பகுதி ஏழு : நீர்புகுதல் – 9
நான் பலராமரின் மஞ்சத்தறைக்கு முன் சென்று நின்றேன். வாயிலில் அவருடைய இரு மைந்தர்களும் நின்றிருந்தனர். நிஷதன் உளம் கலங்கியதுபோல் தோள்கள் தொய்ந்து, கைகள் தளர்ந்து, தலைகுனிந்து நின்றிருந்தார். உல்முகன் என்னிடம் “தந்தை எவரையும் பார்க்க விரும்பவில்லை. நாங்கள் பார்க்க விரும்பியபோதுகூட உளம் ஒருங்கவில்லை” என்றார். “நான் அவரிடம் சில சொற்கள் சொல்லவேண்டும்” என்று சொன்னேன். சில கணங்களுக்குப் பின் உல்முகன் “அவர் முடிவெடுத்துவிட்டார். எவர் சொல்வதையும் அவர் கேட்க விரும்பவில்லை” என்றார். நான் “என்ன முடிவு?” என்றேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை.
நான் ஏவலனிடம் எனது வருகையை அறிவிக்கும்படி கோரினேன். “இளவரசே, என்ன நிகழுமென்று முன்னரே கணித்து என் செயல்களை மட்டுப்படுத்திக்கொள்பவன் நான். இளமையிலிருந்தே என் முன் நின்றிருப்பது ஊழென்பதை உணர்ந்திருக்கிறேன். எப்போதுமே நான் செய்யக்கூடியதென்ன, எனக்காக இடப்பட்டிருப்பது என்ன என்று மட்டுமே பார்ப்பேன். அவற்றை இயற்றுவது மட்டுமே எனது பணி” என்றேன். “இப்போது எனக்கு ஒரு பணி உள்ளது என நினைக்கிறேன். அதை இயற்றியே ஆகவேண்டும் என்றே முனைவேன்.” உல்முகன் “நீங்கள் இம்முயற்சியில் வென்றால் மகிழ்வேன்” என்றார்.
ஏவலன் வெளியே வந்து “அமைச்சர் மட்டும் தன்னை சந்திக்கவேண்டும் என்று அரசர் ஆணையிட்டிருக்கிறார்” என்றான். நான் உள்ளே சென்றேன். அமைச்சர் மட்டும் என்றதனால் உல்முகனும் நிஷதனும் வெளியே நின்றுவிட்டார்கள். நான் உள்ளே செல்லும் கணத்தில் அவர்களின் பதற்றம் நிறைந்த முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்களின் உணர்வுகளை என்னால் வகுக்க முடியவில்லை. உள்ளே தாழ்வான மஞ்சத்தில் பலராமர் படுத்திருந்தார். அவர் அருகே மருத்துவர் நின்றிருந்தார். நான் அருகே சென்று பலராமருக்கு முறைப்படி தலைவணங்கிய பின் மருத்துவரை பார்த்தேன். மருத்துவர் அவர் நலமாக இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக தலையை அசைத்தார்.
பலராமர் மருத்துவர் வெளியே செல்லலாம் என்று கைகாட்டினார். மருத்துவர் சென்றதும் என்னிடம் “நான் சில உறுதியான முடிவுகளை எடுத்திருக்கிறேன். அதை முறையாக அறிவிக்க விரும்புகிறேன். அதை குறித்து உங்களிடம் பேசுவதற்காகவே அழைத்தேன்” என்றார். நான் தலைவணங்கினேன். “ஸ்ரீகரரே, இங்கு நான் ஆற்றவேண்டிய பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. என் புவிவாழ்க்கையை நிறைவுறச் செய்யவேண்டும் என்ற இடத்தில் இருக்கிறேன். உரிய முறையில் நிறைவுறச் செய்யும் வாழ்வே விண்ணவர்க்கும் மூதாதையருக்கும் இனியது என்பது மூதாதையர் சொல்” என்றார். அவர் சொல்ல வருவதென்ன என்று புரிந்து என் நெஞ்சு படபடத்தது.
