யானைப்படுகொலை

அன்புள்ள ஜெ,

இந்தச் செய்தியை வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எவ்வளவு கோரமானவர்கள் இந்த மனிதர்கள். விவேகானந்தர் 1897 இல் கேரளத்தைப் பைத்தியக்கார விடுதி என்றார். அதைப் போக்க பல ஆத்மாக்கள் உழைத்தனர். இது கேரளாவுக்கு மட்டுமான ஒன்றல்ல. ஶ்ரீலங்காவிலும் இது சகயம்.  நீங்கள் யானைகள் பற்றி எழுதிய மூன்று முக்கியமான கதைகள் உள்ளன. மத்தகம், யானை டாக்டர், ஊமைச்செந்நாய். இவற்றை என்னளவில் ஒரு உயரிய படைப்பாகவே எண்ணுகிறேன். இங்கு நான் பணியாற்றும் இடங்களில் என்னிடம் யானை வேலி அமைக்க அனுமதி கோருவோருக்கும், யானைவெடி கேட்போருக்கும் இந்தக் கதைகளை வாசிக்குமாறு ஒரு சிபார்சு செய்வதுண்டு. அவர்களில் எத்தனை பேர் வாசித்தார்களோ தெரியவில்லை. ஆனால் தினமும் யானைகள் கொல்லப்படுகின்றன.

உங்களுடைய யானை டாக்டர் கதையில் நீங்கள் கூறிய விடயங்கள் இன்றும் நடக்கின்றன. அதில் மனிதர்களை தாழ்த்தி யானையை பலபடி உயர்த்தினீர்கள். அது எப்போதும் உண்மை. அவற்றை ஒரு தீர்க்க தரிசனமாக எழுதியுள்ளீர்கள். யானைகள் இல்லை என்றால் தமிழ்ப்பண்பாட்டில் சங்க இலக்கியங்களைத் தூக்கி எறிய வேண்டியதான் என்ற உங்கள் கருத்து மிகவும் பாதிப்புறச்செய்வது. நிச்சயமாக இவர்களைப் போன்ற யானையைக் கொல்லும் மனிதர்கள் எவ்வகையிலும் சமூகத்துக்கு உபயோகமற்றவர்கள்.  மிக வேதனையளிப்பது அந்த யானையின் உத்தரித்த மரணம்.

சுயாந்தன்

***

பேரன்புள்ள ஜெ..!

நீண்ட நாட்களாய் உங்களுக்கு ஒரு கடிதம் எழுத நினைத்து, எந்த ஒரு காரணமும் இன்றி எழுதாமல் தங்களது எழுத்துக்களை ஆழ்ந்து  வாசிப்பதோடு என்னளவில் திருப்தியாக இருந்தேன்..

தங்களது “ராஜன்” சிறுகதை கடந்த வார இறுதியில் படித்தப்பின் ..தங்களுக்கு எழுத வேண்டும் என்கிற எண்ணம் காற்றில் பறக்கும் இறகாய் என்னுடன் மெலிதாக பயணப்பட்டு கொண்டிருக்கிறது..

இந்த மடல் எழுதும் சிறிது நேரத்திற்கு முன்பு, கேரளாவில் கடந்த மே 27ஆம் தேதி மனிதர்களால் தீங்கிழைக்கப்பட்டு பெருவலியுடன் போராடி மலப்புரம் வட்டாரத்தில் இறந்த பதினைந்து வயது கர்பவதி யானை பற்றி நிலம்பூர் வன அலுவலர் மோகன் கிருஷ்ணன் அவர்களின் பதிவை படித்தேன்…

https://m.facebook.com/story.php?story_fbid=2979525145456462&id=100001970187571

யானை – மனிதன் பூசல்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒன்றே, என்னதான் மனிதன் வாழ்வாதாரம் என்று அவன் பக்க நியாய தர்மங்களை அடுக்கினாலும்…மனிதர்கள் யானைகளுக்கு இழைக்கும் தீங்கு சமன் செய்ய இயலாத அளவிற்கு பெரும் பாவச்சசுமைகளாக நமது பக்கமே குடை சாய்ந்துள்ளது துலாபரம்…

விவசாயம், போக்குவரத்து, தோட்டங்கள், சொகுசு விடுதிகள், சாமியார் மடங்கள், சுற்றுலா, வனவிலங்கு புகைப்படத்துறை, ட்ராபிக்கிங், வேட்டை, மின்வேலி, பன்றிக் காய், உணவு, தண்ணீர், கோவில், உற்சவம் இன்னும் பல என்று நாம் யானைகளுக்கு கொடுக்கும் தொந்தராவுகளின் பட்டியல் ஒரு நீண்ட முடிவிலி..

முன்பெல்லாம், இத்தகைய சம்பவங்களை படிக்கும் அல்லது கேட்கும் பொழுதெல்லாம் திட்டி தீர்த்து புலம்பி தள்ளுவது வழக்கம்…ஆனால், இன்றோ அதையெல்லாம் கடந்து ஒரு பெரும் கரிய வெறுமையே மாமலையென அழுத்தமாக அமர்ந்துள்ளது… மனிதர்களோடமோ, அரசிடமோ இப்பிரச்சினைக்கான உண்மையான புரிதலோ தீர்வோ மாற்று வழியோ ஏற்படும் என்ற நம்பிக்கை முற்றிலும் நீங்கி விட்டது.

இந்த கடிதம் கூட எனது ஆற்றமையின் ஓருவெளிப்பாடகத்தான் இருக்க வேண்டும்..

பூதத்தான் கூற்றைப் போல . “இந்நாடு யானைக்கு வேண்டாம் ராஜாவே, இந்த மண்ணு வேண்டாம் ராஜாவே! நமக்கு ஆனப்புல்லு மண்ணுண்டு எனக்க பொன்னு ராஜாவே!” என்று எல்லா யானைகளையும் கூட்டிக்கொண்டு ஏழு கடல், ஏழு மலைகளை தாண்டி மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு காட்டுக்குள் சென்றுவிட வேண்டும்..!

அன்புடன்,

பிரசாத்

***

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு வணக்கம்.

சற்று முன் துக்ளக் வசந்தன் பெருமாள் அவர்களின் முகநூல் பக்கத்தில் இந்த பதிவை படித்ததில் இருந்து மனம் நிலைகொள்ளவில்லை.இப்படி ஒரு கொடுமையை ஒரு மிருகத்திற்கு அதுவும் கர்ப்பிணி பெண்யானைக்கு மலையாளிகள் செய்வார்கள் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இது என்ன விதமான மனோவியாதி?.

சில நாட்களுக்கு முன் கேரளத்தில், ஏதோ திருடிவிட்டார் என்ற குற்றத்திற்காக ஆதிவாசி ஒருவரை பலர் சேர்ந்து கடுமையாக தாக்கும் காணொளி ஒன்றை பார்க்க நேர்ந்தது,இன்று இந்த சம்பவம். மலையாளிகள் அன்பும், பண்பும் மிக்கவர்கள் என்று கருதியதெல்லாம் பொய் தானா ?

https://m.facebook.com/story.php?story_fbid=1483421488530579&id=100005882262789

அன்புடன்,

அ. சேஷகிரி

***

ராஜன் [சிறுகதை]

துளி [சிறுகதை]

ஆனையில்லா!” [சிறுகதை]

முந்தைய கட்டுரைநெடுநிலத்துள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்