கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

மாதண்ட மடத்திலிருந்து தந்த்ரி சங்கரன் போற்றி முன்னால் வர அவரைத் தொடர்ந்து கோயில் கமிட்டியினரும், கோயில் ஸ்ரீகாரியம் நாராயண பிள்ளையும் தாவித்தாவி நடந்து வந்தார்கள். தந்த்ரி அவ்வப்போது நின்று கைகளைச் சுட்டி ஏதோ பேசினார். அவர் மிகமெல்லிய குரலில் பேசினார் என்று தோன்றியது, அவர்கள் கைகட்டி, உடலை வளைத்து, முகத்தை முன்னால் நீட்டி அவர் பேசுவதை கேட்கவேண்டியிருந்தது.

நான் என் சன்னிதிக்கு முன்னால் கல்தூணோரம் கைகூப்பி நின்றேன். தந்த்ரி என்னை பார்ப்பது எனக்கு நல்லதா கெட்டதா என்று சொல்லமுடியவில்லை. நான் முறைப்படி பூஜைசெய்கிறேனா என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு தேவஉபாசனையும் பூஜாமந்திரமும் அப்பா சொல்லிக்கொடுத்தது. இந்தத் தெய்வத்திற்கு தாந்த்ரீக முறை என ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் ஏதாவது பெரிய பிழை செய்துகொண்டிருக்க வாய்ப்புண்டு.

அவர் ஏதாவது தப்பு கண்டுபிடித்தால் என்னைக் காய்ச்சி எடுத்துவிடுவார். அவர் பல கோயில்களில் அர்ச்சகர்களையும் போற்றிகளையும் கதறி அழவைத்திருக்கிறார். ஏற்கனவே எனக்கு சம்பளமில்லாத உத்தியோகம் .தினமும் தட்டில் வருவதே வருமானம். கோயில் கமிட்டியினரை நயந்து வாழும் வாழ்க்கை.

இவர் என்னை ஏதாவது சொன்னால் அதோடு என் பிழைப்பு போயிற்று. இந்த நொண்டிக்காலை வைத்துக்கொண்டு நான் வேலைக்குச் செல்லவேண்டும். நான் செய்யக்கூடிய ஒரே வேலை ஓட்டலில் பரிமாறுவதுதான். ஆனால் அதற்கு கைகளுக்குச் சமானமாக கால்களும் தேவை. நாளெல்லாம் நிற்கவேண்டும். என் தம்பிக்கு இருகால்களும் உறுதியானவை. ஆனால் அவை நரம்புகள் புடைத்து கொடிபோல சுற்றியிருக்கின்றன. அந்தியில் அவன் மனைவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்கிறாள். அவன் ஆ ஆ என்று அலறிக்கொண்டிருப்பான்.

இந்த தந்திரி சங்கரன் போற்றியைப் பற்றித்தான் ஒருவாரகாலமாக கோயிலில் பேசிக்கொண்டிருந்தார்கள். மிகமிகப் புகழ்பெற்றவர். மாதண்ட மடம் என்றால் ஆயிரமாண்டுகளாக வேரூன்றிய குடி. அவர்கள்தான் இந்தப் பகுதியிலுள்ள எல்லா கோயில்களுக்கும் தந்திரிகள். மாதண்ட மடத்தின் நம்பூதிரிகளுக்கு முன்னால் மகாராஜாவே அமர்ந்து பேசமாட்டார். எந்த சபையிலும் அவர்கள் சொல்வதே இறுதியானது. மூத்த தந்த்ரி கிருஷ்ணன் போற்றி மறைந்து நான்காண்டுள் ஆகிறது. அவருக்கு பின் இவர் பொறுப்பேற்றிருக்கிறார்.

ஆனால் இவர் முறையாக படித்தவர் அல்ல என்று அனந்தன் நாயர் சொன்னார். அவர் ஓய்வுபெற்ற ஆசிரியர்,  இங்கே நாள்தோறும் சாமி கும்பிட வருபவர்.  “இந்தாள் அவரோட வாரிசுதான். ஆனால் சின்னவயசிலேயே படிக்கப்போய்ட்டார். வக்கீல் படிப்பு முடிச்சு கொஞ்சநாள் பிராக்டீஸும் பண்ணினார். அப்புறம் அப்பா செத்துப்போனபிறகு சடார்னு ஒருநாள் காலையிலே தந்திரி ஆயிட்டார். கேட்டா அப்பா வைச்சிருந்த ரெண்டுமூணு தந்த்ரநூல்களை படிச்சிட்டாராம். தந்த்ரம்ங்கிறது என்ன இந்தியன் பீனல்கோடா? அது மந்த்ரவடிவிலே இருக்கு. மந்த்ரத்தை ஞானத்தாலே கடைஞ்சு தியானத்தாலே உருக்கி எடுத்தாகணும்…” என்றார்.

“ஆனால் இப்ப அவருதானே ஃபேமஸ்… நமக்கு கும்பாபிஷேகம் பண்ணணுமானா தந்த்ரி ஆலோசனை வேணும்” என்றார் கோயில் கமிட்டி தலைவர் மணக்கரை பத்மநாப பிள்ளை.

“அதுக்கில்லை, உங்களுக்கு போஸ்டர்லே போட ஒரு ஆளுவேணும். போனமாசம் மங்கலக்குறிச்சியிலே ஒரு கோயிலிலே போஸ்டரிலே தந்த்ரி மாதண்டமடம் சங்கரன் தந்திரி எம்.ஏ.பி.எல்லுன்னு போட்டிருக்கான். நான் கேட்டேன், ஏண்டே கிரிமினல்னு பிராக்கெட்டிலே போடவேண்டாமான்னுட்டு… அடுத்த தடவை போடுதேங்குதான்” என்றார் அனந்தன் நாயர்

தந்த்ரியும் அவரைத் தொடர்ந்து வந்தவர்களும் என் அருகே வந்தபோது நான் அறியாமலேயே மீண்டும் பின்னால் நகர்ந்தேன். தூணுக்கு வெளியே என்னுடைய மூக்கும் கையும்தான் தெரிந்திருக்கும்

தந்த்ரி என் சன்னிதி அருகே வந்ததும் நின்று கூர்ந்து பார்த்தார். முகம்சுளித்து “இதேது தெய்வம்?” என்றார்.

“இது ஜ்யேஷ்டையாக்கும்…” என்றார் கமிட்டித் தலைவர் மணக்கரை பத்மநாப பிள்ளை.

“இதெப்டி இங்க? பகவதி மகாமங்கலையாக கோயில் கொண்டிருக்கிற ஸ்தலத்திலே…” அவர் குனிந்து அருகே வந்து உற்றுப்பார்த்தார்

சன்னிதி முக்கால் ஆள் உயரம்தான். வாசலுக்குள் உட்கார்ந்துதான் உள்ளே போகமுடியும். அவர் நல்ல பருமன், பெரிய தொந்தி. கையூன்றி உட்கார்ந்தபோது அந்த அலுப்பில் எரிச்சலடைந்தார் என்று தோன்றியது.

சன்னிதிக்குள் நுழையாமல் இடைப்படியிலேயே காலை உள்ளே விட்டு அமர்ந்தார். தேவியின் இடையில் அணிவிக்கப்பட்டிருந்த நீலப்பட்டு வஸ்திரத்தை உருவினார்

“அய்யோ… தம்பிரானே!”என்று நால் அலறிவிட்டேன்

“இவன் யாரு?”என்று அவர் முகம்சுளித்தபடி திரும்பிப்பார்த்தார்.

“இவராக்கும் இங்க சாந்திக்காரர்”

“சாந்தியா? நீ ஆரெடா, போற்றியா, ஸ்மார்த்தனா?”

“நான் பண்டாரமாக்கும்… பூக்கட்டிப் பண்டாரம்”

அவர் உதடுகள் கோணலாக இழுபட“பண்டாரம் பூஜை… நல்ல காரியம்” என்றார். கையை வீசி உரக்க “போ, தள்ளிப்போ” என்று அதட்டினார்.

