‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–82

பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 1

மணிப்பூரக நாட்டிலிருந்து நள்ளிரவில் எவரிடமும் கூறாமல் கிளம்பி, மூங்கில் செறிந்த சாலையினூடாக காட்டுக்குள் புகுந்து, கிழக்கு ஒன்றையே இலக்கெனக் கொண்டு பன்னிரண்டு இரவுகள் பகல்கள் பயணம் செய்து, நாகநாட்டின் எல்லையை அர்ஜுனன் சென்றடைந்தான். காண்டீபம் ஒன்றே துணையென அவனுடன் இருந்தது.

தனிமை அவன் உடலை எடையென அழுத்தி, உள்ளத்தில் வெறுமை என நிறைந்திருந்தது. ஒவ்வொரு எண்ணத்தையும் பொருளின்மைக்கு கொண்டுசென்று நிறுத்தியது. ஒவ்வொரு நினைவையும் உணர்வின்றி வெறும் செய்தியாக மாற்றியது. ஒவ்வொரு முகத்தையும் படித்தறிய முடியாத மொழியின் சொற்களென ஆக்கியது.

ஆனால் அத்தனிமையை வெல்லும்பொருட்டு எங்கேனும் சென்று மனிதர்களுடன் தங்கினால் முதல் ஓரிருநாள் களியாட்டிற்கும் அன்பாடலுக்கும் பிறகு அவன் மீண்டும் தனிமையை உணரத்தொடங்கினான். அவன் பேசும் ஒவ்வொரு சொல்லும் பொருளற்று வெற்றொலியாக மாறின. அவனுடைய கையசைவுகள் ஒவ்வொன்றும் அவனை உந்தி விலக்குவதுபோல் இருந்தன.

மீண்டும் மீண்டும் அங்கே தன்னை நிறுத்திக்கொள்ள, அவ்விடத்தை பற்றிக்கொள்ள அவன் முயலும்தோறும் அவ்வசைவுகள் அனைத்தும் அங்கிருந்து விலகத் துடிப்பவையாக மாறின. ஒவ்வொரு கையசைவும் செல்க என்று விலக்குவதுபோல, அகல்க என்று உந்தித் தள்ளுவதுபோல, இல்லை என்று மறுப்பதுபோல, நீயல்ல என்று சுட்டுவதுபோல தோன்றும் மாயத்தை அவன் பலமுறை வியந்தான்.

பிரக்ஜ்யோதிஷத்திலும் காமரூபத்திலும் நூறுநூறு சிற்றூர்களிலிருந்து அவன் கிளம்பிச் சென்றான். ஒவ்வொரு ஊரிலும் நுழைவதற்குமுன் அவன் அக்குடிகளை எதிர்த்து போரிட்டான். அவர்களை வென்று அவர்களுக்கு அரசன் என்றும் தலைவன் என்றும் ஆனான். அவர்கள் கொண்ட பேரிடர்களை தீர்த்து அவர்களால் வழிபடப்படும் தெய்வம் என்று மாறினான். அவர்களின் முற்றங்களில் நிலைக்கல்லென தலைமுறைகள் தோறும் நின்றிருக்கும் குடித்தெய்வமென்று வழிபடப்பட்டான். அதற்குள் அவன் அங்கே உளம் விலகிவிட்டிருந்தான். கனி உதிர்வதுபோல அவ்வூரிலிருந்து அகன்றான்.

தன்னுள் இருக்கும் இத்தனிமை நஞ்சென தன்னைச் சூழ்ந்து ஒரு வளையத்தை உருவாக்குகிறது, அதைக் கடந்து எவரும் தன்னை அணுக முடியவில்லை என்று அவன் உணர்ந்தான். அதை கலைப்பதற்கு என்ன வழி என தொடக்கத்தில் பலமுறை பல கோணங்களில் எண்ணிப் பார்த்தான். எங்கும் அவன் தன்னை அர்ஜுனன் என்று சொல்லிக்கொள்ளவில்லை. அர்ஜுனன் புகழ்பாடும் சூதர்களின் அரங்கில்கூட அவன் இமையசையாமல் நோக்கி வெறுமனே அமர்ந்திருந்தான்.

