படுகொலை செய்யப்படுவது என்ன?

யானைப்படுகொலை

யானை படுகொலை பற்றி பலர் எழுதியிருந்தார்கள். பலர் வேடிக்கைக்காகவோ அல்லது வேட்டைக்காகவோ யானைக்கு அன்னாசிப்பழத்தில் பட்டாசு வைத்து அளிக்கப்பட்டது என்றவகையில் குறிப்பிட்டிருந்தனர். பெரும்பாலான இதழாளர்கள் இதை பட்டாசு என்றே எழுதியிருந்தனர். நகர் சார்ந்தவர்களுக்கு காட்டில் என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை என்று தெரியும், ஆகவே இது எதிர்பார்த்ததுதான்

காட்டை விவசாயநிலம் நெருக்கி நெருக்கி உள்ளே தள்ளிக்கொண்டே இருந்தது. வரலாற்று காலம் முதல் தொடங்கிய இந்த அலை எழுபதுகளில் சூழியல்பாதுகாப்பு பற்றிய தன்னுணர்வு உருவானபோது நின்றது. காடு பாதுகாக்கப்படவேண்டியது என்ற எண்ணம் உருவாகியது.

அதுவரை அரசே காட்டை அழிக்கும் உரிமையை குத்தகை விட்டுக்கொண்டிருந்தது. இதை கூப் காண்டிராக்ட் என்பார்கள். நான் கல்லூரி நாட்களில் கூப் காண்டிராக்ட்காரர்களின் கூலியாக நண்பர்களுடன் சென்று காட்டில் தங்கி வேலைபார்த்திருக்கிறேன். காட்டை தீயிட்டும் வெட்டியும் அழிப்போம். மரங்களை வெட்டி நீரில் உருட்டிப்போட்டு ஆற்றில் கொண்டுவந்து சேர்ப்போம். அங்கிருந்து அவற்றை கொண்டுசெல்வார்கள். காட்டைப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக, ஒருவகை கொண்டாட்டமாக அது இருந்தது.தமிழகத்தின் பல பணக்காரர்கள், அரசியல்வாதிகள் கூப் காண்டிராக்ட் எடுத்தவர்களே.

ஆனால் காடு இன்றும் தொடர்ந்து சூறையாடப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமாக வன அழிப்பு நிகழும் மாநிலங்கள் கேரளம் முதலிடம், அடுத்து தமிழ்நாடு. ஏனென்றால் இங்கே மேற்குத்தொடர்ச்சிமலை மழைவளம் மிக்கது, மண் வளமானது. விவசாயம் சுற்றுலா இரண்டுக்கும் உகந்தது. காட்டுக்கு மிக அருகே வரை சாலைகள் போடப்பட்டுள்ளன.  ‘வளர்ச்சி’ என்பது எப்போதுமே காட்டை அழிக்கும் இயல்பு கொண்டதுதான்.

இன்று வெவ்வேறு மதஅமைப்புக்கள், தனியார் சுற்றுலா அமைப்புக்கள் கேரளத்தின் காடுகளை கூறுபோட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அடர்ந்த காட்டுக்குள், மலையுச்சிகளில்கூட தனியார் கேளிக்கைவிடுதிகளும் மதநிறுவனங்களும் இருப்பதை கேரளத்தில் காணலாம்

காட்கில் கமிட்டி,கஸ்தூரிரங்கன் கமிட்டி போன்றவை மிகமிகக் கடுமையாக இதை எச்சரித்துள்ளன. யுனெஸ்கோ அமைப்பு எச்சரிக்கை விடுத்தபடியே உள்ளது. இது சார்ந்து கேரளச் சூழியலாளர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அரசியல்ரீதியான அழுத்தம் அளிக்கிறார்கள். ஆனால் இத்தகைய விஷயங்கள் ஒற்றைப்படையாக, அதிரடியாக, உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்கவேண்டியவை அல்ல.

கேரளத்தைப் பொறுத்தவரை இது சிக்கலான அரசியல் பிரச்சினை. கேரளத்தின் முதற்கட்ட மலைக்குடியேற்ற மக்கள்தான் காடுகளை அழித்து விளைநிலமாக்கி தோட்டத்தொழிலை வளர்த்து விளைச்சலைப் பெருக்கி கேரளத்தை செல்வம் மிக்க மாநிலமாக ஆக்கியவர்கள் .அவர்களால்தான் கேரளத்தில் வறுமை ஒழிந்தது என்றே சொல்லலாம். ரப்பர், காப்பி, குருமிளகு, கிராம்பு, ஏலக்காய்,இஞ்சி ஆகியவைதான் கேரளத்தின் செல்வம். அவற்றின் உற்பத்தியாளர்கள் அவர்கள்.

