இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார்
அன்புள்ள ஜெ,
இசூமியின் நறுமணம் விசித்திரமான கதை. தமிழ்ச்சிறுகதையின் இத்தனை வித்தியாசமான கதைக்களங்களுக்கும் கதை பிளாட்களுக்கும் அப்பாலும் இப்படி ஒரு புதிய கதைக்கான வாய்ப்பு இருப்பது ஆச்சரியமளிக்கிறது. பொதுவான வாசிப்பிலே அந்தக் குடிநிகழ்ச்சியில்தான் நம் மனம் நீந்திக்கொண்டிருக்கும். அதைப்பற்றித்தான் எதையோ சொல்லப்போகிறார் ஆசிரியர் என நம்மை எதிர்பார்க்க வைப்பதுதான் கதையின் உடல், அந்த நறுமணம் என்ன என்பது கவித்துவமான டிவிஸ்ட்.
இந்தக்கதையை கதை என்று சொல்லமுடியாது. ஒரு நல்ல கவிதையின் வடிவம்தான் இதற்கு. கதைமுழுக்க ஆண்கள் காமம் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆண்களுக்கு காமத்தில் இருக்கும் ஆர்வம் காமம் பற்றிய பேச்சிலும் உண்டு. நான்கு ஆண்கள் சந்தித்துக்கொண்டால் காமம் பற்றித்தான் பேசுவார்கள். ஜோக்குகளும் அடிப்படையில் அதைப்பற்றித்தான். அந்தக் காமத்துக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதைச் சென்று சட்டென்று தொட்டுவிடுவதனால்தான் இந்தக்கதை கவிதையாக ஆகிறது.
ஆண் இழந்த ஒன்று இருக்கிறது. மீண்டும் கிடைத்து மீண்டும் இழந்துகொண்டே இருப்பது. பூச்சிகள் விலங்குகள் எல்லாமே சிலவகையான மணங்களின் நிரந்தர அடிமைகள் என்று எங்கள் பயாலஜி வகுப்பில் படித்ததை நினைவுக்கு வருகிறது. மணம் என்பது ஒரு சென்ஷுவலான விஷயம் அல்ல. மணம் என்பது பயாலஜிக்கல். அதாவது அது ஒரு இயற்கையின் அடிப்படை விதிகளில் ஒன்று. அதுதான் நறுமணமாக வெளிப்படுகிறது.
சென்றபிறகும் எஞ்சும் மணம் என்ற அந்த வரியில்தான் கதையின் உச்சம் அமைந்திருக்கிறது. அந்த வரியை கதைக்குள் சாதாரணமாக வைத்துவிட்டு அதன்பிறகு கதையின் முடிவை அங்கே கொண்டுசென்று விடுவதில் ஆசிரியரின் திறமை வெளிப்படுகிறது. அழகான கதை.
மாதவ்
***
அன்புள்ள ஜெ
இசூமியின் நறுமணம் திகைக்கவைக்கும் புதுமை கொண்ட ஒரு கதை. சமீபத்தில் வாசித்த மிகச் சிறந்த subtle ஆன கதை. கதையின் கட்டமைப்பிலேயே ஒரு ஜப்பானியச் சுருக்கம் இருக்கிறது. குடிமேஜை. காமத்தை போட்டு குதப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே காமம் என்பது வெவ்வேறு வகையிலே அர்த்தமாகிறது. ஆண்மையின் அடையாளம் என்றும் வெற்றியின் அடையாளம் என்றும் அது சொல்லப்படுகிறது. அப்படித்தான் கதை தொடங்குகிறது.
அதன்பிறகு அது ஒரு relaxing tool ஆக இருக்கிறது. மனிதர்களின் வேலைநேர இறுக்கத்துக்கு மாற்றான ஒரு போதையாக குடியுடன் கலக்கப்படுகிறது. சாவு முதுமை ஆகியவற்றுக்கு எதிரானதாக இருக்கிறது. கடைசியில் அது என்ன என்பதுதான் கதை. அது சென்றுசேரும் இடம். எல்லா மலர்களின் மணமும் ஏதாவது ஒரு காமத்தின் மணம்தான். அந்தச் செடியின் மிகச்சிறந்த மணம் அந்த மலர்தான். இசூமியின் மணம் உயிரின் ஆதாரமான மணம்தான்.
