“ஸ்ரீபத்மநாபஸேவினி, வஞ்சிதர்ம வர்த்தினி, ராஜராஜேஸ்வரி, ஆயில்யம் திருநாள் கௌரிலட்சுமிபாய் தம்புராட்டி ஸவிதம்!” என்று கோல்காரன் அறிவித்து வெள்ளிக்கோலை தாழ்த்தி தலைவணங்கினான்.
ராஜராஜ வர்மா திரும்பி பார்வதிபாயிடம் அருகே வரும்படி கைகாட்டினார். பார்வதிபாய் தன்னருகே நின்றிருந்த ருக்மிணிபாயையும் ராமவர்மாவையும் விழிகளால் தன்னை தொடரும்படி அழைத்துவிட்டு அவர் அருகே சென்று நின்றாள்.
உள்ளிருந்து வைத்யமடம் நீலகண்டன் நம்பூதிரிப்பாடும் மாணவர்களும் ஓசையில்லாமல் வெளியே வந்தனர். மாணவர்களின் கைகளில் மருந்துப் பெட்டிகள் இருந்தன. நீலகண்டன் நம்பூதிரிப்பாடு ராஜராஜவர்மாவை நோக்கி தலைவணங்கினார்.
“எப்படி இருக்கிறது?” என்று ராஜராஜ வர்மா தாழ்ந்த குரலில் கேட்டார்.
நீலகண்டன் நம்பூதிரிப்பாடு கண்களைத் தாழ்த்திக்கொண்டு “இன்றைக்கு, இல்லாவிட்டால் நாளைக்கு” என்றார். “கேட்பதும் சொல்வதும் எத்தனை விரைவில் நடக்குமோ அந்த அளவுக்கு நல்லது. வைத்தியம் நின்றுவிடும் இடம் இது. இனி ஈஸ்வரஹிதம்.”
ராஜராஜ வர்மா தலையசைத்தார். அவர் அதை எதிர்பார்த்திருந்தார்.
நீலகண்டன் நம்பூதிரிப்பாடு தலைவணங்கி கடந்து சென்றதும் ராஜராஜ வர்மா பெருமூச்சு விட்டார்.
உள்ளிருந்து காளிப்பிள்ளை ஒரு பெரிய மூங்கில்பெட்டியுடன் வெளியே வந்தாள். ராஜராஜ வர்மா அவளிடம் “பார்க்கலாமா?” என்றார்.
காளிப்பிள்ளை “துணிமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்… வந்திருக்கும் செய்தி தெரியும்…” என்றபின் சென்றாள்.
ராஜராஜ வர்மா பெருமூச்சுவிட்டார். அமைதியற்ற அசைவுகளுடன் பார்வதிபாயையும் மகனையும் பார்த்தார்.
பின்பக்கம் காலடியோசைகள் கேட்டன. தற்காலிகத் திவான் பொறுப்பிலிருந்த பாப்புராவும் பேஷ்கார் பாச்சு அண்ணாவிப் பிள்ளையும் விரைந்த காலடிகளுடன் வந்தனர்.
பாப்பு ராவ் அருகே வந்து ராஜராஜ வர்மாவுக்கு முன் முறைப்படி தலைவணங்கி “சர்வமங்களம்” என்றார். “காலையிலேயே கேள்விப்பட்டேன்… உடனே வரமுடியவில்லை. கச்சேரியில் ஒரு வேலை.” என்றார். பார்வதிபாயை ஒருமுறை பார்த்துவிட்டு “உண்மையில் நேற்று மாலையே நிலைமை மோசமாக இருந்தது என்றார்கள். நான் நேற்று நேராக கர்னல் மன்றோவின் மாளிகைக்குப் போய்விட்டேன். இரவெல்லாம் அங்கேதான் இருந்தேன். அவருக்கு பெரிய கவலை, ராணியின் உடல்நிலை இப்படி இருக்கிறதே என்று. குழந்தை எப்படி இருக்கிறது என்று என்னிடம் கேட்டார். குழந்தை நன்றாக இருக்கிறது என்று சொன்னேன்.”
“குழந்தைக்கு பால்கொடுக்க இரண்டு விருஷலிகளை ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று பேஷ்கார் பாச்சு அண்ணாவிப் பிள்ளை ஊடே நுழைந்து சொன்னார். பாப்பு ராவ் அவரை முறைத்தார். பாச்சு அண்ணாவிப் பிள்ளை பணிவுடன் புன்னகைத்தார்.
ராஜராஜ வர்மா “நான் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். நீங்கள் கச்சேரிக்கு போங்கள்” என்றார்.
“ஆமாம், கச்சேரியில் வேலை குவிந்து கிடக்கிறது. கர்னல் மன்றோ என்னை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளச் சொன்னார். ராவ் சாகேப், நீங்கள்தான் இனி கிட்டத்தட்ட திருவிதாங்கூரின் திவான் என்று சொன்னார். நான் என்ன சொல்ல? துரையே, நீங்கள் ராஜாவுக்குமேலே இருக்கும் ராஜா. நான் உங்கள் சேவகன் என்று சொன்னேன் ஹெஹேஹெ!” என்றார் பாப்பு ராவ் “என் வேலையை நான் செய்கிறேன். நான் ஒரு எளிய சேவகன்… அதற்குமேல் எனக்கென்ன?”
“சரி பார்ப்போம்” என்று ராஜராஜ வர்மா எரிச்சலுடன் சொன்னார்.
“சரி, நான் வந்ததைச் சொல்லிவிடுகிறேன். இதை நான் சொல்லும்போது சாட்சிவேண்டும் என்றுதான் பேஷ்கார் பாச்சு அண்ணாவிப்பிள்ளையையும் கூட்டிக்கொண்டுவந்தேன்” என்றார் பாப்பு ராவ்.
“சொல்லுங்கள்… இதோ கூப்பிட்டுவிடுவார்கள்” என்றார் ராஜராஜ வர்மா, அவருடைய முகம் மாறிவிட்டது.
பாப்பு ராவ் பார்வதிபாயை பார்த்தார்.
“அவள் இருக்கட்டும்… அவள்தான் இனி அடுத்த ராஜரத்தம்” என்றார் ராஜராஜ வர்மா.
“ஆமாம், அதை நான் யோசித்தேன்”என்றார் பாப்பு ராவ். “நான் சொல்லவேண்டியதை கர்னல் மன்றோ சொல்லி அனுப்பியிருக்கிறார். ஆகவே இவை எதுவுமே என் சொற்கள் அல்ல” குரலைத் தழைத்தார். “ஆகவே என் மேல் எந்தக் கோபமும் வந்துவிடக்கூடாது”
“இல்லை” என்று ராஜராஜ வர்மா சொன்னார்.
“அங்கே போய் அமர்ந்து பேசலாமே, ராஜகீய விவகாரம்.”
“இங்கேயே சொல்லலாம்” என்று ராஜராஜ வர்மா சொன்னார்.
