‘மாஸ்டர்’

கதைகளை தொடராக வெளியிடத் தொடங்கி அதைப்பற்றி சிலவற்றை பேசியபோது எனக்கு வந்த கடிதங்களில் முக்கால்பங்கு வசைகளும் ஏளனங்களும்தான். பெரும்பாலும் எங்காவது வசைகளை எழுதி அதை எனக்கு நகல் அனுப்புவது. போலி முகவரிகளிலிருந்து வரும் மின்னஞ்சல்கள் மிகுதி. ஏறத்தாழ ஆயிரம் கடிதங்கள் என்றால் ஆச்சரியப்பட மாட்டீர்கள். அவர்களில் கால்வாசிப்பேர் இளைஞர்கள். ஒரு அவர்களுக்காக மட்டும் சில சொல்ல விரும்புகிறேன்.

வசையாளர் அல்லது ஏளனம் செய்பவர்களைப்பற்றிய ஆச்சரியம் என்பது பலர் தங்களுடன் என்னை ஒப்பிட்டுக்கொள்வதுதான். எனக்கு வரும் கடிதங்களில் நேர் பாதியின் ஆதாரமனநிலை அதுதான். ‘அதெப்டி, நாங்கள்லாம் அப்டி இல்லியே” என்று. அப்படி ஒப்பிட்டுக்கொள்பவர்களை பார்க்கிறேன், சாதாரணமானவர்கள், எதையுமே நிகழ்த்திக்காட்டாதவர்கள். அவர்கள் அவ்வாறு ஒப்பிட்டுக்கொள்வதிலுள்ள அசட்டுத்தனத்தைக்கூட உணர்ந்திருக்கவில்லை.

எந்தக் கலையானாலும் அந்தக் கலையின் ‘மாஸ்டர்’ என்பவர் வேறு வகையானவர். அவர்கள் ஆற்றுவதை, அடைவதை பிறர் அடையமுடியாது. ஆகவே அந்த ஒப்பீடே அவருக்கான அவமதிப்புதான். நான் நீங்கள் வாழும் தலைமுறையின் பெரும்படைப்பாளி- மாஸ்டர். அதை உணரவில்லை என்றால் நீங்கள் இலக்கியத்தில் எதையுமே உணரத்தொடங்கவில்லை ,நீங்கள் வேறெங்கோ இருக்கிறீர்கள்.

இதை ‘பிறவிக்கொடை’ என்று சொல்ல வரவில்லை. பிறவிக்கொடை என ஒன்று உண்டு, அது வரமும் சாபமும்தான். நான் எனக்கு மிகமிக இளமையிலேயே மொழிசார் நுண்ணுணர்வு மிக அதிகம் என உணர்ந்திருக்கிறேன். நான் எழுதப்படிக்க கற்றுக்கொண்டது இரண்டு வயதில்.  “பேசக்கற்றுக் கொள்வதற்குள்ளே வாசிக்க கற்றுக்கொண்டான்” என்று என் அம்மா சொல்வாள்.ஒன்றாம் வகுப்பில் சேர்கையில் நான் ஒருநாளில் நூறுபக்கம் தமிழில் படிக்கக்கூடியவன். வாரம் ஒரு நூலை படித்து முடிப்பவன்.

ஆனால் இதற்கான விலைகளும் அதிகம். என் அறிவு சமநிலை கொண்டதாக இல்லை. இன்று வரை எனக்கு கணக்கு வரவில்லை. மிக எளிமையான கணக்குகள் கூட.பள்ளியில் கணக்குகளை செய்யுள்போல மனப்பாடம் செய்து அப்படியே எழுதி பாஸ் ஆவதே என் வழக்கம். பத்தாம் வகுப்பில் ஒரு பயிற்சிநூலில் இருந்த முந்நூறுக்கும் மேற்பட்ட கணக்குகளை அச்சுஅசலாக அப்படியே திருப்பி எழுதி  எண்பது மதிப்பெண் பெற்றேன்.

