இலக்கிய அபிப்பிராயம் சொல்வது …

இலக்கியப்பேச்சுக்களில் அவ்வப்போது நான் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி உண்டு, இலக்கியப் படைப்பாளிகள் ஏன் அவர்களின் எழுத்துக்கள் மீதான கருத்துக்களைக் கண்டு எரிச்சல் கொள்கிறார்கள்? அவ்வாறு எரிச்சல்கொண்ட எழுத்தாளர்களின் ‘முதிர்ச்சியின்மை’ பற்றிய புகார்களாகவே இந்தக் கேள்விகள் எழுகின்றன.

எழுத்தாளர்களிடம் முதிர்ச்சியின்மை உள்ளது என்பதில் சந்தேகமில்லை. முதிர்ந்துவிட்டால் அவன் ஏன் எழுதவருகிறான்? எழுதுவதென்பதே ஒரு நிலைகுலைவைச் சரிசெய்வதற்காகத்தான். எழுத்தாளனிடம் எப்போதுமே படபடப்பும், நிலைகொள்ளாமையும் இருக்கும். நான் இதுவரை சந்தித்த எழுத்தாளர்களிலேயே நிதானமானவர்கள் சுந்தர ராமசாமியும் நாஞ்சில்நாடனும்தான். அவர்களிடம் இருக்கும் படபடப்பும் நிலைகொள்ளாமையுமே ஒரு சாதாரண வாசகனை குழப்பக்கூடியவை

எழுத்தாளன் ஒரு படைப்பை எழுதிய உடனே அதன்மேல் மிகுந்த பரிவுடன் இருக்கிறான். அதை தொடர்புறுத்திவிட்டோமா என்ற பதற்றம் கொண்டிருக்கிறான். அது புரிந்துகொள்ளப்படாமல், உணரப்படாமல் போய்விடுமோ என்ற சஞ்சலம் அவனை ஆட்டிப்படைக்கிறது. அந்த தருணத்தில் எந்தவகையான எதிர்மறைக் கருத்துக்களும் அவனை கொந்தளிக்கவே வைக்கின்றன.

அந்த படைப்பு தன் இடத்தை நிறுவிக்கொண்டபின் வரும் எதிர்வினைகள் அவனை ஒன்றும் செய்வதில்லை. விஷ்ணுபுரம் நாவலைப் பற்றி இன்று எவர் என்ன சொன்னாலும் எனக்கு ஒன்றுமில்லை. அதை ஒருவர் வசைபாடினால்கூட அந்த வசையும் அது உருவாக்கும் பேச்சுக்களில் ஒன்றாக, அதன் பாதிப்பாக மட்டுமே ஆகும். அது இன்று தமிழ்நவீன இலக்கியத்தின் ஓர் அடையாளம்.

ஆகவே மறுப்பு அல்லது மாற்றுக்கருத்து சொல்வதற்கு ஓர் இடம் உள்ளது. விமர்சகனுக்கு அதை மீறும் உரிமை உண்டு. ஏனென்றால் அவன் ஏற்கனவே ஒரு பெரிய கருத்துப்புலத்தை உருவாக்கியிருப்பான். அவன் சொல்லும் தனித்த கருத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் பின்புலமாக அந்த விரிவான விமர்சனப்புலம் நின்றுகொண்டிருக்கிறது. அதோடு விமர்சகன் விவாதிக்கவும் விவாதங்களை கடந்துசெல்லவும் அறிந்தவன். வாசகர்கள் அப்படி அல்ல.

மறுபக்கம், வாசகர்கள் சொல்லும் கருத்துக்களின் போதாமை என சில இல்லையா? தங்கள் கருத்துக்களை ‘கருத்துரிமை’ என்ற பொருளில் எடுத்துக்கொண்டு எதையாவது சொல்லிவைக்கும் வாசகர்களே மிகுதி. உண்மையில் ஆரம்பவாசகர்கள் அப்படி நிறையச் சொல்கிறார்கள். இலக்கியவிமர்சனம், இலக்கிய உரையாடலை அறிய அறிய கொஞ்சம் அடக்கிவாசிக்க ஆரம்பிக்கிறார்க்ள்.

