பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 2
அர்ஜுனன் சிற்றோடைக்கரையில் நீர்மருத மரத்தின் வேரில் உடல் சாய்த்து கால் நீட்டி படுத்திருந்தான். அவன் கால்களைத் தொட்டு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதில் மிதந்து வந்த இலைகளும் சற்று ஆர்வம் கொண்ட மீன்களும் அவன் விரல்களைத் தொட்டு அவ்வப்போது விழிப்புணர்த்திக்கொண்டிருந்தன. அவன் தன்னை இழந்து அமைந்திருந்த வெறுமைக்குள் ஒரு நோக்குணர்வை அடைந்தான். கை இயல்பாக நீண்டு காண்டீபத்தை தொட்டது.
அவன் தன் உடலெங்கும் நிறைந்திருந்த விழிகளால் அந்த எழுவரையும் பார்த்துவிட்டான். ஏழு நாகர்குலத்து இளைஞர்கள் கைகளில் விற்களும் அவற்றில் தொடுத்து நாணிறுக்கி நீட்டி குறிபார்த்த நச்சுஅம்புகளுமாக நுண்ணிதின் அணுகி வந்துகொண்டிருந்தனர். அவர்களின் விழிகள் அவனை நோக்கி கூர்ந்திருந்தன. அவர்களுக்குரிய காணா விழி ஒன்றால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். அனைவரும் ஒரே அசைவை அடைந்தனர். ஒரே கணத்தில் சிலிர்த்துக்கொண்டனர். ஒரே கணத்தில் சொடுக்கினர். ஒரு பாம்பின் உடல் வளையம்போல் அவர்கள் இருந்தனர்.
அர்ஜுனன் தன் உடலைத் திரட்டி ஒரு கணத்தில் சுழன்றெழுந்து அமர்ந்தான். அவர்கள் அனைவரையும் நேருக்கு நேர் பார்த்தான். அதை எதிர்பாராத அவர்கள் திகைத்ததுபோல் நின்றனர். அவன் கை காண்டீபத்தை தொட்டுக்கொண்டிருந்தது. அவர்களில் தலைமை என நின்ற இளைஞனின் விழிகளை மிக அருகில் பார்த்து அர்ஜுனன் புன்னகைத்தான். அதைக் கண்டு அஞ்சி ஒருகணம் அவன் பின்னடைந்தான். அவன் உடலில் அப்பின்னடைவு நிகழவில்லை. உள்ளத்தில் நிகழ்ந்த அப்பின்னடைவு விழிகளில் தெரிந்தது.
பின்னர் அவன் தன்னை முழுக்க திரட்டிக்கொண்டு மெல்லிய உறுமலோசை ஒன்றை எழுப்பியபடி அவனை நோக்கி அம்பெய்தான். அதே கணத்தில் மற்ற அம்புகளும் எழுந்தன. அர்ஜுனன் தன்னுடலை பாம்பென ஏழு நெளிவுகளுக்குள்ளாக்கி அவனை நோக்கி வந்த ஏழு அம்புகளையும் தவிர்த்து காண்டீபத்தை எடுக்க முயன்றான். ஆனால் அவன் கைக்கு அப்பால் அது நீர்மருத மரத்தின் தடித்த வேரென மாறியதுபோல் மண்ணுடன் படிந்து கிடந்தது. முழு மரத்தின் எடையையும் தான் கொண்டுவிட்டதுபோல. பேருருக் கொண்ட புவியால் மறுபக்கம் பற்றி இழுக்கப்பட்டதுபோல.
அவன் காண்டீபத்தை பற்றித் தூக்க முழு விசையாலும் முயன்றான், அதை அவனால் அசைக்கவே முடியவில்லை. கற்பாறைபோல், அங்கே நிழலென வரையப்பட்டதுபோல் அது கிடந்தது. அவர்கள் மீண்டும் நாணேற்றி மீண்டும் அம்புகளை தொடுத்த பின்னரும் அவனால் வில்லை அசைக்க முடியவில்லை. அவனால் வில்லை எடுக்க முடியவில்லை என்பதை தலைவன் கண்டுகொண்டான். அம்பை செலுத்த வேண்டாம் என்று அவன் கைகாட்ட மற்றவர்கள் வில் தாழ்த்தினர்.