கணக்கின் பொருட்டு என்னை சித்திரவதை செய்யாத ஆசிரியர்களே இல்லை. ஒருவரை இப்போது காலைநடை போகும்போது சந்திக்கிறேன். “என்னடே, சம்பளப்பணத்தை பெஞ்சாதிகிட்ட குடுத்திரு என்ன?” என்றபின் நண்பரிடம் “நூறிலே எளுவத்தஞ்சு போனா எவ்ளவுன்னு கேளுங்க, இப்பகூட சொல்லமாட்டான்” என்றார்.

அப்படி பல சாதாரணமான நுண்திறன்கள் வேலைசெய்யவில்லை. இளவயதிலிருந்தே என்னால் வழிகளை நினைவு வைத்துக்கொள்ள முடிந்ததில்லை- வாரந்தோறும் தொலைந்துபோகிறவன். நான் இன்றுவரை எந்த வண்டியையும் ஓட்டியதில்லை. சைக்கிள்கூட. ஏனென்றால் என்னுடைய உடலின் தானியங்கித் தன்மை மிகப்பலவீனமானது. என்னால் எந்த இயந்திரங்களுடனும் பழக முடியாது. ஒரு சாதாரணமான பஞ்சிங் மிஷினைக்கூட கையாள முடியாது.

என்னால் தேர்வு எழுதி வேலைக்குச் சென்றிருக்க முடியாது. எல்லா IQ test களிலும் எனக்கு மிகமிகக் குறைவான மதிப்பெண்கள்தான் வந்துள்ளன.  எல்லா aptitude test களிலும் நான் பரிதாபகரமான தோல்வியையே அடைந்திருக்கிறேன். கேள்வித்தாள்கள் என்னவென்றே புரிந்ததில்லை. ஒரே ஒருமுறை ஒரு போட்டித்தேர்வை எழுதினேன். நூறுகேள்விகளில் இரண்டுக்கு மட்டுமே பதில் எழுதமுடிந்தது- இரண்டுமே தவறு. என்னால் ஒரு எளிமையான பட்டப்படிப்பை முடிக்க முடியவில்லை .இந்த உலகம் இங்கே தங்கிவாழ்வதற்கு உருவாக்கியிருக்கும் எந்த திறன்களையும் என்னால் அடைய முடிந்ததில்லை. என் செவிசார் நினைவு மிகக்குறைவு. இசையை, குரல்களை நினைவு வைத்திருக்க முடியாது.

இந்தப் போதாமை நீண்டநாட்கள் பெரும் தாழ்வுச்சிக்கலாக இருந்தது. ஏனென்றால் நான் வேலைபார்த்தது தொழில்நுட்பம் சார்ந்த துறையில். ஆண்டுதோறும் பயிற்சிகள், தகுதித்தேர்வுகள் உண்டு. அனைத்திலும் தோல்வியடைந்து அவமானப்பட்டு கூசிக்குறுகித்தான் அங்கே இருந்தேன். அரசுவேலை இல்லாவிட்டால் வறுமைக்கே சென்றிருப்பேன். தனிவாழ்விலும் வழிகாட்டியாக, பேணுநராக என் அண்ணா எப்போதும் உடனிருந்ததனால் நான் வாழ்க்கையில் எதையும் இழந்து சீரழியவில்லை- எழுத்தாளர்களுக்கு அப்படி அமைவது மிக அபூர்வம்.

