கதைத் திருவிழா-74, மலையரசி [சிறுகதை]

கௌரி பார்வதி பாய்

பார்வதி பாய் அரசரின் அரண்மனையை அடைந்தபோது வாசலில் மார்த்தாண்ட வர்மா நின்றிருந்தார். மஞ்சலில் இருந்து இறங்கிய அவளை நோக்கி ஓடிவந்து வணங்கினார். “எப்படி இருக்கிறார்?” என்று பார்வதி பாய் கேட்டாள்.

“நான் அவரை பார்க்கவில்லை” என்று மார்த்தாண்ட வர்மா சொன்னார்.

“ஏன்?” என்று பார்வதி பாய் கேட்டாள்.

“இளையம்மைக்கு தெரியும், என்னால் அவரை நெருங்கவே முடிந்ததில்லை. அதிலும் சென்ற ஓராண்டாக அவர் என்னிடம் முகம்கொடுத்தே பேசுவதில்லை” என்று மார்த்தாண்ட வர்மா சொன்னார். “இன்று காலையில் அவர் வழக்கம்போல முதற்காலையில் தூங்கி எழவில்லை. பத்மநாபசாமி கோயிலில் இருந்து ஸ்தானிகர் வந்து காத்து நின்றிருந்தார். அவர் எழவில்லை என்று சேவகன் என்னிடம் வந்து சொன்னான். நான் உடனே கிளம்பிப்போய் பத்மநாப சாமி ஆலயத்தின் வாள்கொள்ளும் சடங்கை முடித்துவிட்டு திரும்பி வந்தேன். அப்போதும் அவர் எழுந்திருக்கவில்லை. அப்போதிருந்தே நான் வாசலில் நின்றிருக்கிறேன். அவரை எழுப்ப எனக்கு தைரியமில்லை.”

“சேவகன் யாரையாவது அனுப்பவேண்டியதுதானே?”

“தனிச்சேவகன் அனந்தன் நாயரும் கொட்டாரம் காரியஸ்தன் சுப்பா பிள்ளையும் நாலைந்துமுறை சன்னல் வழியாகப் பார்த்துவிட்டு வந்தார்கள். அவர் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்.”

“இரவு அபின் எடுத்துக்கொண்டாரா?”

மார்த்தாண்ட வர்மா தயங்கி “இப்போது நோய் காரணமாக மருந்துடன் சற்று அபின் எடுத்துக்கொள்வது உண்டு” என்றார்.

“ம்” என்றபடி பார்வதி பாய் உள்ளே சென்றாள். காவல்நாயர்களும் சேவகர்களும் வணங்கி நின்றார்கள். அவள் உள்ளே சென்றபடியே கொட்டாரம் காரியஸ்தன் சுப்பா பிள்ளை தன்னுடன் வரவேண்டும் என்று கைகாட்டினாள். அதை உணர்ந்த மார்த்தாண்ட வர்மா நின்றுவிட்டார்.

“நேற்று என்ன சாப்பிட்டார்?” என்று பார்வதி பாய் கேட்டாள்.

“வழக்கம்போல மிகக்கொஞ்சமாக பால்விட்ட கஞ்சி… அதன்பின் வழக்கமான மருந்துகள்…”

“அபின்?”

“மருந்தில் உள்ள அளவுதான்.”

“எப்போது தூங்கினார்?”

“இரவில் நெடுநேரம் இருமிக்கொண்டே இருந்தார். பிறகு எழுந்து வீணையை கொண்டுவரச் சொன்னார். ஆனால் வாசிக்கவில்லை. வெறுமே விரலால் தந்திகளை நீவிக்கொண்டிருந்தார். நீண்டநேரம். விடியற்காலை குளிர் தொடங்கியபோது நான் பார்த்தேன். வீணைமேலேயே விழுந்து தூங்கிக் கொண்டிருந்தார். நான் தரையில் காலால் தட்டி ஓசை எழுப்பினேன். எழுந்து பீடத்தில் கையூன்றி படுக்கையை அடைந்து படுத்துக்கொண்டார்” என்றார் சுப்பா பிள்ளை.

“நேற்று காலைமுதல் என்ன செய்தார்?”

“பத்மநாபசாமி கோயிலுக்கு போய்விட்டு வந்தார். கொஞ்சநேரம் ஓய்வெடுத்தார். அதன்பிறகு வீணையைச் சுண்டிக் கொண்டிருந்தார். மதியம் ஒன்றும் சாப்பிடவில்லை.”

“யாராவது வந்தார்களா?”

“அம்மை மகாராணி அறியாதது அல்ல. அவர் ஓராண்டாக எவரையுமே பார்க்க விரும்பவில்லை. இளையவர் அவரைச் சந்திக்க ஐம்பதுமுறைக்கு மேல் அனுமதி கேட்டிருக்கிறார், ஒப்புக்கொண்டதில்லை. சென்ற ஆறுமாதத்தில் நான்குமுறை தாங்கள் சந்தித்திருக்கிறீர்கள். ஏழுமுறை திவான் சந்தித்திருக்கிறார். ஒரே ஒருமுறை பேஷ்கார். அவ்வளவுதான்…”

“பகலெல்லாம் என்னதான் செய்தார்?”

“அவர் புதிதாக கீர்த்தனைகள் எழுதியிருக்கிறார். அதை திரும்பத் திரும்ப  ஸ்வரப்படுத்திக் கொண்டிருந்தார்.”

“சங்கீதக்காரர்கள் யாராவது வந்தார்களா?”

“யாரையுமே சந்திக்க அவர் விரும்பவில்லை. வடிவேலு, சின்னையா, பொன்னையா, சிவானந்தன் நால்வருமே பலமுறை சந்திக்க விரும்பி சொல்லியனுப்பினார்கள். மறுத்துவிட்டார்.”

“அப்படியென்றால் அவர் சங்கீதம்கூட கேட்பதில்லையா?”

“இல்லை அம்மைமகாராணி, அவரே பாடிக்கொள்வதுடன் சரி” சுப்பா பிள்ளை  சொன்னார்.

ராமவர்மாவின் அறைவாசலில் ஏவலர்கள் நால்வர் நின்றிருந்தனர். அவள் வருகையை கண்டதும் தலைவணங்கினர்.

பார்வதி பாய் கதவின் முன் சென்றுநின்று ஒரு கணம் தயங்கியபின் தட்டினாள். “ராமா, ராமா, இது நான்… இளையம்மை வந்திருக்கிறேன். ராமா, கதவைத் திற… ராமா”

உள்ளிருந்து ஓசை ஏதும் எழவில்லை. பார்வதி பாய் மீண்டும் வலுவாகத் தட்டினாள்.

சன்னல்வழியாக பார்த்துக்கொண்டிருந்த மார்த்தாண்ட வர்மா மெல்ல “கண்விழித்தார்” என்றார்.

பார்வதி பாய் மீண்டும் தட்டினாள். “ராமா, கதவைத் திற… கதவைத்திற…”

மார்த்தாண்ட வர்மா “எழுந்துவிட்டார்” என்று ஆறுதலுடன் சொல்லி சன்னலில் இருந்து விலகினார். உள்ளே காலடியோசை கேட்டது. கதவு திறக்கப்பட்டது.

பார்வதி பாய் உள்ளே நின்றிருந்த ராமவர்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு “என்ன ராமா? உடம்புசரியில்லையா? என்ன ஆயிற்று?” என்றாள்.

“தூங்கிவிட்டேன்” என்று ராமவர்மா சொன்னார். திரும்பி மார்த்தாண்ட வர்மாவையும் கூட்டத்தையும் பார்த்து “என்ன இது? யார் இவர்கள்?” என்றார்.

“நீ கதவைத் திறக்காமல் தூங்கியதனால் என்னை அழைத்தார்கள்…” என்றபின் அவர்கள் போகலாம் என்று கையை அசைத்தாள். அவர்கள் விலகிச் சென்றார்கள். சுப்பா பிள்ளை  மட்டும் அவளுக்குப் பின்னால் நின்றார்.

“நீ நன்றாக இருக்கிறாயா ராமா?”

“இளையம்மை, ஸ்ரீ பத்மநாபதாச, வஞ்சிபால, ராமவர்ம குலசேகர கிரீடபதி ஸ்வாதித்திருநாள் மகாராஜாவாகிய அடியேன் முழுதாக சேதாரமில்லாமல் இருக்கிறேன்” என்றார் “போதுமா இல்லை மிச்சத்தையும் சொல்லவா, பிள்ளே சொல் பார்ப்போம்.”

சுப்பா பிள்ளை “ஸ்ரீ பத்மநாபதாச, வஞ்சிபால,ராமவர்ம குலசேகர கிரீடபதி ஸ்வாதித்திருநாள் மகாராஜா ராமராஜா மன்னை சுல்தான் மஹாராஜராஜ பகதூர்ஷா ஷாஷேர் ஜங் மகாராஜா சவிதம்” என்றார்.

“போதுமா?” என்று ராம வர்மா புன்னகைத்தார்.

‘விளையாடாதே ராமா, நீ களைத்திருக்கிறாய்.”

“நான் நேற்று சரியாகத் தூங்கவில்லை” என்று சொல்லிக்கொண்டே காலெடுத்து வைத்த ராமவர்மா தள்ளாடி விழப்போனார். சுப்பா பிள்ளை  பாய்ந்து அவர் தோளைப் பற்றிக்கொண்டார்.

சீற்றத்துடன் அவர் கையை தள்ளிவிட்டு உரத்தகுரலில் “என்னிடம் விளையாட வருகிறீர்களா? நான் இன்னும் நோயாளியாகவில்லை… போங்கள்” என்றார். சுப்பா பிள்ளை  மெல்ல கையை விட்டார்.

தள்ளாடும் கால்களுடன் சென்று மீண்டும் படுக்கையிலேயே அமர்ந்துகொண்டார் ராமவர்மா.

பார்வதி பாய் “நீ சூடாக ஏதாவது குடிக்கலாம்…” என்றபின் சுப்பா பிள்ளை யிடம் “பிள்ளே…” என்றார்.

“இதோ என்று அவர் வெளியே ஓடினார்.

பார்வதி பாய் தோலுறையிட்ட சிறிய டச்சு நாற்காலியில் அமர்ந்தாள். “ராமா உன் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. நான் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை” என்றாள்.

“நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றார் ராமவர்மா.

“நான் நீ வழக்கம்போல சங்கீதத்தில் மூழ்கி இருக்கிறாய் என்று நினைத்தேன். உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றார்கள். உன் உடல்நிலை எப்போதுமே மோசமாகத்தான் இருந்தது என்று நினைத்துக்கொண்டேன்” என்றாள் பார்வதி பாய். “நான் உன்னை வந்து பார்ப்பதே உனக்குப் பிடிக்கவில்லை. சென்றமுறை வந்தபோது மிகவும் கொந்தளித்துவிட்டாய். ஆகவே நான் வராமலிருந்தேன்…”

ராமவர்மா கட்டில்மேல் கால்களை தூக்கி வைத்துக்கொண்டார்.

“மிகமிக மெலிந்துவிட்டாய். உன் கைகளும் கால்களும் சுள்ளிபோலிருக்கின்றன” என்று பார்வதி பாய் சொன்னாள். “நான் உன்னை அப்படியே விட்டிருக்கக்கூடாது…”

“நீங்கள் கவலைப்படவேண்டாம் இளையம்மை.”

“நான் கவலைப்படாமல் யார் கவலைப்படுவார்கள்? நான் என் அக்கச்சிக்கு கொடுத்த வாக்கு… அக்கச்சி என்னை மன்னிக்கமாட்டார்”

“அக்கச்சி அக்கச்சி… வேறு பேச்சே இல்லையா? உங்கள் வாழ்க்கையே உங்கள் அக்கச்சிக்கு கொடுத்த வாக்குறுதி மட்டும்தானா?”