“தெரியுமே, திருவிதாங்கூரின் இன்றைய நிலை மிகமிகப் பரிதாபம். சட்டம் ஒழுங்கு கர்னல் மன்றோ புண்ணியத்தால் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாயர்குழுக்களை ஒடுக்கிவிட்டோம். சந்தைகள் சீராக நடைபெறுகின்றன. ஆனால் நிதி நிலைமை? நான் என்ன செய்யப்போகிறேன் என்றே எனக்கு தெரியவில்லை. உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனின் அருளால் என் நாவில் சரஸ்வதியும் கண்ணில் லட்சுமியும் கையில் துர்க்கையும் குடிகொள்ளவேண்டும்” என்று பாப்பு ராவ் சொன்னார்.
ராஜராஜ வர்மா அவரை பார்க்காமல் அறைவாசலையே பார்த்துக் கொண்டிருந்தார் பாப்பு ராவ் அவரிடம் “உங்களுக்கும் திருவிதாங்கூருக்கும் சம்பந்தம் கிடையாது. நீங்கள் சங்கனாச்சேரி கோயித்தம்புரான், இங்கே மகாராணிக்கு கணவராக வந்தவர். இங்குள்ள நிலைமையை உங்களுக்குச் சொல்லி புரியவைப்பது கடினம்” என்றார்.
பாச்சுஅண்ணாவிப் பிள்ளையிடம் திரும்பி பாப்பு ராவ் சொன்னார் “கோயித்தம்புரான் என்றால் யார் என்று கர்னல் மன்றோ போனவாரம் கூட என்னிடம் கேட்டார். பழைய சோழர்காலத்தில் கோயிலுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் சோழர்கள் போனதுமே அரசர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். கோயில்கல் தம்புரான் என்றால் தம்புரான் மாதிரி என்றேன். யானைக்கு குழியானை மாதிரியா என்று துரை கேட்டார்… ஒரே சிரிப்பு ஹெஹேஹெ.”
பேஷ்கார் பாச்சு அண்ணாவிப்பிள்ளை கூடவே சேர்ந்து இழுத்து இழுத்துச் சிரித்தார்.
ராஜராஜ வர்மா முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமைதியாக “சொல்லுங்கள்” என்றார்.
அத்து மீறிவிட்டோமா என்று அதன்பிறகே பாப்புராவுக்கு தோன்றியது. “நான் சொன்னேன், அப்படியெல்லாம் சொல்லிவிடக்கூடாது துரையே. சங்ஙனாச்சேரி நீராழிக் கொட்டாரத்தில் ராஜராஜ வர்மா தம்புரான் என்றால் சாதாரணம் இல்லை. நாடும் கொடியும் குலமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மலையாளத்திலும் சம்ஸ்கிருதத்திலும் மகாவித்வான். பரப்பனங்காடு ராஜவம்சம். மகாராணிக்கு கோயிதம்புரான் என்றால் உயிருக்கு சமானம். ஆகவேதான் சங்கனாச்சேரி லக்ஷிபுரம் அரண்மனையை கட்டி அவருக்கு பரிசாக அளித்தார்கள்”
பாப்பு ராவ் பாச்சு அண்ணாவிப் பிள்ளையிடம் திரும்பி “தெரியுமே, அதற்குண்டான செலவைப்பற்றிக்கூட கர்னல் மன்றோ ஒரு கடுமையான கடிதம் அனுப்பியிருந்தார்கள். மகாராணி வழக்கமாக அப்படி கடுமையான கடிதங்கள் வந்தால் வருத்தப்படுவதுண்டு. மன்னிப்பு கோரி கர்னல் மன்றோவுக்கு கடிதமும் அனுப்பிவிடுவார். ஆனால் அரண்மனை கட்டிய செலவைப்பற்றி மட்டும் வருத்தமே படவில்லை. கர்னல் மன்றோவுக்கு பதிலும் அளிக்கவில்லை” என்றார்’
பாச்சு அண்ணாவிப் பிள்ளை “தெரியுமே… என்னிடமும் சொன்னார்கள். பாச்சுபிள்ளே, இது நம்முடைய தம்புரானுக்கான செலவல்லவா என்று”
பாப்பு ராவ் திரும்பி ராஜராஜவர்மாவிடம் “கர்னல் மன்றோவையும் சொல்லி பயனில்லை. திருவிதாங்கூர் இன்றைக்கு இருக்கும் நிலை இதுதான். ஏற்கனவே கடனில் மூழ்கி ராணுவக் கட்டணமும் கப்பமும் கட்டமுடியாமல் நாடு தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்தான் வேலுத்தம்பி தளவாய் பதவிக்கு வந்தார். நான் எல்லாவற்றையும் சரிசெய்து ஒழுங்காக கப்பங்களை கட்டி நாட்டின் நிதிநிலைமையை மேம்படுத்துவேன் என்று சொன்னார். ஆனால் என்ன நடந்தது?”
அவர் பார்வதிபாயை நோக்கி “அந்த ஜயந்தன் நம்பூதிரி செய்த தப்பு என்ன? கர்னல் மன்றோவுக்கு கொடுக்க வேண்டிய கப்பத்தையும் ராணுவக் கட்டணத்தையும் கொடுப்பதற்கு கொஞ்சம் கெடுபிடியாக வரிவசூல் செய்தார். அது என்னவோ மிகப்பெரிய அநீதி என்று சொல்லி மக்களை தூண்டிவிட்டு இவர் பதவிக்கு வந்தார். புண்ணை வாளால் அறுத்து வீசியதுபோல இன்னும் பெரிய புண் மிச்சம்.”
ராஜராஜ வர்மாவிடம் “இவர் மூன்றுமடங்கு கெடுபிடியாக வரிவசூல் செய்தார். அதற்கு எதிராக மக்கள் எழுந்தபோது வரிவசூல் செய்த பணத்தை செலவிட்டு அவர்களை அடக்கினார். அதையும் சேர்த்து கட்டவேண்டிய நிலுவைத்தொகை இருமடங்கு ஆகியது. வேலுத்தம்பி ஊரை அடித்துச் சுருட்டி சேர்த்து கம்பெனிக்குக் கட்டிய மொத்த கப்பம் அறுபதாயிரம் ரூபாய். ஆனால் அவர் சாகும்போது விட்டுச்சென்ற நிலுவைக் கப்பம் எட்டுலட்சம்… ”
கையை தூக்கி சுட்டுவிரலை காட்டி “ஆமாம் எட்டு லட்சம். அதற்கு எழாண்டு வட்டியும் அதன்பிறகான நிலுவையும் சேர்த்து இப்போது பதினேழு லட்சம் ரூபாய். அடுத்த ஆண்டு இருபத்திரண்டு லட்சம் ஆகிவிடும். பிரிட்டிஷ் சம்ஸ்தானங்களிலேயே மிகப்பெரிய தொகை நிலுவையில் இருப்பது திருவிதாங்கூர்தான். வைஸ்ராயே கவர்னரை கூப்பிட்டு நேரில் கேட்டுவிட்டார். கர்னல் மெக்காலே அவரால் முடியாது என்று கைவிரித்துவிட்டு போனார். கர்னல் மன்றோ செய்து காட்டுகிறேன் என்றுதான் திருவிதாங்கூருக்கே வந்தார்…”
“அவர் இல்லாவிட்டால் இந்த நாடு என்னவாகியிருக்கும். மகாராணி ஆட்சியில் அவரே திவானாக இருந்து நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனால் இங்கே போக்கிரி நாயர்களும் பொறுக்கி நாயர்களும் அடங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்களை நம்பமுடியாது” என்று பாப்பு ராவு தொடர்ந்தார் “ஆனால் நாயர்களின் எதிர்ப்பு உமித்தீ போல. இல்லை என்று தோன்றும், காற்றுவந்தால் தழல்விடும்… ”
அவரே சிரித்துக்கொண்டு “ஆனால் கர்னல் மன்றோவிடம் அவர்களின் ஆட்டம் நடக்காது. அவருக்கு டெல்லி கல்கத்தா வரை ராஜ்ஜியம் இருக்கிறது. மெட்ராஸ் ரெஜிமெண்ட் என்ற யானையின் வாலை பார்த்தாலே இந்த நாயர்கள் அய்யோ மலைப்பாம்பு என்று அலறிவிடுவார்கள்” என்று பாப்பு ராவ் சொன்னார்.
“சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்” என்றார் ராஜராஜ வர்மா.
“சொல்ல வந்தது இதுதான். கர்னல் மன்றோ கவலையுடன் இருக்கிறார். மகாராணி கௌரி லட்சுமிபாய் தம்புராட்டி இரண்டு ஆண்டுகளாகவே சரியான நிலையில் இல்லை. ஓராண்டாக உடல்நிலை மிகவும் சரியில்லை. கர்ப்பம், குழந்தை பிறந்த சிக்கல், அந்தக் குழந்தைக்கு ஒழுங்காகப் பால்கூட கொடுக்கமுடியவில்லை…” என்றார் பாப்பு ராவ்.
“இந்த நிலையில் வரிவசூலை எப்படிச் செய்ய முடியும்? மொத்த வரிவசூலையும் கட்டினாலும் ஆண்டுதோறும் கொடுக்கவேண்டிய ராணுவப் பாதுகாப்புச் செலவுக்கும் மதராஸுக்கான கப்பத்திற்கும் போதாது. அபராதத்தொகை வட்டியுடன் அப்படியே நிற்கும். பழைய நிலுவைக்கு வட்டியையாவது கட்டிக்கொண்டிருந்தால் நல்லது. ஆலப்புழை துறைமுகத்தில் இருந்து மட்டும்தான் சுங்கதீர்வை கொஞ்சமாவது வருகிறது… கொல்லமும் அஞ்சுதெங்கும் வளரவே இல்லை. இப்படியே நிலுவைத்தொகை வளர்ந்தால் திருவிதாங்கூரே பிச்சைக்கார நாடாக ஆகிவிடும்” என்றார் பாப்பு ராவ்.
“இப்போதே அப்படித்தான் இருக்கிறது, அரண்மனைச் செலவுக்கே பணமில்லை. மகாராணிக்கு மருத்துவம் பார்க்கவே பணமில்லை என்று சொல்லிவிட்டீர்கள்” என்றார் ராஜராஜ வர்மா.
“அதை நான்தான் சொன்னேன். நான் என்ன செய்வேன்? அது கர்னல் மன்றோ உத்தரவு. அரண்மனைக்கான மொத்தச் செலவு இத்தனைக்கு மேல் போகக்கூடாது என்று தெளிவாகவே சொல்லிவிட்டார். அரண்மனையின் காவல்படையை இருபது சதவீதம்தான் வைத்திருக்கிறோம். சேவகர்கள் பத்தே பத்து சதவீதம். மொத்தமே பன்னிரண்டுபேர். அரண்மனையின் சமையலறையில் சமைக்கவேண்டிய பொருளையே அளந்தும் எண்ணியும் கொடுக்க வேண்டியிருக்கிறது… இதன்நடுவே மருத்துவம் எப்படி பார்ப்பது?”
பாப்பு ராவ் குரலை தாழ்த்தி தொடர்ந்தார் “போர்ச்சுக்கல் மருத்துவர்கள் நல்லவர்கள், ஆனால் அவர்கள் பொன்பணம் அல்லவா கேட்கிறார்கள். நம்பூதிரி வைத்தியர்கள் நல்லவர்கள். அவர்கள் மகாராணிக்கு இலவசமாக சிகிழ்ச்சை அளிக்க கடமைப்பட்டவர்கள்.”
“சரி, இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்?”
“ஒன்றுமில்லை. இதோ இளம்ராஜா ராமவர்மா தம்புரான் நிற்கிறார். சுவாதித்திருநாள் மகாராஜா என்று கர்ப்பத்திலேயே முடிசூட்டிக்கொண்டவர். கர்பஸ்ரீமான். இப்போதே சங்கீத சாகரத்தை தொட்டுவிட்டார் என்கிறார்கள். அவர் நாளை அரியணை அமரும்போது எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும். அதுவரை ரீஜண்ட் மகாராணியாக இருக்கப்போகிறவர் இளையராணி உத்ரட்டாதி திருநாள் கௌரி பார்வதிபாய் தம்புராட்டி… அவரும் இங்கே இருக்கிறார். நான் பேசிக்கொண்டிருப்பது நடுவே இருக்கும் ஆண்டுகளைப் பற்றி…”
“சரி, நாம் பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று ராஜராஜ வர்மா சலிப்புடன் அறைக்கதவை நோக்கி நடந்தார்.
பாப்பு ராவு சிற்றடிகளுடன் பின்னால் வந்து “இல்லை நான் சொல்லவருவது ஒரு சின்ன விஷயம்… அதாவது பழைய சேரமான் பெருமாள் குலசேகரத் தம்புரான் காலம் முதல் இங்கே ஒரு ரகசிய நிதி இருந்து வருகிறது…. ”
“அதெல்லாம் வெறும் பழமைப்பேச்சு…” என்றார் ராஜராஜவர்மா.
“ஆமாம், அதை நானும் கர்னல் மன்றோவிடம் சொன்னேன். ஆனால் அவர் உமையம்மை மகாராணியின் காலம் முதல் உள்ள எல்லா ஓலைகளையும் ஆராய்ச்சி செய்கிறார். உமையம்மை மகாராணி பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து நெடுமங்காட்டுக்கு வந்தபோது கூடவே கொண்டுவந்த மூடுவண்டிகளைப் பற்றிய ஒரு குறிப்பு அரண்மனை ஓலைகளில் இருக்கிறது. நான்கு காளைகளை கட்டி இழுத்து கொண்டுவரப்பட்ட பெரிய பன்னிரண்டு வண்டிகள் வந்திருக்கின்றன. அவ்வளவு பெரிய வண்டிகள் எடைமிக்க பெட்டிகளை ஏற்றுவதற்காகத்தான் என்று கர்னல் மன்றோ நினைக்கிறார். அந்தப் பெட்டிகளில் இருந்த செல்வம் எங்கே?”
“இருக்கலாம்… ஆனால் அதற்குப் பின்னால் வந்தவர் மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாள் மகாராஜா. இந்த திருவிதாங்கூரை உருவாக்கிய அரசர். அவர் துறைமுகங்களை கட்டினார். திருவனந்தபுரத்தில் அரண்மனைகளை கட்டினார். பத்மநாபசாமி கோயிலை எடுத்து கட்டினார்… அதற்குச் செலவாகியிருக்கும்” என்றார் ராஜராஜ வர்மா.