ஆனால் எந்த துறையிலும் முதன்மையாளர்கள் என்பவர்களுக்கு ஒரு தகுதி உண்டு, அவர்களின் நீண்டகால அர்ப்பணிப்பு. ஒன்றை தெரிவுசெய்து அதில் தன்னை முழுதளித்தல்.  நான் செய்வதுபோல ஒரு கரு அமைந்ததுமே கையில் வடிவம் உங்களுக்கு வரவேண்டுமா? என்னைப்போல நாற்பதாண்டுகள் ஒவ்வொருநாளும் குறைந்தது எட்டு மணிநேரம் முழுக்கவனத்துடன் வாசியுங்கள், எழுதுங்கள், ஓர் ஆண்டுக்கு பத்தாயிரம் கிலோமீட்டருக்கு குறையாமல் உலகைப் பார்ப்பதற்காக மட்டுமே பயணம் செய்யுங்கள், நீங்கள் மதிக்கும் அத்தனை பேராளுமைகளையும் எந்த தயக்கமும் இல்லாமல் சென்று பாருங்கள், ஆணவத்தை முழுமையாக கழற்றிவிட்டு காலடியில் அமர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். பிற தளங்களில் வெற்றியும் பணமும் புகழும் உள்ளது, நாலுபேர் மதிக்கும்படி இருக்கவேண்டும் என்பதுபோன்ற சபலங்களை கடந்து உங்கள் கலைக்கு உங்களை அளியுங்கள். அதன்பின் முயலுங்கள்.

ஒருவரை அவர் தன் துறையில் மாஸ்டர் என்று உணரும்போது உங்களுக்குள் தோன்றுவதென்ன என்று பாருங்கள். எரிச்சல், சிறுமைப்படுத்தவேண்டும் என்ற உந்துதல், உங்களை ஒப்பிட்டுக்கொள்ளுதல் என்றால் நீங்கள் சாமானியர், அவருடைய கலையை அறிவுத்துறையை அறியாதவர். நீங்கள் உங்கள் சிலலறைகளுடன் புழங்கும் உலகில் அவர் இல்லை, அவர் உங்களை பார்க்கப்போவதே இல்லை. அது உங்கள் சொந்த நரகம். நீங்கள் செய்யக்கூடுவது ஒன்றே, முழுமையாக விலகிக்கொண்டு உங்கள் எறும்புலகுக்குள் சென்றுகொள்ளலாம். அங்கே நீங்கள் நிம்மதியாக வாழலாம்.

அல்லது உங்களுக்கு இரண்டு எண்ணங்கள் வரலாம். ஒன்று, அந்த மாஸ்டரிடமிருந்து கற்றுக்கொள்ளுதல், அவரினூடாக பயணம் செய்தல், உங்களை கண்டடைதல். எனில் நீங்கள் அந்தக்கலையை அடையத் தகுதியானவர். அல்லது ஒருநாள் நானும் அவரென ஆவேன் என்று தோன்றலாம், அதற்காக உங்களை நீங்கள் முழுவெறியுடன் திரட்டிக்கொள்ளலாம். எனில் நீங்கள் நாளைய மாஸ்டர்

மாஸ்டர் என்று ஒருவர் தேவையா?ஒருவர் மாஸ்டர் என்று ஆகவேண்டுமா? மேலே சொன்ன பாமரர்களிடமிருந்து அப்படி ஒருவர் இல்லை என்றும் அப்படி ஆகவேண்டியதில்லை என்றும் பதில்வரும். ஏனென்றால் அவர்கள் அந்த வட்டத்திற்குள் இல்லை என்றும் போகமுடியாது என்றும் அவர்களுக்கே தெரியும். படித்தும் ஒன்றும் புரியாத பாமரர்களும் உண்டு

மாஸ்டர் என்பவர் ஒரு தளத்தில் மானுடசாத்தியத்தின் உச்சத்தில் மோதிப்பார்ப்பவர். அப்படி மோதிப்பார்ப்பதும் எல்லை கடப்பதும்  மானுடத்தின் அடிப்படை இயல்பு. அதன் வழியாகவே மானுடத்தின் அறிவும் கலையும் எல்லைகளை விரித்து முன்னேறி வந்துள்ளன. அந்த விசையே மனிதனின் சாராம்சம். எந்த மாஸ்டரும் கடக்கப்படுவார். ஏனென்றால் மானுடம் ஒட்டுமொத்தமாக மிகப்பெரியது, மாஸ்டர்கள் அதன் குமிழிகள் மட்டுமே

ஆகவே நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இங்கே ஒவ்வொரு துறையிலும் மாஸ்டர்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள். அவர்கள் கடக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆகவே ஒவ்வொரு துறையிலும் செயல்பாட்டை தொடங்குபவனின் முதன்மை இலக்கு அதில் மாஸ்டர் ஆகவேண்டும் என்பதாகவே இருக்கமுடியும்.