“பெருஞ்செயல்களினூடாக நிறைவுறும் வாழ்வென்பது தெய்வக்கொடை. காலத்தின் முன் படையலென தன் உடலை வைப்பதென்பது அதற்கு அடுத்த படி. எனக்கு களமரணமோ தவமரணமோ அமையவில்லை. தன்னிறப்பேனும் அமைந்தால் விண்புகுவேன்” என்றார். “அரசே!” என்று நான் சொன்னேன். “துயருற வேண்டியதில்லை. என் மைந்தர் தகுதியானவர். அவர்கள் என்னுருவே ஆனவர்கள். ஆகவே இங்கே மதுராபுரியில் எதுவும் மாறப்போவதில்லை. என்னைவிட இளமையான, என் வடிவமேயான ஒருவர் ஆள்வதென்பது மக்களுக்கு மிகவும் மகிழ்வளிக்கும்” என்றார் பலராமர். அவரிடமிருந்த அந்தத் தெளிவை அதற்கு முன் கண்டதில்லை.
“உண்மையில் மதுரா இன்றிருக்கும் சோர்வு நிலையிலிருந்து வெளிவருவதற்கு நான் மண்நீங்குவதே ஒரே வழி. மதுராவுக்குள் ருக்மி நுழைந்தபோது மக்கள் பெருந்திரளாகச் சென்று வரவேற்று ஆர்ப்பரித்தார்கள் என்று அறிந்தேன். ருக்மி மணிமுடி சூடி அவைக்குள் நுழைந்தபோதும் மக்கள் கொண்டாடினார்கள். அவன் இறப்பிற்காக இன்று துயரம் கொண்டிருக்கிறார்கள். பிழைபுரிந்து அவனை கொன்றதற்காக என் மீது கசப்பும் வெறுப்பும் கொண்டிருக்கிறார்கள். அது ஏன் என்பதை அமர்ந்து எண்ணிப்பார்த்தேன். அவர்களில் பலர் நினைவறிந்த நாள் முதலே நான் இங்கு அரசனாக இருந்துகொண்டிருக்கிறேன். இங்கு வெற்றி எதுவும் நிகழவில்லை. தோல்வி என்றும் எதுவுமே நிகழவில்லை. எதுவுமே மாறவில்லை. தீங்கென்று எதுவும் நிகழவில்லை எனினும்கூட மாற்றமின்மை மக்களை சலிப்புற வைக்கிறது. தீங்கேயானாலும் ஒரு மாற்றம் நிகழலாம் என்று அவர்கள் விழைவு கொள்கிறார்கள்.”
“அத்துடன் என் இளையோன் நாடுநீங்க, அவன் மைந்தரும் நகரும் முற்றழிந்ததும் இவர்கள் ஒவ்வொருவரிடமும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. அத்தகைய ஒரு ஊழை மதுராவுக்கும் நான் கொண்டுவந்துவிடுவேனோ என்று இவர்கள் அஞ்சுகிறார்கள். அது இயல்பே. இளையோனுக்கு என ஒரு ஊழ் வகுக்கப்பட்டிருந்தால் அது எனக்கும் உரியதே. நாங்கள் இருவரும் ஒன்றின் இரு பக்கங்களாகவே இருந்திருக்கிறோம். இங்கு நான் இருந்தால் இளையோனைச் சூழ்ந்த தீயூழின் ஒரு பகுதியை இங்கு கொண்டு வந்துவிடுவேன் என்று எனக்கே ஐயமாக இருக்கிறது. அதற்கு மீள்வழி ஒன்றே. உகந்த முறையில் நான் விண்ணேகுவது” என்றார் பலராமர்.
“தங்கள் முடிவு அது என்றால் நான் அதை மறுத்துரைக்கப் போவதில்லை” என்று தணிந்த குரலில் சொன்னேன். “ஆனால் தங்கள் குடிகளை எண்ணிப்பாருங்கள். அவர்கள் இதுநாள் வரை நம்பியிருந்தது இளைய யாதவரின் போர்த்திறனையும் சூழ்திறனையும். இப்போது அவர் அகன்றிருக்கிறார், அவர் நகரும் படையும் அழிந்தன. மைந்தர்கள் மறைந்தனர். இன்று எஞ்சியவர்களில் பெரும்பகுதியினர் உங்கள் படைத்திறனையும் சூழ்திறனையும் நம்பியிருக்கிறார்கள். ஒருவேளை இவ்வண்ணம் நீங்கள் எண்ணுவதுகூட தீயூழோ என்று அவர்கள் எண்ணலாம். இன்று அவர்கள் கொண்டிருக்கும் சலிப்பும் துயரும் பலமடங்கு பெருகவும் கூடும்” என்றேன்.
