‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–76

பகுதி ஏழு : நீர்புகுதல் – 5

யுதிஷ்டிரனுக்கும் சகுனிக்கும் இடையே நிகழ்ந்த அந்த நாற்களமாடலை சூதர்கள் பாரதவர்ஷமெங்கும் ஓயாது பாடிக்கொண்டிருந்தனர். நூறுநூறு முறை அதைப்பற்றிய வரிப்பாடல்களை, பழமொழிகளை, கவிதைகளை, பகடிகளை நான் கேட்டிருக்கிறேன். நாடகமாக, கூத்தாக, இளிவரல் நடிப்பென அதை சலிக்காது நிகழ்த்திக்கொண்டிருந்தனர். ஒவ்வொருமுறையும் அது புதிதாகத் தோன்றியது. அதன் முடிவில்லாத ஆழங்களில் மானுடருடன் ஊழ் ஆடும் விளையாட்டின் சில கரவுப்பாதைகள் இருந்தன. எந்த ஆட்டமும் மானுடனின் ஆணவத்தையும் திறனையும் ஒருபக்கமும் ஊழை மறுபக்கமும் நிறுத்தி ஆடுவதே. மானுட வாழ்க்கையை குறுக்கி கையளவாக்கி கண்முன் பரப்பி வைப்பதே.

அஸ்தினபுரியில் நிகழ்ந்தது போரைத் தவிர்க்கும் பொருட்டு அமைக்கப்பட்ட நிகரிப்போர். அதுவே பிறகு நடந்த முற்றழிவுப் போருக்கான அனைத்து அடிப்படைகளையும் வகுத்தளித்தது. உணர்வுகளை, வஞ்சினங்களை. குருக்ஷேத்ரப் போரின் முன் வடிவம் என அமைந்தது அந்த நாற்களமாடல். அதைப்பற்றி பேசும் ஒவ்வொருவரும் குருக்ஷேத்ரப் போரிலிருந்து அதற்கு வந்தனர். அதிலிருந்து குருக்ஷேத்ரப் போருக்குச் சென்றனர். ஒருமுறை செய்துபார்த்து பிழை களைந்தமையால்தான் குருக்ஷேத்ரப் போர் அத்தனை கூரியதாக, முற்றழிவுத்தன்மை கொண்டதாக அமைந்தது என்றுகூட பாவலர் பாடினர்.

ஆகவே நிகரிப்போர் என்றதுமே நான் அதிர்ச்சியை அடைந்தேன். அது எங்கோ எப்படியோ அழிவில்தான் சென்று முடியும் என்று எனக்கு தோன்றியது. அல்லது அவ்வாறு தோன்றியதனால் நான் அப்போது அவ்வகையில் படபடப்படைந்தேன் என்று பின்னர் அத்தருணங்களை எண்ணி நோக்குகையில் விளக்கிக்கொண்டேன். அது வெறும் அச்சம், நான் அதை குருக்ஷேத்ரத்துடன் ஒப்பிட்டுக்கொள்கிறேன், அதில் பொருளே இல்லை என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆனால் தொடர்ந்து ஒரு பதற்றம் இருந்துகொண்டிருந்தது. நான் அதை சுமந்து அலைந்தேன். என் காலடியோசைபோல அது எனக்குப் பின்னால் ஒலித்துக்கொண்டிருந்தது.

நாற்கள மேடை ஒருங்குவதிலும் பார்வையாளர்களின் இருக்கைகள் அமைக்கப்படுவதிலும் விருந்தினர்களை ஒவ்வொருவராக வரவேற்று அமரச்செய்வதிலும் என் சித்தத்தை திருப்பி அந்தப் பதற்றத்திலிருந்து விலகிக்கொள்ள முயன்றேன். ஒன்று உருவாக்கும் பதற்றத்தை வெல்வதென்பது அதிலிருந்து விலகுவதல்ல. விலகுந்தோறும் பதற்றம் ஆழத்திற்குச் சென்று பெரிதாகிறது. சிறுதுளியென மாற்றி அதை அகத்திற்கு பழக்கிக்கொள்வதுதான் நல்ல வழி என்று நான் கற்றிருந்தேன். ஆகவே நாற்களமாடலை ஒருக்குவதே நாற்களமாடல் பற்றிய அச்சத்தை அகற்றியது. நாற்கள மேடை கண்ணுக்கு பழகப்பழக அது அங்கேயே எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஒன்று என்று அகம் எண்ணிக்கொண்டது.

