இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்

இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்

அன்புள்ள ஜெ,

இசுமியின் நறுமணம் சிறந்த சிறுகதை. அதில் அந்த மலர்தன் மையமான உவமை. அந்த மலர் பற்றிய ஓரிரு வரி கூடுதலாக இருந்திருந்தால் அந்தக்கதையின் மையம் கொஞ்சம் அழுத்தமாக வாசகர்களில் பதிந்திருக்கும் என நினைக்கிறேன்

கெ.எஸ்.ராஜன்

***

அன்புள்ள ஜெயமோகன்,

‘இசுமியின் நறுமணம்’ சிறுகதை வாசித்தேன். ஒரு கொண்டாட்ட மனநிலையில் தொடங்கி உணர்வுபூர்வமாக முடியும் கதை.

காலையில் இயந்திரத்தனமாக வேலைசெய்து, இரவில் குடியும் கொண்டாட்டமுமாக இருக்கும் ஜப்பானியர்களின் ஆழ்மன ஏக்கத்தை இக்கதை வெளிப்படுத்துகிறது.

அது மணமாக வெளிப்படுகிறது. நறுமணத்தை மொழியால் விவரிப்பது கடினம், அது படிமங்களாகவும் நினைவுகளாகவுமே மனதில் பதியும்.

அவ்வாறே இசுமியின் மனம் கோபயாஷியின் நினைவுகளை கிளர்த்தியுள்ளது. ஜப்பானின் கடந்தகால மணம் அது.

அருமையான கதை.

தங்கள்,

கிஷோர் குமார்,

திருச்சி.

***

அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

அன்புள்ள ஜெ

தெய்வீகனின் சிறுகதையில் எனக்கு ஒரு சிறிய பிரச்சினை இருந்தது. அதில் அருட்செல்வனின் சாவு பற்றிய பகுதி கதையில் ஆர்கானிக்கான கட்டமைப்புக்கு வெளியே ஆசிரியர் சொல்வதுபோல இருந்தது. கதை முழுக்க தன்னிலையில் இருக்கும்போது இது வெளியே கூட்டிச்சேர்க்கப்பட்டது. இதைப்போன்ற ஆசிரியர் கை தெரியும் எழுத்து ஒருவகையான மெடஃபிக்சனுக்கு உதவும். ஆனால் இது மெடஃபிக்சன் அல்ல என்பதனால் அது அங்கே கூடுதல்தான்.

துப்பாக்கி வழியாகவே கதை நகர்ந்திருந்தால் மற்றதெல்லாம் சில கீற்றுகளாக வாசகனுக்கே விடப்பட்டிருந்தால் இன்னும் கதை செறிவாக இருந்திருக்கலாம். அதாவது துப்பாக்கியின் கதையாக மட்டுமே கதை அமைந்திருக்கலாம். எனக்கு அப்படி வாசிக்க தோன்றியது. மற்றபடி வயலென்ஸ் ஒரு நோய் போல தொற்றிக்கொள்வதும் அதை விட்டு விடவே முடியாதபடி விதியாக வாழ்க்கையிலே இருப்பதும் சிறப்பாக சொல்லப்பட்ட நல்ல கதை

எம்.ராஜேந்திரன்

***

கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி

அன்புள்ள ஜெ

மணி எம்கே அவர்களின் கதையான கவி சிறந்த படைப்பு. சீரோ நெரேஷன் என்றால் அது அர்பன் படைப்பாகவே இருக்கமுடியும். அது நகரத்தை மட்டுமே சொல்லமுடியும். ஏனென்றால் அதைச் சொல்லவேண்டியதே இல்லை. எல்லாருக்கும் தெரிந்திருக்கும். எல்லா நகரத்திலும் ஒரு பகுதி அழுகிக்கொண்டிருக்கும் என்று சால்பெல்லோ சொல்கிறார்.[Mr. Sammler’s Planet]இந்த அழுகலை காட்டும் கதை. கதையில் மேலதிகமகா நின்ற ஒருவரி, கொஞ்சம் பிசிறான வரி “வரட்டுமா என்று விடைபெறப் போன போதுதான் இந்தக் கதையை முடிக்கப் போகிற அந்தக் கேள்வியைக் அவள் கேட்டாள்”. இந்தக்கதையை முடிக்கப்போகிற என்ற வார்த்தை கதைசொல்லியை கவியின் கதாபாத்திரமாக மாற்றுகிறது. அதற்கு இந்தக்கதைக்குள் தேவையான முகாந்திரம் இல்லை

ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஜெ

பணம் கேட்டதுமே தில்லைநாயகியை தவிர்க்கிறான் கவி. ஆனால் அவள் அவனுக்கு சும்மா, ஒரு பலனும் எதிர்பாராமல் பணம் கொடுக்கிறாள். வாழ்க்கையிலுள்ள இந்த விசித்திரத்தை அந்தக்கதைக்குள் எவருமே உணர்வதில்லை. அவள் ஏன் இவனுக்கு பணம் கொடுக்கவேண்டும்? இரக்கம் என்பதைவிட வேறொன்று இருக்கிறது

மகேஷ்

***

கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி

உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்

இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்

அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

கன்னி- [சிறுகதை] ம.நவீன்

=============================================================

இசூமியின் நறுமணம்-கடிதங்கள்

தெய்வீகன்,நவீன் சிறுகதைகள்- கடிதங்கள்

அவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்

கன்னி- கடிதங்கள்

ம.நவீன்

முந்தைய கட்டுரைஉதிரம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்