ஒருவகையான மயக்கநிலையிலேயே இருக்கிறது இந்த அழகான கதை. ‘நாசியுள்ளவர்களே அந்தச் சுகந்தத்தை அறிவார்கள்’ என்ற வரி முக்கியமான ஒன்று. காமத்தை கடந்து பெண்மணத்தை அறிதல் என்று சொல்லலாமா? அந்த அடிப்படையான ஒரு உயிரின் மணத்தை அறிதலா?
ஜெயராமன்
***
அன்புள்ள ஜெ
கொரோனா காலகட்டத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாக இசூமியின் கதை இருக்கக்கூடும். ஆனால் வழக்கம்போல உங்களைப்போன்ற ஒருவர் எடுத்துக்கொடுத்து தனியாக அடையாளப்படுத்தாவிட்டால் இந்தக்கதை சரியாக வாசிக்கப்படாமலும் போகலாம். இது குடியில் பேசிக்கொண்டிருக்கும் வேடிக்கையைப் பற்றிய கதை என்று முக்கால்வாசி வரை தோன்றுகிறது.
இந்தக்கதையில் சில சுவாரசியமான விஷயங்கள் உண்டு. ஒன்று, அந்த நறுமணத்தை முழுக்கமுழுக்க நினைவில் இருந்து மீட்டிக்கொள்கிறார்கள். முழுக்கமுழுக்க ஒரு கற்பனைதான் அது. நறுமணங்களை எப்போதுமே ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டுத்தான் சொல்லமுடியும். அப்படி ஒப்பிட்டு ஒப்பிட்டுத்தான் நுணுக்கமாக போய் அந்த மணத்தைச் சொல்லிவிடமுடியும். இங்கே இவர் ஒப்பிட்டுக்கொண்டே போய் ஒரு இமோஷனாலிட்டியை அந்த மணத்துடன் இணைத்துச் சொல்லிவிடுகிறார்
காமத்துக்கு அடிப்படையாக மணம் இருக்கிறது. மணத்துக்கு அடிப்படையாக ஜெண்டர் இருக்கிறது. அதற்கும் அடிப்படையாக இருப்பது இயற்கையில் உள்ள நாம் அறியாத ஒன்று. அதைத்தான் நாம் பாசம் என்றோ அன்பு என்றோ சொல்லிக்கொள்கிறோம். ஒரு உயிரிலிருந்து இன்னொரு உயிர் தோன்றும் மாயம் அது என நினைக்கிறேன்
எம்.பாஸ்கர்
***
அன்புள்ள ஜெ
அச்சு அசலாக இசூமியின் நறுமணம் போன்றே ஒரு சம்பவம் நடந்தது. இது ஒரு 12 ஆண்டுகளுக்கு முன்பு. நாங்கள் ஒரு ஸ்டார் ஓட்டலின் பாரில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். ஒரு 20 வயசுப்பெண் பரிமாறினாள். நாங்கள் அவளுடைய உடம்பைப்பற்றி கேலியாகப் பேசிக்கொண்டோம். அவள் பரிமாறும்போது அவள் மார்பை எப்படியெல்லாம் தொடலாம் என்றெல்லாம் பேசினோம்.
அப்போது நண்பர் மேல் கொஞ்சம் ஸ்பில் ஆகிவிட்டது. அவள் டிஷ்யூவால் துடைத்தாள். அந்த நண்பர் ரொம்ப உருகிவிட்டார். அதன்பின் அந்தப்பெண்ணைப் பற்றி ஏதோ சொல்ல ஆரம்பித்ததும் “டேய் வேண்டாம்டா. சின்னப்பொண்ணுடா” என்றார். ஏன் என்று கேட்டோம். “அவகிட்ட என் பொண்ணோட மணம் வருது” என்றார். என்ன நடந்தது என்றாள் நாங்கள் எல்லாருமே அதை புரிந்துகொண்டோம். அவர் அந்தப்பெண்னிடம் விடைபெற்று வெளியே சென்றார்.
நாம் நினைப்பதற்கும் அப்பால் மூக்கு நம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறது. விலங்குகளின் உணர்ச்சிகளெல்லாமே மூக்கைச் சார்ந்துதான் இருக்கின்றன. நாய்க்குட்டியின் உடலை ஒரு பூனைக்குட்டியில் நன்றாக உரசி நாய்முன் விட்டால் நாய் அதை வளர்க்க ஆரம்பித்துவிடும். மனிதர்களும் அப்படித்தான். அருமையான கதை
எஸ்.புகழேந்தி
***