தன்னை பலவாறாக உருமாற்றிக்கொண்டான். தான் பயின்ற நிகரற்ற உருமாற்றக் கலையினூடாக ஆட்டனாக, நாடோடியாக, மலைமகனாக, ஆணிலியாக, பெண்ணாக, முனிவனாக மாறினான். காண்பவர் கருத்தையும் முற்றிலும் நிறைத்து தன்னை நிறுவிக்கொள்ளும் பிறிதுருவை அவன் அடைந்தபோதிலும் கூட, அதற்கேற்ப தன் எண்ணங்களை, செயலை மாற்றிக்கொள்ளும்போதும் கூட, அவன் அகத்தே மாறாமல் எஞ்சியிருந்தான்.

காமரூபத்தைக் கடந்து மணிப்பூரகத்தின் எல்லையை அவன் அடைந்தபோது முதல்முறையாக அவனுள் வைரமென இறுகி உடைக்கமுடியாததாக மாறிவிட்டிருந்த தனிமை விரிசலிட்டது. அவ்வெல்லையில் அமைந்த ஆற்றை தன் வெல்லப்படாத வில்லுடன், சூழலை அறியாத உள்ளத்தின் அகநோக்குடன் அவன் கடந்தபோது மூங்கில்குவைக்கு அப்புறமிருந்து “நில்! யார் நீ?” என்று ஒரு குரல் கேட்டது.

அவன் நிமிர்ந்து பார்த்தபோது தன் முன் தன்னுடைய இளைய உருவம் நின்றிருப்பதைக் கண்டு திகைத்தான். முதலில் அது ஒரு மாயத் தோற்றம் என்று எண்ணினான். கந்தர்வர்களோ தேவர்களோ ஆடும் விளையாட்டு. கூர்ந்து நோக்கியபடி “நான் பாண்டவனாகிய அர்ஜுனன். நெடுநிலம் கடந்து கிழக்கே சென்றுகொண்டிருக்கிறேன்” என்று அவன் சொன்னான்.

“நீர் எவராயினும் இவ்வெல்லை கடந்து எங்கள் நிலத்திற்குள் நுழைவதற்கு ஒப்புதல் இல்லை” என்றான் எதிரில் நின்றவன். “இது எங்கள் பாதுகாக்கப்பட்ட நிலம். இங்கு ஷத்ரியரோ அசுரரோ நுழைவது ஏற்கப்படுவதில்லை.” அர்ஜுனன் “நான் எவரிடமும் ஒப்புதல் கோருவதில்லை” என்று சொன்னான். “ஒப்புதல் கோரி இந்நிலத்திற்குள் நுழைவது உங்களுக்கு நன்று” என்றான் அவன்.

அர்ஜுனன் எரிச்சலடைந்தான். “என் பெயரை நீ முன்னர் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று சொன்னபோது அந்த எரிச்சலையே அவன் விலகிநின்று நோக்கினான். அவன் துறந்தலைவதாக எண்ணிக்கொண்டிருந்தான், உண்மையில் எதையும் துறக்கவில்லை, பெயரிலிருந்து தொடங்குகின்றன அனைத்தும். குலம், குடி, முடி, புகழ் எல்லாம். அனைத்தையும் இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருக்கிறேன். நான் பறவை என நினைத்தேன், வீட்டைச் சுமந்தலையும் ஆமைதான் போலும்.

“நன்கறிவேன்” என்று அவன் ஏளனத்துடன் சொன்னான். “இளைய பாண்டவராகிய அர்ஜுனனின் கதையை இங்கே ஏதேனும் சூதர் சொல்லாத நாளில்லை.” அவன் ஏளனத்தால் மேலும் சீற்றம் அடைந்து “உன் பெயரென்ன?” என்று அர்ஜுனன் கேட்டான். அவன் மாயத்தோற்றமல்ல மெய்யுருவே என்று தெளிந்திருந்தான். தன் உருவமே தன் முன் எப்படி அவ்வாறு எழமுடியுமென்று அப்போதும் அவனுக்கு புரிந்திருக்கவில்லை.