நான் “தம்பிரானே, அவ உக்ரமூர்த்தியாக்கும். கண்கண்ட தேவதையாக்கும்…நான் இருகண்ணாலே கண்டிட்டுள்ளவளாக்கும்… ஆசாரவிரோதம் வேண்டாம்” என்றேன்

“என்னடே ஆசாரம்? எந்த சாஸ்திரம்? எந்த தந்த்ரம்?” என்றார் தந்த்ரி

“எங்க அப்பாவுக்க உபாசனை… எனக்கு சொல்லிக்குடுத்தார்”

இகழ்ச்சியுடன் “மூதேவி உபாசனை, நல்ல தொழில்” என்றபின் அவர் திரும்பி தேவி அணிந்திருந்த நீலமலர் மாலைகளையும் பிடுங்கி வீசினார். கையால் விக்ரகத்தை தடவிப்பார்த்தார். குனிந்து கீழே வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்த்து முகம் சுளித்து “இது என்னடே இது?”என்றார்

“தேவிக்கு ப்ரீதியான அமங்கல வஸ்துக்கள். துடைப்பம், முடி, சாம்பல்” என்றேன். துடைப்பம்போல உள்ளங்கையளவுக்கு செய்து வைத்திருந்தோம். தலைமுடியில் ஒருசுருள். சாம்பல் ஒரு சிட்டிகை. அது அமாவாசை தோறும் படைக்கப்படும்

முகத்தை அருவருப்புடன் சுளித்து “அஸ்ரீகரம்… பகவதிகோயிலுக்குள்ளே இது எப்டி வந்தது செட்டியாரே?” என்றார் தந்த்ரி

கமிட்டித் துணைத்தலைவர் சங்கரநாராயணன் செட்டியார் “நான் அறிஞ்ச காலம் முதலே இங்கே இருக்கு” என்றார். “இடைக்கிடைக்கு நானும் வந்து கும்பிடுவதுண்டு…”

“இங்கயா? மூதேவியையா? பின்ன எதுக்கு ஓய் அங்க ஸ்ரீதேவி நாராயணியா உக்காந்திட்டிருக்கா?”

“இல்ல, கஷ்டங்கள் வரும்போது, ஜோசியங்கள் சொன்னா…” என்று செட்டியார் தயங்கினார்.

“அதாக்கும் காரியம், ஜோசியனுங்களுக்க விளையாட்டு. தெய்வநம்பிக்கை உள்ளவனுக்கு ஒரு தெய்வம் போதும். வெம்பிப்போன நம்பிக்கை உள்ளவனுக்கு காரியத்துக்கு ஒரு தெய்வம் வேணும். ஒவ்வொரு பயத்துக்கும் ஒவ்வொரு தெய்வம். ஒவ்வொரு ஆசைக்கும் ஒவ்வோரு தெய்வம். ஜோசியனுக்க காசு விளையுறது அந்த பயத்திலயும் ஆசையிலயுமாக்கும். அவனுக எங்கியாவது தெய்வங்களை கண்டுபிடிச்சு தூண்டிவிடுவாங்க… பரிகாரமூர்த்தின்னு சொல்லி பரப்புவாங்க. ஜனங்கள் மங்கலதெய்வத்தை விட்டு அமங்கலதெய்வத்துக்கு பின்னாலே ஓடுவாங்க… இதாக்கும் இப்ப நடந்திட்டிருக்கிறது” என்றார் தந்த்ரி

நான் குனிந்து, மன்றாடுவதுபோல் கைநீட்டி “அப்டி இல்லை திருமேனி…”என்று சொன்னேன்

“என்ன? எதுத்துப் பேசுறியா?”

“இல்ல… அதுக்கெல்லாம் எனக்கு அறிவில்லை” என்றேன் “ஆனா இந்த சன்னிதியைப் பற்றி எங்க அப்பா சொல்லியிருக்காரு” என்றேன்

அவர் முகம் திருப்பிக்கொள்ள நான் மேலும் குரலை தாழ்த்தி “இங்க முன்னாடி ஒரு குகையிலே ரெண்டு தேவிகளும் இருந்திருக்காங்க. அக்காதங்கச்சி கோயில்னுதான் கோயிலுக்கே பேரு. கார்த்திகைத்திருநாள் தர்மராஜா காலத்திலே வில்வமங்கலத்து ஸ்வாமியாருக்க சிஷ்யர் ஒருத்தர் இங்கே வந்தார். கேசவானந்த சுவாமின்னு பேரு. அவரு ஸ்தாபிச்சது இந்த கோயில். இந்த தேவியை இங்கே ஸ்தாபிச்சதும் கேசவானந்த சுவாமியாராக்கும்”

“வில்வமங்கலத்து சுவாமியாரா?”என்று தந்த்ரி திரும்பி முகம் சுருங்க  கேட்டார்

“இல்லை, அவருக்க சிஷ்யபரம்பரையிலே ஒருத்தர். முஞ்சிறை மடத்திலே அவர் சமாதியானார்னு சொல்லுவாங்க. அப்ப இந்த ஊரு இங்கே இல்லை, நாலு கிலோமீட்டர் தெக்கே வாகினியாற்றுக்க கரையிலயாக்கும்… இப்பம் கொட்டாரம் எஸ்டேட் இருக்குல்லா அங்கே. அங்கதான் மகாராஜாவுக்க அரண்மனை இருந்தது” என்று நான் சொன்னேன்.

தந்த்ரி என்னை கேட்கிறார் என்று தெரிந்தது. ஆனால் அதைக் கேட்காதவர் போல அவர் சிலையை நோக்கி திரும்பியிருந்தார். கோயில் கமிட்டியினருக்கு ஆர்வமிருந்தது, அவர்கள் அதையெல்லாம் கேட்டிருக்கவேயில்லை என்று தெரிந்தது. அவர்கள் எவருமே என்னிடம் முகம்கொடுத்துப் பேசியவர்களே அல்ல.அவர்கள் கண்ணில் நான் கீழே தரையோடு தரையாக செல்லும் தவளை மாதிரி தெரிவேன்.

“அப்ப நீர்க்கம்ப நோய் வந்து ஊரையே அழிச்சிட்டிருந்தது. வாய்நீரும் வயிற்றுநீருமா வெளியேபோயி ஜனங்கள் குடும்பம் குடும்பமா செத்துக் குவிஞ்சாங்க. அந்த உடம்புகளை தொட்டு எடுக்கக்கூட ஆளில்லாம நாய்நரி கடிச்சு இழுத்துது. கயிறுகட்டி இழுத்து ஆத்திலே போட்டாங்க. ஆத்திலே பிணத்தைபோட்டா அம்பது கசையடின்னு மகாராஜா உத்தரவு வந்தபிறகு அதுக்கும் வழியில்லை. அப்டியே வீடோட கொளுத்திருவாங்க…” என்று நான் சொன்னேன்.

ஆண்டுதோறும் இங்க கூட்டச்சாவு உண்டு. நீர்க்கம்பம் ஒருவருசம் குருதீனம் அடுத்த வருசம். ஆனா இது கல்லுவாரி வீசினா பொன்னு விளையுற மண்ணு, விட்டுட்டுப் போகவும் முடியாது. அப்பதான் இங்க வில்வமங்கலம் மூணாம் ஸ்வாமியார் கேசவானந்த குரு வந்தாரு. இங்கே இருந்த கரைமாடம்பி வலியகாளிப் பிள்ளை அவரைப் போயிப் பாத்து ஊரைக் காப்பாத்தணும்னு சொல்லி கையை தலையிலே கூப்பிக்கிட்டு அந்தாலே மண்ணிலே எட்டுசாணும் படிய விழுந்து கும்பிட்டாரு. காலைப்பிடிச்சுக்கிட்டு காப்பாத்தல்லேன்னா விடமாட்டேன்னு கதறினாரு