நிதானமாக “ஆம், அந்த வாக்குறுதி மட்டும்தான்” என்று பார்வதி பாய் சொன்னாள். “ஆகவேதான் எனக்கு குழந்தைகள் வேண்டாம் என்று நினைத்தேன். என் ரத்தத்தில் இருந்து அவர்கள் பிறந்தால் அதிகார ஆசை கொண்டிருப்பார்கள் என்று சந்தேகப்பட்டேன். வைத்தியர்களிடம் கேட்டு குழந்தையில்லாமல் ஆக்கிக்கொண்டேன். ராகவ வர்மா கோயில்தம்புரானுக்கும் இது தெரியும். திசைதிரும்பாத அம்புதான் ஆற்றல் கொண்டது, அதுவே இலக்கடையும் என்று என் ஆசிரியர்கள் எனக்குச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.”

“வெறும் இலக்கு, அவ்வளவுதானா வாழ்க்கை?”

“ராமா, மனித வாழ்க்கை என்றால் என்னவோ பெரிதாக நினைக்கிறாய். அப்படியெல்லாம் இல்லை. உறுதியாகப் பற்றிக்கொள்ள ஒரு விஷயம்போதும், அதைக்கொண்டு கடந்துசெல்ல வேண்டிய ஒன்றுதான் அது…. அதுகூட இல்லாதவர்கள்தான் துரதிருஷ்டசாலிகள்… என் அக்கச்சி எனக்கு ஒரு இலட்சியத்தை தந்து என் வாழ்க்கையை அர்த்தப்படுத்தினாள்.”

“அவ்வளவுதான் வாழ்க்கை என்றால் அதைப்போல அபத்தம் வேறொன்றுமில்லை. அதை ஏன் வாழ்ந்து தொலைக்கவேண்டும்?” என்று தலைகுனிந்து ராமவர்மா முணுமுணுத்தார்.

“சரி, வாழ்க்கை என்றால் என்ன? நீ என்னதான் எதிர்பார்க்கிறாய்? நீ என்ன திட்டம் வைத்திருக்கிறாய்?”

“தெரியவில்லை இளையம்மை. ஆனால் நான் வாழ்க்கை பற்றி கனவுகண்டுகொண்டே இருக்கிறேன். சிலசமயம் காலத்தால் அழியாத கீர்த்தனைகளை செய்யவேண்டும் என நினைக்கிறேன். சிலசமயம் ஒன்றுமே செய்யாமல் அமர்ந்து சங்கீதம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஏதாவது ஒரு மலையடிவாரத்தில் அமர்ந்துவிடவேண்டும் என்று தோன்றும்போதே உலகமெங்கும் செல்லவேண்டும் என்றும் தோன்றுகிறது. எனக்கு என்னவேண்டும் என்று உண்மையாகவே தெரியவில்லை. ஆனால் கனவுகாணாத நாளே இல்லை. என் வாழ்க்கையே கனவுகளால் கழிந்துவிட்டது”

“என்ன பேச்சு இது? உன் வாழ்க்கை இப்போதுதான் தொடங்குகிறது. அரசர்கள் பொதுவாக பட்டத்திற்கு வரும் வயது இது…” என்றாள் பார்வதி பாய்.

“எனக்கு சலித்துவிட்டது. பதினேழு ஆண்டுகள் இந்த கூண்டுக்குள் அடைபட்டு திணறிக்கொண்டிருக்கிறேன்… நேற்று நினைத்துக்கொண்டேன், என் சிறகுகள் எல்லாம் உதிர்ந்துவிட்டன. இப்போது இந்தக்கூண்டை திறந்துவிட்டால்கூட என்னால் பறக்கமுடியாது”

ஸ்வாதித் திருநாள் ராமவர்மா

இந்தமாதிரிப் பேச்சுக்களை நான் வெறுக்கிறேன். எல்லார் மனதிலும் ஊக்கமும் சோர்வும் நம்பிக்கையும் கசப்பும் விதைகளாக உள்ளன. அதில் நமக்கு வேண்டியதை பேசிப்பேசி வளர்த்துக்கொள்கிறோம். உன்னுடைய சோர்வையையும் கசப்பையும் வளர்த்துக்கொள்வதை தவிர வேறென்ன பயன்?”

இளையம்மை, நான் இந்த பதினேழு வருடங்களில் ஒரு நாளாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேனா?”

அது உன்னுடைய சிக்கல்நீ ஒரு நாட்டின் அரசன். அந்தக் கடமையை நீ ஒழுங்காகச் செய்திருந்தால் அத்தனை மகிழ்ச்சிகளும் உன்னைத் தேடி வந்திருக்கும். உன் கடமையை நீ ஒழுங்காகச் செய்யவில்லை. ஆகவே ஒவ்வொன்றும் சிக்கலாகி உன்னை சுற்றிக்கொண்டன.

நான் என் கடமையை ஒழுங்காகச் செய்திருந்தால் ரெஸிடென்ட் கல்லன் என்னை போற்றி மடிமேல் வைத்து கொஞ்சியிருப்பாரா?”

இல்லை, நீ அவரை கையாள்வது எப்படி என்று கற்றுக்கொண்டிருப்பாய்என்று பார்வதி பாய் சொன்னாள். “அரசாட்சி என்பது ஒரு போர், ஒரு விளையாட்டு. அதில் எதிரிகள் உண்டு. நம் ஆட்டத்தை தீர்மானிப்பவர்கள் எதிரிகள்தான்.

ராம வர்மா தலையை பொறுமையின்றி அசைத்தார்.

நான் என் அக்கச்சியிடமிருந்து இந்த நாட்டின் ரீஜண்ட் மகாராணிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது எனக்கு வயது பதிமூன்று. அன்று இங்கே ரெஸிடெண்டாக இருந்தவர் கர்னல் மன்றோஇன்றுகூட திருவிதாங்கூரில் அவர் பெயரைச் சொன்னால் அச்சமும் வெறுப்பும் பக்தியும் கலந்து உருவாகிறது. அவர் பத்து கர்னல் கல்லன்களுக்கு சமம்என்று பார்வதிபாய் தொடர்ந்தாள்.

கர்னல் மெக்காலே வேலுத்தம்பி தளவாயை ஒடுக்கியவர். அவருக்கு திறமை போதவில்லை என்று சொல்லி மலபாரில் இருந்து கர்னல் மன்றோவை இங்கே அனுப்பினார்கள். அவரை இங்கே இரும்புச்செக்கு என்று சொல்வார்கள். திருவிதாங்கூரை பிழிந்து கடைசித்துளிவரை கொண்டு செல்வதற்காகவே கம்பெனி அவரை அனுப்பியது. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்புசுல்தானை வென்று மைசூரை ஆட்சிசெய்தவர் அவர். மராத்தா போர்களில் பங்கெடுத்தவர். ரெஸிடென்ட் கல்லன் அவருடன் ஒப்பிடுகையில் ஒரு வயதால் குழம்பிப்போன கிழவர் மட்டும்தான்.

“என் அக்கச்சியின் காலத்திலேயே கர்னல் மன்றோ நேரடியாகவே திருவிதாங்கூரின் திவானாக அவரே பொறுப்பேற்றுக்கொண்டார். அதற்கு என் அக்கச்சி மன்றாடி விண்ணப்பிப்பதாக ஒரு கடிதமும் எழுதி வாங்கிக்கொண்டார். நான் ரீஜண்ட் ஆக வந்தபோது அவர்தான் ரெஸிடென்டும் திவானும் எல்லாமேபாப்பு ராவ் என்று ஒரு அடிமையை வைத்து எல்லாவற்றையும் அவரே செய்தார். நான் உலகம் தெரியாத சின்னப்பெண். உன்னைப்போல ஆங்கிலக் கல்வி உடையவள் அல்ல. என் துணைக்கு யாருமே இல்லைபார்வதி பாய் தொடர்ந்தாள்

ஒரு சின்ன பிழை செய்தால் போதும் நாட்டை வெள்ளைக்காரர்கள் எடுத்துக்கொள்வார்கள். மிகமிகக் கவனமாக நான் செயல்பட்டேன். கர்னல் மன்றோவை எனக்கான எதிரியாக அல்ல, என் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான களமாகவே நான் எடுத்துக்கொண்டேன்

முதலில் மெட்ராஸ் பிரசிடென்ஸியில் அவருக்கு எதிரி யார் என்பதை ஒற்றர்கள் வழியாக அடையாளம் கண்டேன். அந்த எதிரிகளின் காதில் அவரைப்பற்றிய எதிர்மறைச் செய்திகளை போட்டுக்கொண்டே இருந்தேன். கர்னல் மன்றோ இங்கே திவானாக இருந்து தனிப்பட்ட லாபம் சம்பாதிக்கிறார் என்று கெட்டபெயரை உருவாக்கினேன்.

உண்மையைச் சொல்வதற்கு என்ன, கர்னல் மன்றோ மிகமிகமிக நேர்மையானவர். ஈவிரக்கமற்றவர், ஆனால் ஊழலே இல்லாதவர். ஆனால் அவரை ஊழல்செய்கிறார் என்று முத்திரை குத்தினேன். ஒரு நேர்மையாளன் நேர்மையற்றவன் என்று சொல்லப்படும்போது சமநிலை இழக்கிறான். கர்னல் மன்றோ அவருக்கு கவர்னர் எழுதிய கடிதங்களுக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார். மெட்ராஸ் கவர்னர் கர்னல் மன்றோமேல் ஒரு விசாரணையை ஆணையிட்டார். அவர் திவான் பதவியிலிருந்து விலகினார்பார்வதி பாய் சொன்னாள்.

நான் மேலும் அவருக்கு நெருக்கடி கொடுத்தேன். அவருடைய மகன் இங்கே காப்டன் பதவியில் இருந்தான், அவர் அவனுக்காக நெறிகளை மீறுகிறார் என்று பழிகிளப்பிவிட்டேன். கர்னல் மன்றோ மெல்ல மெல்ல இங்கிருந்து விலக்கப்பட்டார். ஆயிரத்தி எண்ணூற்றி பதினெட்டில் அவர் லண்டன் திரும்பும்போதுகூட அவர் அவமானமடைந்து இங்கிருந்து சென்றதற்கு நானே காரணம் என்று அறிந்திருக்கவில்லை. அதுதான் ராஜதந்திரம்

அதை நான் என் சொந்த லாபத்திற்காகச் செய்யவில்லை. அவருக்குப்பின் வந்த ரெஸிடென்ட் மோரிசன் எனக்கு உகந்தவராக இருந்தார். கர்னல் மன்றோவைப்போல அவர் திருவிதாங்கூரை கறவைப் பசுவாக மட்டும் நினைக்கவில்லை. ஆகவேதான் நான் மலைக்குடியேற்றங்களை வளர்க்கமுடிந்தது. கடலோரச்சந்தைகளை உருவாக்க முடிந்தது. திருவிதாங்கூரை கடனில் இருந்து மீட்டேன். இன்று நீ காணும் கல்விவளர்ச்சி, பட்டினியில்லா நிலைமை இரண்டுமே அப்படித்தான் உருவாகி வந்தனஎன்றாள் பார்வதி பாய்.

