அவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்

அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

இப்போது வெளியிட்டு வரும் கதைகளை வாசிக்கிறேன். இந்த ஊரடங்கில் இத்தனைபே நல்ல கதைகளை தொடர்ந்து எழுதிவருகிறார்கள் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. தெய்வீகனின் சிறுகதை ஈழத்தின் போர்நிலையில் இருந்து உருவாகி வரும் ஒரு மனோஉலகத்தைச் சொல்கிறது என்று நினைக்கிறேன்.

அந்தக்கதை ஆயுதமேந்திய ஒருவன் அடையும் தர்மசங்கடம் பற்றியது. அது எவனோ ஒருவனை கொல்வதிலே சென்று முடிகிறது. உண்மையிலே அது ஒரு துன்பமான விஷயம்தான். போரைப்பற்றி எழுதப்பட்ட எல்லா நல்ல படைப்புக்களிலும் போரின் மிகப்பெரிய தார்மிகப்பிரச்சினையே எந்தப் பகையும் இல்லாமல் ஒருவனை கொல்வது, எவரென்று அறியாத ஒருவனைக் கொல்வதுதான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

எவனோ ஒருவனை கொன்றபின் நான் எப்படி வாழமுடியும்? எனக்கான எந்த லாஜிக்கும் இப்போது இல்லை. நான் என்னை நியாயப்படுத்தவே முடியாது. கொலைகாரன் என்றுமட்டும்தான் சொல்லிக்கொள்ள முடியும். அந்த சுய அடையாளம் ஒருவனுக்கு நூறுகிலோ பாறாங்கல்போல தலைமேல் உட்கார்ந்திருப்பது இல்லையா?

பாஸ்கர் எஸ்

***

அன்புள்ள ஜெ

தெய்வீகனின் சிறுகதை கூர்மையானது. வழக்கமாக ஈழக்கதைகளின் கண்டெண்ட் என்பது போரின் அழிவு, போரிலுள்ள மாறுபட்ட அரசியல்பார்வைகள், போரில் சிக்குபவர்களின் துக்கம்—இப்படியேதான் எழுதப்பட்டிருக்கும். உண்மையில் ஈழப்போர் சம்பந்தமான கதைகளை வாசித்து போதும்டா சாமி என்று ஆகி இனிமேல் படிக்கவே வேண்டாம் என்று நினைத்திருந்தேன்.

ஈழத்து போர்ச்சூழல் கதைகளில் சிறந்தவை என்றால் ஷோபா சக்தி எழுதுபவை. ஆனால் அவை எல்லாமே அரசியல் கதைகள். அரசியல் கடந்த எதுவுமே இல்லை. அரசியல் எதுவானாலும் ஒரு காலம் கடந்தபின் சரிதான் என்று ஆகிவிடுகிறது. அரசியலில் ரொம்ப பயணம் செய்ய இடமில்லை. அதிலுள்ளது தெரிந்துகொள்ளும் அனுபவமே ஒழிய நாமே சென்று அடையும் அனுபவம் அல்ல.

ஆகவே இந்தக்கதையையும் நான் வாசிக்கவில்லை. வேண்டாம் என்றுதான் நினைத்தேன். உங்கள் தளத்திலே வந்திருப்பதனால் வாசிக்கலாமென்று தோன்றியது. வாசித்தபோது ஒரு பெரிய நிறைவும் ஏற்பட்டது. இந்தக்கதை போரின் அழிவைப்பற்றிய கதை அல்ல. போரின் அரசியலும் இல்லை. இது போர் உருவாக்கும் சூட்சுமமான Spiritual crisis பற்றியது.

போருக்குச் சென்று ஆயுதம் தூக்கும்போது அதர்கு ஒரு Idealism இருக்கிறது. ஆனால் போர் நின்றபிறகு அவர்களின் அடையாளமே மாறிவிடுகிறது. கொலைகாரர்கள் ஆகிவிடுகிறார்கள். அல்லது உதவாக்கரைகள். அவர்களின் பயிற்சி வீரம் எதுக்குமே அர்த்தமில்லாமல் ஆகிவிடுகிறது. ப.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவலில் இந்த வீழ்ச்சி அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இப்போது தன்னை அவன் போராளி என்று சொல்லமுடியாது. கொலைகாரன் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அடையாளமாற்றம் அளிக்கும்  spiritual disaster தான் இந்தக்கதையிலே வெளிப்படுகிறது

ஒந்த ஆன்கில வார்த்தைகளை ஏன் அபப்டியே பயன்படுத்துகிறேன் என்றால் spiritual விவாதங்கலில் இவையெல்லாம் முக்கியமான கலைச்சொற்கள் என்பதனால்தான்

எம்.சந்தானம்

***

அன்புள்ள ஜெ

தெய்வீகனின் சிறுகதையின் பிரச்சினை ஆயுதத்திற்கும் மனிதனுக்குமான உறவுதான் என்று தோன்றியது. அதை ஐடியாலஜிக்கும் மனிதனுக்குமான உறவு என்றும் வரையறைசெய்துகொள்ளலாம்.முதலில் துப்பாக்கி கிளர்ச்சியூட்டும் ஒரு விஷயமாக, ஒரு அடையாளமாக இருக்கிறது. துப்பாக்கியால் வாணவேடிக்கை காட்டும் இடம் ஒரு சரியான உதாரணம். ஆனால் சாவு நடந்ததுமே அதன் அர்த்தம் மாறிவிடுகிறது. அது வெறும் சாவுக்கருவிதான் என தெரிகிறது

அதன்பின் அதிலிருந்து வெளியே போக முயல்கிறான். முடியவில்லை. அது திரும்பத்திரும்ப உள்ளே இழுத்துப் போடுகிறது. வேதாளம் மாதிரி முதுகில் ஏறி அமர்ந்திருக்கிறது. அவன் ஒருநாள் அந்த துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொள்ளக்கூடும். அதை அவனால் உதறமுடியவில்லை. யாரோ ஒருவனை சுடுபவனாக ஆகிவிடுகிறான்.

முதலில் ஐடியாலஜியின் அடையாளமாக இருந்த துப்பாக்கி வெறும் கொலையின் அடையாளமாக ஆகும் மாற்றத்தைச் சொன்ன கதை

ஜெயசீலன்

கன்னி- [சிறுகதை] ம.நவீன்

***

முந்தைய கட்டுரைகதைகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகவி [சிறுகதை] மணி எம்.கே.மணி