“நானும் அவ்வாறுதான் எண்ணினேன். ஆனால் தேரில் துறைமுகத்திலிருந்து இங்கு வருவது வரை இருபுறமும் பெருகிக்கொண்டிருந்த மக்களின் முகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வாறில்லை என்று எனக்கு உறுதியாகத் தெரிந்த்து. ஒவ்வொரு முகமாக எடுத்து எடுத்துப் பார்க்கையில் ‘செல்க! அகல்க!’ என்றே அவை சொல்கின்றன” என்றார் பலராமர். “அரசே, தெய்வம் என்று தங்களை வழிபட்டவர்கள் அவர்கள்” என்றேன். “ஆம், அத்தகைய வழிபாட்டை ஒருவன் பெறும்போதே உறுதியாகிவிடுகிறது, ஒருநாள் அவர்கள் அவனிடம் ‘போதும், அகன்று செல்க!’ என்பார்கள் என்று” என்று பலராமர் நகைத்தார். “நூல்களில் பயின்றது, மெய்யென்று எழுந்து முன்னால் நின்றிருக்கிறது இப்போது.”
“ஸ்ரீகரரே, மனிதர்களால் தங்களைவிடப் பெரியவர்களை நெடுநாள் தாங்க முடிவதில்லை. இலைப்பரப்பு எடை தாங்குவதில்லை என்று ஒரு சொல் உண்டு. மானுடர் விண்ணோக்கி விரியவும் தளிர்கொள்ளவும் விழைகிறார்கள். ஆகவே எடைகளை உதிர்த்துவிடுகிறார்கள். இப்புவியில் உள்ள அனைத்து இலைகளும் எடைகளை கீழே விடும்பொருட்டே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் உள்ளங்களும் அவ்வாறே. அவர்கள் பெருஞ்செயல்களை, மாமனிதர்களை தவிர்ப்பார்கள். தங்கள் இயல்புகளால், தங்கள் சிறு ஊழால் தங்கள் அன்றாடத்தை சமைத்துக்கொண்டு அதில் திளைப்பார்கள்.”
“நூல்களில் நான் பயின்றதுண்டு, மானுடத்திரளை பெருமானுடரே ஆளவும் வழிநடத்தவும் முடியும். பெருமானுடரை அவர்கள் அஞ்சவும் வெறுக்கவும் செய்வார்கள். அரசுசூழ்தலில் மாற்றமில்லா முரண்பாடு இது. அவர்களே தெரிவுசெய்தால் அவர்கள் மிகமிகச் சிறியவர்களை, அவர்களைப் போலவே இருப்பவர்களை தலைமை என ஏற்பார்கள். அவர்களால் அழிக்கப்படுவார்கள்” என்று பலராமர் சொன்னார். “ஆகவேதான் அரசன் தன்னையல்ல தன் புனைவையே மக்கள்முன் வைக்கவேண்டும். அதை மக்கள் தங்கள் விருப்பம்போல புனைந்துகொள்ள விட்டுவிடவேண்டும். அவன் அகன்றிருந்து அவர்களை ஆட்சிசெய்ய வேண்டும். உரிய தருணத்தில் அப்புனைவை எஞ்சவிட்டு தான் மறைந்துவிடவேண்டும்.”
“இப்புவியில் பெரும்பாலான மானுடர்கள் அன்றாடத்தில் திளைக்கும்பொருட்டே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை பெருமானுடர் எவ்வகையிலோ மேலும் சிறுமைகொள்ளச் செய்கிறார்கள், துயருற வைக்கிறார்கள். அவர்களின் வாழ்த்துரைகளும் வழிபாடுகளும் அச்சத்தால் உருவாகின்றவை, அடைக்கலம் கோருபவை. ஆனால் தொடர்ந்து அகன்றுகொண்டும் இருக்கிறார்கள். அகன்றுசெல்லுந்தோறும் வெறுப்பும் எழுகிறது. பேருருக்கொண்டு இவர்கள் நடுவே நின்றிருப்பதைப்போல் துயர் வேறில்லை. சில தருணங்களில் பெரும் சலிப்பு அது. முதுமையில் முதுமை அளிக்கும் சலிப்புடன் இச்சலிப்பும் இணைந்துகொள்கிறது. தனிமை இந்நகரில் இந்நகரைப்போன்றே விந்தையானது. ஆனால் அதுவே என் பீடம்.”
