பகுதி ஏழு : நீர்புகுதல் – 10
யாதவரே, இச்செய்தியை உரைக்கும்பொருட்டே இங்கு வந்துள்ளேன். மதுராவில் உங்கள் மூத்தவர் உயிர்நீப்பதை பார்த்த பின்னரே இங்கு வந்தேன். அவர் மதுராவின் தென்மேற்கே வடக்கிருப்பதற்கான இடத்தை ஒருக்கும்படி ஆணையிட்டார். அமைச்சர்களும் நானும் சென்று அதற்குரிய இடத்தை அங்கே கண்டடைந்தோம். நிமித்திகர்கள் வகுத்துக்கொடுத்த இடத்தில் பதினெட்டு சிறுகற்களை பிறைவட்டமாக நிறுவி பதினெட்டு தலைமுறை மூதாதையரையும் அக்கற்களில் வருகை செய்து நிறுவினோம். தர்ப்பைப் புல் விரித்த சிறு மேடை அமைக்கப்பட்டது. அச்சோலையைச் சூழ்ந்து எவரும் அணுக முடியாதபடி மூங்கில் வேலி அமைக்கப்பட்டு படைவீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.
பலராமர் வடக்கிருப்பதற்கு கிளம்புவதற்கு முந்தையநாள் மூவந்தியில் வசுதேவரும் சூரசேனரும் அவர்களின் மாளிகையிலிருந்து கிளம்பினார்கள். அது ஒரு விழவாக நிகழக்கூடாதென்றும் அவ்வண்ணம் நிகழ்ந்த பின்னரே பிறருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தமையால் நான் மட்டுமே உடனிருந்தேன். நான் முற்றத்தில் காத்திருந்தபோது சூரசேனர் எளிய வெண்ணிற ஆடையணிந்து தன் மாளிகையிலிருந்து ஏவலனின் தோள் பற்றி இறங்கி வந்து முற்றத்தில் நின்றார். நான் வணங்கினேன். நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.
நாங்கள் வசுதேவருக்காக காத்திருந்தோம். அவர் கிளம்பிவிட்டார் என்று செய்தி வந்தது. வசுதேவர் தனது தேரில் வெண்ணிற ஆடை அணிந்து, அணிகலன்கள் ஏதுமின்றி வந்திறங்கினார். தந்தையை அவர் வணங்கினார். சூரசேனர் சொல்லின்றி வாழ்த்தளித்தார். இருவரும் அங்கிருந்து சிறு ஊடுவழியினூடாக நடந்து யமுனையை சென்றடைந்தனர். வசுதேவர் நீர்புகுவதற்கான பொழுதை கணித்திருந்தார். அவர்கள் நடந்து யமுனையைச் சென்றடைந்தபோது அந்த நற்பொழுது அமைந்திருந்தது.
யமுனையின் கரையில் மணல் அள்ளி ஏழு குவைகளை உருவாக்கி ஏழு தலைமுறை மூதாதைகளை அங்கு நிறுவி மலரிட்டு வழிபட்டனர். பின்னர் தன் மேலாடையால் கைகளை நன்கு சுற்றி கட்டிக்கொண்டு எழுகதிரை நோக்கியபடி கைகூப்பியபடி சூரசேனர் நீரிலிறங்கி மறைந்தார். அதை நோக்கிநின்ற வசுதேவர் மும்முறை நீரை அள்ளி இறைத்து தந்தையை விண்ணேற்றும் நுண்சொற்களை உரைத்தபின் தன் மேலாடையால் கால்களையும் கைகளையும் சேர்த்து சுற்றி கட்டிக்கொண்டார். எழுகதிரை நோக்கியபடி நீரில் சென்று யமுனையின் அலைகளில் மூழ்கி மறைந்தார்.
கரையில் நானும் சிற்றமைச்சர் சந்திரசூடரும் மட்டும் நின்றிருந்தோம். அவர்கள் இரு குமிழிகள்போல நீரில் மறைவதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். இருண்ட யமுனை நீர் அந்தியில் மேலும் இருண்டிருந்தது. அதில் அவ்வண்ணம் இரு குமிழிகள் வெடித்தமைந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை. அவ்வாறு பல்லாயிரம் குமிழிகள் வெடித்தழிந்த நீர்ப்பரப்பு அது. முற்றிலும் இருண்டு அந்தியாவது வரை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். பின்னர் மும்முறை நீரள்ளி விட்டு “ஆம், அவ்வாறே அகுக!” என வணங்கிவிட்டு திரும்பினோம்.