வில்வமங்கலம் மூணாம் சுவாமியார் “சரிடே, காலைப்பிடிச்சுட்டே. உனக்கு நான் வழிசொல்லுதேன்”னு சொன்னார். பதினாலுநாள் அன்னம் தண்ணி இல்லாமல் தவம் பண்ணினார். அதிலே அவருக்கு ஒரு காட்சி கிடைச்சுது. அவர் கையிலே கோலோடே கிளம்பி நடந்தப்ப ஜனங்களும் கூடவே வந்தாங்க. இந்த எடம் அப்ப ஒரு குன்று. இப்ப ரோடும் வழியும் வந்து தாழ்ந்துபோச்சு. இதை கள்ளியங்காடுன்னு சொல்லுவாங்க. இலைக்கள்ளி காடா அடர்ந்து கிடந்த இடம் இது

இந்த காட்டுக்குள்ள ஒரு பெரிய ஒற்றைப்பாறை… இந்தா கோயிலுக்கு புறத்தாலே நிக்குதுல்லா இந்தப்பாறை…இதுக்கு அரக்குப்பாறைன்னு பேரு. அரக்கு மாதிரி ஒத்தைமெழுகாட்டு இருக்கு… இதிலே ஒரு குகை அந்தக்காலத்திலே இருந்திருக்கு. குகைக்குள்ள ரொம்ப பழைய காலத்திலேயே அக்காதங்கச்சிகளை வைச்சு கும்பிட்டுட்டு இருந்திருக்காங்க. ஆண்டுக்கொருமுறை ஜனங்க வந்து கும்பிட்டுட்டு போவாங்க. காலப்போக்கிலே ஜனங்க மறந்திட்டாங்க. சாந்தி நடந்து பன்னிரண்டு ஆண்டு தாண்டியாச்சு.

சுவாமியார் இங்கே  சர்வமங்கலையா பகவதியை பிரதிஷ்டை பண்ணணும்னு சொன்னார். ஒரு மங்கலம் குறையக்கூடாது. அப்டித்தான் சங்கு சக்கரம் கதாயுதம் ஏந்தி அபயஹஸ்தம் காட்டி உக்காந்திட்டிருக்கிற நாராயணிதேவியை இங்கே பிரதிஷ்டை செய்தார். அவரு சொல்லி வரைஞ்சுகுடுத்த பிரகாரம் மயிலாடி வலியசில்பி வல்லபன் மாராயன் செதுக்கினதாக்கும் கர்ப்பகிருகத்திலே உள்ள சில்பம்

கரைமாடம்பி வலியகாளிப் பிள்ளை மைலாடியிலே இருந்து கல்லாசாரிகளைக் கொண்டுவந்து தங்கவச்சு இங்கே இந்த கோயிலை கட்டினார். அதோடே இந்த ஊரிலே எல்லா சீக்கும் நீங்கி ஐஸ்வரியம் நிறைஞ்சுதுன்னு ஐதீகம். இந்த ஊருக்கே அதுக்குப்பிறகுதான் பொன்னுமங்கலம்னு பேரு வந்தது. இந்த கோயிலுக்கு மங்கலஸ்தானம்னு பேரு. இங்கே அஷ்டதிக்பாலகர்கள் அஷ்டதிக்கஜங்கள் யக்ஷிகின்னராதி தேவர்கள்னு எல்லா ஐஸ்வரியங்களும் உண்டு.

“இங்கே தேவிக்கு சர்வமங்கல்யைன்னு பேரு… ஒவ்வொருநாளும் அஷ்டமங்கலம் காட்டி பூஜை நடக்கும். இந்த பகுதிகளிலே கல்யாணத்துக்கு நாள்குறிச்சதுமே பெண்ணை மங்கலவஸ்திரமும் ஆபரணமும் அணிவிச்சு தாலம்நிறைய அஷ்டமங்கலங்களோடே இங்கே கூட்டிட்டு வந்து கும்பிட்டுட்டுப் போற வழக்கம் உண்டு” என்று நான் சொன்னேன்

தந்த்ரி என்னை நோக்கித் திரும்பி “சரிடே, நீ சொல்லுற சரித்திரம் சரீன்னே வைச்சுக்கிடுவோம். இது மகாமங்கலை பகவதிக்க கோயில் தானே? இங்கே எல்லா மங்கலங்களும் உண்டுன்னு சொன்னே. இந்த தேவி எது, இது மங்கலமூர்த்தியா?” என்றார்

“இது ஜ்யேஷ்டாதேவி” என்றேன்

“ஆமா, அதாவது அக்கா , மூதேவி. சேட்டைன்னு சொல்லுதோமே அது. பாரு, சாமுத்ரிகா லட்சணத்துக்கு நேர்எதிரான எல்லா லட்சணங்களும் உள்ள உடம்பு. சுத்தி என்னென்ன வைச்சிருக்கே? கஷ்மலம், இல்ல? துடைப்பம், முடி, சாம்பல்… மலம் உண்டாடே?”

நான் ஒன்றும் சொல்லவில்லை

“சொல்லு, மலம் உண்டா?”

நான் மிக மெல்ல “உண்டு” என்றேன்

“அய்யய்ய… எங்க?”

“அது அங்க அந்த சிவப்பு துணியிலே சுத்தி வச்சிருக்கு. உலந்ததாக்கும்”

“போதுமா?”என்று அவர் கோயில் கமிட்டியினரை நோக்கிச் சொன்னார். “இதை இங்க வச்சிட்டு என்ன ஓய் சர்வமங்கலம்?”

அவர்கள் என்னை பார்த்தார்கள். “நான் இது அக்காவாக்கும்… பகவதிதேவிக்கு அக்கா. அக்கா இல்லாம அவ இருக்க மாட்டா” என்றேன்

“சாஸ்திரப்படி…” என்று சங்கரநாராயணன் செட்டியார் தொடங்க நான் இடைமறித்தேன்

“செட்டியார்வாள், சாஸ்திரபப்டி ஒரு அமங்கலம் இல்லாமல் மங்கலம் நிறைவடையாது.சம்பூர்ண மங்கலமான ஒரு எடமோ ஒரு பொருளோ இந்தப்பூமியிலே கிடையாது. பூவு மங்கலம்னா வேரு அழுக்கிலே ஊறியாக்கும் நின்னுட்டிருக்குதது.அதாக்கும் இந்த பிரபஞ்சலீலை… இது தெய்வமங்கலம், அதனாலே இங்கே தெய்வ அமங்கலம் உக்காந்திட்டிருக்கு” என்றேன்.

நான் சொன்னேன்.“இவ பீடைக்க தெய்வம். இருட்டுக்கும், துன்பத்துக்கும், சீக்குக்கும், மரணத்துக்கும், அழுக்குக்கும் ,கசப்புக்கும் எல்லாம் தெய்வம் வேணும். ஏன்னா அதெல்லாம் இங்க இருக்கு. நாம இல்லேன்னு நினைச்சா இல்லாம ஆகிடாது… நாம மறைச்சா மறைஞ்சிராது. வெளிச்சத்தையும் சந்தோஷத்தையும் சுகத்தையும் சுத்தத்தையும் இனிப்பையும் மட்டும் வச்சுகிட்டு ஆரும் இங்கே வாழ்ந்திட முடியாது”

“போதும் போ, உங்கிட்ட சாஸ்திரம் படிக்கவேண்டிய நிலைமையிலே நான் இல்ல, புரியுதா?” என்றார் தந்த்ரி

“இந்த சாஸ்திரம் உங்களுக்குத் தெரியல்லை திருமேனி, அதாக்கும் அடியேன் சொல்லுகது” என்றேன். “புதைச்சு வைக்கிறது முளைக்கும். விருட்சமா தலைமேலே எந்திரிச்சு நிக்கும். அதனாலே நன்மையைத்தான் புதைச்சு வைக்கணும். தீமையை கண்முன்னாலே நிறுத்தணும். தேவி நீ எப்பவும் இருப்பே, நீ நிரந்தரி, நீ சர்வசக்தை, உன் சக்திக்கு முன்னால் நான் க்ஷணகுமிழி, அற்ப தூசுக்கும் தூசுன்னு சொல்லணும். பயப்படக்கூடாது. தயங்கக்கூடாது. அருவருப்பும் கூச்சமும் வரப்பிடாது. அஷ்டமங்கலையா உக்காந்திட்டிருக்கிற பகவதியை கும்பிடுத அதே பயபக்தியோட அதே பரவசத்தோடே மனசு நிறைஞ்சு கும்பிடணும். அடிபணியணும். திருப்பாதங்களை தலையிலே சூடிக்கிடணும்”.