“என் பெயர் பப்ருவாகனன். மணிப்பூரகத்தின் அரசரின் மகள் என் அன்னை சித்ராங்கதை” என்று அவன் சொன்னான். அர்ஜுனன் திகைத்து அவனை நோக்கி சொல்லிழந்து நின்றான். பின்னர் “நீ என் மகன்” என்றான். “நீங்களே அவ்வாறு கூறிய பின்னரே அதை நான் சொல்லவேண்டும். என் அன்னையால் அவ்வாறுதான் எனக்கு கூறப்பட்டிருக்கிறது” என்றான் பப்ருவாகனன்.

அர்ஜுனன் உரக்க நகைத்து “ஆம். இதை எவ்வாறு எண்ணாமல் போனேன்? உன்னிடம் சொல் தெளிவதற்கு முன்னரே நான் இங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டேன்” என்றான். “ஆம், அஸ்தினபுரிக்கு எங்களை அழைத்துச் செல்வதாகவும் அரசமர்த்துவதாகவும் சொல் அளித்துவிட்டுச் சென்றீர்கள். என் அன்னை அதற்காக காத்திருந்தார்.”

“ஆம், ஆனால் நானே அங்கே முடிசூடவில்லை. என் குருதியில் நீயேனும் எஞ்சவேண்டும் என்று விழைந்தேன்…” என்றான் அர்ஜுனன். “நான் இங்கே உங்கள் மைந்தன் என இல்லை” என்று பப்ருவாகனன் சொன்னான். “இந்த நீண்ட இடைவெளிக்குப் பின் இங்கு நீங்கள் வருவதற்கு எந்தத் தேவையும் இல்லை. இந்த எல்லைக்குள் ஷத்ரியர்கள் எவரையும் நாங்கள் ஒப்புவதில்லை” என்றான்.

அர்ஜுனன் “ஷத்ரியன் என்றல்ல, அனைத்தையும் துறந்து அலையும் எளிய நாடோடியாகவே நான் வந்திருக்கிறேன்” என்றான். “ஷத்ரியர்களின் மாயங்கள் எல்லையற்றவை. படைகொண்டு வந்து அவர்கள் நிலம் வெல்கிறார்கள். பெண்களை வென்று தங்கள் மைந்தர்களை உருவாக்கி நிலத்தை கவர்ந்துகொள்கிறார்கள். நட்பு கொள்கிறார்கள், பகைமைகளை மூட்டிவிடுகிறார்கள், தெய்வங்களை அளித்து நம்மை கவர்கிறார்கள், நம் தெய்வங்களை எடுத்து தங்கள் தெய்வங்களாக்கி நம்மை அடிமைப்படுத்துகிறார்கள்.”

“ஷத்ரியர்களால் தொடப்பட்ட எக்குடியும் தங்கள் தனித்தன்மையுடன் நீடித்ததில்லை. ஷத்ரியர்களைத் தொட்ட எக்குடியும் நீடித்ததில்லை. எந்நிலத்தில் ஏதேனும் ஒரு வடிவில் ஷத்ரியன் கால் பட்டதோ அந்நிலம் தன் தனித்தன்மையையும் தன்னுரிமையையும் இழக்காமல் இருந்ததில்லை. ஆகவே எங்கள் நிலத்தில் நுழைந்த ஒவ்வொரு ஷத்ரியனையும் கொல்வது என்று முடிவெடுத்திருக்கிறோம்” என்றான் பப்ருவாகனன்.

அர்ஜுனன் புன்னகைத்து “நன்று! அது உங்கள் அரசநிலைப்பாடு. ஆனால் பிற அரசநிலைப்பாடுகளை ஏற்கும் நிலையில் நான் இல்லை. எப்போதும் எவருக்கும் ஆணையிடும் நிலையிலும் இல்லை, எவர் ஆணையை பெற்றுக்கொண்டதும் இல்லை” என்றான். பப்ருவாகனன் “உங்கள் காண்டீபத்தை நம்பி அதை சொல்கிறீர்கள். நன்று, அக்காண்டீபம் பாரதப் பெரும்போரை பதினெட்டு நாட்கள் நடத்தியது” என்றான். தன் மூங்கில்வில்லைத் தூக்கி “இவ்வில்லுடன் நான் வந்திருந்தால் ஒருநாளில் போர் முடிந்திருக்கும்” என்று சிரித்தான்.