“ஆமாம், அதை நான் சொன்னேன். ஆனால் கர்னல் மன்றோ சொன்னார், மார்த்தாண்டவர்மா போர்புரிந்து வென்றவர். கொல்லம், கொடுங்கல்லூர், கொச்சி ராஜாக்களை வென்றவர். அவருடைய ஆட்சிக் காலத்தில் மதுரையில் நாயக்கர் ஆட்சி இல்லாமலாகிவிட்டது. ராணி மீனாட்சியை சந்தா சாகிப் கொன்றபிறகு அங்கே மதுரையில் அரசாங்கமே இல்லை. ஆகவே ஆண்டுதோறும் கட்டவேண்டிய கப்பம் மிச்சம்… அவரிடம் இருந்த செல்வம் செலவாகியிருக்க வாய்ப்பே இல்லை. அவர் செலவழித்ததெல்லாம் அவர் ஈட்டிய செல்வம்தான். அதிலேயே மிச்சமும் வந்திருக்கும்”
ராஜராஜ வர்மா தெரியவில்லை என்பதுபோல கையை விரித்தார்.
“அந்த செல்வம் எங்கேயோ இருக்கிறது, இங்கே எங்கேயோ. அது அப்படி போய்விடாது. அது குலசேகரப்பெருமாள் தலக்குளம் சொரூபத்து தம்புராட்டிக்கு கொடுத்த செல்வம். அதைக்கொண்டுதான் திருவிதாங்கூர் அரசவம்சமே உருவாகியிருக்கிறது. அந்த புராதனமான பொக்கிஷத்தை அப்படி தவறவிட்டுவிடமாட்டார்கள்.”
“அதற்கு என்ன செய்யவேண்டும்?” என்றார் ராஜராஜவர்மா.
“திருவிதாங்கூரின் தாய்வழி மரபின்படி அந்தச் செல்வம் இருக்கும் இடம் பற்றிய செய்தி அரசிகளுக்கு மட்டும்தான் தெரியும். மகாராணி கௌரி லட்சுமிபாய் தம்புராட்டிக்கு தெரியும்..” பாப்பு ராவ் குரலை தாழ்த்தி “தெரிந்திருந்தால் அவர் அதை இளையராணி கௌரி பார்வதிபாய் தம்புராட்டியிடம் சொல்வார். அவருடைய உடல்நிலையை வைத்துப் பார்த்தால் இன்றே சொல்லியாக வேண்டும். அவர் அனைவரையும் பார்க்க வரச்சொல்லியிருப்பதைப் பார்த்தால் அவர் இன்று அதை சொல்லக்கூடும்”
ராஜராஜ வர்மா கோபத்தை அடக்கிக்கொண்டார். முகம் நன்றாகச் சிவந்துவிட்டது.
“அதை அவர் சொன்னதுமே இளையராணி திருவுள்ளம் கனிந்து கர்னல் மன்றோவிடம் அதைச் சொல்லிவிடவேண்டும். அதை உங்களிடம் சொல்லவேண்டும் என்று கர்னல் மன்றோ எனக்கு ஆணையிட்டார். சொல்வது அடியவன் கடமை” என்றார் பாப்பு ராவ்.
“பாப்பு ராவ், அப்படி ஒரு குடும்ப ரகசியத்தை மகாராணி இவளிடம் சொன்னால் அதை அவள் வெளியேசொல்வாள் என்று நினைக்கிறீர்களா?” என்றார் ராஜராஜ வர்மா.
“சொல்லியாகவேண்டும்… ஏனென்றால் நாம் நாகத்தின் நிழலில் நின்றிருக்கும் தவளைகள் போல” என்றார் பாப்பு ராவ் . “யோசித்துப் பாருங்கள், இதோ நம் மகாராணி கௌரி லட்சுமிபாய் அவர்களுக்குச் சாகும் வயதா? இருபத்தைந்து வயது… முகத்தில் பால்மணம் மாறவில்லை. முறையான மருத்துவச் சிகிழ்ச்சை இருந்திருந்தால் பிழைத்திருக்க மாட்டாரா? அந்தக்குழந்தைக்கு அன்னையின் பால் கிடைத்திருக்காதா?” அவர் கூர்ந்து பார்த்து “பிரசவம் நடந்த அன்று நீங்கள் இங்கே இல்லை. அரண்மனை மருத்துவரும் இல்லை. ஊர்பெயர் தெரியாத ஒரு வயற்றாட்டி மருத்துவம் பார்த்தாள். அவள் இன்று இல்லை…”
“மிரட்டுகிறீர்களா?” என்று ராஜராஜ வர்மா கேட்டார். அவர் தலை நடுநடுங்கியது.
“அதாவது சங்கனாச்சேரி கோயில்தம்புரான் ராஜராஜ வர்மா அவர்களுக்கு விஷயம் புரிந்துவிட்டது” என்று பாப்பு ராவ் புன்னகை செய்தார். பாச்சு அண்ணாவிப் பிள்ளையும் புன்னகை செய்தார்.
“மிரட்டலேதான். என்னுடைய மிரட்டல் என்றே வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாடு இன்று கர்னல் மன்றோவுக்குச் சொந்தம். ஆகவே இதன் செல்வங்களும் அவருக்குரியதே. அவற்றை மறைப்பது திருட்டுக்குற்றம்” பாப்பு ராவ் கிசுகிசுப்பான குரலில் “குற்றங்களை கர்னல் மன்றோ பொறுப்பதில்லை. எனக்கும் தண்டனைகளில் ஆர்வம் அதிகம்” என்றார்.
ராஜராஜ வர்மா மெல்ல அடங்கினார். அவர் உதடுகள் புன்னகையில் வளைந்தன. “பாப்பு ராவ், பிராமணனாக பிறந்தவர் நீங்கள். ஆகவே தொலைதூர நாடான மைசூரிலிருந்து வந்தவர் என்றாலும் இங்குள்ள மரபுகள் புரியும் என நினைக்கிறேன்…” என்றார். “இன்றைக்கு சரியாக அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு 1750 ல் இங்கே ஒரு மங்கல நிகழ்ச்சி நடந்தது. இந்த நாட்டை உருவாக்கிய மகாராஜா மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாள் தன் உடைவாளை உருவி அனந்தபத்மநாபனின் சன்னிதிமுன் வைத்து இந்த நாட்டை அப்படியே பத்மநாபசாமிக்கு காணிக்கையாக்கினார். அதை இங்கே திருப்படித்தானம் என்கிறார்கள். அதன்பிறகு இந்த நாடு அனந்தபத்பநாப சாமிக்குச் சொந்தமானது. அரசிக்கோ, கர்னல் மன்றோவுக்கோ, அல்லது என்னைப் போன்ற வேறெந்த ஒட்டுண்ணிக்கோ அல்ல…”
“நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன்” என்று பாப்பு ராவ் சொன்னார். “மகாராணி கௌரி லட்சுமிபாய்க்கு இருபத்தைந்து வயது… இளையராணி கௌரி பார்வதிபாய்க்கு பதிமூன்று வயதுதான்…” அவர் பார்வதிபாயை பார்த்து புன்னகைத்து “அக்காவை விட பன்னிரண்டு வயது குறைவு” என்றார்.