தலைகுனிந்து அமர்ந்திருந்த ராமவர்மாவை பார்த்துக் கொண்டு அவள் தொடர்ந்தாள்கர்னல் மன்றோ இரக்கமற்றவர், ஆகவே நானும் இரக்கமற்றவள் ஆனேன். ஏனென்றால் கூரிய வாளை கூரியவாளால்தான் எதிர்க்கமுடியும். அதுதான் அரசாட்சிமெல்லிய சிரிப்புடன்நீ என்ன நினைத்தாய், உன் ஆட்சியை உனக்கு தட்டில் வைத்து பரிமாறுவார்கள் என்றா? எந்த அரசாவது எவருக்காவது அப்படி அளிக்கப்பட்டிருக்கிறதா?” என்றாள்.

ராமவர்மா பெருமூச்சுவிட்டார். “நான் அரசனாக ஆகும்போது எத்தனையோ கனவுகளுடன் இருந்தேன். கீழ்மட்ட ஊழலை முழுக்க நீக்கம் செய்யவேண்டும், அத்தனைபேருக்கும் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை வரும்படி நீதி முறையை கொண்டு வரவேண்டும், வணிகப்பாதைகளை முழுக்கமுழுக்க பாதுகாப்பாக அமைக்கவேண்டும்எத்தனையோ திட்டங்கள் வகுத்தேன்

அதற்கு நீ என்ன செய்தாய்?” என்று பார்வதி பாய் கேட்டாள். “உனக்கு ஆசிரியராக இருந்த சுப்பா ராவை திவானாக ஆக்கவேண்டும் என்று நினைத்தாய். ஏனென்றால் அவரிடம் உன் கனவுகளை எல்லாம் சொல்லியிருந்தாய். அவர் அவற்றையெல்லாம் ஆதரித்தார். நானும் ரெஸிடென்ட் மோரிசனும் அதை எதிர்த்தோம். ஏனென்றால் எங்களுக்கு சுப்பாராவ் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் ரெஸிடென்ட் மோரிசன் மாறுதலாகிப் போனதுமே நீ நான் நியமித்த திவான் வெங்கிட்டராவை பதவிநீக்கம் செய்தாய். உன் ஆசிரியர் சுப்பாராவை திவானாக ஆக்கினாய். அவர் சொன்னார் என்று கொச்சு சங்கரப்பிள்ளையை திவான் பேஷ்காராக நியமித்தாய்…”

ஆமாம், நான் அரசன். என் அரசை நான் உருவாக்கவேண்டும் என்று நினைத்தேன்.

உண்மை, ஆனால் உன் கனவுகளை நிறைவேற்றும் தகுதி நீ நியமித்த அமைச்சருக்கு இருக்கிறதா என்று பார்த்தாயா? அவர் வெறும் ஆசிரியர். ஒரு நிர்வாகி கீழிருந்து படிப்படியாக மேலேறி வரவேண்டும். பலமுறை இதை நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். திவான் என்பவர் அரசின் முக்கியமான எல்லா துறைகளிலும் சில ஆண்டுகளாவது வேலை செய்திருக்கவேண்டும்… ” என்றாள் பார்வதி பாய்.

சுப்பாராவ் முயற்சி செய்தார்என்று ராமவர்மா சொன்னார்.

சுப்பராவ் அத்தனை செயல்களையும் அரைகுறையாகவே செய்தார். உன் எண்ணங்களை எல்லாம் வெறும் ஆணைகளாகவே பிறப்பித்துக்கொண்டிருந்தாய். மாதம் ஐந்தாறு அரசாணைகள்அந்த ஆணைகள் நிறைவேறினவா என்று நீ பார்க்கவில்லை. அவை என்ன விளைவை உருவாக்கின என்று நீ கவனிக்கவில்லை. அவை வெறும் சந்தைப் பேச்சுக்களாகவே நீடித்தன..” என்று பார்வதி பாய் தொடர்ந்தாள்.

பதினேழு ஆண்டுக்குமுன் நான் உன்னிடம் சொன்னேன். ஒன்றை நினைப்பதும் சொல்வதும் அல்ல அதை செய்வதுதான் அரசாட்சியில் முக்கியம். நினைக்கையிலும் சொல்லும்போதும் நம்முன் எவருமே இல்லை. செய்ய ஆரம்பிக்கும்போது அதற்கு எதிரான எல்லா சக்திகளும் எழுந்து வருகின்றன. அவற்றை கையாளத் தெரியவேண்டும்

அதாவது, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தண்டிக்கவேண்டும் என்றால் அதிகாரிகளின் தரப்பையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் இல்லையா?” என்று ராமவர்மா உரக்க கேட்டார்.

இல்லை. ஆனால் நேர்மையானவரும் திறமையற்றவருமான அதிகாரியை விட திறமையான சற்று நேர்மைக்குறைவுகொண்ட அதிகாரி மேல். முற்றிலும் நேர்மையான அதிகாரி என்பவர் எதையுமே செய்யாமலிருப்பவர்ஏனென்றால் அரசாட்சி என்பதிலேயே ஒர் அநீதி இருக்கிறதுஎன்றாள் பார்வதி பாய்ஆமாம், நாம்தான் இந்நாட்டை ஆட்சி செய்கிறோம். ஆனால் நம் ஆணைகளை இந்த நாடு ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஆட்சி நடக்கும். ஆணைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதில்தான் அரசனின் ஆட்சித்திறனே இருக்கிறது.

எனக்கு புரியவில்லை இளையம்மைநான் எல்லா இடங்களிலும் தோற்றுவிட்டேன்.

ரெஸிடென்ட் கல்லனை இரண்டு ஆண்டுகளாக நீ ஏன் சந்திக்கவில்லை? நான் உன்னிடம் பலமுறை சொன்னேன்.

நான் சொன்னேனே, அவருக்கு செவி கேட்கவில்லை. என்னால் கத்திப்பேசமுடியவில்லை. என் நெஞ்சு வலிக்கிறது.

அசட்டுத்தனமாகப் பேசாதேஎன்று பார்வதி பாய் சொன்னாள்.

அவருடைய காதில் கொஞ்சம் செவிக்குறைவு உண்டு. ஆனால் அவர் அதை என்னிடம் கூடுதலாக நடிக்கிறார். என்னை கூச்சலிடச்செய்கிறார்

சரி, நீ ஏன் அதிகாரிகளைச் சந்திப்பதில்லை? ஏன் திவானைக்கூட சந்திப்பதில்லை?”

ஏன் சந்திக்கவேண்டும்? இங்கே நான் சொல்வது நடக்கிறதா என்ன? இளையம்மை உங்களுக்கு தெரியும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே ரெஸிடென்ட் கல்லன் எல்லா மனுக்களையும் அவர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஆணையிட்டுவிட்டார். எல்லா ஆணைகளையும் அவரே போடுகிறார். நான் அவருடைய ஆணைகளை ஏற்று கைச்சாத்திடவேண்டும் அவ்வளவுதான். அதற்கு நான் எதற்கு?”

சரி, அதைக்கூட நான் புரிந்துகொள்கிறேன். நீ சென்ற ஆண்டு நாஞ்சில்நாடு போனாய். அங்கே பதினெட்டு பிடாகைக்காரர்களும் உன்னை பார்க்க விரும்பினார்கள். இந்த திருவிதாங்கூரே நாஞ்சில் நாட்டின் அன்னத்தை உண்டு வாழ்வது. நம்முடைய சோற்றுக்கலம் அது. நமக்கு முழுக்கமுழுக்க விசுவாசமானவர்கள் நாஞ்சில்நாட்டு பிள்ளைமார். நீ அவர்களுக்கு சந்திப்பு அளிக்க மறுத்தாய்

நான் கன்யாகுமாரிக்கு போய்க் கொண்டிருந்தேன். அங்கே தனியாக இருக்க நினைத்தேன்.

பொறுமையை தருவித்துக்கொண்டுநீ என்னதான் நினைக்கிறாய்? உனக்கு என்னவேண்டும்?” என்று அவள் கேட்டாள்.

நான் அரசன்அரசனாக நான் பணியாற்றவேண்டும்அதற்கான உரிமையும் சுதந்திரமும் எனக்கு வேண்டும்

அதை நீதான் ஈட்டிக்கொள்ள வேண்டும். அதைத்தான் உன் இளமைநாட்கள் முதல் நான் உன்னிடம் சொல்கிறேன். உன்னை அதற்காக பயிற்சிகொடுக்கத்தான் நான் முயன்றேன். நீ அதையெல்லாம் சித்திரவதைகளாக நினைத்தாய்…”

இளையம்மை, நீங்கள் அளித்த எல்லா பயிற்சிகளையும் நான் அடைந்தேன். என்னால் ஆயுதப்பயிற்சி பெறமுடியவில்லை. என் மனம் அதில் நிற்கவில்லை.”

அரசன் முதலில் பயிலவேண்டியது ஆயுதங்களைத்தான். போர்க்கலை வழியாகத்தான் மற்ற கலைகளை புரிந்துகொள்ளவேண்டும்

ராமவர்மா வெடித்துச் சிரித்துசங்கீதத்தைக்கூடவா?” என்றார். பார்வதி பாய்யின் முகம் சிவப்பதைக் கண்டுஇல்லை, சிரிக்கவில்லை. வேடிக்கையாக இருந்தது, அவ்வளவுதான்என்றார்.

நீ ஒருபோதும் என் சொற்களை செவிகொண்டதில்லைஎன்றார் பார்வதி பாய்.

இளையம்மை அப்படிச் சொன்னால் நான் என்ன செய்ய? நான் திருமணம் செய்துகொண்டதுகூட உங்கள் ஆணைப்படி. என் ஆசை வேறு என்று உங்களுக்கே தெரியும்…”

ஆமாம், நீ விரும்பிய மாவேலிக்கரை ராமனாமடத்தில் ஓமனத் தங்கச்சியை திருமணம் செய்துகொண்டால் அரசனாக உனக்கு என்ன நன்மை? திருமணம் வழியாக நீ நாஞ்சில்நாட்டின் முழு ஆதரவையும் பெற்றிருக்கவேண்டும் என்று நினைத்தேன். நாயரும் வேளாளரும் உன்னுடன் நின்றிருக்கவேண்டும். அப்போதுதான் நாடே உன் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகவேதான் திருவட்டார் அம்மச்சி வீட்டில் நாராயணிப்பிள்ளையையும் நீலம்மைப்பிள்ளையையும் உனக்கு மணமகள்களாக்கினேன். வேளாளர்களில் வடசேரி அம்மவீட்டில் சுந்தரலட்சுமிப் பிள்ளையை உனக்கு தேர்வுசெய்தேன்…”

தெரிவுசெய்து வாக்கு கொடுத்தபின் எனக்குச் சொன்னீர்கள். உரியநாளில் சென்று நான் பட்டும் கச்சையும் கொடுத்தேன். அவ்வளவு சுதந்திரத்துடன் இருந்திருக்கிறேன்என்று ராமவர்மா புன்னகைத்தார்

சுதந்திரம் என்பது ஆற்றலால் வருவது. நான் சொன்னபடி அவர்களை நீ கூடவே வைத்திருந்தால் உன்னைப் பார்த்து ரெஸிடென்ட் கல்லன் பயந்திருப்பார்.”

அதைவிட நான் இந்த மூன்று பெண்களையும் பார்த்து பயந்தேன் இளையம்மைஎன்று ராமவர்மா சொன்னார்.

என்ன பயம்? அவர்களை நீ ஏறெடுத்தும் பார்க்கவில்லை

அவர்கள் தைரியமானவர்கள், உலகியல் கணக்கு ஊறியவர்கள், உங்களைப்போலஎன்று ராமவர்மா சொன்னார்பாடத்தெரியாத பெண்ணுடன் ஒரு வார்த்தைகூட என்னால் பேசமுடியாது.