அவர்கள் அவனை பார்த்தபடி நின்றனர். அர்ஜுனன் வில்லை எடுப்பதற்கு மீண்டும் முழு ஆற்றலோடு முயன்றான். அவன் இடக்கையும் இடக்காலும் உயிரற்றவைபோல் தளர்ந்திருந்தன. மேலும் உந்தியபோது அவன் சரிந்து காண்டீபத்தின் மேலேயே விழுந்தான். தலைவன் கைகாட்ட நாகர்கள் எழுவரும் ஒரே கணத்தில் பாய்ந்து அவன் மேல் விழுந்தனர். பதினான்கு கைகள் அவனை பாம்புகள்போல் பற்றிக்கொண்டன. அவன் உடலின் நுண்ணிய பகுதிகள் அனைத்தையும் ஒரே கணத்தில் அழுத்தி அவனை செயலிழக்கச் செய்தனர்.
அவனை புரட்டிப்போட்டு கைகளை சேர்த்து பின்னால் காட்டுக்கொடிகளால் இறுகக் கட்டினர். கால்களைக் கட்டி மீண்டும் புரட்டி மலர்த்திப் போட்டனர். அவர்களின் தலைவன் அர்ஜுனனின் முகத்தை கூர்ந்து பார்த்தான். அவர்களின் மயிரற்ற முகங்கள் குளிராலும் வெயிலாலும் வெந்து சுருங்கி விழிகள் உள்ளடங்கி இருந்தன. தலைவன் வெறியுடன் தன் வெறுங்கையால் அர்ஜுனனின் முகத்திலிருந்த மீசையின் மயிர்களை பிடுங்கி பறிக்கத்தொடங்கினான். அர்ஜுனன் திமிறி புரண்டபோது அவன் முகத்தில் ஓங்கி அறைந்து காறி துப்பினான். தலைமயிரைப்பற்றி மண்ணில் பலமுறை அறைந்தான். பிறகு எழுந்து நின்று அவனை காலால் உதைத்தான்.
அர்ஜுனன் அசைவழிந்தபோது தலைவனும் அவனைத் தொடர்ந்து வந்த அறுவரும் சேர்ந்து அர்ஜுனனின் தாடியையும் மீசையையும் முழுக்கவே கைகளால் பிடுங்கி எடுத்தனர். முகமெங்கும் குருதி வழிய, உடலில் மெல்லிய துடிப்புடன் அவன் அங்கே கிடந்தான். தலைவன் அவனை காலால் ஓங்கி ஓங்கி உதைத்தான். பின்னர் அவன் நீண்ட தலைமயிரை தன் கையில் பற்றி சுற்றித் தூக்கி இழுத்துக்கொண்டு நடந்தான். அவர்கள் கூச்சலிட்டபடி அவனை தொடர்ந்தனர். அவன் உடல்மேல் எச்சில் துப்பினர்.
அர்ஜுனனின் உடல் காட்டின் கற்கள் மீதும், முட்கள் மீதும், வேர் முடிச்சுகள் மீதும் முட்டி புரண்டு எழுந்து அதிர்ந்து அவர்களுடன் சென்றது. அவர்களில் ஒருவன் இடக்கையால் காண்டீபத்தை எடுத்துக்கொண்டு அவன் பின்னால் வந்தான். அதைக் கொண்டு அவன் தழைகளையும் புற்களையும் அறைந்தான். அர்ஜுனன் அவன் கையிலிருந்த காண்டீபத்தை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் உள்ளம் எந்தச் சொல்லுமின்றி மலைத்ததுபோல் இருந்தது. நெடுநேரத்திற்குப் பின்னரே என்ன என்ன என்று அவன் அகம் அரற்றத் தொடங்கியது. என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? இதுதான் இறுதியா? இவ்வண்ணமா?
