுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது இளங்கவிஞர்களுக்குரியது.

கவிஞர் வேணு வேட்ராயன் தொழில்முறையாக மருத்துவர். தத்துவம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் ஈடுபாடு கொண்டவர்கள். மானசீகமாக தேவதேவனுக்கு அணுக்கமானவர். தேவதேவனின் செல்வாக்கு கொண்ட கவிதைகள் அவருடையவை

விருட்சம் வெளியீடாக அவருடைய அலகில் அலகு என்னும் கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது.

பலவகையிலும் இன்றைய நவீனத்தமிழ்க் கவிதையின் பொதுப்போக்கில் இருந்து முற்றிலும் வேறுபட்டு விலகிச்செல்லும் பாதை கொண்டவை வேணு வேட்ராயனின் கவிதைகள். இவ்விருது அந்த வேறுபட்ட பயணத்தை கவனப்படுத்தும் பொருட்டே.

இன்று எழுதப்படும் தமிழ்நவீனக் கவிதை பலரிலிருந்து  ஒலித்தாலும் அடிப்படையில் ஒற்றைக்குரல் கொண்டது. உலகியலைக் கொண்டாடுவது, அடிப்படை விழைவுகளைச் சார்ந்திருப்பது, கலகம் மீறல் ஆகியவற்றை கற்பனை செய்து கொள்வது, தனிமனித மனஅலைவுகளை மட்டுமே வெளிப்படுத்துவது , தத்துவ நிராகரிப்பு ஆகியவை அதன் பொதுக்குணங்கள்.

அந்த பொதுக்குணங்கள் அனைத்திலிருந்தும் விலகிச்செல்லும் வேணு வேட்ராயனின் கவிதைகள் முற்றிலும் உலகியல் மறுப்பு கொண்டவை, அடிப்படைவிழைவுகளுக்கு அப்பால் செல்ல முயல்பவை, பிரபஞ்சத்துடனான ஒத்திசைவை கற்பனைசெய்பவை, தனிமனிதனை கடந்த தத்துவத் தேடல்களை கொண்டவை. அதனாலேயே இங்கே பொதுவாக கவிதைகளை வாசித்து- பேசும் வட்டத்திற்கு வெளியே நிலைகொள்பவை.

தமிழ்க்கவிதைச் சூழலில் சென்றதலைமுறை வரை ஒற்றைக்குரலே ஒலித்ததில்லை. அபி ,ந.ஜயபாஸ்கரன் போன்ற அகவயமான தனித்தலையும் கவிஞர்களுக்கும் இடமிருந்தது. வேணு வேட்ராயன் அந்த கொடிவழியைச் சேர்ந்த கவிஞர். அலகில் அலகு பல அழகிய வரிகள் கொண்ட குறிப்பிடத்தக்க தொகுதி.

என் நண்பரும் இளவலுமாக இருந்த குமரகுருபரன் நினைவாக வழங்கப்படும் இவ்விருது இதற்கு முன்பு சபரிநாதன், கண்டராதித்தன்,ச.துரை ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குமரகுருபரன் மறைந்து 4 ஆண்டுகளாகின்றன. தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் அணுக்கமான நண்பராகவும் அந்தரங்கமான பித்துகள் கொண்ட கவிஞராகவும் திகழ்ந்தவர் அவருடைய ஞானம்நுரைக்கும் போத்தல் ஆகிய தொகுதிகளின் கவிதைகள் நாவில் திகழ்பவை.

குமரகுருபரன் பிறந்தநாளான ஜூன்  10 அன்று இவ்விழா கொண்டாடப்படுவது வழக்கம். இம்முறை கொரோனா நெருக்கடிகள் காரணமாக விழா நடைபெறாது. விருது நேரில் கவிஞருக்கு வழங்கப்படும் பின்னொருமுறை இவ்விழா நடத்தப்படும்

குமரகுருபரன் விருது – முழுப்பதிவுகள்

=======================================================

அலகில் அலகு மின்நூல் வாங்க

அலகில் அலகு நூல் வாங்க

வேணு வேட்ராயன் கட்டுரைகள் அரூ

முந்தைய கட்டுரைபா.செயப்பிரகாசம் பற்றி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–86