ஆனால் அரசியல் – கருத்தியல் நிலைபாடு கொண்டவர்கள் அடங்குவதே இல்லை. அவர்களின் அபாரமான தன்னம்பிக்கைக்கு இந்தபூமியில் சமானமாக ஏதுமில்லை. என் பார்வையில் தமிழின் அரசியல் – கருத்தியல்- கல்விப்புல விமர்சகர்கள் பலர் அறியாமையின் தன்னம்பிக்கையால் டி.ராஜேந்தரையே வென்றுமேலே சென்றுவிடுபவர்கள்.

வாசகர்கள் படைப்பு பற்றி கருத்துச் சொல்லும்போது பொதுவான அசட்டுத்தனங்கள் என்ன, தவிர்க்கவேண்டிய பேச்சுக்கள் என்ன என்று ஒரு சிறுபட்டியல். எவருக்காவது உதவலாம்

அ. ஒருபோதும் இலக்கியப்படைப்பை உடனடியாக நினைவுக்கு வரும் சினிமாச்செய்திகள், சினிமாக்கதைகளுடன் சம்பந்தப்படுத்தாதீர்கள்

உண்மையில் சினிமா என்பது ஃபங்கஸ் போல எங்கும் படிந்திருக்கிறது. எதையாவது படித்தால் உடனே அதுதான் ஞாபகம் வருகிற்து. உடனே இயல்பாக அதை இணைத்து எதையாவது சொல்லிவிடுவதைப்போல தமிழ் வாசகன் செய்யும் உச்சகட்ட அசட்டுத்தனம் ஏதுமில்லை.

உதாரணமாக ஓர் அப்பாவுக்கும் மகளுக்குமான உறவைப் பற்றிய கதையை வாசித்ததுமே ‘தங்கமீன்களிலே இப்டித்தான் சார்…” என்று ஆரம்பிப்பது . இது கீழே கிடக்கும் சாணியையோ சேற்றையோ எடுத்து அந்தக்கதை மேல் பூசுவதுதான்.

ஆ. உடனடியாக மனதில் எழுவதுடன் தொடர்புபடுத்திக்கொண்டு எதையாவது சொல்லாதீர்கள்

ஒரு கதையை வாசித்ததுமே சட்டென்று ஏதோ ஒன்று அதனுடன் சம்பந்தப்பட்டு மனதில் எழுகிறது. இது ஒரு தற்செயலான தொடர்புதான். association fallacy என்று இதை தத்துவத்தில் இன்னமும் கறாராக வரையறுத்திருக்கிறார்கள். அது தத்துவத்தில் ஒன்றாம்வகுப்பிலேயே களையெடுக்கப்படும் பிழை. இலக்கியத்தில் கடைசிவரை புழங்குகிறது.

ஒருகதையை வாசித்ததும் இன்னொன்று நினைவுக்கு வருவது அந்தக்கதையின் விளைவு அல்ல. அந்தக்கதையுடன் அதற்கு தொடர்பும் இல்லை. அது உங்கள் மனஅமைப்பு, அந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் மனமிருந்த நிலை ஆகியவற்றுடன் தொடர்புடையது. அதை உடனே சொல்லிவைப்பதனால் எந்த பயனும் இல்லை, தேவையில்லாத குழப்பங்களை மட்டுமே உருவாக்கும்.

உதாரணமாக, ஒரு வங்கிக்கொள்ளை பற்றிய கதையை படித்ததுமே “பேங்கிலே கொள்ளையடிக்கிறவங்க்ளைப் பத்தி ஒரு இண்ட்ரெஸ்டிங்கான விஷயம் படிச்சேன்” என்று ஆரம்பித்துவிடுவது.