அப்பயணத்தின் ஏதேனும் ஒருபடிநிலையில் நாம் இறுதியாக அமைந்துவிடலாம். அது நம் எல்லை, நம்சூழல் நமக்கு அளிக்கும் எல்லை ஆகியவற்றைச் சார்ந்தது. அதில் மிகப்பெரிய அளவில் தற்செயல் உள்ளது, ஒரு மாபெரும் திறனாளர் காசநோய்க்கு ஆளாகி முழுமையாக வெளிப்படமுடியாமலானால் அவர் ஒன்றும் செய்யமுடியாது, விதிதான். ஆனால் ஒவ்வொருவரும் அந்த ஊழின்முன் உச்சவிசையுடன் நின்றாகவேண்டும். அதுதான் மானுடத்தின் ஆதார விதி—மனிதர்களில் மட்டுமல்ல, அத்தனை உயிர்களிலும்.

மாஸ்டர்கள் நிகழும்போது அவர்களைச் சூழ்ந்து அவர்கள்மேல் எரிச்சலும் ஒவ்வாமையும் கொண்ட குரல்கள் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் – இதற்கு ஒரு விதிவிலக்குகூட இதுவரை உலகில் இல்லை.

ஏனென்றால் ஒரு மாஸ்டர் பிறரை தன் அளவால் சிறியவராக்குகிறார். அவர்களின் ஆணவங்களைச் சீண்டுகிறார். ஆகவே அத்துறையிலேயே சிறிய அளவில் செயல்படுபவர்களை நிலைகுலைய வைக்கிறார். அவரை தங்களில் ஒருவர் என எண்ணும் எளியவர்களை சீற்றமடையச் செய்கிறார். அளவுகோல்களை மாற்றுகிறார். அதன்வழியாக இலக்கணவாதிகளை குழப்புகிறார். நேற்றைய மாஸ்டர்களை முந்திச்செல்கிறார். ஆகவே நேற்றைய மாஸ்டர்களுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்களை பதற்றமுறச் செய்கிறார்

மாஸ்டர்கள் என்பவர்கள் தங்கள் வாழ்நாளின் குறுகிய கால அளவை, மானுட சாத்தியத்தின் எல்லையை அறிந்து பதற்றம் கொண்டிருப்பார்கள். ஆகவே எரிச்சலும் நிலைகொள்ளாமையும் அவர்களிடமிருக்கும். சிலர் ஏற்கனவே இருப்பனவற்றை இடித்து தங்கள் வழியை உருவாக்கிக்கொள்ளக் கூடும்.

மாஸ்டர்களுடன் இணைந்துகொண்டால் நீங்கள் ஒரு காலகட்டத்தின் படைப்புச்செயல்பாட்டுடன், அறிவியக்கத்துடன் இணைந்து கொள்கிறீர்கள். அவர்களுக்கு எதிரான ஒவ்வாமைகளுடன் இணைந்துகொண்டால் அக்காலகட்டத்தின் சிறுமைகளுடன் இணைந்துகொள்கிறீர்கள்.தெரிவு உங்களுடையது உங்களைப்பற்றி நீங்கள் எப்படி மதிப்பிட்டிருக்கிறீர்களோ அதைச் சார்ந்து முடிவெடுக்கலாம்.