பார்வதிபாய் “எனக்கு நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை” என்று புன்னகையுடன் சொன்னாள்.
பாப்பு ராவ் உதடுகள் விரிந்திருக்க, கண்களில் சிரிப்பில்லாமல், “இளையராணி கௌரி ருக்மிணி பாய்க்கு நான்கு வயது… இளவரசர் சுவாதித் திருநாள் ராமவர்மாவுக்கு இரண்டு வயது… இளவரசர் மார்த்தாண்டவர்மாவுக்கு வெறும் எட்டு மாதம்… அனைவரும் நீண்ட ஆயுளுடன் நலமாக இருக்கவேண்டும்” என்றார்.
“படைவீரன் வெற்றியைத்தான் வேண்டிக்கொள்ளவேண்டும் நீண்ட ஆயுளை அல்ல என்பார்கள்” என்று பார்வதிபாய் சொன்னாள். “தெரிந்திருக்கும், தீர்ககாயுஸ் என்று படைவீரர்களை வாழ்த்தும் வழக்கம்கூட இல்லை.”
பாப்புராவின் புன்னகை மறைந்தது.
பார்வதிபாய் மென்மையான புன்னகை மாறாமலிருக்க “எனக்கு தமிழ் சொல்லித்தந்தது வள்ளியூர் சுப்பு அண்ணாவிப் பிள்ளை… பேஷ்கார் பாச்சு அண்ணாவிப் பிள்ளையின் ஏற்பாடுதான்” என்றாள்.
“ஆமாம், அவர் என் சொந்தக்காரர். தாய்மாமன் மாதிரி” என்றார் பாச்சு அண்ணாவிப் பிள்ளை.
“அவர் ஒரு பழைய புத்தகத்திலிருந்து நாற்பது ஈரடிப்பாட்டு சொல்லித்தந்தார். தமிழிலுள்ள பழைய அர்த்தசாஸ்திரம் என்று சொன்னார்” என்று பார்வதி பாய் அந்தப் பாடலை சொன்னாள் “தற்காத்து தற்கொண்டார் பேணி தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்.”
பாச்சுஅண்ணாவிப் பிள்ளை குழப்பமான புன்னகையுடன் “தெரியவில்லை தம்புராட்டி” என்றார்.
“அவரிடமே போய் கேளுங்கள்” என்று பார்வதிபாய் சொன்னாள்.
“கேட்கிறேன் கேட்கிறேன்” பாச்சு அண்ணாவிப் பிள்ளை பணிந்து சொன்னார். அவருடைய உடல்மொழியே மாறிவிட்டிருந்தது.
பாப்பு ராவ் அவர்களை மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். பார்வதிபாய் அவரிடம் “நீங்கள் அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்றாள், புன்னகைத்துவிட்டு முன்னால் சென்றாள்.
அவர்கள் அறைக்குள் நுழைந்தபோது ராஜராஜ வர்மா பெருமூச்சு விட்டார். “இங்கே நிகழ்ந்ததை எல்லாம் லட்சுமியிடம் சொல்லவேண்டியதில்லை” என்றார்.
“சொல்லவில்லை” என்றாள் பார்வதிபாய்.
லட்சுமி பாய் விரிந்த தாழ்வான கட்டிலில் வெண்ணிற விரிப்பிடப்பட்ட மெத்தைமேல் படுத்திருந்தாள். அவள் முகம் வற்றி ஒடுங்கி கண்கள் குழிக்குள் சென்றுவிட்டிருந்தன. உதடுகள் வரண்டு கன்னங்கள் ஒட்டியிருந்தமையால் பற்கள் சற்று மேலெழுந்தது போல தோன்றியது. உடல் வெளிறிச் சுருங்கி அவள் சிறுமி போல ஆகிவிட்டிருந்தாள்.
அவர்கள் அருகே சென்றதை அவள் அறியவில்லை. அருகே நின்றிருந்த முதிய மருத்துவச்சியான பகவதிக்குட்டி “எழுப்பணுமா?” என்றாள்.
“ஆமாம்” என்றார் ராஜராஜ வர்மா.
அவள் மெல்ல குனிந்து “மகாராணி, மகாராணி, மகாராணி” என்று சீராக கூப்பிட்டுக்கொண்டே இருந்தாள். லட்சுமிபாயின் விழியிமைகள் அசைந்தன. உலர்ந்து கூம்பிய உதடுகள் மெல்ல பிரிந்தன.
“அக்கச்சி” என்று அருகே மண்டியிட்டு அவள் கையைப்பற்றிக் கொண்டு பார்வதிபாய் அழைத்தாள்.
“பாறு” என்று லட்சுமிபாய் அழைத்தாள். மிகமிக அரிதாக அவர்கள் மட்டும் தனித்திருக்கையிலேயே அவ்வாறு அவள் அழைப்பது வழக்கம்.
“தம்புரான் வந்திருக்கிறார். குழந்தைகள் வந்திருக்கின்றன அக்கச்சி” என்று பார்வதிபாய் சொன்னாள். திரும்பி ருக்மிணி பாயையும் ராமவர்மாவையும் இழுத்து லட்சுமிபாயின் அருகே நிற்கவைத்தாள்.
லட்சுமி பாயின் முகம் மலர்ந்தது. அவள் தன் மெலிந்த கையை நீட்டினாள். அவள் விரல்கள் சிறிய குச்சிகள் போல ஆகிவிட்டிருந்தன. அவளுடைய பழைய முத்திரை மோதிரம் நழுவிவிழுந்துவிடாமலிருக்க துணியால் சுற்றப்பட்டிருந்தது.
ருக்மிணி பாய் அருகே சென்று நின்றாள். அவள் இடையை பிடித்து அருகே இழுத்தபோது லட்சுமி பாயின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.
“தம்பியை பார்த்துக்கொள் ருக்மிணி” என்றாள் லட்சுமி பாய்.
ருக்மிணி பாய் தலையசைத்தாள்.
“அச்சன் தம்புரானைப் பார்த்துக்கொள், அவருக்கு ஒன்றும் தெரியாது” என்றபடி அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
நெஞ்சில் கைகளைக் கூப்பி வைத்துக்கொண்டு குனிந்து நின்றிருந்த ராஜராஜ வர்மா கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தார்.
“வேண்டாம் அழக்கூடாது” என்று லட்சுமி பாய் சொன்னாள். “விதி அவ்வளவுதான்…”
அவர் உரக்க விசும்பினார்.
அவள் திரும்பி ராமவர்மாவை பார்த்தாள். புன்னகைத்து அருகில் வர தலையசைத்தாள். அவன் ஓர் அடிவைத்து அருகே சென்றான். அவன் தலையில் கைவைத்தாள். திரும்பி பெருமிதமான புன்னகையுடன் கேட்டாள்.
“கர்ப்பஸ்ரீமான், இல்லையாடி பாறு?”
பார்வதிபாய் புன்னகைத்தாள்.
“அம்மாவன் இவனுக்காக பாடிய பாட்டு, அதை பாடுடி.”
பார்வதி பாய் “ஓமனத்திங்கள் கிடாவோ நல்ல கோமளத் தாமரப்பூவோ பூவில் விரிஞ்ஞ மதுவோ! பரிபூர்ணேந்து தன்றே நிலாவோ!” என்று மெல்ல பாடினாள்.