அவர்கள் அவனை காட்டினூடாக இழுத்துக்கொண்டு நாகர்களின் சிறுகுடிக்கு சென்றனர். அவர்களின் ஓசை கேட்டு அங்கிருந்து ஓடி வந்த நாகர் குலத்து முதியவர்கள் அவனைப் பார்த்ததுமே சூழ்ந்துகொண்டு கால்களால் மாறி மாறி மிதிக்கத் தொடங்கினார்கள். அவனை நசுக்கிவிட விழைபவர்கள்போல் வெறிகொண்டு கூச்சலிட்டபடி மிதித்தனர். அவன்மேல் பெண்கள் காறி உமிழ்ந்தனர். சிறுவர்கள் கூட எட்டி மிதித்தனர்.
பின்னர் அவன் இழுத்துக் கொண்டுசெல்லப்பட்டு நாகர்களின் சிற்றூரின் முற்றத்தில் போடப்பட்டான். அவன் ஆடை களையப்பட்டது. பகல் முழுக்க வெறும் உடலாக அவன் அங்கு கிடந்தான். நாகர்குலக் குழந்தைகள் அவன் அருகே வந்து விளையாடின. அவன் செவியிலும் கண்களிலும் மண்ணை அள்ளி போட்டன. அவன் உடலில் முட்களால் குத்தின. அவன் மேல் ஏறி அமர்ந்து கூச்சலிட்டன. அப்பாலிருந்த ஓடையிலிருந்து மண்ணையும் சேற்றையும் அள்ளி வந்து அவன் மேல் வீசின. அவர்கள் இழிவுச்சொற்களை கூவியபடியே இருந்தனர்.
நான்கு நாகர்குலக் குழந்தைகள் அவன் காலை ஒரு கயிற்றால் கட்டி அங்கிருந்த கழுதை ஒன்றின் வாலில் கட்டினர். கழுதையை அவர்கள் முள்ளால் குத்தி துரத்திவிட அவன் உடலை இழுத்தபடி அது அச்சிற்றூரின் முற்றத்தில் பதறிக் கனைத்து சுற்றி வந்தது. அவன் உடலில் தோல் உரிந்து குருதியில் மண்ணும் புழுதியும் ஒட்டிக்கொண்டிருந்தன. அவர்களில் ஒரு குழந்தை உள்ளே சென்று சாம்பலை அள்ளி அதன்மேல் போட்டது.
குழந்தைகளை அதட்டி நீக்கி ஒரு பெண் அவனை தலைமயிர் பற்றி இழுத்து வந்து திரும்ப முற்றத்தில் போட்டாள். அவன் வாயைத் திறந்து உள்ளே புளித்த காடி ஒன்றை ஊற்றினாள். அவர்கள் உண்ட எச்சில் உணவுகள் அனைத்தையும் கலந்த அந்தக் காடியை அவன் விடாயுடனும் பசியுடனும் அருந்தினான். கால்கள் தள்ளாட அவனை நோக்கி வந்த களிமகன் ஒருவன் அவன் முகத்திலும் வாயிலும் சிறுநீர் கழித்தான். அர்ஜுனன் அருவருப்புடன் புரண்டபோது அவன் வசைபாடியபடி அவனை இழுத்துச்சென்று அவ்வூரார் அனைவரும் மலம்கழிக்கும் குழி ஒன்றுக்குள் தூக்கி போட்டான். புளித்து நாறிய மலத்தில் அவன் புரண்டு கிடந்தான். மேலே நின்று களிமகன் இழிசொல் கூறி கூச்சலிட்டான்.