அவர்கள் முன்னோடிகளுக்கே உரிய தாக்கிவென்றுசெல்லும் இயல்பு கொண்டவர்கள். மிகமிக வலுவாக அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டவர்கள். சென்ற ஐம்பதாண்டுகளில் கேரள அரசியலை தீர்மானித்த முதன்மை கோரிக்கையே ‘குடியேற்றக்காரர்களுக்கு நிலப்பட்டா’ என்பதுதான். கணிசமான மேற்குமலைக்காடுகள் பட்டாநிலங்களாக ஆகிவிட்டன

எழுபதுகளுக்குப்பின் உருவான சூழியல் பிரக்ஞை இவர்களின் காட்டுவிவசாயத்தை அழிவுச்செயல் என்று விளக்க தொடங்கியது. கேரளத்தின் காட்டோர விவசாயமும் மலைப்பகுதிகளில் நிகழும் நகர்மயமாக்கமும் நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை இன்று அந்த மக்களிலேயே படித்த அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் எங்கே நிறுத்துவது, எப்படி நிறுத்துவது?

கேரளத்தில் கணிசமான மலைவிவசாயிகள் இன்று காட்டழிவு பற்றிய தன்னுணர்வு கொண்டவர்கள். காட்டுவிவசாயத்தில் இருந்து மெல்லமெல்ல பின்வாங்கிக்கொண்டே இருப்பவர்கள். ஆனால் அவர்கள் பின்வாங்கிய இடங்களில் அடுத்தகட்ட சமூகப்படிநிலைகளில் நிற்பவர்கள் சென்று அமைகிறார்கள். அவர்களும் அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டவர்கள். முதற்குடியெற்றக்காரர்கள் வலதுசாரிகள், இரண்டாம் கட்ட குடியேற்றக்காரர்கள் இடதுசாரிகள்.இதை எப்படி கையாள்வது?

இதைப்பற்றிய விவாதம் கேரளச்சூழலில் உண்டு. ஆனால் இதுசார்ந்த அக்கறை இருந்த ஒரே அரசியல்வாதி வி.எஸ்.அச்சுதானந்தன் மட்டுமே. அவர் எடுத்த எல்லா நடவடிக்கைகளும் குளவிக்கூட்டில் கைவைப்பவைபோல ஆகி அவரை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தின.இன்றைய முதல்வர் அச்சுதானந்தனுக்கு எதிராக அரசியல்செய்து வந்தவர்- மிகக்கவனமாகவே அவர் காலடி வைக்கமுடியும்.

ஒவ்வொரு ஆண்டும் கேரளத்தில் மலைவெள்ளப்பெருக்கும் மண்ணிடிவும் நடந்து பலர் மடிகிறார்கள். அப்போது மட்டும் மேற்குமலைக்காடுகளின் சூறையாடலைப் பற்றிய ஒரு பேச்சு எழும், கோடையில் மறைந்துவிடும். இதுதான் நிலவரம், இதுதான் இந்தியா முழுக்க உள்ள போக்கு என நாம் அறிவோம்.

உண்மையில் இங்கே வறுமை ஒழிப்பு வளர்ச்சியுடன் தொடர்புகொண்டிருக்கிறது, வளர்ச்சி சூழியலழிவுடன் தொடர்புகொண்டுள்ளது. அதன்மேல் அமர்ந்துகொண்டு அதை குறைகூறி அல்லது வசைபாடிக்கொண்டிருக்க நமக்கு உரிமை இல்லை. என்ன நிலைமை என்பதை சற்றேனும் நடுநிலைமையுடன் புரிந்துகொண்டே ஆகவேண்டும்.