பார்வதி பாய் பெருமூச்சுவிட்டாள். “எல்லாவற்றையும் நீயே சீரழித்துக்கொண்டாய். உன் மனம் சங்கீதத்தில் மூழ்கிகிடந்தது. அரசனுக்கு சங்கீதம் வேண்டும், அது குளியல்போல. நீ இரவுபகலாக குளத்திலேயே ஊறிக்கிடந்தாய்…”

ராமவர்மா மெல்ல அவருக்கு எப்போதுமிருந்த எரிச்சலை அடையலானார். “இளையம்மா, இப்போது நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள்? என்னை வழிநடத்தவா? என்னை சீர்திருத்த நினைக்கிறீர்களா?”

இல்லை, உன்னை வழிநடத்த எட்டு ஆண்டுகள் முயன்றேன். உன்னை சீர்திருத்த மேலும் பல ஆண்டுகள். அதனால் பயனில்லை என்று புரிந்துகொண்டேன்.

ஆகவேதான் என் இளையவனை வழிகாட்டி வளர்த்தீர்கள் இல்லையா?” என்று ராமவர்மா ஏளனத்துடன் கேட்டார்.

ஆமாம், அவனை நான் நினைத்தவாறு வளர்த்தேன். அவன் யானைத்தந்தம்போல உறுதியானவன்

ராமவர்மா கசப்புடன் சிரித்துநீங்கள் சொல்வது என்ன என்று புரிகிறது, என்னை எப்போதுமே வாழைத்தண்டு என்றுதான் சொல்லிவந்தீர்கள்

ஆமாம், நீ வாழைத்தண்டேதான். குளிர்ந்தவன், உன் உடலில் எப்போதும் பெண்பிள்ளைகளைப்போல மென்மையும் குளிர்ச்சியும். உன் குரல்கூட மென்மையானது…” அவள் உதடுகளைச் சுழித்துஅதனால்தான் உன் பெண்களுக்கு கூட உன்மேல் மதிப்பில்லாமல் ஆயிற்று.

தெரியும்அவர்களும் என்னை வாழைத்தண்டு என்றுதான் சொன்னார்கள். வடசேரிக்காரி என்னை ஏளனமாக குயில் என்று சொல்வாள்.

பார்வதி பாய் சலிப்புடன் தலையசைத்துநாம் பேசியது போதும், நீ இப்படி இனிமேலும் நீடிக்கமுடியாது. நீ அரசவிவகாரங்களில் ஏதேனும் வகையில் தலையிட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன.

எனக்கு எல்லாம் தெரிந்துகொண்டுதான் இருக்கிறது.

என்னதெரியும்? சொல், இப்போது நம்முடைய திவான் யார்?”

கிருஷ்ணராவ்தானே? ரெஸிடென்ட் கல்லன் தஞ்சாவூரிலிருந்து கூட்டிக்கொண்டுவந்த அந்தக் குள்ளன்?” என்றார் ராமவர்மாஅவன் இங்கே வந்தபோது ஒருநாள் பேச்சுவாக்கில் சுப்பாராவ் சொன்னார், அவன் வெள்ளைச்சிலந்தி என்று. வந்த முதல்நாளே அமைதியாக வலையைக் கட்ட ஆரம்பித்துவிட்டான். வலை இந்த அரண்மனையையும் திருவிதாங்கூர் நாட்டையும் முழுமையாக மூடிக்கொள்வது வரை நமக்குத் தெரியவில்லை. ஒவ்வொருவரையாக கட்டித்தழுவி நஞ்சூட்டினான். ஒவ்வொருவரையாக குருதி உறிஞ்சி குடித்து வளர்ந்தான்.

வந்த அன்றே அவனை நான் அடையாளம் கண்டேன். அவன் ரெஸிடென்டின் நிழலில் வளர்ந்தான். அவனை திவானாக ஆக்கவேண்டும் என்று ரெஸிடென்ட் மெட்ராஸுக்கு எழுதினார். அவனை திவானாக ஆக்கக்கூடாது என்று நான் மெட்ராஸ் கவர்னரிடம் மன்றாடினேன். ஜார்ஜ் ஹே துரை என் கோரிக்கையை அப்படியே ரெஸிடென்ட் கல்லனுக்கு அனுப்பினார். இங்கே வேறு தகுதியானவர்கள் எவரும் இல்லை என்று ரெஸிடென்ட் கல்லன் ஜார்ஜ் ஹே துரைக்கு எழுதினார்….” என்றார் ராமவர்மா.

உளக்கொதிப்பால் ராமவர்மா எழுந்துவிட்டார்அதற்கும் நான் ஈடுசெய்தேன். கர்னல் மன்றோ இங்கே கொண்டுவந்தவர் முன்னாள் திவான் வெங்கிட்ட ராவ். பிரிட்டிஷாருக்கு வேண்டியவர், அவருக்கு தகுதியில்லை என்று பிரிட்டிஷார் சொல்லவே முடியாது. அவர் மெட்ராஸில் பிரிட்டிஷ் சர்வீஸில் இருந்தார். அவரை வரவழைத்து திவானாக்கினேன். கிருஷ்ணராவை திவான்பேஷ்கார் பதவியில் நியமித்து அவருக்கு கீழே துணை திவான்பேஷ்கார் பதவி ஒன்றை உருவாக்கினேன். எல்லா அதிகாரத்தையும் துணைதிவான் பேஷ்காரிடமே ஒப்படைத்தேன்

சலிப்பும் துயரமுமாக பார்வதி பாய் அவரை பார்த்துக்கொண்டிருந்தாள்.

எனக்கும் அரசியல் விளையாட்டு தெரியும். ஜார்ஜ் ஹே துரை தற்காலிகமாக லண்டன் போனபோது ஹென்றி டிக்கின்ஸன் மெட்ராஸின் ஆக்டிங் கவர்னர் ஆனார். உடனே அவருக்கு ஒரு பரிசை அளித்து கிருஷ்ணராவை பதவிநீக்கம் செய்ய அனுமதி பெற்றேன். அவரை திருவனந்தபுரத்திலிருந்தே துரத்தினேன்என்றார் ராமவர்மா.

பார்வதி பாய் புன்னகைத்து, “ஒரு சிறுவெற்றி. சரி, அதனால் என்ன ஆயிற்று?. ரெஸிடென்ட் கல்லன் அது அவருக்கு எதிரான நடவடிக்கை என்று எடுத்துக் கொண்டார். அதற்கு பதிலடியாக உன் ஆசிரியர் சுப்பாராவை வெளியேற்றுவதற்கு அவர் முயன்றார். மீண்டும் கார்ஜ் ஹே மெட்ராஸ் கவர்னராக வந்தார். கர்னல் அவரிடம் பேசி சுப்பாராவை டிஸ்மிஸ் செய்யவைத்தார். அவரை திருவனந்தபுரத்தில் இருந்து துரத்தினார். உன் அவைக்கு வந்து கதறி அழுத சுப்பாராவை உன்னால் காப்பாற்ற முடியவில்லை. அவர் தஞ்சாவூருக்கு போனார்

ஆமாம், ஆனால் அவரை மீண்டும் அழைத்துக்கொண்டேன்என்றார் ராமவர்மா.

எப்படி? ஒன்றரை ஆண்டுகள் கழித்து. ஜார்ஜ் ஹேக்கு பதினெட்டு கடிதங்கள் அனுப்பினாய். தனிப்பட்ட பரிசாக மட்டும் பல ஆயிரம் ரூபாய் கொடுத்தாய். கடைசியில் வெற்றி கிடைத்தது. சுப்பாராவ் இங்கே வந்தார். மதிப்பில்லாத ஓர் அரசப்பதவியில் அமர்ந்தார்இந்த மொத்த அரசியலுக்கும் நீ செலவிட்டது மூன்று ஆண்டுகள்…” என்றார் பார்வதி பாய்.

ராமவர்மாவின் உடலில் ஒரு மிகச்சிறிய அசைவு நிகழ்ந்தது. அவள் அவருக்கு எதையாவது கற்பிக்க முயலும்போதெல்லாம் எழும் அசைவு அது. உடலில் விழுந்த நீர்த்துளியை உதறுவதுபோல. அவளைச் சினமூட்டும் ஒரு சொல் போல.

அவள் குரல் ஓங்கியது. “அந்த மூன்றாண்டும் இங்கே என்னென்ன நிகழ்ந்தது என்று உனக்கு தெரியுமா? அங்கே மெட்ராஸ் ராஜதானியில் மீண்டும் பஞ்சம் தலைகாட்டத் தொடங்கியது. இங்கே பல்லாயிரம்பேர் ஒவ்வொரு நாளும் பஞ்சம் பிழைக்க கிளம்பி வந்து ஆரல்வாய்மொழி கணவாயில் குவிந்து கிடந்தனர். அவர்களுக்கு மலைப்பகுதிகளில் நிலம்கொடுத்து குடியேற்றவேண்டிய அதிகாரிகள் அந்தப் பஞ்சப்பரதேசிகளிடமே லஞ்சம் வாங்கினார்கள். சிலர் அவர்களை அடிமைகளாகப் பிடித்துக்கொண்டு சென்று தூத்துக்குடியில் விற்பவர்களிடம் கூட்டு சேர்ந்து கொண்டார்கள்.

இங்கே நம் மண்ணுக்குள் அடிமைமுறை பத்மநாபசாமிக்கு எதிரான குற்றம். நான் இட்ட ஆணை அது. ஆனால் நாகர்கோயிலில் இருந்தும் பத்மநாபபுரத்தில் இருந்தும்கூட பஞ்சம்பிழைக்க வந்த மக்களை ஆசைகாட்டியும் பிடித்துகட்டியும் கொண்டுசென்று விற்றார்கள் நம் அதிகாரிகளான நாயர்கள். நம் கடல்முழுக்க போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கம் செலுத்தலாயினர். நமக்கு விசுவாசமாக இருந்த மீனவக்குடிகள் போர்ச்சுக்கலுக்கு கப்பம்கட்டி நம்மை எதிர்க்கத் தொடங்கினர். நம் சந்தைகள் அனைத்திலும் ஆதிக்கம் செய்யும் கூட்டங்கள் உருவாயின. போர்ச்சுக்கல்காரர்கள் தாக்கியதனால் மணக்குடி முதல் ஆலப்புழை வரை துறைமுகங்கள் பொலிவிழந்தன.

மூன்றே ஆண்டுகளில் நான் பத்தாண்டுகளில் உருவாக்கிய செல்வத்தை அழித்துவிட்டாய். ராமா, இந்த திருவிதாங்கூரின் செல்வம் இரண்டே ஊற்றுக்களில் இருந்துதான். மலைக்குடியேற்றக்காரர்கள் அளிக்கும் தீர்வை, சந்தைகளும் துறைமுகங்களும் அளிக்கும் சுங்கம். மலைக்குடியேற்றக்காரர்கள் உருவாக்கும் விளைபொருட்கள் ஆறுகள் வழி சந்தைகளில் வந்துசேரவேண்டும். தொடக்கம் முதல் இறுதிவரை இந்தப்பாதை பாதுகாக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் நாம் அழிவோம்…. நான் திட்டமிட்டு ஒவ்வொரு நாளும் கண்விழித்து கணக்கிட்டு காத்து உருவாக்கிய பயிர் இது, உன்னால் அது கருகியதுஎன்றாள் பார்வதி பாய்.