“இனிப்பு நல்லதாக்கும், ஆனா இனிப்பு நோயைத்தரும். கசப்பு கெடுதலாக்கும், ஆனா அளவோடு சாப்பிடுத கசப்பெல்லாம் மருந்து” என்று நான் சொன்னேன். “சந்தோஷமும் ஐஸ்வரியமும் மட்டும் உள்ள இடத்திலே போகம் வளரும்.போகம் வளர்ந்தா அங்கே தர்மசிந்தை அழியும். துன்பமும் சீக்கும்கூட வாழ்க்கைதான்ன்னு நினைக்குதவன் மனசிலே மட்டும்தான் தர்மசிந்தை இருக்கும். அதனாலேதான் ஜ்யேஷ்டையை தர்மசம்வர்த்தினீன்னு சொல்லுதோம்”

“பகவதி மகாமாயை. இவதான் அவ, அவதான் இவ” என்று நான் சொன்னேன். குளிர்கண்டவன் போல நடுங்கிக்கொண்டிருந்தேன். “சீக்கை மறந்தவனுக்கு ஆரோக்கியம் இல்லை. அழுக்கை மறந்தவனுக்கு சுத்தம் இல்லை. மலத்தை ஒதுக்குகிறவனுக்கு முக்தியும் இல்லை” என்றேன். “அம்மை இங்கே இருந்து இந்த நாட்டை அனுக்ரகிக்கிறாள். இந்த கோடி இழையுள்ள வீராளிப்பட்டுலே பகவதி ஊடுன்னா இவ பாவு… ”

சங்கரநாராயணன் செட்டியார் என் சொற்களால் மனம்நகர்ந்தவராகத் தெரிந்தார். நான் அவரை நோக்கி திரும்பி  “செட்டியாரே, உம்ம மகனுக்கு மனசு பேதலிச்சப்ப நீங்க இங்கதான் வந்தீரு. அம்மை அருளாலே இப்ப அவன் படிச்சு வேலைக்கு போறான்…”

“ஓ, அப்டி ஒரு வியாபாரமா உமக்கு?”என்றார் தந்த்ரி “நல்ல தட்சிணை தேறுதுபோல?”

“திருமேனி, எட்டு பூசை நடத்திக்குடுத்ததுக்கு செட்டியார் எனக்கு மொத்தமா தந்தது முந்நூறு ரூபாயாக்கும்… நான் பேசுதது பைசாவைப் பத்தி இல்லை” என்றேன். “எல்லாரும் கேளுங்க. அங்க இருக்கிற பகவதி சௌந்தரிய மாதாவாக்கும். அலங்கரிச்சு உக்காந்திட்டிருக்கிற அம்மை. பிள்ளை அழுதா உடனே வந்திரமாட்டா. இவ விரூபமாதா. அடுக்களைக்கரியும் தொழுத்துச்சாணியும் பூசியிருக்குத நம்ம அம்மைகளைப்போல. இவ நம்மளை அடிப்பா, அடிச்சுட்டு அவளே அழுவா. முலையூற கைநிறைய அள்ளி அள்ளிக் குடுப்பா”

“செட்டியாரே, இங்க உள்ள சீக்கெல்லாம் இந்த மூர்த்தியாலே வாறதாக்கும்” என்றார் தந்த்ரி “இவ வேணுமா உங்களுக்கு… முடிவெடுத்து சொல்லுங்க”

“என்ன முடிவு? யாரு முடிவெடுக்குதது? இவளுக்க ஆஸ்தானமாக்கும் இந்தக் கோயில்” என்று நான் சீற்றத்துடன் கூவினேன்

“இவங்க இந்தகோயிலுக்க டிரஸ்டிகள்,நான் தந்திரி. நாங்க போதும் முடிவெடுக்க. சொல்லுங்க இவளும் இவ குடுக்குத சீக்கும் வேணுமா?”

“சீக்கில்லாத வாழ்க்கை உண்டா? இருட்டாம விடியுமா?”என்றேன் “சீக்கை மறைச்சா சீக்கு மறைஞ்சிருமா? அம்மை சீக்குக்க அதிதேவதை. சீக்கை நோக்கி அம்மே தாயே மகாமாயேன்னு விளிக்கணுமானா இவ இங்க இருக்கணும்” என்று நான் உரக்கக் கூவினேன். என் குரலைக் கேட்டு நானே விசும்பி அழத்தொடங்கினேன் “திருமேனீ, ஏழு தலைமுறையாட்டு எங்க மந்திரம் ஒருநாள் மூவேளை தவறாம இங்க நிறைஞ்சிட்டிருக்கு. அம்மையை உயிர்கொடுத்து கட்டுப்படுத்தி நிப்பாட்டிட்டு இருக்குத மந்திரம் எங்களுக்கு வசமாக்கும்… ஒரு நோன்பு குறைச்சதில்லை. ஆத்மபலிகுடுத்து செய்யுத உபாசனையாக்கும் இது”

“என்ன மந்திரம் சொல்லும் பாப்பம்”

“அது ஆப்த மந்திரம்…”

“என்னன்னு எனக்கு தெரியும்” என்று தந்த்ரி ஏளனமாகச் சொன்னார்.  “அதெல்லாம் காணிக்காரன் சொல்லுத மந்திரம். தந்த்ர சாஸ்திரத்திலே அதுக்கெல்லாம் இடமில்லை”

நான் “அப்டி சொல்லக்கூடாது. மந்த்ரம் அநாதியாக்கும்” என்றேன்

“போவும் வே” என்றபின் அவர் திரும்பி கமிட்டியினரிடம் “என்னவே, என்ன முடிவு? இந்த சீக்குதேவி இங்க இருக்கணுமா வேண்டாமா? முடிவு எடுத்துச் சொல்லுங்க. எனக்கு வேலை இருக்கு” என்றார்.

கோயில்கமிட்டி தலைவர் மணக்கரை பத்மநாப பிள்ளை திரும்பி ஸ்ரீகாரியம் நாராயண பிள்ளையிடம் “தந்த்ரி திருமேனி சொல்லுகதிலே காரியமுண்டு. நானும் அதை யோசிச்சதுண்டு. இந்த மகாமங்கலை கோயிலிலே இந்த அழுக்குமுண்டை என்னத்துக்கு?” என்றார்

“ஆனா…”என்றார் சங்கரநாராயணன் செட்டியார்

தந்த்ரி “அந்தக்காலத்திலே இந்த கோயிலை இங்க வைச்சாங்கன்னா அன்னைக்கு இன்னைக்கு மாதிரி மாடர்ன் மருந்துகள் இல்லை. காலராவுக்கும் வைசூரிக்கும் பிளேக்குக்கும் ஜனங்கள் பயந்திட்டிருந்தாங்க. அந்த பயத்தாலே இந்த தெய்வத்தை வச்சு கும்பிட்டாங்க. இந்த தெய்வம் அவங்களைக் காப்பாத்தல்லை, வெள்ளைக்காரன் மருந்துதான் காப்பாத்திச்சு. இப்பவும் சீக்குவந்தா டாக்டர்கிட்டதான் ஓடுதோம், யாரும் இங்க வாறதில்லை. நாம அப்ப பயந்ததுக்கு சாட்சியா இந்த பீடைத்தெய்வம் இங்க உக்காந்திட்டிருக்கு” என்று சொன்னார்.

“இந்த காலத்திலே இந்தமாதிரி காட்டுமூதேவித் தெய்வங்களை இங்க வச்சு கும்பிட்டா நம்மளை பாக்கிறவன் காட்டாளன்னு சொல்லுவான். இப்ப ஒரு வெள்ளைக்காரன் நம்ம கோயிலுக்குள்ள வந்து இப்டி ஒரு தெய்வத்தை பார்த்தா என்ன சொல்லுவான்? பேய் மாதிரி தெய்வம். பீய படைச்சு கும்பிடுதோம். வெளங்குமா? நம்மள ஆப்ரிக்க காட்டாளன்னு சொல்லிடமாட்டானா?”  என்று தந்த்ரி மற்றவர்களை பார்த்து கேட்டார்“சகல ஐஸ்வரியமும் தாறதுக்கு மங்கலப் பகவதி போதாதா? போதாதா வே?”