அர்ஜுனன் “எனில் அதை எடு. உன் திறனை எனக்குக் காட்டு” என்றான். சொல்லி முடிப்பதற்குள் பப்ருவாகனன் எய்த அம்பு அவனை மயிரிழையில் கடந்து சென்றது. உடலில் அமைந்திருந்த அம்பறியும் திறனால் அவன் திரும்பிக்கொண்டமையால் அவன் மேலாடையை மட்டுமே அது கிழித்தது. அர்ஜுனன் தன் காண்டீபத்தை கணத்தில் நாணேற்றி அம்பால் அவனை அறைந்தான். அவனும் அதைப்போலவே கண் அறியா விரைவில் ஒழிந்தான்.

மூங்கில் புதர்களுக்குள் அவனுடைய தோழர்கள் விற்களுடன் தோன்றினர். அவர்கள் வில்தாழ்த்தி பப்ருவாகனனும் அர்ஜுனனும் நிகழ்த்தும் அந்தப் போரை பார்த்து நின்றனர். அம்புகளால் அவர்களிருவரும் அந்தத் தூய உரையாடலை நிகழ்த்தினர். எழுந்தும் வளைந்தும் நெளிந்தும் குழைந்தும் நடமிடும் இரு நாவுகள். நடுவே பறக்கும் புள் என சொற்கள். கூர்கொண்டவை, மின்னுபவை, விம்மி அணைபவை.

அர்ஜுனன் வேறெந்த வகையிலும் இன்னொரு மானுடனுடன் தான் உரையாடியதே இல்லை என்று அப்போது உணர்ந்தான். தனக்கு நிகராக எதிர்நின்று போரிடும் ஒருவரையே தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் அகத்தை கடக்க முடிகிறது. ஏனெனில் அப்போது வேறு வழியின்றி அவராக மாறி நின்று தன்னுடனும் போரிட வேண்டியிருக்கிறது. எய்வதும் ஒழிவதும் ஒருவரே. கொல்வதும் சாவதும் ஒருவரே.

சொற்களால் எப்போதும் தன்னை மறைத்துக்கொண்டே இருந்திருக்கிறோம் என அவன் எண்ணினான். சொற்கள் பொருள்கள் கொள்ளும் மாற்றுருக்கள் அன்றி வேறல்ல. அம்புகளோ எவ்வுருவிலும் அம்புகளாகவே நிலைகொள்பவை. அம்புக்கு இலக்கென ஒன்றே இருக்கமுடியும். அதன் விசையும் வடிவும் ஒளியும் விம்மலும் அந்த இலக்கின்பொருட்டு மட்டுமே. இலக்கை தவறிய மறுகணமே அது பொருளற்றுவிடுகிறது.

அம்புகள் இருவருக்கிடையே காற்றை நிறைத்திருந்தன. அம்புகளாலான ஒரு படலத்தால் அவர்கள் இருவரும் இணைந்திருந்தனர். கூரியவை, பிறைவடிவு கொண்டவை, இலைகள் என நாக்குகள் என ஆனவை. அனலென நீரென மாறியவை, காக அலகென்றும் வாத்து அலகென்றும் கொக்கு அலகென்றும் உருக்கொள்பவை. எரிதழலென்றும் மலர்ச்செண்டென்றும் உருக்கொள்பவை. சுழல்பவை, முழங்குபவை, துள்ளுபவை, வளைந்து இறங்குபவை, சூழ்ந்துகொள்பவை, உறுமுபவை. ஆயினும் அவை மாற்றுப் பொருளற்றவை. ஒன்றெனில் ஒன்றே ஆனவை.

அப்போர் ஏழு நாழிகைப் பொழுது நிகழ்ந்தது. அர்ஜுனன் பப்ருவாகனன் என்றாகி அர்ஜுனனுடன் போரிட்டான். இளந்தோள் பெற்றான். நம்பிக்கை நிறைந்த உளமானான். ஒளி நிறைந்த விழிகளை அடைந்தான். புன்னகை மாறாத முகம் கொண்டான். நினைப்பதற்கெல்லாம் இனிய நினைவுகளே உடையவனானான். அழுத்தும் தனிமையிலிருந்து விடைபெற்றான். சூழ்ந்திருக்கும் ஒவ்வொருவரிடமும் சென்று படிந்து அவர்களையும் தானாக்கி தன்னை சூழவைக்கும் இனிய இளமையை அடைந்தான்.

