விசித்திரமான குற்றம், தற்செயலாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. குற்றவாளி ஐம்பது வயதான, துளுபேசும் பிராமணர். கிருஷ்ண பட் என்றுபெயர். சற்றே கூன்கொண்ட ஒல்லியான உடம்பு. குழிந்த கன்னங்களும், முன்னுந்திய பற்களை இழுத்து மூடிக்கொண்டமையால் சற்றே குரங்குச்சாயல் வந்துவிட்ட வாயும், பரந்த மூக்கும் கொண்ட உடுப்பி முகம்.
அவரை உள்ளே அழைக்கும் வரை நான் குற்றத்தைப் பற்றி மிகத்தீவிரமான நிலைபாடு கொண்டிருந்தேன். எந்த நிர்வாக அதிகாரியும் மன்னிக்கமுடியாத குற்றம். ஊடகங்களுக்கு தெரிந்தால் தேசிய அளவில் நாறிப்போகும். குற்றவாளியை முன்னுதாரணமாகத் தண்டிக்கவேண்டும், ஆனால் குற்றம் சம்பந்தமாக எச்செய்தியும் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று எனக்கு மேலிடத்திலிருந்து ஆணை வந்திருந்தது. வேறேதேனும் ஒரு காரணத்தை உருவாக்கி தண்டிக்கவேண்டும். நிரந்தர வேலைநீக்கம் கூட பரிசீலிக்கப்படலாம்.
காசர்கோடு மங்களூர் சாலையில் கும்பளா என்ற ஊரில் வசித்துவந்த ஹாஜி தெங்குவீட்டில் அப்துல் ரஹ்மான் என்பவர் சென்ற மாதம் மறைந்தார். எண்பத்திநான்கு வயது. மிகப்பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர், பிறவிப் பணக்காரர். அவருடைய மகன்கள் இருவருமே மும்பையிலும் சௌதி அரேபியாவிலும் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர் மட்டும் இங்கே தனியாக வேலைக்காரர்களின் பராமரிப்பில் இருந்தார். அவர் தங்கியிருந்த பாரம்பரிய வீடு கடலோரம் ஒரு தென்னந் தோப்புக்குள் இருந்தது.
அவர் இறந்தபின் அவருடைய தொலைபேசி எண் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அதைத் திரும்ப எடுப்பதற்காகச் சென்ற டெம்பரரி லைன்மேன் பிரபாகரன் ஒரு விஷயத்தைக் கவனித்தான். அந்த வீட்டுக்கு இன்னொரு தொலைபேசி எண் தொடர்பும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆவணங்களின்படி அந்த வீட்டுக்கு ஒரு தொலைபேசி இணைப்புதானே எனறு அவன் உறுதிசெய்து கொண்டான். அங்கிருந்த ஒரு ஃபோன் அந்த எண்ணுடன் தொடர்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்படியென்றால் இன்னொரு எண் எங்கே?
பிரபாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜூனியர் எஞ்சீனியர் சாபு ஆப்ரகாம் அங்கே சென்று அந்த வீட்டை ஆராய்ந்தார். உண்மையில் இரண்டு இணைப்புக்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அருகிலிருந்த டிஸ்ட்ரிப்யூஷன் பாக்ஸிலிருந்தே லைன் இழுக்கப்பட்டிருந்தது. அந்த ஃபோனின் இணைப்பு முனை ஹாஜியின் படுக்கையறைக்குள் இருந்தது. ஆனால் அங்கே ஃபோன் ஏதும் இல்லை. அதை இணைத்திருந்த ஃபோன் எங்கே?
ஒன்றும் புரியாமல் சாபு ஆப்ரகாம் அந்தச் செய்தியை ஏ.இ.ராமச்சந்திரன் நாயருக்கு தெரிவித்தார். அவர் இறங்கி விசாரணை செய்தார். ஹாஜி அப்துல் ரகுமானின் மகன்கள் இருவருக்கும் உண்மையிலேயே ஒன்றும் தெரியவில்லை. சென்ற இரண்டு ஆண்டுகளில் ஒருமுறைகூட அவர்கள் அங்கே வரவில்லை என்றார்கள்.
ஹாஜிக்கு மூன்று மகள்கள். மூவருமே துபாயில் இருந்தார்கள். அந்த வீடு ஆமினாம்மா என்ற தாட்டியான வலுவான கிழவியால் பராமரிக்கப்பட்டது. அவளே சமையற்காரி. அவளுக்கும் ஒன்றும் தெரியவில்லை. அவளுக்கு கல்வியறிவே இல்லை. எதை கேட்டாலும் “னிக்கு ஒந்நும் அறியில்ல ன்றே ரப்பே!” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு உதவியாக ஏழு வேலைக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் வீட்டையும் தோட்டத்தையும் பராமரித்தனர். பொருட்களை வாங்கிவந்தனர். காவல்காத்தனர். அனைவருமே படிப்பறிவற்ற உலகம் தெரியாத உள்ளூர் முஸ்லீம்கள். அவர்கள் எவரும் வாழ்நாளில் ஒருமுறைகூட ஒரு ஃபோனை காதில் வைத்தவர்கள் அல்ல.
ஹாஜியின் மகன் தெங்குவீட்டில் முகமது ராஃபி மும்பையில் ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தை நடத்திவந்தார். நூற்றுக்குமேல் வேலைக்காரர்களும் பதினொரு அலுவலகங்களும் கொண்ட அந்நிறுவனம் ஒருநாள்கூட அவரில்லாமல் நடக்காது. அவருக்கு எதற்குமே நேரமில்லை. மாதத்திற்கு ஒருமுறை தந்தையுடன் பேசுவதோடு சரி.
அப்துல் ரஹ்மான் சாகிபின் இன்னொரு மகனாகிய தெங்குவீட்டில் முகமது இப்ராகீம் தந்தையின் கபரடக்கத்திற்கு வந்தபின் உடனே சென்றுவிட்டார். அவர் சௌதி அரேபியாவில் ஒரு பெரிய ஷாப்பிங் மால் உரிமையாளர். ஒரு சூப்பர் மார்க்கெட்டும் நடத்தினார். அவரும் அவருடைய தொழிலால் கவ்வப்பட்டவர். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை அவருக்கு ஃபோன் வந்துகொண்டே இருந்தது. வீட்டில் ஃபோனருகிலேயே அமரவேண்டிய நிலை.
முகமது ராஃபி அவரும் உடனே மும்பைக்குக் கிளம்பவேண்டும் என்றார். இல்லை, விசாரணை நடத்தியாக வேண்டும், சொத்து உங்கள் பெயருக்கு வரப்போவது, நீங்கள்தான் பொறுப்பு என்று சொல்லி நிறுத்தி வைத்தனர். அவர் மங்களூரில் ஒரு ஓட்டலில் தங்கி விசாரணைக்கு முழு ஒத்துடைப்பு கொடுத்தார். ஓரிரு விசாரணைகளுக்கு பின் அவரை போகச் சொல்லிவிட்டார்கள்.
ராமச்சந்திரன் நாயர் முகமது ராஃபி முன்னிலையில் அந்த வீட்டை ஆராய்ந்தபோது அந்த இன்னொரு ஃபோனை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அந்த லைன் அறுபட்டதுபோல கிடந்தது. அந்த போன் ஹாஜியின் படுக்கையறையில் இருந்திருக்கவேண்டும். ஆனால் அதை எடுக்க முடியவில்லை.