நாற்களமாடலின் நாள் நெருங்க நெருங்க என் பதற்றம் நன்கு பழகியது. அதன் ஆழங்கள் தெளியத் தொடங்கின. என்னை நான் ஆளமுடியும் என்ற நம்பிக்கையை அடைந்தேன். ஆனால் கணிகர் படகிலிருந்து இறங்குவதைப் பார்த்ததுமே என் உள்ளம் கலைந்துவிட்டது. அரசே, முன்பு துவாரகைக்கு அவர் வந்த அன்றே அவர் பேரழிவுடன் வருகிறார் என்று நான் முன்னுணர்ந்திருந்தேன். அவரைப்பற்றி ஒற்றர்களினூடாகவும் பல்வேறு சூதர்பாடல்களினூடாகவும் விரிவாக அறிந்திருந்தேன். அவர் அறியாத் தெய்வம் ஒன்றால் மானுடர்மேல் ஏவப்பட்டவர் அல்லது அவரே மாற்றுருக்கொண்ட பாதாள மூர்த்தி. அழிவினூடாகவே அவர் உயிர்வாழ முடியும். எந்த இலக்கும் இன்றி அழிவை சமைப்பவர்கள். எந்த நோக்கமும் இன்றி தீமையில் மகிழ்பவர்கள். இயல்பிலேயே இருளுக்கு பழகியவர்கள். இருள்மூர்த்திகளின் வடிவங்கள்.

காலந்தோறும் அத்தகையோர் பிறந்துகொண்டே இருக்கிறார்கள். இப்புவி நெசவில் ஒரு சரடென அவர்களும் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்த முதற்கணமே ஒவ்வொருவரும் அதை உணர்ந்துகொள்கிறார்கள். பேய்களை நாய்கள் கண்டுகொள்வதுபோல. ஆனால் ஒருவர்கூட அவர்களை விலக்குவதில்லை. அவர்கள் கொண்டிருக்கும் விந்தையான ஒரு ஈர்ப்பு ஒவ்வொருவரையும் அவர்களை நோக்கி செலுத்துகிறது. அந்த ஈர்ப்பு அச்சத்தால், வெறுப்பால், ஆர்வத்தால் ஆனது. நாகப்பாம்பை காணும் எலிகள் ஓடுவதில்லை, தவிர்க்க முடியாத ஆர்வத்துடன், அச்சத்தால் சிலிர்த்த மயிர்ப்பரப்புடன் மெல்ல மெல்ல அணுகி கூர்ந்து பார்க்கின்றன. அசையாமல் மயங்கி நின்றிருக்கின்றன.

அவர்கள் அதை நுட்பமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். எவ்வாறு கணிகர் பயன்படுத்திக்கொண்டார் என்பதை நான் எண்ணி எண்ணி வியப்பதுண்டு. துவாரகையில் கணிகர் வந்த அன்றே நான் பிரத்யும்னனிடமும் ஃபானுவிடமும் சாம்பனிடமும் “அவர் இடரளிப்பவர், எச்சரிக்கையாக இருக்கவேண்டியவர்” என்று கூறினேன். அவரை எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்க ஒற்றர்களை அனுப்பினேன். ஆனால் அவை இரண்டுமே பயனற்ற செயல்கள். கணிகர் எதையுமே மந்தணமாக செய்பவரல்ல. ஆகவே அவரை கண்காணிப்பதும் உளவறிவதும் முற்றிலும் பொருளற்றவை. கணிகர் மீதான எச்சரிக்கை என்பது இயல்பாக ஒவ்வொருவரும் அடைவது, அதை மீண்டும் எவரிடமும் கூறிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