இந்த மலைவிவசாயத்தின் ஒரு பகுதியாகவே இந்த யானைப்படுகொலை நடந்திருக்கிறது. மேற்குமலைப்பகுதியில் விளைநிலங்களை அழிக்கும் முக்கியமான சக்தி என்பது காட்டுப்பன்றி. அவற்றை வேட்டையாடும் விலங்குகள் காட்டில் குறைந்துவருகின்றன. காட்டுபன்றி உணவுக்கேற்ப பெருகுவது. மேற்குமலைச் சரிவுகளில் விவசாயங்களில் பெரும்பகுதி மரவள்ளி உள்ளிட்ட கிழங்குகள். அவை பன்றிகளுக்கு உணவு. ஆகவே காட்டுப்பன்றி மிகப்பெரிய அளவில் பெருகியிருக்கிறது. சமீபகாலத்தில் காட்டுபன்றி வேட்டையை அதிகாரபூர்வமாக அல்லாமல் கேரள அரசு அங்கீகரித்துள்ளது என்றார்கள்

காட்டுபன்றிகள் இரவில் காட்டிலிருந்து விளைநிலங்களுக்குள் வருபவை. அவற்றை பொறிகளில் வீழ்த்துவது கடினம். அவை கடினமான தேற்றைகளால் பொறிகளை உடைக்கும். அவற்றை வேட்டையாட கண்டுபிடிக்கப்பட்ட வழிதான் சவிட்டுவெடி என்று சொல்லப்படும் இந்த வெடி.

இது பட்டாசு அல்ல. சிவகாசி வெடிமருந்தை   கண்ணாடித்துண்டுகள் அல்லது சல்லிக்கற்களையும் கலந்து உருட்டி ஒரு பந்துபோல ஆக்கி அதன்மேல் சாக்குநூல் சுற்றி இந்த வெடி உருவாக்கப்படுகிறது. இதை கிழங்குகள் பழங்களுக்குள் வைத்து விளைநிலங்களில் போட்டுவைப்பார்கள். பன்றி இதைக் கடிக்கும்போது உள்ளிருக்கும் கண்ணாடி அல்லது சல்லிக்கல் உரசிக்கொண்டு வெப்பம் உருவாகும். குண்டு வெடிக்கும். அதன் தலைசிதறும். அந்தப் பன்றியை பெரும்பாலும் வேறு விலங்குகள் சாப்பிடும். சாப்பிடாவிட்டால் மறுநாள் எடுத்து மனிதர்கள் சாப்பிடுவார்கள்.

இந்த சவிட்டுவெடியில் மனிதர்கள் மிதித்து கால் வெடிப்பதுண்டு. வேறுவிலங்குகள் கடிப்பதுண்டு. அடிக்கடி வெடித்துச் சாவது கரடி, காட்டெருது ஆகியவை. மேய்ச்சல் விலங்குகளும் சிக்கிக்கொள்ளும். மிக அதிகமாக மாட்டிக்கொள்பவர்கள் மனிதர்களே. கேரளத்திலும் இந்தப்பக்கம் தேனீ கம்பம் முதல் தென்காசி பேச்சிப்பாறை வரை தமிழகம் சார்ந்த மேற்குமலைப் பகுதிகளிலும் காட்டில் நடமாடுபவர்களுக்கு இந்த வெடிகள் பெரிய அபாயங்கள். இம்முறை யானை அதை கடித்து உயிர்விட்டிருக்கிறது.

இந்த வெடி முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது, இதை வைப்பது குற்றம், ஆனால் சாதாரணமாகச் செய்யப்படுகிறது. போலீஸோ வனத்துறையோ இதை கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை. எனென்றால் மொத்த மலைப்பகுதியும் கட்டுபபட்டில் இல்லை. தமிழகத்திலும் இது நடக்கிறது. பெரும்பாலும் செய்தியாக ஆவதில்லை- யானை மாட்டிக்கொண்டால் மட்டுமே செய்தியாக வாய்ப்பு.

இந்தப் படுகொலை குரூரமானது, இதன்மேல் உருவாகியிருக்கும் உணர்ச்சிகள் மிக இன்றியமையாதவை, அவை ஒருவகை விழிப்புணர்ச்சியை நாடெங்கும் உருவாக்கியிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் ஆண்டுதோறும் மின்கம்பியில் சிக்கி எத்தனை யானைகள், காட்டெருதுகள் சாகின்றன என்ற புரிதல் நமக்கு வேண்டும். தமிழகத்தின் நீதிமன்றங்கள் அனைத்திலும் யானையைக் கொன்ற வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன.