இருள் படிந்துகிடந்த மதுராவின் தெருக்களினூடாக நாங்கள் அரண்மனைக்கு மீண்டோம். அரண்மனை முகப்பில் அமைச்சர்கள் நின்றிருந்தனர். அவர்களிடம் நான் தலைவணக்கத்தால் நிறைவுற்றது என்பதை அறிவித்தேன். அனைவவரும் நோக்கை விலக்கி மூச்செறிந்தனர். அரண்மனையெங்கும் நூற்றுக்கணக்கான விழிகள் எங்களை நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். என்ன நிகழ்ந்தது என அனைவரும் அறிந்துகொண்டனர். நான் சந்திரசூடரிடம் “அரசமுறை அறிவிப்பை நாளை காலையில் வெளியிட்டால் போதும். இரவில் மங்கலச்செய்திகளை அறிவிக்கும் முறைமை இல்லை” என்றேன். அவர் தலைவணங்கினார்.
பலராமர் அவருடைய தனியறையில் நோன்பில் இருந்தார். அறைவாயிலில் நிஷதனும் உல்முகனும் நின்றனர். நான் வருவதைக் கண்டதுமே நிஷதன் அருகணைந்தார். நான் தலையசைத்து நீர்நிறைவு நிகழ்ந்துவிட்டதை அறிவித்தேன். அவர் அப்படியே நின்றுவிட்டார். அவர் உடலசைவைக் கண்ட உல்முகனும் துயரம் கொண்டு தலைகுனிந்தார். பலராமரிடம் என் வருகையை அறிவிக்கும்படி கோரினேன். ஏவலன் உள்ளே சென்று அறிவித்து வந்ததும் உள்ளே சென்றேன்.
திறந்த சாளரத்தை நோக்கி மஞ்சத்தில் பலராமர் அமர்ந்திருந்தார். நான் அவர் அருகே சென்று வணங்கி நின்றேன். அவர் திரும்பிப் பார்க்கவில்லை. சாளரம் வழியாக தொலைவில் யமுனையின் நீர்வளைவு தெரிந்தது. வானின் ஒளியில் அது கரிய ஒளிகொண்டிருந்தது. நான் தாழ்ந்த குரலில் “இரு நிறைவுகள், அரசே” என்றேன். “இறையருள் கூடுக!” என்று அவர் கூறினார். நான் பிறிதொன்றும் பேசாமல் தலைவணங்கினேன். பின்னடி எடுத்துவைத்து வெளியே வந்தேன்.
சூரசேனரும் வசுதேவரும் மண்நீங்கிய செய்தியை புறாக்களினூடாக மதுவனத்திற்கும் பிற யாதவ நிலங்களுக்கும் அனுப்பினர். இரவு முழுக்க அச்செய்திகளை அனுப்புவதிலேயே கடந்தது. பின்னிரவில் நான் நீள்மஞ்சத்தில் சாய்ந்து விண்மீன்கள் செறிந்த வானை பார்த்துக்கொண்டிருந்தேன். மறுநாள் முதற்புலரியிலேயே நகரில் முரசுகள் ஒலித்து அச்செய்தியை அறிவித்தன. எதிர்பார்த்தது போலவே அது பெரிய அலை எதையுமே உருவாக்கவில்லை. மக்களின் கசப்பும் வெறுப்பும் குறையவில்லை.
நகரில் சூரசேனரையோ வசுதேவரையோ புகழ்ந்து தன்னியல்பாக எவரும் வாழ்த்துரைக்கவில்லை. அரசு சார்பில் காவல்மாடங்கள் அனைத்திலும் முரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. முச்சந்திகளில் சூதர்கள் அரசாணையின்படி நீத்தார் பெருமை சொல்லும் பாடல்களை உரக்க பாடினார்கள். ஓரிருவர் வெறுமை நிறைந்த கண்களுடன் நின்று பார்த்தார்கள். நகரெங்கும் முன்னரே பரவியிருந்த துயர் எந்த வகையிலும் கூடவோ குறையவோ இல்லை. நகரினூடாக நானும் சந்திரசூடரும் சென்று பலராமரின் வடக்கிருத்தல் இடத்தை பார்வையிட்டு மீண்டோம். நகரம் வெற்றொலி எழுப்பிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.