நேர்மாறாக அந்த எச்சரிக்கையுணர்வால்தான் பெரும்பாலானோர் அவரை நோக்கி செல்கிறார்கள். அவரையே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றை நாம் எண்ணிக்கொண்டிருந்தால் ஏதோ ஒருவகையில் அது நமது அகத்தில் ஒரு பகுதியாக ஆகிவிடும். அதை விரும்பத் தொடங்கிவிடுவோம். பழிச்செயல்களின், மீறல்களின் ஆற்றலென்பதே அவ்வாறு உருவாவதுதான். கணிகர் கொண்ட வெற்றி என்பது அச்சம் அளிக்கும் ஈர்ப்பிலிருந்து எழுவது. முற்றாகவே அவரை ஒருவர் புறக்கணித்துவிட முடியுமெனில் அவரால் ஒன்றும் செய்ய இயலாது. அவருடைய மாயங்கள் பயனற்றுப்போகும் இடம் அது. தீமையை உணரமுடியாத குழந்தைகளும் அறிவுகுறைந்தவர்களும் அவரால் எவ்வகையிலும் தீங்கடைய மாட்டார்கள்.

கணிகர் பிறருடைய உள்ளத்தில் உறையும் தீங்கையே தனது படைக்கலமாகக் கொண்டவர். தன் வலைப்பின்னலுக்கான பசையாக அதை அவர் தொட்டெடுத்துக் கொள்கிறார். அவருடைய கீழியல்பை உணர்ந்ததும் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளுறையும் கீழியல்பை அவரை நோக்கி திருப்புகிறார்கள். அக்கீழியல்பு இரண்டுமுனை கொண்டது… ஆணவம், தன்னலம். கணிகரின் தீங்கைவிட சற்று கூரிய விசை மிகுந்த தீங்கு தன்னிடம் உள்ளது என்று ஒவ்வொரு எளிய மனிதனும் நம்புகிறான். ஆகவே அவரை வென்றுவிடலாம் என எண்ணுகிறான். மதம்கொண்ட எருமைக்களிறுகள் தங்கள் கொம்புகளை உரசி நீளத்தை ஒப்பிட்டுக்கொள்வதுபோல.

கணிகர் அவ்வெண்ணத்தை வளர்க்கிறார். நம்முடைய தீங்கைக் கண்டு அவர் அஞ்சுவது போலவும் எச்சரிக்கை கொள்வது போலவும் பதுங்கிக்கொள்வது போலவும் நடிக்கிறார். அது நம்மை மகிழ்விக்கிறது. நாம் அவரைவிட ஆற்றல் கொண்டவர் என்று நம்பும்போது அவரை நமது படைக்கலமாக ஆக்கிக்கொள்ளலாம் என்ற எண்ணம் வருகிறது. நமது ஏவல் விலங்கென அவரை பழக்க முயல்கிறோம். அவரை நாம் அணுகுகிறோம். நம்மை அவர் அணுக வாய்ப்பளிக்கிறோம். அந்தத் தன்னலத்தால் அவர் நம்மை பற்றிக்கொள்ள இடமளிக்கிறோம். மென்மையான தளிர்க்கொடிக்கு இடமளிக்கும் பெருமரம் தன்னை அது சுற்றி இறுக்கி நெரித்து உண்ணப்போவதை அப்போது உணர்வதே இல்லை.

