வாரஇதழ்களின் வரலாறு, மாலன்

மாலன் இணையத்தில் எழுதிய இந்தக் குறிப்பை வாசிக்க நேர்ந்தது. நான் அறுபதுகள் முதல் வார இதழ்களை வாசித்தவன். அதாவது என் ஐந்து வயது முதல். நான் குமுதம் வாசிக்க தொடங்கும்போது அதில் ராஜமுத்திரை தொடராக வந்துகொண்டிருந்தது என்பது நினைவு. அதற்கு லதா வரைந்து வெளிவந்த ஓவியங்கள், அந்தப் பக்கங்களுடனேயே நினைவில் நிற்கின்றன. ‘விகாரமுக வாலிபன்’ இந்திரபானு என்னுடைய அக்கால ஹீரோ

இரண்டாயிரம் வரைக்கும்கூட நான் வார இதழ்களின் வாசகன். புரட்டிப்பார்ப்பதாவது உண்டு. ஒரு கட்டத்தில் சுஜாதா மட்டும். பின்னர் அவை வெறும் சினிமாச்செய்திகளாக மாறின. இணையத்திலிருந்து எடுத்து போட்டுக்கொள்ள தொடங்கின. இன்று அவை கிட்டத்தட்ட மறைந்துவருகின்றன. ஒரு யுகத்தின் முடிவு என்றே சொல்லலாம். வாரஇதழ்களை இனிமேல் காப்பாற்ற முடியாது. ஊடகங்கள் அனைத்து செய்திமுறைமைகளையும் தொகுத்துக்கொண்ட அமைப்புக்களாகவே செயல்பட முடியும்.

இதழ்கள் மேல் வந்த ஈர்ப்பு எனக்கு தொலைக்காட்சிமேல் வரவில்லை. ஆச்சரியமான விஷயம், தொலைக்காட்சித்தொடர்பே என் வீட்டில் இருக்கவில்லை. 1998ல்தான் வீட்டில் ஒரு கறுப்புவெள்ளை டிவி வாங்கினோம். அதிலும் மிகமிக குறைவாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். பெரும்பாலும் உள்ளூர் இணைப்பில் மலையாளப்படங்கள்.

1999 ல் வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தேன். 2000த்தில் கணிப்பொறி வாங்கிவிட்டேன். தொலைக்காட்சி சினிமா குறுந்தட்டுக்கள் போட்டுப்பார்ப்பதற்காக மட்டும். இன்றுவரை கேபிள் தொடர்பே வீட்டில் இல்லை. தொலைக்காட்சிச் செய்திகள் மொத்தமாக இதுவரை ஐம்பது முறைக்கும் குறைவாகவே பார்த்திருப்பேன். எந்த சீரியலையும் ஒரு எபிஸோட் அளவுக்குக் கூட பார்த்ததில்லை. எந்த தொலைக்காட்சி விவாதத்தையும் முழுக்க பார்த்ததில்லை – நானே தோன்றிய ஒரே ஒரு தொலைக்காட்சி விவாதத்தையே கூட

இன்று எப்போதாவது ஓட்டல்களில் தங்கும்போது தொலைக்காட்சி போட்டுப்பார்ப்பேன். எதுவுமே எனக்கு ஆர்வமூட்டாது. ஏனென்றால் தொடர்பே இல்லை. பத்துப்பதினைந்து நிமிடம் பழைய கறுப்புவெள்ளை பாடல்கள். அல்லது நேஷனல் ஜியோக்ராஃபி. அவ்வளவுதான்.

ஆனால் அச்சுஊடகம் மீதான மோகம் இன்றும் ஒரு நினைவாக நீடிக்கிறது. ஏனென்றால் ஒரு காலத்தில் அதை வெல்லவேண்டும் என்ற கனவு இருந்தது—அதுதானே அன்று எழுத்தாளர்களை உருவாக்கும் களம். 1986 ல் சுந்தர ராமசாமி வழியாக சிற்றிதழ்மோகம் ஏற்பட்டாலும் மேலும் நான்கு ஆண்டுகளுக்குப்பிறகுதான் மெல்ல மெல்ல வாரஇதழ்களுக்கு செல்லவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமலாகியது.

அதற்கு வெளியே நான் ஓர் எழுத்தாளனாக உருக்கொண்டதே காரணம்.1991 ல் கோவை ஞானியின் நிகழ் இதழில் எழுதிய கதைகள் வழியாக நான் ஓர் அறியப்பட்ட எழுத்தாளானாகவே நிலைகொண்டுவிட்டேன். அதன்பின்னரே வார இதழ்கள் என்னை அறிந்தன. அவற்றில் உள்ள நண்பர்கள் என்னிடம் கோரியபோது அரிதாக சில படைப்புக்களை வாரஇதழ்களில் எழுதியிருக்கிறேன்.

