உஷ்ணம் – கடிதங்கள்

உஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

சித்துராஜ் பொன்ராஜ் பற்றி முன்னரே எழுதியிருந்தீர்கள். அந்தத் தொகுதி படித்தேன். அவருடைய எழுத்தின் முக்கியமான அம்சம் அதன் நவீனத்தன்மைதான்.சாதாரணமாக தமிழ் வாழ்க்கையில் எழுதப்படாத நவநாகரீக நகர்சார்ந்த வாழ்க்கையின் சித்திரங்களை அவர் கதைகளில் காணமுடிகிறது.அவை ஆர்ப்பாட்டமாகச் சொல்லப்படாமல் சுருக்கமாக நவீனமொழியில் சொல்லப்படுகின்றன. பலவிதமான வாழ்க்கைகள்.

நான் இந்த கதையையும் அவருடைய எல்லா கதைகளின் பொதுவான பகைப்புலத்திலேயே வைத்துப் பார்க்கவிரும்புகிறேன். இந்தக்கதையைப் பற்றி இப்படிச் சொல்கிறேன். அவருடைய கதைகளின் பொதுவான அம்சம் என்று நான் நினைப்பது ஒவ்வொருவரும் இந்த நவீனவாழ்க்கையில் தங்களுக்கான இடத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயத்தை சந்திப்பதுதான். முன்பெல்லாம் அப்படி இல்லையா என்றால் இல்லை. மனிதன் மந்தையாக வாழ்ந்தவன். திடீரென்று அவன் தனியாக வாழும் வாழ்க்கைக்கு மாறிவிட்டான். இதுதான் சிக்கல். தொழில், தனிப்பட்ட உறவுகள் மட்டுமல்ல வேல்யூ சிஸ்டத்தையே அவன் உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. அதன் கொந்தளிப்புகள் சிக்கல்களையே அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.

இந்தக்கதையில் அந்த தோல்வியும் கசப்பும் சிக்கலும் உள்ளது. வேறு பலகதைகள் அதிலிருக்கும் வெற்றியின் களிப்பினையும் அகங்காரபூர்த்தியையும் பற்றிச் சொல்கின்றன. விடியல் என்ற கதை என நினைக்கிறேன்.  இந்தக்கதையில் ஒரு சின்னச்செடி நிறைய இடத்தில் வளர்ச்சியடைந்த சிக்கல் உள்ளது. அது சின்ன இடத்தில் முட்டிமோதி வளர்வதுக்குரிய பரினாமம் கொண்டது. அது பெரிய இடத்தை அடைந்தபோது அதனால் நிறைக்கமுடியவில்லை. இந்தக்கதையின் கொந்தளிப்பான சூழலை அப்படித்தான் புரிந்துகொள்ளமுடிகிறது

ஜெயராமன்

***

அன்புள்ள ஜெ

சுதந்திரத்தின் விலை தனிமை என்று ஒரு மேற்கோள் உண்டு. சித்துராஜ் பொன்ராஜின் கதையை வாசிக்கும்போது அந்த எண்ணம்தான் வந்தது. சுதந்திரம் என்பது பொறுப்பு. இன்னொரு வேல்யூ சிஸ்டத்திற்குள் நாம் இருக்கும்போது அந்த மாரல்கோடுக்குள் நின்றுதான் ஆகவேண்டும். அதை நாம் அத்துமீறல் என நினைக்கிறோம். அதிலிருந்து சுதந்திரம் அடைகிறோம். இப்போது நாம் நமக்கான வேல்யூ சிஸ்டத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது.

அதை நாம் உருவாக்கிக்கொள்ளமுடிவது ரொம்ப சிரமம். ஏனென்றால் நாம் அடல்ட் ஆக வருவதுவரை நாம் எதற்குப் பழகியிருக்கிறோமோ அதுதான் நமக்கு மனசுக்குள் இமோஷனாலிட்டியுடன் கலந்து இருக்கும். அறிவாலே ஒன்றை ஏற்றுக்கொள்ளலாம். இமோஷனலாக ஏற்றுக்கொள்வது ஒரு வயசுக்குமேல் கஷ்டம். நான் இதை எப்படிச் சொல்கிறேன் என்று எனக்கே குழப்பம்தான். ஆனால் நான் ஆல்டர்நேட்டிவ் லைஃப்ஸ்டைல் என்ற வாழ்க்கையை சோதனை பண்ணி பார்த்தவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் அந்த புதிய வாழ்க்கையின் உணச்சிரீதியான தேவைகளை சந்திக்கமுடியாமல் ரொம்ப கொந்தளித்தார்கள்.