லட்சுமி பாய் அதில் சேர்ந்துகொண்டாள். அவள் குரல் மிகமிக சன்னமாக இருந்தது. உதடுகள் அசைவதுதான் தெரிந்தது. ஆனால் முகம் மலர்ந்து கனிந்திருந்தது.
பாடி முடித்ததும் லட்சுமி பாய் பெருமூச்சுவிட்டாள். நிமிர்ந்து ராஜராஜ வர்மாவை பார்த்து “போகலாம்… நான் இவளிடம் பேசவேண்டும்” என்றாள்.
ராஜராஜ வர்மா தலைவணங்கி ருக்மிணிபாயையும் ராமவர்மாவையும் கூட்டிக்கொண்டு வெளியே சென்றார். அப்பால் நின்றிருந்த பகவதிக்குட்டியும் உடன் சென்று கதவை மூடிக்கொண்டாள்.
லட்சுமி பாயின் முகம் மாறியது. “கர்னல் மன்றோ உன்னிடம் பேசினாராடி?” என்றாள்.
“இல்லை அக்கச்சி, ஆனால் அவர் சொன்னதாக பாப்பு ராவும் பாச்சு அண்ணாவியும் வந்து பேசினார்கள்.”
“நினைத்தேன்…” என்றாள். “அவர்கள் என்ன கேட்டார்கள் என்று எனக்கு தெரியும். மிரட்டினார்களா?”
பார்வதிபாய் “அக்கச்சி, என்னை மிரட்ட யாராலும் முடியாது.”
லட்சுமி பாய் திடுக்கிட்டவள் போல நிமிர்ந்து பார்த்தாள். பின் அவள் கண்ணில் நீர் பரவியது. நடுங்கும் கைகளை நீட்டி பார்வதிபாயின் கைகளை பிடித்துக்கொண்டாள். “ஆமாம் பாறு. நீ துர்க்கையின் ரூபம்… நீதான் இனி திருவிதாங்கூருக்கும் என் குழந்தைகளுக்கும் காவல்.”
“நான் பார்த்துக்கொள்கிறேன் அக்கச்சி” என்று உறுதியான குரலில் பார்வதிபாய் சொன்னாள்.
“ராஜநாகத்திடம் புதையலை ஒப்படைத்துப் போவதுபோல உன்னை நம்பி நான் போவேன்… பகவதீ, தேவீ, எவ்வளவு பயந்தேன். எவ்வளவு அழுதேன். நீ என் தங்கை என்பதனாலேயே உன் பூர்ணரூபம் எனக்குத் தெரியாமல் போய்விட்டதே.”
பார்வதிபாய் “பத்மநாபனும் பகவதியும் எனக்கு துணையுண்டு” என்றாள்.
“பாப்பு ராவ் பேராசைக்காரன்… அன்னியநாட்டான். இந்த பாச்சு அண்ணாவி நாஞ்சில் நாட்டுக்காரன். அவன் எப்படி துணிந்து வந்து உன்னை மிரட்டினான்!”
“பாச்சு அண்ணாவி வந்தது நல்லது அக்கச்சி” என்று பார்வதிபாய் புன்னகையுடன் சொன்னாள். “நான் ரீஜண்ட் ராணியாக ஆனால் அந்த வாரமே அவரை ஒரு வீரன் தலைவெட்டிக் கொல்வான். தலையில்லாத சடலம் பாப்பு ராவ் வீட்டு முன்னால் பகல் முழுக்க கிடக்கும்.”
“அய்யோ அய்யய்யோ!” என்று மெல்ல கூச்சலிட்டபடி லட்சுமி பாய் பார்வதிபாயின் கையை பிடித்து உலுக்கினாள். “என்னடி, என்னடி சொல்கிறாய்?”
“பாப்பு ராவைக் கொன்றால் திருவிதாங்கூருக்கு பிரம்மஹத்தி தோஷம் வந்துவிடும் அக்கச்சி…”
“எடீ… வேண்டாமெடீ.”
“மன்றோ துரைக்கும் ஒரு செய்தி சொல்லவேண்டுமே.”
“எடீ மகாபாவீ… இதெல்லாம் என்னடீ?” என்று லட்சுமி பாய் பதறினாள்.
பார்வதிபாய் புன்னகையுடன் “இது ராஜ்யவிவகாரம் அக்கச்சி.. ” என்றாள்.
லட்சுமி பாய் அவளை சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பெருமூச்சுடன் “இருக்கலாம்… வாளென்றால் கூர்மையாகத்தான் இருக்கவேண்டும்” என்றாள். “என்னால் முடியவில்லை பாறு… நான் எல்லாவற்றுக்கும் பயந்தேன். எல்லாவற்றுக்கும் விளக்கம் அளித்தேன். மன்றாடவும் கெஞ்சவும் கூட செய்தேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது கொஞ்சமாவது நிறைவை தருவது நான் அழுததெல்லாம் தனிமையில்மட்டுமே என்பதுதான்.”
“நீ மென்மையானவள் அக்கா.”
“ஆமாம். நான் பாடவும் வீணைவாசிக்கவும் கதகளி பார்க்கவும் மட்டும்தான் ஆசைப்பட்டேன். காயலில் படகில் போகவும் காட்டுக்குள் பரணில் தங்கவும் கனவுகண்டேன். இந்த சிம்மாசனம் நான் நினைத்ததே இல்லை… ” அவள் சற்றுநேரம் பேசாமல் இருந்தாள். மூச்சிரைப்பை சமன் செய்கிறாள் என்று தெரிந்தது.
“பாறு, எனக்கிருந்த மிகப்பெரிய தவறு ஒருவிஷயத்தின் நியாயத்தைச் சொல்லி புரியவைத்துவிட்டால் மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பியது… நான் அடைந்த எல்லா ஏமாற்றமும் அவமானமும் துக்கமும் அதனால்தான்” என்றாள் லட்சுமி பாய்.
“ஒருகையில் துரட்டியும் மறுகையில் கரும்பும் இருந்தாலொழிய யானை படியாது அக்கச்சி.”
“இதெல்லாம் உனக்கு யாரடி சொல்லித்தந்தது?”
“நானே கற்றுக்கொண்டேன்… நீ ஆட்சிசெய்த ஐந்து ஆண்டுகளில் அருகே நின்று பார்த்தேனே…”
சட்டென்று லட்சுமி பாய் சிரித்துவிட்டாள். “நான் உனக்கு வகுப்பு நடத்தியிருக்கிறேன்” என்றாள். அந்த சிரிப்பு அவளை மீளவைத்தது. அவள் திணறல் குறைந்தது. “பாறு, நம்மிடம் ஒரு பெரும்செல்வம் இருக்கிறது தெரியுமா?”
“கேள்விப்பட்டிருக்கிறேன்.”
“அதைப்பற்றிய எல்லா கதைகளும் உண்மை… அது அந்த பிரிட்டிஷ் வைஸ்ராயையே விலைகொடுத்து வாங்கும் அளவுக்கு பெரிய செல்வம்…அதில் ஆயிரத்தில் பத்தாயிரத்தில் ஒரு பகுதி போதும், நம் கடனெல்லாம் அடைந்துவிடும்”
பார்வதிபாய் தலையசைத்தாள்.