அந்தி இருண்டு கொண்டிருந்தது. இரவு சரிந்த பின்னர் அவர்களின் முற்றத்தில் ஏழு எண்ணைப் பந்தங்கள் நடப்பட்டு நடுவே தோல்பீடங்கள் போடப்பட்டன. அவற்றில் குடிமூத்தார் வந்து அமர்ந்தனர். தோலாடை அணிந்து மலை எருதின் வாலால் ஆன தலையணி சூடி கழுத்தில் நாகபடம் வைத்தது போன்ற கல்மணிமாலைகளுடன் அவர்கள் மன்று தலைக்கொண்டனர். சூழவும் அவர்களின் மைந்தர்களும் பெயர்மைந்தர்களும் அமர்ந்தனர். பெண்டிர் வலப்பக்கம் நிரை வகுத்திருந்தனர்.
அவர்கள் அர்ஜுனனை மேலே எடுத்து அவன் மேல் நீரை அள்ளி அறைந்து வீசி கழுவிய பின் இழுத்துவந்து முற்றத்தின் முன் போட்டனர். ஊர்த்தலைவர் எழுந்து வந்து அவன் முகத்தில் உமிழ்ந்த பின் காலால் பல முறை உதைத்தார். முடிபற்றி தூக்கி நிறுத்தினார். இருவர் அவன் கால்களை அழுந்த பிடித்துக்கொண்டனர். ஊர்த்தலைவர் “கூறுக, உன் பெயரென்ன?” என்றார். அர்ஜுனன் மறுமொழி எதுவும் உரைக்கவில்லை. “கூறு, உன் பெயரென்ன?” என்று அவர் மீண்டும் உரக்க கேட்டார். பலமுறை கேட்ட பின்னும் அவன் மறுமொழி சொல்லவில்லை.
அவர் அருகிருந்த ஒரு இளைஞனிடம் “அவர்கள் மொழியில் கூறு” என்றார். அவன் மழுங்கிய செம்மொழியில் “உன் பெயரென்ன?” என்றான். பின்னர் காமரூபத்தின் மொழியில் “உன் பெயர் என்ன? நீ எக்குடி?” என்று கேட்டான். “பெயரும் குலமும் கூறாதொழிந்தால் இங்கு நீ இன்னும் இடர்படுவாய். உயிருடன் எஞ்ச இயலாது” என்றான். அர்ஜுனன் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அவர்களில் ஒருவன் சீற்றம்கொண்டு தன் கழுத்தை அறுப்பதை எதிர்பார்த்திருந்தான்.
குடித்தலைவர் மீண்டும் எழுந்து வந்து அவனை மிதித்தார். அவன் மேல் உமிழ்ந்து “கூறுக, உன் பெயரென்ன?” என்று மீண்டும் மீண்டும் கேட்டார். அவன் விழிகளை சந்தித்த பின் அவன் கூறப்போவதில்லை என்பதை உணர்ந்து சினத்துடன் நடுங்கியபடி சில கணங்கள் நின்றார். பின்னர் கைகட்டியபடி சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார். இருவர் கைதூக்க பெண்கள் குரவையிடத் தொடங்கினர். சிறுவர்களும் அக்குரவையில் கலந்துகொண்டனர். நூற்றுக்கணக்கான நரிகள் அவனைச் சுற்றி எழுந்து ஓசையிட்டது போலிருந்தது.
ஒரு நாக வீரன் தன் இடையிலிருந்த தோலால் ஆன வாளுறையை எடுத்து உள்ளிருந்து கூரிய கத்தியை உருவினான். அதை தன் கையிலேயே ஒருமுறை தீட்டிக்கொண்டு அர்ஜுனனை அணுகினான். அவன் தலைமுடிபற்றி தூக்கி நிறுத்தினான். இரு இளைஞர்கள் அருகிலிருந்த ஓடையிலிருந்து மரக்குடைவுக் கலத்தில் நீரள்ளி வந்தனர். அதை அவன் தலையில் ஊற்றி மீண்டும் நீராட்டினர். அவன் தலை மயிரை பற்றி இழுத்துச் சென்று அங்கே வடகிழக்கு திசையில் பதிக்கப்பட்டிருந்த ஏழு மாநாகங்களுக்கு முன் அவனை மண்டியிட வைத்தனர். மாநாகங்களைச் சுற்றி பந்தங்கள் கொளுத்தப்பட்டன.