என் தேரை ஓட்டிய பாகன் “மக்களுக்கு துயர் பழகிவிட்டது. இனி அவர்களால் இன்பத்தை அடையாளம் காணமுடியுமா என்றே ஐயமாக இருக்கிறது” என்றான். நான் ஒன்றும் சொல்லவில்லை. சந்திரசூடர் என்னிடம் “பட்டெனில் நெளியும் கம்பளி நெளியாது என்று என் தந்தை கூறுவதுண்டு” என்றார். நான் அவரை வெறுமனே திரும்பிப் பார்த்தேன். அவர்கள் அந்த உளநிலையை புரிந்துகொள்ள முயன்றார்கள். அது புரிதலுக்கு அப்பாற்பட்டது என்று ஒப்ப அவர்களால் இயலவில்லை. நம்மைச் சூழ்ந்துள்ள எதையுமே நாம் புரிந்துகொள்வதில்லை, நம்மால் புரிந்துகொள்ள முயலாமல் இருக்கவும் முடிவதில்லை. ஆகவே புரிந்த அளவைக்கொண்டு வகுத்துக்கொள்கிறோம். மானுடர் இப்புவியில் அடையும் எல்லா புரிதல்களும் அவர்களுக்கு மட்டுமே பொருந்துபவை.
வசுதேவருக்கும் சூரசேனருக்கும் விண்ணேற்றச் சடங்குகள் நிகழும் பொருட்டு மூன்று நாட்களுக்கு ஒரு வேளை உணவும் துயர்கூடலும் அரசு முறையாக அறிவிக்கப்பட்டது. ஆலயங்களில் விண்ணேற்றச் சுடர்கள் ஏற்றப்பட்டன. மதுவனத்திற்கு செய்தி சென்றதுமே அங்கே முறைப்படி அரசுத்துயர் ஆணையிடப்பட்டது. அரசியர் ரோகிணிதேவியும் தேவகியும் நீர்புகுவது அறிவிக்கப்பட்டது. சூரசேனரும் வசுதேவரும் நீர் புக எண்ணியிருப்பதை முன்னரே அவர்களுக்கு தெரிவித்திருந்தோம். அவர்கள் தங்கள் மைந்தர்களிடமும் பெயர்மைந்தர்களிடமும் விடைகொண்டு உணவொழிந்து யமுனைக்கரையில் நோன்பில் இருந்தார்கள்.
யாதவ மூதன்னையருக்குரிய முறைமைப்படி முன்புலரியில் அவர்கள் நீர்புகுந்தபோது குடியினர் எவரும் உடன் செல்லவில்லை. மூதன்னையர் இருவர் மட்டுமே கைபற்றி அவர்களை அழைத்துச் சென்றனர். ஒற்றை மரவுரி ஆடை அணிந்த அவர்கள் மூதன்னையரை வழிபடும் சொற்களை மெல்ல உரைத்தபடி யமுனைக்குச் சென்று கைகூப்பியபடி யமுனையில் இறங்கி மூழ்கி அகன்றனர். அவர்கள் இருவரும் மறைந்ததும் மூதன்னையர் தங்கள் கைகளில் இருந்த சங்குகளை முழக்கினர். யாதவர்கள் அனைவரும் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியே வந்து கைமணிகளையும் சங்குகளையும் முழக்கி விண்புகுவோர்க்கு வாழ்த்துரைத்தனர்.
யமுனையின் கரைகளில் பறவைகளும் உடன் கலைந்தெழுந்து ஓசையிட்டன. அந்த ஓசை வழியாக யாதவ ஊர்கள் தோறும் செய்தி பரவ அனைவரும் மணிகளையும் சங்குகளையும் முழக்கினர். புலரி வெளிச்சம் எழுவ்து வரை இருபுறமும் ஓசை பெருகிப் பெருகி அலையடித்துக்கொண்டிருந்தது என்று ஒற்றன் சொன்னான். யமுனையே தேம்பி அழுவதுபோல் தோன்றியது என்றான். அவர்கள் விண்புகுந்த செய்தியை மதுராவில் முரசறைந்து அறிவித்தோம். நீத்தோருக்கான கொடிகள் கோட்டைவாயிலில் ஏற்றப்பட்டன.
