உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்
அன்புள்ள ஜெ,
அனோஜனின் கதையை வாசித்தபோது உருவான ஒவ்வாமை என்பது அந்த பேசுபொருள் சார்ந்தது. ஒவ்வாமையை உருவாக்கும் விஷயங்களை எப்போதுமே எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறர்கள். ஒவ்வாமையை உருவாக்குபவை என்ன என்று பார்த்தால் அவை பெரும்பாலும் taboo சம்பந்தமானவை. அல்லது பெரிய வீழ்ச்சிகள் சம்பந்தமானவை.
Taboo என்பவை மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் சடங்காச்சாரங்கள் அல்லது ஒழுக்கநெறிகள் என்று தோன்றும். ஆனால் அவற்றுக்கு அடியில் தத்துவார்த்தமான ஒருவிஷயம் உள்ளது. அந்த தத்துவம் வரைச் சென்றால் அது மிகச்சிறந்த கதை. அந்த tabooவின் உண்மையான சிக்கலைச் சொல்லிவிட்டால் அது நல்லக்கதை அனோஜனின் கதை அந்த தத்துவதளம் வரைப் போகவில்லை. அது உருவாக்கும் உணர்ச்சிகளையும் அதிலுள்ள மனோவியல் சிக்கல்களையும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறது. அந்தவகையில் நல்ல சிறுகதை என்று சொல்வேன்.
ஜெயக்குமார்
***
அன்புள்ள ஜெ வணக்கம்…
இங்கிலாந்தில் வலுவாக கால் ஊன்றி விட்ட இலங்கை அகதி குடும்பத்தில் தான் தோன்றிய கணத்தை கண்டு விட்டவனின் அலைக்கழிப்புகள்தான் கதை மையம்.மருத்துவருக்கு படிக்கும் மாணவன் ஹரி சஞ்சலங்களை தீர்க்க வேண்டி மனநல மருத்துவரை அணுகுகிறான்.மொத்தக் கதையும் ஹரியின் பார்வையில் விரிகிறது, மிக இள வயதிலிருந்தே தினம்தோறும் அம்மா அடிபடும் காட்சியை கண்டே வளர்கிறான் ஹரி.
மிக மூர்க்கமாக தாக்கும் அப்பாவை எவ்வகையிலும் துளிகூட எதிர்க்காமல் இறந்த பிணம்போல் அடி வாங்கி அமைதியாக வாழ்க்கையை நடத்துகிறாள் அம்மா.பதின்ம வயதில் மாதவிடாய் சமயத்தில் அடிவாங்கி உதிரம் ஒழுக அடிவாங்கி கிடக்கும் அம்மாவை கண்டு எழுச்சி கொண்டு அப்பாவை தள்ளி விட்டு லேசாக தாக்குகிறான். திகைத்துப் போய் விடுகிறார் அப்பா எந்த எதிர்ப்பும் இன்றி வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.
அப்பாவின் மீதான முதல் தாக்குதல் ஹரிக்கு குரூரமான கொடூரமான திருப்தியைத் தருகிறது.சிறுவயதிலிருந்து ஒருமுறைகூட எதிர்த்ததில்லை முதல்முறையாக எதிர்த்து வெற்றியும் கண்டுள்ளான்.பெற்றோரின் சண்டை தொடர்கிறது அம்மாவின் மேல் இருந்த பரிதாப உணர்ச்சி ஹரிக்கு கோபமாக மாறுகிறது எவ்வாறு துளியும் எதிர்ப்பின்றி இதை சகித்துக் கொள்கிறார் என்று.
ஹரி மேலும் வளர்கிறான் தோழியரை வீட்டிற்கு அழைத்து வருகிறான். அப்பாவிடம் எதிர்ப்பு எழுகிறது. இங்கிலாந்தின் நவீனத்துக்குள் தன்னை மற்றும் பொருத்துக் கொள்ளாத தந்தை, இலங்கை மன நிலை தொடர்கிறது அவரிடம்.