அவர் பெருமூச்சுடன் நெடுநேரம் எண்ணத்தில் ஆழ்ந்திருந்தார். பின்னர் “எங்கோ என் இளையோனும் தனித்திருக்கிறான். முற்றிலும் தனித்து. ஒரு சொல்லோ புன்னகையோ நெருங்க முடியாத தனிமையில். ஒருவேளை அவன் இவ்வுடலை உதிர்க்க விரும்பக்கூடும். அவன் உடலுதிர்க்காமல் வாழ்வது நான் உயிர் வாழ்கிறேன் என்ற எண்ணத்தின் பொருட்டே. எந்தையும் அவர் தந்தையும் நானும் இருக்கையில் அவன் உடல் உதிர்க்கும் முடிவை எடுக்க முடியாது, நெறிகள் அதை ஒப்புவ்தில்லை” என்றார்.
என் உள்ளத்தில் எழுந்த எண்ணத்தை உணர்ந்து “நான் தங்களை அழைத்தது அதற்காகவே. எந்தை வசுதேவரிடமும் அவர் தந்தை சூரசேனரிடமும் செல்க! நான் வடக்கிருந்து உயிர்விட எண்ணியிருப்பதை அவர்களிடம் உரையுங்கள்” என்றார் பலராமர். “அரசே, துயர்மிகுந்த பெரும் பொறுப்பை எனக்கு அளிக்கிறீர்கள்” என்றேன். “அவர்களிடம் என் சொற்களை கூறுக! நேற்றைய நிகழ்வுக்குப் பின் அவர்களும் உளம் சோர்ந்து தங்கள் அறைகளுக்கு மீண்டிருக்கிறார்கள். எவரையும் சந்திப்பதில்லை. தன்னந்தனிமையில் இருந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏற்கெனவே இருந்த சோர்விலிருந்து மீள சிறு மின்மினி வெளிச்சத்தை நம்பி வெளிவந்தார்கள். அது கைவிட்டதும் மீண்டும் தங்கள் இருளுக்கே திரும்பியிருக்கிறார்கள். சென்று கூறுக என் எண்ணத்தை!”
“எவ்வண்ணம் நான் கூற வேண்டும்?” என்று நான் கேட்டேன். “சூரசேனரிடமும் வசுதேவரிடமும் நான் வடக்கிருந்து உயிர் துறப்பதற்கான ஒப்புதலை கோரினேன் என்று கூறுங்கள். அவர்களின் வாழ்த்துகளை விரும்பினேன் என்று கூறுங்கள்” என்றார். “அரசே…” என்று நான் அழுதேன். “அதன் பொருளென்ன என்று தெரியுமல்லவா?” என்றார். “ஆம்” என்றேன். அவர் “எனக்கு ஒரு நாள் முன்னதாகவே அவர்கள் வடக்கிருந்து அல்லது எரிபுகுந்து அல்லது நீர்மூழ்கி மறையவேண்டும்” என்றார். நான் “அதை அவர்களிடம் கோருகிறேன்” என்றேன்.
“நன்று, நீங்கள் செல்லுங்கள். இது நம் இளையோனின் பொருட்டு என்று கூறுங்கள். நிகழ்ந்து, பேருருக்கொண்டு, அருஞ்செயலாற்றி, எழுயுகங்களுக்கு முன் மலைமுடிகளென பொன்னொளி கொண்டு நின்றிருக்கும் சொற்களைப் படைத்து நிறைவடைந்துவிட்டான் என் இளையோன். இன்று அவன் மேற்குக் கோட்டில் கதிர் மறைவதுபோல் சென்றுவிட விழைகிறான். நமக்காக காத்திருக்கிறான். அவனுக்கு அந்த ஒப்புதலை அளிக்குமிடத்தில் நாமிருக்கிறோம். அதை அவர்களிடம் கூறுக!” என்றார் பலராமர்.