“போதும்” என்று  மணக்கரை பத்மநாப பிள்ளை சொன்னார் “பூத்த கொன்றை மாதிரி அம்மை இருக்கிறப்ப வேற தெய்வம் எதுக்கு?”

“அப்ப கேப்பீங்க, அவளா தாறான்னு. உண்மை, அவ தரல்லை. அது கல்லுச் சில்பம். ஆனா நாம அதுக்குமேலே சார்த்துகள் வைக்குதோம். பொன்னும் மணியும் பூவும் பட்டும் சந்தனமும் குங்குமமும் சார்த்துதோம். சங்கீதமும் கவிதையும் சார்த்துதோம். மந்திரம் சார்த்துதோம். அதெல்லாம் நம்ம மனசிலே இருந்து எந்திரிச்சு வாறது. நம்ம மனசுக்க ரூபங்கள் அதெல்லாம். நாம  அங்க பகவதியா பாக்குதது நமக்கு உள்ள இருக்கிற ரூபத்தையாக்கும்”

“மங்கலரூபத்தையும் மங்கல வஸ்துக்களையும் பார்த்தா நம்ம மனசு மங்கலமாயிடும். நம்ம கண்ணிலயும் செவியிலயும் மனசிலயும் சொப்னத்திலயும் சுஷுப்தியிலயும் சாந்தியும் சந்தோஷமும் நிறையும். அதான் தெய்வவழிபாட்டுக்க ரகசியம். உபாசனை எல்லாமே ஆத்ம உபாசனைதான்… அவ்ளவுதான் சாஸ்திரம். என்ன சொல்றீங்க? வெளிச்சமா இருட்டா எது வேணும்?” என்றார் தந்த்ரி

“வெளிச்சமில்லாம இருட்டில்லை திருமேனி” என்று நான் சொன்னேன்.

“டேய், அந்தால போ” என்றார்  ஸ்ரீகாரியம் நாராயண பிள்ளை

கமிட்டித் தலைவர் மணக்கரை பத்மநாப பிள்ளை “இந்த தெய்வம் இங்க வேண்டாம்… எங்க முடிவு அதாக்கும். என்ன செட்டியாரே?”என்றார்

“ஆமா…”என்றார் சங்கரநாராயணன் செட்டியார்

“பிறகென்ன?”என்றார் ஸ்ரீகாரியம் நாராயண பிள்ளை

தந்த்ரி கையை நெஞ்சில் குவித்துவைத்து கண்மூடி மந்திர உச்சாடனம் செய்யத் தொடங்கினார். அவருடைய உதடுகள் துடித்தன. மற்றவர்கள் கைகூப்பி நின்றார்கள்.

நான் “திருமேனி, திருமேனி, கருணை காட்டணும்… கருணை காட்டணும் தம்புரானே” என்று அழுதேன்

அவர் மந்திரம் முடித்து எழுந்து சிலையை பிடித்து மும்முறை உலுக்கி பீடத்திலிருந்து பெயர்த்து எடுத்தார். அதை அந்த நீலப்பட்ட்டால் பொதிந்து தூக்கிக்கொண்டார்

அந்தக் காட்சி ஒருகணம் எனக்கு கனவு போலிருந்தது. அத்தனை எளிதாக சிற்பம் உடைந்துவரும் என்று நான் நினைக்கவில்லை. வெறுமையான பீடம் என்னை திடுக்கிடச் செய்தது நான் “திருமேனீ… வேண்டாம் திருமேனீ” என்று கூவியபடி அவர் காலில் விழுந்தேன்

“எந்திரிச்சு போடா” என்று ஸ்ரீகாரியம் நாராயண பிள்ளை என்னை பிடித்து தூக்கி அப்பால் வீசினார். நான் மல்லாந்து விழுந்தேன். கல்தூணில் என் தலைமுட்டியது

அவர்கள் நடந்து அகன்று சென்றார்கள். நான் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டு படுத்திருந்தேன். ஏதோ நிகழப்போகிறது என்று எதிர்பார்ப்பவன்போல. என் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. கைகளை நெஞ்சில் கூப்பி வைத்திருந்தேன்.

அவர்களின் கால்கள்தான் சென்றுகொண்டே இருந்தன. என்னால் நம்பமுடியவில்லை. ஸ்ரீகாரியம் நாராயண பிள்ளை ஒருமுறை திரும்பிப்பார்த்தார். அதைக்கண்டு மணக்கரை பத்மநாப பிள்ளை திரும்பிப் பார்த்தார். ஒன்றுமே நடக்கவில்லை. உண்மையிலேயே ஒன்றும் நடக்கவில்லை.

என்முன் நான் இருபதொரு ஆண்டுகள் பூஜைசெய்த சிறுகோயிலின் கருவறை கண்பிடுங்கிய குழிபோல தெரிந்தது. என் அப்பா நாற்பத்திரண்டு ஆண்டுகள் அங்கே பூஜைசெய்தார். அவர் அப்பா அங்கே முப்பதாண்டுகள். அவர் அப்பா வாழ்நாளெல்லாம்.

நான் என்ன செய்யவேண்டும்? தேவீ என்று அலறவேண்டுமா? எழுந்து சென்று அந்தக் கல்படியில் மண்டையை மோதி உடைக்கவேண்டுமா? வானம் நோக்கிக் கதறவேண்டுமா? அப்படியென்றால் என்ன நடக்கும். இந்தக் கோயில் இடிந்து விழுமா? அந்த ஆலமரம் சரியுமா? இடிமின்னலுடன் புயல் எழுமா?

என் உடல் சோர்ந்து செயலற்றிருந்தது. கைகால்கள் செத்துக் குளிர்ந்திருந்தன. என் கண்களிலிருந்து சொட்டிய கண்ணீரும் குளிர்ந்திருந்தது

சாமி கும்பிட வந்த அணைக்கல் கிருஷ்ணபிள்ளையும் நாராயணன் நாடாரும் என்னை நோக்கி விரைந்து வந்தனர்

“என்ன ஆச்சு? என்னவே?”என்றார் கிருஷ்ண பிள்ளை

“சாமிய, தந்த்ரி…”என்று கைகாட்டினேன். என்னால் பேச முடியவில்லை, அழுகையில் குரல் உடைந்து தெறித்தது

“சாமிய கொண்டுபோயிட்டாரா? எங்க? எதுக்கு?”

அவர்கள் அத்திசை நோக்கி ஓடிச்சென்றார்கள். நான் அவர்கள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தேன். கூடவே மானசீகமாக ஓடிவிட்டு மீண்டும் திரும்பி என் சன்னிதிமுன் வந்தேன். நான் நினைவறிந்த நாள்முதல் வாழ்க்கையில் பெரும்பகுதியை அந்த நான்கு கல்தூண்களுக்கு நடுவே கழித்தவன். அங்கிருந்து விலகி எங்குசென்றாலும் பதறிக்கொண்டிருப்பேன். சொந்த வீட்டில்கூட.

நீலாப்பிள்ளை அம்மச்சியும் ஒரு சிறுமியும் வந்தனர். கோயில் வாட்ச்மேன் சுகுமாரன் அவர்களிடம் மெல்ல பேசினார். நீலாப்பிள்ளை அம்மச்சி என்னை நோக்கி  “நல்ல காரியம், கோயிலுக்குள்ள அந்தப் பீடை என்னத்துக்கு? இருந்த எடம் வெளங்கா மூதேவி… போனது நல்லது” என்றாள்

வாட்ச்மேன் சுகுமாரன் “கொஞ்சநாளா பலரும் சொன்னதாக்கும்” என்றார்

“நாம செய்ய முடியுமா? தந்த்ரிகள் செய்யணும்…நல்லதாப்போச்சு”

நான் எழுந்து அவர்கள் சென்ற திசைநோக்கி ஓடினேன். நான் செய்வதற்கு ஒன்றே உள்ளது. அந்தச் சிலையை நான் பிடுங்கிக்கொள்வேன். அது என் குடும்பத்தின் உபாசனா மூர்த்தி. என் சொத்து அது. இத்தனைகாலம் என் குடும்பம் உச்சாடனம் செய்த மந்திரங்களும் செய்த பூஜைகளும் திகழும் சிலை அது. அதை நான் கொண்டுசென்று என் வீட்டில் வைத்துக்கொள்கிறேன். அங்கே நான் பூஜை செய்கிறேன்.