ஹரி மேலும் வளர்கிறான் ஒருமுறை கூட செல்லாத அப்பாவின் அறைக்குள் எதேச்சையாக சென்று நோட்டமிட்டு ஒரு குறுந்தகடை கண்டெடுத்து இயக்கி பார்க்கிறான்.குடும்ப புகைப்படங்கள் நிறைந்த குறுந்தகட்டில் அப்பாவும் அம்மாவும் உறவு கொண்ட காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுவரையிலான அம்மாவின் மீதான சித்திரம் ஹரிக்கு உடைகிறது, அந்த உறவு காட்சியில் அவன் அப்பா பிணம் போல் கீழே கிடக்க பெரும் புயலில் ஆடும் மரம் போல வெறி கொண்டு இயங்குகிறார் அம்மா,பிறந்ததிலிருந்து ஹரி பார்த்து வளர்ந்த அடங்கி ஒடுங்கிய எவ்வித எதிர்ப்பையும் காட்டாத அம்மா அல்ல இது முற்றிலும் வேறொருவர்.
யார் ஒருவரை பற்றியுமே நாம் எண்ணி நம்பி வரும் பிம்பம் 100 சதம் உடையும் பொழுது நாமும் சற்று நொறுக்குவோம், எந்த உறவிலுமே இதுதான் நிலை, இதுவோ மிக நெருங்கிய உறவான தாய்.
இவ்வாறான ஒரு பிம்பத்தை சிதைவு அவனுள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன?
அப்பாவை போலவே இவனும் மூர்க்கமாக நடந்து கொள்கிறான். அம்மாவின் ஒரு சிறு தொடுகையை கூட ஏற்க முடியாமல் எதிர்த்து உணவுத் தட்டை வீசி எறிகிறான். ஏன்?
அம்மாவுடன் இணக்கமாக தானே இருப்பாய் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாய் என்று தந்தை கேட்கும்பொழுது உறவு காட்சியை பார்த்த கதையை சொல்கிறான்.குழந்தை இல்லாமல் தவித்த தங்களுக்கு குழந்தை உருவாகும் கணத்தை பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணிய தாகவும் இது நீ உதித்த கனமாகவும் இருக்கலாம் என்கிறார் தந்தை. அரிதினும் அரிதான பிரபஞ்சத்தின் முதல் நிகழ்வாக இருக்கலாம். உறக்கம் கலைந்த இரவுகளில் பெற்றோரின் உறவு காட்சியை நிறைய குழந்தைகள் விபரம் தெரியாத வயதில் பார்த்திருக்கும்.
இங்கே இரண்டு பிரத்யேக தன்மைகள் இருக்கிறது
ஒன்று இருபது வயதை கடந்த மகன் அக்காட்சியை பார்க்கிறான் இரண்டு அது அவன் இம்மண்ணில் உருவான கருவாண கணம். இது ஒரு இளைஞனின் மகனின் மனதில் உண்டாகும் விளைவுகள் என்னவாக இருக்கும்?
ஹரி புத்திசாலி மருத்துவப் படிப்பிற்கு இங்கிலாந்தில் தேர்வானவன்.மனநல மருத்துவர் என்ன ஆலோசனைகளை சொல்வார் அவர் தரும் ருந்து என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எல்லாம் துல்லியமாக அறிந்தவன்.
மீண்டும் ஒருமுறை அப்பா அம்மாவை அடிக்கிறார் அதேபோல உதிரம் கொட்டுகிறது உதவச்சென்ற ஹரி இடம்அம்மா கூறுகிறார் இதுதான் என் கடைசி மாதவிடாய் ஏற்கனவே முன்பின்னாக வந்து கொண்டிருக்கிறது என்று அப்பட்டமாக உடைக்கிறார்.
அம்மாவின் வெளிப்படைத்தன்மை யில் சற்று அதிர்ந்தாலும் உள்ளுக்குள் விடுதலையும் அதைத்தொடர்ந்து கசப்பையும் உணர்கிறான் ஹரி.
முற்றிலும் பேசப்படாத ஒரு கருவை தொட்டிருக்கிறார் எழுத்தாளர். நேர்கோட்டில் பயணிக்கிறது கதை. தெளிவான மொழி.
ஒன்று
இளமையின் பதட்டங்கள் நீங்கி திருமணமாகி குழந்தைகளுக்கு தந்தையான பின் இதே ஒளிப்பதிவை ஹரி பார்த்திருந்தால் இந்த அதிர்ச்சியை அடைந்திருப்பானா?
இரண்டு
நினைவு தெரிந்தது முதல் ஒருபோதும் அப்பாவுடன் இணக்கமாய் வாழாத ஹரி இந்த சம்பவங்களுக்குப் பிறகு அவருடன் நெருங்கி விடுகிறான் அதன் காரணம் என்ன?