பப்ருவாகனன் அவன் தந்தையென முதிர்ந்தபடி சென்றான். அம்புகளால் அவன் அர்ஜுனனை ஏழுமுறை தோளிலும் நெஞ்சிலும் அறைந்தான். அவன் அம்பை பார்க்கமுடியாமல் செய்யும் அந்தர்த்தான முறையில் அர்ஜுனனை சுற்றிச்சுற்றி பார்க்கச் செய்தான். அம்புகளை முழக்கமிடச் செய்யும் ஆக்ரோஷம் என்னும் முறையில் அர்ஜுனன் தன் அம்புகளை வீணடிக்கச் செய்தான். எழுந்து பின்னால் சென்று திரும்பவரும் பரோக்ஷகம் என்னும் முறையில் அர்ஜுனனை அவன் வீழ்த்தினான்.

அர்ஜுனன் சிரித்தபடி எழுந்து நின்று தன் மைந்தனை பார்த்தான். மைந்தனிலிருந்து பெற்ற இளமையுடன் அர்ஜுனனாக இருந்து அடைந்த முதுமையை இணைத்து விசைகூட்டிக் கொண்டான். ஏழு அம்புகளால் பப்ருவாகனனை அவன் வீழ்த்தினான். எட்டாவது அம்பை அவன் நெஞ்சுக்குக் குறி வைத்து “உன்னை நான் கொல்ல விரும்பவில்லை. உன் அன்னையை பார்க்க விரும்புகிறேன்” என்றான்.

பப்ருவாகனனைச் சூழ்ந்திருந்த அவன் குடியினர் விற்களைத் தூக்கி “மணிபூரகம் தலை தாழ்த்துகிறது” என்று அறிவித்தனர். அர்ஜுனன் காண்டீபத்தை கீழே இட்டு ஓடிச்சென்று மைந்தனை அள்ளி தன் தோளுடன் சேர்த்து இறுக்கி அவன் தலையில் முத்தமிட்டு தோளில் அறைந்து கூவிச் சிரித்து கொண்டாடினான். பின்னர் மறைந்த மைந்தரின் மணத்தை அவன் உடலில் உணர்ந்து விம்மி அழத்தொடங்கினான்.

“என்ன? என்ன, தந்தையே?” என்று பப்ருவாகனன் கேட்டான். “உன் தமையர்… உன் உடன்பிறந்தார்” என்றான் அர்ஜுனன். அரவானையும் அபிமன்யூவையும் சுருதகீர்த்தியையும் ஒரே தருணத்தில் எண்ணிக்கொண்டமையால் அவன் நெஞ்சு வெடித்துவிடுவதுபோல இறுகியது. மூச்சுவிட முடியாமல் அவன் திணறினான். இருமலும் திணறலுமாக நிலத்தில் விழுந்தான். பப்ருவாகனன் அவனை தாங்கிக்கொண்டான்.

அவனை மைந்தன் ஆறுதல்படுத்தினான். ஓடைநீர் அருந்தி மீண்ட அர்ஜுனன் விழிநீர் வழிய மீண்டும் மைந்தனை அள்ளி அணைத்துக்கொண்டான். “அஸ்தினபுரியிலிருந்து தொலைவில் நீ வாழ்ந்தமையால் இன்று எனக்கு இப்பேறு வாய்த்தது. மீண்டும் மைந்தனின் மணத்தை முகர்ந்து நிறைவுற்றேன்” என்றான். “போர் நிறைவுற்ற பின் நீங்கள் வந்திருக்கலாமே?” என்றான் பப்ருவாகனன். “நான் வந்திருக்கக்கூடாது. மைந்தன் என்று எண்ணி நான் உளம் மகிழலாகாது” என்று அர்ஜுனன் சொன்னான்.

