உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்
வணக்கம் ஜே,
அனோஜனின் “உதிரம்” சிறுகதை வாசித்தேன். தொடர்ந்த கடிதங்களும் வாசித்தேன். அனோஜன் எனக்குப் பிடித்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அதில் எனக்குப் பெருமையும் கூட.
தற்போதெல்லாம் கதைகளை வாசித்துவிட்டு மனதுக்குள் அவைபற்றி ஆராய்ந்து விட்டுக் கடந்து செல்லப்பழகிக் கொண்டுவிட்டேன். சமூக அக்கறையற்ற எழுத்துக்கள், குறிப்பாக விளிம்பு நிலைமக்களைத் தாழ்த்திப் பல எழுத்துக்கள் வந்தாலும், அது அந்த எழுத்தாளர்களின் மனநிலை என்று கடந்து போகின்றேன். உங்கள் எழுத்துக்கள் கூட பல எனக்கு அப்படியான அயர்ச்சியை தந்திருக்கின்றன.
முப்பது வருடங்களுக்கு மேல் கனடாவிலிருந்து குரல் கொடுத்துக் கூட்டங்களும் வைத்தாயிற்று இன்னும் பின்நோக்கி நகர்வது போலொது அயர்ச்சிதான் ஏற்படுகின்றது.
சரி, அனோஜனின் கதைக் கருவிற்கு நேராக வந்து விடுகின்றேன். வழமைபோல் பாலியலின் நுணுக்கத்தை தனது எழுத்து வல்லமையால் நகர்த்தியிருக்கின்றார், அதில் எனக்கு எந்த விமர்சனமுமில்லை. கதையின் முடிவை நான் விளங்கிக் கொண்டது இப்படித்தான். விமர்சித்தவர்கள் அதுபற்றிச் சுட்டிக்காட்டுவார்கள் என்று பொறுத்திருந்தேன், காணவில்லை. அதனால் நான் சுட்டிக்காட்டலாம் என்று எண்ணுகின்றேன்.
அடிபட்டுக் கிடந்த தாயார் ஹரியிடம் கூறுகின்றார் இது எனது கடைசி மாதவிடாய் எனவே இனிமேல் பிரச்சனையிருக்காது என்று. அனோஜன் என்ன சொல்ல வருகின்றார். தயாருக்குத் தந்தையை விட அதிக பாலியல் வேட்கை இருக்கின்றது, இனி மாதவிடாய் நின்றுவிட்டால் அந்த வேட்கையும் நின்றுவிடும், எனவே அம்மாவை, கட்டிலில் மரம் போல் கிடக்கும் அப்பா அடிக்கமாட்டார் என்றா?
அனோஜனின் கூற்றுப்படி பார்த்தால் மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போய்விடும் என்பதா? கதையிலிருந்து நான் விளங்கிக்கொண்டது இதுதான், என் விளக்கம் சரியென்றால் இந்தக் கதையே தவறான ஒரு செய்தியைச் சொல்கின்றது, பல ஆண்களின் மனதில் இப்படியான ஒரு கருத்துத்தான் இருக்கின்றது என்று கொள்வேன். எழுது முன்னர் ஒரு வயது முதிர்ந்த பெண்ணுடன் அனோஜன் இதுபற்றி உரையாடியிருந்தால் நன்று.
கறுப்பி சுமதி
கனடா
***
உஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்
அன்புள்ள ஜெ
சித்துராஜின் உஷ்ணம் ஒரு சிக்கலான கதை. எளிமையான ஒரு தருணத்தை இந்தக்கதையில் எழுதியிருக்கிறார். ஆனால் அது ஒரு சிக்கலின் முடிச்சு. இந்தக்கதையை ஒரு உண்மைச்சம்பவமாக எடுத்துக்கொண்டு இதன் பல அடுக்குகளை நான் யோசித்துக்கொண்டிருந்தேன். இந்தக்கதையின் கதாநாயகி சுதந்திரத்திற்கு தேவை என்று தேர்ந்தெடுத்த வாழ்க்கை இது. இங்கே அவள் குடும்பம் காதல் எதிலும் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் செக்ஸ் தேவை. குடும்பமோ காதலோ தேவையில்லை, செக்ஸ் மட்டும் தேவை என்றால் அது ஒரு வகையான தாழ்ந்த நிலையிலான உறவாகவே இருக்கமுடியும்.