நீங்கள் சொல்வது ஒரு அவதானிப்பாக இருக்கவேண்டும். அந்த அவதானிப்பை சொல்ல ஓர் உதாரணமாக அமையக்கூடியவற்றையே சொல்லவேண்டும். உங்களால் அதை விளக்கமுடியவேண்டும்

இ.கருவை அல்லது களத்தைப் பொதுமைப்படுத்தி பேசாதீர்கள்

இதை பெரும்பாலும் எல்லாருமே செய்வார்கள். இலக்கியப்படைப்பு என்பது அதன் கருவோ களமோ அல்ல. உலக இலக்கியத்தில் மொத்தமே ஐம்பதுக்கும் குறைவான கருக்களே திரும்பத்திரும்ப எழுதப்படுகின்றன. ஆகவே எந்தக் கதையை படித்தாலும் அந்தக் கருவைக் கொண்ட இன்னொரு கதையை நீங்கள் கண்டிப்பாக படித்திருப்பீர்கள்.

மிகமிக தாழ்ந்த நிலையில் உள்ள வாசகர்களே  ‘இந்தக்கதையின் கருதான் அந்தக்கதையிலும்’ என்று பேச ஆரம்பிப்பார்கள். அவர்கள் ஓரிரு கதைகளையே வாசித்திருப்பார்கள். ஆகவே ஒரு கருவைக் கொண்டு ஒரே கதைதான் எழுதமுடியும் என்று ஆத்மார்த்தமாகவே நம்புவார்கள்.

“நான் படிச்ச இன்னொரு கதையிலேயும் எக்ஸாட்டா இதே மாதிரி ஒருத்தன் அம்மாவை ஓங்கி அடிச்சிருவான் சார்” என்று சொல்வதுதான் தமிழ்வாசகன் முன்வைக்கும் அசட்டு அபிப்பிராயங்களில் எழுத்தாளனை எரிய வைப்பது. எழுதவந்த ஒவ்வொருவரும் இந்த வரிகள்முன் பொறுமைகாக்க பழகியே ஆகவேண்டும்.

இன்னும் ஒருபடி கீழிறங்கி “இந்தக்கதை அந்தக்கதை மாதிரி இருக்கு” என்றோ “இந்தக்கதை அந்தக்கதையை ஞாபகப்படுத்திச்சு” என்றோ சொல்லிக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள் நம்மூர் வாசகர்கள். எந்தக்கதையையும் ஞாபகப்படுத்தாத ஒரு கதையை எழுத எவராலும் முடியாது.

அதைவிட உச்சகட்ட அசட்டுத்தனம் கதைக்களத்தை பொதுமைப்படுத்திக்கொள்வது “இதேமாதிரித்தான் சார் ஜானகிராமன் கதையிலேயும் ஒருத்தன் ரயிலிலே போவான்” என்றவகையான அபிப்பிராயங்கள். உலகில் ரயிலில் போவதைப்பற்றி எப்படியும் ஐம்பதாயிரம் கதை எழுதியிருப்பார்கள்.

ஆகவே  ஒருபோதும் ஒருபோதும் ஒருபோதும் எழுத்தாளரிடம் ‘இந்தக்கதையை வாசிச்சப்ப அந்தக்கதையை நினைச்சுக்கிட்டேன்’ என்று மொட்டையாகச் சொல்லாதீர்கள். அந்த எழுத்தாளன் வாயில் சிரிப்புடன் மனசுக்குள்  ‘போடா கிண்ணி’ என்று சொல்லிக்கொள்வான்

சரி, இன்னொரு கதையை இணைத்துக்கொண்டு யோசிக்கலாமா? யோசிக்கலாம், அந்தக்கதையில் இருந்து இந்தக்கதை வரை வரும் கருத்துச்சரடு என்ன, அழகியல் கோடு என்ன என்று சொல்ல முடியும் என்றால். அந்தக்கதையில் இருந்து இந்தக்கதை எப்படி மாறுபடுகிறது அல்லது வளர்கிறது, அல்லது வளரவில்லை என்று சொல்லமுடியும் என்றால் மட்டும்.