அந்த இரண்டாவது இணைப்பு எண் எவருடையது? ராமச்சந்திரன் நாயர் டெலிஃபோன் எக்சேஞ்சில் ஆராய்ந்தபோது ஐந்தே நிமிடத்தில் அதைக் கண்டுபிடிக்க முடிந்தது. அது ஒரு பேரலல் இணைப்பு. அதிலிருந்த எண் சீரோ.
ஸ்ட்ரௌஜர் எக்ஸேஞ்சில் ஸீரோவை ஒரு பொதுவான எண்ணாக வைத்திருப்பார்கள். அது டெஸ்டிங் செய்வதற்குரிய எண். எக்ஸேஞ்சில் உள்ள எந்த எண்ணில் பேச்சு ஓடினாலும் அதில் கேட்கும்.
பொதுவாக அன்றெல்லாம் எந்த தொலைபேசிப் பேச்சையும் ஊழியர்கள் கேட்கமுடியும். ஊழியர்கள் விரும்பினால் உள்ளே சென்று அவர்களிடம் பேசமுடியும். உங்கள் இணைப்பு மூன்று நிமிடம் ஆகிவிட்டது, ஆறு நிமிடம் ஆகப்போகிறது, இன்னும் ஒரு நிமிடம்தான் உள்ளது என்ற அறிவிப்புகளை அளிக்கலாம்.
ஒர் அழைப்பு எக்காரணம் கொண்டும் ஒன்பது நிமிடங்களுக்கு மேல் போகக்கூடாது என்பது அன்றைய விதிமுறை. தொலைபேசி அழைப்புகள் செலவேறியதாக இருந்த காலம். மூன்று நிமிடம் உள்ளூரில் சாதாரண அழைப்புக்கு ஒரு ரூபாய் ஆகும், அதாவது ஒரு அளவுச்சாப்பாட்டின் விலை. டெலிஃபோன் என்பதே பணக்காரர்களின் கருவி, அம்பாசிடர் கார் போல ஒரு கௌரவச்சின்னம்.
டெலிஃபோன் வேண்டுமென்றால் பதிவு செய்துவிட்டு ஆறாண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். அல்லது வேறு எவராவது வாங்கி அவர் பெயரில் வைத்திருக்கும் எண்ணை பகிடி என்னும் கூடுதல் பணம் கொடுத்து சட்டவிரோதமாக வாங்க வேண்டும். அதற்கு அந்த இன்னொருவர் உங்கள் விலாசத்தில்தான் தங்கியிருக்கிறார் என்பதற்கான போலி ஆவணங்களை தயாரிக்க வேண்டும். லைன்மேனின் உதவியும் தேவை.
எந்த ஆவணமும் இல்லாமல் ஒரு ஹாஜிக்கு இணைப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதுவும் எல்லா எண்களும் பேசுவதைக் கேட்கும் ஸீரோ என்னும் எண். பகலில் அதில் எவரேனும் எண்களை சோதனை செய்து கொண்டிருப்பார்கள். இரவில் அதில் எவரேனும் பேசுவதைக் கேட்கலாம்.
நான் சந்தேகப்பட்டது அப்துல் ரஹ்மான் ஹாஜியின் நிழல் உலகம் பற்றி. அவருடைய குடும்பம் பழங்காலம் முதலே கடல்வணிகம் செய்து வந்தது, இந்தியச் சட்டத்தின்படி அது பிறகு கள்ளக்கடத்தல் என்று ஆகியது. அது மங்களூர் முதல் கோழிக்கோடு வரை பரவியிருக்கும் ஒரு நிழல்உலகம். பொதுவாகவே சட்டம் அதை பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. அவர்கள் பொதுமக்களில் எவரையேனும் தாக்கினாலொழிய அவர்கள் செய்திக்கே வருவதில்லை.
ஆனால் அப்துல் ரஹ்மான் சாகிப் அவருடைய குடும்பத் தொழிலில் இருந்து அகன்று முப்பதாண்டுகளுக்கும் மேல் ஆகிறது என்றார்கள். அவர்கள் வளைகுடா சார்ந்த வணிகங்களுக்கு திரும்பிவிட்டனர். ஹாஜி சென்ற நான்காண்டுகளாக உடல்நலமில்லாமல் இருந்தார். பெரும்பாலும் படுக்கையிலேயே இருந்தார். அவருக்குப் பக்கவாதம் இருந்தது. நான்காண்டுகளுக்கு முன் ஒரு கையும் காலும் இழுத்துக் கொண்டது. அதன்பிறகு இடைக்குக் கீழ் அசைவில்லாமல் ஆகியது.
அவர் மிகுந்த எடை கொண்டவர். மிகப்பெரிய உடல். இந்தப் பகுதியில் நெடுங்கால ஆப்ரிக்க தொடர்புகள் இருந்தன. ஹாஜியின் படத்தை பார்த்தால் அவரை ஒரு எத்தியோப்பியர் என்றே சொல்லமுடியும். அவருடைய இரண்டாவது மகனும் ஆப்ரிக்கச் சாயல் கொண்டவர். அந்த எடை அவரை படுக்கையிலிருந்து எழ முடியாமலாக்கியது.
ஹாஜியின் அறையைச் சோதனையிட்ட போது கிடைத்த ஒரு சிறிய மைக்ரோஃபோன் கிடைத்தது. அதில் அந்த டெலிஃபோன் கேபிளை இணைப்பதற்கான போர்ட் இருந்தது. அதைக் கொண்டுவந்து டெலிஃபோன் கேபிளுடன் இணைத்த போது டயல்டோன் ஒலிப்பெருக்கியில் ஒலிப்பதுபோல அறையை நிறைத்து ஒலித்தது. பேச்சுக்கள் ரேடியோ போல முழங்கின. ஹாஜி அதைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்
அவர் தொலைபேசித்துறையில் எவருடையவோ உதவியுடன் ஃபோன்களை ஒட்டுக் கேட்டிருக்கலாம் என்று ஜிஎம் சந்தேகப்பட்டார். பெரும்பாலும் அவர்களின் எதிர்குழுவாக இருந்த மெட்டால கோவிந்த ரையின் தம்பியான மெட்டால கேசவ ரையின் குழுவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இருபத்தேழு ஃபோன்கள் இருந்தன. அதைத்தவிர போலீஸ் அதிகாரிகளின் எண்கள் பதினெட்டு. கடலோரக் காவல்துறையின் எண்கள் எட்டு. என்ஃபோர்ஸ்மெண்ட் துறைக்கு ஆறு எண்கள். அரசுத்துறை எண்கள் மட்டும் மொத்தம் நூறுக்குமேல்.
உளவறிதல் நடந்திருந்தால் அச்செய்தியை முதலில் என்ஃபோர்ஸ்மெண்ட் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அதில் உடனே பாதிக்கப்பட விருப்பவர் டெலிஃபோன் எக்சேஞ்சின் பொறுப்பிலிருக்கும் அதிகாரியான ஜூனியர் எஞ்சீனியர் சாபு ஆப்ரகாம், அவருக்கு உயர்பொறுப்பில் இருக்கும் ஏ.இ ராமச்சந்திரன் நாயர் ஆகியோர். அது செய்தியாக வெளிவரும் என்றால் மேலும் தலைகள் உருளும்.