அதையும்கூட உணர்ச்சிரீதியாக கையாள முடியாது. பிட்ஸா கொண்டுவரும் அந்த ஆள் அவள்மேல் ஆதிக்கம் செலுத்தவும் அவளை சொந்தமாக எண்ணவும் முயல்கிறான். இந்தச்சூழ்நிலைபோன்ற இடங்களிலேதான் சட்டென்று வன்முறையும் நிகழ்ந்துவிடுகிறது. கொலையும் நடக்கிறது. இந்த உறவுகளை எங்கே நிறுத்திக்கொள்வது என்பது பெரிய பிரச்சினை. சரி, உனக்கு அது வெறும் செக்ஸ் உறவு. அவனுக்கு அப்படி இருக்கவேண்டும் என்று எப்படிச் சொல்ல முடியும்? அது அவனை எப்படி கட்டுப்படுத்தும்.
ஒரு சமூகச்சூழலுக்கு வெளியே ஒரு தனியான moral zone ஐ ஒரு தனிமனிதரால் உருவாக்கிக்கொள்ள முடியுமா என்ன? முடியவே முடியாது என்பதும் அந்த மொத்தசமூகத்தின் வன்முறைக்கு ஆளாகவேண்டும் என்பதும்தான் நடைமுறை உண்மை. சிங்கப்பூரில் மட்டுமல்ல நியூயார்க்கிலும் அப்படித்தான்.
அதர்கு ஒரே வழி ரகசியமாக வாழ்வது. ஆனால் ரகசியம் என்றாலே கிரைம் வந்துவிடுகிறது. இது மிகமிகக் கடினமானது. இதை அடையாளம் கண்டு சுட்டிக்காட்டியிருக்கும் இந்தக்கதை இந்தச் சமகாலகட்டத்தின் ஒரு முக்கியமான பிரச்சினையை ஒரு Moral Dilemma வை சுட்டிக்காட்டியிருக்கிறது
தேவி
***
கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி
அன்புள்ள ஜெ
கிரியேட்டிவ் ஆன ஒருவனுக்கு லௌகீக உலகம் ஒரு திகைப்பை அளிக்கிறது. அந்தத் திகைப்பு என்ன என்பதுதான் கவி கதையின் கரு. வெவ்வேறுவகையிலே இந்தக் கரு தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.
இந்தக்கதையுடன் நான் இணைத்து வாசிக்கவிரும்புவது ஜி.நா கதைகளை இல்லை. சுந்தர ராம்சாமியின் ஆத்மாராம் சோயித்ராம் என்ற கதையைத்தான். அதிலும் கவிஞன் அவனுக்கு சம்பந்தமே இல்லாத தொழிற்சூழலுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறான். ஆனால் அதனுடன் அவன் உரசிக்கொள்வதில்லை. அவன் தன்னை கூடுமனாவரை ஒடுக்கிக்கொண்டு கலையில் வாழ்கிறான்.
அதில் “காலமே என்னை உடை. என்னை நசுக்கு. நான் நீயே வியக்கும்படி உனக்கு என் கலையில் பதில்சொல்கிறேன்’ என்று கவிஞன் சொல்கிறான். இந்தக்கதைக்கு முற்றிலும் எதிரான கதை அது. இரண்டும் இரண்டுவகையான வாழ்க்கை யதார்த்தங்கள். அல்லது இரண்டுவகையான மனிதர்கள் என்று சொல்லலாம்
லட்சுமணன்
***
அன்புள்ள ஜெமோ,
கவி ஒரு கானா ஆள் அல்ல. அவன் இலக்கியத்தில் துவங்கியவன் தான். இசையில் அமிழ்ந்து காணாமற்போனவன் போல அவன் கவிதை அவனை மூடுகிறது. வானில் மிதக்கிறவனுக்கு மண்ணில் கால் ஊன்ற தெரியவில்லை. அவன் உலகோடு கொள்ளும் உறவுகள் யாவும் சுரண்டல்களாகவே முடிகின்றன. ஆனால் தில்லைநாயகி கடைசியில் நிறுத்துவது என்பது எதோ விதத்தில் அவனது மரணம் என்று நினைத்தேன். உலகு எடுத்துக் கொள்கிற கவிதையை அவனுக்கு எழுத தெரியாது என்றும் நினைத்தேன்.