“வடக்கே கொடுங்கல்லூர் என்று இன்றைக்கு அழைக்கப்படும் ஊருக்கு பழையகாலத்தில் வஞ்சி என்று பெயர். அங்குள்ள கொன்றைவனநாதரின் கோயிலுக்கு வஞ்சைக்குளம் என்றுதான் இன்றும் பெயர். வஞ்சியை தலைநகரமாக கொண்டு ஆண்ட பெருமாள்களில் கடைசிபெருமாளான சேரமான் பெருமாள் ராமவர்மா குலசேகர நாயனார் இன்றைக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கே வந்தார். திருவட்டாறில் ஒரு அரண்மனை கட்டி குடியிருந்தார்” என்று லட்சுமி பாய் சொன்னாள்.
“அன்றைக்கு திருவிதாங்கூர் இல்லை. சோழர்களின் ஆட்சி இருந்தது. இந்த நாட்டை சோழர்கள் பல நாடுகளாக பிரித்து பலரை அதற்கு பொறுப்பாக்கியிருந்தார்கள். வேணாடு, நாஞ்சில்நாடு, திருப்பாப்பூர் என்று பலபகுதிகளாக இருந்தது அன்றைய நாடு” என்றாள் லட்சுமி பாய் “குலசேகரப் பெருமாள் அன்றிருந்த தலக்குளம் ஸ்வரூபம் என்ற சிற்றரசில் பனங்காவு அரண்மனையில் இருந்து ஒரு இளவரசியை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு அப்போது அறுபது வயது. இளவரசிக்கு பதினாறு வயது”
“குலசேகரப்பெருமாள் அந்த இளவரசிக்கு சேரன் செங்குட்டுவனின் கிரீடத்தையும் உடைவாளையும் செங்கோலையும் கருவூலத்தையும் பரிசாக கொடுத்தார். சேரன் செங்குட்டுவனின் வாளும் செங்கோலும் அவளிடமிருந்ததனால் அவளை மற்றவர்கள் அரசியாக ஏற்றுக்கொண்டாகள். அவளுடைய வம்சம்தான் திருவிதாங்கூர் அரசகுடும்பம். ஆகவேதான் நாம் வஞ்சியின் அரசர்கள் என்று சொல்லிக்கொள்கிறோம்”
“அந்த கருவூலம் அப்படியே நம்மிடம் இருக்கிறது. அது பெண்களின் சொத்து. அரசராக ஆண் இருந்தாலும்கூட ராஜகுடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு மட்டுமே அந்த பொக்கிஷம் இருக்கும் ரகசியம் தெரியும்…” என்று லட்சுமி பாய் சொன்னாள் “எனக்கு முன்பிருந்த அம்மை மகாராணி சொன்னார்கள். நான் உனக்குச் சொல்கிறேன்.”
அருகே வரும்படி லட்சுமி பாய் கைகாட்ட பார்வதிபாய் குனிந்தாள்.
“அது இருக்குமிடம் பத்மநாபசாமி கோயிலின் அடியிலுள்ள ஏழு நிலவறைகள். அங்கே அப்படி ஒரு நிலவறை இருப்பதே எவருக்கும் தெரியாது” என்று லட்சுமி பாய் சொன்னாள். “அங்கே பொன்னும் முத்தும் வைரமும் நிறைந்திருக்கிறது. மலைபோன்ற செல்வம். ஆனால் அது நமக்குரியது அல்ல, பத்மநாபசாமிக்குரியது. அதில் ஒரு திருகாணி அளவுக்கு பொன்கூட நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது” என்றாள் லட்சுமி பாய்
“பாறு, இந்த அரண்மனையில் சென்ற ஆண்டில் பலமுறை சமையலுக்கு அரிசி இல்லாமல் ஆகியிருக்கிறது. நாஞ்சில்நாட்டு வேளாளப் பிடாகைகளுக்கு ரகசியமாக ஆளனுப்பி அரிசி வாங்கியிருக்கிறேன். அரண்மனையின் சேவகர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லாமல் நான் கர்னல் மன்றோவை தேடிப்போய் கெஞ்சியிருக்கிறேன். எல்லாம் இந்த மாபெரும் செல்வத்தின் மேலே அமர்ந்தபடி…”
“மிகப்பெரிய வேடிக்கை. ஆனால் ராஜ்யபாரம் என்பதே பெரிய வேடிக்கைதான்…” என்று லட்சுமி பாய் தொடர்ந்து சொன்னாள். மீண்டும் அவளுக்கு மூச்சிரைக்க தொடங்கியது. “அரசியரான நமக்கு மட்டுமே தெரிந்த பாஷையாகிய ஸ்ரீபரையில் நான் உனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அது என் அறையில் என்னுடைய சொந்த துணிப்பெட்டியின் அடியில் இருக்கிறது. துணிப்பெட்டியை கவிழ்த்தால் அடியில் அதைச் சேர்த்து ஒட்டியிருப்பது தெரியும்”
“அதில் அந்த நிலவறைகளைப் பற்றிய செய்திகள் உள்ளன. அதற்குரிய சாவிகள் தனியாக இல்லை. இந்த அரண்மனையின் நாநூறு சாவிகளில் அந்த அறைகளுக்குரிய பதினெட்டு சாவிகளும் உள்ளன. அவற்றை வரிசையாக பயன்படுத்த ஒரு கணக்கு உண்டு. அதுவும் அந்த கடிதத்தில் இருக்கும்”
“அக்கச்சி அதை நீ எழுதினாயா?”
”இல்லை, அம்மைமகாராணி எனக்கு கொடுத்த கடிதம் அது”
“நீ அந்த பொக்கிஷத்தை திறந்து பார்த்தாயா?”
“இல்லை பாறு, எனக்கு தைரியம் இல்லை. அது குபேரனின் கருவூலம் போன்ற செல்வம் என்றாள் அம்மை மகாராணி. வைரங்களே ஆயிரக்கணக்காக இருக்கின்றன. அதை பார்த்தால் நான் கிறுக்காகிவிடுவேன் என்று தோன்றியது” என்று லட்சுமி பாய் சொன்னாள் “அம்மை மகாராணி அதைச் சொல்லிக் கேட்டபோதே எனக்கு பலநாட்களுக்குக் கொடூரமான கனவுகள் வந்துகொண்டிருந்தன.”
“அதை எடுக்க என்ன நிபந்தனை?”
“இங்கே பஞ்சம் வந்து பட்டினியால் மக்கள் சாகவேண்டும்… பஞ்சம்போக்க கஞ்சித்தொட்டி திறப்பதற்கு மட்டும்தான் அதிலிருந்து செல்வத்தை எடுக்கவேண்டும்… மிக ரகசியமாக எடுக்கவேண்டும். அங்கிருந்து எடுத்தது என்று எவருக்குமே தெரியக்கூடாது.”
“நான் எடுக்கப்போகிறேன்.”
“என்னடி சொல்கிறாய்?”