மிகமிகக் குறைவானவர்களே குறைந்தபட்சமேனும் தண்டிக்கப்படுகிறார்கள், பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றங்கள் குற்றவாளிகளை விடுதலை செய்துவிடுகின்றன. ஏனென்றால் குற்றம் நேரடியாக நடைபெறவில்லை. குற்றவாளியை குற்றத்துடன் பிணைக்க சந்தர்ப்பசாட்சியங்கள் அன்றி வேறு இருப்பதில்லை.நீதிபதிகள் பொதுவாக ஒரு சிறு கவனக்குறைவு என்று மட்டுமே இவ்வழக்குகளை அணுகுகிறார்கள்.

இது ஒரு தனிப்பட்ட குரூரச்செயல்பாடு அல்ல. காட்டுக்கு எதிரான ஒரு போரில் நிகழ்ந்த சாவு. அந்தப்போரை நாம் நிறுத்திக்கொள்ளவேண்டும். அதை உடனடியாக சட்டம் வழியாக, வன்முறை வழியாக நிறுத்த முடியாது. அது பொருளியலின் ஓர் அடிப்படைக்கூறு. பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையது. தொடர்ச்சியான பரஸ்பரப்புரிதல் கொண்ட நடவடிக்கைகள் வழியாகவே அதைச் செய்யமுடியும்.

உதாரணமாக சென்ற சில ஆண்டுகளாக பேசப்பட்டுவரும் வனநிலபாதுகாப்புச் சட்டம் காட்டை ஒட்டி மூன்று கிலோமீட்டர் வட்டத்துள் இருக்கும் தனியார் பட்டா நிலங்களிலும் காடழிப்பை, வேட்டையை தடைசெய்கிறது. அது இந்த படுகொலை போன்றவற்றை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது.

அதற்கு காடோரக் குடியேற்ற மக்களிடமிருந்து மிகமிகக் கடுமையான எதிர்ப்பு வந்தது. ஏனென்றால் குடியேற்ற மக்கள் பெரும்பாலும் மிக ஏழைகள். இடதுசாரிகள் அச்சட்டத்தை எதிர்க்கின்றனர், இயல்புதான். ஆனால் அச்சட்டம் இந்தவகையான படுகொலைகள் நிகழாமல் தடுப்பதும்கூட.

ஆகவேஇந்த பிரச்சினையை வெறும் உணர்ச்சிக்கோஷமாக மட்டும் அணுகாமல் இருபக்கமும் பார்த்தே கையாளவேண்டும். குறிப்பாக நஷ்டஈடுகள் மாற்றுக்குடியேற்றங்கள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கப்படவேண்டும். அதை அரசே செய்யவேண்டும். இந்த காட்டுவிவசாயத்தில் இருந்து நம் பொருளியல் பெரும் லாபம் அடைந்திருக்கிறது- அதில் ஒரு ப்குதியை திருப்பி அளித்தாகவேண்டும்

யானையை கேரளத்தில் ‘சஹ்யன்றே மகன்’ என்பார்கள். சஹ்யாத்ரி மலையின் மகன், கேரளத்தின் இயல்பான அரசன். நாம் செய்துகொண்டிருக்கும் போர் மேற்குமலைத்தொடருக்கு எதிராகத்தான். வாய்வெடித்து செத்த அந்தயானை, கருவிலிருந்த அந்த குட்டி, மேற்குமலைகளின் உருவகம்தான். கேரளம் தமிழகம் இருபக்கமிருந்தும் நாம் அதை தாக்கிக்கொண்டிருக்கிறோம்

அந்தப்போர் நிறுத்தப்படவேண்டும். மேற்குமலைகளுக்கு குறுக்காக மேலும் சாலைகள் அமைக்கப்படலாகாது. ஓரிரு முதன்மைச் சாலைகள் தவிர பிறவற்றை மூடுவதும் நல்லது. வனநிலத்தை ஒட்டிய நிலப்பகுதிகள்மீதான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படவேண்டும். காடுகள் வெவ்வேறு சட்டவிரிசல்கள் வழியாக கைப்பற்றப்படுவது தடைசெய்ய்பபடவேண்டும்

இது எங்கோ எவரோ கொடியவர்கள் செய்த பாவச்செயல் அல்ல. இது ‘நாகரீக’ மக்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் போர். அதில் ஒரு களப்பலி அந்த யானை. இதை தனிப்பட்ட குரூரச் செயலாக பார்த்தால் நாம் அந்த போரை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறோம் என்று பொருள்.

Gadgil Report and Kasturirangan Report on Western Ghats

முந்தைய கட்டுரைதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–84