கவி- கடிதங்கள்

கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி

அன்புள்ள ஜெ

இந்த புதியவரிசைக் கதைகள் நன்றாக இருக்கின்றன. இந்த மனநிலைக்கு நிறையவே கதைகள் தேவையாகின்றன. எம்.கே.மணியின் கவி மெல்லிய பகடி கொண்ட கதை. அதில் அநீதியும் கீழ்மையும் வென்று நின்றிருக்கும் ஒரு காலகட்டத்தைப்பற்றிய விரைவான கோட்டுச்சித்திரம் தரப்படுகிறது. அவர்கள் ஜெயித்துக்கொண்டே போகிறார்க்ள். எதைப்பற்றியுமே கவலைப்படுவதில்லை

இங்கே  ‘கண்ணதாசனைப்போன்ற’ கவிஞன் குடித்துச் சீரழிந்து சோற்றுக்கில்லாமல் அலைந்து கஷ்டப்படுகிறான். அவன் இவர்களை ‘பாடி’ வாழவேண்டும். அந்தக்கால bard எல்லாம் வீரர்களையும் சான்றோர்களையும் பாடினார்கள். இவன் இவர்களைப் பாடியாகவேண்டும். ஆனால் இது இவனுக்கு இந்தக்காலம் அளிக்கும் கடமைதான். இவனும் அப்படித்தான் இருக்கிறான்.

கவிஞனின் ‘ரொமாண்டிஸிசம்’ எந்த லட்சணம் என்பதை முதல்வரியிலேயே சொல்லிவிடுகிறது கதை. கதாநாயகியை பார்த்ததுமே கற்பனை வளத்துடன் உங்கள நான் அப்பிடியே போட்டு கசக்கிப் பிழியணும் என்று நுட்பமாக,  ‘கவித்துவமாக’ குறிப்புணத்திவிடுகிறான். இந்தக் காலகட்டத்தின் கவிஞன். நீ இந்தக்காலகட்டத்தின் ஹீரோ என்றால் உனக்கு நான் தான் கவி என்கிறது இந்தக்கதை.

ஓர் அவலநிலையை அலட்டிக்கொள்ளாமல் சகஜமாக சொல்லும் கதை. அந்த ஈஸினெஸ்தான் இந்தக்கதையின் அழகு என நினைக்கிறேன்

ராஜசேகர்

***

அன்புள்ள ஜெ

எம்.கே.மணியின் கதையைப்பற்றி நீங்கள் எழுதிய குறிப்பை எவரோ அளித்திருந்தார்கள். நீங்கள் இரண்டு அம்சத்தை குறிப்பிடுகிறீர்கள். நீண்ட கால அளவை seamless ஆக ஒழுக்காகச் சொல்லியிருப்பது ஒன்று. அலட்டிக்கொள்ளாத சுருக்கமான கதை சொல்லும் முறை. நான் இந்தக்கதையை வாசிக்கும்போதும் அதைத்தான் நினைத்துக்கொண்டேன்.

இப்போது எழுதப்படும் பலகதைகளில் இரண்டு இயல்புகள் இருக்கின்றன. வாசிப்புக்கு அவை பெரிய தடையை அளிக்கின்றன. அதாவது நிறைய சினிமா பார்ப்பதனால் சினிமாவின் எடிட்டிங் டெக்னிக் இவர்களுக்கு வந்துவிடுகிறது. காட்சிகளை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு சரேலென்று வெட்டி இன்னொரு இடத்திற்குச் செல்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் இருந்தோ ஒருவரின் பார்வையில் இருந்தோ இப்படி இன்னொன்றுக்கு தாவிச்செல்கிறார்கள்.

ஆனால் இந்த டெக்னிக்கைத்தான் நாம் சினிமாவிலேயே பார்த்துச் சலித்துவிட்டோமே. சினிமாவிலேயே இதை இனிமேல் வைக்கவேண்டாம் என்று நினைக்க தோன்றுகிறது. மொழிக்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கிறது. காட்சியூடகம் எப்படியானாலும் ஒரு காட்சியிலிருந்து இன்னொன்றுக்கு வெட்டவேண்டும். காட்சிகள் அப்படித்தான். அவை வேறுவேறு இடங்களைச் சேர்ந்தவை. ஆனால் மொழி எண்ணம்தானே. அதற்கு உள்ளே ஒரு ஃபுளோ உண்டு இல்லையா? அதை ஏன் வெட்டி வெட்டி சினிமாபோல ஆக்கவேண்டும்.

காட்சிகளை வெட்டி வெட்டி டாட் போட்டு எழுதும் கதைகள்,வாய்ஸ் ஓவரில் கதை சொல்லும் கதைகள் எல்லாம் சினிமாவை ஞாபகப்படுத்தி சலிப்பூட்டுகின்றன. சினிமாவே, காட்சியூடகமே சலிக்க ஆரம்பித்துவிட்டது. ஏனென்றால் இப்போது அவை திகட்டத்திகட்ட கிடைக்கின்றன. நான் இந்த கொரோனா கால விடுமுறையிலே படங்களை பார்த்தேன். பத்துநாளில் 18 படங்கள். ஆனால் அதன்பிறகு டிவியை கண்டாலே கடுப்பு. அந்தச் சத்தமே எரிச்சல். ஏனென்றால் 90 சதம் படங்கள் ஒரேமாதிரித்தான் இருக்கின்றன. அந்த மீடியத்தின் லிமிட்டேஷனை அதனால் தாண்டமுடியவில்லை. அது இசையும் காட்சியும் கலந்து காட்டியாகவேண்டும் இல்லையா?