முற்புலரியிலேயே பலராமர் எழுந்து நீராடி அனைத்து அணிகளையும் களைந்து வெண்ணிற ஆடை அணிந்து நின்றார். அவருடைய இரு மைந்தர்களும் வணங்கி நின்றனர். அவர் தன் அரசக்கணையாழியைக் கழற்றி நிஷதனின் கையில் அணிவித்தார். அவர் விழிகளிலிருந்து நீர் பெருக கைகளைக் கூப்பியபடி நின்றார். பலராமர் இளையவரிடம் “மூத்தவனுடன் இரு” என்றார். அமைச்சர்களும் படைத்தலைவர்களும் சூழ்ந்து நின்றனர். அனைவரும் விழிநீர் வடித்துக்கொண்டிருந்தனர். அவர் கைகூப்பியபடி நடந்து வெளியே சென்று முற்றத்தில் நின்றார். திரும்பி தன் அரண்மனையை வணங்கிவிட்டு நடந்தார்.
நடந்தே தான் வடக்கிருக்கப் போகும் இடத்திற்கு சென்றார் பலராமர். உடன் ஓர் அமைச்சரும் நானும் மட்டுமே சென்றோம். அவர் தன் வடக்கிருத்தலிடத்தை அடைந்து மூதாதையருக்கு பூசெய்கை செய்தபின் தர்ப்பைப் புல் இருக்கைமேல் அமர்ந்து ஊழ்கத்தில் ஆழ்ந்ததும் நாங்கள் வணங்கி அவரிடமிருந்து விலகினோம். அவர் அங்கே ஏழு நாட்கள் உணவும் நீரும் ஒழித்து ஊழ்கத்திலிருந்தார். தொலைவிலிருந்தே அவரை பார்த்துக்கொண்டிருந்தோம். ஏழாவது நாள் அவர் உடல் அசைவிழந்தது என்று கண்ட மருத்துவர் அருகே சென்று கைதொட்டு நோக்கி தலையசைத்தார்.
நான் கையசைத்ததும் செய்தி பரவி அரண்மனையை அடைந்தது. அரண்மனையில் கொம்பொலி எழுந்தது. தொடர்ந்து பலராமர் விண்புகுந்ததை அறிவித்து முரசுகள் முழங்கின. பலராமரின் துணைவி ரேவதி தன் அணுக்கச்சேடியர் இருவருடன் அன்று அந்திப்பொழுதில் யமுனைக்குச் சென்று நீருள் புகுந்து உயிர் மாய்த்துக்கொண்டார். அவர்கள் இருவருக்கும் கோட்டைமுகப்பில் கொடிகள் ஏறின. ஆலய கோபுரங்களில் விண்ணூர் விளக்குகள் ஏற்றப்பட்டன.
பலராமர் வடக்கிருக்கத் தொடங்கியதும் மதுராவின் உளநிலை மாறியது. அவர்கள் குற்றஉணர்வு கொண்டவர்கள்போல் துயரை பெருக்கிக்கொண்டனர். ஒவ்வொருவரும் தெருக்களில் வந்து நின்று நெஞ்சில் அறைந்து அழுதனர். பலர் ஆங்காங்கே விழுந்து கிடந்தனர். நகரெங்கும் பரவியிருந்த கடுந்துயரை வெறும் விழிகளாலேயே பார்க்க முடிந்தது. பலராமர் உயிர்விடுவதற்கு முன்னரே பல முதியவர்களும் தங்கள் இல்லங்களில் வடக்கிருந்து உயிர்விட்டனர். நகரில் முதியவர்களின் தொடர்சாவு நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான உடல்கள் நகரிலிருந்து தெற்கே கொண்டுசெல்லப்பட்டு எரியூட்டப்பட்டன.
அவர் உயிரிழந்த செய்தி வந்ததுமே மேலும் பல நூறுபேர் நீர்புகுந்து உயிர் நீத்தனர். மறுநாளும் அதற்கு மறுநாளும்கூட அந்த நீர்புகுதல் தொடர்ந்துகொண்டிருந்தது. நீர்புகுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கூடி வந்தது. நீர்புகுகிறார்கள் என்னும் செய்தியே பிறரை அதற்கு தூண்டியது. “நகரில் முதியவர்கள் எவருமே இல்லாமலாகிவிட்டார்கள்” என்று அமைச்சர் கூறினார். “இந்த நகர் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறது” என்று இன்னொரு அமைச்சர் கூறினார். “சில தருணங்களில் பறவைகளும் மீன்களும் இவ்வண்ணம் தங்களை முற்றழித்துக்கொள்வதுண்டு” என்றார் படைத்தலைவர்.