எந்த துறையிலும் மாஸ்டர்களுடன் உங்களை இணைத்துக்கொண்டால் மிகமிகச் சிறுபான்மையினர் ஆகிவிடுவீர்கள். அறியாமையும் அதன் விளைவான தன்னம்பிக்கையும் கொண்ட பெரும்பான்மையின் நையாண்டிக்கும் எதிர்ப்புக்கும் ஆளாவீர்கள். தெரிவு உங்களுடையது.

ஒருபோதும் ஒருபோதும் ஒரு மாஸ்டரை அவருடைய ஆணவத்தின்பொருட்டு அல்லது நாகரீகமின்மையின் பொருட்டு விமர்சனம் செய்யாதீர்கள். நாகரீக உலகில் எங்கும் அந்த வழக்கம் கிடையாது- அப்பட்டமான பண்பாட்டுப் பயிற்சியின்மை மட்டும்தான் அது. நாகரீகம் என்பது ஒத்திசைவிலிருந்து உருவாவது. ஒத்திசைவு சமூகமாகச் செயல்படுபவர்களுக்குரியது. எந்த மாஸ்டரும் தனிப்பறவைதான். பெரும்பாலானவர்கள் அத்துமீறுபவர்களும் எரிச்சலூட்டுபவர்களும்தான்.

நேற்றைய மரபிலிருந்து நீங்கள் வழிபடுபவர்களாக எழுந்து வந்திருக்கும் எவரும் அப்படித்தான். இளையராஜா நாகரீகமில்லாதவர் என்று கெக்கலிக்கும் ஒருவர் மொஸாத் எவ்ளவு பெரிய மேதை தெரியுமா என்கிறார். மொசாதின்  ‘நாகரீகம்’ என்னவாக இருந்தது என இவருக்கு எவர் சொல்லிப் புரியவைக்கமுடியும்?

ஆணவத்தைப் பொறுத்தவரை ஒன்றே சொல்லவேண்டும். ஒருதுறையிலும் பெயர்சொல்லத் தகுதியானவராக இல்லாத நீங்கள் ஒரு மாஸ்டரை விமர்சனம் செய்யலாம் என்று நினைப்பதில் உள்ள ஆணவத்தை எண்ணிப்பாருங்கள். தன் கலைபற்றி தெரிந்த அந்த மாஸ்டர் கொள்ளும் ஆணவம் அதில் ஆயிரத்தில் ஒருபங்குகூட இருக்காது.

வெளித்தெரியும் ஆணவம் என்பது அவன் தன் கலைக்காக அமைத்துக்கொள்ளும் கவசம்.அது இல்லையேல் தன்னைச் சூழ்ந்து கொள்ளும் சிறுமைகளில் இருந்து மேலெழவே முடியாது. கொசுக்கடிகளை பொருட்படுத்தாமல் தன் கலைக்குள் , சிந்தனைக்குள் மூழ்கமுடியாது. பாமரர்களால் சூழப்பட்டிருப்பதே கலைஞனுக்கான நரகம்.

உள்ளிருக்கும் ஆணவம் என்பது தன் கலை, அதில் தன் இடம் பற்றிய தன்னுணர்வு. ஆனால் அது நிலையானது அல்ல. எந்த மாஸ்டரும் தன் கலைபற்றிய ஆழ்ந்த போதாமையை அடைந்து கசப்பின் நிராசையின் எல்லைக்குச் செல்வான். அங்கே சிறுத்து தூசாக அணுவாக கண்ணீருடன் நின்றிருப்பான்.

சூழ்ந்திருக்கும் அத்தனை மாஸ்டர்களையும் காணும் கண் இருப்பதனாலேயே அவன் மலைகளுக்கு நடுவே நின்றிருப்பதுபோல் உணர்வான். ஒன்று ஆனவன் இன்னொன்றும் ஏன் ஆகமுடியவில்லை என அழுவான். செகாவ் போல சிறுகதை எழுதமுடியவில்லை என்று தல்ஸ்தோய் கண்ணீர்விட்டார் என்பது அதனாலேயே.