மணி எம்.கே.மணி
***
வில்லுவண்டி[ சிறுகதை] தனா
அன்புள்ள ஜெ
சினிமாக்களைப் பற்றி இலக்கியத்துடன் சேர்த்துப் பேசக்கூடாது என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். ஆனால் இதை சும்மா ரேண்டமாக நினைவுக்கு வந்த வரிசையிலே சொல்லவில்லை. யோசித்து ஒரு சோசியல் ரியாலிட்டியைச் சொல்வதற்காகவே சொல்கிறேன். சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டணமா முதல் பிறகு அதை ஒட்டிவந்த எல்லாபடங்களிலும் பெண்கள் வென்று எடுக்கவேண்டிய உடைமைகளாகவே காட்டப்படுகிறார்கள்.
அதாவது அது பரஸ்பர அன்பும் புரிதலுமாக தொடங்கும் உறவு இல்லை. அல்லது குடும்பங்கல் பேசி தேர்வுசெய்யும் உறவும் இல்லை. ஒருவகை கொள்ளை, அல்லது சூதிலே ஜெயிப்பது. இந்த விஷயம் ஓர் நடைமுறை உண்மை. அதனாலேதான் அந்தப்படங்களெல்லாம் பயங்கரமாக வெற்றி பெற்றன. மக்களின் ஏற்பு இருந்தது.
வில்வண்டி கதையிலும் அப்படித்தான். செந்தட்டி பெண்ணை கவர்ந்து கொண்டுவரவில்லை. தூக்கி வருகிறார். கொள்ளையடித்து வருகிறார். அபப்டிக்கொண்டுவந்தால் அந்த பயன்பாடும் மதிப்பும் தீர்ந்தபின் தூக்கி எறியவேண்டும் என்பதுதானே நிஜம். எங்கே நமக்கு மனசு வலிக்கிறது என்றால் அவர் அரிவாளோடு அழைத்ததும் வில்வண்டியைக் கண்டு அவள் வந்ததும் எல்லாம் ஒரு வகையான காதலாக நாம் ரொமாண்டிஸைஸ் பண்ணிக்கொள்வதனாலேதான். பிரச்சினை இருப்பது இந்தக் கற்பனையிலேதான்
என்.சாம்பமூர்த்தி
***
இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்
இசூமியின் நறுமணம் கதையை பற்றி ராஜகோபாலன் என்பவர் எழுதிய குறிப்பு சுவாரசியமானது. ஒரு கிழவர் வந்து இளம்பெண்ணை முகர்ந்து பார்ப்பதைப்பற்றி எழுதியிருந்தார். இதே நிகழ்ச்சி சிக்கவீர ராஜேந்திரன் நாவலில் வருகிறது .மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் நாவல். அதில் உத்தய்ய தக்கன் என்னும் வயோதிகர் அரண்மனைக்கு வருகிறார். அங்கே சிக்கவீர ராஜேந்திரனின் அரசியிடம் இளவரசி கௌரம்மாவை அழைத்துவரச்சொல்லி பார்த்துப் பார்த்து ரசிக்கிறார். அந்த இடம் அழகாக இருந்தது. அதை நினைவுகூர்ந்தேன்
ஆனந்த்
***
8.நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்
7.உஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்
6.வில்லுவண்டி[ சிறுகதை] தனா
5.உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்
4.கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி
3.இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்
2.அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்
1.கன்னி- [சிறுகதை] ம.நவீன்
—