பப்ருவாகனனுடன் இணைந்து அவன் மணிப்பூரகத்திற்குள் நுழைந்தான். அந்நாடு அவன் முன்பு விட்டுச்சென்ற அதே வடிவில் இருந்தது. மூங்கில்கால்களின் மேல் இல்லங்கள் நின்றன. கன்றுகள் நிறைந்த கொட்டில்களில் புல்லெரித்த புகை எழுந்தது. ஒளிமாறா முகம் கொண்ட மனிதர்கள் அவனை சிறிய விழிகளைச் சுருக்கி பார்த்தனர். எங்கும் ஒளிகொண்ட பசுமை.

அவன் தன் முதுமையை, நினைவுச்சுமையை, தனிமையின் எடையை இழந்து மீண்டும் அங்கு வந்த இளமைக்கால அர்ஜுனன் ஆனான். சிரித்தபடி புரவியில் பாய்ந்து சென்றான். அரண்மனை முற்றத்தில் அவன் வருகையைக் காத்து நின்றிருந்த சித்ராங்கதை அவன் விட்டுச்சென்ற அதே இளமையில் இருப்பதாகத் தோன்றியது. அவள் கைநீட்டி ஓடிவந்து அவனை தழுவிக்கொண்டபோது தன் தோள்களிலும் இளமை நிறைந்திருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான்.

மலைக்குடிகளுக்குரிய முறைமையின்மையின் விடுதலையில் அங்கு அனைவரும் திளைத்தனர். சித்ராங்கதை அனைவர் முன்னாலும் அவனை ஆரத்தழுவி அவன் தோள்களிலும் கைகளிலும் முத்தமிட்டுக்கொண்டே இருந்தாள். அங்கிருந்த ஏவலரும் காவலரும் வந்து அவனை தொட்டுப் பார்த்தனர். முதுபெண்டிர் அவன் கைகளையும் தோள்களையும் முத்தமிட்டனர். அவனை தங்களை நோக்கி இழுத்தனர்.

அவனைத் தழுவி உள்ளே அழைத்துச் சென்று பீடத்தில் அமரச்செய்து அவன் காலடியில் அமர்ந்து சித்ராங்கதை சிரித்துக்கொண்டிருந்தாள். ஷத்ரியர்குலப் பெண்கள் நெடும்பிரிவுக்குப் பின்னால் சந்திக்கையில் கண்ணீர் சிந்துவார்கள் என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். எந்நிலையிலும் சித்ராங்கதை விழிநீர் சிந்துவதில்லை என்றும் தோன்றியது. அருகணையும் வரை சித்ராங்கதையின் அகவை அவனுக்குத் தெரியவில்லை. கண்களைச் சுற்றியும் வாயைச் சுற்றியும் இளம்பாளை வரிகள் என சுருக்கங்கள். ஆனால் அதே சிரிக்கும் சிறிய கண்கள்.

பப்ருவாகனனை அழைத்து அவள் “இவன் உங்கள் மைந்தன், உங்கள் வடிவானவன்” என்றாள். “என்னைவிட மேம்பட்டவன், எனக்கிருந்த தளைகள் ஏதுமற்றவன். அவ்வண்ணமே அவன் இலங்குக!” என்று அர்ஜுனன் அவனை வாழ்த்தினான். சித்ராங்கதை “உங்கள் வெற்றிகளை அவன் அடையவேண்டும்” என்றாள். “வேண்டாம், இழப்பில்லாது வெற்றியே இல்லை. வெற்றிகள் சுருங்கிக்கொண்டே செல்ல இழப்புகள் பெருகுகின்றன” என்றான் அர்ஜுனன்.

பப்ருவாகனனுடனும் சித்ராங்கதையுடனும் மூன்று மாதம் அந்நிலத்தில் அவன் இருந்தான். புரவிகளிலேறி அந்நிலத்தில் இருவரும் துரத்திக்கொண்டு சென்றனர். லோகதடாகத்தில் நீராழத்திற்குள் தலைக்குமேல் கோடி விரல்களென பிசையும் நீர்வளரிகளின் வேர்களை உலைத்தபடி நீந்தி விளையாடினர். இலைத்தீவுகளுக்கு மேல் பறவைகளுடன் அந்திச் சேக்கேறினர். உண்டு குடித்து விளையாடி களிகூர்ந்தனர்.