நான் என்ன செய்திருக்கவேண்டும்? என் திவானை நியமிக்க எனக்கு உரிமை இல்லையா? எனக்கு நம்பிக்கை இல்லாத ஒருவரை நீக்க எனக்கு உரிமை இல்லையா? நான் பணிந்து போகவேண்டுமா?” சட்டென்று ராமவர்மா ஆவேசம் கொண்டார். “கண்முன் விஷவிருட்சம் வளர்கிறது. அதை வெட்டிவீச நம்மால் முடியவில்லை என்றால் நாம் ஏன் அரசாங்கம் என்று சொல்லிக் கொள்ளவேண்டும்? இந்த வெற்றுவேஷம்தான் அரசனின் அடையாளமா? அந்த கிரீடமும் செங்கோலும் உடைவாளும் மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாள் வைத்திருந்தது. அதை தொடுவதற்கே எனக்கு தகுதி இல்லை.

அந்த தகுதியை ஈட்டிக்கொள், நான் சொல்லவந்தது அதைத்தான்என்று பார்வதி பாய் சொன்னாள்.

நான் சும்மா இருந்திருக்கவேண்டுமா? கிருஷ்ணராவை அப்படியே இந்த நாட்டை ஆளவிட்டிருக்கவேண்டுமா?”

வேண்டாம், ஆனால் இதை வைத்துக்கொண்டு சதுரங்கம் விளையாடியிருக்கக்கூடாது. அந்த கிருஷ்ணராவ்தான் பிரச்சினையா? அவன் சிக்கலானவன் என்று தோன்றினால் அவனை அப்போதே கொன்றுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கவேண்டியதுதானே?”

அய்யோஎன்று ராம வர்மா தலையை பிடித்துக்கொண்டார்.

பிரம்மஹத்தியை பயப்படுகிறாயா? பத்துபணம் கொடுத்தால் இன்னொரு நியோகி பிராமணன் இவனை கொன்றிருப்பானேஎன்றாள் பார்வதி பாய்அவன் செத்த அன்று அவன் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி அவன் விதவைக்கு ஒரு பென்ஷனையும் அறிவித்துவிட்டு ரெஸிடென்ட் கல்லனைக் கண்டு நம் துயரத்தையும் தெரிவித்திருந்தால் விஷயம் அங்கேயே முடிந்தது.

நான் நீங்களல்ல இளையம்மே.

நீ வேறு, அதனால்தான் சொன்னேன். நானாக இருந்திருந்தால் இந்த மொத்த விஷயத்துக்கே ஐந்து நாட்களுக்குமேல் செலவிட்டிருக்கமாட்டேன். சுப்பாராவையே கொல்ல ஆணையிடுவேன். அவரைக் கொன்றது ரெஸிடென்ட் கல்லன்தான் என்று பழிசுமத்தி அவரை இந்நேரம் லண்டனுக்கு அனுப்பியிருப்பேன்அடுத்து வரும் ரெஸிடென்ட் இங்கே என் சொல்லே வாழும் என்று தெரிந்து கொண்டுதான் திருவிதாங்கூரில் காலெடுத்து வைப்பான்

அய்யோ….அய்யோ!” என்றார் ராமவர்மா அவர் உடல்நடுங்கியது. கைகளை கும்பிடுபவர் போல நெஞ்சுடன் சேர்த்து வைத்துக்கொண்டார்.

நான் ராணியாக ஆனது இந்த அரசியலாட்டத்திற்காக அல்ல. தெரியுமா, அங்கே வங்காளத்தில் பஞ்சத்தில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே மெட்ராஸ் ராஜதானியில் பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் எண்ணிக்கொள், இதெல்லாம் பஞ்சமே இல்லை. மிகப்பெரிய பஞ்சம் வரப்போகிறது. பல்லாயிரம்பேர், பல லட்சம்பேர் செத்துக்குவியப் போகிறார்கள். இப்படி வெள்ளையர் நாட்டுராஜ்யங்களை அழித்து விதைநெல்லை கொள்ளையடித்துச் சென்றால் ஒரு மழை பொய்த்தால் போதும் லட்சக்கணக்கானவர்கள் செத்து விழுவார்கள். இந்த வெள்ளையர் அப்போதும் கப்பமும் கட்டணமும் அபராதமும் வசூலிப்பதை நிறுத்தப் போவதில்லை.

சொல்லப்போனால் பஞ்சத்தை அவர்கள் ஊக்குவிப்பார்கள். அதைப் பயன்படுத்தி இங்கிருந்து கூலிகளை உலகமெங்கும் கொண்டு செல்வார்கள். கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே ஆப்ரிக்கா வரை கொண்டு சென்று குவிப்பார்கள். செல்பவர்களில் முக்கால்வாசிப்பேர் அங்குள்ள புதியநோய்களில் செத்து அழிவார்கள். சாகுந்தோறும் இவர்கள் மேலும் கொண்டு சென்று நிரப்புவார்கள். இரக்கமே காட்டமாட்டார்கள்என்று பார்வதி பாய் தொடர்ந்தாள்.

ஏனென்றால் நாமெல்லாம் அவர்களுக்கு மனிதர்களே அல்ல. ஒருவகை விலங்குகள். அவர்கள் தென்னமேரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் ஒட்டுமொத்த மக்களையும் கொன்றே அழித்தவர்கள். ஆப்ரிக்காவில் அத்தனை மக்களையும் அடிமைகளாக்கியவர்கள். மக்களின் சாவு அவர்களுக்கு வெறும் கணக்குதான். அவர்களில் ஒருவர் கூட வருத்தப்படப் போவதில்லை. அவர்களின் பணிக்குறிப்புகளில் பட்டினிபற்றியும் பஞ்சம் பற்றியும் ஒரு வரிகூட இருக்காது. போர்வெற்றிகளும் கப்பம்கொண்ட கணக்குகளும்தான் இருக்கும்என்று பார்வதி பாய் சொன்னாள்.

ராமவர்மா திகைத்துப் போய் அமர்ந்திருந்தார்.

இந்தியாவெங்கும் உள்ள ஏழை மக்களைப் பார்க்கிறேன். புழுப்பூச்சிகளைப் போல சாகிறார்கள். கூட்டம்கூட்டமாக செத்து அழியப்போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் கேட்க யாருமில்லை. இங்கே திருவிதாங்கூரில் நான் இருக்கிறேன். என் மக்கள் தாயில்லா பிள்ளைகள் அல்ல

நெஞ்சில் கைவைத்து பார்வதிபாய் தொடர்ந்தாள்சென்றமுறை மெட்ராஸ் ராஜதானியில் பஞ்சம் வந்தபோது என் நாட்டில் ஒருவர் கூட சாகாமல் நான் பார்த்துக்கொண்டேன். ஒருவர் கூட அடிமையாக அன்னியநாட்டுக்கு போகாமல் நான் பேணினேன். இனிமேலும் காப்பேன், நான் உயிருடன் இருப்பதுவரை எனக்கு வேறெந்த லட்சியமும் இல்லை…. அதற்குமுன் எனக்கு எந்த மனிதர்களும் பொருட்டில்லை.

ராமவர்மா உடல் அதிர அப்படியே சரிந்து படுக்கையில் சுருண்டதுபோல படுத்துக் கொண்டார். அவர் தோள்கள் குலுங்கின.

கடைசியாக ஒன்றைக் கேட்கிறேன் ராமா, ஸ்ரீனிவாச ராவ் திவான் பொறுப்பிலிருந்து விலகியபோது மீண்டும் நீயே தானே கிருஷ்ணராவை அழைத்து திவானாக ஆக்கினாய்

ஆமாம், என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ரெஸிடென்ட் கல்லனிடம் போரிட என்னால் முடியாது. நான் சலித்துவிட்டேன்.

அதாவது நீ அரசனான பிறகு செய்த ஒரே போராட்டத்தையும் கைவிட்டுவிட்டாய்.

ஆமாம்.

ஆனால் நீ பணத்தை மண்ணையும் கல்லையும்போல செலவழிக்கிறாய். ஆண்டுக்கு அரண்மனைக்கு பட்டு வெல்வெட் துணிகள் வாங்குவதற்காக மட்டும் மூன்றுலட்சம் ரூபாய் செலவழித்தாய். அரண்மனையில் ஓவியங்கள் வாங்குவதற்கு மட்டும் அறுபதாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. இசைக்கலைஞர்களுக்கான செலவுமட்டும் எழுபத்தாறாயிரம் ரூபாய்அவர்களுக்கான பரிசுகள், ஊதியங்கள், இசைவிழாக்கள்…”

ராமவர்மா ஒன்றும் சொல்லவில்லை.

ராமா நீ எப்படி அரசனாக ஆனாய் தெரியுமா?”

ராமவர்மா திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.

நீ உன் அம்மாவின் கருவில் உருவானபோது திருவிதாங்கூரை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் சேர்க்கும் எண்ணம் சென்னை கவர்னருக்கு இருந்தது. ஜார்ஜ் பர்லோ அதற்காக எல்லாவற்றையும் செய்தார். ஆகவே நீ கருவிலிருக்கையிலேயே உனக்கு முடிசூட்டினோம். அரசன் என்று எல்லா ஆவணங்களிலும் உன்பெயரை சேர்த்தோம். அரசன் இருந்த நாடு ஆதலால் திருவிதாங்கூர் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்படவில்லை.

ஆனால் இன்று நீ நோயுற்றிருக்கிறாய் என்றும் திருவிதாங்கூரின் ஆட்சி சீர்குலைந்திருக்கிறது என்றும் ரெஸிடென்ட் கல்லன் மெட்ராஸ் கவர்னருக்கு செய்தி அனுப்பமுடியும். உன்னால் நாட்டை ஆட்சிசெய்து உரியமுறையில் கப்பம் கட்டமுடியாது என்று ஒரு வார்த்தை அவர் எழுதினால் போதும், மெட்ராஸ் கவர்னர் நம் நாட்டை இணைத்துக் கொண்டுவிடுவார். பூதம் வாய்திறந்து காத்திருக்கிறதுஎன்றார் பார்வதி பாய்.

அதற்கான எல்லா ஆதாரங்களும் இங்கிருக்கின்றன. நீ ரெஸிடெண்டை சந்தித்தே இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவர் உன்னைச் சந்திக்க வேண்டும் என்று கோரி எழுதிய பதினேழு கடிதங்களுக்கு நீ பதில் அளிக்கவில்லை. ரெஸிடென்ட் அலுவலகத்திலிருந்து வந்த நாநூற்றுக்கும்மேல் கடிதங்களுக்கு உன்னிடமிருந்து பதிலே போகவில்லைஎன்று பார்வதி பாய் சொன்னாள்.

சென்ற ஆண்டு தெற்குத்திருவிதாங்கூரில் புயலடித்தது. தேங்காய்ப்பட்டினமும் மணக்குடியும் முழுமையாக அழிந்தன. கடுக்கரையிலும் பறக்கையிலும் ஏரிகள் கரையிடிந்து வெள்ளம் பெருகியது. பிடாகைக்காரர்கள் உன்னை சந்திக்க விரும்பினர். நீ சந்திக்கவில்லை. மக்களுக்கு தேவையான எந்த உதவியும் செய்யப்படவில்லை. அடுத்த பூவுக்கு விதைநெல் கேட்டு நாஞ்சில் நாட்டிலிருந்து தூதுவந்தனர். அழிந்த தோட்டங்களை மறுபடியும் அமைப்பதற்காக உதவிகோரி மக்கள் கோயில்கள் தோறும் கூடி குரலெழுப்பினார்கள். ரெஸிடென்ட் அது தன் வேலை இல்லை என்று தவிர்த்துவிட்டார். நீ கண்டுகொள்ளவே இல்லை. என் தனிப்பட்ட சொத்துக்களையும் நிதியையும் கொண்டு குறைந்தபட்ச உதவிகளை நான் செய்தேன்என்றாள் பார்வதி பாய்.