ஆகவே கீழிருக்கும் ஒரு தலையை மட்டும் உருட்டி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நான் ஆணையிடப்பட்டிருந்தேன். எல்லா முதற்கட்ட விசாரணைகளும் சென்று நின்றது கிருஷ்ணபட் என்பவரில். அவர்தான் அந்தப்பகுதியின் லைன்மேன். மாற்றமே இல்லாமல் பத்தொன்பது ஆண்டுகளாக அப்பகுதியின் லைன் மேனாக இருந்துவந்தார். ஹாஜி இறந்தபின் அவருடைய டெலிபோன் திரும்ப ஒப்படைக்கப்பட்ட போது கிருஷ்ண பட் லீவிலிருந்தார்.
அன்றைய டெலிபோன் தொடர்பு பெரும்பாலும் தலைக்குமேலே செல்லும் இரும்பு மற்றும் செம்புக் கம்பிகளால் ஆனது. அவை வலுவான மட்டை விழுந்தாலே அறுந்துவிடக் கூடியவை. கொடிகள் படர்ந்தால் லூப் ஆகிவிடுபவை. ஆகவே அந்த நிலத்தை நன்கறிந்தவர்களால் தான் கம்பிகளைச் சரியாகப் பேணமுடியும். பெரும்பாலான லைன்மேன்கள் அந்த கம்பிகளை தூண்கட்டி நட்டவர்களாகவே இருப்பார்கள். விலங்குகள் ‘டெரிட்டரி’ பாதுகாப்பது போல அவர்கள் தங்கள் பகுதியைக் காபந்து செய்வார்கள்.
கிருஷ்ண பட் உள்ளே வந்தபோது அவரிடம் எந்த தயக்கமும் தென்படவில்லை. குற்றம் செய்தவருக்குரிய தயக்கம் மட்டுமல்ல, குற்றம் சாட்டப்பட்டவருக்குரிய பதற்றம்கூட இல்லை. கைகூப்பி வணங்கினார். உட்காரும்படிச் சொன்னேன். நாற்காலியில் ஒடுங்கி அமர்ந்தார். மிகச்சிறிய மெலிந்த உருவம். ஏதாவது கைவிடப்பட்ட கோயிலில் இருண்ட கருவறையில் பூசாரியாக நின்றிருக்க வேண்டிய தோற்றம்.
நான் அவரை கூர்ந்து பார்த்தேன். நான் ஏற்கனவே படித்திருந்த ஆவணங்களை அப்போதுதான் பார்ப்பதுபோல புரட்டி கூர்ந்து நோக்கினேன். அதெல்லாமே எங்கள் விசாரணை தந்திரங்கள். ஒரு பேனாவால் சிறு சொற்களை குறிப்பேட்டில் எழுதிக்கொண்டு நிமிர்ந்து பெருமூச்சுடன் “ராமச்சந்திர பட் கிருஷ்ண பட். ஹெப்பார் என்று குடும்பப்பெயர். நீங்கள் மாத்வர்களா?” என்றேன்.
“இல்லை, நாங்கள் ஸ்மார்த்தர்கள்” என்றார்.
“போற்றிகளா?”
“இல்லை, ஹெப்பார் என்றால் தேருடன் சம்பந்தப்பட்டவர்கள். கோயில் பூசை செய்வதுண்டு. அப்பா கோயிலில் வேலை பார்த்தார்.”
“ஓகோ” என்றேன். “உங்களுக்கு அப்துல் ரஹ்மான் ஹாஜியை எப்படித் தெரியும்?”
“நான் டெம்பரரி மஸ்தூராக வந்ததே இங்கேதான். அவர் வீட்டுக்கு ஃபோன் பழுதுபார்க்க போனபோதே தெரியும்.”
“எப்போது?” என்றேன். “ஏறத்தாழ சரியாக ஆண்டைச் சொல்லமுடியுமா?”
“1959, தேதியையே சொல்லமுடியும், அது ரம்ஸான் நாள்.”
“என்ன நடந்தது?”
“நான் அதற்கு முன் இரண்டு ஆண்டுகள் மங்களூரில் வேலை பார்த்தேன். அன்றைக்கு மங்களூரும் காசர்கோடும் ஒரே ரீஜியன். அங்கே நான் கூலிவேலை தான் செய்தேன். இங்கே அப்போதுதான் நிறைய ஃபோன்கள் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். ஆகவே இங்கே மாற்றினார்கள்.”
“டெம்பரவரி மஸ்தூரா?”
“ஆமாம், ஒரு மணிநேரத்திற்கு நாற்பத்தைந்து பைசா சம்பளம். ஒருநாளுக்கு இரண்டேகால் ரூபாய்…”
“அன்றைக்கும் அது குறைவான சம்பளம்தான்.”
“ஆமாம், ஆனால் போகிற இடத்தில் ஐம்பதுபைசா ஒரு ரூபாய் என்று கொடுப்பார்கள். ஒருநாள் எப்படியும் மூன்று ரூபாய் கிடைத்துவிடும். ஒருநாளுக்கு ஐந்தாறு ரூபாய் என்றால் அன்று பெரிய சம்பளம். அதில்பாதிகூட அன்று எந்தக்கூலி வேலைக்கும் கிடைக்காது.”
“ஹெப்பார் நீங்கள் ஏன் லைன்மேன் வேலைக்கு வந்தீர்கள்?”
“என் அப்பா வைதிகர்தான்… கோயில் வேலை பார்த்தார். யக்ஷகானம் ஆடுவார். எனக்கும் சொல்லிக் கொடுத்தார். அவருக்கு எட்டு குழந்தைகள். அவர் கிட்டத்தட்ட பட்டினியால்தான் செத்தார். சாகும்போது என் பிள்ளைகளை பசிக்கவிடாதே கிருஷ்ணா என்றுதான் சொன்னார்” என்றார் கிருஷ்ண பட்.
“நான் ஓட்டலில் வேலை பார்த்தேன். இரவும் பகலும் வேலை. ஆனால் ஒருநாளுக்கு ஒரு ரூபாய்தான் கிடைக்கும், மிஞ்சிய சோறும் குழம்பும். அப்போதுதான் அங்கே சாப்பிடவந்த அனந்தபை சார் நீ டெலிபோனில் சேர், இரண்டே ஆண்டுகளில் லைன்மேன் ஆகலாம். மாசச்சம்பளம் கிடைக்கும் என்று சொன்னார். நான் சேர்ந்துவிட்டேன்.”
“நீங்கள் யக்ஷகானா ஆடுவதுண்டா?”
“இல்லை.”
“ஏன்?”
“இங்கே அந்த ஆட்டம் இல்லை. ஆனால் நான் யக்ஷகானா எழுதியிருக்கிறேன்.”
“கன்னடத்திலா?”
“கன்னடத்திலும் துளுவிலும். உஷாபரிணயம், சீதாகல்யாணம், கார்த்த வீரியார்ஜுனம், தக்ஷயாக வைபவம் ஆகியவை நானே இயற்றியவை. கதகளி ஆட்டக்கதையான நிழல்குத்தை தழுவியும் எழுதியிருக்கிறேன்.”
“ஓகோ” என்றேன். என் பார்வையே மாறிவிட்டது. இது நூறுரூபாய் இருநூறு ரூபாய் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு செய்த ஒரு ஊழல் அல்ல. வேறேதோ ஒன்று.
“அன்றைக்கு நீங்கள் மட்டும்தான் அப்துல் ரஹ்மான் ஹாஜியின் வீட்டுக்குப் போனீர்களா?” என்றேன்.