நான் தலைவணங்கினேன். அவர் கைகூப்பிவிட்டு கண்களை மூடிக்கொண்டார். அவர் முகத்தைப் பார்த்தபடி நான் நின்றேன். அந்த முகத்தில் துயரில்லை, மகிழ்வும் இல்லை, முற்றிலும் விடுபட்ட நிலையே தெரிந்தது. உதிர்ந்த கனிகள் பொன்னொளிகொண்டு மரத்தடியில் கிடப்பதை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். அவற்றில் உயிர் இருக்கும், ஆனால் நிறைவடைந்தமையால் மேலும் வளரவேண்டியதில்லை என்றோ வெல்ல வேண்டியதில்லை என்றோ முடிவெடுத்துவிட்டவை அவை. நான் நெடுநேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
நான் வெளியே வந்தபோது அங்கு நின்றிருந்த உல்முகனும் நிஷதனும் பதற்றத்துடன் என் அருகே வந்தனர். நிஷதன் என் கையைப்பற்றி “என்ன கூறினார்?” என்றார். நான் நிகழ்ந்தவற்றை சுருக்கிக் கூறியதும் உளம் உடைந்து விசும்பல் ஒன்று அறியாது எழ தளர்ந்து நடந்து அங்கிருந்த சிறுமஞ்சத்தில் அமர்ந்துகொண்டார். அவருடைய வெண்ணிறப் பெருந்தோள்கள் குலுங்குவதை, விழிநீர் நெஞ்சில் விழுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். மிக நெடுங்காலத்துக்கு முன் முதிரா இளமையில் இருந்த பலராமரின் அதே உரு. மானுடர் அவ்வண்ணமே மீண்டும் மீண்டும் நிகழ்கிறார்கள். பலராமரும் அதைப்போல எளிதில் உளமுடைந்து அழுபவரே.
ஒருகணத்தில் எனக்குள் ஓர் உவகை எழுந்ததை மறுக்கவில்லை. பலராமர் மறைந்தால் இளமையான, அழகான, மக்கள் என்றென்றும் நினைவில் நிறுத்தி மகிழ்கிற, இன்னொரு பலராமர் அவர்களுக்கு கிடைக்கப்போகிறார். இந்நகரை தன் கள்ளமின்மையால் காத்து நின்றவர், தன் தீரா இளமையால் அதை ஒளியுடன் நிறுத்தியவர், பெருமல்லர், திறந்த உளம் கொண்ட நல்லாசிரியர். அனைத்துப் பண்புகளையும் அவ்வண்ணமே கொண்டவர் நிஷதன் என்பதை அறிந்திருந்தேன். பலராமரின் அறையிலிருந்து வெளிவரும் கணத்தில் என்னிடம் இருந்த உளச்சோர்வு முற்றகன்றது.
நான் அவர் அருகே சென்று அவர் தோளைத்தட்டி “ஊழுக்கு பொறுப்பேற்காதீர்கள், இளவரசே. அரசர் என்று அவை அமரவிருக்கிறீர்கள். அதற்குமுன் கற்று பயின்று நெஞ்சில் நிறுத்திக்கொண்டிருக்க வேண்டிய பாடம் இது” என்றேன். அவர் நிமிர்ந்து என்னை பார்த்தார். “அது நல்லூழே. அவர் நிறைவுறட்டும். அவர் பொன்றாப் புகழ் பெறுவார். நம் இல்லங்கள் அனைத்திலும் தெய்வமென நிலைகொள்வார். எழுயுகங்கள் தோறும் விண்ணளந்தோனின் வடிவங்களில் ஒருவர் என்று கருதப்படுவார். கலப்பையேந்தி பாரதவர்ஷத்தின் ஆலயங்கள் அனைத்திலும் நின்றிருப்பார்” என்றேன்.
“இளவரசே, அவரை விண்ணளந்தோன் பள்ளிகொண்ட பெரும்பாம்பின் மண் வடிவமென்று சூதர்கள் பாடுகிறார்கள். அச்சொல் இங்கு நிலைபெற வேண்டும். இங்கு அவர் நோயுற்று, மதுவருந்தி, மெலிந்து மறைவதைவிட உகந்தது இதுதான் அல்லவா? இனி அவருக்கு எஞ்சியிருக்கும் பேறு என்பது தெய்வநிலை அன்றி வேறென்ன?” என்றேன். அவர் தலையசைத்தார். “வருக! நாம் சென்று சூரசேனரை பார்ப்போம்” என்றேன். “நான் வரவேண்டுமா?” என்றார். “நீங்கள் இருவரும் வருவது நன்று” என்றேன். உல்முகன் “நானுமா?” என்றார். “இருவரும்” என்றேன். “இருவரும் வருவதே நன்று. இருவரையும் பார்க்கையிலேயே அவர் நன்முடிவை எடுக்க முடியும்.”
