தெய்வீகன்,நவீன் சிறுகதைகள்- கடிதங்கள்

அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

அன்புள்ள ஜெ

இல்ட்சியவாதம் என்றால் என்ன? ஒருவன் தனக்கு எவரென்றே தெரியாதவர்களுக்காக உயிரையும் கொடுப்பது. அதற்குரிய இலட்சியங்களை உருவாக்கிக்கொள்வது. அந்தவகையில் பார்த்தால் ராணுவவீரன் கூட ஒருவகையான இலட்சியவாதிதான். ஆகவே அவனுடைய சாவை நாம் மதிக்கிறோம்.

இங்கே தெய்வீகனின் கதையில் இலட்சியவாதத்துக்காக ஆயுதம்தூக்குகிறார்கள். மெல்லமெல்ல அது திரிந்து எவரென்றே தெரியாதவனை கொல்கிறார்கள். இவன் ஆயுதம் தூக்கியதே அந்த எவரென்றே தெரியாதவனை காப்பாற்றுவதற்காகத்தான். அவனும் இவனைப்போலவே ஆயுதம் தூக்கி, உயிர்தப்பி, இந்தோனேசியா வந்தவனாக இருக்கலாம். அவன் அந்த பாதையில் அந்தப்பக்கம் போனான், இவன் இந்தப்பக்கம் வந்தான், அவ்வளவுதான். கடைசியில் ஆயுதம் அவர்களையே சுட்டுக்கொள்கிறது. ஆயுதம் அபத்தமாக ஆகும் இடம் அதுதான்.

அமெரிக்கக் கறுப்பின எழுத்தாளர் ஒருவரின் கதை உண்டு. பிழைப்புக்காக ஒருவன் திருடுவான். அவனைச் சுட்டுக்கொல்பவனும் கறுப்பினத்து போலீஸ்தான். அவன் பிழைப்புக்காக போலீஸ் ஆனவன். அந்தக்காலத்தில் ராஜாக்கள் கூலிப்படை வைப்பார்கள். இருபக்கமும் ஒரே மறவர்கள் நின்று மாறிமாறி கொல்வார்கள் என்று கேட்டிருக்கிறேன்.

கதை ஒரு ஆட்டம் சட்டென்று கலைந்து அபத்தமான கூச்சலும் ஓட்டமுமாக மாறியதைப் பார்ப்பதுபோன்ற சித்திரத்தை அளித்தது.

பிரபாகர்

அன்புள்ள ஜெ,

தெய்வீகனின் கதை சுவாரசியமான ஒரு முடிச்சை சொல்கிறது. இலட்சியத்துக்காக அடைந்த பயிற்சியே ஒருவனின் பிழைப்புக்குரியதாக மாறுகிறது. நீங்கள் வடகிழக்குப் பயணத்தின்போது சல்ஃபா என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தியிருந்தீர்கள். சரண்டர்ட் உல்ஃபா. அவர்கள் உல்ஃபாக்களிடமிருந்து பாதுகாப்பளிப்பவர்கள். உல்ஃபாவை அறிந்தவர்கள் உல்ஃபாவிலேயே பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள். ஆகவே அவர்கள் மிகவும் உதவியானவர்கள்.

ஆனால் அப்போது அதை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன். ஒரு முகாமில் பயிற்சி எடுத்துக்கொண்ட இருவர் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டால் என்னவாக இருக்கும் என்று. அவர்கள் எப்படி உணர்வார்கள்?

இந்த கதையில் அவனை எனக்கு தெரியாது என்பதற்குப் பதிலாக அவனை எனக்கு நன்றாகவே தெரியும் என்றுகூட சொல்லியிருக்கலாம். அவனும் இவனும் ஒருவன்தானே?

சாரங்கன்

கன்னி- [சிறுகதை] ம.நவீன்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

மீண்டும் கதைகளை வாசிப்பது மகிழ்ச்சி அளித்தது. ஏனென்றால் கிட்டத்தட்ட இரண்டரை மாதம் ஒவ்வொருநாளும் கதைகளை வாசித்துப் பழகிவிட்டோம். கதை இல்லாத இரண்டு நாட்கள் கஷ்டமகா இருந்தன. மீண்டும் கதைகளை வாசிக்கிறோம். இவற்றில் வழக்கத்துக்குமாறான உலகம் இருப்பதே இந்த கொரோனா காலகட்டத்தில் ஒரு வெளியேற்ற மனநிலையை அளிக்கிறது

நவீனின் சிறுகதை கன்னி என்று தலைப்பு இருப்பது தற்செயல் அல்ல. கன்னிகள் அல்ல. இது பலியாகப்போகும் ஒரு கன்னியைப்பற்றிய கதை. சரிதானே?

குமார் ஆறுமுகம்

அன்புள்ள ஜெ,

இந்தக்கதைகளை படித்துக்கொண்டே இருந்ததனால் வெளியே கதைகளை படிக்கும் மனநிலை அமையவில்லை. இப்போது இந்த தளத்திலே வெளிவருவதனால் படிக்கிறேன். நவீன் எழுதியது சுவாரசியமான நல்ல கதை. ஒரு புற்று வளர்வதுபோல தொன்மமும் தன்னைத்தானே வளர்த்துக்கொள்கிறது. அது பலிதேடிக்கொண்டே இருக்கிறது. அது கொல்வதற்கான டெம்ப்ளேட்டை அளிக்கிறது. அந்த டெம்ப்ளேட்டே ஒரு கொடிய பேய்போல பரவிக்கொண்டிருக்கிறது

பசுவை கொல்லும் இடத்தை மாரி பார்க்கும் தருணம் அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பூராவும் ஆம்பளைங்களோட பயம். குத்தத்தோட பயம். பயத்த கல்லாக்கி கட்டிப்போட்டு வச்சிருக்காய்ங்க! என்ற வரியிலிருந்து கதையை இன்னொரு வகையில் படிக்க முடிகிறது. கதைசொல்லிகள் இருவரிடமும் இருக்கும் மானசீகமான பயத்தை கண்டுகொள்ள முடிகிறது

செல்வக்குமார்

கன்னி- கடிதங்கள்