“ஆமாம், என் ஏரியாவை பார்த்துக் கொண்டிருந்தவர் அப்துல் நாசர். அன்றைக்கு ரம்சான், ஆகவே அவர் லீவு. அன்றைக்கு கும்பளா முதல் மங்களூர் வரை ஒரே சர்வீஸ் ஏரியா, ஒரே லைன்மேன் தான். மொத்தமே நாற்பத்தாறு நம்பர்தானே?”
“சரி.”
“அன்றைக்கு அப்துல் காக்கா லீவு. ஆகவே அன்றைக்கிருந்த மெயிண்டெனன்ஸ் கிளார்க் குமாரன் நம்பியார் என்னைக் கூப்பிட்டு கும்பளா பகுதியில் ஒரு ஃபோன் கிடைக்கவில்லை, முக்கியமான நம்பர், தவிர்க்க முடியாது, போய்ப்பார் என்றார். லைன் அறுந்திருந்தால் கட்டிவிடு. வேறெந்த பிரச்சினையாவது இருந்தால் ஃபோனை மாற்றிவிடு என்று சொல்லி கையோடு கொடுத்தனுப்பினார்.”
“அது அப்துல் ரஹ்மான் ஹாஜியின் வீடு இல்லையா?”
“ஆமாம், மிகப்பெரிய வீடு. தெங்குவீட்டில் மன்ஸில் என்று பெயர். வீட்டைச்சுற்றி பெரிய தென்னந்தோப்பு. வீட்டுக்கே சொந்தமான படகுத்துறையும் ரோட்டிலிருந்து தனிரோடும் இருந்தது” என்று கிருஷ்ண பட் சொன்னார்.
நான் சைக்கிளில் பார்த்துக் கொண்டே போனேன். ஒரு மரம் விழுந்து கம்பி அறுந்திருந்தது. அதைக் கட்டினேன். பங்களாவைச் சுற்றி ஏராளமான ஆட்கள் கூடியிருந்தார்கள். நூறு இருநூறுபேர் இருக்கும். ரம்ஸான் கொண்டாட வந்தவர்கள். ஆனால் முஸ்லீம்கள் மட்டுமல்ல. இந்துக்கள்தான் உண்மையில் அவர்களில் பெரும்பகுதி.
எல்லாருக்கும் உட்கார்வதற்கு பெஞ்சு போடப்பட்டிருந்தது. பெஞ்சுகளில் ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். பெண்கள் ஆங்காங்கே தென்னை மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்கள். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. பெரிய மலைத்தேனீக் கூடு போலிருந்தது அந்த வீடு.
நான் பார்த்தபோது எல்லாருமே புதிய ஆடைகள் அணிந்திருந்தார்கள். என்ன நடக்கிறது என்று சுற்றி கூர்ந்து பார்த்தேன். கைவள்ளங்களிலும் நடந்தும் வந்தவர்களை அழைத்துப் போய் புதிய ஆடைகளை கொடுத்தார்கள் வேலையாட்கள். அவற்றை அணிந்து கொண்டு பழையவற்றை சுருட்டி அங்கே உரப்புரையில் வைத்துவிட்டு அவர்கள் போய் அமர்ந்தார்கள்.
அன்றைக்கெல்லாம் தையல் இல்லாத ஆடைகள்தான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேட்டி மேல்வேட்டி. பெண்களுக்கு தொளதொளப்பான சட்டை. ஆண்களுக்கான ஆடைகள் எல்லாமே வெள்ளைநிறம். பெண்களுக்கு இளஞ்சிவப்பு நிறம். அந்தத் தோப்பு முழுக்க பறவைக் கூட்டங்கள் போல அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
நான் ஃபோனை சோதனையிட வந்திருக்கிறேன் என்று சொன்னேன். ஒரு வேலைக்காரன் உள்ளே கூட்டிக்கொண்டு போனான். நான் ஃபோனை சரிசெய்தேன். “சாகிபிடம் கையெழுத்து வாங்கவேண்டும்” என்று சொன்னேன். அன்றைக்கு அப்படி ஒரு வழக்கம் இருந்தது.
“அப்படித்தான் அவரை பார்த்தீர்கள், இல்லையா?”
“ஆமாம். அவருடைய தோற்றம் இப்போதும் நினைவிலிருக்கிறது. ஆறரை அடி உயரம். பெரிய உடம்பு. கைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுவன் அளவுக்கு இருக்கும்… எப்போதும் வெண்மையான நீண்ட அங்கியும் கால்சராடும் அணிந்திருப்பார்” என்றார் கிருஷ்ண பட். “அவரை எல்லாரும் கறுத்தசாகிப் என்றுதான் அழைப்பார்கள்.”
அப்துல் ரஹ்மான் ஹாஜி ஒரு பெரிய அறையில் அமர்ந்து வந்திருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். எல்லாருமே பட்டு அங்கி போட்டு பட்டுக்குல்லாய் போட்ட பெரிய மனிதர்கள். அவர்களெல்லாம் நாற்காலிகளிலும் பெஞ்சுகளிலும் அமர்ந்திருக்க அவர் மட்டும் தரையில் கால்நீட்டி அமர்ந்திருந்தார்.
அன்றைக்கு எனக்கு அது பெரிய ஆச்சரியம், பிறகு தெரிந்தது ஹாஜி சாகிப் எப்போதுமே தரையில் அமரவே விரும்புவார் என்று. அதைவிட படகில் அமர பிடிக்கும். சும்மாவே நீர்மேல் நின்றிருக்கும் படகில் போய் உட்கார்ந்து கொள்ள ரொம்பப் பிடிக்கும்.
வேலைக்காரன் அவரிடம் கொண்டு போய் ரசீதை கொடுத்ததும் அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்து புன்னகை செய்தார். அவருடைய பற்கள் மிகப்பெரியவை. அவர் புன்னகைத்தாலே சிரிப்பதுபோல இருக்கும். அவர் சிரிக்காவிட்டாலும் முகம் சிரித்துக் கொண்டே இருக்கும். பெரிய உருண்ட மினுமினுப்பான கண்கள். அவை எப்போதுமே கொஞ்சம் ஈரமாக இருப்பதுபோல தோன்றும். என்னைப் பார்த்து அவர் சிரித்த அந்த தருணத்தை நான் இன்றைக்கு வரை மறக்கவில்லை.
அவர் எனக்கு பணம் தரவில்லை. நான் அதை அப்போது எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக பணம் எதிர்பார்ப்பேன். கிடைக்கும் வரை நின்றிருப்பேன். சிலசமயம் மெல்ல நினைவுறுத்துவதும் உண்டு. அன்றைக்கு அவருடைய அந்த சிரிப்பே போதுமானதாக இருந்தது.
அவர் “ரொம்ப உபகாரம். அவ்வளவுதூரம் வந்து செய்து கொடுத்தீர்கள். ரம்சானும் அதுவுமாக நம்பர் அறுந்துவிட்டது. இல்லையென்றால் கூப்பிட்டிருக்க மாட்டேன்” என்றார்.
நான் ஒன்றும் சொல்லவில்லை. அப்படி எவரும் நன்றி சொல்வதில்லை. அதற்கு என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. பொதுவாக எனக்குப் பேசவே தெரியாது.
