புதியகதைகள்- கடிதங்கள்

இசூமியின் நறுமணம் [சிறுகதை] ரா.செந்தில்குமார்

அன்புள்ள ஜெ,

இசூமியின் நறுமணம் அழகான கதை. மென்மையானது. சொல்லப்போனால் வண்ணதாசனின் உலகைச் சேர்ந்தது. ஆனால் அந்த குடிப்பேச்சுக்களை அவர் எழுதியிருக்க மாட்டார். அந்த காண்ட்ராஸ்ட்தான் இந்தக்கதையை முக்கியமானதாக ஆக்குகிறது. இந்த மாதிரி ஒரு சூழலிலும் அந்த சின்ன நுட்பமான விஷயத்துக்கு இடமிருப்பது அளிக்கும் மகிழ்ச்சிதான் அந்தக்கதை என நினைக்கிறேன்

ஒருமுறை நானும் நண்பர்களும் செங்கோட்டைப் பக்கம் காட்டுக்குள் போய்க்கொண்டிருந்தபோது மந்தாரமலரின் வாசனை. அது மிகமிக மென்மையான வாசனை இல்லையா? ஆனாலும் தெரிந்தது. அவ்ளவுபெரிய காட்டில் அது எப்படி தெரிகிறது என்று ஆச்சரியப்பட்டேன். என்னுடன் வந்த நண்பர் சொன்னார், உங்கள் வீட்டு முற்றத்தில் மந்தாரம் விரிகிறது. உங்களுக்கு தெரிந்த மணம் என்று

மென்மையான மலர்மணத்தைப் பற்றிய கதை

ராஜ்குமார்

அன்புள்ள சார் அவர்களுக்கு

இசூமியின் நறுமணம் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜப்பானியப் பெயர்களாய் இருந்ததால் வேறு ஏதோ பண்பாட்டின் கதை என்று நினைத்துப் படித்தேன். முடித்ததும் “வெண்கடல்” நினைவுக்கு வந்தது.

“பெட்டக்குட்டிக சின்னப்பிள்ளைகளாட்டு வெளையாடி அலையுதாளுக. சட்டுண்ணாக்கும் அதுக சமைஞ்சு நெறையுதது….அதோட அதுகளுக்கு ஏளு ஐசரியமாக்கும் வந்து பொலியுதது… சமையுறதுண்ணா என்னலே? அதுகளுக்குள்ள முலைப்பாலு வந்து நெறையுததாக்கும் கேட்டுக்க… பின்ன அதுகளுக்க தேகம் முளுக்க ஓடுதது ரெத்தமில்ல, பாலாக்கும்…பிள்ளை குடிக்குததுக்காக ரெண்டுமுலையும் காம்பும் வளந்து வருது.”[ வெண்கடல்]

இது ஜப்பானியர்களுக்கும் ஒத்துப்போகும் என்பது ஆச்சிரியம்தான். எங்கு வாழ்ந்தாலும் மனிதர்கள் ஒரே மாதிரித்தான். என்மகள் சரியாய் வயதுக்கு வரும் அன்று காலையில் எழுப்பும்போது அவங்க அப்பா மேல் படுத்திருந்தாள். பலமாய் ஒரு அடி வைத்து எழுப்பினேன். பதினோரு மணிக்கெல்லாம் ஸ்கூல்ல இருந்து போன் வந்தது. அதற்கப்புறம் அப்பாவோடு நெருக்கமாய் இருந்தாலும் பழையபடி இல்லை. யாரும் சொல்லாமலேயே மாறிவிட்டாள்.

நான் சிறுமியாய் இருக்கும்போது என் உறவினர் ஒருவர் (எனக்கு அவரை அவ்வளவாய் பிடிக்காது) சீக்கிரம் உக்காந்துடுவா என்று சொன்னார். அதேபோலத்தான் ஆனது. அந்த வாசனை ஆண்களுக்குதான் முதலில் தெரியும் போல. ரா. செந்தில்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

அன்புடன்

டெய்ஸி பிரிஸ்பேன்

அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

அன்புள்ள ஜெ

அவனை எனக்கு தெரியாது கதை விரும்பி வாசித்த ஒன்று. அந்தக்கதையில் ஒரு தேவையில்லாத குழப்பம் ஆஸ்திரேலியாவில் தண்டனை விதிக்கப்பட்ட அந்த இளைஞன் யார் என்பது. அது இந்தோனேசியவில் கொல்லப்பட்டவனா, கொன்றவனா? கொன்றவன் பின்னால் ஆஸ்திரேலியாவில் தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டான் என்று எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு

ஆனால் இந்தவகையான குழப்பங்கள் கதைக்கு நல்லது அல்ல. கதையை புரிந்துகொள்ள வாசகன் யோசிக்கக்கூடாது. கதையில் விட்டுவிட்டது என்ன என்று யோசிப்பது சலிப்பூட்டுவது.கதையிலே சொல்லப்படும் வாழ்க்கைச்சிக்கலை மேலும் விரிவாக்கிக்கொள்ளத்தான் அவன் யோசிக்கவேண்டும்

இந்தக்கதையின் அழகு என்பது கொல்பவனும் கொல்லப்படுபவனும் ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள். அங்கே இருந்திருந்தால் நண்பன் என்றோ துரோகி என்றோ ஆகியிருப்பார்கள். இங்கே அதற்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை.அவன் தன்னை துரோகி என்று உணரலாம். கொன்றதுமே அவன் தன் நாட்டுக்குத்தான் மன்னிப்பு கோருகிறான். ஆனால் அதுகூட அவனே நினைத்துக்கொள்ளும் ஒன்றுதான். கொஞ்சநாளில் அவனுக்கே பழகிவிடும்

ஆனந்த்

கன்னி- [சிறுகதை] ம.நவீன்

அன்புள்ள ஜெ

திருநெல்வேலி மாவட்டத்தின் பெண் தெய்வங்களில் பெரும்பாலானவை கொல்லப்பட்ட பெண்கள். இப்படி கொல்லப்பட்ட பெண்களை அறுகொலை தெய்வங்கள் என்று லூர்து ஐயா வகைப்படுத்துகிறார். இந்த அறுகொலை என்பது ஒரு டெம்ப்ளேட். சமூகத்தின் குற்றவுணர்ச்சிக்கு ஒரு லெட்-அவுட். அப்படி ஒரு வழி கிடைத்துவிட்டால் உண்மையில் கொலைகள் பெருகுமே ஒழிய குறையாது. நீங்களேகூட ஒரு கதை எழுதியிருந்தீர்கள், முத்தங்கள் என்று. அவர்கள் எத்தனை எளிதாக அதைச் செய்கிறார்கள். ஏனென்றால் அதை எப்படிச் செய்வது என்ற டெம்ப்ளேட் அவர்களுக்கு ஏற்கனவே உள்ளது

அந்த டெம்ப்ளேட்டைத்தான் இங்கே மாரி பேசிப்பேசி உருவாக்குகிறான். இப்படித்தான் நேற்றுநடந்தது என்று சொல்கிறான். அதை கதை கேட்பவனுக்கு அளித்துவிடுகிறான். ஒரு லோடட் கன் அளிப்பதுபோலத்தான் அது

டி.ராமகிருஷ்ணன்

கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி

உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்

=============================================================

இசூமியின் நறுமணம்-கடிதங்கள்

தெய்வீகன்,நவீன் சிறுகதைகள்- கடிதங்கள்

அவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்

கன்னி- கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–77
அடுத்த கட்டுரைநிழல்காகம்,ஆகாயம்- கடிதங்கள்