ராம வர்மா அவளை கேட்காதவர் போல சுருண்டே கிடந்தார்.

நீ ரெஸிடென்ட் கல்லனை ஏதோ தனிப்பட்ட எதிரிபோல நினைக்கிறாய். உன்னுடைய அத்தனை சிக்கல்களும் அங்கிருந்துதான் தொடங்கின. பலமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன், ரெஸிடென்ட் துரை நம் எதிரி அல்ல, நாம் அவரை பயன்படுத்திக்கொள்கிறோம்என்றாள் பார்வதி பாய்நான் ஆட்சிக்கு வந்தபோது என் ஆட்சியில் ஏதாவது குறைகண்டு திருவிதாங்கூரை நேரடியாக கைப்பற்ற மெட்ராஸ் கவர்னர் இறுதிமுடிவு செய்திருந்தார். ஒவ்வொருநாளும் அங்கிருந்து குறைசொல்லும் கடிதங்கள் வந்துகொண்டே இருந்தன.

கர்னல் மன்றோ அப்படி வரும் கடிதங்களுக்கு பதில் எழுதும்போது அப்படி திருவிதாங்கூரின் ஆட்சி சீரழிந்திருப்பது உண்மை என்றாலும் விரைவிலேயே மீட்டுவிடமுடியும் என்றே எழுதுவார். அவருடைய மனம் எனக்கு மெல்ல புரிந்தது. திருவிதாங்கூர் மெட்ராஸுடன் சேர்க்கப்பட்டால் அவர் ரெஸிடென்ட் அல்லாமலாவார். அதை அவர் விரும்பவில்லை. அதை நான் புரிந்துகொண்டேன். மெட்ராஸ் கவர்னர்களிடமிருந்து இந்நாட்டைக் காப்பாற்றுவதற்குச் சிறந்த வழி என்பது பிரிட்டிஷ் ரெஸிடென்ட்களை ஆதரிப்பது என்று நான் புரிந்துகொண்டேன். இங்கே ரெஸிடென்ட்கள் மெட்ராஸ் கவர்னர்களின் நேரடிக் கட்டுப்பாடில்லாமல் தனியாட்சி செலுத்துகிறார்கள். அந்த அதிகாரத்தை இழக்க விரும்பமாட்டார்கள்பார்வதி பாய் சொன்னாள்.

மெட்ராஸ் கவர்னர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயப் பிரபுக்கள். இந்த ரெஸிடென்ட்கள் போர்வீரர்கள். ஆகவே இவர்களை புகழ்ந்து, இவர்களை அரசர்களைப்போல நடத்தி, தேவையென்றால் லஞ்சம் கொடுத்து திருவிதாங்கூரின் ஆதரவாளர்களாக வைத்துக் கொண்டேன். திருவிதாங்கூர் இதுவரை சுதந்திரமாக இருப்பது தொடர்ச்சியாக இங்கே வந்த ரெஸிடென்ட்கள் இதன் சுதந்திரத்தை ஆதரிப்பதனால்தான். இப்போதுகூட ரெஸிடென்ட் கல்லன் திருவிதாங்கூர் சுதந்திரநாடாக இருக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார். ஏனென்றால் அப்போதுதான் அவர் ஆட்சிசெய்யமுடியும்என்றாள் பார்வதி பாய்.

ஆகவே அவருடைய அதிகார ஆசையை நாம் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்என்று பார்வதிபாய் தொடர்ந்தாள். “சொல்லப்போனால் அதிகார ஆசையில்லாத ரெஸிடென்டுக்கு அதை உருவாக்க வேண்டும். ஆனால் மெய்யாகவே அவருடைய அதிகாரம் நம்மை பாதிக்கும் என்றால் அவரைத் தோற்கடிக்க வேண்டும்என்றாள் பார்வதி பாய்இந்த வெள்ளையரை நம்மால் வேறெந்த வகையிலும் தோற்கடிக்கமுடியாது. இவர்கள் தன்முனைப்பு கொண்டவர்கள், அதை அடிக்கவேண்டும். அவர்களின் கௌரவத்தைக் குலைக்கவேண்டும். அவர்களை அவதூறு செய்து மனமுடையச் செய்யவேண்டும். அவர்களே இங்கிருந்து ஓடவைக்கவேண்டும்

அது மிக எளிது. ஏனென்றால் இவர்கள் தங்கள் படைவீரம் வழியாக புகழும் பதவியும் ஈட்டிக்கொண்ட போர்வீரர்கள். இவர்கள் கீழ்க்குடியினர், ஆகவே கௌரவமானவர்கள் அல்ல என்ற எண்ணம் பிரிட்டனின் பிரபுக்களிடையே இயல்பாகவே உண்டு. ஆகவே இவர்கள்மேல் எழும் எந்த அவதூறையும் அவர்கள் நம்புவார்கள். இவர்களை அவமானப்படுத்தும் எந்த வாய்ப்பையும் அவர்கள் தவறவிடமாட்டார்கள்

ஆனால் அதை நாம் நேரடியாகச் செய்யக்கூடாது. நாம் அதன்பின் இருப்பதையே அவர்கள் அறியக்கூடாது. ஒரு ரெஸிடென்டைப்பற்றி நாம் நம் கையால் ஒருபோதும் எதிர்மறையாக ஒரு வரிகூட கவர்னருக்கு எழுதக்கூடாது. ஏனென்றால் அந்த ரெஸிடென்டுக்கு எங்கே நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அதோடு பொதுவாக வெள்ளையர்கள் அவர்களைப் பற்றி கறுப்பர்கள் புகார் செய்வதை விரும்புவதில்லை. அவர்களைப் பற்றிய புகார்கள் தன்னிச்சையாக எழுவதை நாம் திட்டமிட்டு அமைக்கவேண்டும்அது மிக எளிது. அதற்குரியவர்களை தேடிக்கண்டுபிடிக்கலாம்நீ செய்ததெல்லாம் வெறும் சிறுபிள்ளை விளையாட்டுஎன்று பார்வதி பாய் சொன்னாள்.

இளையம்மை, இதெல்லாம் எதற்காக?” என்று முனகலாக ராம வர்மா கேட்டார்.

சுதந்திரத்திற்காக .யோசித்துப்பார், கோழிக்கோடு சாமூதிரியிடமிருந்து நாடு பறிக்கப்பட்டது. இன்று மலபார் பிரிட்டிஷ் அரசின் பகுதி. இப்போது மக்கள் கூட்டம்கூட்டமாக மலபாரிலிருந்து பஞ்சம் பிழைக்கச் செல்கிறார்கள். அங்கே கொத்துக் கொத்தாகப் பட்டினி மரணங்கள் நிகழ்கின்றன. ஆனால் திருவிதாங்கூருக்கு பஞ்சம்பிழைக்க மக்கள் தேடி வந்துகொண்டிருக்கிறார்கள். இங்கே சோறிருக்கிறது. அந்த வேறுபாடே காட்டும், எதற்காக நான் போராடுகிறேன் என்று. ஏன் இதையெல்லாம் செய்கிறேன் என்றுஎன்றாள் பார்வதிபாய்.

ராமவர்மா பெருமூச்சுவிட்டார்.

பார்வதி பாய்ராமா நான் உன்னிடம் கேட்கவந்தது ஒன்றே. இதை கேட்கும் சந்தர்ப்பத்தை எண்ணி எண்ணி தவிர்த்தேன். என்னால் இதை உன்னிடம் கேட்கமுடியாது. நீ என் முதல்மகன் போல. உன்னை மடியிலிட்டு வளர்த்திருக்கிறேன்என் அரசியல் வாழ்க்கையில் நான் எதற்குமே தயங்கியவள் அல்ல, இதற்காக தயங்கினேன்.

நீங்கள் என்னிடம் எதையும் கேட்கலாம் இளையம்மைஎன்றார் ராம வர்மா.

நீ அரசனாக நீடிக்கவேண்டுமா?”

ராமவர்மா திடுக்கிட்டவர்போல பார்த்தார். அவருடைய நெஞ்சு துடிப்பது தெரிந்தது. கழுத்திலும் நெற்றியிலும் நீலநரம்புகள் அதிர்ந்தன.

வரவிருக்கும் காலம் கொடுமையானது ராமா. நீ உன் செயலின்மையால் பல்லாயிரம்பேரை பட்டினிச்சாவு நோக்கி தள்ளிவிடுவாய்.

இளையம்மை, என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர் நடுங்கும் குரலில் கேட்டார்.

நீ உன் இளையவனை அரசனாக்கிவிட்டு மருத்துவம் செய்து கொள்வதற்காக லண்டனுக்கு போ. உன் நோய் அங்கே குணமாகும். அங்கே நீ விரும்பிய இசையை முழுமையாக கற்கவும் முடியும்…”

ராமவர்மா பெருமூச்சுவிட்டு தளர்ந்தார்.

நீ மென்மையானவன்என்றாள் பார்வதி பாய். “முன்பெல்லாம் இங்கே வீடுகளின் கதவுகள் எடைமிக்கவை. அந்தக் கதவுகளை நிறுத்தும் இடத்தில் ஒரு நிலைக்கல்லை வைப்பார்கள். அந்தக்கல்லை கல்லாசாரிகள் தேடிப்பிடித்துக் கொண்டுவருவார்கள். நெய்க்கருப்பன் கல் என்று அதைச் சொல்வார்கள். அது இரும்பைவிட உறுதியானது. உடையாது, எளிதில் தேயாது. அதில் எடைமிக்க கதவு ஒருநாளுக்கு நூறு இருநூறுமுறை சுழல வேண்டியிருக்கிறது…”

அரசன் நெய்க்கருப்பன் கல்லாக இருக்கவேண்டும். நீ மென்மையான மாக்கல். அதில் சிற்பங்கள் செய்யலாம். நிலைக்கல்லாக அமையமுடியாது. நெய்க்கருப்பங்கல்லில் சிற்பம் வடிக்கமுடியாது, அது உளியை உடைத்துவிடும். அது நிலைக்கல்லாக வைக்க மட்டுமே உதவும்உன் இளையவன் அப்படிப்பட்டவன்அவள் அவனை நோக்கி குனிந்துஉன்னை நீயே மதிப்பிட்டுக்கொள்என்றாள்.

ராமவர்மா நெடுநேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

திருவிதாங்கூரின் நலம் மட்டுமே என் நோக்கம். நீ அதை எண்ணிப்பார்.

இளையம்மை, மென்மையான அரசன் ஒருவன் இருக்கமுடியாதா? கலைகளையும் இலக்கியத்தையும் அறிந்தவன், நெறிகளில் நம்பிக்கைகொண்டவன் அரசனாக ஆளவே முடியாதா?”

ராமா, புராணங்களில்கூட அப்படிப்பட்ட ஓர் அரசரைப்பற்றிய செய்திகள் இல்லையேஎன்றாள் பார்வதி பாய்.

ம்என்றார் ராமவர்மா.

அலக்ஸாண்டர் சக்கரவர்த்தி புல்லாங்குழல் வாசித்தபோது அவர் தந்தை வந்து பிடுங்கி வீசிவிட்டு அவர் வாயில் சூடுபோட்டார் என்று உன் ஆங்கில ஆசிரியர் சொன்னார், நினைவிருக்கிறதா?” என்று பார்வதிபாய் சொன்னாள்புல்லாங்குழல் இசைப்பவனால் கொல்லமுடியாது. கொல்லாதவன் அரசன் அல்ல.

ராமவர்மா பெருமூச்சுவிட்டார்.