நான் வெளியே வந்தேன். சைக்கிளில் ஏறப் போகும்போது வேலைக்காரன் பின்னால் வந்து ஐந்து ரூபாய் தந்தான். அவர் எப்போதுமே இன்னொருவர் முன்னால் வைத்து எந்த கொடையும் செய்வதில்லை. பெறுபவர் குன்றிவிடுவார் என நினைப்பார். அது ஒரு ரகசியச் செயல்பாடாகவே நடக்கும். பெற்றுக் கொள்பவனே சொன்னால்தான் உண்டு.
வேலைக்காரன் கூடவே ஒரு வேட்டி மேல்துண்டு ஆகியவற்றை ஒரு பையில் போட்டு தந்து “சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும், சாகிப் சொன்னார்” என்றான்.
“இல்லை, நான் சாப்பிடுவதில்லை” என்றேன்.
“இல்லை, சாகிப் சொன்னார். சாப்பிடாமல் போகக்கூடாது.”
“ஏன்?”
“நான் சாப்பிடுவதில்லை.”
“பெருநாளில் சாப்பிடாமல் போகக்கூடாது” என்றான்.
“சாப்பிடமாட்டேன்… மன்னிக்கவேண்டும்.”
“இருங்கள், நான் சாகிப்பிடம் சொல்லி விடுகிறேன்”
சற்று நேரத்தில் உள்ளிருந்து சாகிப்பே வந்தார். ஒரு குட்டியானை போல நடந்து வந்து என்னை நோக்கி புன்னகைத்து “ஏன் சாப்பிடாமல் போகிறீர்கள்? பிரியாணி சாப்பிடலாமே?” என்றார்.
“நான் பிராமணன்” என்றேன்.
“பிராமணனா?” என்றார். ஒரு பிராமண லைன்மேனை அவர் அப்போதுதான் பார்க்கிறார் என்று தெரிந்தது.
“நம்பூதிரியா?” என்று மீண்டும் கேட்டார்.
“இல்லை, ஹெப்பார். மங்களூரிலிருந்து வருகிறேன்.”
“இருங்கள். டேய், திருமேனியை அங்கே கொண்டு உட்காரவை” என்றார்.
என்னை ஒரு கொட்டகையில் அமர வைத்தனர். கொஞ்ச நேரத்தில் வாழைப்பழமும் இளநீரும் வந்தது.
பதினொரு மணிக்கெல்லாம் அங்கே சாப்பாடு ஆரம்பித்துவிட்டது. பெரிய பந்தல்போட்டு வரிசையாக உட்காரவைத்து ஆட்டுப்பிரியாணியும் ஆட்டுக்கறியும் பரிமாறினார்கள். மக்கள் வரிசையாக உள்ளே போனார்கள்.
நான் அப்போது கவனித்த ஒன்று இருந்தது, அதைப்போன்ற ஒன்றை அதற்குப்பிறகு கூட பார்த்ததில்லை. கறுத்தசாகிப் பந்தல் வாசலில் நின்று ஒவ்வொருவரையாக மூன்றுமுறை கட்டித்தழுவி உள்ளே அனுப்பினார். எல்லாரிடமும் ஒருசில சொல்லாவது பேசினார். சின்னப்பையன்களின் தலையை தட்டினார். பெண்களுக்கு தனி பந்தி. அங்கே அவருடைய பீவி அனைவரையும் வரவேற்றார்.
அங்கே எவருக்கும் தனிப்பந்தி இல்லை. எவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பளபளக்கும் பியூக் காரில் வந்தவர்களும், நடந்து வந்தவர்களும், முஸ்லீம்களும், இந்துக்களும், ஆற்றுக்கரையில் வாழும் புலையர்களும் ஓரிரு மலைக்குறவர்களும் எல்லாரும் ஒரே வரிசையில் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டனர். அவர்களுடன் அமர்ந்துதான் கறுத்த சாகிப்பும் சாப்பிட்டார்.
அந்த விருந்தை நான் ஒரு பழைய மரத்தொட்டிமேல் ஏறி நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். மனிதர்கள் சாப்பிடுவது ஒரு யாகமாக நிகழமுடியும் என்று அப்போதுதான் பார்த்தேன். நான் பல யாகங்களை பார்த்திருக்கிறேன். அங்கே மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாக பிரிக்கப்பட்டிருப்பார்கள்.
சாகிபின் பந்தியில் உணவு அள்ளி அள்ளி பரிமாறப்பட்டது. ஒருவர் கூட கேட்கும்படி ஆகவில்லை. வெறிகொண்டவர்கள் போல சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள். பின்பக்கம் ஒரு பெரிய சமையல் கொட்டகை. அங்கே பனம்பாயில் பிரியாணியை அள்ளி அள்ளி கொட்டினார்கள். குன்றுபோல. ஆமாம், ஆளுயர அன்னமலைகள். ஆவிபறந்தது அவற்றில். நாயர்சார், அது கார்த்தவீர்யார்ஜுன மகாப்பிரபுவின் அன்னசபை போல் இருந்தது.
சற்றுநேரத்தில் அங்கே இருந்த ஒரு மங்களூர் பிராமணன் ஒரு சம்புடத்தில் எனக்கு சாப்பாடு கொண்டு வந்தான். சோறு குழம்பு கறிகள். “மன்னிக்கவேண்டும், கண்டிப்பாக நெய்போட்ட பருப்புப் பாயசம் வேண்டும் என்று கறுத்தசாகிப் சொன்னார். ஆகவே கொஞ்சம் தாமதமாகிவிட்டது” என்று அவன் சொன்னான்.
ஒவ்வொருவரும் கறுத்த சாகிப்பிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். நான் அவரிடம் விடைபெறும்போது “சாப்பிட்டீர்களா?” என்று கேட்டார்.
“ஆமாம், நல்ல சாப்பாடு” என்று சொன்னேன்.
“நீங்கள் பிரியாணிக்குப் பதிலாக பாயசம்தான் சாப்பிடுவீர்கள் என்று சொன்னார்கள்” என்றார்.
நான் புன்னகைத்தேன். அவர் என்னைத் தழுவி விடைஅளித்தார். நான் திரும்பச் செல்லும்போது அந்த இடவழி, அந்த சாலை, அந்த தோப்புகள் எல்லாமே எனக்கு இனிய இடங்களாக ஆகிவிட்டன. இன்றுவரை அப்படித்தான்.
அன்று தொடங்கியது அந்த உறவு. அவர் வீட்டிலும் சுற்றியிருக்கும் இடங்களிலுமாக அன்றைக்கு பதினெட்டு நம்பர்கள் இருந்தன. ஆகவே வாரமொரு முறையாவது போக வேண்டியிருக்கும். எப்போதுமே நான் போனது அவருக்கு ஒரு உதவியைச் செய்யத்தான் என்று அவர் பேசுவார். என்னை நண்பனாக நடத்துவார். அவர் பணம் தருவது அவருக்கே தெரியாது என்று எனக்கே தோன்றும்படி இருக்கும்.
நான் கறுத்த சாகிப்பின் வீட்டில் மிகமிக விரும்பியதே அங்கே நடக்கும் மாபெரும் விருந்துகளைத்தான். எந்த விருந்தானாலும் அது எல்லாருக்குமாகத்தான். எந்தப் பந்தியானாலும் அது மனிதர்கள் அனைவருக்குமாகத்தான். மாதம் இரண்டு விருந்தாவது நடக்காமலிருக்காது. விருந்து என்று தெரிந்தாலே போய்விடுவேன். எங்காவது ஏறி நின்று மக்கள் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருப்பேன்.