குரவை ஒலிகள் வலுத்தன. ஒருவன் அவன் பின்னால் நின்று அர்ஜுனனின் தலைமயிரைப் பிடித்து தலையை மேலே தூக்கிக்கொண்டான். அவன் கழுத்துக்குழாய் புடைத்து மேலெழுந்தது. பந்தங்களின் ஒளியில் அர்ஜுனனின் உடல் ஈரத்தால் மின்னிக்கொண்டிருந்தது. நாக வீரன் அந்தக் கத்தியை அவன் கழுத்தில் வைத்து நாகர்களுக்கான வாழ்த்துச்சொற்களை முணுமுணுத்தான். கத்தியின் ஒளி அவன் முகத்தில் பட்டது. இந்தக் கத்திதானா? பல்லாயிரம் அம்புகளில், வாள்களில், வேல்முனைகளில் இருந்து இது எவ்வகையில் வேறுபட்டது? இல்லை, இது அல்ல.
அவனை பார்த்துக்கொண்டிருந்த நாகர்குடித் தலைவர் ஏதோ நினைவுகூர்ந்தவர்போல கைகாட்டி நிறுத்தி அருகணைந்து அவனை விலகச்சொல்லி அர்ஜுனனைப் பிடித்து அவன் கட்டுகளை அவிழ்த்து அவனைத் தூக்கி “நீ நாகர்களில் குருதியுறவு உடையவனா?” என்றார். அவன் மறுமொழி சொல்லவில்லை. “நான் ஒரு குரலை கேட்டேன். மிக அண்மையில் என் செவியருகே… நாகன் ஒருவன் சொன்னான், நீ அவன் தந்தை என்று… உனக்கு நாகமைந்தன் இருந்தானா? உயிர்நீத்து முன்னோர்வடிவு கொண்டானா?”
அர்ஜுனன் நெஞ்சு விம்ம முனகலோசையை எழுப்பினான். அவன் தலை குனிய விழிகளில் இருந்து நீர் வழிந்தது. “சொல், உனக்கு நாகர்மைந்தன் இருந்தானா? அவன் இங்குள்ளான். உன் பொருட்டு துயர்கொள்கிறான்” என்றார் குடித்தலைவர். “என்னை கொல்லுங்கள்… என்னை கொல்லுங்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “அவன் பெயர் என்ன? சொல், அவனுக்காக நாங்கள் இங்கே படையலிடவேண்டும்” என்றார் குடித்தலைவர்.
“அரவான், அவன் பெயர் அரவான்” என்று அர்ஜுனன் சொன்னான். பின்னர் உரத்த ஒலியுடன் கதறி அழத்தொடங்கினான். “அவனிடமிருந்து எனக்கு விடுதலை இல்லை. என் மைந்தரிடமிருந்து நான் விடுதலை பெறப்போவதே இல்லை. என்னை கொல்லுங்கள்… அளிகூர்ந்து என்னை கொன்றுவிடுங்கள்” என்று கூவினான். அவர்கள் திகைத்துப்போய் நோக்கி நின்றனர்.
குடித்தலைவர்கள் அப்பால் சென்று கூடிநின்று அறியாத மொழியில் விரைந்து பேசிக்கொண்டனர். பின்னர் குடித்தலைவர் ஏதோ ஆணையிட்டுவிட்டு நாகபடம் கொண்ட குடிக்கோலை தூக்கிக்கொண்டு தன் குடிலுக்குள் சென்றுவிட்டார். பிறர் அமைதியாக அவனைப் பார்த்து அமர்ந்திருந்தனர். அர்ஜுனன் “என் மைந்தன் குரலை நான் கேட்கவில்லை… மூத்தவரே, என் மைந்தன் குரலை நான் கேட்கச்செய்யுங்கள்” என்று அலறினான்.