ஆமாம், நானே வழிபடுகிறேன். வேறு ஒருவரும் வழிபடவேண்டாம், நான் மட்டும் அதை பூஜைசெய்கிறேன். அழுக்கு இருட்டு சீக்கு வறுமை. அது என் விதி. என் அப்பாவும் தாத்தாவும் ஏழுதலைமுறை மூதாதையரும் போன பாதை. இதை இழந்தால் என்ன செய்வேன்? சோறு கிடைக்கலாம், ஆனால்  நான் உயிருடனிருப்பதற்கு என்ன பொருள்?

நான் ஓட ஓட என்னுள் சொற்கள் பெருகின. அந்தச்சிலையை தூக்கிச் செல்ல அவர்களுக்கு உரிமை இல்லை. தந்த்ரியாவது மயிராவது, நான் பயந்தது அவருடைய கிரிமினல் தந்திரத்தை அல்ல. என் வேலைக்காக பயந்தேன். என் தட்டுக்காசுக்காக பயந்தேன். இதோபோய் அவரை மறிக்கிறேன். அவர் தடுத்தால் சங்கைக் கடித்து துப்புகிறேன்.

நான் கோயிலைவிட்டு வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். அவர்கள் தேரிக்குளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். என் நெஞ்சு சுளுக்குபோல் இழுத்துக்கொண்டது. தேரிக்குளத்திற்குத்தான் போகிறார்கள். அது பத்தாள் ஆழமான குளம். கையொழியும் சிலைகளை ஆழமான நீரில் போடுவார்கள். உடைத்து பின்னப்படுத்தி வீசிவிடுவார்கள். அது ஒரு தெய்வ்த்தைக் கொலைசெய்வது.

என்ன அறிவின்மை!. தெய்வத்தை யார் கொல்ல முடியும்? அவர் கொலைசெய்வது என் மூதாதையர் செய்த தவத்தை. எங்கள் உபாசனைப் பலனை அவர் தூக்கி நீரில் போடப்போகிறார். இப்போது நான் என்ன செய்யவேண்டும்? கல்லை எடுத்து எறியவேண்டுமா? கூச்சலிடவேண்டுமா?

நான் கால்தடுக்கி குப்புற விழுந்தேன். என் வாய் மண்ணில் அறைந்தது. என் தலைக்குள் பொறி மின்னி வண்ணங்களாகி அழிந்தது. கையூன்றி எழுந்து அமர்ந்தபோது மண்ணும் ரத்தமும் எச்சிலுமாக கோழை வழிந்தந்து முன்வாயின் மேற்பல் ஒன்று கீழே சோற்றுப்பருக்கை போல கீழே புழுதியில் கிடந்தது. உதடு கிழிந்திருந்தது.

கையால் வாயை பொத்தியபடி எழுந்து ஓடினேன். என் உடல் ஆரோக்கியம் இல்லாதது. சரியான சாப்பாடு இல்லாதவன். எங்கும் கூனிக்குறுகி உடல் வளைந்தவன். கோழிபோல ஓடினேன்

அங்கே தந்த்ரி படிகளின் வழியாக நீரில் இறங்கிவிட்டார். சிலையை கற்படிகளில் வைத்து அப்பாலிருந்த இன்னொரு கல்லை எடுத்து அதன் மூக்கை தட்டி உடைத்து மூளியாக்கினார்

தேரிக்குளம் தாமரை மண்டியது. நீர்ப்பரப்பில் குஞ்சன் அக்கானி காய்ச்சும் பெரிய வட்டத் தகரப் பாத்திரத்திதை படகாக்கி அமர்ந்து கையால் துழாவிக்கொண்டு பூப்பறித்துக் கொண்டிருந்தான். தந்த்ரி கைகாட்டி அவனை அழைத்தார். அவன் அருகே வந்ததும் சிலையை மும்முறை நீரில் முக்கி எடுத்து அந்த பாத்திரத்தில் வைத்து கைவீசி ஆணையிட்டார்

நான் மெல்ல மெல்ல கால்வைத்து நடந்துகொண்டிருந்தேன். அவன் கையை துடுப்பாக்கி உந்தி குளத்திற்குள் சென்றான். சிலை குளத்தின் நடுப்பகுதிக்குச் செல்வதை பார்த்தபின் உடல் தளர்ந்து நின்றுவிட்டேன். நெஞ்சு பதைக்கும் கடுமையான தாகம்தான் எழுந்தது.

குஞ்சன் அதை எடுத்து நீரில் போட்டான். நீர் பிளந்து அதை உள்ளிழுத்துக்கொண்டது.நான் எந்த எண்ணமும் இல்லாமல் அதை பார்த்துக்கொண்டு நின்றேன். பின்னர் கால்தளர்ந்து அமர்ந்துகொண்டேன்

தந்த்ரி நீரில் இறங்கி மும்முறை மூழ்கி எழுந்தார். அவர்கள் மெல்ல பேசியபடி திரும்பி வந்தனர். தந்த்ரி நடந்த வழியெங்கும் மணல்மேல் நீர் ஊறிச்சொட்டியது.

வழியில் வெறுந்தரையில் அமர்ந்திருந்த என்னை தந்த்ரி ஓரக்கண்ணால் பார்த்தார். மற்றவர்களும் பார்த்தனர் ஆனால் பேச்சை தொடர்ந்தபடி கடந்துசென்றனர். தந்த்ரி ஏதோ சொல்ல மெல்லிய சிரிப்பொலி கேட்டது.

நான் அங்கெயே அமர்ந்திருந்தேன். அந்தி சீக்கிரமே இருட்டிவிட்டது. வானம் மரங்கள் நிழலுருக்களாக மாறின. குளத்தின் நீரிலிருந்து குளிர்ந்த காற்றுவீசியது. தாமரை இலைகளில் இருந்த நீர்மணிகள் மின்னிக்கொண்டிருந்தன. அவற்றை மீனின் கண்கள் என்பார்கள். கண்கள் மட்டுமே கொண்ட மீன்கள் அவை. வானும் இருண்டது. நீர்மணிகள் மேலும் நெடுநேரம் மின்னிக்கொண்டிருந்தன

கோயிலில் பூசை நடக்கும் ஓசைகள் கேட்டன. அன்று நல்ல கூட்டம். தந்த்ரி வந்திருப்பதனால் வந்த கூட்டமாக இருக்கலாம். அவர்கள் எவரும் என் தெய்வம் அங்கிருந்து விலகியதைப் பற்றி கவலை கொண்டிருக்க மாட்டார்கள்.

இல்லை, ஒரு சிலர் இருக்கலாம். பலர் அவர்களின் இக்கட்டுகளில் ஜ்யேஷ்டையை பிரீதிப்படுத்த ஓடிவந்தவர்கள்தான். ரகசியமாக பூஜை செய்தவர்கள் மேலும் பலர். நான் அவர்களிடம்தான் போகவேண்டும்.

நான் குளத்தில் இறங்கி என் முகத்தை கழுவிக்கொண்டேன். உதட்டில் நீர் பட்டபோது அரத்தால் அறுத்ததுபோல எரிந்தது. ரத்தம் கலங்கிக் கலங்கி வந்துகொண்டிருந்தது.  என் வேட்டி எல்லாம் ரத்தமும் மண்ணும் படிந்திருந்தது.

உடலில் நீர் வழிய நான் கோயில் முகப்புக்கு வந்தேன். உள்ளே தேவியின் கருவறை நூறுதீபங்களுடன் பொன்னொளியில் மின்னிக்கொண்டிருந்தது. வெளியே வந்த நாகராஜன் சிரித்தபடி“என்ன பண்டாரம், உம்ம சாமிய தூக்கி தண்ணியிலே போட்டாச்சு போல?”என்றார்.