அதிலிருந்து மீண்டும் தன் ஆணவத்தைப் பெருக்கிப்பெருக்கி வந்து நின்றுதான் மீண்டும் அவனால் படைக்கமுடியும். ஆணவம் என்பது படைப்புவிசையின் ஒரு தவிர்க்கமுடியாத பகுதி. நீங்கள் கலைஞர் என்றால் ஆணவத்தை பேணிக்கொள்ளுங்கள் என்பதையே முதன்மையாகச் சொல்வேன்

மாஸ்டர் என நீங்கள் உணர்பவரை வழிபடவேண்டாம். கொண்டாடவேண்டாம். ஆனால் ஒருபோதும் எளிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்கள் அளவுக்கு அவரை வெட்டிக்கொள்ளாதீர்கள். உங்கள் சிறுமைகளை கொண்டுவந்து அவர்மேல் கொட்டாதீர்கள். அவருடைய பாய்ச்சலை முடிந்தவரை தொடர முயலுங்கள்.

அவன் கூறுவனவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை. அவன் படைப்புக்களை ஏற்கவேண்டும் என்றுகூட இல்லை. அவனுடன் உண்மையான ஓர் உரையாடலை தொடங்கினாலே போதும். ஏற்பும் மறுப்புமாக அது வளரும்போது அதில் தன் சிறுமையை உணர்ந்து நீங்கள் உருவாக்கிக்கொள்ளும் செயற்கையான ஆணவமோ அல்லது அவன் செயல்கள் உருவாக்கும் எரிச்சலோ ஊடுருவாமல் காத்துக்கொண்டால் போதும்.அந்த உரையாடல் மானசீகமாக நடந்தாலே போதும். உங்களுக்குள், உலகமறியாமல். உங்கள் செயல்கள் வழி அதை உலகம் அறியட்டும்

அந்த உரையாடல் வழியாக அன்றாடத்தின் சிறுமையிலும் சலிப்பிலும் இருந்து விடுபடுவீர்கள். மனிதனின் ஆற்றல்குறித்த நம்பிக்கையை அடைவீர்கள். உங்களுக்கான மெய்யறிதலை நீங்களே கண்டடைவீர்கள். நீங்கள் வேறொரு துறையில் செயல்படுபவராக இருந்தாலும் அந்த உடன்பாய்ச்சல் அத்துறையில் உங்களை திறனாளர் ஆக்கும் என்பதைக் காண்பீர்கள்.

இந்தவரிகள் தமிழ்ச்சூழலில் எப்படி பொருள்கொள்ளப்படும் என்று எனக்குத் தெரியும். எழுத்தாளனும் கலைஞனும் வாசல்படியில் கிடக்கும் மிதியடிமெத்தை போல இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஒரு பாமரக்கூட்டம். மறுபக்கம் மிதிபடும்  பழைய சாக்குபோல தன்னைக் காட்டிக்கொள்ளும் போலித்தன்னடக்கக் கூட்டம். ஒரு நச்சுச்சூழல். கூடவே கலைஞனிடமும் எழுத்தாளனிடமும் கலைபற்றி போதிக்கும் கலையோ எழுத்தோ உணரும் திறனற்றவர்களின் பெருக்கம். நான் இங்கே நின்று இதைச் சொல்வது, நீங்கள் அள்ளிச்சொரியப்போகும் வசைகளையும் ஏளனங்களையும் பெற்றுக்கொள்வது, எதிர்காலத்தில் எழுபவர்களுக்காகவும் சேர்த்துத்தான்.

குறைந்தபட்சம் உங்கள் வசைகளும் ஏளனங்களும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல என்றாவது புரிந்துகொண்டால் நீங்கள் நுண்ணுணர்வை அடையத் தொடங்கிவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

***

முந்தைய கட்டுரைசிவம்,தேவி- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–85