நாகர் குலத்து இளைஞர்கள் அவனை தூக்கி நிறுத்தி உந்தி கொண்டுசென்றனர். இரவு முழுக்க காடுகளினூடாக அவனை நடக்க வைத்து கூட்டிச்சென்றனர். அவர்களின் நிலத்தின் எல்லையாக அமைந்த ஓடை ஒன்றை அடைந்து அதில் அவனை இறக்கி மறுபுறம் கொண்டு சென்றனர். அவன் கட்டுகளை அவிழ்த்து அவனை அங்கே விட்டுவிட்டு அவர்களில் ஒருவன் “நீ உன் மைந்தனால் காக்கப்பட்டாய்” என்றான். இன்னொருவன் “மூதாதை என மைந்தனின் காவல் உனக்குள்ளது, நீ நல்லூழ் கொண்டவன். செல்க!” என்றான். அவர்கள் அவனுக்கு ஒரு தோலாடையை வீசினர்.
அவர்கள் ஓடையில் இறங்கி அப்பால் சென்று மறைந்தனர். அர்ஜுனன் அவர்கள் விட்டுச் சென்ற அதே இடத்திலேயே அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்தபோது தன் இடக்காலும் இடக்கையும் முற்றிலும் செயலற்றிருப்பதை கண்டான். வலக்காலும் வலக்கையும்கூட ஆற்றல் இழந்து நனைந்து துணிச்சுருள்கள்போல் இருந்தன. ஆடையை இடையில் சுற்றிக்கொண்டு வலக்காலால் உந்தி வலக்கையால் மரக்கிளைகளைப் பற்றியபடி தளர்ந்து அவன் நடந்தான். வழியில் ஒரு நீரோடையில் விழுந்து புரண்டு மண்ணை அள்ளி உடலெங்கும் பூசி நீராடினான்.
பசி உடலெங்கும் பரவத்தொடங்கியது. ஆனால் அங்கு கிழங்குகள் எதுவும் கிடைப்பதாகத் தெரியவில்லை. மூங்கில் காடுகளில் கனிகளும் காய்களும் இல்லை. பறவைகள் செறிந்திருந்தன. ஆனால் அவற்றை ஒரு அம்பு செய்து எய்து வீழ்த்த அவனால் முடியாதென்று தோன்றியது. முயல்வோம் என்று ஒரு நாணலைப் பிடுங்கி அம்பென எய்தான். அவன் கையில் இருந்து நடுங்கியது அவன் எண்ணியிராத திசை நோக்கி சென்றது.
அவன் ஒரு கணத்தில் உளம் உடைந்து விம்மி அழத்தொடங்கினான். அப்படியே சரிந்து நிலத்தில் அமர்ந்து முழங்கால் மேல் தலைவைத்து அழுதான். நெடுநேரம் அழுது மீண்டபோது உளம் சற்று தெளிந்திருந்தது. கையூன்றி எழுந்து மூங்கில்களையும் மரங்களையும் பற்றியபடி மீண்டும் நடந்தான். தொலைவில் புகை மணத்தை உணர்ந்தான். அங்கு நாகர்கள் இருப்பார்களோ என்று எண்ணினான். ஆனால் அதற்கு மேல் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றியது.
அவன் தன் உடலை இழுத்துக்கொண்டு சென்றான். தேர் ஏறிய நாகம் நசுங்கிய பாதியை நசுங்காத பாதியால் உந்திக்கொண்டு செல்வதுபோல. அங்கு சிற்றோடை ஒன்றின் கரையில் பறவைகளை தோலுரித்து மூங்கில் கழியில் குத்தி தீயில் வாட்டிக்கொண்டிருந்த கரிய உடல் கொண்ட ஒருவனை பார்த்தான். அவன் நிறமே அவன் நாகனல்ல, காமரூபத்தவனும் அல்ல என்று காட்டியது.