ஈ. கருத்து சொல்லுங்கள், கமெண்ட் சொல்லாதீர்கள்

இங்கே கருத்து என்றபெயரில் சொல்லப்படுபவை பல அசட்டுத்தனமான கமெண்டுகள். ‘சிவாஜிபட கிளைமாக்ஸ் மாதிரி இருக்கு’ என்றோ ‘ரமணிச்சந்திரன் ஸ்டைலிலே இருக்கு’ என்றோ சொல்லப்படுவது அபிப்பிராயம் அல்ல. அது ஒரு கமெண்ட். அதிலுள்ளது அடிப்படையில் அலட்சியம். இழிவுபடுத்தும் உள்நோக்கம்.

அதேபோல கமெண்டை பாராட்டாகவும் சொல்லமுடியும். “சச்சின் சிக்ஸர் மாதிரி இருக்கு” என்பது. ஆனால் அதற்கும் ஒரு  மதிப்பும் இல்லை. “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்லலாம். அது நேர்மையான எளிமையான ஒரு கருத்து

உ. படைப்பின் இணையெழுத்தாளனாக நின்று கருத்து சொல்லாதீர்கள்

எழுத்தாளர்களே அல்லாதவர்கள்கூட இதைச் சொல்வது இங்கே அதிகம். இது சினிமாவிமர்சனங்களிலிருந்து கற்றுக்கொண்டது. “கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்” “வர்ணனைய குறைச்சிருக்கலாம்” “மாலதியை சாமிநாதனுக்கு கட்டிவைச்சிருக்கலாம்”,”செண்டென்ஸை சின்னதா வைச்சிருக்கலாம்” போன்ற அபிப்பிராயங்கள் சொல்பவரால் மிகுந்த தன்னம்ம்பிக்கையுடன் சொல்லப்பட்டாலும் அசட்டுத்தனமானவையே.

ஆசிரியர் உருவாக்கியிருப்பது ஒரு படைப்பு- ஒரு மொழிக்கட்டுமானம். அதை வாசிக்கமுயல்வதே வாசகனின் கடமை. அதில் என்ன கிடைத்தது என்ன கிடைக்கவில்லை என்று சொல்லலாம். என்னென்ன இருக்கவேண்டும் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லமுயல்வது அறிவின்மை

அதை அழகியல்விமர்சகன் மட்டும் ஓரளவு சொல்லலாம். ஏனென்றால் அவன் எந்த அடிப்படையில் அதைச் சொல்கிறான் என்பதை அவனே பலநூறு பக்கங்கள் வழியாக விளக்கியிருப்பான். அப்போதுகூட அது அவனுடைய பார்வையையே காட்டுகிறது, எழுத்தாளனுக்கான வழிகாட்டுதல் அல்ல.

ஊ. பொதுவாக ஒரு படைப்பில் அதற்குரிய நுண்தளம் ஒன்று இருக்கும். அந்த நுண்தளத்தை தொட்டுவிட்டு மேலே பேசும் விமர்சனங்களுக்கு மட்டுமே விமர்சனம் என்ற மதிப்பு உண்டு.

வாசகனாக ஒருவன் செய்யவேண்டியது அந்த நுண்தளத்தை, ஆழ்பிரதியை வாசிப்பது மட்டும்தான். அதை வாசிக்காதவன் வாசகனே இல்லை. அது காதுகேட்காதவன் சங்கீதம் பற்றிய கருத்துசொல்வதுபோலத்தான். “ஜேசுதாசைவிட சஞ்சய் சுப்ரமணியம் நல்லா தலையை ஆட்டுவார்” என்று சொல்வது அது

அந்த நுண்பிரதியை எடுத்து அதிலிருந்து நம் வாழ்க்கையுடன் இணைத்து நாம் சொல்லும் கருத்துக்கு மட்டுமே மதிப்பு. அந்த நுண்பிரதியை எடுப்பதற்கு கதையின் வடிவமோ மொழியோ போதாமலிருந்தால் அதைப்பற்றிய எதிர்மறையான குறிப்பை அளிக்கலாம்.

சரி, நுண்பிரதி இல்லை என்றால்? அது இலக்கியப்படைப்பு அல்ல, அதைப்பற்றிப் பேசவே வேண்டாம்

முந்தைய கட்டுரைநெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–80