உதராணமாக இதைச் சொல்கிறேன். அதாவது ஃப்ரீ செக்ஸ் உள்ள லைஃப் ஸ்டைலுக்கு போனவர்கள் உண்டு. ஆனால் பொறாமையை தாண்டிப்போக முடியாது. நான் பலருடன் இருப்பேன் என் பார்ட்னர் அப்படி இருந்தால் எனக்கு தூக்கம் வராது என்ற மனநிலை. இதெல்லாம் இன்றைய வாழ்க்கையிலே உள்ள பெரிய பிரச்சினைகள். தமிழில் இதையெல்லாம் இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். அது மிகவும் புதிதாக இருக்கிறது. ஏனென்றால் ஆங்கிலத்தில் நாம் இந்தச் சிக்கல்களை எல்லாம் படித்திருப்போம். ஆனால் தமிழ்ச்சூழலே வேறு இல்லையா? முந்தானையை இத்து மூடிக்கோ என்று பொது இடத்தில் கத்தும் அம்மா வேறு பண்பாடுகளில் இல்லைதானே?

சித்துராஜ் பொன்ராஜ் தமிழ்நாட்டுக்கு வெளியிலே வாழ்வதனால் இந்த உணர்வுச்சிக்கல்களை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். இது தமிழில் திரும்பத்திரும்ப மாரல் ஷாக் சார்ந்து எழுதிக்கொண்டிருக்கும் சூழலுக்கு மிகவும் புதியது

எம்

***

அன்புள்ள ஜெ

சித்துராஜ் பொன்ராஜின் கதை மிகமிக கச்சிதமாக எழுதப்பட்டிருந்தது. நான் நீங்கள் இப்போது இணைப்பு கொடுத்த கதைகளை எல்லாம் வாசித்தேன். எல்லா கதைகளிலுமே மொழியில் வடிவத்தில் சின்னச்சின்ன பிசிருகள் இருந்தன. அந்த பிசிருகளை மன்னித்துக்கொண்டுதான் அவற்றை வாசிக்கவேண்டியிருந்தது. இந்தக்கதை மிகக்கச்சிதமாக இருந்தது. ரொம்பக் கச்சிதமான வடிவம். அமெரிக்கக் கதைகளில்தான் இந்தக்கதைகளுக்குரிய கச்சிதம் அமைகிறது என்று நான் நினைக்கிறேன்.

அந்தப் பெண்ணின் ‘உஷ்ணம்’ என்பதை அவளுடைய காமவிடாய் என்றுதான் நேரடியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டதன் புழுக்கம் என்றுதான் நான் வாசிக்கிறேன். அவள் கொஞ்சம்கூட பிடிக்காத இறந்தகாலத்திலிருந்து வெட்டிக்கொண்டு வந்துவிட்டாள். வந்துசேர்ந்த நிகழ்காலத்தில் பொருந்திபோகவே முடியவில்லை. அது அவளுக்கு குமட்டுகிறது. இறந்த காலத்துக்குச் சென்று அம்மாவை சந்திக்கிறாள்.

இந்த இரண்டு உருளைகலுக்கு நடுவே மாட்டிக்கொண்டிருக்கிறாள். உஷ்ணம் எங்கே உருவாகும் என்று பொறியியல் சொல்கிறதென்றால் எங்கே அழுத்தம் இருக்கிறதோ அங்கே. அழுத்தம் வெளிப்படும் ஒரு வகையைத்தான் நாம் உஷ்ணம் என்று சொல்கிறோம். நல்ல கதை. அந்தக்கதையின் உணர்வுகளையும் பிரச்சினைகளையும் குறியீடுகளையும் இயல்பாக பின்னி அமைத்திருக்கும் விதம் மிகமிகச் சிறப்பாக அமைந்திருந்தது

எம். பாபு

முந்தைய கட்டுரைநற்றுணை போழ்வு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுதிய கதைகள்- கடிதங்கள்