அவனுடன் வந்த உலகநாதன் ஆசாரி “அந்தப் பீடை இங்க இருந்து சீக்குல்லா பரப்பிச்சு… நாசம்பிடிச்சது. அதை இப்பமாவது தூக்கி போட்டாங்களே” என்றார்.

நான் கைகளை கூப்பியபடி கண்களிலிருந்து நீர் வழிய நின்றேன். என்னை ஒவ்வொருவராக கடந்து சென்றார்கள். அனைவருமே ஏளனமாக ஏதாவது சொன்னார்கள்

“பீடைய பிடிச்சுகிட்டு இருந்தான். இப்ப அது போச்சுன்னு சொல்லி அளுவுதான்” என்றார் நாகலிங்க நாடார்

கணேசன் “ஏம்வே, வேற வல்லதும் சோலி செய்து சீவிக்கலாமே…பேயைக் கும்பிட்டு எளவு பேய்மாதிரில்லாவே இருக்கேரு” என்றான்

வடக்கே கார் வந்து நிற்கும் முற்றம். அங்கிருந்து தந்த்ரியும் பிறரும் சென்ற ஓசை கேட்டது. கோயில் ஆளொழிந்தது. நான் மெல்ல நடந்து முகவாசல் வழியாக உள்ளே போனேன். நேர் எதிரில் பகவதியின் கருவறை சரவிளக்குகளும் தூக்குவிளக்குகளும் சுற்றுவிளக்குக்ளும் நிலைவிளக்குகளும் அடுக்குவிளக்குகளுமாக ஒளியுடன் தெரிந்தது

முகமண்டபத்தருகே சென்று தூணில் சாய்ந்து நின்றுகொண்டேன். வாட்ச்மேன் சுகுமாரன் “ஆருவே?” என்றார். பின்னர் என்னை கூர்ந்து பார்த்து   “அய்யோ, வே அணைஞ்சபெருமாள், நீரா வே? என்னது இது? விளுந்தேரா? மூஞ்சி அப்டி வீங்கிப்போச்சே” என்றான்

நான் ஒன்றும் சொல்லாமல் நின்றேன்

போற்றி கருவறைக்குள் இருந்து வெளியே வந்து “நடை சாத்துத நேரம்… வேணுமானா கும்பிட்டுப்போங்க” என்றபிறகு என்னை அடையாளம் கண்டு “வே அணஞ்சி, வே, என்ன? அடிபட்டிருக்கே? கம்பவுண்டருக்கிட்ட போவும் வே” என்றார்

நான் இல்லை என்று தலையசைத்தேன்

போற்றி தணிவாக “நீரு கவலைப்படாதீரும். நீரும் நானும் எல்லாம் பிச்சைக்காரக் கூட்டம். பிச்சைக்காரனுக்கு அதுக்கும் கீள போக வளியில்ல பாத்துக்கிடும்” என்றார். “நான் நாளைக்கோ மறுநாளைக்கோ  மணக்கரை பத்மநாப பிள்ளைக்க வீடுவரை போயி பேசிப்பாக்குதேன். ஆளு மடையனும் கர்விஷ்டனுமாக்கும். இந்த கமிட்டிக்காரனுகளிலே கர்வக்காரனான மடையன்தான் நல்லவன், மத்தவனுக திருடனுக. அவரை கொஞ்சம் ஏத்திவிட்டா நல்லது செய்வான். உமக்கு இங்கியே ஒரு சின்ன வேலை போட்டு குடுக்கச் சொல்லுதேன். பூகட்ட பூசைப்பண்டம் வெளக்கன்னு ஜோலிகள் உண்டு….பாப்பம்” என்றார்

நான் ஒன்றும் பேசாமல் நின்றேன்

“கம்பவுண்டரிட்ட போயி ஒரு ஊசிய போட்டு மருந்தப்போடும். வீட்டிலே போயி படுத்து உறங்கும். எல்லாம் நாளைக்கு பாப்பாம்” என்றார் போற்றி . வேட்டியில் இருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து தந்து “இந்தாரும்வே, போயி மருந்த வாங்கும். மிச்சத்தை கெட்டினவ கையிலே குடும்”

“வேண்டாம்” என்றேன்

“இன்னைக்குள்ள தட்டுக்க்காசுவே… இன்னைக்கு நல்ல கூட்டம்லா?”

“வேண்டாம்”

“வையும் வே, நான்லா குடுக்கேன்? கைநீட்டுதவனுகளுக்குள்ள என்ன ஏத்தம் எறக்கம்?” என்று அவர் பணத்தை என் கையில் தந்துவிட்டு போனார்

நான் அங்கேயே நின்றிருந்தேன். பின்னர் மண்டபத்தைச் சுற்றிக்கொண்டு போய் கருவறையை பார்த்தேன். ஒரு திகைப்பு ஏற்பட்டது. உள்ளே ஜ்யேஷ்டை அமர்ந்திருந்தாள்.

“அய்யோ” என்றேன்

“என்னவே?”என்று சுகுமாரன் கேட்டான்

“ஒண்ணுமில்லை” என்றேன்.

அது பகவதிதான். ஆனால் அளவு, அமர்ந்திருக்கும் முறை எல்லாம் அப்படியே என் உபாசனாதேவதை. அக்கா தங்கையேதான்.

நான் பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன். பிறகு வடக்குவாசல் வழியாக வெளியே சென்றேன். அது கார் நிறுத்தும் முற்றத்தை நோக்கிச் சென்றது.  அங்கே கார்கள் ஏதுமில்லை. அப்பால் ரோட்டில் நின்றிருந்த விளக்குத்தூணிலிருந்து சிவப்பு வெளிச்சம் விழுந்து பரவியிருந்தது. இலைகள் காகிதங்கள் என குப்பைகள் காற்றில் அலைபாய்ந்தன.

முற்றத்தின் மறுபக்கம் பெரிய ஆலமரம் ஒன்று உண்டு. விழுதுகள் ஊன்றி கிளைகளை நீட்டி பரவியிருக்கும். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அது கைகளை நீட்டி பரவுவதாக பிரமை ஏற்படும். அதன் விழுதுகள் உருண்டு அலையலையாக மேலெழுந்த பாறையின் மேல் படிந்து ஊன்றி உருகி வழிந்திருக்கும்

அந்தப்பாறை அப்படியே ஏறி கோயிலுக்கு மேற்கே எழுந்துவிடும். எங்கள் கோயிலுக்கு மேற்குதிசை இல்லை. அங்கே மிகப்பெரிய ஒற்றைப்பாறைதான். கன்னங்கரேலென்று தார் உருகியதுபோன்ற பாறை. அதன் உச்சிமேல் ஒரு ஆலமரம் உண்டு. மற்றபடி மொட்டைப்பாறைதான்

நான் ஆலமர விழுதின் மடிப்புகளில் மிதித்து பாறைமேல் ஏறிச் சென்றேன். தாழ்வான ஆலமரத்து கிளைகளில் மயில்கள் சேக்கேறியிருந்தன. என் அசைவை கண்டு விசிறிக்காற்று போல வால்சிறகு அசைவுடன் எழுந்து அப்பால் சென்று அமைந்து காவ் என்று ஓசையிட்டன. பாறையில் அவற்றின் எச்சம் வழுக்கியது.

