நெடுநிலத்துள் – கடிதங்கள்

நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்

அன்புள்ள ஜெ

வரிசையாக வந்துகொண்டிருக்கும் கதைகளில் அகரமுதல்வனின் கதை கொஞ்சம் வேறுபட்டிருக்கிறது. உருவகக்கதை என்று சொல்லலாம். அல்லது நவீனத்தொன்மக்கதை என்று சொல்லலாம். ஈழத்தின் வரலாற்றை தொல்பழங்காலம் முதல் சமகாலம் வரை இணைக்க தொன்மம் வழியாக ஒரு முயற்சியைச் செய்திருக்கிறார்.

அந்த தொன்மத்தில் ஆர்வமூட்டும் அம்சமாக இருப்பவை இரண்டு விஷயங்கள் என்று தோன்றுகிறது.ஒன்று அதிலுள்ள மூதன்னை அம்சம். பூசாரியிலிருந்து வராமல் அம்மம்மாவிடமிருந்து அந்தக்கதை வருகிறது. அந்தத் தொன்மையான கதையின் சமகாலத்திலுள்ள ஊற்றாக அவர்களே இருக்கிறார்கள்

இரண்டாவது அம்சம் நாகர்களில் தங்களுடைய தொன்மையான தொடர்ச்சியை காண்பது. நாக நாக என்று சொல்லிக்கொள்ளும் மந்திரம் நாகநீள் நகரொடு நாகநாடதனொடு போகநீள் புகழ் மன்னும் புகார் நகர் என்று சிலம்பு மங்கலவாழ்த்துப்பாடல் சொல்கிறது. நாகநீள்நகர் இலங்கையிலிருந்தது, நாகநாடு என்பது இலங்கையே என்று சொல்லப்படும் ஒரு நம்பிக்கை உண்டு. புகாரிலிருந்து இணைத்துச் சொல்லப்படுவதனால் அந்தப் பார்வை வந்திருக்கிறது.

இந்தக்கதை தங்கள் தொல்மரபிலிருந்து சமகாலவீழ்ச்சி வரை ஒரே கதையிலே சொல்ல முற்படுகிறது. இந்தவகையான ஒரு சுயமீட்புக்கு மனிதப்பண்பாடுகள் எப்போதுமே தொன்மங்களைத்தான் தேடிச்செல்கின்றன. அவைதான் நீட்சியை நிலைநிறுத்தும். ஏனென்றால் அன்றாடவாழ்க்கையில் கடந்தகால நீட்சி பண்பாட்டு நீட்சி என்பதெல்லாம் கிடையாது. அது கனவில்தான் இருக்கிறது.

ஒரு வரலாற்றை கனவிலே சொல்லிப்பார்ப்பதுதான் தொன்மம் என்று காம்பலின் ஒரு சொற்றொடர் இருக்கிறது. இந்தக்கதை சொல்லப்பட்ட வரலாற்றையும் வஞ்சினத்தையும் கனவிலே சொல்லிப்பார்க்கும் ஒருமுயற்சி

ராமச்சந்திரன்

***

அன்புள்ள ஜெ,

பெரிய தீ வந்து புல் பொசுங்கிப்போனால் அதன் வேர் மண்ணுக்குள் இருக்கும். அது உயிருடன் இருந்து அதிலிருந்து மீண்டும் முளைக்கும். மீண்டும் முளைத்தெழவேண்டிய அந்த தேவை இருக்கும்போதுதான் புதைந்திருக்கும் வேரைத்தேடிச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இங்கே நாகவேர் தேடி கதை செல்வதும் அது ஒரு பாட்டியின் வாக்கிலிருந்து வெளிவருவதும் அதைத்தான் காட்டுகிறது. நெடுநிலத்துள் வேர்தேடிச் செல்லும் கதை என்று இதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

கிணற்று நீரில் மூக்குத்தியோடு நீந்திக்கொண்டிருந்தது ஒரு நாகபாம்பு. அதன் தித்திப்பான அசைவில் புராதனத்தின் ஆழம் பெருகிக்கொண்டே இருந்தது- என்ற வரியில் கதையின் மையம் துலங்குகிறது என்று நினைக்கிறேன்.

மகாதேவன்

***

அன்புள்ள ஜெ

தொன்மக்கதை நேரடியாக சமகால அரசியலை இணைக்க ஆரம்பிக்கும்போது அதன் ஆழமும் அதன் சாத்தியங்களும் குறைந்துவிடுகிறது. அகரமுதல்வனின் கதையில்  இரண்டாம் குத்திகனின் மூச்சடங்கிய நந்திக்கடல் காயல். என்ற வரி மிகமிக நேரடியானது. கதையை ஒரு அரசியல்பிரகடனமாக ஆக்கிவிடுகிறது. வரலாற்றுடன் இணைக்கும் வேலையை வாசகனுக்கே விட்டிருக்கலாம்

சாரங்கன்

***

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

அகரமுதல்வனின் கதையை படிக்கும்போது இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு சேரன் எழுதிய ஒரு கவிதை ஞாபகம் வந்தது. [மன்னிக்கவேண்டும், சும்மா வ்ந்த ஞாபகம் அல்ல. தொடர்பு உண்டு] அதில் யாழ்ப்பாணத்தின் டச்சுக்கோட்டையில் அகழ்வுசெய்தபோது தமிழ்பிராமி கீறலெழுத்துக்கள் உடைய பானை உடைசல்கள் கிடைத்தன. அதை வைத்து எங்கள் தொல்மூதாதையரின் நிலம் இது என்று சொல்லும் கவிதையை சேரன் எழுதினார். நாங்கள் இந்த நிலத்தின் பூர்வீகர் என்று அந்த எழுத்துக்கள் காட்டுவதாக அந்தக்கவிதை இருந்தது. 80 களில் அந்த கவிதை இங்கே பிரபலம். இந்தக்கதையும் அந்த மனநிலையை நாடியே செல்கிறது. வேர்களை அந்த நிலத்திலேயே அகழ்ந்து கண்டுபிடிப்பதும் அடையாளங்களை அங்கேயே நிறுவிக்கொள்வதும்தான் இந்தக்கதையின் சாராம்சம். இங்கே குத்திகன்கள் கொல்லப்படலாம், ஆழத்தில் இருந்துகொண்டிருப்பது நாகம் என்று கதை சொல்கிறது

ராஜசேகர்

***

முந்தைய கட்டுரைஐந்து நெருப்பு,போழ்வு- சிறுகதைகள்
அடுத்த கட்டுரையானைப்படுகொலை