மக்கள் எப்படிச் சாப்பிடுகிறார்கள்! யக்ஷகானத்தில் அன்னசம்யோகம் என்று சாப்பாட்டைச் சொல்கிறார்கள். உடலும் சாப்பாடும் அன்னம் என்றுதான் சொல்லப்படுகின்றன. அன்னம் என்றால் பிசிக்ஸில் மேட்டர் என்கிறோமே அது. அன்னம் அன்னத்தை கண்டுகொள்கிறது, அன்னம் அன்னத்துடன் இணைகிறது, அன்னம் அன்னத்தால் நிறைகிறது. பூமி மீது இருக்கும் எல்லா உயிரும் சேர்த்து ஒரே அன்னம்தான்.
காலிப்பானைகளுக்கும் குடங்களுக்கும் ஒரு பதற்றம் இருக்கிறதைப்போல தோன்றுவதில்லையா சார்? அவை வாய் திறந்து அலறுகின்றன. குருவிக்குஞ்சுகள் வாய்திறந்து எம்பிக்குதிப்பதுபோல. தண்ணீரை அள்ளி ஊற்ற ஊற்ற இன்னும் இன்னும் என்கின்றன. அதன்பின் நிறையும் ஓசை. அது ஒரு பெருமூச்சு. ஓம் என்ற ஓசை அது.
நாயர் சார், அங்கே மனிதர்கள் அப்படி சாப்பிடுவார்கள். பரவசமாக சாப்பிடுவார்கள். பட்டினிக்காரர்கள் வெறிகொண்டு அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள். சின்னப்பிள்ளைகள் ருசித்து ருசித்து தலையாட்டி சாப்பிடும். சில சின்னப்பிள்ளைகள் ருசியான ஒரு துண்டு கிடைத்தால் அதை எடுத்து அவற்றின் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ ஊட்டும் பாருங்கள் நான் கைகூப்பி அழுதுவிடுவேன். அன்னத்தைக் கொடுக்கும் மனிதனைப்போல அழகானவன் யார் சார்?
ஒரு ஐந்துவயது பெண் ஒருவயது தம்பிக்கு ஊட்டியதை பார்த்தேன். வெளியே வந்ததும் அதன் காலைத்தொட்டு வணங்கி “புவனராணியான அன்னபூரணியே, இந்த உலகத்தில் பசியை அணைத்துக்கொண்டே இரு தாயே” என்று சொல்லி கண்ணீர்விட்டேன்.
கறுத்த சாகிப் ஒருவேளைகூட தனியாகச் சாப்பிடுபவர் அல்ல. அவர் வீட்டில் எல்லாநாளும் சாதாரணமாக நூறுபேர் சாப்பிடுவார்கள். வீட்டு வேலைக்காரர்கள், படகுக்காரர்கள், தென்னை வேலைக்காரர்கள் எல்லாரும் ஒரே பந்தியாக அமர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பிடும் நேரத்தில் வெளியே போய் குரல் கேட்கும் தொலைவிலுள்ள அனைவரையுமே சாப்பிடக் கூப்பிடுவார்கள். காகம் கரைந்து அழைப்பது போலவே.
அந்தக்குரல் கேட்ட எவரானாலும் எந்தக்கூச்சமும் இல்லாமல் சாப்பிட வந்துவிடுவார்கள். கந்தலாடை அணிந்த பிச்சைக்காரர்களுக்குக் கூட அதே பந்திதான், அதே சாப்பாடுதான்.
அங்கே எல்லாநாளும் பிரியாணிதான். கறுத்தசாகிப் பிரியாணி தவிர வேறு உணவை ஒரு பொருட்டாக நினைத்தவரே அல்ல. பிரியாணிதான் ஆரோக்கியம், சுவை என்று அவர் உண்மையாகவே நினைத்தார். பிரியாணி சாப்பிடாததனால் நான் சீக்கிரமே செத்துவிடுவேனோ என்று மெய்யான கவலையுடன் என்னிடம் கேட்டிருக்கிறார்.
சாப்பிட்டால் அவரைப்போல சாப்பிடவேண்டும். அவர் சாப்பிடுவதை நல்ல சாப்பாட்டுராமன்கள் மூன்றுபேர் சாப்பிடலாம். ஆனால் அள்ளி அள்ளி திணித்துக்கொள்ள மாட்டார். யானை சாப்பிடுவது அப்படித்தான். நிறைய சாப்பிடும், ஆனால் சுவையறிந்து சாப்பிடும். மூங்கிலின் தளிரை முதலில் சாப்பிடும். மூங்கிலையே கடைசியாகச் சாப்பிடும்.
கறுத்தசாகிப் சாப்பிட்டு முடித்து கைகழுவி சமையற்காரரை அழைத்துத் தோளில் கைவிட்டு தழுவி பாராட்டுவார். அவருடைய வீட்டில் வேலைபார்க்கும் சமையற்காரனையே நாள்தோறும் பாராட்டுவார். சாப்பிடும்போதே சங்கீதம் கேட்பதுபோல “பலே! பேஷ்! சபாஷ்!” என்றெல்லாம் சொல்வார். தலையை ஆட்டுவார். கையைத் தூக்கி “சுபானல்லா!” என்று வணங்குவார்.
ஒருமுறை நான் கறுத்த சாகிபிடம் சொன்னேன். “இங்கே இந்தப் பந்தியில் அமர்ந்து சாப்பிட வேண்டும் சாகிப்.”
“உங்கள் அப்பாவுக்கு அது பிடிக்குமா ஹெப்பாரே?” என்று கேட்டார்.
“இல்லை” என்றேன்.
“பிறகென்ன?” என்று சொல்லிவிட்டார்.
நான் இங்கே என் தம்பிகளை படிக்கவைத்து ஆளாக்கியது, என் தங்கைகளை திருமணம் செய்து அனுப்பியது கறுத்தசாகிப்பின் பணத்தால்தான். என் தம்பி முதல்வகுப்பில் ஜெயித்தபோது அன்றைக்கே ஐநூறு ரூபாய் பணம் கொடுத்தார். அவன் மங்களூரில் படிக்கச் சேர்ந்தபோது அவர்தான் உதவினார். அவன் இன்று மணிப்பாலில் டாக்டர். சின்னவன் கொப்பலில் பள்ளிக்கூட ஆசிரியர்.
என் தங்கைகள் கல்யாணத்தில் அவர் ஒவ்வொருவருக்கும் ஐந்துபவுன் நகை போட்டிருக்கிறார். அவரே திருமணத்திற்கு வந்து வாழ்த்தி பரிசளித்துவிட்டு போனார். எனக்கு நேரில் தரவில்லை. அந்த தருணத்தை எனக்கு உருவாக்கவே இல்லை.
அவருடைய நிலைமை மாறியதை என் கண்களால் பார்த்தேன். அது காலமாற்றம். நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அவருடைய மகன்களுக்கு இந்த ஊரும் இங்கிருக்கும் சூழலும் பிடிக்கவில்லை. அவர்கள் மங்களூரிலும் மும்பையிலும் படித்தவர்கள். உண்மையிலேயே அவர்கள் இங்கே இருக்கமுடியாது. அவர்கள் இங்கிருந்து கிளம்பிச்சென்று பெரிதாக வளர்ந்தார்கள்.