அவர் நாம் அறியாமலேயே நம்மை பயன்படுத்தியிருப்பதை, தன் இலக்கை இயல்பாக சென்றடைந்துவிட்டிருப்பதை அனைத்தும் முடிந்த பின் நாம் உணர்வோம். அல்லது பலர் உணர்வதே இல்லை. பிரத்யும்னனும் சாம்பனும் ஃபானுவும் மைந்தர் எண்பதின்மரும் அதை உணராமலேயே விண்ணுலகு எய்தினர். துரியோதனனும் சகுனியும்கூட உணர்ந்திருப்பார்களா என்று ஐயுறுகிறேன். மிக வல்லமையான நஞ்சு நஞ்சென்றே தெரியாதது, இனிமையானது. அரசே, மிகமிக வல்லமையான நஞ்சு நஞ்சென்று அறிவித்துக்கொண்டு நஞ்சென்ற ஈர்ப்பையே பயன்படுத்தி கசப்பிலேயே திளைக்க வைப்பது. கொடிய நஞ்சு நம்மை கொல்வது, மிகக் கொடிய நஞ்சு நம்மை தற்கொலை செய்துகொள்ளச் செய்கிறது.

கணிகரைப் பார்த்ததுமே அந்த நாற்களம் எண்ணியதுபோல் முடியப்போவதில்லை என்ற முன்னுணர்வை அடைந்தேன். முன்பு துவாரகையில் கணிகர் என்னை வென்றது நான் கணிகரைவிடத் திறமையானவன் என்ற எண்ணத்தை என்னில் உருவாக்குவதினூடாக என நினைவுகூர்ந்தேன். கணிகரை பயன்படுத்தி சாம்பனையும் பிரத்யும்னனையும் அச்சுறுத்தி ஃபானுவை அரசனாக அவர்கள் ஏற்கச்செய்து துவாரகையில் ஒற்றுமையை கொண்டுவரமுடியும் என்று நான் நம்பினேன். இம்முறை அதை செய்யக்கூடாது என்று நான் முடிவு செய்தேன்.

அதற்கு ஒரே வழி கணிகரை முற்றாக களத்திலிருந்து அகற்றிவிடவேண்டும் என்பதே. அவருக்கு எவ்வகையிலும் எதிர்வினையாற்றக் கூடாது. நமது எதிர்வினைகளினூடாகவே அவர் செயல்படுகிறார். அசைவில்லாத உயிரை வேட்டையாட முடியாத பல்லி போன்றவர் அவர். அவரை எதிர்க்காதவர்களை அவர் காணவே முடியாது. கணிகர் ஏற்கெனவே ருக்மியின் உள்ளத்தில் விதைத்தவை என்ன என்று எனக்கு தெரியாது. அவை நாற்கள அவையில் எவ்வாறு முளைக்கும் என்பதும் எண்ணற்கு அரியது. ஆகவே அவரை முற்றாகத் தோற்கடிப்பது இயல்வதே அல்ல.

எனினும் எப்படி அவரை அகற்றுவது, அவர் உருவாக்கவிருக்கும் பேரழிவை எவ்வண்ணம் தவிர்ப்பது என்று நான் எண்ணத்தொடங்கியிருந்தேன். அரசே, அவ்வாறு எண்ணத் தொடங்குகையிலேயே அவருடைய வெல்ல முடியாத வலையில் நான் சிக்கிக்கொண்டிருந்தேன். அதை உணர அனைத்தும் நடந்து முடிய வேண்டியிருந்தது.

பொதுவாக நாற்களமாடல்களில் என்னென்ன இடர்கள் உருவாகக் கூடுமென்பதை நான் விரிவாக கணித்து ஒரு நீண்ட அட்டவணையை போட்டு வைத்திருந்தேன். நாற்களமாடலில் மிகப் பெரிய சிக்கல் என்பது அது விளையாட்டென நடிக்கும் போர் என்பது. அது போரென்பது அனைவருக்கும் தெரியும். அது உருவாக்குவது போரின் விளைவையே. ஆகவே அது ஒருபோதும் விளையாட்டாக அமைவதில்லை.

போரின் சிறப்பென்பது அதில் தோற்றவர் ஒருபோதும் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இருக்க இயலாது என்பதுதான். இழப்புகள், சிறுமைகள் வழியாக அவர் ஊழின்முன் என்பதுபோல நிலம் படிகிறார். அவர் தன் தோல்வியை மறுக்கவே இயலாது. வென்றவரை எவ்வண்ணமும் மீற இயலாது. போர் முடிவென்பது அப்பட்டமானது, மாற்றில்லாதது. ஆனால் நாற்களமாடலில் தோற்றவர் ஒவ்வொருமுறையும் மெய்யாகவே தான் தோற்கவில்லை என்ற எண்ணத்தை அடைகிறார். தான் வஞ்சகமாக வீழ்த்தப்பட்டோம் என்றோ ஆட்டத்தின் நெறிகளில் பிழை இருக்கிறதென்றோ அவர் கூறுவார்.