நான் அதன்மேல் சின்ன வயசில் ஏறியிருக்கிறேன். அதன்பிறகு மேலே போனதே இல்லை. பொதுவாகவே எவரும் போவதில்லை. அங்கே ஆடுகளுக்குக்கூட மேய்வதற்கு ஒன்றுமில்லை. காலை பத்துமணிக்கே சுட்டுப்பழுத்து தகிக்க தொடங்கிவிடும். மழைக்காலத்தில் வழுக்கும்

மேலேறிச் செல்லச்செல்லத்தான் நான் ஏன் செல்கிறேன் என்று எனக்கு தெரிந்தது. பாறையின் மேற்குப்பக்கம் செங்குத்தானது. விளிம்பிலிருந்து நேரடியாக நூறடிக்குமேல் கீழே சென்று தேரிக்குளத்தின் கரையாக அமைந்த பாறைகளை அடையும். அங்கே தலைசிதறிக் கிடக்கும் என்னை நான் பார்த்துவிட்டேன்

மேலே அவ்வளவு இருட்டாக இருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. அது அமாவாசைக்கு முந்தையநாள். மழைக்கார் வேறு. வானம் முழு இருட்டாக இருந்தது. ஊரில் விளக்குகள் எரிந்தன, அந்த வெளிச்சம் ஆங்காங்கே மின்மினிகள் போல தெரிந்தது. பாறையின் கருமையால் நான் இருட்டையே மிதித்துச் செல்வதுபோல தோன்றியது

ஒரு சிறு முள்செடி பிசிறுபோல வளர்ந்து நின்றது. நான் முதலில் அதை ஏதோ விலங்கு என்று நினைத்து திடுக்கிட்டேன். அது செடி என்று தெரிந்ததும் பெருமூச்சு விட்டேன். சாகப்போகிறவன் ஏன் பயப்படவேண்டும் என்று நினைத்துக்கொண்டதும் சிரிப்பு வந்தது.

அதுவரை இருந்த கவனம் விலகியதுமே என் காலில் ஒர் உருளைக்கல் வழுக்கியது. நான் நிலைதடுமாறினேன். கால்களை ஊன்றியபோது என் வலுக்குறைந்த கால் மேலும் வழுக்கியது. பாறையில் விழுந்து எழ முயல்வதற்குள் உருளத் தொடங்கினேன்.

அத்தனை வேகமாக உருள்கிறோம் என்பதை கற்பனையே செய்ய முடியவில்லை. எங்கும் பிடி நிற்கவில்லை. என் கைகள் தவித்துப் பரிதவித்து அள்ளி அள்ளி வெறும்பாறையின் வழவழப்பை பற்றி சறுக்கின.

நான் சரிந்து ஒரு பாறையில் விழுந்தேன். அங்கிருந்து இன்னொரு பாறைக்கு. அங்கிருந்து இன்னொன்றுக்கு. அத்தனை ஆழமாக விழுந்தும் அடிபடவில்லை. இருட்டில் ஏதோ கைகள் மாற்றி மாற்றி என்னை பிடித்து பிடித்து இறக்கிக்கொண்டிருப்பதுபோலிருந்தது.

தரையை அடைந்ததும்தான் என் மனம் திரும்பி வந்தது.மண்ணில் புரண்டு எழுந்து முழந்தாளிட்டு அமர்ந்தபடி நான் எங்கிருக்கிறேன் என்று   பார்த்தேன். ஒரு கிணற்றுக்குள் ஆழத்தில் விழுந்துவிட்டிருக்கிறேன் என்று தோன்றியது. நான் விழுந்த துளை தலைக்குமேல் ஒரு பிளவு போல தெரிந்தது.

பிறகு மெல்ல என் இடத்தை புரிந்துகொண்டேன். அது மிக ஆழமான பாறைப்பிளவு. ஒரு மனிதன் உடல் அளவுக்கே இடைவெள் கொண்டது. பாறைப்பிளவுகளில் வழக்கமாக வளரும் முட்செடிகள் ஏதுமில்லை, ஏனென்றால் கீழே பாறைதான், மண் இல்லை.

அங்கிருந்து மேலே ஏறவே முடியாது என்று தெரிந்தது. அங்கே வரும் மழைத்தண்ணீர் ஓடையாகி ஒழுகும் வழி ஒன்று இருக்கும். அங்கே சென்றாலொழிய வெளியே போக முடியாது

நான் அந்தப் பிளவின் மறுபக்கம் நோக்கிச் சென்றேன். அந்தப்பாதை சற்றே இறங்கியது. வலப்பக்கமாக வளைந்து கீழே சென்றது. அங்கிருந்து குளிர்காற்று வந்தது. வழி இருக்கிறது,அதன் வழியாக வெளியேறிவிடலாம் என்று தெரிந்தது

ஆனால் என் வலப்பக்கம் ஒரு கற்பாறை விலகிய வழி தெரிந்தது. உள்ளே விளக்கசைவு. அந்த சுரங்கப்பாதையில் யார் நடமாடுகிறார்கள்? நான் அதன் வழியாக உள்ளே பார்த்தேன். அது சுரங்கப்பாதை அல்ல,ஒரு பெரிய கூடம் போன்ற அறை. உள்ளே சில பறையிடுக்குகள் வழியாக வந்த ஒளி அசைந்துகொண்டிருந்தது.

முற்றிலும் மூடப்பட்ட ஒரு குகை அது. எனக்கு எதனாலோ எந்த பயமும் ஏற்படவில்லை. அந்த இடத்திற்கு எப்போதோ கனவில் வந்திருப்பதுபோலத்தான் தோன்றியது. அந்தச் சிறிய துளைவழியாக உடலை நுழைத்து உள்ளே சென்றேன். என் காலுக்கு கீழே இருட்டு. தரை எத்தனை ஆழம் என்று தெரியவில்லை. ஆனாலும் குதித்தேன். ஆழம் அதிகமில்லை, பாறைத்தரையில் நின்றேன்

மிகப்பெரிய கூடம்போன்ற பாறைக்குகைக்குள் நான் நின்றுகொண்டிருந்தேன். மேலே கூரைவளைவு ஏழெட்டு ஆள் உயரமிருக்கும். அங்கிருந்து மலைத்தேனீக் கூடுகள் உறிக்கலயங்கள் போல தொங்கின. தேனீக்களின் ஓசை தம்புரா முழக்கம்போல கேட்டது

அக்குகையின் முகப்பு பெரிய கற்சுவரால் முழுமையாக மூடப்பட்டிருந்தது. அச்சுவரின் கீழிருந்த சிறிய இடைவெளிகளினூடாக உள்ளே சிவந்த ஒளிச்சட்டங்கள் வந்து குகையின் கூரையிலும் சுவர்களிலும் படிந்து விளக்குகள் போல சுடர்ந்தன. அந்த செவ்வெளிச்சத்திற்குமெல்லமெல்ல கண்கள் துலங்கத் தொடங்யபோது அதன் மறு உட்சுவரில் முழு உயரத்தையும் நிறைத்து புடைப்பாகச் செதுக்கப்பட்டிருந்த மாபெரும்  சிலையை பார்த்தேன்.

தெறித்த குமிழ்விழிகளுடன்  மகிஷியும் யக்ஷியும் பரிவாரதேவதைகளாக நின்றிருக்க ஜ்யேஷ்டா தேவி அமர்ந்திருந்தாள். எட்டு ஆள் உயரமிருக்கும். அவள் கால்களே என் தலைக்குமேல் இருந்தன.

நான் அவளை பார்த்தபடி மறந்துபோய் நின்றேன். பின்பு திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தேன். அந்தச் சுவரால் குகையை முழுமையாக மூடி அதற்கு அப்பால் மகாமங்கலை அன்னையின் கோயிலை கட்டியிருந்தனர். பகவதியின் கருவறை அச்சுவருக்கு அப்பால் இருந்தது. அங்கிருந்த விளக்குகளின் ஒளிதான் குகைக்குள் கசிந்துகொண்டிருந்தது

அப்பால் கருவறையில் இருந்த பகவதியின் சிலை இந்த ஜ்யேஷ்டாதேவிச் சிலையின் காலடியளவே இருக்கும். அங்கே போற்றி அர்த்தசாம பூசை செய்யும் மணியோசை கேட்டது. ஒளிச்சட்டங்கள் அசைந்தன.

நான் தலைக்குமேல் எழுந்து அமர்ந்திருந்த மூத்தவளின் முகத்தை நோக்கியபடி நின்றேன். அன்னையின் முகத்திலிருந்த ஏளனமும் வெறியும்  குரூரமும் என்னை நடுங்கச் செய்தன.வீங்கி தொங்கிய உதடுகளுடன் கைகூப்பியபடி இருளில் நின்றேன்.

முந்தைய கட்டுரைவெண்மலர் பறவை – அலகில் அலகு கவிதைத் தொகுப்பு குறித்து
அடுத்த கட்டுரைமடிவலையில்…