ஒட்டுமொத்தப் பெருங்கருணையால் ஒவ்வொன்றிலும் கருணையே இல்லாமலிருப்பவனே அரசன் என்று ஸ்மிருதிகள் சொல்கின்றனஎன்று பார்வதிபாய் சொன்னாள்.

ராம வர்மா தலைதாழ்த்தி அமர்ந்திருந்தார்.

நீ சாப்பிட்டு ஓய்வெடுநான் மாலையில் வந்து உன்னைப்பார்க்கிறேன்என்று பார்வதிபாய் எழுந்தாள்.

சுப்பா பிள்ளை வந்து வாசலில் நின்றார். ராமவர்மா கையூன்றி எழுந்தார். அவர் தள்ளாடி கட்டிலுக்கு கீழே நிலத்தில் விழுந்தார். பார்வதி பாய் அதை பார்க்காதவர்போல சீரான நடையுடன் விலகிச் சென்றுவிட்டார்

பிள்ளே, வந்து என்னை பிடிஎன்றார் ராமவர்மா.

சுப்பா பிள்ளை அவரை அள்ளி தூக்கி கொண்டுசென்றார்.

பார்வதி பாய் அந்தியில் அரண்மனை முன்னால் மஞ்சலில் வந்திறங்கியபோது மார்த்தாண்ட வர்மா அங்கே வாசலிலேயே அவளைக் காத்திருந்தார். அவள் விழிகாட்டியதும் மற்றவர்கள் அகன்றனர். அவள் தாழ்ந்தகுரலில் “என்ன ஆயிற்று?” என்றாள்.

“அவரைச் சந்திக்க காலைமுதல் பத்துமுறைக்குமேல் வந்தேன். பார்க்க முடியவில்லை. உடல்நிலை சீரடையாமலேயே இருக்கிறது. எழுந்து சங்கீத அறைக்குப்போய் அங்கே தம்பூராவுடன் பகல் முழுக்க அமர்ந்திருந்தார். சற்றுமுன்புதான் படுக்கையறைக்கு சென்றார். ரெஸிடென்ட் கல்லனின் தூதுடன் பேஷ்கார் அண்ணாவிப்பிள்ளை வந்தார். அவரையும் சந்திக்கவில்லை

“டாக்டர் பென்ஸன் வந்தாரா?”

“இங்குதான் பகல் முழுக்க இருந்தார். பலமுறை சந்திக்க ஒப்புதல் கேட்டு ஆளனுப்பப்பட்டது. மறுத்துவிட்டார். இளையம்மே இரண்டு ஆண்டுகளில் அவர் ஒரு வெள்ளைக்காரரைக் கூட சந்திக்கவில்லை. வெள்ளை என்ற வார்த்தையையே இழிவாகத்தான் உச்சரிக்கிறார். அவருடைய முன்னால் எவரும் வெள்ளை என்ற சொல்லையே கூறக்கூடாது என்று ஆணை”

“ம்” என்றாள் பார்வதி பாய்

“ஆனால் அந்த தஞ்சாவூர்க்காரர்களை வரவழைத்தார். அவர்களுடன் பகல் முழுக்க இருந்தார்”

பார்வதி பாய் “நான் பார்க்கிறேன்” என்று சொல்லி உள்ளே சென்றாள். மார்த்தாண்ட வர்மா வாசலேயே நின்றுவிட்டார்.

பார்வதி பாய் சீரான நடையில் உள்ளே செல்ல சுப்பா பிள்ளை வந்து வணங்கினார். விழிகளால் சொல் என்று அவள் ஆணையிட்டாள்

“மதியம் பால்கஞ்சியும் அதன்பின் இருமுறை பழச்சாறும் அருந்தினார். காய்ச்சல் சற்று இருக்கிறது. வயிற்றுவலியும் இருக்கிறது என நினைக்கிறேன்.”

“பகல் முழுக்க என்ன செய்தார்?”

“சங்கீத அறையில் இருந்தார்” என்று சுப்பா பிள்ளை சொன்னார். “வடிவேலு, பொன்னையா ,சின்னையா, சிவானந்தம் நால்வருமே வந்தார்கள். சேர்ந்து பாடிக்கொண்டே இருந்தார்கள். வடிவேலு முன்பு இங்கே காணிக்கை வைத்த வெள்ளைக்கார தோள்வீணையை எடுத்துவரச்சொல்லி ஆணை…”

“வயலினா?”

“ஆமாம்… அதை எடுத்துவந்தோம். அதை அவர்கள் சேர்ந்து வாசித்தனர். அவர்கள் சென்று ஒரு நாழிகைகூட ஆகவில்லை.”

பார்வதி பாய் தலையசைத்தாள். அவர் வணங்கி பின்னகர்ந்தார்.

பார்வதிபாய் சென்று நிற்க சேவகன் அனந்தன் நாயர் உள்ளே சென்று ராமவர்மாவை பார்த்துவிட்டு வெளிவந்து உள்ளே செல்லலாம் என்று காட்டுவதுபோல தலைவணங்கினார்.

பார்வதி பாய் உள்ளே சென்றபோது ராமவர்மா தன் கட்டில்மேலேயே அமர்ந்திருந்தார். காலையில் அவள் விட்டுச்சென்றதுபோலவே தோன்றுவதாக அவள் நினைத்தாள்.

ராமவர்மா முகமலர்ச்சியுடன் “இளையம்மை உட்காருங்கள்” என்றார்

பார்வதி பாய் அமர்ந்தாள்.

“நான் ஒன்பது கீர்த்தனங்கள் எழுதியிருக்கிறேன்” என்று அவர் உற்சாத்துடன் தொடங்கினார் “ஆறு கீர்த்தனங்கள் முன்னரே எழுதி ஸ்வரப்படுத்தி முடித்தவை. மற்றவற்றை இன்றைக்குத்தான் முடித்தேன். வடிவேலுவையும் சகோதரர்களையும் வரவழைத்து சுவரகுறை எல்லாம் தீர்த்துவிட்டேன். மிகச்சிறப்பாக வந்திருக்கின்றன.”

அவர் ஒரு கத்தை தாள்களை எடுத்துக்காட்டி மேலும் உற்சாகத்துடன் சொன்னார். “ஒன்பது ராகங்களில் ஒன்பது கீர்த்தனைகள். தேவி ஜகஜனனி கீர்த்தனைக்கு சங்கராபரணம்… சங்கராபரணம் ராஜராகம் இளையம்மை. முதலில் பாடப்பட்டால் அரங்குக்குள் யானை நுழைந்ததுபோலிருக்கும். அடுத்த பாடல் பாகிமாம் வாகீஸ்வரி கல்யாணியில். கல்யாணி என்றால் அலங்காரமான ராகம். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபம் போல ஓர் உணர்வு வரும். தேவி பாவனே, இந்தக் கீர்த்தனையை சாவேரியில் அவைத்திருக்கிறேன். இது மங்கலமான ராகம். சுமங்கலையான பெண்கள் தாலமெடுத்து வருவதுபோல இருக்கும்”

“தோடியில் அடுத்த கீர்த்தனை. தோடி மலர்மழை பொழிவிக்கும் ராகம் அல்லவா?. பாரதி மாமவ என்னும் கீர்த்தனம்” என்று பேசியபடியே மனம் பொங்கி ராமவர்மா எழுந்து நின்றார் “ஜனனி மாமவமேயே கீர்த்தனையை பைரவியில் அமைத்தேன். அது நடனத்திற்குரியது. மயில்களாடும் லாஸ்ய நடனம். மாயூர கதி. அல்லது இளங்காற்றில் கொடிகள் ஆடுவதுபோல. அடுத்தபாடல் தென்றல் மலர்மணத்துடன் வீசுவதுபோன்ற சாவேரியில். ஜனனி பாகிசுதா”

“அடுத்தது சின்னக் குழந்தைகள் கூச்சலிட்டு விளையாடுவதுபோன்ற ராகம் நாட்டைக்குறிஞ்சி. தொன்மையான பண் அது. ஏராளமான நாதஸ்வரப்பிடிகள் கொண்டது. சாப்பு தாளத்தில் அமைத்தேன். பாகி ஜனனி சந்ததம் என்ற கீர்த்தனை அது. இறுதியாக பாகி பார்வத நந்தினி என்ற கீர்த்தனையை ஆரபியில் அமைத்திருக்கிறேன். அது தீயின் நடனம் போன்ற ராகம். இளையம்மை, ஆரபி என்றால் தீயின் தழல்தான்” அவர் முகமே தழல்கொண்டது போலிருந்தது.

கைகளை நீட்டி அவரே பாடினார், “பாகி பர்வத நந்தினி…” முகம் மலர “இந்தப்பாடலை எழுதும்போது கல்கத்தாவிலிருந்து நான் நிறுவிய மிருககாட்சி சாலைக்கு கொண்டுவந்த வேங்கைப்புலியை நினைத்துக்கொண்டேன். இளையம்மை, அன்றிருந்த திவான் ஸ்ரீனிவாச ராவ் உங்கள் பெயரை அதற்கு போடலாம் என்றபோது நான் சிரித்துக்கொண்டே ஆம், அதுதான் சரி என்று சொன்னேன்” என்றார்.

“ஆனால் பார்வதி என்ற பெயரையே மிருககாட்சி சாலையில் எவரும் சொல்வதில்லை.ராணி என்றுதான் சொல்கிறார்கள்.”

“நான் என்ன நினைத்தேன் என்று சொல்லவில்லையே” என்று உற்சாகத்தால் உடைந்த குரலில் ராம வர்மா சொன்னார் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி மூன்றுகுட்டிகளை போட்டதே, அப்போது நான் பார்க்கச் சென்றிருந்தேன். அதன் கூண்டை ஒட்டிய காட்டுக்குள் அது தன் குட்டியை கவ்வி எடுத்துக்கொண்டு போவதைக் கண்டு அலறிவிட்டேன். குட்டியை கொன்றுவிட்டது என்று கூவினேன். காவலர்கள் ஓடிவந்தனர், இல்லை அது குட்டியை அப்படித்தான் தூக்கிக்கொண்டு செல்லும் என்றார்கள். குட்டி அதன் வாயில் ஒரு துணிபோல துவண்டு தொங்கிக்கிடந்தது. இன்றைக்கு அது எட்டடி வேங்கையாக வளர்ந்துவிட்டது.”

“இளையம்மை, அதன்பிறகு ஓரு மாதம் கழித்து அதிலொரு குட்டி நோயுற்று எழமுடியாமல் இருந்தது. நான் மேலே நின்று பார்த்தபோது அந்தப்புலி ஒரு குட்டியை கவ்விக்கொண்டு போவதைக் கண்டேன். எங்கே கொண்டு செல்கிறது என்று கேட்டேன். அது குட்டியை எங்கோ கொண்டு செல்கிறது என்றார்கள். ஆனால் கொண்டுசென்று குதறிகொன்று புதருக்குள் போட்டுவிட்டு திரும்பிவந்தது. நோய் மற்றகுட்டிக்கு பரவாமலிருக்க அப்படிச் செய்திருக்கிறது என்றார்கள்… இரண்டு கவ்வுதல்களும் பார்க்க எந்த வேறுபாடுமில்லை.”