அரசர்களின் முன் தெளிவான ஆட்டநெறிகளின்படி ஆடும் ஆட்டத்தில் உடனடியாக எந்த மறுப்பையும் தெரிவிக்க இயலாதெனினும் கூட பெரும்பாலான நாற்களமாடலில் அரசர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார்கள். பெரும்பாலான நாற்களமாடல்களுக்குப் பிறகு அங்கே சிறிய கைகலப்பும் பூசலும் நிகழ்ந்திருந்தன. நாற்களமாடல் ஒருபோதும் ஓர் ஆட்டத்தில் முடிவடைந்ததே இல்லை. ‘சூது முடிவற்ற ஆடல்’ என்று ஒரு சொல் உண்டு.

அதையே மணத்தன்னேற்புக்கும் கூற முடியும். அதுவும் ஒரு நிகரிப்போர். அதுவும் கைகலப்பு இல்லாது முடிந்ததில்லை. ஆனால் ஒருவர் ஒரு பெண்ணை மணந்துகொண்டார் எனில் மேலும் அதைப்பற்றி எண்ணி பயனில்லை என்பதனால் அது அங்கேயே முடித்துக்கொள்ளப்படுகிறது. அதன் உணர்வுகள் மட்டுமே எஞ்சுகின்றன.

நாற்களத்தில் எந்தப் பூசலாவது முற்றாக தீர்க்கப்பட்டிருக்கிறதா என்று நான் பாரதவர்ஷத்தின் இருநூறு ஆண்டுகால வரலாற்றை எடுத்து ஒவ்வொன்றாக ஆராய்ந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட நாற்களமாடல்களில் ஒன்றில்கூட அக்களத்தில் போர் முடிந்ததில்லை. ஆனால் ஒத்திப்போடப்பட்டிருந்தது. ஒத்திப்போட்டதனாலேயே புதிய சிக்கல்கள் எழுந்து போர் தவிர்க்கப்பட்டிருந்தது. போருக்கு எழுந்தவர்களின் உணர்வுகள் காலத்தால் கூர்மழுங்கியமையால், அவர்களுக்கு அகவை முதிர்ந்தமையால், அவர்களின் மைந்தர்கள் அவ்வுணர்வுகளை பகிர்ந்துகொள்ளாமையால் போர் தவிர்க்கப்பட்டிருந்தது.

இங்கு அவ்வண்ணமே நிகழும் என்று எண்ணினேன். ருக்மி தன் தோல்வியை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. ஆனால் வேறு வழியிலாது அவர் பிரத்யும்னனிடம் பெற்ற செல்வத்தில் ஒரு பகுதியையேனும் திருப்பி அளிப்பார். அந்த வெற்றி எவ்வகையிலோ அப்போது யாதவர்களுக்கு தேவைப்பட்டது என்று எனக்கு தோன்றியது. பிரத்யும்னனுக்கு யாதவர்கள் செய்யும் பிழையீடென அது அமையும். எவ்வகையிலோ அது ஒருவகை நீர்க்கடன்.

நான் நிமித்திகர்களை அழைத்து என் அறைக்குள் வைத்து வழிகளை ஆராய்ந்தேன். தெளிவாகவே அவர்களிடம் கணிகரை தவிர்ப்பது எப்படி என்று சொல்லும்படி கோரினேன். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்லிவந்தனர். எவராலும் எதுவும் வலுவாக சொல்லமுடியவில்லை. நான் சினத்துடன் “நாம் இதை பாரதவர்ஷத்தின் அமைச்சர்கள் பலர் கூடிய அவையில் செய்யவிருக்கிறோம் என்பதை மறக்கவேண்டியதில்லை. நாம் நெறிமீறுகிறோம் என்று தோன்றினால் அதன்பின் நம் சொல்லுக்கு மதிப்பிருக்காது” என்றேன்.