நாங்கள் மூவரும் ஒரே தேரில் சூரசேனரின் மாளிகையை அடைந்தோம். நடுப்பகலிலும் அம்மாளிகை இருண்டிருப்பதுபோல் இருந்தது. துயிலில் நடப்பவன்போல் வந்த ஏவலன் “மூதரசர் துயில்கொண்டிருக்கிறார்” என்றான். “நான் வந்திருக்கிறேன் என்றும் அவருடைய பெயர்மைந்தர்கள் உடனிருக்கிறார்கள் என்றும் கூறுக! அரசச் செய்தி” என்றேன். சற்று நேரத்தில் அவன் திரும்பி வந்து “வருக!” என்றபின் “அவர் மது அருந்தியிருக்கிறார். உள்ளம் நன்னிலையில் இல்லை. இரு நாட்களாகவே உளம்கலங்கி விழிநீர் விடுவதும், மீண்டும் தேறி மதுவருந்தி மயங்குவதுமாக இருக்கிறார்” என்றான்.
நான் ஒன்றும் கூறவில்லை. “அவர் உடல்நிலை எவ்வாறுள்ளது?” என்று நிஷதன் கேட்டார். “அவருடைய நாடித்துடிப்பு மிகவும் குறைந்து நின்றுவிடுவதுபோல் ஆகி மீண்டு கொண்டிருக்கிறது. பசியில்லை. இயற்கையான துயிலும் இல்லை” என்றான் ஏவலன். சூரசேனரின் அறைக்கு வெளியே சிற்றமைச்சர் நின்றுகொண்டிருந்தார். “உள்ளே மருத்துவர் இருக்கிறார்” என்று அவர் சொன்னார். சற்று நேரம் நாங்கள் சொல்லின்றி காத்து நின்றிருந்தோம்.
மருத்துவர் வெளியே வந்து தலைவணங்கி “அவருடைய நாடி விரைந்து எழுந்து கொண்டிருக்கிறது. அவரை இத்தருணத்தில் நாம் பேணியாகவேண்டும். அவரிடம் உளக்குலைவு அளிக்கும் செய்திகளை கூறாதொழிக!” என்றார். நிஷதனையும் உல்முகனையும் பார்த்தபின் “குலமைந்தர் வந்தது நன்று. குருதியின் எச்சம்போல் முதியோரை மகிழ்விப்பது வேறில்லை. ஒரு மகிழ்வான தருணம் அவருக்கு அமையட்டும்” என்றார். நான் புன்னகைத்து “இது மகிழ்வான தருணம்தான்” என்றேன். அனைவரும் என்னை நோக்க நான் புன்னகைத்தேன்.
என் சொற்களை வகுத்துக்கொண்டேன். மருத்துவ ஏவலன் வந்து அழைக்க நாங்கள் அறைக்குள் சென்றோம். சூரசேனர் மஞ்சத்தில் தலையணைகளை முதுகுக்கு அண்டக்கொடுத்து எழுந்து அமர்ந்திருந்தார். உடல் இருநாட்களுக்கு முன் பார்த்த ஆற்றல் அனைத்தும் இழந்து மட்கிய சுள்ளிபோல் தசை தொய்ந்து ஓய்ந்திருந்தது. கண்கள் அழுகிய பழங்கள்போல் ஒளியிழந்திருந்தன. நான் அவரிடம் “மூத்தவரே, வணங்குகிறேன். உங்கள் பெயர்மைந்தனின் செய்தியுடன் வந்திருக்கிறேன்” என்றேன். “கூறுக!” என்றார். அவர் கண்களில் எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை.