தமிழின் எந்த பெரிய ஊடகத்திற்கும் என் உருவாக்கத்தில் சிறு பங்களிப்புகூட இல்லை. அவற்றிடமிருந்து நான் பெற்றுக்கொண்டதும் ஏதுமில்லை. ஊடகநண்பர்கள் உண்டு. அவர்கள் அவ்வப்போது என்னைப்பற்றிய செய்திகளை வெளியிட்டதுண்டு. ஆனால் என்னுடைய முக்கியமான படைப்புக்கள் சிற்றிதழில் வெளிவந்தவை. பல படைப்புக்கள் நேரடியாக சிறுகதை தொகுதியில் சேர்க்கப்பட்டன

என்னுடைய வாசகப்பரப்பை நானே உருவாக்கிக்கொண்ட சொல்புதிது, ஜெயமோகன்.இன் போன்ற ஊடகங்கள் வழியாகவே பெரும்பாலும் அடைந்திருக்கிறேன். சற்றேனும் கடன்பட்டிருப்பது குறுகியகாலம் வெளிவந்த சுபமங்களா இதழுக்கு மட்டுமே.

ஆனாலும் தமிழ் வாரஇதழ்கள் மேலுள்ள மோகம் ஒரு நினைவாக நீடிக்கிறது. அதில் வந்த பெயர்கள், படைப்புக்கள். பல இதழ்களின் பக்க வடிவமைப்பே நாற்பதாண்டுகள் கடந்தும் நினைவிலுள்ளது. மாலனின் இக்குறிப்பில் உள்ள பெயர்களை படித்துக்கொண்டிருந்தபோது தோன்றியது தமிழ் வாரஇதழ்களின் வரலாற்றை சுவாரசியமான நிகழ்வுகளுடன் மாலன் எழுதலாம் என்று. அவர் அதற்கு தகுதியானவர். அரைநூற்றாண்டாக அவ்வுலகில் வாழ்பவர்

கல்கி,தேவன் காலம், அதன்பின் சாண்டில்யன், ஜெகசிற்பியன், ஆர்வி, பிவிஆர் காலகட்டம்.அதன்பின் சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி ,சிவசங்கரி காலகட்டம். அதன்பின் ராஜேஷ்குமார், சுபா,பட்டுக்கோட்டை பிரபாகர் காலகட்டம் என்று நான்கு தலைமுறைகள். ஆப்டோன் அச்சு முதல் ஆப்செட் கணினி அச்சுவரையிலான தொழில்நுட்ப மாற்றங்கள்….

எழுத எவ்வ்ளவோ உள்ளன.அலுவலகச்சூழல், அன்றிருந்த அரசியல் சமூகவியல் நெருக்கடிகள். உதாரணம் மு.கருணாநிதியின் ரோமாபுரிப் பாண்டியன் குமுதத்தில் நின்றுபோனது,சுஜாதாவின் தொடர்கதைக்கு எதிராக நாடார் சாதியினர் உருவாக்கிய எதிர்ப்பு. வெளியே அறியப்படாத பல ஆளுமைகள். உதாரணமாக, நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது குமுதத்திற்கு கதை அனுப்பினேன். எனக்கு பால்யூ பதில் கடிதம் எழுதியிருந்தார். என் வாழ்க்கையின் மறக்கமுடியாத பெயர்களில் ஒன்று.

ஒரு முழுஉலகமே எழுதப்படாமல் இருக்கிறது. ஒருவேளை இப்போது எழுதப்படாவிட்டால் எப்போதுமே எழுதப்படாமல் போய்விடும்

ஜெ  

சென்றது இனி மீளுமா?

மாலன்

என் ஊடக சகோதரர்கள் வேலை இழப்பு, பணி விடுமுறை, சம்பளக் குறைப்பு என்ற இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்ற செய்திகளைக் கேட்க எனக்கு வருத்தமே மேலிடுகிறது.அவர்களில் பலர் கடுமையான உழைப்பாளிகள். அவர்களின் பெயரோ முகமோ கூடப் பலருக்குத் தெரியாது (என்னுடைய நூல் ஒன்றை அது போன்ற பத்திரிகையாளர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்) அவர்களுக்கு இது போல் இடர் நேரிட்டிருக்கக் கூடாது. கொரானா உலகையே வாட்டிக் கொண்டிருக்கிறது

கொரானா இப்படி ஒரு தாக்கம் ஏற்படுத்தும் என நான் நினைத்ததில்லை. ஆனால் இது போன்ற நிலை என்றேனும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் எனக்குக் கொரானாவிற்கு முன்னரே அவ்வப்போது ஏற்பட்டதுண்டு.