ஆனால் கறுத்தசாகிப் இங்கிருந்து எங்கும் போகமுடியாது. வேறெந்த இடத்திலும் அவர் கறுத்தசாகிப் அல்ல. அவருடைய மக்கள் இங்கேதான் இருந்தார்கள். அவர் அறிந்த நிலமும் இங்கேதான் இருந்தது.
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு பீபி மறைந்தார். அதன்பின் கறுத்தசாகிப் தனிமையாக ஆனார். அவரை சவூதிக்கோ மும்பைக்கோ கொண்டுபோக அவர் பிள்ளைகள் முயன்றார்கள். கட்டாயப்படுத்தினார்கள். எளியவனாகிய என்னிடம்கூட சொல்லிப் பார்த்தார்கள். அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
நான்காண்டுகளுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் வந்து ஒரு பக்கம் தளர்ந்தது. இரண்டு ஆண்டுகளாக இடையும் தளர்ந்துவிட்டது. படுக்கையிலேயேதான்.
அதைவிட அவரால் பேசமுடியாமலாகிவிட்டது. நாக்கு நன்றாகவே குழைந்து உள்ளே கிடந்தது. பெரும்பாலும் சைகைதான் மொழி. நாயர் சார், அவருக்கு வயது எண்பதுக்கும் மேல். சாகவேண்டிய வயதுதான். ஆனால் யானை வலிமை மிகுந்த மிருகம், அதனால் எளிதில் சாகமுடியாது.
ஆனால் அவருக்கு எந்தக்குறையும் இல்லை. அவருடைய வேலைக்காரர்கள் அவரை மகாராஜாவைப் போலவும் கைக்குழந்தையைப் போலவும் கவனித்துக் கொண்டார்கள். அவர் பேசாமலேயே அவருடைய தேவைகளை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். மகன்களும் மகள்களும் உடனில்லை, ஆனால் அதற்கு ஒன்றும் செய்யமுடியாது.
ஆனால் கறுத்தசாகிப் மெலிந்து கொண்டே போனார். சாப்பிடுவதே இல்லை. பசி மறைந்துவிட்டது, தூக்கம் இல்லாமலாகிவிட்டது. தூக்கமில்லாமல் ஆனதனால்தான் பசி இல்லாமலாகிவிட்டது. டாக்டர்கள் வந்து பார்த்தார்கள். பலவிதமான மருந்துகள் கொடுத்தார்கள். ஆனால் அவர் ஒருநாளில் மூன்று மணிநேரம்கூட தூங்குவதில்லை. அதுவும் பத்துநிமிடம் இருபதுநிமிடம் என்று விட்டுவிட்டு தூங்குவதுதான்.
ஆமினாம்மா என்னிடம் “எல்லாம் செய்துவிட்டோம் ஹெப்பாரே. மௌலவிகள் எல்லாருமே வந்துபோய்விட்டார்கள்” என்றபின், குரலைத் தாழ்த்தி “இனி உங்கள் முறையில் ஏதாவது பூசாரிகளை அழைத்து மந்திரவாதம் செய்யலாமா?” என்றார்.
எனக்கும் அந்த எண்ணம் இருந்தது. நான் எவரிடமும் சொல்லாமல் சேந்நன் பெருவண்ணானை அங்கே கூட்டிச் சென்றேன். ஆமினாம்மாவும் வேலைக்காரர்கள் சிலரும்தான் இருந்தார்கள்.
பெருவண்ணான் வீட்டைச் சுற்றிப் பார்த்தார். கறுத்தசாகிப்பின் படுக்கையறையையும் பார்த்தார். பிறகு வெளியேபோய் தொழுவத்தின் அருகே அமர்ந்தார். நானும் ஆமினாம்மாவும் அருகே சென்றோம்.
“சூன்யதை உண்டு சுற்றும்” என்று பெருவண்ணான் சொன்னார். “வீடு சூனியமாக இருக்கிறது. ஒழிந்து கிடக்கிறது. அதை மனித ஆத்மாக்களைக் கொண்டு நிறைக்கவேண்டும்… சூனியத்தால் அவருடைய ஆத்மா தவிக்கிறது. அதனால்தான் தூக்கமில்லை, உணவும் உள்ளே போகவில்லை.”
“அதற்கு என்ன செய்யவேண்டும்?” என்று நான் கேட்டேன்.
“அவருக்கு வேண்டியவர்களின் பொருட்கள் வேண்டும்… அவற்றை கொண்டு சில பூஜைகள் செய்தால் அவர்களின் ஆத்மாக்களின் ஒரு பகுதி இந்த வீட்டில் இருக்கும். அதாவது அவர்களின் சைதன்யம் இருக்கும். இந்த சூனியம் போய்விடும்.”
“என்ன பொருட்கள் வேண்டும்?” என்றார் ஆமினா.
“அவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்கள்… அவர்களின் ஆடைகள் இருந்தால் நல்லது.”
ஆனால் அங்கே அப்படி எவையுமே இல்லை. அந்த வழக்கமே இல்லை. ஒருவர் மறைந்தால் அவர் சார்ந்த எல்லா பொருட்களையும் துறந்துவிடுவதே அவர்களின் வழக்கம்.
“ஏதாவது பொருள் இருந்தால் தேடி வையுங்கள்” என்று சொல்லிவிட்டு பெருவண்ணான் கிளம்பிப் போனார். நானும் ஆமினாம்மாவும் தேடினோம். கறுத்த சாகிப்பின் நண்பர்கள், உறவினர்கள், அவர் கட்டித்தழுவிய பலநூறு மனிதர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மறைந்துவிட்டிருந்தார்கள். அவர்களின் பொருட்களை எப்படி சேகரிப்பது?
அதற்கு நான் முயன்று கொண்டிருந்த போதுதான் ஒருநாள் ஒரு விஷயத்தை கண்டேன். கறுத்த சாகிப்பின் படுக்கையறையில் தான் ஃபோன் இருந்தது. அதை நான் பழுது பார்த்துக் கொண்டிருந்தேன். ரிசீவரை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டு நான் வேறேதோ செய்து கொண்டிருந்தேன். அங்கே எவரோ தவறுதலாக இணைப்பு கொடுத்துவிட்டார்கள்.
அதில் ஓர் இளைஞன் கூப்பிட்டுக் கொண்டே இருந்தான். “ஹலோ ஹலோ” அதன்பிறகு அவன் “மறுபக்கம் பேசாமலிருந்தால் தெரியாதா? மாலினி நீதானே? ஏய் பேசுடீ” என்றான்.
கறுத்தசாகிப் அதை நோக்கித் திரும்பி புன்னகைத்துக் கொண்டிருந்தார். அவர் முகம் அந்த குரலுக்கு ஏற்ப மலர்ந்து உதடுகளும் புருவங்களும் அசைந்தன.
நான் அதைக் கவனித்தேன். அது என்ன என்று கொஞ்சநேரம் கழித்துத்தான் புரிந்து கொண்டேன். மனிதக்குரல். அந்த மிகப்பெரிய வீட்டில் ஆமினாம்மாவின் குரலும் வேலைக்காரர்களின் முணுமுணுப்பும் மட்டும்தான் ஒலிக்கும்.
அவர் ரேடியோவை கவனிப்பதில்லை. அவருக்கு இசை, நாடகம் போன்றவற்றில் ஆர்வமில்லை. ரேடியோவில் பேச்சொலி கேட்கும்தான். ஆனால் அவை மனிதக்குரல்கள் அல்ல, நடிப்புகள். அவரை கவர்பவை உண்மையான பேச்சொலிகள். உண்மையான குரல்கள்.