“இச்செய்தியை அவர் உங்களிடம் உரைப்பதற்காக என்னை அனுப்பினார். உங்களிடம் உரைத்த பின் இதை வசுதேவரிடம் உரைக்க வேண்டும் என்று ஆணை” என்றேன். அவர் தலையசைத்தார். “மூதாதையே, இக்குடியின் முதற்சுடர் இளைய யாதவரே என்று அறிவீர்கள். அவர் உலகை வென்று, சொல் நிறுத்தி, புவிநிறைவை அடைந்துவிட்டார். அவர் மண்நீங்காமல் இருப்பது ஒருவேளை அவரது மூத்தவரும் தந்தையும் முதுதாதையும் மண்ணில் இருப்பதனால் என்று அரசர் எண்ணுகிறார். ஏனென்றால் குருதிமூத்தோர் இருக்க உடல்துறப்பதை நெறிகள் ஒப்புவதில்லை. அவரை நாம் கட்டுப்படுத்தலாகாது என்றும், புகழ் கொண்டு நிறைவடைய அவருக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் பலராமர் எண்ணுகிறார். அதன் பொருட்டு உண்ணாநோன்பு இருந்து உயிர்விட முடிவெடுத்திருக்கிறார். அதற்கு தாங்களும் தங்கள் மைந்தர் வசுதேவரும் ஒப்புதலளிக்க வேண்டும் என்று கோருகிறார்.”
சூரசேனர் தலை நடுங்க என்னை பார்த்துக்கொண்டிருந்தார். நிஷதன் மெல்ல என் தோளை தொட்டார். “என்னிடம் என் பெயர்மைந்தன் இவ்வண்ணம் ஒரு சொல்லுடன் வந்தது நிறைவளிக்கிறது. நான் எளிய யாதவன் அல்ல, அரசன் என்பதையே என்னிடம் நானே சொல்லிவந்திருக்கிறேன். ஆனால் அதை நானே முழுமையாக ஏற்றுக்கொண்டதில்லை என்பதே என் துயர். என் மைந்தன் பாரதவர்ஷத்தின் முதன்மைப் பேரரசன் என்று எழுந்தபோதும்கூட கன்றோட்டும் எளிய யாதவன்தானோ நான் என்று எனக்கு நானே உசாவிக்கொண்டிருந்திருக்கிறேன். இப்போது தெளிவடைந்தேன், நான் அரசனே. அரசனுக்குரிய முறையில் மண்நீங்குவேன்” என்றார் சூரசேனர்.
“என்னிடம் அச்சொற்களை நீங்கள் சொல்லும்போது என்னுள் அச்சம் எழவில்லை. ஒரு துளியும் இழப்புணர்வு எழவில்லை. ஆம் இதுவே உகந்தது, முறையானது என்று தோன்றுகிறது. நாளை புலரியில் யமுனையில் மூழ்கி உயிர்துறக்க எண்ணுகிறேன். நீர்புகுதலே யாதவர்களுக்கு உகந்தது. எரி என்றும் நம் எதிரி, நீராலானவர் நாம். யமுனைச்சேற்றில் பிறந்து யமுனையில் மறையும் எளிய புழு நான்” என்றார் சூரசேனர். “இச்செய்தியை என் மைந்தனிடமும் பெயர்மைந்தனிடமும் கூறுக! உரியவற்றை ஒருங்குசெய்க!” என்றார். அவர் முகம் புன்னகையில் விரிந்திருந்தது. தலைமட்டும் உணர்வெழுச்சியால் நடுங்கிக்கொண்டிருந்தது.
நிஷதனும் உல்முகனும் அவர் கால்தொட்டு வணங்கினார்கள். இருவர் தலைமேலும் கைவைத்து “பெயர் நிலைக்க வாழ்க! வெற்றி சூழ்க! குடிகளுக்கு இனியவராகுக! கொள்வதற்கு இணையாகவே கடந்து செல்வதற்கும் துணிவு கூடுக!” என்று அவர் வாழ்த்தினார். நான் வணங்கி “தங்கள் ஆணைப்படி அனைத்தையும் ஒருக்குகிறேன், அரசே. நெறிகளின்படி அரசர் இனிமேல் எவரிடமும் விடைபெற்றுக்கொள்ள வேண்டியதில்லை. நீங்களும் எவரிடமும் சொல்லிக்கொள்ளவேண்டியதில்லை” என்றேன். “ஆம், முடிவெடுத்த கணமே உயிர் விண்ணை நோக்கிவிட்டது. இனி இப்புவியில் உறவென்று எவருமில்லை” என்றார் சூரசேனர்.