“இங்கே பஞ்சம் இல்லை. இங்கே காய்ச்சில்கிழங்கும் கீரையும் இருக்கும்வரை பஞ்சம் வராது… ஆனால் அங்கே பாண்டிநாடு முழுக்க பஞ்சம்தான். இங்கே கஞ்சித்தொட்டி திறப்பேன். பஞ்சம் பிழைக்க வரும் மக்களுக்கெல்லாம் மேற்குமலையைச் சுற்றியிருக்கும் காடுகளை கொடுப்பேன். ஓராண்டு விவசாயம் செய்ய பணமும் கொடுப்பேன்” என்று பார்வதிபாய் சொன்னாள் “அடுத்த ஆண்டே அவர்கள் தீர்வை தர ஆரம்பிப்பார்கள்… தீர்வை வருமானம் பலமடங்காகும். ஐந்தாண்டில் திருவிதாங்கூர் எல்லா கடன்களையும் அடைத்துவிடும். இங்கே எல்லாம் சரியாகிவிடும். வியாபாரமும் கல்வியும் பெருகும்.”
“நீ செய்வாயடி… உன்னால் முடியும். இப்படியெல்லாம் நீ யோசிப்பாய் என்று எனக்கு தெரியும். ஆனால் நான் உன்னை என் செல்லப்பெண்ணாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.”
லட்சுமி பாய் பெருமூச்சுவிட்டாள்.
“அக்கச்சி, நான் நிறைய யோசித்திருக்கிறேன். இங்கே இதுவரை ஆட்சிசெய்தவர்களுக்கு தெரியாத ஒன்று இது. நாட்டில் மக்களிடம் பணமிருந்தால்தான் இங்கே கஜானாவில் பணம் வந்துசேரும்” என்றாள் பார்வதி பாய் “அதற்கு எல்லா ஜாதிகளும் பணம் சம்பாதிக்கலாம் என்ற வாய்ப்பை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் கடுமையாக உழைப்பார்கள், பணம் சம்பாதிப்பார்கள். சம்பாதித்த பணத்தை அவர்கள் புதைத்து வைக்கக்கூடாது. வெளியே காட்டவேண்டும். அதைப்பார்த்து மற்றவர்களும் சம்பாதிப்பார்கள்.”
“அதற்கு என்ன செய்வாய்?”
“இப்போது தாழ்ந்த சாதிகள் நகைபோடக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. எல்லா சாதிகளும் பொன் போடலாம் என்று ஆணையிடுவேன்.”
“பிறகு?” என்றாள் லட்சுமி பாய்.
“எல்லாருக்கும் கட்டாயமாக ஆரம்பக்கல்வி அளிப்பேன்” என்று பார்வதி பாய் சொன்னாள். “படித்த மக்களால் வறுமையில் இருக்க முடியாது. அவர்கள் பணம் சம்பாதிப்பார்கள். இன்றைக்கு திருவிதாங்கூரில் முக்கால்வாசி மக்கள் மிருகங்கள்போல இருக்கிறார்கள். வயிறுநிறைந்தால் தூங்கிவிடுகிறார்கள்.”
“சரி பிறகு?”
“குடியான் அடியான் முறையை ஒழிப்பேன். சம்பளம் இல்லாமல் வேலையே இருக்கக்கூடாது.”
“அரசாங்கத்திற்கு மக்கள் இலவசமாக ஊழியம் செய்யும் வழக்கம் இருக்கிறது” என்றாள் லட்சுமி பாய்.
“அப்படியென்றால் ஊழிய முறையையும் ஒழிப்பேன்.”
புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு “இதையெல்லாம் எப்போது யோசித்தாய்?”
“அக்கச்சி, நான் உங்களிடம் நீங்கள் பதவிவிலகி என்னை அரசியாக்குங்கள் என்று கேட்கலாமென்று நினைத்தேன்… எனக்கு பதினெட்டு வயதானபிறகு.”
“உனக்கு எதற்கடி பதினெட்டு வயது? நான் ரீஜண்ட் ஆனபோது உனக்கு எட்டு வயது… நீ அப்போதே ராணியாகியிருக்கலாம்” என்றாள் லட்சுமி பாய்.
பார்வதிபாய் புன்னகைத்தாள்.
இருவரும் எல்லாவற்றையும் பேசி முடித்ததுபோல சற்றுநேரம் அமைதியாக இருந்தனர். லட்சுமி பாய் கைநீட்டி ஒரு கயிற்றை இழுத்தாள். வெளியே மணியோசை எழுந்தது.
பகவதிப் பிள்ளை வந்து தலைவணங்கினாள் “என் குழந்தையை கொண்டுவா” என்றாள்.
அவள் வெளியே சென்று குழந்தையை கொண்டுவந்தாள். மார்த்தாண்டவர்மா மூங்கில்தொட்டிலில் துணிச்சுருளுக்குள் தூங்கிக் கொண்டிருந்தான்
தொடாமல் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் லட்சுமி பாய். பிறகு கொண்டுபோகலாம் என்று தலையசைத்தாள். பகவதிப்பிள்ளை குழந்தையைக் கொண்டுசென்றாள்.
வெளியே எவரிடமோ காவலன் “ஸ்ரீபத்மநாபஸேவினி, வஞ்சிதர்ம வர்த்தினி, ராஜராஜேஸ்வரி ஆயில்யம் திருநாள் கௌரிலட்சுமி பாய் தம்புராட்டி ஸவிதம்!” என்று கூறியது கேட்டது.
லட்சுமி பாய்யின் உதடுகள் ஏளனச்சிரிப்பால் வளைந்தன. ஆனால் அச்சிரிப்பில் அவள் அழகாக ஆனாள். இளமையானவளாக, சிறுமியாக. “பாறு, நம்மை தத்து எடுப்பதற்கு முன்பு சேங்ங கோவிலகம் கொட்டாரத்தில் சின்னப்பெண்களாக விளையாடியதெல்லாம் நினைவிருக்கிறதா?”
“ஆமாம்” என்றாள்.
“ஒருமுறை காயலில் நாம் இருவர் மட்டும் ஒரு சிறிய கைவள்ளத்தில் துடுப்பிட்டுப் போனோமே?”
“ஆமாம்.”
“அந்த தோணிப் பாட்டு ஞாபகம் இருக்கிறதாடி?”
“இருக்கிறது.”
“பாடு.”
பார்வதிபாய் தொண்டையை கனைத்து மெல்ல பாடினாள்.
“ஒந்நாம் துழ, ரண்டாம் துழ ,மூநாம் துழ போணே!
நாலாம் துழ, அஞ்சாம் துழ, ஆறாம் துழ போணே!
திரகொள்ளும் காயலில் என்றே ஆலோல களிவள்ளம்
கரகாணா கடல்தேடி என்ற அலங்கார களிவள்ளம்!”
அவளுடன் மெல்ல லட்சுமி பாய் பாடிக்கொண்டிருந்தாள். இமைகள் சரிந்து முகம் கூம்பியிருந்தாலும் புன்னகை நிறைந்திருந்தது. பார்வதிபாய் அவளை பார்த்தபடி பாடிக்கொண்டிருந்தாள். லட்சுமி பாயின் உதடுகள் அசையவில்லை என்று கண்டதும் நிறுத்திக் கொண்டாள். அவள் கையை தன் கையால் பிடித்தபடி உள்ளிருந்து எழுந்த ஒன்றால் ஒளிகொண்டிருந்த அந்த முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
***