நான் பத்திரிகை உலகில் நுழைந்த போது வார இதழ் அலுவலகங்களில் ஆசிரியர் துறையில் அதிகம் பேர் இருக்கமாட்டார்கள். பெரும்பாலும் பத்திரிகையின் உரிமையாளாரே ஆசிரியராக இருப்பார். வெறுமனே பெயருக்கு மட்டுமல்ல. எழுத்தாளராகவும், பத்திரிகையில் வெளியிடப்படுவதைப் பற்றி முடிவெடுப்பவராக இருப்பார். ஆசிரியர் துறையில் மூன்று அதிகம் போனால் நான்கு பேர் இருப்பார்கள். குமுதம் தமிழ் வார இதழ்களில் விற்பனையில் முதலிடத்தில் இருந்த போது ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், சண்முகசுந்தரம் (புனிதன்) ஆகிய மூவர்தான் ஆசிரியர் பிரிவில் முழு நேர ஊழியர்கள்.

பால்யூ அரசுப்பணியில் இருந்ததால் ரீட்டைனர் ஆக இருந்தார். ஆனால் அவரும் முழு நேரப் பணியாளர் போலத்தான் பங்களித்து வந்தார். ரஜத், பாமா கோபாலன் போன்றோர் வெளியிலிருந்து பங்களித்தார்கள். பின்னால் பிரபஞ்சன் முழு நேரப் பத்திரிகையாளராக இணைந்து கொண்டார்.எஸ்.ஏ.பி. யோடு சேர்ந்து இவர்கள் எல்லோரும்தான் தமிழில் அதிகம் விற்பனையாகும் இதழின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்து வந்தார்கள்

ராகி, ஜராசு, புனிதன், இந்த மூவரும் சிறுகதை, துணுக்கு, தொடர்கதை முதல் வாசகர் கடிதத்தைத் தேர்வு செய்வது வரை பத்திரிகை தொடர்பான அத்தனை வேலையையும் செய்வார்கள். எழுதுவதோடு எடிட் செய்வது, லே அவுட்டைத் தீர்மானிப்பது, புகைப்படங்கள், ஓவியங்களைத் தேர்வு செய்வது என்று அஷ்டாவதானம் செய்து கொண்டிருந்தார்கள். இறுதி முடிவை எடிட்டர் (எஸ்.ஏ.பி) எடுப்பார். அச்சுக்குப் போகிற இறுதி நிலையில் கூட இது வேண்டாமே என்று அவர் சொல்லிவிட்டால் அந்தக் கடைசி நிமிடத்தில் அதற்கு மாற்றைத் தேடியாக வேண்டும்.

அப்போது ஆஃப்செட்டில் அச்சாகி வந்தது.பிளேட் என்பதுதான் இறுதி நிலை. பிளேட்டை மிஷினில் மாட்டி ஓட்டினால் அதிலிருப்பது அச்சாகிவிடும். பிளேட் போட்டபின் அம்மோனியா பிரிண்ட் என்று கட்டிட வரைபடங்களுக்கு நீல வண்ணத்தில் பிரிண்ட் எடுப்பது போல முழுப்பத்திரிகையும் அம்மோனியா பிரிண்டாக வரும் போது அதில் கூட எடிட்டர் திருத்தி நான் பார்த்திருக்கிறேன்.

ரங்கராஜன், குமுதத்தோடு மாலைமதிக்கும் அவ்வப்போது நாவலும் எழுதுவார். ஒருமுறை அந்த வாரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த நாவல் கடைசி நிமிடத்தில் நிராகரிக்கப்பட்டதால் ‘எடிட்டர் கூப்பிட்டால் மட்டும் சொல்லி அனுப்புங்கள்’ என்று சொல்லிவிட்டு கட்டுக் காகிதங்களை எடுத்துக் கொண்டு அலுவலக மாடிக்குப் போனவர் அன்று மாலை ஒரு முழுநாவலோடு திரும்பி வந்தார்

அநேகமாக அன்று இருந்த எல்லாப் வாரப்பத்திரிகைகளிலும் இதுதான் நிலை. கல்கியில், கி.ராஜேந்திரன், மணி, சீதா ரவி. பின்னர் இளங்கோவன் பா.ராகவன். சந்திரமெளலி வெளியிலிருந்து பங்களித்து வந்தார் (இன்றும் கூட கல்கியில் அதிகம் பேர் இல்லை) இதயம் பேசுகிறதுவில் தாமரை மணாளன், லட்சுமி சுப்ரமணியன் (அவர் கூட முழு நேரப் பணியாளர் இல்லை) சாவியில் பாரி வள்ளல் மட்டுமே முழுநேரப் பத்திரிகையாளர். ராணி மைந்தன், நான், பாலகுமாரன் போன்றவர்கள் வெளியிலிருந்து பங்களித்து வந்தோம்.