நாங்கள் வெளியே வரும்போது உல்முகனும் நிஷதனும் துயரின் எடைகொண்ட ஆழ்ந்த அமைதியில் நடந்தனர். அவர்களின் காலடியில் அந்த எடை ஒலித்துக்கொண்டிருந்தது. நான் அவர்களிடம் கூறுவதற்கு எதுவுமில்லை என்று உணர்ந்தேன். காலடியோசைகள் வேறெவரோ எதையோ பேசிக்கொள்ளும் ஓசையென ஒலிக்க நாங்கள் நடந்தோம். மாளிகை முற்றத்திற்கு வந்து தேரிலேறி வசுதேவரின் மாளிகைக்கு சென்றோம். சூரசேனரின் மாளிகை போலவே அதுவும் இருண்டு துயிலிலென இருந்தது. காவலனிடம் நாங்கள் வசுதேவரை பார்க்கவேண்டும் என்று உரைத்தோம். ஏவலன் உள்ளே சென்று ஒப்புதல் பெற்று எங்களை அழைத்துச் சென்றான்.
வசுதேவர் தன் அறையில் தனியாக நாற்களம் விளையாடிக்கொண்டிருந்தார். முதற்பார்வையில் அவ்வாறு தோன்றியது எனினும் அவர் விளையாடிக்கொண்டிருக்கவில்லை என பின்னர் தெளிந்தது. நாற்களத்தில் காய்களை விரித்து வைத்து வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். ஒருவேளை உள்ளத்தால் ஆடுகிறாரா என்று பார்த்தேன். வெறுமனே நோக்கிக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது. எங்களைக் கண்டதும் வெறுமை நிறைந்த விழிகளுடன் நிமிர்ந்து பார்த்தார். நாங்கள் தலைவணங்கி முகமன் உரைத்தோம். அவர் என்னை ஒருகணம் பார்த்த பின் இரு பெயர்மைந்தரையும் விழி திறந்து மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார்.
நான் பலராமர் கூறியதையும் சூரசேனரிடம் ஒப்புதல் பெற்றதையும் உரைத்தேன். அவர் இரு பெயர்மைந்தரையும் பார்த்துக்கொண்டே என் சொற்களை கேட்டுக்கொண்டிருந்தார். அவர் என்ன எண்ணுகிறார் என்று தெரியவில்லை. சொற்கள் சென்று சேர்ந்தனவா என்று நான் ஐயம் கொண்டேன். ஆனால் அவர் புன்னகையுடன் திரும்பி “நன்னாள் இது, நற்சொல் தேடி வந்திருக்கிறது” என்றார்.
“இன்று காலை இந்த நாற்களத்தை விரித்தேன். முற்புலரியில் விளக்கு வைத்து இதை பார்க்கலானேன். இப்போது எட்டு நாழிகைப்பொழுதுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை ஒரு காயைக்கூட நகர்த்த முடியவில்லை. கையால் அல்ல, உள்ளத்தாலும். ஆனால் என்னால் இந்த நாற்களத்திலிருந்து எழுந்து விலகவும் முடியவில்லை. வெறுமனே இதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவ்வாறு உணர்ந்ததும் இதை என்ன செய்வது என்று தெரியாமல் தயங்கினேன். இப்போது ஒரு பெருவாயில் திறந்ததுபோல் உள்ளது. நான் செய்வதற்கு இது மட்டுமே உள்ளது.”
நான் தலைவணங்கினேன். வசுதேவர் “நாளை புலரியில் தந்தையுடன் இணைந்து நானும் யமுனையில் நீர்புகுகிறேன். நானே தந்தையை அழைத்துச் செல்கிறேன். இதை முறையாக அரசருக்கும் நகர்க்குடிகளுக்கும் அறிவித்துவிடுங்கள்” என்றார். “ஆணை” என்று நான் சொன்னேன். “என் துணைவியருக்கும் மற்ற குடித்தலைவர்களுக்கும் ஓலைகள் செல்லட்டும். அவர்களிடமும் நான் சொல்வதற்கென ஏதுமில்லை. இது வெறும் அரசச்செய்தி மட்டுமே, அவ்வண்ணமே சொல்லமைக!” என்றார் வசுதேவர்.
நிஷதனும் உல்முகனும் அவர் கால்தொட்டு வணங்கி வாழ்த்து பெற்றனர். நாங்கள் மீண்டும் முற்றத்திற்கு வந்தபோது நான் இடையில் கைவைத்து நின்று வானை பார்த்தேன். வெட்டவெளியாக, ஒரு முகில்கணம்கூட இல்லாமல் வெறித்து திறந்துகிடந்த வானை நோக்கியபடி நெடுநேரம் நின்றிருந்தேன்.