நீர்புகுபவர்களின் எண்ணிக்கை கூடிவரும் செய்தியை அறிந்து நான் பதற்றம் கொண்டேன். அகவை மூத்த வேதியரான சுலஃபரிடம் நானும் அமைச்சர்களும் சென்று அதைப்பற்றி உசாவினோம். அவர் மெல்லிய புன்னகையுடன் “பாம்பு தன் சட்டையை உரித்துக்கொள்வது போலத்தான் இது. அவர்கள் உயிர்நீத்து முடித்ததுமே இந்நகர் துயரிலிருந்து எழுந்துவிடும். மீண்டும் புதிதென பிறந்துவிடும். அஞ்சவேண்டியதில்லை, நலமே நிகழும்” என்றார். “காட்டெரி நோயுற்ற மரங்களை அழிக்கிறது” என்று அவருடன் இருந்த இன்னொரு அந்தணரான கல்பர் சொன்னார்.
அதற்கேற்ப ஏழு நாட்களுக்குள் நீர்புகுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்தது. பின்னர் இல்லை என்றாயிற்று. மேலும் ஏழு நாட்கள் அவர்களுக்கான நீத்தார் கடன்களும் நீர்சடங்குகளும் நிகழ்ந்தன. அந்நாட்கள் முழுக்க மதுராவெங்கும் துயரே நிறைந்திருந்தது. பின்னர் நகர் அதிலிருந்து விடுபடுவதை நான் கண்டேன். பதினாறாம்நாள் நோன்பொழியும் சடங்குகளும் இணைந்த விருந்தும் தொடங்கின. நீத்தார் ஒவ்வொவருக்கும் பதினாறு நாட்கணக்கில் அவ்வாறு சடங்குகள் அளிக்கப்பட்டமையால் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் மதுராவில் விருந்துகள் நடைபெற்றன.
முதலில் தயங்கியும் துயருற்றும் அவ்விருந்துகளுக்குச் சென்றவர்கள் மெல்ல மெல்ல அதை உண்டு மகிழத் தொடங்கினார்கள். அடுமனையாளர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையாக சமைத்தனர். உணவு பற்றிய பேச்சுகள் நகரில் நிறைந்தன. இன்பங்களில் எளியதும் தலையாயதும் உணவே, மானுடர் எத்தருணத்திலும் கடக்க முடியாத பற்றும் அதுவே என்று கண்கூடாக கண்டேன். சில நாட்களுக்கு முன் அரசரையும் தங்கள் ஒவ்வொரு இல்லத்திலும் முதியவரையும் இழந்த மதுராவின் குடிகள் தெருமுனைகளில், அங்காடிகளில் எங்கும் உணவைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பதை கண்டேன்.
அவர்களில் பலர் பல மாதங்களாக உளச்சோர்வால் எதையும் உண்ணாமல் இருந்தவர்கள். பல வீடுகளில் முறையான சமையலே இல்லாமல் இருந்தது. இனிப்பும் நல்லுணவும் தவிர்த்து வாழ்வதை தங்களுக்கு எதிரான ஊழ்மேல் தங்கள் கசப்பை வெளிப்படுத்துவதாக அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். தங்களையே வெறுத்துக்கொள்ளும் வழி அது. சென்றவர் செல்ல இருப்பவர் இருக்கும் குற்றவுணர்வுக்கான வடிகாலே உண்ணாநோன்பு. அந்த பலநாள் நோன்பின் மறுபக்கமென அவர்கள் உணவு நோக்கி திரும்பினார்கள். புதிய புதிய உணவுகள், விந்தையான இனிப்புகள், ஊன்வகைள், கனிவகைகள்.
அரசே, பத்து நாட்களில் புதுமழை பெய்து தளிர்த்து பசுமை எழுவதுபோல மதுராபுரியின் மக்கள் அனைவரும் ஒளியுடல் கொண்டனர். முகங்கள் மெருகேறின. நகரெங்கும் சிரிப்பொலிகளும் உரத்த பேச்சொலிகளும் எழுந்தன. மேலும் ஓரிரு நாட்களில் மதுரா நீத்தார் அனைவரையும் முற்றாக மறந்தது. புதிய எதிர்பார்ப்புகளும் புதிய கொண்டாட்டங்களும் தொடங்கின. சந்தைகளில் பொருட்கள் வந்து நிறைந்தன. மக்கள் பல மாதங்களாக எதையும் வாங்காமலிருந்தமையால் அத்தனை பொருட்களும் வந்ததுமே விற்றொழிந்தன. ஆகவே மேலும் மேலும் வணிகர்கள் வந்து குவிந்தனர்.