திசைகளில் சுதாங்கன் மட்டுமே முழுநேரப் பத்திரிகையாளன். அரஸ், கங்கன், லே அவுட்களை கவனித்து வந்தார்கள். சீனியர்கள் பணி ஓய்வு பெற்றபின் குமுதத்தில் பிரியா கல்யாணராமன், மணிகண்டன், ரஞ்சன் ஆகியோர் முழு நேரமாகப் பணியாற்றினார்கள்.இவற்றில் விகடன் மட்டும் விலக்கு. அன்றே, கல்கி காலத்திலிருந்தே அங்கு அதிகம் பணி புரிந்து கொண்டிருந்தார்கள்.(ஒவ்வொருவரும் ஜாம்பவான்கள்) இவர்கள் பெயர்கள் கூட பத்திரிகையின் இம்ப்ப்ரிண்ட்டில் வராது

அன்று பத்திரிகைகளின் உள்ளடக்கத்தில் பெரும்பாலும் கதைகள். இரண்டு அல்லது மூன்று தொடர்கள், சிறுகதைகள் கணிசமான இடத்தை எடுத்துக் கொண்டன. 96 பக்கங்கள்தான். ஆனால் இன்றுள்ள தொழில்நுட்ப வசதி கிடையாது. கையால் எழுதி,கையால் அச்சுக் கோர்த்து, பலமுறை மெய்ப்புப் பார்த்து, கையால் எடிட் செய்து, கையால் லே அவுட் செய்து, பதினாறு பதினாறு பக்கங்களாக அச்சிட்டு… எல்லாம் பல மணி நேரம் பிடிக்கும் வேலை.

செய்தி இதழ்கள் வந்த பின் வாரப் பத்திரிகை அலுவலகங்கள் நாளிதழ் அலுவலகங்களைப் போலாகிவிட்டன. வாரப்பத்திரிகைகளைப் போல நாளிதழ்களின் content வெளியாட்களிடமிருந்து வராது என்பதாலும் அதே எடிட் செய்வது, லே அவுட் பணிகளை ஒரு நாளின் சில மணி நேரத்தில் செய்தாக வேண்டும் என்பதால் அங்கு பலரின் உழைப்புத் தேவைப்பட்டது.

கதை வாசிப்பு, பத்திரிகை வாசிப்பு என்பவை நடுத்தர வர்கக் கலாசாரத்தின் ஓர் அம்சமாக இருந்ததுதான் 90களின் இறுதிவரை வாரப்பத்திரிகைகளின் வேர். சினிமா கூட அந்த வேரை அதிகம் பாதித்ததில்லை. நடுத்தர வர்க்கம் முதலில் தொலைக்காட்சித் தொடர்கள், பின் செய்திச் சானல்கள், அதன் பின் இணையம் என ஈர்க்கப்பட்ட போது அதன் வேர் பலவீனமடையத் தொடங்கியது. ஆனால் பேஸ்மெண்ட் பலவீனமாக இருக்கிறது என்பதை உணராமல் மாடி கட்டிக் கொண்டிருந்தன பத்திரிகைகள்.
அச்சுப் பத்திரிகை என்பது அதிக வருவாய் (Revenue) தரும் தொழில்ல. விற்பனை மூலம் வரும் வருவாய் செலவுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். லாபம் என்பதெல்லாம் விளம்பர ஆதரவைப் பொறுத்தது. (இப்போது அச்சிடும் விளம்பரங்கள் தவிர விருது நிகழ்ச்சிகள் (events) மூலம் வருவாயை அதிகரிக்க முயற்சிக்கிறார்கள்)

அதனால் முதலாளிகள் input cost களை குறைப்பதில் கவனமாக இருப்பார்கள்.அதில் முதலில் பணியாளர்களின் ஊதியம், எழுதுபவர்களுக்கான சன்மானம் என்பதில்தான் அவர்கள் கவனம் திரும்பும்.ஏனெனில் காகிதத்தின் விலை, மையின் விலை, விநியோகச் செலவு இவற்றில் கை வைக்க முடியாது
என்றாலும் பணி நீக்கம் என்ற முடிவு ஏற்கத் தக்கதல்ல. ஏதோ ஒரு வேலை என்று பத்திரிகைத் துறைக்கு வருகிறவர்கள் குறைவு. அதன் மீதான தாகத்தில் வருகிறவர்கள்தான் அதிகம் இன்றும்.

ஆனால் பத்திரிகைத்துறை தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது என்று எனக்குத் தோன்றுகிறது கொரானா நம்மைப் பல விஷயங்களில் பழைய காலத்திற்குத் திருப்பிக் கொண்டிருக்கிறது. பத்திரிகையும் பழைய காலத்திற்குப் போய்விடுமோ?

முந்தைய கட்டுரைஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–79