பார்வதி பாய் கீழே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“அது தேவியின் லீலை அல்லவா? தேவி பாகவதத்தில் ஒரு வரி வருகிறது, அலகில்லாத கருணையும் அலகில்லாத குரூரமும் கொண்டவள் பராசக்தி என்று” என்றார் ராமவர்மா “இங்கே நாம் நவராத்திரி பூஜையை அரண்மனைக்குள் கொலுவைத்து கொண்டாடுகிறோம். வரும் ஆண்டுமுதல் நவராத்திரியை இங்கே பெரிய விழாவாகக் கொண்டாடவேண்டும். அன்னையின் ஒன்பது முகங்களையும் சிலைகளாக நிறுவி மக்கள் அனைவரும் வந்து வழிபடவேண்டும். இந்த ஒன்பது கீர்த்தனைகளையும் ஒன்பதுநாளும் இங்கே பாடவேண்டும்…. இது அன்னையரின் மண். இந்த பெண்மலையாளத்தில் போற்றிவணங்கவேண்டியது அன்னையரைத்தான்.”

“இதெல்லாம் இப்போது பேசவேண்டியவை அல்ல” என்று பார்வதி பாய் எரிச்சலுடன் சொன்னாள்.

“இன்று காலை பேசும்போது சொன்னீர்களே, மொத்த இந்தியாவும் தாயில்லா பிள்ளை ,இந்த திருவிதாங்கூருக்கு தாய் இருக்கிறாள். என்று… அப்போது எனக்கு மெய்சிலிர்த்தது. அதன்பின் என்னால் எதையுமே யோசிக்கமுடியவில்லை. நீங்கள் சென்றபின் நான் தனிமையில் அமர்ந்து அழுதேன். அம்மா இருக்கும்போது எவர் அனாதையாக முடியும்? அம்மா இருக்கும்போது வேறு தெய்வங்கள் எதற்கு? பர்வதநந்தினீ, தேவி, என் குடிகளுக்கெல்லாம் தாயாக இருந்து காத்துகொள்ளவேண்டும் என்று தொழுதேன்” ராமவர்மா கண்கள் கலங்க விரல்களால் அழுத்தியபடி குனிந்துகொண்டார்.

பார்வதி பாய் அசௌகரியத்துடன் மெல்ல அசைந்து அமர்ந்து “ரெஸிடென்ட் கல்லனின் செய்தியுடன் பேஷ்கார் வந்திருந்தார், நீ சந்திக்கவில்லை. நான் கல்லன் துரைக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தேன், அது உண்மையா என்று விசாரிக்கத்தான் அவர் வந்தார். நீ அவரை நேரில் சந்தித்து பேசு. முடிந்தால் கல்லன் துரையிடமே பேசு. அல்லது ஒரு கடிதமாவது அவருக்குக் கொடு. மெட்ராஸ் கவர்னர் ஜார்ஜ் ஹே நம் மீது கரிசனம் கொண்டவர். இங்கே அவர் வந்தபோது நாம் நல்லெண்ணத்தை உருவாக்கியிருக்கிறோம். அவர் இங்கே சகோதரப்போர் நடக்கிறது என்று நினைத்துவிடக்கூடாது” என்றாள்.

ராம வர்மா அதைக் கேட்காதவர் போல காகிதங்களை அடுக்கி வைத்தார்.

“அப்படி ஏதேனும் ஒரு சந்தேகம் வந்தால்கூட திருவிதாங்கூர் மெட்ராஸ் ராஜதானியின் பகுதியாக ஆகிவிடும். இங்குள்ள மொத்த செல்வமும் அந்த கடலில் போய் கரைந்துவிடும். இங்கும் பட்டினிச்சாவும் இடப்பெயர்வும் தொடங்கும்” என்றாள் பார்வதி பாய்.

“இங்கே நவராத்திரியை எப்படி கொண்டாடவேண்டும் என்று நான் விரிவாக எழுதிப் பதிவுசெய்திருக்கிறேன். வடிவேலு சகோதரர்களிடமும் சொல்லியிருக்கிறேன்” என்று ராமவர்மா சொன்னார்.

“நீ கடிதத்தை எப்போது கொடுப்பாய்?”

“பாகிமாம் பர்வத நந்தினி” என்று ராமவர்மா சிரித்தார்.

“எனக்கு பாடல்களில் ஆர்வமில்லை…” என்று எரிச்சலைக் காட்டி பார்வதிபாய் சொன்னாள்.

“இல்லை, ஆர்வமுண்டு. எனக்குத்தெரியும். இளமையில் என் அம்மாவும் நீங்களும் இசை கற்றுக்கொண்டீர்கள். இருவரில் நீங்கள்தான் நல்ல பாடகி. நான் பிறந்த அன்றுகூட எனக்காக ‘ஓமனத்திங்கள் கிடாவோ’ பாட்டை பாடினீர்கள்… எனக்குத்தெரியும்.”

“ஆமாம், ஆனால் நான் எல்லாவற்றையும் உதறிவிட்டேன். ஒரு துளிகூட மிச்சமில்லாமல்” என்றாள் பார்வதிபாய். “இரும்பில் இருக்கும் மண்ணும் சேறும் அதை உருக்கி வாளாக ஆக்கும்போது அகன்றுவிடும்.”

“ஆனால் தங்கமிருந்தால் உருகி கலந்துவிடும்” என்றார் ராமவர்மா “பழமொழிகள் எனக்கும் தெரியும். உங்களுக்குள் கொஞ்சம் சங்கீதம் மிச்சமிருக்கும்… கொஞ்சம் இருக்கவேண்டும். எனக்காக. என் இளையம்மை நான் இயற்றிய இந்த ஒன்பது பாட்டையும் கேட்கவேண்டும். இப்போது என் குரலில் கடைசிப் பாடலையாவது கேட்கவேண்டும்”

“ராமா உன் நோய் என்ன என்று உனக்குத்தெரியாது.”

“எனக்குத்தெரியும், காசநோய்” என்றார் ராம வர்மா.

“அது எவ்வளவு கொடியது என்று தெரியாது” என்று பார்வதி பாய் சொன்னாள்.

“தெரியும், என் நுரையீரல்கள் அழிந்துவிட்டன… என் மூச்சு மறைந்து வருகிறது. நான் உயிர்வாழமாட்டேன்”

“இல்லை, லண்டனில் அதற்கு நல்ல மருந்துகள் உள்ளன. நான் டாக்டர்களிடம் கேட்டேன்.”

“இளையம்மை, நான் பட்டும் நகைகளும் வாங்கினேன். ஓவியம் வாங்கினேன். ஏன் தெரியுமா? எனக்குள் வண்ணங்கள் குறைந்துகொண்டே வருவதுபோலிருந்தது. வெளியே இருந்து வண்ணங்களை அள்ளி அள்ளி உள்ளே நிறைத்தேன். அழகானவற்றை மட்டும் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். எனக்கு வேண்டியது அதுதான். வண்ணங்கள், இசை”

“நீ முழுமையாகவே குணமாகமுடியும் ராமா” என்றாள் பார்வதி பாய்.

“நான் பாடுகிறேனே” என்று ராமவர்மா சொன்னார் “என் பொன்னு இளையம்மை அல்லவா? என் செல்ல இளையம்மை அல்லவா? கொஞ்சம் கேளுங்கள்”

பார்வதி பாய் பொறுமையில்லாமல் தலையை அசைத்தாள். “நீ கடிதம் கொடுப்பாயா மாட்டாயா?” என்றாள்.

“நாளையே கடிதம் கொடுக்கிறேன். ரெஸிடென்ட் கல்லன் துரையை வணங்குகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் என் பாட்டை இப்போது கேட்கவேண்டும்” என்றார் ராம வர்மா.

“ராமா உன் உடல்நிலை மோசமாக இருக்கிறது. உன் குரலே உடைந்திருக்கிறது.”

“ஆமாம். ஆனால் என் அம்மாவுக்காக பாடவேண்டாமா? தாயே பர்வதநந்தினி, மகாகாளி, இதைக் கேட்டு அருளவேண்டும்…” என்று ராமவர்மா சொன்னர் “சாக்கியார் இதோ மேடையேறி கதை சொல்கிறார்!” கைகளை விரித்து சாக்கியார் போல காட்டி, சாக்கியார் கூத்தின் நீண்ட உச்சரிப்புடன் “முன்பொருநாள் வங்கத்து வேங்கை ஒன்றின் பாலை ஒரு சின்ன பூனைக்குட்டி குடித்து வளர்ந்தது. அந்த பூனை மியாவ் மியாவ் என்றபோது புலி உறுமியது, தன் உறுமலைக் கற்பிக்க முயன்றது. பூனையால் அதைக் கற்கவே முடியவில்லை” என்றார் “தேவீ மகாகாளீ, ரக்தபானப் ப்ரியே, அந்த பூனைக்கும் அருளவேண்டும்”

“சரி பசப்பாதே பாடு” என்றாள் பார்வதி பாய்.

“நானும் ரத்தபானம் செய்தவன்தான்… ஏனென்றால் உங்கள் முலைகுடித்தவன் நான்… எனக்கு நினைவிருக்கிறது இளையம்மை. அந்தமுலைகளில் கொஞ்சமாக மெல்லிய தித்திப்பு ஊறும். அது ஊறுவதுவரை நான் குடித்துக்கொண்டே இருப்பேன். நீங்கள் அரசியல் நடத்திக்கொண்டே இருப்பீர்கள். உங்களை அறியாமலேயே ஊறும்… அதில் ரத்தச்சுவை இருக்கும். அது ரத்தமணம் என்று பிறகுதான் அறிந்தேன்.”

பார்வதி பாய் ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்

“பாடட்டுமா?”

“பாடு”

தொடையில் மெல்ல தாளமிட்டு நடனத்துக்குரிய சீரான விசையில் ராமவர்மா பாடினார்.

பாகி பர்வதநந்தினி

மாமயி பார்வணேந்து சமவதனே!

வாஹினி தட நிவாசினி!

கேசரி வாஹனே!

திதிஜாளி விதாரணே!”

ராமவர்மாவின் குரலும் மூச்சும் பாட்டுக்கு எழமுடியவில்லை. பாடி முடித்து மூச்சுவாங்க அவர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.பார்வதி பாய் எழுந்து ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்றாள். வெளிக்கூடத்தில் மார்த்தாண்ட வர்மா எழுந்து நின்றார். அவரிடம் முகம் காட்டாமல் சென்று மஞ்சலில் ஏறிக்கொண்டாள்

மறுநாள் காலையில் பார்வதி பாய் மஞ்சலில் அரண்மனை முற்றத்திற்கு வந்து நின்றபோது அரண்மனை வளாகமே பரபரப்பாக இருந்தது. உள்ளிருந்து கண்ணீரோடு தன்னை நோக்கி ஓடிவந்த மார்த்தாண்ட வர்மாவைப் பார்த்ததுமே அவளுக்கு தான் கேள்விப்பட்டது உண்மை என உறுதியாயிற்று.

மஞ்சலில் இருந்து நிமிர்ந்த தலையுடன் இறங்கி இயல்பான இறுகிய முகத்துடன் நடந்தாள். அவளுடன் நடந்தபடி விம்மலோசை கலந்து ஏதோ சொல்ல முயன்ற மார்த்தாண்ட வர்மாவிடம் போதும் என்று கைகாட்டி விலக்கி உள்ளே சென்றாள்.

திவான் கிருஷ்ண ராவ் அருகே வந்து வணங்கினார். “ரெஸிடென்ட் கல்லனுக்கு செய்தியை முறைப்படி அறிவிக்கவேண்டும். ஜோசியர்கள் வந்து உரியநேரம் குறித்து தந்தபின் அந்த நேரத்தை மக்களுக்கு அறிவிக்கவேண்டும்…” என்று மெல்லிய குரலில் ஆணைகளை இட்டபடி நடந்தாள்.

***

முந்தைய கட்டுரைசெட்டியார் மாத்திரை-லக்ஷ்மி மணிவண்ணன்
அடுத்த கட்டுரைதங்கப்புத்தகம்- கடிதங்கள்