ஒருகணத்தில் அவன் அங்கிருந்து கிளம்பியாக வேண்டும் என்று உணர்ந்தான். ஒருநாள் இலைத்தீவில் படுத்திருந்த மைந்தனை அவன் நோக்கிக்கொண்டிருக்கையில் விந்தையானதோர் நடுக்கை உணர்ந்தான். அவன் மைந்தன் மேல் பெரும்பற்று கொள்ளத் தொடங்கியிருந்தான். மைந்தனையே எண்ணிக்கொண்டிருந்தான். மைந்தன் அவன் கனவில் வரத்தொடங்கியிருந்தான். ஒவ்வொரு முறையும் கனவில் மைந்தனுடன் அவன் பாம்பையும் பார்த்தான்.

அர்ஜுனன் துயில்கொண்டிருந்த மைந்தனை மெல்ல புரட்டினான். குளிர்ந்த நீர்வளரிப்பரப்பின்மேல் பலகையிட்டு பப்ருவாகனன் படுத்திருந்தான். அப்பலகைக்கு அடியில் செந்நிறப் புழு என நெளிந்தது நாகம். அவன் கழி தேடுவதற்குள் அது பாய்ந்து நீரில் குதித்து நெளிந்து மூழ்கி மறைந்தது. அர்ஜுனன் நடுங்கிக்கொண்டே அமர்ந்திருந்தான்.

அதை அவன் சித்ராங்கதையிடம் சொன்னான். “நாகர்களின் பழி என்னை தொடர்கிறது. அது என்மேல் வஞ்சநிறைவுகொள்ளும். என் மைந்தன் நாகர்களிடமிருந்து காக்கப்படவேண்டும்.” அவள் அவன் கையைப் பிடித்து “இதெல்லாம் வீண் ஐயம். இங்கே நாங்கள் பாம்புகளுடன் சேர்ந்தே வாழக் கற்றவர்கள்” என்றாள்.

“என் ஆணை இது. ஒருபோதும் தன் நாட்டின் எல்லைக்கு வெளியே என் மைந்தன் நிலம்வெல்ல செல்லக்கூடாது. ஒருபோதும் நாகர்களின் மண்ணுக்குள் நுழையக்கூடாது. தன் வில்லை தன் குடியை காப்பதற்கன்றி தன் புகழுக்காகவோ தனக்கு பெண்ணோ பொருளோ கொள்வதற்காகவோ பயன்படுத்தக்கூடாது” என்று அர்ஜுனன் சொன்னான்.

“உங்கள் சொற்கள் அவனுக்கு இறையாணை. அவை அவனுடைய தந்தைவழிச் செல்வமென்றே கொள்ளப்படும்” என்றாள் சித்ராங்கதை. “ஆனால் நீங்கள் தேவையின்றி அஞ்சுகிறீர்கள்.” அர்ஜுனன் “இல்லை, நீ நாகங்களை அறியமாட்டாய். வெளியே வரும் பாம்புகள் அல்ல அவை. உள்ளுறையும் நஞ்சுகளும் கூட. புனத்தில் சுருண்டுள்ளது பாம்பு. அதற்கு முன் முட்டைக்குள் சுருண்டிருந்தபோது கற்றுக்கொண்ட ஆழ்துயிலில் இருக்கிறது. அது எக்கணமும் எழும். அது நிகழலாகாது” என்றான்.

அங்கிருக்கையில் ஒவ்வொரு நாளும் கணமுமென அவன் பப்ருவாகனனின் இடத்தை குலைத்துக்கொண்டிருந்தான் என உணர்ந்தான். ஒருமுறை அவன் சந்தைக்குள் நுழைகையில் ஒரு முதியவன் திரும்பி நோக்கி பப்ருவாகனனை நோக்கி “இவன் பாண்டவனாகிய அர்ஜுனனின் மைந்தன். நேற்றும் வந்து இங்கு பொன்பொருட்களை வாங்கிச் சென்றான்” என்று சொன்னான். பப்ருவாகனனின் பின்னால் வந்து கொண்டிருந்த அர்ஜுனன் குதிரையின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான்.