ஆகவேதான் படிக்க ஆரம்பித்தேன். நபக்கோவின்  Transparent Things வாசித்தேன். அந்த திளைப்பு என்னை வெளியே கொண்டுவந்தது. இது ஒரு பிரைவேட் அனுபவம். இதில் நபக்கோவுக்கு கூட இடமில்லை. அப்படியே உங்கள் தளத்தில் உள்ள கதைகளை வாசித்தேன். இந்தக்கதை வரை. இது எனக்கு ஒரு நபக்கோவ் அனுபவமாக இருந்தது. ஆகவேதான் எழுதுகிறேன்.

அதாவது ந[பக்கோவின் ஆசிரியன் குரலில் அல்லது ஆசிரியன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கும் விதத்தில் ஒரு சின்ன பொறுக்கித்தனம் உண்டு. அல்லது அலட்சியம். அந்த அம்சத்தை இதில் கண்டேன். இது சினிமாச்சாயலே இல்லாத கதை. ஒரு பெரிய வாழக்கைப்பரப்பை, ஒரு சமூக மாற்றத்தைச் சொல்கிறது. ஆனால் எடிட்டிங்கே இல்லாமல். நீங்கள் சொல்வதுபோல seamless ஆக சொல்லிவிடுகிறது. இந்த மாற்றத்தை நதி ஒழுகி திரும்புவதைப் பார்ப்பதுபோல பார்த்துவிடுகிறோம். அதிலுள்ள வீழ்ச்சியும் அதைச் சொல்பவன் அதைவிட கீழாக தன்னை வீழ்ச்சியடையச் செய்வதும் வெளிப்படுகிறது.

இந்தக் கடிதத்தை என்னால் கோர்வையாக எழுத முடியவில்லை. நான் சொல்லவந்ததைச் சொல்லிவிடுகிறேன். எப்படி 1800களில் ஓவியம் புகைப்படக்கலையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டதோ அதேபோல இன்றைய இலக்கியம் சினிமாவின் பிடியில் இருந்து வெளிவந்தே ஆகவேண்டும். சினிமாவிலுள்ள எடிட்டின் டெக்னிக், காட்சிப்படுத்தும் டெக்னிக், குளோஸப் வைட் போன்ற ஷாட் பிரிவினைகள் எல்லாவற்றையும் கடந்தே ஆகவேண்டும். வேண்டுமென்றால் பத்தொன்பதாம்நூற்றாண்டின் கதைசொல்லும் முறைக்கே கூடதிரும்பிச் செல்ல்லாம்.

இந்தக்கதை சினிமாச்சாயலே இல்லாத ஒரு elegy மாதிரி இருந்தது. தனக்குத்தானே ஒரு ஒப்பாரியை பாடிக்கொள்கிறான் கவிஞன்

அருண்குமார்

***

அன்புள்ள ஜெ

மணி.எம்.கே.மணியின் கவி எனக்கு ஜி.நாகராஜனின்  ‘நான்செய்த நற்செயல்கள்’ என்ற கதையை ஞாபகப்படுத்தியது. அன்றைக்கு அந்தக் கதை வேல்யூஸ் வீழ்ச்சி அடைவதை நக்கலாகச் சொல்லும் கதையாக இருந்தது. அந்தக்கதையை அந்தக்காலகட்டத்தில் நீங்கள் ஒரு கட்டுரையில் புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதையுடன் ஒப்பிட்டு எழுதியிருந்தீர்கள். ‘பொன்னகர பொன்னகரம் என்கிறிர்களே இதுதானய்யா பொன்னகரம்’ என்ற புதுமைப்பித்தனின் ஏகத்தாளத்தை ஜி.நாகராஜனு நமுட்டுச்சிரிப்பாக முன்வைக்கிறார். இந்தக்கதையிலும் அதே உணர்வுதான். ஆனால் இங்கே அந்த கதைசொல்பவனின் வீழ்ச்சிதான் மேலும் சுய எள்ளலும் கசப்புமாகச் சொல்லப்படுகிறது

அர்விந்த் குமார்

***

அன்புள்ள ஜெ

மணி.எம்.கே.மணி கதையின் உச்சவரி என்பது இந்தக் காலகட்டத்தின் ‘வீரகதைப் பாடகன்’ ஆண்மையில்லாதவனாக தன்னை உணர்கிறான் என்பதுதான். அவன் போய் பரிசிலை வாங்கிவருவதற்கு கூச்சமில்லாமல் ஆக்கும் அம்சம் அதுதான்

எஸ்.ரவிக்குமார்

***

3. இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்

2. அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

1. கன்னி- [சிறுகதை] ம.நவீன்

முந்தைய கட்டுரைநிழல்காகம்,ஆகாயம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவில்லுவண்டி[ சிறுகதை] தனா