அவையில் ஓர் இளைஞன் இருந்தான். இளமையில் தேருக்குக் கீழே விழுந்து இடை எலும்பு ஒடிந்த அவனை இருவர் தூக்கிவந்தனர். மிக மெலிந்த உருவம். மின்னும் எலிக்கண்கள். அவனை கண்டதும் நான் ஓர் அதிர்வை அடைந்து விழிவிலக்கிக்கொண்டேன். அங்கே சொல்லெழத் தொடங்கியதுமே அவன் அங்கே இல்லாதவன்போல் ஆனான். அனைவரும் சொல்லின்றி அமைந்தபோது அவன் மிக மெல்ல அசைந்தான். அந்த ஓசை நோக்கி நான் திரும்பினேன்.

“இங்கே நெறிவிலக்கு அல்லது நெறிமீறல் வழியாக அவரை தவிர்ப்பதெப்படி என்று ஆராய்ந்தனர். அது பெரும்பிழை. நாம் நெறிகளில் ஒரு சிறு விலக்கோ மீறலோ அளித்தால் அனைத்து நெறிகளையும் நாமே அகற்றுவதில்தான் அது சென்று முடியும். சூதாட்டம் என்பதே மீறமுடியாத நெறிகளின்மேல்தான் நிகழமுடியும். வென்றவனை தோற்றவன் ஏற்பது எந்த இயற்கைநெறிகளின்படியும் அல்ல, வகுக்கப்பட்ட அவைநெறிகளின்படியே” என்றான். “ஆகவே நாம் நெறிகளை இறுக்குவதை மட்டுமே செய்யமுடியும். அதனூடாக அவரை விலக்கினால் மட்டுமே நம் நோக்கம் நிறைவேறும்.”

நான் அவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தேன். “நாற்களமாடும் அவைக்குள் உடற்குறை கொண்டோர் நுழைய முடியாதென வகுக்கும் நெறி ஏதேனும் உண்டா?” என்று அவன் உசாவினான். நிமித்திகர் அவன் எண்ணத்தை புரிந்துகொண்டனர். “அவ்வாறு நெறி ஒன்றும் இன்றில்லை. ஆனால் கணிகர்களும் அந்தணர்களும் இனைந்து அவ்வாறு ஒரு நெறியை உருவாக்க முடியும். இந்த அவைக்கு நாம் என்ன பொருள் அளிக்கிறோம் என்பதைச் சார்ந்தது அது. இதை கேளிக்கை என்றோ போர்க்களம் என்றோ வகுத்தால் எவருக்கும் விலக்கில்லை. இது மங்கலக் களம் என்றோ வழிபாட்டு இடம் என்றோ வகுத்தால் விலக்குகள் உண்டு” என்றார் முதிய நிமித்திகர் ஒருவர்.

அக்கணமே அவர் எண்ணியதை புரிந்துகொண்ட இன்னொரு நிமித்திகர் “துவாரகையிலும் பிரஃபாச க்ஷேத்ரத்திலும் இறந்தவர்களுக்கான நீர்க்கடன்கள் இன்னும் நிறைவுறவில்லை. இது நீத்தோர் விண்ணடங்குவதற்கு முன்பு நிகழும் களமாடல். ஆகவே அவர்களின் நுண்ணுடல்கள் இக்களத்திற்கு வரக்கூடும். எனவே இந்தக் களம் நீத்தார்கடன் நிகழும் களமாகவே கொள்ளப்படவேண்டும். அது முற்றாக மங்கலம் கொண்டிருக்கவேண்டும். ஒரு சிறு மங்கலமின்மை இருந்தால்கூட நீத்தார் நிறைவுறாது போகக்கூடும்” என்றார்.