அர்ஜுனன் உடலைத் திரட்டி முழு மூச்சு செலுத்தி உந்தி அவனை நோக்கி சென்றான். அவ்வோசை கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். கன்னங்கரியவன். கண்கள் வெண் சிப்பிகள்போல் தெரிந்தன. அவனைப் பார்த்ததுமே திடுக்கிட்டவன்போல் எழுந்தான். கைநீட்டி உரக்க “இளைய பாண்டவரே!” என்றான். அர்ஜுனன் திகைப்பில் தன் வலுவிழந்த கால் அதிர்ந்து துள்ள தொய்ந்த இடதுகை பாம்பென நெளிய நின்றான். அவன் அர்ஜுனனின் அருகில் வந்து “முற்றிலும் மாறியிருக்கிறீர்கள். முகமெங்கும் குருதிப்புண். ஆயினும் தங்கள் விழிகளால் தங்களை கண்டுகொண்டேன். தாங்கள் இளைய பாண்டவர்தான்” என்றான்.
“ஆம்” என்றான் அர்ஜுனன். “நான் இதுவரை தங்களை பார்த்ததில்லை. தங்களைப் பற்றிய கதைகளை மட்டுமே கேட்டிருந்தேன். என் பெயர் மலையன். தெற்கே முக்கடல் முனம்பு அருகே ஸ்ரீபதம் என்னும் சிற்றூரை சேர்ந்தவன். பாணர் குலத்தவன்” என்றான். “அரசே, நான் உங்கள் தொல்குடியின் கதைகளை கேட்டு வளர்ந்தவன். அதைப் பாடி இவ்விரிநிலமெங்கும் அலைபவன். நான் உங்களைத் தேடியே இங்கு வந்தேன். உங்களிடம் சொல்வதற்கு எனக்கு ஒரு செய்தி உண்டு.”
அர்ஜுனன் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான். மலையன் உளஎழுச்சியுடன் “நான் விழிகளால் பார்த்தது அது. நான் விழிகளால் பார்த்தமையினாலேயே அதை உங்களிடம் சொல்லும் பொறுப்பு எனக்கு இருக்கிறதென்றும், இந்த மாபெரும் நாடகத்தில் நான் நடிக்க வேண்டிய இடம் அது என்றும், அதன் பொருட்டே புவியில் பிறந்திருக்கிறேன் என்றும் புரிந்துகொண்டேன். நீங்கள் எங்கு சென்றிருப்பீர்கள் என்று எண்ணிப்பார்த்தேன். கிழக்கே அன்றி வேறெங்கும் செல்ல முடியாது என்று தோன்றி நானும் கிழக்கு நோக்கி வந்தேன். இதோ சந்தித்துவிட்டேன்” என்றான்.
“கூறுக!” என்று அர்ஜுனன் சொன்னான். “அரசே, இச்செய்தியை அறிக! சாந்தீபனி குருநிலையின் முதன்மை ஆசிரியரும், விருஷ்ணிகுலத்து இளைய யாதவரும், துவாரகையின் அரசருமான கிருஷ்ணன் விண்புகுந்தார்” என்று அவன் சொன்னான். சற்றுநேரம் அர்ஜுனன் வெறுமையில் அமர்ந்திருந்தான். பின்னர் மூச்சொலியுடன் அசைந்து “எப்போது?” என்று குழறலான குரலில் கேட்டான்.
“இன்றைக்கு சரியாக நாற்பத்திரண்டு நாட்களுக்கு முன்பு” என்று மலையன் சொன்னான். “எனில் நேற்று நாற்பத்தோராவது நாள், அல்லவா?” என்றான் அர்ஜுனன். “ஆம், நேற்று காலை எழுகதிர் நான்காம் சாமத்தில் அவர் மறைந்து மிகச் சரியாக நாற்பத்தொரு நாளாகிறது” என்றான் மலையன். அர்ஜுனன் “அவர் விண் புகுந்த தருணம், அதே பொழுது” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். “அதனால்தானா?” என்று அவன் முனகினான். சுட்டுவிரலால் மண்ணைத் தொட்டு “அவ்வண்ணமே” என்றான்.
“அரசே, அவர் விண்புகுந்தபோது நான் அவருடன் இருந்தேன். அதை தங்களிடம் கூறவே நான் ஊழால் பணிக்கப்பட்டிருக்கிறேன்” என்று மலையன் சொன்னான்.