உணவுக்கு அடுத்தபடியாக மக்களை மகிழ்விப்பவை பொருட்கள் என்று கண்டேன். பொருட்கள் அல்ல, பொருட்களை உரிமைகொள்ளுதல், வென்றெடுத்தல். அங்காடிகள் உயிர்கொண்டபோது சூதர்களும் பாணர்களும் விறலியரும் வந்தனர். கலை எழுந்தது. நகரெங்கும் ஆடல்களும் பாடல்களும் நாடகங்களும் நடந்தன. மானுடனின் மூன்றாவது பேரின்பம் அது. இங்குள்ள அத்தனை குறைகளையும் நிறைப்பது கலை, இடைவெளிகளை நீர் நிறைப்பதுபோல. கலை உருவான பின் துயரென்பதே இல்லை. இருத்தலை இனிப்பாக்குவதில் கலைக்கு நிகர் பிறிதில்லை.
அந்தணர் கல்பர் அரசரிடம் “இதுவே நல்ல நிமித்தம், இந்திரவிழவுக்கு ஆணையிடுக!” என்றார். “இந்திரவிழவு யாதவர்களுக்கு தடை செய்யப்பட்ட ஒன்றாயிற்றே?” என்று நான் சொன்னேன். “எனில் அதை மழைக்காலத் தொடக்கம் என்று கொண்டாடுவோம். மழை இந்திரனுக்குரியது மட்டுமல்ல, யாதவருக்கும் உகந்ததே. விழவு எதுவாயினும் அன்று காமன் கொண்டாடப்பட வேண்டும், இந்திரன் கொண்டாடப்பட வேண்டும். காமமும் மதுவும் இந்நகரில் கட்டவிழ வேண்டும். புதிய தலைமுறை கருக்கொள்ள வேண்டும்” என்றார் கல்பர்.
அவ்வண்ணம் ஆணையிடப்பட்டது. நகரெங்கும் முரசுகள் முழங்கி மழைக்கொண்டாட்டத்தை அறிவித்தபோது நான் என் மாளிகையின் முகப்பில் நின்று அதை கேட்டுக்கொண்டிருந்தேன். முரசொலிகள் ஓய்ந்ததும் மும்மடங்கு பேரோசையுடன் மக்களின் குரல் எழுந்தது. அவர்கள் தெருக்களில் வந்து நடனமிட்டனர். பட்டு மேலாடைகளையும் தலைப்பாகைகளையும் தூக்கி வானில் வீசி கொண்டாடினர். சந்தனப் புழுதியையும் குங்குமத்தையும் மஞ்சள்பொடியையும் ஒருவர் மீது ஒருவர் அள்ளி வீசி நடனமிட்டனர்.
நகரெங்கும் மலர்வனத்தில் காற்று புகுந்ததுபோல வண்ணங்கள் கொந்தளிப்பதை கண்டேன். “நன்று, வாழ்க! துயரென்றும் உவகை என்றும் கண்கட்டி மாயம் காட்டும் ஊழே உனக்கு அனைத்து வாழ்த்துகளும் நிறைக! பொலிக!” என்று கூறிக்கொண்டேன். என் சால்வையை எடுத்து அணிந்துகொண்டு மதுராவிலிருந்து கிளம்பினேன். உங்களை நாடி வந்தேன். நீங்கள் அறிந்திருக்கலாம், அன்றி அறியாமலிருக்கலாம். ஆனால் முறைப்படி கூறுவது என் கடன். அரசே, நான் சூதர்பாடல்களினூடாக இங்கே வந்தேன்.
ஸ்ரீகரர் சொல்லிமுடித்த பின் அமர்ந்திருந்தார். இளைய யாதவர் அங்கில்லாதவராக தெரிந்தார். சொல்லுக்கென எதிர்பார்க்காமல் ஸ்ரீகரர் எழுந்து தலைவணங்கி ஒருசொல் உரைக்காமல் திரும்பி நடந்தார். விண்மீன்களைப் பார்த்தபடி நடந்து மந்தரம் என்னும் அச்சிற்றூரை விட்டு விலகினார். மூன்று நாட்கள் நடந்து தண்டகாரண்யத்தை அடைந்து ஒரு மலை முடியில் நின்று சூழ நோக்கியபோது தொலைவில் தனக்கான சிறு குகை ஒன்றை கண்டடைந்தார். அதை அடைந்து உள்ளே ஒடுக்கிக்கொண்டு படுத்து உணவும் நீரும் நீத்து ஏழு நாட்களில் உயிர்துறந்தார்.