“ஆகவே மங்கலம் அற்ற எதுவும் அந்த அவையில் இருக்கலாகாது” என்று அவர் தொடர்ந்தார். “நீலம் அல்லது கரிய ஆடைகள். நீலம் செந்நீலம் கருநீலம் கொண்ட மலர்கள். நிறையாக் கலம், நில்லா நாழி, உடைந்த கலங்கள், உருகும் பொருட்கள், கைம்பெண்கள், குறையுடைய மனிதர் தவிர்க்கப்படவேண்டும்.” நான் புன்னகைத்து “இது இரு சாராருக்கும் சொல்லப்படட்டும்” என்றேன். “அந்தணர்களிடம் இதை சொல்க! அவர்கள் நாவிலிருந்து இது எழட்டும்.” நான் திரும்பி அந்த இளைஞனின் விழிகளை பார்த்தேன். ஒருகணம் உணர்ந்தேன், அவன் கணிகரின் சிறுவடிவம்.

அது சிறந்த சூழ்கை என்று தெரிந்தது. எவ்வண்ணம் அதை கணிகர் எதிர்கொள்ளப்போகிறார்? கணிகர் ஒருபோதும் மறுக்க முடியாத ஒன்று அவருடைய உடற்குறை. உடற்குறைகொண்ட ஒருவரை அழைத்து வருவதென்பது ருக்மியை களத்தில் தோற்கடிப்பதே என்று ருக்மியிடம் கூறவேண்டும் என்று நான் அந்தணருக்கு ஆணையிட்டேன். ருக்மி அதை தலைக்கொள்வார் என நான் அறிந்திருந்தேன். எவரும் அதை தவிர்க்கமுடியாது.

நாற்களமாடலுக்கு முன் ஒவ்வொருவரும் நுண்ணிய பதற்றத்துடன் இருந்துகொண்டிருப்பார்கள். ஏனெனில் நாற்களம் திறமையால் ஆடப்படுவது எனினும் நல்லூழால் முடிக்கப்படுவது. தன் நல்லூழை உய்த்து நோக்கும் எவரும் நம்பிக்கையையும் நம்பிக்கையின்மையையும் இணையாகவே அடைவார்கள். தன்னுடைய வாழ்வென்பது நல்லூழாலும் இணையாக தீயூழாலும் நடத்தப்படுவது என்பதை அறியாதவர் எவர்? ருக்மி பதறிக்கொண்டிருப்பார். அத்தருணத்தில் தீயூழை கொண்டுவரும் ஒரு சிறு பொருளைக்கூட அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர் கணிகரை அவைக்கு அழைத்துவரப் போவதில்லை. இம்முறை கணிகர் தோற்பார், தோற்றாக வேண்டும்.

அன்றிரவு முழுக்க மறுநாள் என்ன நிகழுமென்பதை என் கற்பனையில் நிகழ்த்திக்கொண்டேன். அங்கே நிகழுமென நான் எதிர்பார்க்கும் மிகச் சிறந்தது என்ன? பலராமர் ருக்மியை களத்தில் வெல்வார். அச்செல்வத்தை ஒருபோதும் அவர் மதுராவுக்கென எடுத்துக்கொள்ளமாட்டார். துவாரகையின் செல்வம் நன்றல்ல என்று அவருக்கு தோன்றிவிட்டிருந்தது. ஆகவே அதை அவர் பெருங்கொடையாக அளிக்கக்கூடும். அதைக்கொண்டு பிரத்யும்னனுக்கும் அநிருத்தனுக்கும் பிறருக்கும் நீர்க்கடன்கள் செய்வதற்கான மைந்தர் ஏற்பு முறை ஒன்றை உருவாக்கக்கூடும்.