நான் அதன்பிறகு பலமுறை டெலிபோனில் எவரையாவது கூப்பிட்டுவிட்டு அவர் அருகே ரிசீவரை வைத்துப் பார்த்தேன். மனிதக்குரல் கேட்டாலே அவர் மலர்வதைக் கண்டேன்.
“அதன் பிறகுதான் எனக்கு தோன்றியது கறுத்தசாகிப்க்கு ஒரு தனி இணைப்பு கொடுத்தால் என்ன என்று. ஆமினாம்மாவுக்கு என்னவென்றே தெரியாது. நான் அவரிடமும் சொல்லவில்லை. எதையும் எவரிடமும் பேசவில்லை. நானே இன்னொரு பேரலல் இணைப்பு கொடுத்தேன்” கிருஷ்ண பட் சொன்னர்.
“டெலிபோன் எக்ஸேஞ்சுக்கு உள்ளே எப்படி இணைப்பு கொடுத்தீர்கள்?” என்று நான் ஹெப்பாரிடம் கேட்டேன்.
“டெக்னீஷியனிடம் சொன்னேன். இங்கே கறுத்தசாகிப் பெயரைச் சொன்னால் எவரானாலும் உதவுவார்கள். ஆனால் நான் அந்த டெக்னீஷியன் பெயரைச் சொல்லப் போவதில்லை. நானே எல்லாம் செய்தேன் என்பதுதான் என்னுடைய அறிக்கை. நான் அவருக்காக தண்டிக்கப்பட்டால் அது எனக்கு பெருமைதான். ஒரு கடனில் வட்டியை மட்டும் கட்டுவதுபோல. அசல் நிற்கட்டும், அடுத்த பிறவிக்காக.”
நான் பெருமூச்சுவிட்டேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை.
கிருஷ்ண பட் சொன்னார் “மைக்ரோஃபோனை எனக்கு அந்த டெக்னீஷியன்தான் வாங்கித் தந்தார். அங்கிருக்கும் டெக்னீஷியன்கள் எல்லாருக்குமே இதெல்லாம் தெரியும். எப்போதும் அந்த பேரலல் லைனில் இணைப்பு கொடுப்போம். அதில் எப்போதும் மனிதர்களின் உரையாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்.”
“ஆனால் நீங்கள் நினைப்பதுபோல அவரால் பேச்சுக்களை கேட்கமுடியாது. ஒன்றுக்குமேல் உரையாடல்கள் கலந்து வெறும் ஓசையாகத்தான் இருக்கும். வெறும் மனிதக்குரல்கள்… அவ்வளவுதான்” என்றார் கிருஷ்ண பட்.
“அவர் நலமடைந்தாரா?” என்றேன்.
“ஆச்சரியம் ஒரே வாரத்தில் சரியாகிவிட்டார். நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு. பிரியாணி சாப்பிட ஆரம்பித்துவிட்டார். நன்றாகவே பிரியாணி சாப்பிட்டார்…. எடை மீண்டது. உடல் பளபளப்பாகியது. முகம் பருத்து கண்களில் அந்த ஈரமினுமினுப்பு வந்தது. எப்போதுமே புன்னகையுடன் இருந்தார். தூக்கத்திலேயே போய்விட்டார். இறந்த முகத்தில் மலர்ந்த சிரிப்பு இருந்தது. மய்யத்தை பார்த்த அத்தனை பேருமே அதைப் பார்த்து வியந்தார்கள்”
“அவர் அந்த இணைப்பு வழியாக என்ன கேட்டார்? அது வெறும் இரைச்சலாகத்தானே இருந்திருக்கும்?”
“ஆமாம், ஆனால் குரல்கள் ஆத்மாவின் பகுதிகள். நத்தை ஊர்ந்து போகும்போது அதன் ஒரு பகுதிதான் ஒளிவிடக்கூடிய தடமாக ஆகிறது. அதுதான் சைதன்யம் என்பது. மனிதர்களின் குரல்களிலும் ஆடைகளிலும் அவர்கள் புழங்கிய பொருட்களிலும் அவர்களின் சைதன்யம் இருக்கிறது. ஃபோன் வழியாக வந்த குரல்கள் வழியாக அவற்றைப் பேசியவர்களின் சைதன்யம் அவர் வீட்டுக்குள் நிறைந்திருந்தது.”
நான் “ஓ” என்று பொருளில்லாமல் சொன்னேன்.
“நான் ஒரு கனவில் அதைக் கண்டேன். நான் சைக்கிளில் தெங்குமூட்டில் மன்ஸிலை நோக்கிப் போகிறேன். மலைத்தேனீக் கூடு போல அது ஓசையிட்டுக் கொண்டிருந்தது. அருகே சென்றபோது தான் அந்த ஓசை நான் கொடுத்த பேரலல் லைன் வழியாக மைக்ரோஃபோனில் ஒலிக்கும் குரல்களின் தொகுப்பு என்று தெரிந்தது. நூற்றுக்குமேல் குரல்கள் கலைந்த முழக்கம்” கிருஷ்ண பட் சொன்னார்.
“நான் தோட்டத்திற்குள் நுழைந்தபோது கண்டேன், தோட்டம் முழுக்க மக்கள். திண்ணைகளிலெல்லாம் மக்கள். வீடு முழுக்க முட்டிநெரித்தபடி மக்கள். நான் அவர்களை உந்தி விலக்கி முட்டி மோதி கறுத்தசாகிபின் அறைக்குள் போனேன். அவர் அறைக்குள் ஐம்பது அறுபதுபேர் இருந்தார்கள். அவர் அவர்களுக்கு நடுவே சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். கைகளைத் தட்டிக்கொண்டு செண்டை முழக்குவதுபோல உரக்கச் சிரித்தார்.”
நான் கைகளைக் கோத்து அதன்மேல் முகத்தை வைத்துக் கொண்டு அவரை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். பிறகு “கனவா?” என்றேன்.
“கனவுகளில்தான் அறியமுடியாத உண்மைகள் தெரியமுடியும்” என்றார்.
“ஹெப்பார்” என்று நான் அழைத்தேன். “நீங்கள் பார்த்தீர்களே, அவர்களெல்லாம் யார், அவருக்கு தெரிந்தவர்களா?”
“இல்லை, அவர்கள் அனைவருமே எங்கேயோ ஃபோனில் பேசிக் கொள்பவர்கள். எனக்கோ கறுத்தசாகிப்புக்கோ தெரியாதவர்கள்.”
“தெரியாதவர்களா?” என்றேன்.
“ஆமாம், அதனாலென்ன?” என்றார் கிருஷ்ண பட்.
அதனாலென்ன என்ற வார்த்தை எனக்கு மிகப்பெரிய எடைபோலிருந்தது. உடனே அதை இறக்கி வைக்க வேண்டும் என்பதுபோல.
நான் அவரை அனுப்பி வைத்தேன். அந்த வழக்கை ஹெப்பார் கிருஷ்ண பட்டுக்கு எந்த தீங்கும் இல்லாமல் முடித்து வைத்தேன். இன்று முப்பதாண்டுகள் கடந்துவிட்டன. “அதனாலென்ன” என்ற சொல் காதில் எஞ்சியிருக்கிறது. சில ஆப்தவாக்கியங்கள் எங்கிருந்தோ நம் மீது உதிர்ந்து விடுகின்றன.
***