பப்ருவாகனன் சிரித்துக்கொண்டு அவனுடன் பேசி பொன்னுக்குரிய பணத்தை அளித்து கடந்து சென்றான். அக்கணம் அவன் மூட்டைக்குள் இருந்த நாகத்தை கண்டுவிட்டான். பப்ருவாகனன் “வருக, தந்தையே!” என்றான். அர்ஜுனன் அவனிடம் “உன்னை இதற்கு முன் எவரேனும் பாண்டவ மைந்தன் என்று கூறியிருக்கிறார்களா?” என்றான். “இல்லை, இங்கு குடிப்பெயரும் முதற்பெயரும் சொல்வதே வழக்கம். அவன் அயல்நாட்டு வணிகன். முதன்முறையாக இவ்வண்ணம் அழைக்கப்படுகிறேன்” என்று மலர்ந்த முகத்துடன் பப்ருவாகனன் சொன்னான்.

அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. தனக்குத்தானே எண்ணம் சூழ்ந்தபடி தனித்திருந்தான். அன்று மாலை அங்கிருந்து கிளம்ப வேண்டுமென்று முடிவெடுத்தான். இரவில் ஓசையில்லாமல் எழுந்து தன் காண்டீபத்தை எடுத்துக்கொண்டு கதவை திறந்தான். வெளியிலிருந்து கரிய எருமை என குளிர்காற்று வந்து அறையை நிறைத்தது. சித்ராங்கதை விழித்துக்கொண்டாள். ஆனால் அவனை பார்க்காதவள்போல படுத்திருந்தாள்.

“நான் செல்கிறேன், மீண்டும் வரமாட்டேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “நான் இங்கிருந்தால் உன் மைந்தனுக்கு நாகப்பழி சூழும். ஆகவே செல்கிறேன். அவன் நீடுவாழவேண்டும், நூறாண்டிருந்து நிறையவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றபின் “நீ நில் என ஒரு சொல் சொன்னால் செல்லமாட்டேன். அதை சொல்லும் உரிமை உனக்கு உண்டு” என்றான்.

அவன் காத்திருந்தான். பின்னர் “வாழ்க!” என்று சொல்லி வில்லுடன் வெளி முற்றத்திற்குச் சென்று ஊரெல்லையைக் கடந்து காட்டுக்குள் சென்றான். மேலும் கிழக்காக செல்லத் தொடங்கினான்.

ஒவ்வொரு முறை ஒவ்வொரு ஊரிலிருந்து கிளம்புகையிலும் அவனுடைய உளநிலை கிழக்கு நோக்கி செல்க என்பதாக இருந்தது. அது ஏன் என்று அவனால் உய்த்துணர முடியவில்லை. கிழக்கு அவன் தந்தையின் திசை என்பதனால், கிழக்கைச் சொல்லியே அவன் வளர்க்கப்பட்டான் என்பதனால், ஒளியை நோக்கி செல்பவனாகவே தன்னை எப்போதும் உணர்ந்திருந்தான் என்பதனால்.

கிழக்கை அறிய அவனுக்கு எப்போதுமே இடர் இருந்ததில்லை. அவன் உடலிலேயே கிழக்குணர்வு இருக்கும். எக்காட்டிலும் எவ்விருளிலும் மிகச் சரியாக அவனால் கிழக்கு நோக்கி நடக்க முடிந்தது. கிழக்கு அவனை மாபெரும் காந்தமென இழுத்தது. அங்கு எதோ ஒன்று இருக்கக்கூடும். அவனை முற்றாக தன்னுள் இழுத்து கரைத்து எச்சமின்றி ஆக்கக்கூடியது.

அத்தனிமையை மீண்டும் உணர்ந்தான். அது தன்னுணர்வு முதிர்ந்து உருவாகும் எடை. அதை உதிர்க்காமல் தனிமையிலிருந்து தப்ப இயலாது. அதை உதிர்க்கும் இடம் அன்றி பிறிதொன்றும் தான் தேடுவதற்கில்லை என எண்ணிக்கொண்டிருந்தான். பின்னர் உணர்ந்தான், அவன் சென்றுகொண்டிருந்தது நாகநாடு நோக்கி. அங்கே என் கடன் கழிந்து என் மைந்தன் விடுபடுவான் என்றால் அதுவே எஞ்சும் கடமை என்று சொல்லிக்கொண்டான்.

முந்தைய கட்டுரைகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்
அடுத்த கட்டுரைவில்வண்டி,நெடுநிலத்துள் -கடிதங்கள்