மூன்று
ஒரே அறை மட்டும் கொண்ட பிரத்தியேகமான தனிப்பட்ட படுக்கையறை இல்லாத கோடான கோடி குடும்பங்கள் நிறைந்தது இந்த உலகம். ஒவ்வொரு நாளும் ஹரி அடைந்த மனச்சிதைவின் விதை கோடான கோடி குழந்தைகளுக்கு தூவப்பட்டு வருகிறதோ?
நான்கு இதே ஒளிப்படத்தை ஹரியின் சகோதரி பார்த்திருந்தால் என்ன எண்ணியிருப்பாள்?
ஐந்து
அந்த உடலுறவு காட்சியில் அம்மா இருக்கும் இடம் தெரியாமல் அடங்கி ஒடுங்கி படுத்திருந்தால் அம்மா மேல் பரிதாப உணர்ச்சியும் அப்பா மேல் கடும் கோபமும் ஹரிக்கு வந்திருக்குமா?
இக்கதை பேச விரும்புவது இந்த ஐந்தாவது புள்ளியான பெண்களை வெறும் துய்க்க வேண்டிய பண்டமாக கருதும் ஆண்மைய உலகின் ஆன்மைய சிந்தனை பற்றித்தான் என்ற எண்ணம் வலுவாக எழுகிறது
கதிர் முருகன்
அன்புள்ள ஜெ
கவி சிறுகதை சுருக்கமாகவும் ஒரு நிலைகுலைவை உருவாக்கும் விதமாகவும் இருந்தது. 1993 வாக்கில் நான் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது சாவுகளில் கானா பாடும் ஒருவரை பேட்டி எடுத்தேன். வாழ்க்கை முழுக்க சாவுவீடுகளில் பாடுபவரின் மனநிலை என்ன என்பதை அறிய முயற்சி செய்தேன். அவர் தன்னை ஒரு கவிஞன் என்றுதான் நினைக்கிறார் என்று தெரிந்தது.
அவருக்கு கண்ணதாசன் பிடித்தமானவர். ஆனால் பேசும்போதெல்லாம் வடசென்னையில் இருந்து அவரைப்போல ஏழையாக இருந்து பணக்காரர் ஆனவர்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். அதைப்பற்றி மட்டுமே பேசவிரும்பினார். குடித்து உடல்நலம் சீரழிந்திருந்தது. காறிக்காறித்துப்பிக்கொண்டே இருந்தார். அவர் அப்படி துப்பியது தாளாமல் நான் ஓடிவந்துவிட்டேன். அவர் துப்பிக்கொண்டே கதைசொல்வதுபோலவே இருந்தது மணி எழுதிய கவி.
எஸ்.கணேஷ்குமார்
அன்புள்ள ஜெ
இகுமியின் நறுமணம் கதையை வாசித்தபோது ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வந்தது.
ரொம்பநாளுக்கு முன்னால் வீட்டுக்கு ஒரு 90 வயசு தாத்தா வந்திருந்தார். அவருக்கு கண்ணும் சரியாகத் தெரியாது. என் தங்கைக்கு அப்போது 13 வயது. “பக்கத்திலே வா உன்னை பார்த்து ரசிக்கிறேன்” என்று தாத்தா கூப்பிட்டார். பக்கத்தில் அவள் போனதும் அருகே அணைத்து முத்தமிட்டு முகர்ந்தார். அதன்பிறகு அம்மாவிடம் வளரும் பெண்பிள்ளைகளுடைய மணம். அது சாகப்போகிறவனுக்கு அமிர்தம்போல” என்று சொன்னார்.
நான் அப்போது ஒருவிதமான அசூசையை அடைந்தேன். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் என் வீட்டில் எல்லாரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அந்த சம்பவம் நினைவிலேயே இருந்தது. இந்தக்கதை சட்டென்று அதைப்பற்றி நினைவுகளை மீட்டியது. ஒரு பெரிய பரவசத்தை அளித்தது. ஏனென்றால் எனக்கே 62 வயது ஆகிவிட்டது. அவர் சொன்னது என்ன என்று புரிந்துகொள்ளும் வயது. அருமையான கதை. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
மா.ராஜகோபாலன்
6.வில்லுவண்டி[ சிறுகதை] தனா
5.உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்
4.கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி
3.இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்
2.அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்
1.கன்னி- [சிறுகதை] ம.நவீன்
அவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்
தெய்வீகன்,நவீன் சிறுகதைகள்- கடிதங்கள்
இசூமியின் நறுமணம்-கடிதங்கள்
இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்
உதிரம்- கடிதங்கள்
கவி- கடிதங்கள்
கன்னி- கடிதங்கள்