செல்வம் அல்ல, வெற்றியே முதன்மையான பெறுபயன். அதனூடாக யாதவர்களின் தணிந்த உளவிசை மேலெழும். அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். அவர்களால் எழும் காலத்தை திறனுடன் எதிர்கொள்ள இயலும். தீயது என என்ன நிகழும்? பலராமர் தோற்கக்கூடும். ருக்மி வெற்றி கொண்டாடி அச்செல்வத்துடன் திரும்பக் கூடும். யாதவர்கள் இருளை நோக்கி செல்வார்கள். ஆனால் ஏற்கெனவே அவர்கள் இருளில்தான் இருந்தனர். ஆக அவர்கள் இழப்பதற்கென ஏதுமில்லை. அவ்வெண்ணம் எனக்கு ஆறுதலை அளித்தது.

புலரி விடிந்ததும் நான் நீராடி ஆடை மாற்றி அன்றைய எனது தோற்றத்தை புனைந்துகொண்டு நாற்கள அவைக்கு சென்றேன். அங்கு ஒவ்வொன்றும் முறையாக ஒருங்கியிருக்கின்றனவா என்று பார்த்தேன். அவைக்களத்தின் அமைப்பு, அரசர்களுக்குரிய பீடங்கள், பார்வையாளர்கள் என அனைத்தையும் மறுமுறை சீர்நோக்கினேன். என் அணுக்க ஒற்றனிடம் “மங்கலமற்ற எதுவும் இந்த அவைக்குள் வந்துவிடக்கூடாது என்று அந்தணரும் நிமித்திகரும் உரைத்தது நினைவிருக்கிறதல்லவா?” என்றேன். “ஆம், அனைத்து ஏவலருக்கும் செய்திகள் அளிக்கப்பட்டுள்ளன” என்று அவன் சொன்னான். நான் தலையசைத்தேன்.

அவனே மேலும் தாழ்ந்த குரலில் “அதற்கான தேவை இருக்காது என்று தோன்றுகிறது” என்றான். நான் அவனை நோக்க “இன்று காலை கணிகர் இங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்” என்றான். நான் “ஏன்?” என்று கேட்டேன். படபடப்பாக உணர்ந்தேன். “மங்கலம் இல்லாத உடலுடன் கணிகர் அவை புக வேண்டியதில்லை என்று ருக்மியே அவரிடம் கூறியதாகவும் அவர் அதை ஏற்றுக்கொண்டு தன் குடிலுக்கு திரும்பிச் சென்ற பின்னர் புலரியில் தான் நகர்விட்டு கிளம்புவதாக ருக்மிக்கு செய்தி அளித்ததாகவும் ஏவலர் வழியாக அறிந்தேன். ருக்மி அவரை தணிவிக்க மீண்டும் இருமுறை தூதனுப்பியும் அவர் ஏற்காமல் கிளம்பிக்கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்” என்றான் ஒற்றன்.

நான் அதில் மகிழ வேண்டும். ஆனால் விந்தையான ஒரு அச்சம்தான் எனக்கு ஏற்பட்டது. எனது அச்சத்தை நானே அணுவணுவாக பார்த்துக்கொண்டிருந்தேன். கணிகரைப் போன்ற ஒருவர் அவ்வண்ணம் எளிதாக அகன்று சென்றுவிடமாட்டார் என்று எனக்கு தோன்றியது. அவரிடம் ஏதோ ஒன்று எஞ்சியிருக்கும். அத்தனை எளிதாக அவர் அகன்று செல்கிறார் என்றால் இங்கு எதையோ நட்டுவிட்டுச் செல்கிறார். அந்த விதை முளைக்கும் என்பதில் அவருக்கு எந்த ஐயமும் இல்லை.

நான் என் சித்தத்தை துழாவித் துழாவி அவர் என்ன செய்திருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். பின்னர் பெருமூச்சுடன் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று தளர்ந்தேன். அவையை நான் ஒருக்கிக்கொண்டிருந்தபோது என் ஒற்றன் வந்து கூறினான், கணிகர் நகரிலிருந்து சிறுபடகொன்றில் கிளம்பி கங்கையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் என்று. நான் “நன்று” என்று நீள்மூச்செறிந்தேன்.

முந்தைய கட்டுரைபாலையும் செல்வேந்திரனும்
அடுத்த கட்டுரைகதைகள் கடிதங்கள்